சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

உங்களோடு ஒரு வார்த்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உங்களோடு ஒரு வார்த்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 09, 2018

அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!



 அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!

ஆசிரியர் அழைக்கின்றார் அணி சேர்வீர்!!!

84 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தினமணிக்கு ஏராளமான பெருமைகள்  இருந்தாலும், மகாகவி பாரதியையும், தினமணியையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதிதான் தினமணியும் உதயமானது. 

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் மேற்கோளை அடிநாதமாக கொண்டு தொடங்கப்பட்டு அதன் வழியில் பீடு நடை போட்டு வரும் தேசிய பார்வை கொண்ட நாளிதழ்தான் தினமணி.

பாரதியின் பாடல்களையும், அவரது சிந்தனைகளையும் உணராதவர்கள், அவரது தாக்கம் இல்லாதவர்கள் பத்திரிக்கையாளர்களாகவே இருக்க முடியாது என்பது எனது சொந்தக் கருத்து.

பாரதியின் சொல்லாட்சியில் மிக முக்கியமானதும், இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தேவையானதுமான கோபம் எனப்படும் 

ரெளத்திரம் பழகு என்ற ஆத்திசூடி வைர வரிகளாகும்.

நாட்டில் நடக்கும் தீமைகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் முடங்கிப் போயிருந்த சமூகத்தில் பாரதி, தீக்குச்சி போல பற்ற வைத்தான் விடுதலை எனும் நெருப்பை. அவன் வழியில் இன்றும் தினமணி பாசறையில் ஏராளமான பாரதிகள் தோன்றி அக்னிக் குஞ்சுகளாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவரது பிறந்த நாளை (டிசம்பர் 11) இன்றும் ஏராளமான அமைப்புகள் கொண்டாடி வந்தாலும், அதற்கும் ஈடாக தினமணியும் அவனது புகழைப் பாட துணிந்துவிட்டதை எண்ணி பெருமைப்படுகிறோம்.

எங்களது தினமணி ஆசிரியர் திருமிகு. கி. வைத்தியநாதன் அவர்களுக்கு எண்ணற்ற சாதனைகள் இருந்தாலும் அவரது காலத்தில், அவரது ஏற்பாட்டில் பாரதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம், அதுவும் அவர் பிறந்த எட்டையபுரத்தில் வரும் 11-ம் தேதி நடத்தவிருப்பது தினமணிக்கு மேலும் புகழை சேர்க்கும். இது நல்ல தொடக்கம். 

பாரதியின் பேரில் ரூ. 1 லட்சம் பொற்கிழியும், அவரது பெயரில் விருது வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணியில் திரு. கி.வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, இடையில் நின்றுவிட்ட தமிழ்மணி எனும் பகுதியை பட்டைத்தீட்டி புத்தொளி பெறச் செய்தார் அவர். பெற்ற தாயைக் கொல்வது போல, தமிழை தினமும் கொன்று கொண்டிருக்கும் தினப் பத்திரிகைகளுக்கு மத்தியில் தமிழுக்கென்று தனிப் பக்கத்தை உருவாக்கி ஞாயிறுதோறும் தமிழை பீடமேற்றி வைத்தவர் ஆசிரியர் அவர்கள். 

தமிழ்மணியை தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கிய நிகழ்வுகளுக்கு அடுத்து சிகரம் வைத்தார் போன்று மற்றொரு சாதனை நிகழ்வு இந்த பாரதி விருது வழங்கும் விழா. இது ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். சாதனை புரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த விருது வழங்கப்பட வேண்டும். அதையும் எமது ஆசிரியர் செய்வார் எனக் கருதுகிறோம்.

எமது வாசகர்கள், பாரதியிடம் காதல் கொண்ட  இதழாளர்கள், அன்புள்ளங்கள் அனைவரும் மறவாமல் எட்டையபுரத்திற்கு வர வேண்டும்.

ஊர்க் கூடி தேர் இழுப்போம் வா..வா.....!

ஊரெல்லாம் பாரதி புகழை ஏந்திச் செல்வோம் வா..வா...!!

பின்குறிப்பு:  ஶ்ரீவைத்யநாதாய வித்மஹே தமிழ்மணியாய தீமஹி தந்நோ தினமணி பிரசோதயாத் 

என்றெல்லாம் எமக்கு மேற்கண்டதுபோல் சரணாகதி செய்யத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் திருநெல்வேலி டிரான்ஸ்பர் ஆவது கிடைத்திருக்கும்... 

வாழ்க வளமுடன்

வியாழன், பிப்ரவரி 16, 2017

தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!

அதீத அன்புள்ளம் கொண்ட
தினமணி ஆசிரியராக இருந்துவரும்
திரு.வைத்தியநாதருக்கு,

வணக்கம்.

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறேன்...

இத்தனை நாட்களாய் தங்களை மறந்துவிட்டதற்காக மன்னிக்கவும்.

தங்கள் டிவிட் ஒன்று, ஓ மன்னிக்கவும்! தங்களுக்கு சுட்டுரை என்றால்தான் பிடிக்கும் இல்லையா? தங்களுக்குத்தான் ’தமிழ்மணி’யின் மீது தீராக் காதல் அல்லவா! அப்படியான தங்களின் சுட்டுரை ஒன்று மாலையில் என் கவனத்துக்கு வந்தது. ரசித்தேன்! உடனே கடிதம் எழுதத் தோன்றிவிட்டது! 

//”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று தாங்கள் குறிப்பிட்டதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். 

தொடர்ந்து அதே சுட்டுரையின் தொடர்ச்சியாய் ஒருவர் கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலைக் கண்டு மயங்கிப் போனேன்...

// சார், அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை தமிழக அரசியலை பற்றிய தலையங்கம் உங்களுக்கு திருப்தியா// என்ற வாசகர் ஒருவர் கேள்விக்கு 
// @rajeshksy நிச்சயமாக. சரி என்று படுவதைப் பதிவு செய்கிறேன்.அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் சில கசப்பையும் சகித்துக் கொண்டாக வேண்டும்// என்று பதிலளித்திருக்கிறீர்கள்! 

மிக்க மகிழ்ச்சி. மெத்த சந்தோஷம்!

குறுகிய காலத்தில் தாங்கள் இவ்வளவு தூரம் நவீனத் தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைத்தளங்களில் உலா வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. கைப்பிடித்து அட்சரப்யாஸம் கொடுத்த தகப்பனும் தாய்க்கும் இருக்கும் மகிழ்ச்சி அது! 

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்த தங்களுக்கென, டிவிட்டர், பேஸ்புக் கணக்குகளை நானே உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்து சுவை ஏற்படுத்தியவன் என்ற வகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி! 

உங்களுடன் எத்தனையோ இடங்களுக்கு உடன் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், ”சீராமுக்கு எங்க போனாலும் ஒரு பிளக்பாயிண்ட் இருந்தா போதும்.. அவன் பாட்டுக்கு லேப்டாப்பை எடுத்துண்டு வேலை செய்வான்; வேற எதப் பத்தியும் அவனுக்கு கவலை கிடையாது” என்று சொல்வீர்கள். அப்படியாக என் தொழில்நுட்ப ஆர்வத்தைப் பாராட்டி, எனக்கு ஒரு ’சாம்சங்க் டேப்’ பரிசளித்தீர்கள். எவரிடமும் எந்தப் பொருளோ பணமோ கைநீட்டி வாங்கியிராத நான், உங்கள் நட்புமுறை பரிசளிப்புக்கு மகிழ்ந்தேன். ஆனால், எப்போது அந்த நட்புமுறை உடைந்ததோ, அப்போதே அதையும் உடைத்துவிட்டேன் என்பதை இங்கே பதியவைக்கிறேன்.

நிற்க...

அண்மைக்கால தமிழக அரசியல் சூழலில் தாங்கள் எழுதும் தலையங்கம், தங்களின் ஆசிரியர் குழு போடும் முதல்பக்க கட்டுரை, உள்பக்க லீட், ஆப் எட் லீட் ஆகியவற்றை கவனித்து வரும்போது, தங்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஆனால் தன்மானம் தடுத்து, மனம் அப்படியே நின்று விடும்! நான் தினமணியின் இணையதளப் பொறுப்பில் இருந்த வரை, பல நாட்களில் தங்கள் தலையங்கக் கருத்துகளை விமர்சித்திருக்கிறேன். சிலவற்றில் பாராட்டும்படியான அம்சம் இருக்கும். சிலவற்றில் தவிர்க்கும்படியான தடுமாறல்கள் இருக்கும். எல்லாவற்றையும் உரிமையோடு விமர்சித்திருக்கிறேன். நீங்களும் பல முறை அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!  காரணம், தலையங்கம் எப்போதும் தாங்கள் எழுதுவதில்லை! நாமக்கல்லில் தாங்கள் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழிப் பரிசு பெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டினீர்கள் நினைவிருக்கலாம்... ”தலையங்கத்துக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்துத் தரும் திருச்சி செய்தி ஆசிரியர் சோமு” என்று! அந்த சோமுவும், குருசாமியும் இன்னும் லோக்கல் தாதாக்களும் எழுதாமல் போகும் நாட்களில் தாங்கள் எழுதி வரும் தலையங்கத்தையும் ஒப்பிட்டு, உங்கள் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு, கையாளும் வார்த்தைகளைச் சொல்லி எப்படி தனித்துத் தெரிகிறது என்று சுட்டிக் காட்டுவேன். என்ன இருந்தாலும் கருத்து நாந்தானே அவர்களுக்குச் சொல்லி அதைத் திருத்துகிறேன் என்பீர்கள்! இப்போது அவற்றில் தடுமாற்றங்களைக் காணும்போது.... சரி.. அது கிடக்கட்டும்! அது உங்கள் உள் விவகாரம்!  

இப்போது, தாங்கள் திருவாளர் சோமுவைக் கழட்டி விட்டதாலும், வேறு எவரும் தங்களுக்குத் தோதாகப் படவில்லை என்பதாலும், தலையங்கத்தை மிக முயன்று தாங்களே எழுதுகிறீர்கள் என்பது தெரிகிறது. நான் முன்பே சொன்னதுபோல், தங்களின் எழுத்து நடை அங்கங்கே பல்லைக் காட்டிச் சிரித்துக் கவர்கிறது! அந்தக் கவர்ச்சிகரமான உந்துதலிலேயே தலையங்கத்தைப் படிக்க ஆவலாக இருப்பதாக நான் நேற்று எழுதியிருந்தேன்! எதை எல்லாம் நாங்கள் சகிக்கல என்று யோசிக்கிறோமோ அதெல்லாம் தங்களுக்கு சிறந்த சகிப்புத்தன்மையைக் காட்டி, சசிகலா என்று சஹஸ்ரநாம அர்ச்சனையை செய்யத் தூண்டிவிட்டிருக்கிறது. 

இதே டிவிட்டில் ஒருவர் கேள்வி கேட்கிறார்... நானும் வெகு நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... 

@KVaidiyanathan சார், மதி அவர்களின் கார்ட்டூன் கடந்த 2 மாதமாக வருவதில்லையே என்ன காரணம்..?

@rajeshksy அவர் விடுப்பில் இருக்கிறார். அலுவலகம் வருவதில்லை
என்பது உங்கள் பதில். அவர் விடுப்பில் இருக்கிறார் என்பது, வாசகருக்குச் சொல்வதற்குப் போதுமான தகவல்! ஆனால், அடுத்த, அலுவலகம் வருவதில்லை என்று கூறும் பதில், ஏன் வருவதில்லை, என்ன காரணம் அவர் வராமலிருக்க என்றெல்லாம் பின்னணியின் அலசலை தானாக ஏற்படுத்தி, எங்களைச் சிந்திக்க வைத்துள்ளது. 
தாங்களும் சசிகலா போல்தான் இந்த வாக்கியத்தைக் கையாண்டிருக்கிறீர்கள். தங்கள் உள்மனசை வெளிக்காட்டியபடி! 
சரி கிடக்கட்டும்.. இது உங்கள் உள்நாட்டுக் குழப்பம், கம்பெனி உள்விவகாரம்! 

ஆனால் தாங்கள் டிவிட்டினீர்கள் ஒரு டிவிட்...! 
”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று...

இதுதான் என்னை இக்கடிதத்தை எழுதத் தூண்டிவிட்டுள்ளது. 

ஐயா... உங்கள் வார்த்தையில் சொல்லப்போனால்... நான் நானாக இருக்கிறேன், இருப்பேன்! என்று சசிகலா அம்மையார் ஜெயலலிதா சமாதியில் வைத்து சபதமிட்டதைப் போல் அதிபயங்கர சபதமாகத் தெரிகிறது உங்கள் சபதம்!  

ஒரு விஷயம் என்ன என்றால்...

நான் தங்களுடன் ஒரே அலுவலகத்தில் பணியில் இருந்த அந்த நாலரை வருடங்களும்... நீங்கள் நீங்களாக இருக்கக் கூடாது என்றுதானே அவ்வளவு தூரம் முயற்சி செய்தேன். உங்களை உங்கள் இயல்பில் இருந்து வெளியில் கொண்டுவந்து, நீங்கள் தினமணி ஆசிரியராக இருக்க வேண்டும், தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு ஏற்ப உங்களைத் தகவமைக்க வேண்டும் என்றுதானே முயன்றோம்... 

ஏனென்றால், 
தினமணியின் வரலாறையும் அதன் ஆசிரியர்களின் வரலாறையும் படித்து, ஊர்ப் பாசத்தாலும் ஜில்லா பாசத்தாலும், தேசியமும் தமிழும் விதைவிட்டுக் கிளைத்த நெல்லை மண்ணில் இருந்து வந்து நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒருவனாக அணுகியதாலும்... குறிப்பாக தாங்களும் அதே நெல்லை மண்ணில் கல்லூரிக் காலத்தைக் கழித்தவர்; என் ஆசிரியர் உங்களுக்கும் கல்லூரி ஆசிரியர், என் நட்பு வட்டம் உங்களின் நட்பு வட்டத்தில் ஒரு பகுதி என்றெல்லாம் இருந்த காரணத்தால் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் பாசம் வைத்துப் பழகியதன் வெளிப்பாடுதான்... தங்கள் கௌரவத்தின் மீதான, தங்கள் வளர்ச்சியின் மீதான அக்கறையாக அன்று இருந்தது. ஏற்பவோ ஏற்ப இல்லாமலோ தாங்கள் தினமணியின் ஆசிரியர் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள்; தினமணியின் வரலாற்றில் தங்கள் இடம்பெறப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வையே தங்களுக்கு அவ்வப்போது பதிய வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், உங்கள் உள்மனத்தின் உந்துதலை அறியத் தவறிவிட்டோம்! 

நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள்... முட்டாள்கள்தான் இங்கே வேலை செய்வான்; தினமணியை விட்டுச் செல்பவன் நல்ல அறிவுஜீவியாக இருப்பான் என்று!

அதை குறுகிய காலத்தில் உணர்ந்தேன்.

எத்தனை பேர் அப்படி! 
தினமணிக் கதிரில் சிவக்குமார் வேலை செய்தார். தங்கள் வாக்கை மெய்ப்பிக்க, அவர் பணி ஓய்வு பெறும் வயதில் திருச்சிக்குத் திசைதிருப்பினீர்கள். சிரமப்பட்டு அவர் போதுமென்று வந்துவிட்டார்.
தங்கள் அறிவுஜீவிப் பட்டத்தைச் சுமக்காமலே சினிமா எக்ஸ்பிரஸ் சிவகுமார்... ( தங்கள் ஜெயலலிதா பாணி தண்டனையைப் பார்க்காமலே மறைந்தது மகிழ்ச்சி என்ற வாசகத்தின்படி) பாவம் மறைந்துபோனார்.

இந்தப் பட்டியலில் எத்தனையோ பேர். அனைவரின் பெயரையும் பட்டியலிடுவது பொதுவெளியில் தகாது என்பதால் உங்கள் வாக்கியத்தின் படி ஓர் அறிவுஜீவியாக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஓர் இலக்கிய மாத இதழ், தங்கள் முகப்பில் “இதழல்ல இயக்கம்” என்று போட்டுக் கொண்டிருக்கும். 

ஆனால், அதை அழகாக செயல்படுத்தி வருபவர் தாங்களே.
தினமணியை இதழாக இல்லாமல் ஒரு அரசியல் இயக்கமாகவே நடத்தி வருவதை, உலகம் அறியும். அதைத்தான் இப்போது நான் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறேன்... தினமணி பின்னேற்றக் கழகம் என்று! - அதன் தலைவர் தாங்கள்! ஒவ்வொரு பதிப்பும் ஒரு மண்டலம். அதற்குள் மாவட்டம். வட்டம். அதன் நிருபர்கள், செய்தியாளர்கள் அந்த அந்த மாவட்ட,வட்ட செயலர்கள். உள்ளே செ.ஆ., பொ.ஆ., உ.ஆ., தலைமை செய்தியாளர்கள், எல்லோருக்கும் ஒரு பொறுப்பு. தலைவரின் சுற்றுப்பயணம், கூட்டங்கள் குறித்த விவரங்கள் தினமணியில் முன்னதாகவே பிரசுரிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுவிடும். 

அங்கங்கே, தலைவர் பயணம் செய்யும் ரயில் வரும் போது, ரயில் நிலையங்களில் வட்டச் செயலர் தலைவருக்குப் பிடித்த உணவு, இனிப்பு, இட்லி சாம்பார் பாக்கெட்டுகளுடன் காத்திருந்து கையசைப்பார். எவர் தீவிர விசுவாசியோ, அவருக்கு வருடாந்திர கவனிப்பு நன்றாக இருக்கும். 

இப்படியாக ஓர் அரசியல் கட்சியில் இருந்து எதைப் பார்க்க வேண்டுமோ அதை, அரசியல் கட்சிகள் என்றாலே அடியோடு வெறுக்கும் நான் குறுகிய காலத்தில் தி.பி.க.,வில் இருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். அதற்காக நன்றி. இனி நானும் அரசியலில் ஈடுபடலாம். 

எப்படி நம்மை நாமே முன்னிறுத்திக் கொள்வது, எப்படி ஒரு கட்சியைக் கையாள்வது, எப்படி போட்டுக் கொடுத்து இடத்துக்குத் துண்டு போடுபவர்களின் பேச்சைக் கேட்டு அரவணைப்பது, போட்டுக் கொடுக்கப் பட்டவர்களின் சீட்டைக் கிழிப்பது எல்லாம் உடனிருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். எல்லாம் அனுபவம். அந்த அனுபவத்தைப் படிக்க வைத்த தங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.  

இத்தகைய பின்னணியில் நீங்கள் எழுதிய தலையங்கத்தை விமர்சிக்க விழைகிறேன். ஏனெனில் தங்களுடன் தொடர்பு விட்டுப் போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும், தங்களிடம் நேரில் சொல்ல முடியாது என்பதாலும், அப்படியே சொல்பவர்களின் பேச்சையே தட்டிக் கழிக்கும் தாங்கள் என் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று என் உள்மனம் சொல்வதாலும் இதனை இங்கே பதிவு செய்கிறேன்.
 நிற்க...

தங்கள் 15.2.2017ம் தேதியிட்ட தலையங்கத்தில்...

//மது கோடாவும், ஓம் பிரகாஷ் செளதாலாவும் ஊழல் வழக்கிலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.// 
ஆஹா... ஊழல் செய்யாமல் சொத்துக் குவிப்பது எப்படி என்பதையும், ஊழலுக்கும் சொத்துக் குவிப்புக்கும் என்ன வித்யாசம் என்பதையும் வாசகர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகச் சொல்லிவிட்டால், நானும் தங்களை உயர்ந்த ஆசிரியராகக் கொண்டு கற்றுக் கொள்கிறேன். காசு இல்லாம ரொம்ப கஷ்டப் படுறேனுங்க ஸாமீ. 

//"...ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்போது நிலமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி ஒரு அவமானத்தை எதிர் கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லதுதான் என்று கூறத் தோன்றுகிறது..."//

// "யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு  நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி படுத்தியிருக்கிறது"//

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

தீர்ப்பும், தண்டனையும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை ஜெயலலிதா அனுபவிக்காதது நல்லது... 
என்ன நியாயமோ? புரியவில்லை!

2014ல் இதே கர்நாடக நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பு அளித்த போது வராத அவமானம், இப்போது வந்துவிடுமா? எந்த மாநிலத்துடன் காவிரிப் பிரச்னைக்காக சண்டை போட்டு மல்லுக்கட்டினாரோ அந்த மாநிலத்தில் கேவலப்பட்டு, அந்த மாநில மக்களால் சிரிப்பாய்ச் சிரித்து, ஒட்டு மொத்த தமிழகத்தையே கேலி பேசும் விதமாக நின்றபோது வராத அவமானம் இப்போது வந்துவிடப் போகிறதா?

ஜெயலலிதா மறைந்த போது (டிச.6,2016) முதல் பக்க சிறப்பு தலையங்கத்தில்,

"இனி ஜெயலலிதா ஓர் அசைக்க முடியாத சக்தி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இடியென தாக்கியது பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும், அதைத் தொடர்ந்த அவரின் சிறைவாசமும் அவரை நிலை குலைய வைத்துவிட்டன. அந்த அதிரடி தாக்குதலிலிருந்து ஜெயலலிதா மனதளவில் மீளவே இல்லை.
 அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இப்போது மரணத்தை தழுவி இருப்பதற்கு குன்ஹா வழங்கிய தீர்ப்புத்தான் காரணம் என்று சரித்திரம் பதிவு செய்தால் வியப்பதற்கில்லை...." 
  
- என்று ஜெயலலிதா மரணத்துக்கு குன்ஹாவைக் காரணம் காட்டுகிறீர்கள். நீதிபதி அல்ல;  ஜெயலலிதா அன்கோ செய்த தவறுகள் தான் காரணம் என்று சொல்லத் தோன்றாத நடுநிலையைத் தாங்கள் கொண்டிருப்பது மெத்த மகிழ்ச்சி தருகிறது. 

நிற்க...

ஜெயலலிதா மறைந்த போது மிக பதட்டமான சூழல் இருந்தது. பிரச்னை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, கட்சியினர்கூட அமைதியாக  இருந்து அந்த நேரத்தை எதிர்கொண்டனர். ஆனால் அப்போது இந்தச் சூழலை குன்ஹாவுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, சசிகலா மீது பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்தை திசை திருப்பி விட்ட அற்ப சந்தோஷத்தை தாங்கள் அடைந்திருப்பீர்கள். 
ஆனால் இன்று குன்ஹா, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலால், நேர்மையாளர் என வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார். கோடிகளுக்கு விலைபோகிறவர்கள் கேடிகளாவர் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் குமாரசாமி கேலிக்கு ஆளாகிவிட்டார். 

தலையங்கத்தின் கடைசிப் பகுதியில் தாங்கள் ஒரு அதிமுக., கட்சி நாளேட்டின் தகுதி வாய்ந்த  ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் கவனம் தெரிகிறது. அதற்காக நீங்கள் சொல்லும் வழிமுறைகள், திரு.எம்.நடராஜனாரை சந்தித்து அடிக்கடி பேசுவதில் இருந்து வெளிப்படுகிறது. ஏன்.. உங்கள் சிந்தனை இப்படிப் போகாதா?
பன்னீர்செல்வமும் சசிகலா காலில் விழுந்து கும்பிடு போட்டவர்தான். அவரை முதல்வராக நீடிக்க வைத்து, தாங்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தங்கள் அராஜக/பிறர் சொத்தை, அரசாங்க சொத்தை கபளீகரம் செய்யும் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலட்டுமே என்று! அப்படி எனில் கட்சி உடையும் நிலை வராது இல்லையா?

எப்படிப் பார்த்தாலும் தாங்கள் தமிழக மக்களுக்கு துர்நலனை நாடும் துர்போதனையைச் செய்கிறீர்கள் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்!

ஒருவேளை தாங்களே நேரடியாக பாதிக்கப்பட்டால் பொங்கி எழுவீர்கள் போலும்! 

ஆளுநரை குறை சொல்லும் நீங்கள், ஆளுநரின் செயல், மோடி, குருமூர்த்தி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் திருவாளர் தி.க. வீரமணியின் கருத்தைச் சொல்லி, திருவாளர் எம்.என்.னின் கைக்கூலி ஆகிவிட்டீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே! அதை எப்படித் துடைப்பீர்கள்! தேவையில்லைதான்... உண்மை அதுவாகவே இருக்கும்போது!

ஆனால் இப்போது ஒன்று சொல்லத் தொடங்கியிருக்கிறீர்கள். எல்லாம் முதலாளியின் கட்டளை என்று! அமரர் கோயங்கா தொடங்கி, இன்று வரையுள்ள முதலாளியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெளிவாகக் கூறுவார்கள்... தினமணியின் ஆசிரியர் குழுவுக்கு இருக்கும் கௌரவமே சுதந்திரம்தான்! முதலாளியுடன் பழகி அறிந்தவன் என்ற வகையில், அவர் ஒன்றே ஒன்று சொல்வார்... எல்லா முதலாளிகளும் சிந்திக்கக்  கூடியதுதான்.. இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பாதகமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே! அது நம் தார்மீக கடமையும்கூட! இந்த ஓர் இதழின் இயக்கத்தில்தான் எத்தனை பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது!?
ஆனால் எக்காலத்திலும் இப்படிப் போடு என்று கட்டளையிடும் முதலாளி இல்லை! 
தாங்களாகவே சசிகலா நட்பு வட்டம் நாடி, ஆதரவு நிலை எடுத்து, முதல் பக்கத்தில் இருந்து செய்தியைப் பிரதானப் படுத்தி... எல்லாம் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

வெகுஜன இயக்கத்தில் இருந்து தனித்துப் போகும் உங்கள் திபிக., இயக்கம்... பெரும் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமே என்றும், இதழை நம்பியுள்ள பலரின் வாழ்க்கை கெட்டுப் போய்விடக் கூடாதென்ற கவலையினாலும் இவ்வளவு நேரத்தை செலவிட்டு இதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

ஆசிரியரே! நாங்கள் எதிர்பார்த்தது தினமணி ஆசிரியராக, தன் பெருமையைக் காக்கும் ஒருவராக தாங்கள் இருப்பதைத்தானே ஒழிய, அதிமுக., கட்சிப் பத்திரிகையின் ஆசிரியராக அல்ல! ஆகவே ஆசிரியரே நீங்கள் நீங்களாக இருக்க வேண்டாம். தினமணி ஆசிரியராக இருங்கள்! 

இப்படிக்கு, 
தினமணியின் நலன் நாடும்
உங்கள் முன்னாள் நண்பன்.


Best Regards,

Senkottai Sriram

(Journalist / Writer)

திங்கள், நவம்பர் 14, 2016

பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?


வீரகேரளம்புதூரில் கோயில்கொண்ட நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் பெயரை, எங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருந்தவர் என் அத்தை மகன் நவநீதகிருஷ்ணன். நவநீதன், நவனீ என்றெல்லாம் செல்லமாய் அழைக்கப்பட்டவர்!

என் துவக்கப் பள்ளிப் பருவத்தில் பார்த்ததுண்டு. மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். மனத்தில் ஓர் அழுத்தமும் அமைதியும் குடிகொண்டிருக்கும். முகம் சலனமற்று எந்தவித கோபத்தையோ வருத்தத்தையோ நகைப்பையோ வெளிப்படுத்தாமல் அப்படியே இருக்கும்!

மிகச் சிறு வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தாராம். பத்து வருடத்துக்கும் மேல் சர்வீஸ் முடித்து 30 வயதுகளில் ஊர் திரும்பிவிட்டார். தென்காசி மேலப்புலியூர் அக்ரஹாரத்தில், அவரது வீட்டின் மாடியில் போய் அமர்ந்தாரென்றால் புத்தகமும் கையுமாக இருப்பார். ராணுவத்தில் இருந்த சகவாசம், மிலிட்டரி சரக்குக்கு ஆட்பட்டு விட்டாராம்! அதனால் அவர் அருகே போக அச்சப்பட்டு ஒதுங்கிச் சென்றிருக்கிறேன்! வயது பத்தைக் கடந்திராத அந்தப் பருவத்தில் சாராயத்தின் வீரியம் எல்லாம் என் அறிவுக்குள் எட்டியதில்லை! ஆகவே எட்ட நின்றே பார்த்திருந்தேன்! ஆனாலும் ராணுவ சேவை என்பது அவர் மூலம் சிறுவயதில் தீப்பொறியாய் ஒரு மூலையில் பற்றியது!

அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்குத் திருமணம் ஆயிற்று! அதற்கு அடுத்த ஓரிரு வருடங்களில் மண வாழ்க்கை நிலைக்காமல் மரித்தும் போனார்! இருந்தாலும், ராணுவத்தில் இருந்து திரும்பியவர் என்ற அந்த அடையாளம் மட்டும் மனசுக்குள் ஒட்டிக் கொண்டதில், நாமும் ராணுவப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டிருந்தது!

தென்காசியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நேரம்... ஆறடி உயரம். கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று போட்டிகளுக்கும் சென்று வந்தேன். குழு விளையாட்டுகள்தான்! அப்போதுதான், NDA - National Defence Academy தேர்வு எழுதலாம் என்று உடன் படித்த நண்பர்கள் ஓரிருவர் முயன்றனர். என்னவென்றே அம்மாவிடம் சொல்லாமல் அந்தப் பதினாறு வயதில் நானும் எழுதினேன்.

எழுத்துத் தேர்வு முடிந்து, அடுத்த கட்டத்தில் வந்து நின்றது. மெள்ள அம்மாவிடம் ஆசையைச் சொன்னேன்! டிஃபன்ஸ் என்ற சொல், அம்மாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏற்கெனவே மதிப்பும் பாசமும் வைத்திருந்த என் அத்தான் நவநீயின் வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பு ஒரு புறமும், ஒற்றைப் பிள்ளை, அதுவும் தலைப்பிள்ளை எப்படி உன்னை விட்டு இருப்போம் என்ற பாசக் கட்டு மறுபுறமுமாக இழுத்துக் கட்டியதில், அந்த முயற்சி அத்துடன் நின்று போனது! பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையுடன் என் பெரிய மாமா சுந்தர்ராஜனின் கையில் என்னை ஒப்படைத்தார்! நானும் திருச்சிக்கு வந்தேன்; கல்லூரிப் படிப்புக்கு!

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்தப் பதினாறு வயதில் ராணுவப் பணிக்கு சென்றிருந்தால், இருபது வருட சேவை முடிந்து இன்று திரும்பியிருக்கலாம்! இந்த இருபதுக்கும் மேலான வருடங்களிலும்  தாயை விட்டுப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்திருக்கிறேன், என்றாலும் கூப்பிடு தொலைவில் இருந்து கொண்டு! ஆசையிருந்தும் ராணுவப் பணிக்குச் செல்லாமல் இருந்த இந்த இருபது வருடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சாதனையோ, சமூகத்துக்குப் பயனுள்ள வாழ்க்கையையோ நான் வாழ்ந்துவிடவில்லைதான்!

அத்தானின் கதியை நினைத்துதான், சிகரெட், மது இரண்டின் அருகேயும் செல்லக் கூடாதென சத்தியம் செய் என்றார் அம்மா. இன்று வரை அந்த சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறேன்! ஆனாலும், பாசம் என்ற கயிறு, எப்படி நம் தனிப்பட்ட விருப்பங்களில் இழுத்துச் செல்லாமல் கட்டிப் போட்டு முடக்கிவிடுகிறது என்பதை அவ்வப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

கல்லூரியில் படித்த 90களில்தான் கணினிப் படிப்பு அறிமுகமானது. யுனிக்ஸ், சி ப்ளஸ், டிபேஸ், என முயன்று படித்தும், உடன் படித்த நண்பர்கள் அத்துறையில் சென்றபோதும்,  வழிகாட்ட யாருமின்றி அந்தத்  துறையிலும் கால் பதிக்காமல் ஏதோ மார்கெடிங் என்று துவக்கத்தில் ஊர் சுற்றி, பின்னாளில் பத்திரிகைத் துறை என்று தடம் மாறிப் போனது!

இந்த ஞாயிறுப் போதில், குடியிருப்பின் அடுத்த ப்ளாக் நண்பர் திரு. ஜகந்நாதனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 28 வயதாகும் அவர் மகன் இன்ஃபோஸிஸ் பணியில் மெல்பர்னில் இருப்பதாகவும், இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் படிக்கும் போதே கேரியர் குரோத், வளர்ச்சி, போட்டிகள் நிறைந்த உலகம் எப்படி சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்றும், பாசம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை என்றும் கருத்தைச் சொன்னார். சாப்பிட்டாயா என்று கேட்டால் கூட, அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்றும், தங்களை இன்னும் குழந்தை போல் யோசிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வதாகவும் கூறினார்.

தலைமுறைகள் குறித்த அவரின் இந்தச் சிந்தனையே, என்னைப் பற்றிய சுயபரிசோதனைக்கு என்னைத் தூண்டியது! படிப்பும் திறமையும் இருந்தது; ஆனால் வழிகாட்டிகள் எவரும் இல்லை! சொந்தங்களும் சொல்லிக் கொள்ளும்படி வழிகாட்டும் நல்ல நிலையிலில்லை! காற்றின் திசையில் அலைக்கழிக்கப்படும் படகைப் போல் பயணித்தாயிற்று! துடுப்பு போடும் வலிமையின்றி! அதுதான்... நான் ஏன் இப்படி உதவாக்கரை ஆனேன் என்று இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...! சுய சிந்தனை! சுய பரிசோதனை! 

ஞாயிறு, ஜூன் 05, 2016

புனித தாமஸ் எனும் புனை கதை!

புனித தாமஸ் எனும் புனை கதை!
***
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது...
பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று
ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு ஹெஹே ஹைஹைன்னு ஏதோ சிரிப்பு, கைதட்டல், டான்ஸ், எக்சர்சைஸ் என்று என்னமோ கூத்தடித்து ஒரு நாள் முழுக்க வீணாக்கினார்...
சென்னையைப் பற்றி சொன்னார்...
சுற்றுலா இடங்கள் என்று ஏதேதோ பேசினார்
எல்லாம் சகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்...
திடீரென செண்ட் தாமஸ் சர்ச் என்றார்... மந்தைவெளி சர்ச்..
பிருங்கிமலை சர்ச் பற்றி சொன்னார்...
ரொம்ப உருக்கமாக யாரோ ஒரு பிராமணன் தாமஸை குத்தி  தோமயர் மலையில் சாவடிச்சார் என்று கதை விட்டார்...(இந்த பிருங்கி மலை பரங்கிமலையான கதையை  ஏற்கெனவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்...)
என் சகிப்புத் தன்மை என்னிடம் சகிக்காமல் ஓடியது...
எழுந்து நின்று கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினேன்...
நீங்க சொல்றதுக்கு என்ன ஆதாரம்? என்று!
வழிவழியாக சொல்லப்படும் கதை, அங்கே அப்படித்தான் எழுதிப்  போட்டுள்ளார்கள் என்றார்.
அப்படியானால்... தாமஸ் எந்த வழியில் இந்தியாவுக்கு வந்தார்  என்றேன்...
கடல் வழிஎன்றுதான் சொல்கிறார்கள் என்றார்.
அப்படியானால் வாஸ்கோடகாமாவை இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்து எறிந்துவிட வேண்டும் சம்மதமா என்றேன்...
அர்த்தம் புரிந்தவர் போல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்...
மயிலையில் இருந்து கொண்டு, சர்ச்சாகிவிட்ட அந்தக் கபாலியின் கோயிலுக்கு எத்தனை முறை சென்றிருக்கிறேன். தூண்களும் படிகளும் இன்றும் பறை சாற்றுகின்றது.  (https://goo.gl/uWRpdV)
பாடப்பட்ட பாடல்களெலாம்... கடற்கரையில் அமர்ந்த ஈசனின் திருக்கோவில் தாள் தொட்டு சாகரத்தில் சங்கமித்த அலைகளைப் பேசுகின்றன...
சம்பந்தரின் சம்பந்தம் பெற்ற இந்தப் பாடல் அதைச் சொல்லும்...
*
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன் ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது. (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)
3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.

***
பொய்கள் .. மதசார்பின்மை என்ற நிலைப்பாட்டில் பலராலும் பரப்பப்  படுவது இது ஒன்றும் புதிதல்ல!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - துருக்கியர் படையெடுப்புகளும் அதன் மதப் பரவலாக்கமும்!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - ஐரோபியப் படையெடுப்புகளும் கிறிஸ்துவ மத பரவலாக்கமும்!

வாள் என்று முன்னே நீட்டி, கழுத்தில் கத்தியை வைத்து கதறக் கதறக் கொலைகளைச் செய்த அரேபியராகட்டும்...
ரொட்டித் துண்டை முன்னே நீட்டி கதறக் கதறப் பார்த்திருந்து இயேசுவின் நாமத்தால் நாக்கைச் சப்புக் கொட்ட வைத்த பாதிரிகளாகட்டும்...
எல்லாரும் இந்த இந்தியத்  திருநாட்டின் வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதியப் பட்டிருக்கிறார்கள்!
அந்த உண்மை வரலாறுகளை தேடிப் படிக்காதது நம் குற்றம்!
***
கோவா இன்க்யுசிஷன் - கோவா நீதி விசாரணை  என்பதை கூகுளில் தேடிப் பிடித்துப் படியுங்கள்!
கோவா என்ற அந்த இந்தியப் பிரதேசம் - எப்படி  ’அளவு கடந்த அன்பெனும் மகிமை’யால் கிறிஸ்துவமயமானது என்பதை படித்துப் பாருங்கள்!
***
இந்திய மன்னர்களும் சண்டையிட்டார்கள்!
சேரனும் சோழனும் பாண்டியனும்கூட சண்டையிட்டான்.
வாள்களும் ஈட்டிகளும் மோதிக் கொண்டன...
சமணமும் புத்தமும் கூட போட்டியிட்டது
சைவமும் வைணவமும் கூட சண்டையில் ஈடுபட்டன
மதங்களைக் கட்டிக் கொண்ட மன்னர்களால் மதப்  பிடிப்புள்ள தத்துவவாதிகள் கொலையுண்டார்கள்...
ஆனால்... மக்கள் மடியவில்லை! கத்தி முனையில் கழுத்தில் கீறப்படவில்லை! மதத்தை முன்னிறுத்தி போர்கள் நிகழவில்லை!
மண்ணாசையே போருக்குக் காரணமானது!
வரலாற்றில் தன்னை முன்னிறுத்தும் பேராசையே வாள்சண்டைக்கு காரணமானது!
வெற்றி பெற்றாலும், வென்ற மண்ணில் மக்களை சமாதானப் படுத்த வெற்றிபெற்றவன் செய்த முதற்காரியம், அந்த மக்களின் மத உணர்வைப் போற்றும் விதமாய் அவர்களின் தெய்வத்துக்கு கோயில்களை எழுப்பியதுதான்! காரணம் அதே தெய்வம் இவனுக்கும் தெய்வமாக இருந்ததே!
ஆனால்....
இந்திய மதங்களை அழிக்கக் கிளம்பிய அன்பு, அகிம்சை பேர் தாங்கிய மதங்களெலாம்
இந்த மண்ணுக்குச் செய்த துரோகங்கள்... கொஞ்ச நஞ்சமல்ல! கொடிய நஞ்சு!
***
இன்றளவும் மாரியம்மனையும் சுடலையப்பனையும் மாடசாமியையும் இன்னும் வெளி உலகை வந்தடையா எண்ணற்ற தெய்வங்களையும் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்களைக் காணும்போதெல்லாம்....
எத்தகைய வீரம் விளைந்தவர்கள் என்பதை எண்ணி எண்ணி உள்ளம் சிலிர்க்கும்!
ஆமாம்..
இன்றும் தங்கள் குல வழக்கப்படி, மரபு சார்ந்து, விழா எடுத்து, பொங்கலிட்டு, படையலிட்டு, தங்கள் தெய்வங்களைத் தொழுது கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே...
வீர நெஞ்சினரே...
விலை போனவர்களைப் போலும், வாளுக்கு அஞ்சி வாய் மூடிய கோழைகளைப் போலும் இல்லாது நெஞ்சு  நிமிர்த்தி நிற்கின்றார்களே... அதற்காகவே அவர்கள் காலில் விழுந்து வணங்கலாம்! வணங்குகிறேன்!

****
மேலும் படிக்க... சில சுட்டிகள்!
* ஜெயமோஹன் கட்டுரை http://www.jeyamohan.in/600#.V1OdUPl97IU
* டோண்டு வலைப்பதிவு: http://dondu.blogspot.in/2008/08/blog-post_12.html
கோவா நீதிவிசாரணைச் சம்பவங்கள்:
* https://en.wikipedia.org/wiki/Goa_Inquisition
* http://www.newindianexpress.com/education/student/Goa-Inquisition/2015/09/03/article2979630.ece
* https://goo.gl/3VUfFk

புதன், மார்ச் 02, 2016

இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை


ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது... இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட,
தவறு செய்யத் தூண்டி, வண்டியோட்டியின் கண்ணில் படாதவாறு இடது புறம் மரத்துக்குப் பின்னோ, தெருவிளக்கு மின் பெட்டிக்குப் பின்னோ மறைந்து நின்று... திடீரென இடப்புறம் திரும்பி வருபவரை கப் என்று பிடித்து, கறந்து விடுவது... போக்குவரத்து போலீஸாரின் இயல்பு. அவர்கள் என்றுமே, தவறு செய்யாமல் தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் நிற்பதில்லை!
இது கிட்டத்தட்ட ஸ்டிங் ஆபரேஷன் போல்தான்! அதாவது பொறி வைத்துப் பிடிப்பது.
ஏற்கெனவே சபல புத்தியுள்ள ஒருவனை, விதி மீற வைத்து, அபராதம் கறக்கும் ஒரு செயலைச் செய்வது அறமா?
இது போன்றதற்கான விடையை, ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை வைத்து  நீதிபதி ராமசுப்ரமணியன் சொன்னது ரசிக்கும் படி இருந்தது. நல்ல தகவலாகவும் இருந்தது.
எங்கே என்று கேட்கிறீர்களா?
***
தினமணி அறக்கட்டளையின் சார்பில், மார்ச் 1 ஆம் நாள், ஏ.என்.எஸ்., நினைவுச் சொற்பொழிவு என்றும், முதல் சொற்பொழிவாக நீதிபதி ராமசுப்ரமணியன் சிறப்புச் சொற்பொழிவு என்றும் பார்த்தேன். தலைப்பு இன்னும் தூண்டுதலாக அமைந்துவிட்டது. "இதழியல் அறம்” என்பதுதான் அது.
நீதிபதி ராமசுப்ரமணியன் மீது பெரும் மரியாதை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் உண்டு எனக்கு! நேரில் சந்தித்து அளவளாவிய தன்மையால் மட்டுமல்ல... எவர் ஒருவர் பசுவை வைத்து பூஜை செய்து நியமப்படி நடந்து கொள்கிறாரோ... அவர்  காமதேனுவின் அம்சம் ஆகிறார்!
நீதிபதி ராமசுப்ரமணியன் தமது இல்லத்தில் இப்போதும் பசு மாடு வைத்து, கோ பூஜை முறையாகச் செய்து, தர்ம நெறிப்படி வாழ்வை நகர்த்திச் செல்பவர். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு! மேலும், நல்ல பேச்சுத் தமிழ் நடை கைவரப் பெற்றவர். கெக்கே பிக்கே நகைச்சுவை என மலிவான சரக்கை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல், இயல்பான கௌரவமான நகைச்சுவையைக் கையாளக் கூடியவர். அந்த எண்ணத்தில் ஏ.என்.எஸ்ஸுக்காகவும், தினமணிக்காகவும், நீதிபதியாருக்காகவும் இந்த நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வராவிட்டாலும், தினமணியின் பொது அழைப்பு காரணத்தால், தினமணி வாசகனாகவே இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்!
***
நிகழ்ச்சியில் பேசிய அனைவரின் பேச்சுமான, ஓரளவு முழுமையான ரிப்போர்ட்... தினமணியில் 2ம் பக்கம் முழுமைக்கும் பிரசுரமாகியிருக்கிறது. பார்த்துப் படித்துக் கொள்க!
நீதிபதியார் பேசியவை வழக்கம்போல் ரசிக்கத் தக்கனவாய் அமைந்திருந்தது.
அவர் பேசியவற்றில் ஒரு கருத்து...
***
அறம் விலகக் காரணம்..?
இதழ்களின் எண்ணிக்கை பெருகியது; (இதழ்கள் பெருகிய அளவுக்கு வாசகர்கள் பெருகாதது); இதழ்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை! முந்தித் தருதலில் குளறுபடி; கிடைத்தது மலினமாக இருந்தாலும் காசுக்காக செய்தியாக்குவது! தவிர்க்க இயலாத போட்டியால் பொறிவைத்தல் செய்திச் செயல்களில் ஈடுபடுவது....
- இப்படி சில காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
அடுத்தது... அவரின் உரைத் தொகுப்பில் கடைசியாக இடம்பெற்ற முத்தாய்ப்பு வார்த்தைகள்!

ஓர் இதழ், அறத்தில் பால் நிற்கிறதா அல்லது அப்பால் தள்ளிப் போகிறதா என்பதை, அந்த இதழ் வெளியிடும் செய்திகள், அதில் இடம்பெறும் கட்டுரைகளின் உண்மைத் தன்மை, பொதுநலன் மட்டுமே அதில் பொதிந்துள்ளதா அல்லது தங்களுடைய சுழற்சி (சர்குலேஷன்), மலிவான பரபரப்பு விற்பனையை மையமாகக் கொண்டுள்ளதா என்ற தன்மை, (சுயவிளம்பரம், சுயதம்பட்டம் கொண்டு விளங்கும் தன்மை) இவற்றுக்கான விடையில்தான் இதழியல் அறத்தின் உயிர் நாடி உள்ளது.
***
இப்படியாக,
இந்த உயிர்நாடியை உயர் நாடித் துடிப்பாய்க் கொண்டு செயல்பட்டதால்தான், ஏ.என்.எஸ் என்ற ஒரு சித்தாந்தத்தை இன்றளவும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்த உயர் தனிச் சிந்தனை!

இருக்கும்போது, ஜால்ரா போட்டு, அண்ணன் வாழ்க, ஐயா வாழ்க கோஷம் போடுவதெல்லாம் அவ்வப்போதைக்கு காதுக்கு குளிராகவும் மனதுக்கு போதையாகவும் இருக்கும்... ஆனால் காலம் கடந்து நிற்பதுதான் பிறப்பின் பயன்.
அந்தப் பிறவிப் பயனை அடைந்த ஏ.என்.எஸ் போன்றவர்கள், நமக்கு வழிகாட்டிகளாய் அமையட்டும்!

திங்கள், ஜனவரி 18, 2016

வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்

பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!
ஸ்ரீரங்கத்து ராஜா ரங்கராஜன். குடிமக்கள் எல்லாம் அவனை அரசனாகவே கருதி பணிவிடை செய்ததுண்டு. அவன் குடிகொண்ட கோவில், அவனது அரண்மனை. நம் தென்னகத்து ராஜாக்கள் எல்லாம் தனக்கும் தன் வசதிக்காகவும் அரண்மனைகளைக் கட்டிக் கொண்டதைவிட அந்த அந்த ஊரில் ஆட்சி புரியும் ஆண்டவனுக்கே அரண்மனைகள் போல் ஆலயங்களைக் கட்டிக் கொடுத்தார்கள்.
இப்படியாக பாலாற்றின் கரையினிலே கச்சிப் பதியை ஆளும் அரசனான வரதராஜன் தன் குடிமக்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், விழாக் கொண்டாட்டத்தின் மூலம் மக்களை ஒன்று கூட்டி, மகிழ்ச்சியடையச் செய்யவும்... எத்தனை தொலைவு கடந்து எழுந்தருள்கிறான்.
எவருக்கும் உள்ளர்த்தமும் காரணமும் புரியாத எழுந்தருளல்தான் இது!
கொட்டும் பனி, நடுக்கும் குளிர், கரடுமுரடு பாதை, பாலாற்றின் மணல்வெளி, அச்ச இரவு... எல்லாம் கடந்து, அவன் எழுந்தருளும் காரணம் யாருக்கும் தெரியாது! கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவு. அவனடியார் குழாம் அவனை எழுந்தருளச் செய்துகொண்டு, அவன் நாமம் பாடி, பஜனை பாடல்கள் என உற்சாகம் மிகக் கொண்டு வரும் அழகே தனி!
இந்த நாகரிக யுகத்திலும் இவ்வளவு பேர் திரண்டு இத்தனை விசுவாச பக்தியுடன் அவனை வரவேற்கிறார்கள் எனில்... சற்று கால ஓட்டத்தின் பின்நோக்கிப் பார்த்தால், கற்பனை சிறகு விரிகிறது. சரித்திரத்தின் பக்கங்களில் காலங்காலமாக வரதனின் இந்தப் புறப்பாட்டுச் சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. ஆயினும் காரணம் இதுவென்ற புரிதலின்றி!
***
சிந்தனை ஓட்டம் வரதனைப் பற்றியே இருந்தது. கேள்விப்பட்ட சங்கதிதான்! ஆயினும் கண்ணாரக் கண்டு உணர்வில் கலந்ததில்லை! எப்படியும் இன்று சென்றுவிடலாம். எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு! எடுத்தால்... நான் முன்னர் பணிபுரிந்த நாளிதழில் தற்போதும் பணிபுரியும் ஒரு நண்பர். கட்டாயத்தின் பேரில் தான் விருதாவாகத் தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதைச் சொன்னார். நான் திருமுக்கூடல் சென்று, பாலாற்றின் கரையில் பொழுது போக்கச் செல்லவதாகச் சொன்னேன்! "நீங்க கொடுத்து வெச்சவர்ண்ணா" என்ற வாசகத்தோடு முடித்துக் கொண்டார்.
வாளுக்கு ஆட்பட்டவன் பரம்பரைப் பெருமை மறந்து வாழ்க்கையின் உன்னதம் மறந்தான்; கூழுக்கு ஆட்பட்டவன் கொண்ட கொள்கை துறந்து வாழ்க்கையின் உட்பொருள் மறந்தான்!
வாழ்க்கையின் உள்ளர்த்தம் புரியாத கோட்பாடுகள் என்னைச் சுற்றிச் சுற்றி உழலத் தொடங்கின. இயற்கையின் விளையாடல் எத்தனையோ அத்தனையும் புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இல்லைதான்! ஏன்... சிறு துளிகூட நம் மனத்தில் ஏறுவதில்லைதான்! ஆனாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
***
வரதனின் விழாக் கற்பனைகள் ஒரு புறமும், கசந்த காலத்தைக் கடந்து வாழ்க்கையின் வசந்த காலத்தை எதிர்நோக்கிச் செல்லும் கற்பனைகள் ஒரு புறமுமாய்... வழக்கம்போல் பைக் பறந்து கொண்டிருந்தது. காட்டாங்குளத்தூர், மறமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் கடந்து பாலார் செல்லும் காட்டுப் பாதையினூடே தனியனாய் பயணம். ஆளரவமற்ற பகுதி என்பார்களே... அதன் வடிவத்தைக் கண்டுகொள்ளும் சாலைதான்! இடையில் இரு கிராமங்கள். ஆனாலும் அமைதியாய் அடங்கிக் கிடந்தன. காஞ்சிபுரத்தின் பழைமைச் செழுமையைக் கண்ணுக்குள் நிரப்பலாம். எல்லாம் வரதனின் ராஜாங்கம் ஆயிற்றே!
அண்மையில் பெய்த அடைமழையில் நிரம்பி, அதற்குள் தன் இயல்புக்கு வந்துவிட்ட சாலையோர ஏரிப் பரப்பில் இளைஞர்கள் கிரிக்கெட்டிக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் சிறு குன்று. நடுவே செல்லும் பாதை. இரவில் திரும்பி வரும்போது இந்தப் பாதையின் இயல்பை கற்பனை செய்து கொண்டே சீவரம் அடைந்தேன்.
மக்கள் வெள்ளம்தான்! சுற்றுப் பகுதி கிராமத்து மக்களின் பக்தியும் அன்பும்தான் பெருமிதத்தைத் தரும். எத்தனை சிறுவர்களும், பெண்களுமாய் வரதனின் உற்ஸவத்தைக் கண்ணுற அங்கே கூடிருந்தார்கள்! போட்டிக்கு கார்களும் பைக்-களும் சாலையின் இருமருங்கும் ஆக்கிரமித்திருந்தன.
ஹஸ்திகிரி எனும் சிறுகுன்றில் வீற்றிருக்கும் வரதன், இன்று பழைய சீவரம் மலைக்கு எழுந்தருளி மண்டபத்தில் காட்சியளித்தான். பணிவிடைகள் அவனுக்கு ஏராளம். பளிச்செனத் திகழும் படிகள். பக்தர் குழாம் புடைசூழ அந்த அத்திரிகி வரதன், இந்த மலையில் இருந்து இறங்கிவரும் அழகே அழகுதான்!
மலையில் இருந்து இறங்கி பாலாற்றின் மணல் வெளியில் இறங்கிச் செல்கிறான் வரதன். துணைக்கு உடன் வருகிறார் சீவரம் பெருமாள். இருவரும் பாலாற்றின் மணல் வெளியில், ஓரளவு ஓடைபோல் ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கால நனைத்து திருமுக்கூடல் செல்லும் போது, பாகவத பக்தர் குழாம் பின்னே பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறது.
***
திருமுக்கூடல் - மூன்று ஆறுகள் கூடும் இடம்! பெருமான் அந்தக் கரையில் எழுந்தருளியதால் 'திரு' சேர்ந்து கொண்டுள்ளது. நீர் இன்றி ஏதோ ஆற்றின் பெயரைத் தன்னளவில் கொண்டுள்ள பாலாறு. ஒருவேளை பால் போல் வெண்மை என்பதால் வெண்மணல் சேர்ந்து வெளித் தெரிகிறதோ? இடப்புறத்தே ஓடிவந்து கலந்துவிடும் செய்யாறு மட்டும் தன்னில் நீர் தாங்கி அங்கே நிரம்புகிறது! வேகவதி ஒரு சிற்றோடையாகி அங்கே சங்கமித்து விடுகிறது.
சென்ற வருடம் பிரயாகையில் திரிவேணிசங்கமத்தில் எத்தகைய உணர்வுடன் நதியில் கால் நனைத்தேனோ அதே உணர்வு இங்கே! புண்ணியத்தைப் பெருகச் செய்வதில் இந்த மூன்று ஆறுகளும் பின்வாங்கியதல்ல! ஆயினும் அவற்றில் நீர் பெருகச் செய்யத்தான் நாம் மறுத்துவிடுகிறோம்; மறந்துவிடுகிறோம்!
***
திருமுக்கூடல் தலத்தைப் பற்றி என்றோ படித்தும் எழுதியும் இருக்கிறேன் என்றாலும், முதல்முறை நேரில் காணும் பரவசம்! தொல்லியல் துறைப் பராமரிப்பின் வெளித்தோற்றம் பளிச்செனப் படுகிறது. கோபுரமற்ற புகுவாசல் வெண்மைக் கற்கள் தாங்கி நெடிது நிற்கிறது! உள்ளே ஒரு பசுமைப் பூங்காவின் தோற்றம். செதுக்கப்பட்ட பாதைகள். புல்வெளி. ஈரடிக்கு வளர்ந்து பராமரிக்கப்படும் செடிகள். பூக்களைத் தாங்கி நந்தவனத்தின் அருமை காட்டுறது.
கோயிலில் அப்பன் வேங்கடேசப் பெருமாள் சந்நிதி அழகு. பெருமாள் கரிய நிற வண்ணனாய் விளக்குகளின் ஒளி முகத்தில் பட்டு மின்ன பளிச்சென்று திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறான். நெடிதுயர் உருவம். தாயார் சந்நிதி, வரதன் சந்நிதியிலும் பக்தர்கள் வரிசை கட்டி ஒழுங்காகச் சென்று தரிசித்து எந்தவித நெருக்கடியும் குழப்பமும் இன்று அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். கோயிலினுள் மொத்தம் 4 காவலர்களே நின்றிருந்தனர்! சந்நிதிகளின் பராமரிப்பு அவ்வளவு தூய்மை!
ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ்வொரு பெருமாள். எல்லோரையும் ஸேவித்து இறங்கி, மணல்வெளியில் கலக்கிறது பக்தர் வெள்ளம். அந்த வெள்ளத்தினூடே அடியேன் பெயர் சொல்லி அழைத்த சிலர். நண்பர்களான ஸ்ரீ உ.வே. அனந்தபத்மநாபன் ஸ்வாமி, ஆசார்ய லட்சுமிநரசிம்மன், முகநூலில் மட்டுமே அடியேன் முகம் கண்டு பழகிய உப்பிலி ஸ்வாமி... இப்படியாக!
பெருமாள்கள் ஐவரும் இதை அடுத்து திருமுக்கூடல் கிராமத்துக்குச் செல்கிறார்கள். பின்னே சென்றேன். தெரு மிகத் தூய்மை. வாசலில் கோலமிட்டு, தங்கள் ராஜாவை வரவேற்கும் உற்சாகத்துடன்!
கிராமத்தின் கடைக்கோடி வரை சென்று பெருமாள் அங்கேயே எழுந்தருளி, சற்று நேரம் அந்தக் காலனிவாசிகளின் பூஜையையும் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்கியதையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் திரும்புகிறார். சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான்! பெருமாள் தனியாக வந்தால் இராது! பாகவத கோஷ்டியும், இத்தகைய பக்த கோஷ்டியும்தான் இந்த உற்ஸவத்துக்கு வலு, அழகு!
பெருமாளை எழுந்தருளச் செய்துகொண்டு காஞ்சிக்குத் திரும்பும் அந்தக் கைங்கர்ய கோஷ்டியைப் பார்த்தால், அதைவிட சிலிர்ப்பு. வரதனுக்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, அவனுடனேயே நடந்து, இரவெல்லாம் விழித்து, பத்திரமாக அவன் அரண்மனையில் அவனை சேர்ப்பிக்கும் வரை இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! நிச்சயம் அரங்க நகர் கோஷ்டிக்கு சளைத்ததல்ல!
***
இரவு 8 மணி ஆயிற்று! சீவரம் பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பினேன். சீவரத்தை அடுத்த பெட்ரோல் பங்கில் திரும்பினேன். யாருமே இல்லாதது போன்ற நிலை. ஆனால், ஒரு ஓரத்தில் நின்று செல்லில் சினுங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒற்றை ஆளாய் எனைக் கண்டதும் அசைந்து வந்தார். அவரை மெதுவாகப் பேசிவிட்டு பிறகு வருமாறு சைகை செய்தேன். சில நொடிகளில் வந்தார். அவரை நிதானமாக வருமாறு சைகை காட்டியதாலோ என்னவோ... பெட்ரோல் நிரப்பிக் கொண்டே வெகுநாள் பழகிய சிநேகத்துடன் பேசினார்... "வண்டிங்க வந்துட்டு இருக்கு சார். வீட்ல இருந்து பேசினாங்க. கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல இருந்தே சொல்லிக்கிட்டிருந்தாங்க! ஆனா பாருங்க இன்னிக்குன்னு நெறய பேர் லீவு. சிலர் சாப்ட போய்ட்டாங்க. பெட்ரோல் போட ஆளில்ல. அதான் வீட்ல சொல்லி புரியவெச்சிட்டிருந்தேன். இப்பவாவது 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் கூட்டிட்டு சீவரம் பெருமாளயாச்சும் பாத்துட்டு வந்துடணும்... ஆனா... நீங்க கொடுத்து வெச்சவங்க சார்...!"
அடடே! ஒரே மாதிரியான வாசகம்! சீவரம் செல்லும் முன்பு அந்த நாளிதழ் பணியில் இருக்கும் நண்பரும், இந்த நபருமாக!
***
அதே காட்டுப் பாதையில் திரும்பினேன். இரவுப் பொழுதுக்கேயுரிய வண்டுகள் பூச்சிகளின் சப்தங்கள் நிசப்தத்தைக் கடந்து கொண்டு கேட்கிறது! பாலார் ஊர் கடந்து, ரெட்டிப்பாளையம் காட்டுப் பகுதியினூடே செல்கையில், சாலையின் ஓரத்தில் இருந்த புதரில் இருந்து மர அணில் போன்ற ஏதோ ஒன்று... பைக் விளக்கின் வெளிச்சத்துக்கு அப்படியே கீழிருந்து தாவி சரியாக என் வலது தோளில் பாய்ந்து கீழே விழுந்தது! நள்ளிரவும் காட்டுப் பாதையும் தனிமையும் எனக்குப் புதிதல்ல. பொதிகை மலைப் பகுதியின் காட்டுப் பாதைகளில் சிறுவயது முதலே தனித்துச் சென்று பழகிய பழக்கம்தான்! பள்ளிப் பருவத்துக்குப் பிறகான வாழ்க்கையிலும் வருடம் பல தனித்திருந்தே கடந்து விட்டவனுக்கு, காட்டுப் பாதையில் மட்டும் தனிமைப் பயணம் அச்சத்தைத் தந்துவிடவில்லை!
ஆனாலும்... இப்போதும் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெருந்தேவித் தாயாரைத் துறந்து, உபய நாச்சிமாரான தேவியர் இருவரைத் துறந்து, ராஜ மாளிகை துறந்து, எந்த உற்சவமானாலும் எல்லோரும் துணையிருக்க நடத்திக் கொண்டு, இந்த ஒரு உற்ஸவம் காண மட்டும் வரதன் ஏன் தன்னந் தனியனாக இங்கே வருகிறான்!?
***
இந்த உற்ஸவம் குறித்து தினசரியில் வெளியிட்ட செய்தி:
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.









திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன. இந்தக் கூடுதுறையில், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாச பெருமாள், காவான்தண்டலம் லட்சுமி நாராயண ஸ்வாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் தரிசனம் அளித்தனர்.
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ் விழாவின்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இவ் விழாவையொட்டி முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலை வந்தடைந்தார். அங்கு வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து திருமுக்கூடல் சென்று பார்வேட்டை உற்ஸவத்தில் பங்கேற்றார்.
இவ் விழா முடிந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் கோயிலை சென்றடைந்தார்.

சனி, அக்டோபர் 10, 2015

ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று.

அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து,  அங்கே போய் உட்கார்ந்துவிடலாம் என்று அடிக்கடி மனசில் தோன்றும்...

வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு, ஒரகடம் வழியாகத் திரும்பி வந்தபோது, யதேச்சையாக அந்த மலைப் பகுதியை உற்றுப் பார்த்தேன். அழகாகப் படிகள் அமைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஒரகடம் - சிங்கப்பெருமாள் கோயில் பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் ஒரு சிமின்ட் சாலை உள்ளே திரும்பியது. அதன் வழியே சென்று மலை அடிவாரத்தை அடைந்தேன். மலை மேல் பெருமாள் கோயில் இருப்பதை அறிந்தேன். ஆனால் கோயில் இப்போது திறந்திருக்காது; பூசை செய்யறவர் வரலை என்று கீழே சீட்டாடிக் கொண்டிருந்த சில மஹானுபாவர்கள் சொன்னதால்... ஒரு பெருமூச்சோடு வீடு திரும்பினேன்.

இன்று புரட்டாசி சனிக்கிழமை காலை என்பதால்... அடியேன் இருக்கும் இடத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு உள்ள அந்த மலைக்குச் சென்றேன்.
மறைமலைநகர் ரயில் நிலைய கேட் கடந்து உள்ளே சுமார் 6 கி.மீ. செல்ல வேண்டும். இது மருந்துமலை என்னும் பெயருடன் ஔஷதகிரியாகத் திகழ்கிறது.
இந்த இடம் ஆப்பூர் என்பதாம்..

