சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஆகஸ்ட் 23, 2008

அழகு கொஞ்சும் இயற்கை - செங்கோட்டை வயல்வெளியில்

பொதிகைச் சாரல் தவழும் மண். செங்கோட்டை மண்ணின் வயல்வெளியில் படம்பிடிக்கப்பட்ட அழகுக் காட்சிகள் இவை....

Senkottai Nithyakalyani amman Temple செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் திருக்கோயில் புகைப்படங்கள்
செங்கோட்டையில் ஆற்றங்கரைத் தெருவை அடுத்து, ஆற்றங்கரையை ஒட்டி, அமைந்திருக்கிறது ஸ்ரீ நித்யகல்யாணி அம்மன். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அனைவரும் காலை மாலை வேளைகளில் சென்று வணங்குவார்கள்.
சிறுவயதிலிருந்தே எனக்கு வீட்டுத் திண்ணையில் படுத்து தூங்கிதான் பழக்கம். கொசு கடித்தால், அதற்கு ஒரு வலை கட்டிக் கொண்டு, திண்ணையில் படுத்துக் கொள்வேன். சில நேரங்களில் திருடர்கள் யாரேனும் வருவதுபோல் தெரிந்தால், துரத்துவதற்கென்று ஒரு இளைஞர் பட்டாளமே இருக்கும்.
நள்ளிரவு நேரங்களில் கல்யாணி அம்பாள் தெருவில் வருவாள் என்று சில பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சலங்கை சத்தம் கேட்கும் என்றும் சொல்லியிருந்தார்கள். அந்த எண்ணம் என் மனத்துக்குள் இருந்ததால், கண் முழிப்பு வரும் இரவு நேரங்களில் என் காதுகளிலும் சலங்கை சத்தம் கேட்கும். ஆனால் எதற்காகவும் பயம் கொண்டதில்லை. அச்சமற்ற வாழ்க்கையை அந்த கிராமப்புறம்தான் வழங்கியது. பெரியவர்கள் சொல்வார்கள்... அம்பாள்தாண்டா வரா.... எதுக்கு பயப்படணும்? என்பார்கள்.
என் நண்பன் ஒருவர். பெயர் துரை பாண்டி. சூரிய பாண்டியன் என்று பெயரை வைத்துக் கொண்டான். தற்போது, ரயில்வேயில் ஆர்.பி.எப். காவலராக பணிபுரிகிறான். பள்ளி நாட்களின்போது, இப்படித்தான் அவன் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தான். சீசன் சமயம் என்பதால், நள்ளிரவில் மழை தூரத் தொடங்கியது. அப்படியே எழுந்து, பக்கத்தில் இருக்கும் அவன் தெருவில் இருந்து நடந்து வந்து, எங்கள் ஆற்றங்கரைத் தெரு வழியே வந்து, கல்யாணி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாலத்துக்கு மேலே நின்றுகொண்டிருக்கிறான். யாரோ அவனை பாலத்துக்கு கூட்டி வந்திருக்கிறார்கள் போல் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. மழைத் துளி பட்டு திடீரென்று கண்விழித்துப் பார்த்தால்...
கீழே ஆற்றங்கரை ஓடிக்கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும், தெருவில் தேங்கியிருக்கும் மழை நீர் காலில் படாமல் தாவித் தாவி நடந்து வந்திருக்கிறான் - அதுவும் பிரக்ஞையில்லாமல்!
நல்லவேளையாக, அவனை கல்யாணித்தாயே காப்பாற்றியிருக்கிறாள் என்று பெரியவர்கள் சொல்லி, அதுமுதல் அவன் தெருவில் தூக்கம் போட வீட்டில் தடா போட்டார்கள்.
இப்படி எத்தனையோ அனுபவங்கள் பலருக்கு இருக்கின்றது.
இன்றளவும் முன்னினும் சிறப்பாக, நித்யகல்யாணி அம்மன் கோயிலுக்கு சிறப்புகளை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயிலின் புகைப்படங்கள் இங்கே...

செங்கோட்டை பெருமாள் திருவிழா காட்சிகள்

செங்கோட்டை சுந்தரராஜப் பெருமாள் - உத்ஸவத்தின் போது எடுக்கப்பட்டவை. தேர்த்திருவிழா படங்கள் மற்றும் கருட வாகன உலா படம்.


செங்கோட்டையில் புகழ்பெற்ற சுந்தரராஜப் பெருமானுக்கு, அடியேன் செங்கோட்டை ஊரில் இருந்த நாட்களில் (பத்து வருடங்களுக்கு முன்) பாசுரங்களை ஸேவித்து, சாத்துமுறை பாசுரங்களை ஸேவிப்பதுண்டு. இரண்டு வருடங்களுக்கு மேல் இந்தக் கைங்கர்யம் நடந்து வந்தது. தெருவில் உள்ள சிறார்களுக்கு அப்போது பிரபந்த பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தேன். நன்றாகச் சொல்லத் தொடங்கியிருந்தனர். பின்னர் அவ்வப்போது ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அந்த சிறார்கள் பாசுரம் சொல்லும் அழகைக் கேட்டுவந்தேன். பின்னர் அவர்களும் படித்து, மேல்படிப்பு அது இதுவென்று வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆயினும் இப்போதும் ஒருவரை பெருமாள் தன்னுடனே வைத்துக் கொண்டிருக்கிறார் - பாசுர மொழிகளைக் கேட்டு இன்புறுவதற்காக!

sengottai Sri Krishnan Temple Sri Krishnaசெங்கோட்டை ஆற்றங்கரைத் தெரு, (ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் தெரு) ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் வீற்றிருக்கும் கிருஷ்ணன் அழகு இங்கே... இந்தப் படம் 2008 ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழாவின் ஒரு நாளில் எடுக்கப்பட்டது. பத்து தினங்களும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பத்து விதமான அலங்காரத்தை செய்வார்கள். அதில் ஒருநாள் வேங்கடாசலபதி அலங்காரம் செய்திருந்தார்கள். இந்த அலங்காரத்தைச் செய்து அசத்தியவர் 20 வயது இளைஞர் ராஜா. கணினிக் கல்வி பயின்றவர் என்பது சிறப்புத் தகவல்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix