மகாகவி சுப்ரமணிய பாரதியார்
மகாகவி சுப்ரமணிய பாரதியார்
18,19 ஆம் நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து சுதந்திர தாகம் மக்களிடையே நிலைகொண்ட நூற்றாண்டுகள். அடக்குமுறையை எதிர்த்து எளியோர் போராட உத்வேகத்தை அளித்தவை, அந்நாடுகளின் புரட்சிக் கவிஞர்கள் மக்களிடையே பரப்பிய எழுச்சியூட்டும் பாடல்களே!
1792 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் போரில் வீரர்கள் சோர்வுற்றனர். ரூழே தெலில் என்ற ர் சாதாரண வீரன் திடீரென்று ஒரு பாட்டைப் பாடினான். அது காட்டுத் தீ போல் பரவி மக்களை ஆவேசப் படுத்தியது. பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமானது அப்பாட்டு. பின்னாளில் ஹிட்லர் பிரான்சைப் பிடித்ததும், அப்பாட்டுக்குத் தடை விதித்தார். ஆனால் இப்பாட்டைப் பாடியே சக்தி பெற்று மறுபடியும் குடியரசானது பிரான்சு. கால் என்ற தலைமை வீரன் வெற்றி முழக்கத்தோடு பாரீஸில் நுழைந்தபோது, ஆயிரக்கணக்கான குரல்கள் இஆதே பாட்டைப் பாடி ஆனந்தக் கண்ணீருடன் தங்கள் தலைவனை வரவேற்றன.
ஆம் புரட்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக அமைவதும், இதயத்தைத் தட்டியெழுப்பும் இதுபோன்ற பாடல்கள்தான்! இதேபோல் அமைந்தவைதான் நம் பாரதியின் பாடல்களும்!
பிரெஞ்சுத் தொடர்பு இருந்ததாலோ என்னவோ, 1908 ஆல் புதுவையில் வாழ்வைத் தொடங்கிய பாரதியிடமிருந்தும் இத்தகைய புரட்சிக்கனல் தெறிக்கும் கவிப் பிழப்புகள் பாடல்களாய் வெளிவந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் பிறந்த கவி பாரதிக்கு, நெல்லை மண் வாசத்தோடு மொழியைக் கையாளும் திறமை மிக்கிருந்தது. அதனால்தான் அந்த நாளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தமாக இருந்த பள்ளுப் பாடல்களையும் பாரதியார் பயன்படுத்திக் கொண்டார். சுதந்திரப் பள்ளு, பள்ளர் களியாட்டத்தை வர்ணிப்பது போல், அரசியலிலும் சமுதாயத்திலும் ஒருங்கே தோன்ற வேண்டிய ஆனந்த சுதந்திரத்தை ஒருதீர்க்க தரிசனமாக அறிவிக்கின்றன அப்பாடல்கள்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைப் பேய், பாரதியையும் பயமுறுத்தி சிறையில் தள்ளத் துடித்த அக்காலத்தில், அவருடைய சுதேச கீதங்களை மக்கள் மட்டுமா பாடினர்... அவரின் சுதேசக் கவிதைகளில் மனம் பறிகொடுத்த நீதிபதிகளும் போலீஸ் உளவாளிகளும் கூட உண்டு. அரசாங்க நிர்வாக அதிகாரி ஒருவர், பாரதிக்குத் தொல்லை ஏற்படும் என்று கருதி அவரை தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்குப் போய்விடுமாறு வற்புறுத்திய சம்பவமும் உண்டு!
பாரதியின் மொழிப்பற்று, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் பெயர்க்கப்பட வேண்டும் என்று பிற மொழிக்கவிதைகளைத் தமிழாக்கிக் கண்டது... அதுபோல், அவருடைய நாட்டுப்பற்று என்பது, பிற நாடுகளையும் அவற்றின் அனுபவங்களையும் தமதாக்கிக் காண்பதாகவே ஆஇருந்தது.
தமிழணங்கே பாரதத்தாயாக விளங்குவதாகக் கண்ட கவிஞர், அவள் கடைக்கண் நோக்கே ருஷிய மாக்களை மக்களாக வாழ வகை செய்தது என்கிறார். அறத்தால் வீழ்ந்துவிட்ட பெல்ஜியத்தை வாழ்த்துகிறார். மாஜினியைப் போற்றுகிறார். அவருடைய நாட்டுப்பற்றே சுதந்திர ஆட்சியை விரும்பும் பாஞ்சாலி சபதமாக உருப்பெற்றது. உலகளாவிய நோக்கு அவருக்கு இருந்தது.
அதற்குக் காரணம் - அவர்தம் ஆரத்தத்தில் ஊறியிருந்த நாட்டின் கொள்கையான வசுதைவ குடும்பம் மற்றும் சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்ற கொள்கைகளே! உலகம் - வாசுதேவனின் குடும்பம்; அனைத்துலகும் இறைவனின் அம்சம் என்ற கொள்கைகளைப் பாடிப் பரவினார். அதன் பரிணாமமே, தனியொருவனுக்கு உணவில்லை எனில் இச் சகத்தினை அழித்திடுவோம் என்ற, உலகையே ஒரு பெரும் குடும்பமாகக் கருதும் மனப்பாங்கை வெளிப்படுத்தியது.
எல்லா உயிர்களிலும் கண்ணனே இருக்கிறான் என்ற உண்மையை வாழ்க்கையில் கடைபிடிப்பதனாலேயே பாரத நாடு எல்லையில்லாப் பெருமையை அடையும். இவ்வுண்மையை உலகோர்க்கு உணர்த்துவதே இந்நாட்டின் நோக்கமாகும். இதற்கு அர்த்தம், நாட்டின் நிலப்பரப்பைப் பெருக்கும் விருப்பம் இல்லை; ஆனால் ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் விருப்பம் உண்டு - இக்கருத்தையே பாரத சமுதாயத்தை வாழ்த்தும் பாடல் வெளிப்படுத்துகிறது.
நாட்டில் புரட்சிச் சூரியன் உதித்துக் கிளம்பினால், எல்லோர் கவனமும் அதன்பால் சென்று, நாடு விரைவில் விடுதலை அடையும் என்பது பாரதியின் எண்ணம். அதனை வெளிப்படுத்தும் பாரதியின் வசனங்கள் இவை:-
''சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும் புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே நாட்டில், ஒரு புதிய ஆதர்சம் - ர் கிளர்ச்சி - ர் தர்மம் - ர் மார்க்கம் - தோன்றுமேயானால், மேன்மக்களின் நெஞ்சமனைத்தும், ஆரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர் போல், அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன
- இப்படி ஒரு புதிய மார்க்கம் தோன்ற பாரதி ஆசை கொள்கிறார்.
இந்தப் புதிய மார்க்கம் தோன்றினால் மட்டும் போதாது, அதற்குத் தம் உயிரையும் தந்து உழைக்க ஒரு கூட்டம் தயாராக வேண்டும் என்பதும் அவர் எண்ணம். அதனால்தான், பராசக்தியிடம் அவருடைய வேண்டுகோள் இப்படியிருக்கிறது....
''சிவசக்தி.... எனைச்
சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்...
வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
- என்று பிரார்த்தனை செய்யும் போது, நாட்டுக்காகவே தாம் வலிமை பெற வேண்டும் என்கின்ற மனப்பாங்கை வெளிப்படுத்துகிறார்.
பாரதி பயன்படுத்திய மொழி எளிய மொழி! பாமரரையும் சுண்டியிழுத்த மொழி! பகவான் ராமகிருஷ்ணர் எப்படி உபநிஷத உபதேசங்களை எளிய கதை வடிவில் பாமரர்க்கு சேர்ப்பித்தாரோ அப்படியே பாரதி பாடல் வடிவில் சேர்ப்பித்தார்.
ஊருக்கு உழைத்திடல் யோகம்,
உயிர் ங்கிடுமாறு வருந்துதல் யாகம்...
- என்கின்ற பாரதி வாக்கு, எளிய உபநிடத உபதேசமல்லவா?!
இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு தேசத்தையே தெய்வமாக வழிபடவேண்டும் என்று விவேகானந்தர் சொன்னது பாரதியின் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது என்று சொல்லலாம்! அதனால்தான், ''நாடெங்கிலும் இறைவழிபாட்டுப் புண்ணியத் தலங்களான விஷ்ணுத் தலங்கள், சிவத்தலங்கள், சக்தி பீடங்கள், ஜைன பவுத்தத் தலங்கள், நீராடல் தலங்கள் என, நிறைய இருக்கின்றன. ஆனால் சுதந்திரக் கிளர்ச்சி தலைதூக்கிய பின் இந்தப் புண்ணியத் தலங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றார் பாரதியார்.
தேச பக்தர்கள் பலர் சிறை சென்று சிறைச் சாலையை தவச் சாலையாக மாற்றி, சுதந்திர யாகம் நடத்தும் வேள்விச்சாலைகளாய் மாற்றியிருந்தார்கள். ''அவர்கள் தங்கிய இடங்களும்கூட புண்ணியத் தலங்கள்தான் என்றார் பாரதியார்.
''பாரத நாட்டில் ஸ்வதந்திரக் கிளர்ச்சி ஆரம்பித்துக் கொஞ்சம் நாள்தான் ஆயிற்று எனினும், அநேக புண்ணிய ஸ்தலங்கள் உண்டாய்விட்டன. இந்தப் புண்ணிய ஸ்தலங்களின் விசேஷம் என்னவென்றால் இவைகள் பாரத நாட்டிலுள்ள எல்லா மதத்தினருக்கும் பொதுவானவைகள். பாரத நாட்டில் மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த தேசபக்தர்களின் ஆசிரமங்கள் தோன்றியிருக்கின்றன. ஆமதாபாத்திலிருக்கும் ஸாபர்மதி சிறைச்சாலையை நோக்கும்போது எந்த பாரதனுக்குத்தான் ''இது பாரத பரமபக்தரான மஹரிஷி ஸ்ரீமான் பாலகங்காதர திலகரின் பொன்னடிகளால் புனிதமாக்கப்பட்ட திவ்ய க்ஷேத்திரம் என்று தோன்றாது? மகாராஷ்டிர பாஷையில் பேர் பெற்ற ''கால் பத்திராதிபரான ஸ்ரீமான் சிவராம மகாதேவ பராஞ்ஜபே 101 நாள் வாசம் செய்த ஸித்தாச்ரமமும் இந்த ஸாபர்மதி சிறையே என்று ஞாபகப்படுத்திக் கொள்ளாதவர்கள் யார்? அல்லது அலிப்பூர் சிறைச்சாலையைப் பார்க்கும்போதே பாரத தேசபக்த சிரோமணியான ஸ்ரீமான் அரவிந்த கோஷுக்கு பகவான் தனது திவ்விய ஸ்வரூபத்தைக் காட்டிக்காத்து ஆட்கொண்ட மகாபரிசுத்தமான புண்ணிய ஸ்தலமென்று எவன்தான் எண்ணாமலிருப்பான்.? கோயம்புத்தூர் சிறைச்சாலையைப் பார்க்கப் போகிறவர்களில் யார்தான் நமது தக்ஷிண தேசாபிமானச் சிங்கமான ஸ்ரீயுத சிதம்பரம்பிள்ளையைப் பற்றிச் சிந்தியாமலிருக்க முடியுமா? ...
''தென்னாப்பிரிக்காவில் திரான்ஸ்வால் நாட்டிலுள்ள ஜொஹானஸ்பர்க் நகரத்திற்குப் போகிறவர்களில் எந்த மனுஷ்யனுக்குத்தான் ஆத்ம சக்தி ஸம்பூரணமாய் நிறைந்த பாரத புத்திரர்களான ஸ்ரீமான் மோ.க.காந்தி, ஜனாப் டாவுத் மஹமத் ஜனாப் அங்கிலயா, ஸ்ரீ ரஸ்தோம்ஜீ முதலானவர்களின் நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்து புனிதமாக்கப்பட்ட வீதி இதுதான். அவர் தமது வாஸத்தால் பரிசுத்தம் செய்யப்பட்ட திவ்ய ஸ்தலமான சிறைச்சாலை இதுவே. நமது பாரத ஸஹோதரிகள் பலவிதத்திலும் இடுக்கண் படுத்தப்பட்ட இடம் இதுவே என்று மனசில் ஸ்மரணை வராதா?
இப்படி, தேசபக்தர்கள் வாழ்ந்த நினைவலைகள் உள்ளத்துள் இருந்து கொண்டிருந்தால், அவர்களின் தியாக உணர்வு நமக்குள்ளும் ஊற்றெடுத்து சுதந்திரத்திற்கான வேகம் அதிகரிக்கும் என்பது பாரதியின் எண்ணமாக இருந்தது.
இவ்வாறு தேசபக்தியையே தெய்வபக்தியாகக் கொள்ளவேண்டும் என்ற பாரதியின் கருத்து வேகத்தைத் தடை செய்தது, நாட்டில் இருந்த சாதி, இஆன, மொழி ரீதியான பிரிவுகள். எனவே மக்களிடையே இருந்த பிரிவினை எண்ணத்தை அழித்து ஒற்றுமை எண்ணத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்தார். பாரத நாடு ஒரே நாடு என்பதைத் தம் பாடல்களால் வலியுறுத்தி வந்தார்.
'ர் தாயின் வயிற்றிற் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? என்றும், ''முப்பது கோடியும் வாழ்வோம் என்றும் முழங்கினார்.
''நீ பாரதவாஸி என்று கர்வம் கொண்டிரு. கர்வத்தோடு 'நான் பாரதவாஸி, ஒவ்வொரு பாரதவாஸியும் என் ஸஹோதரர்ஒ என்று சொல்லு. 'மூட பாரதவாஸி, தரித்திர பாரதவாஸி, சண்டாள பாரதவாஸி, யாவரும் என் சகோதரர்கள்.... நீ கந்தையை உடுத்துக் கொண்டிருந்தாலும் உன் குரல் எட்டுமளவும், 'ஹிந்துஸ்தானவாஸிகள் என் பிராணன்; இந்தியாவில் இருக்கும் தெய்வங்கள் என்னுடைய தெய்வங்கள்ஒ என்று சொல். சகோதரா, சொல்: 'இந்தியாதான் என் இளமையின் மெத்தை, என் யௌவனத்தின் நந்தவனம், என் கிழக்காலத்தின் காசிஒ என்று இரவும் பகலும் தியானம் செய் என்று கூறினார்.
ஆஇப்படி, பிரிவினை தகர்த்து இஆந்தியர்களின் ஒருமைப்பாடை வலியுறுத்தி ரணியில் சேர்த்து ஆங்கிலேய அடக்குமுறையை அகற்ற எண்ணினார் பாரதி.
சுதந்திரப் போரில் சந்நியாசிகளும் ஈடுபடவேண்டும் என்பதிலும் அப்படி ஈடுபடுவதில் ஒரு தவறும் இல்லை என்றும் பாரதி வாதம் செய்தார். அதற்காக அவர் பல கட்டுரைகளை எழுதினார். குறிப்பாக சந்நியாச தீட்சை பெற்ற சுப்பிரமணிய சிவாவுக்கு பாரதி தந்த ஆதரவு மகத்தானது. சுப்பிரமணிய சிவா பேரில் சில குற்றச்சாட்டுகளைக் கூறி போலீஸார் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது பாரதி இப்படி எழுதினார்...
"திருநெல்வேலியில் ராஜநிந்தனைக் கேஸில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஸ்ரீசுப்பிரமணிய சிவனுக்கு இப்போது வயது 26 க்கு மேல் ஆகவில்லை. இவர் சுமார் 6 வருஷங்களுக்கு முன் அதிபாலியத்திலேயே சிவகாசி சப் டிவிஷன் ஆபீஸிலே முச்சி என்ற தணிந்த உத்தியோகம் பார்த்து வந்தாராம். ஆனால் சரீர சௌக்கியம் போதாதென்று இவரை அந்த வேலையினின்றும் விலக்கி விட்டார்களாம். இந்த விஷயத்தை திருநெல்வேலிப் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் பலர் சாக்ஷி கூறும் சமயத்தில் மிக இகழ்ச்சியோடு சொல்லுகிறார்கள்....
"இன்னுமொரு போலீஸ்காரர் ஸ்ரீ சிவன் தூத்துக்குடியிலே ஸ்ரீசிதம்பரம் பிள்ளையோடு ஒரே வீட்டில் வாசம் கொண்டிருந்தார் என்றும், இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமென்றும், ஆதன் பொருட்டு ஸ்ரீ சிவன் ஜாதியினின்றும் பகிஷ்காரம் செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ர் போலீஸ்காரருக்கு மனுதர்ம சாஸ்திரத்தில் இவ்வளவு தூரம் ஆழமான ஞானமிருப்பது பற்றி சந்தோஷமடைகிறோம். அதிவர்ணாசிரமியாக ஸந்யாச நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாதென்று இந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது போலும்! போலீஸ் மனு நீதியில் மேற்படி விஷயம் சொல்லப்படவில்லையென்று தோன்றுகிறது.....
"மேற்படி சம்பந்தத்தையொட்டி, நமது சுதந்திர முயற்சியிலே கணக்கற்ற சந்நியாசிகள் சேர்ந்திருப்பதைக் குறித்து ரிரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறோம். பிரமஞானியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவான் மஹாபாரதப் போரிலே சேர்ந்தது போலவும், ஸர்வ பந்தங்களையும் துறந்த ராமதாஸ்முனிவர் மஹாராஜா சிவாஜிக்கு ராஜதந்திரங்கள் சொல்லி வெற்றி கொடுத்தது போலவும், தற்காலத்தில் அநேக துறவிகள் நமது சுதேசீய முயற்சியிலே சேர்ந்திருக்கிறார்கள். காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ஸ மூர்த்தியே இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்....
"ஞானி தமது சொந்த நலத்தைக் கருதி உழைக்கக் கூடாதே யொழிய, உலக கர்மங்களை முற்றிலும் விட்டுவிட வேண்டும் என்பது சாஸ்திரக் கருத்தன்று. தன் மட்டில் யாதொரு பலனையும் கருதாமலும், ஈசனுக்கும் ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செய்கைகளின் பலன்களை ஸமர்ப்பணம் செய்துவிட்டு தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதே பெரியோர்களின் சித்தாந்தம். அப்படியில்லாவிட்டால் பிரமஞானிகளாகிய முனிவர்கள் ஏன் சாஸ்திரங்கள் எழுதிவைக்க வேண்டும்? மூச்சைப் பிடித்துக் கொண்டு சும்மா இராமல் உலக நன்மையின் பொருட்டு ஞான வழிகள் கற்பித்த ரிஷிகளை நாம் லௌகீகர்கள் என்று கூறத்தகுமா? அது போலவேதான் இக்காலத்திலும் உண்மையான ஸன்னியாசிகளாக இருப்போரும் தம்மை மறந்து தேச க்ஷேமத்தையும் சுயாதீன நிலைமையையும் அடையும் பொருட்டாக முயற்சிகள் செய்துவருகிறார்கள்..."
- இப்படி சுப்பிரமணிய சிவா என்ற தீவிர சிந்தனை கொண்டவருக்காகப் பரிந்து பேசிய பாரதி, தம் இன்னொரு நண்பரான வாஞ்சியின் செயலை விமர்சித்து கட்டுரை தீட்டியிருந்தார். விடுதலை வேட்கையில் தீவிரத்தன்மை இருக்க வேண்டும். வீதியில் இறங்கிப் போராட வேண்டும்; ஆனால் தனி மனிதக் கொலை மூலம் அதைச் செய்யக்கூடாது என்பது பாரதியின் வாதம். கொடூரமதி கொண்டவராக அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ், சுதேசிச் சிந்தனையாளர்களால் கருதப்பட்டபோது, ஆஷை எதிர்க்கும் அதே நேரத்தில், ஆஷ் கொல்லப்பட்ட முறையை விமர்சித்து பாரதி வரைந்த கட்டுரை, அவருடைய குணத்தை எடுத்துக் காட்டியது....
...................
" இந்தியாவில் ஒரு புரட்சிக்காரனால் முதன்முதலில் எறியப்பட்ட வெடிகுண்டு வெறும் பிசகினால் மிஸஸ் கென்னடி என்ற வெள்ளை மாதின் பேரில் வீசப்பட்டபோது ஆங்கிலோ இந்திய வர்க்கமே கோப வெறி கொண்டதாகிவிட்டது. ஐயோ. பாவம்! என்ன காரியம் செய்தனர்! நவ இந்தியாவில் உதயமாகியுள்ள ரஜபுத்திர வீரத்திற்கு என்ன இழுக்கு? என்ன தவறு, என்ன தவறு! ஒரு பெண் மீது வெடிகுண்டு வீசி இந்தியாவுக்கு விடுதலை பெறுவதாம்! இவ்வளவுக்கும், பெண் என்றால், எந்த ஜாதியாரானாலும் வர்ணத்தாரானாலும் தேசத்தாரானாலும் சரி, உலக மாதாவான ஆதி சக்தியின், தெய்வீகப் பெண்மையின் நேரடியான அம்சமே அவள் என்பதல்லவா இந்தியர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்துபோன தத்துவம்! உந்நதமான வாழ்க்கையிலே ஊறித்திளைத்த இந்திய நாடும் உடனே, "கவனியுங்கள்! ஆரம்பமே அபசகுனமாயிருக்கிறது! எனது நாட்டில் இவ்வியக்கம் வேரூன்றாது!" என்று எச்சரித்தது.
"இந்த சௌகரியமான நிலைமையில்தான் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் (இதை "எதிர்பாராத விபத்து" என்றுதான் சொல்லட்டுமா? ஏனென்றால் இம்மாதிரியான மற்றொரு சம்பவம் நமது ராஜதானியில் நடந்ததேயில்லை) இந்தியாவின் தென்கோடி ஜில்லாவில் மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரையை வாஞ்சி அய்யர் என்ற இளைஞர் சுட்டுக் கொன்றுவிட்டார். இது மகத்தானதோர் சோக சம்பவம். இதனால் ஏற்பட்ட அரசியல் பலாபலன்கள் ஒருபுறமிருக்க, நம்முடைய சமூகத்தில் காணக் கிடக்கும் பரிதவிக்கத்தக்க குணங்களை இச்சம்பவம் காட்டிவிட்டது.
கலெக்டர் ஆஷுடன் அவரது மனைவியைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அவர் அடுத்த ஜில்லாவிலுள்ள புகழ் பெற்ற ஆரோக்கிய ஸ்தலமான கோடைக்கானலுக்கு உல்லாசமாகக் காலம் கழிக்கவோ தேக சுகம் பெறவோ போய்க்கொண்டிருக்கிறார்.
"ஹிந்து மதத்துக்கு மீண்டும் ர் இழுக்கு! - கொலையுண்ட மனிதர் தமது மனைவியுடன் இருக்கிறார்; அவர்கள் யுவர்கள்; தெரிந்தவரையில் ஒருவரையொருவர் பரஸ்பரம் காதலிக்கும் தம்பதிகள்; ஜோடியாக இருவரும் குதூகலத்துடன் உல்லாச யாத்திரை போகிறார்கள். இதுபோன்றதோர் நிலைமை, பக்தி சிரத்தையுள்ள எந்த ஹிந்துவின் உள்ளத்திலும் புனிதமான எண்ணங்களையே தூண்டிவிடும். நலத்தை நல்கும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் அர்த்தநாரீசுவரர் என்று (தான் பாதியும் மங்கை பாதியுமாக இருப்பதாய்) ஹிந்து புராணங்கள் வர்ணிக்கின்றன. சிவனே கடவுள்; மங்கை சிவகாமி ஜீவிதமான சக்தி. புராணங்கள் இவளையே பராசக்தி, ஆதிசக்தி என்று கூறுகின்றன. ஒரு புருஷனும் பெண்ணும் தனியாக இருக்கும் நிலை ஒவ்வொரு ஹிந்துவும் தெய்வாம்சமெனக் கொண்டாடும் நிலைமையாகும். ஏனெனில், இதுவே அமரர் வாழ்வை இவ்வுலகில் கண்ணெதிரே காட்டுகிறது. ஹிந்து மதம் சொல்வது முற்றும் சரியே. ர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக ஒருவரையொருவர் நேசித்தால், அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போது, அவ்விருவரும் போற்றிப் பின்பற்றத்தக்க தூய சிந்தையுள்ளவர்களாக இருப்பதைக் காண்போம். அவர்கள் இருக்கும் இடம் முழுவதும் அன்பு மயமாக இருப்பதைக் காண்போம்.
"இனி கதையில் பரிதாபகரமான பாகத்தை விடுத்து, சோகமான பாகத்தைக் கவனிப்போம். தன்னைக் கைது செய்ய வந்தவர்களையெல்லாம் வெற்றிகரமாக பயமுறுத்திவிட்டு, கலெக்டரைக் கொன்ற சில நிமிஷங்களில் வாஞ்சி அய்யர் தம்மைத்தாமே சுட்டு மாய்த்துக் கொண்டார். இதற்குப் பின் இம்மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறவில்லை என்ற விஷயம் சென்னை ராஜதானிக்கே பெருமை அளிக்கிறது. சென்னை ராஜதானியில் பயங்கர இயக்கம் பிறக்கும் போதே உயிரற்ற பிண்டமாய்ப் பிறந்தது.
"ஆனால் வாஞ்சி அய்யரின் தற்கொலை இந்த ராஜதானியில் பொது வாழ்வில் துரதிர்ஷ்டமான வழியில் பலன் தர ஆரம்பித்தது. இந்த சம்பவத்திற்கு வஞ்சம் தீர்க்கும் முறையில் அதிகாரிகள் கீழை நாடுகளின் சம்பிரதாயத்தை ஒட்டினாற்போல ஒரு பெரிய யாகமே நடத்திவிடத் தீர்மானித்தார்கள்; போலீஸார் - இந்திய போலீஸார் - இந்த யாகத்தை மேலும் பிரமாதமானதாக்கி விட்டார்கள். இதற்கு செலவான பணம், வலை வீசப்பட்ட பிரதேசம் முதலிய இன்னும் இவைபோன்ற விவரங்களைக் கவனிக்கையில், ஹிந்து யாகங்களின் சரித்திரத்திலேயே இது ஒரு பிரதம யாகமாகிவிட்டது எனலாம்!
................... பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற எண்ணமும் பாரதியின் உள்ளத்தில் தோன்றியிருக்கிறது என்பது அவருடைய இந்தக் கட்டுரையில் காணக் கிடைக்கிறது.
---------
வாஞ்சியின் செயலில் சுப்பிரமணிய சிவா மற்றும் வ.உ.சி போன்றோர் மகிழ்ந்திருக்க, தம் சுதேசிய இயக்க நண்பர்களான இவர்களே வியக்கும் வண்ணம் தம் மனத்தில் பட்ட கருத்தை தைரியமாக எழுதும் வன்மை பாரதிக்கு வாய்த்திருந்தது. அத்தகைய சிறந்த பத்திரிகையாளராக பாரதி எடுத்த அவதாரம், வேறு யாரும் எடுத்திராதது. அவருடைய அந்த சாதனைகள்தான் என்னென்ன.?
* ஒரு கவிஞனாகப் பெரும்பாலானவர்களால் இனம்காணப்பட்ட சுப்பிரமணிய பாரதிக்கு, புரட்சிகள் பல செய்த பத்திரிகையாளன் என்ற மற்றொரு முகமும் உண்டு. பாரதி தனது பத்திரிகைப் பணியை 1904 நவம்பரில் சுதேசமித்திரனில் துணையாசிரியராகத் துவக்கினார். அதன்பிறகே தமிழ்ப்பத்திரிகையுலகுக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது.
* தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி. "இந்தியா' (1905) பத்திரிகைக்கே அந்தப் பெருமை சேரும்.
* பத்திரிகை சந்தாவில் புதுமையை அறிமுகப்படுத்தினார். வாசகர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறு சந்தா விகிதம் நிர்ணயித்த பாரதியை இன்றும்கூட யாரும் எட்ட முடியாது.
* பத்திரிகையுடன் இலவச இணைப்பாக சிறுபுத்தகம் வழங்குவதை அறிமுகப்படுத்தினார்.
* ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதா அல்லது யங் இந்தியா, விஜயா, சூர்யோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றினார்.
* பத்திரிகைகளில் நேரடியாகப் பணிபுரிந்தது மட்டுமன்றி சுதந்திர இதழாளராகவும் பல பத்திரிகைளுக்கு தம் படைப்புகளை அனுப்பியிருக்கிறார். விவேகபானு, சர்வஜன மித்திரன், ஞானபானு, காமன்வீல், நியூ இண்டியா ஆகிய பத்திரிகைகளிலும் பாரதியின் எழுத்துகள் அணி செய்துள்ளன. புனை பெயர்களை (காளிதாஸன், ஷெல்ன்தாஸ், சாவித்திரி, நித்யதீரர், உத்தம தேசாபிமானி) அதிகம் பயன்படுத்தியவரும் பாரதியே.
* செய்திப் பத்திரிகையில் வாசகரின் ஆர்வத்தைக் கூட்ட கதை, கவிதைகளை வெளியிட்டார். வாசகர்களை விவாதத்திலும் பங்கேற்கச் செய்தார்.
* முதன் முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு, மாதம் குறித்தவர் ("இந்தியா', "விஜயா') பாரதியே. "விஜயா' இதழில் தமிழ் எண்களையும் பயன்படுத்தி புரட்சி செய்தார்.
* "பழைய பத்திரிகைகளில் வெளிவந்த விஷயங்களை எடுத்துக் கோர்த்தால் நல்ல வசனநூல் கட்டலாம்'' என்று பத்திரிகை உலகுக்கு வழிகாட்டியவர் பாரதி. "எங்கள் காங்கிரஸ் யாத்திரை' போன்ற சிறு நூல்களை தனது பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியிட்டார்.
* செய்தி அனுப்புவோருக்கு பணம் தரும் முறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தினார்.
* சித்திரங்களை மட்டுமே கொண்ட ""சித்ராவளி'' என்ற பத்திரிகையை நடத்தத் திட்டமிட்டார். ஆனால் அது இயலாமல் போனது.
* லண்டன் "டைம்ஸ்' முதல் கொல்கத்தாவின் "அமிர்தபஜார் பத்ரிகா' வரை 50 -க்கும் மேற்பட்ட பிறமொழிப் பத்திரிகைகள் பற்றியும், பிறமொழிப் பத்திரிகை ஆசிரியர்கள் பற்றியும் தனது பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்.
* மகாத்மா காந்தி இந்தியாவில் அறியப்படுவதற்கு முன்னரே 1909 ல் ""காந்திபசு'' என்ற கருத்துப் படத்தை "இந்தியா'வில் வெளியிட்டார்.
* தமிழுக்கு பொதுவுடைமை என்ற புதிய சொல்லை வழங்கியதோடு, வன்முறை மூலம் உருவாக்கப்படும் ரஷ்யாவின் சோஷலிஸ சமுதாயம் நிலைக்காது என்று 1920 லேயே தீர்க்க தரிசனமாக எழுதினார்.
* நாட்டின் முந்நாள்பெருமையும் இந்நாள் சிறுமையும் எதிர்கால வறுமையும் கருதாத கல்வியால் பலனில்லை என்று கூறி சுதேசிக் கல்வியை வலியுறுத்தினார்.
* மகளிரின் விடுதலைக்காக பத்திரிகையில் குரல்கொடுத்து பாலின சமத்துவத்துக்கு தமிழ்நாட்டில் வித்திட்டார்.
* தமிழின் பழம்பெருமையை பேசியபடியே ஆங்கில மோகத்தில் வீழ்வதால் அன்னைத் தமிழ் அவலத்தில் தாழும் நிலையை எடுத்துக்கூறி அன்றே எச்சரித்தவர் பாரதி. அதேசமயம் கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஆங்கிலம், இந்தி, சம்ஸ்க்ருத மொழிகளையும் அறிந்து அதனை தனது இதழியல் பணிக்கு பயன்படுத்தியவர் பாரதி.
""உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்'' என்ற தனது அமுதமொழிக்கு தானே உதாரணமாக பாரதி வாழ்ந்ததை இந்த தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன.
ஒரு பத்திரிகையாளராக மட்டும் வெளித்தெரியவில்லை பாரதி. அவர் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். அவருடைய பேச்சில் அனல் பறக்கும். அதில் நேர்மையும் இருக்கும். பல சுதேச எழுச்சிக் கூட்டங்களைத் தனியாளக நின்று ஏற்பாடு செய்தவர் பாரதி.
விபின் சந்திரபாலரின் விடுதலையைக் கொண்டாட 1908 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பாரதியார் உணர்ச்சி மிக்க ஒரு உரையை ஆற்றினார்.
"சுதந்திர தாகம் என்று தணியும்? அறியாமையின் தளைகள் என்று அகற்றப்படும்? மகாபாரதப் போரை உருவாக்கிய கடவுளே; பிளேக்கும் பஞ்சமும்தான் உன் பக்தர்களுக்குக் கிடைத்த பரிசா?" என்று நெஞ்சு பொருமினார்.
நீதி வேறு, சட்டம் வேறு, என்பதை நினைவுபடுத்தி, "அன்னியர் இயற்றியுள்ள சட்டங்களுக்குக் கீழ்ப்படியச் சித்தமாயிருக்கிறோம். ஆனால் எல்லாச் சட்டங்களுக்கும் அல்ல! நமது பிறப்புரிமைக்கு முரணாக அன்னியர் சட்டம் இயற்றும்போது, அவற்றுக்குப் பணிய மாட்டோ ம்" என்று முழக்கம் செய்தார். பாரதி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு பரிசீலனை செய்து, இறுதியில் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று முடிவு செய்தது.
ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் ஒருமுறை மாவீரன் செண்பகராமனுடன் பேசிக்கொண்டிருந்தபோது "இந்தியர்களுக்கு சுதந்திரம் அடைவதற்கான தகுதி இல்லை" என்றாராம். ஆனால் செண்பகராமன் இந்தியர்களுக்கான தகுதிகளை எடுத்துச் சொல்லி வாதம் புரிந்து, ஹிட்லரைப் பணியவைத்தார். அதனால் ஹிட்லர் தம் கைப்பட தன் வார்த்தையிலுள்ள தோல்வியை ஒத்துக் கொண்டாராம்.
அதே சிந்தனை பாரதியிடமும் இருந்தது. சுதந்திரம் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? பெற்ற சுதந்திரத்தைக் கட்டிக் காத்து நாட்டு முன்னேற்றத்திற்கு வழி செய்யவேண்டாமா? அதனால்தானே ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டன.
இங்கும் அப்படித்தான்! இந்தியர்களால் சுதந்திர இந்தியாவை கொஞ்ச நாட்களுக்குக் கூடக்காப்பாற்ற முடியாது என்று இறுமாபோடு சொன்ன ஆங்கில ஆதிக்கவாதிகளுக்கு பாரதி பதிலடி கொடுத்தார் தன் பாடல்களால்!
இந்திய சுதந்திரத்திற்கு முன்னே தம் நாடு எப்படி இருக்கவேண்டும் என்ற பாரதியின் இந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் உண்மையில் பிரமிப்பூட்டுபவை. கூரிய நோக்கு கொண்டவை. அவர் கவிதைகள் ஆசைக்கனவுகளின் ஆனந்தக் கூத்தாக நின்றுவிடவில்லை. தேசம் உயரத் தெளிவுடனும் துணிவுடனும் திட்டங்கள் தீட்டித் தருகின்றன. .
இரும்பைக் காய்ச்சி உருக்கவும் கரும்பைச் சாறு பிழிந்திடவும் இயந்திரங்கள் செய்யவேண்டும். விண்ணிலிருந்து நம்மை வானோர் காப்போராயினும், நம்மை நாமே காத்துக்கொள்ள ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம், கடலில் முத்தெடுப்போம், கப்பல்கள் செய்வோம், அன்றாட வாழ்வுக்கு இன்றியமையாத சின்னஞ்சிறு பொருட்கள் நிறையச் செய்வோம்...
சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளியும் நேரத்திலேயே, சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்கிறார் பாரதி. இவ்வாறு நாடு ஆற்றவேண்டிய ஐந்தாண்டுத் திட்டங்களின் சாரத்தை விடுதலைக்கு முன்னே கொடுத்த சிந்தனையாளர் பாரதி. அதன் மூலம் இந்தியர்களாகிய எங்களிடமே ஆட்சி பொறுப்பைக் கொடுத்தாலும் எங்களாலும் திட்டங்கள் தீட்டி நாட்டை முன்னேற்ற முடியும் என்று ஆங்கில ஆதிக்கவாதிகளின் மூக்குடைத்தார் பாரதி.
நாட்டு விடுதலைக்கு நாட்டின் மீதும் மக்களின் மீதும் அன்பும் பக்தியும் இருக்க வேண்டுமல்லவா? அதனால் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளம் உள்ளங்களிடையே தேசபக்தியை வளர்க்க வேண்டிய பணியை ஏற்றுச் செய்தார் பாரதி. தேசபக்தியை ஊட்டுகின்ற கட்டுரைகள் நிறைய எழுதிக் குவித்தார்.
இந்தியா 1909 ஏப்ரல் 10 தலையங்கத்தில் பாரதி இப்படி எழுதினார்...
துருவன் பிரஹ்லாதன் முதலியோர் விஷ்ணுவிடத்தில் செலுத்திய பக்தியை நாம் ஸ்வதேசத்தினிடத்திலே செலுத்த வேண்டுமென்று நமது பத்திரிகையில் பலமுறை எழுதியிருக்கிறோம். பக்திப் பெருமை தெரியாத ஐரோப்பாவில் கூட ஐர்லாந்து தேசத்தார் நமது தேசத்தில் சுதேசீயத்தின் விருத்தியைப் பார்த்துவிட்டுத் தாமும் சுதேசீயத்தை ர் பெருந் தர்மம் (மதம்) ஆக்கி நடத்தவேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள்.
ஸ்வாமி விவேகானந்தர், "எனது பாரத புத்திரர்களே, இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு நீங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் யாரெனில், பாரத தேசத்தின் முப்பது கோடி ஜனங்களே. இவர்கள் எல்லாம் மஹா சக்தியின் ஆவிர்ப் பாவங்கள். இவர்களை நீங்கள் ஆராதனை செய்ய வேண்டும்; இவர்களுக்கே தொண்டு செய்ய வேண்டும்; இதைக்காட்டிலும் சிறந்த மதம் வேறு கிடையாது" என்றருளிச் செய்திருக்கிறார்.
பாரத நாடு முழுமையும் இம்மதத்தை முற்றிலும் அங்கீகாரம் செய்து கொண்டிருக்கத் தமிழர்கள் மட்டிலும் கொஞ்சம் பின்னடைந்திருக்கிறார்கள். இங்ஙனம் பின்பட்டிருப்பது பிழை. தமிழர்களே இப்பிழையை நீங்கள் சீக்கிரம் நிவிருத்தி செய்து கொள்ளாத விஷயத்தில் ஸர்வ நாசமடைந்து போவீர்கள். அறிவுடன் வாழுங்கள்.
- இப்படி தமிழ் இனம் ஆன்மிகம் கலந்த தேசபக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அறிவுரையை பாரதி அப்போதே சொல்ல வேண்டிய தேவை இருந்திருக்கிறது என்பதே இதிலிருந்து புலனாகிறது.
The Political Evolution in the Madras Presidency என்ற நூலில் எளிய ஆங்கிலத்தில் பாரதி தம் கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கிறார். இந்நூலில் சென்னையில் தேசீய இயக்கம் ஆரம்பித்த காலம் தொடங்கி தேசபக்தர்கள் அனுபவித்த கொடுமைகள் வர்ணனைகள் நெஞ்சத்தை உருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
எட்டையபுரத்தில் 1882 டிசம்பர் 11 இல் பிறந்த மகாகவி பாரதி, 1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீக்கும் வரை புரட்சிப் பிழம்பாகவே வாழ்ந்தார். இன்றும் அவர் தம் பாடல்களால் சோர்வுற்றுக் கிடப்போர்க்கு உணர்ச்சியூட்டி வருகிறார். அதுவே அமரகவித்துவம் என்பது.
ஒரு கவிஞனாக, பத்திரிகையாளனாக, கட்டுரையாளராக, தேசபக்த வீரனாக, சமூகப் புரட்சியாளனாக பல அவதாரங்களை தம் 39 வயதுக்குள் எடுத்து வீர புருஷனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதி. வெள்ளையரின் அடக்குமுறைக்குப் பயப்படாமல் சுதேசக் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தியவர். வறுமை துரத்தியபோதும் கொள்கை விட்டகலாத நெஞ்சுறுதியை தம் வாழ்வில் வெளிப்படுத்தியவர்.
நம் நாடு சுதந்திரம் பெற்று சுயராஜ்யம் மலர்ந்த இந்த அறுபதாம் ஆண்டில், நாம் மகிழ்ந்து கொண்டாடும் சுதந்திரத்தைத் தம் மனக்கண்ணால் கண்டு, சுதந்திரம் பெறும் முன்பே ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே நாம் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று பாடிய பாரதியை ஆதர்ஷ புருஷனாக அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப் படுத்துவோம். அதுவே அமரகவிக்கு நாம் செய்யும் மரியாதை.
- செங்கோட்டை ஸ்ரீராம்
தொடரும் போட்டு.. ரெண்டு பதிவா போட்ருக்கலாம்.. பொறுமையா படிக்கணும்.. அப்புறமா விலாவாரியா கமேன்டறேன்.. பார்த்தாலே தெரியுது மிக நல்ல கட்டுரைன்னு...
கரெக்க்ட்டு.. புரட்சிக்கும் எழுச்சிக்கும் பாடல்கள்தான் மூல காரணம்.
Informative Abut Mahakkavi.
கருத்துரையிடுக