508 படிகள். சரியாக கணக்கு எழுதியிருக்கிறார்கள் படிகளில்...!
மூலிகை வாசனை நாசியின் நுகர்வில் உணரமுடிகிறது. படிகளில் மேலும் கீழும் மூச்சிரைக்க ஏறும்போது,  நன்றாக மூச்சை உள்வாங்கி சுவாசிக்கும்போது... வித்தியாசமான நறுமணம். புத்துணர்ச்சி.
முன்னால் சிறுவர்கள் சிலர் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

மலை உச்சியில் அருமையாக உள்ளது  பெருமாளின் சந்நிதி. தனித்திருக்கும் பெருமாள். மார்பில் மஹாலட்சுமியைத் தாங்கியபடி! அழகிய சிறிய திருமேனி.
இங்கே பிரசன்னமாகியுள்ளதால் அவர் பிரசன்ன வேங்கடேசர்! ஏழுமலையானப் பார்த்த அதே உற்சாகம். அவர் ஏழுமலையான் என்றால்... இவர் ஏகமலையான்! அவ்வளவுதான்!

மனிதர்களிடம் பேசிப்பேசி நொந்து போன மனநிலையில்... இவரிடம்தான் சற்று நேரம் மனசால் பேசிக் கொண்டிருந்தேன். ஓய் ஆப்பூராரே... உம்ம நேரடிப் பார்வையில் இப்போ ஜாகை வந்திருக்கேன். கவனிச்சிக்கோரும். நித்ய திருவாராதன அமுதுபடி இனி உமக்கும் சேர்த்து அடியேன் இருப்பிடத்தில் இருந்தே மானசீகமாக ஆகும்... என்று சொல்லி வந்தேன்.

இந்த ஔஷதகிரியில் அகத்தியரும் பல சித்தர்களும் எழுந்தருள்கின்றனராம். குறிப்பாக பௌர்ணமி. அனேகமாக பௌர்ணமியில் கிரிவலம் போல், இந்த மலையில் ஏறி சந்நிதியை வலம் வரவேண்டும் என்று மனத்தில் சங்கல்பித்துக் கொண்டேன். நம் ஊனக் கண்ணுக்கு சித்தபுருஷர்கள் தெரியாவிட்டாலும்... அந்த யா(ஞா)னக் கண்ணுக்கு என்றாவது காட்டிச் செல்ல மாட்டார்களா என்ன?

ஒளஷதகிரி அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவ பெருமானும் ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற திருநாமத்துடன் திகழ்கிறாராம். ஒருவர் சொன்னார்.

மலை மேல் மூச்சிரைக்க ஏறிச் சென்றதால் வியர்வை பெருகி தாகம் எடுத்தது. கையில் தண்ணீர் போத்தல் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. நல்லவேளை... கைங்கர்யபரர் பாலாஜி மோட்டர் போட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். மலைமேல் அந்தத் தண்ணீர் அவ்வளவு சுவை. மூலிகைச் சுவையுடன் வேர்களின் வாசனை கலந்து இருந்தது.

இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளுக்கான திருமஞ்சனாதிகளுக்கு தங்குதடையின்றி நீர் சுரந்து தரும் அற்புதக்கிணறாம்.

ஓய் இங்கே மக்கள் என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்...? கைங்கர்யபரர் பாலாஜியிடம் கேட்டேன். அண்ணா... பெருமாள் திருநாமம் நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்பது. இங்கே திருமணம் கைகூட வேண்டிக் கொள்கிறார்கள். இந்தப் பெருமாள் எப்போ இங்கே வந்தார். எத்தனை வருசம் இருக்கும் இதெல்லாம் அடியேனுக்குத் தெரியாது. இதற்கான கல்வெட்டோ, வேறு சான்றோ இங்கே இல்லை. ஆனால் 800 வருஷத்தில் இருந்து ஆயிரம் வரை இருக்கலாம் என்று சொல்லலாம். இங்குள்ள கிராமப் பகுதிகளில் பெருமாளை மனத்தில் நினைத்து திருமண பாக்கியத்துக்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம் கைகூடியதும் பெருமாளுக்கு புடவை எடுத்து சாற்றுகிறார்கள். அதாவது கல்யாண ஜவுளி எடுக்கும் போது, முதல் புடவை பெருமாளுக்கு எடுக்கிறார்கள். அதை நிச்சயதார்த்தத்தின் போது கொண்டு வந்து பெருமாளுக்கு சாற்றுகிறார்கள்... என்றார்.

என்னது..? பெருமாளுக்கு புடவையா? என்ன ஓய் சொல்றீர்? என்றேன்.. ஆமாண்ணா.. இங்கே தாயார் பெருமாளுடன் சேர்ந்து மார்பில் குடியிருக்கிறார். மேலும், தாயாரே பெருமாள் ஸ்வரூபியாய் எழுந்தருளியிருப்பதாய் இங்கே ஐதீகம். அதனால் அப்படி என்றார். சரிதான்...! என்ன கலர் புடவை எடுப்பார்கள் என்று கேட்டேன். அதெல்லாம் அவரவர் இஷ்டம். பெரும்பாலும் நீலம், பச்சை, மஞ்சள் கலரில் எடுத்து சமர்ப்பிப்பார்கள் என்றார்.

இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். சிங்கப் பெருமாள் கோயில் செயல் அலுவலர்தான் இதற்கும் பொறுப்பு. இங்கே பூஜை செய்பவர் ஒருவர் மட்டுமே உள்ளார். மேலும், இவ்வளவு தொலைவுக்கு அதிகம் மக்கள் வருவதில்லை. அதைவிட... 508 படிகள் மலை ஏறி வரவேண்டுமா என்ற மலைப்பு! ஆனால்... பட்டாச்சாரியார் பாவம்.. யார் வந்தாலும் வராவிட்டாலும் மலை ஏறி வந்துதானே ஆகவேண்டும்.! சேட்டைக் குரங்குகளும் இங்கே மிக அதிகம்!

ஆகவே... சனி ஞாயிறுகளில் கோயிலுக்கு செல்வது உசிதம். செல்லும் முன்பாக, 90031 26183 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி... ஐயா... நாங்க கோயிலுக்கு வரப்போறோம்.. கோயிலுக்கு வரப்போறோம்... நீங்க அங்க இருக்கீஹளா என்று கேட்டு உறுதிப்  படுத்தி... பின்னர் செல்லலாம்.

நமக்கு வழக்கம்போல் ஆப்பூர் காலனிப் பகுதி சிறுவர்கள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கிறார்களாம். தினமும் பஸ் பயணம்தான்!

விஸ்வநாதன், சபரி இருவரும் நெற்றியைக் காட்டி... ஸ்ரீராம் அண்ணா... குங்குமம் மேலபாத்து வரமாதிரி இழுத்து தீட்டிவுடுங்க என்றார்கள். பளிச்சென ஸ்ரீசூர்ண ரேஞ்சுக்கு இழுத்துவிட்டு... சற்று நேரம் அளவளாவினேன். அதற்குள் அண்ணா இப்படியே ஒரு செல்ஃபி என்றான். சரிதான் என்று ஒரு க்ளிக் க்ளிக்கினால்... மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அண்ணா.. நான் நான்.. என்றார்கள்! எல்லோரையும் ஒன்றாக அமரவைத்து க்ளிக்கி... டேய் பசங்களா... கட்டாயம் இதை பேஸ்புக்கில் போடுவேன் என்றேன். விஸ்வநாதன் சொன்னான்.. அண்ணா பேஸ்புக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு லைக் பிச்சிக்கிட்டு போகும் பாருங்க என்றான். சரிடாப்பா.. அதையும் பாப்போமே என்றேன். அந்தச் சிறார்களின் "கோவிந்தா கோவிந்தா" சப்தம் மலை முழுதும் எதிரொலித்தது.

ஆக ... இப்படியாக இன்றைய புரட்டாசி சனிக்கிழமை, அடியேனுக்கு ஒரு பெருமாளையும் சில பக்த சிரோமணி சிறார்களையும் அறிமுகப் படுத்திவிட்ட நாளாக அமைந்துவிட்டது!


















ஞாயிறு, அக்டோபர் 04, 2015

ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்


இந்த சைலன்ட் ஜோக், எனக்கு இரு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.
ஒன்று, இன்றைய ஸ்வச்ச பாரத் அபியான். தூய்மை இந்தியா திட்டம், இந்தப் படத்தில் காணும் வகையில்தான் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை நகரே அதற்கு சாட்சி.
இரண்டு, இதை அனுப்பிய கீதா, விஜயகீதா, ஏழ்வரைக்கடியான் என்ற பெயர்களில் உலவிய ராமரத்னம் சாரின் ஒரு செயல்...

'தி ஹிந்து' அலுவலகத்தில் புகைப்பட ஆர்கிவ்ஸ் செக்‌ஷனில் பணிபுரிந்தவர் ராமரத்னம். கன்னடம், தெலுங்கு உள்ளிட்டவற்றில் பழக்கம் உண்டு. நான் மஞ்சரியில் பணிபுரிந்தபோது அமைந்த நல்ல நட்புக்களில் இவரும் ஒருவர். அழகாக தென்னாச்சார்ய சம்ப்ரதாயத்தை பளிச்செனக் காட்டும் திருமண் துலங்க வருவார். ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஒரு முறை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஒரு நாடகத்துக்கு வந்திருந்தார். உடன் அவருடைய மகள், உறவினர்களும் வந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் என்னுடன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருடன் கொஞ்சம் சப்தமாகப் பேச வேண்டும்... சீராம் வாயேன்... கொஞ்சம் வெளில போவோம்னு அழைத்தார். இருவரும் வெளியில் வந்தோம். சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். தி ஹிந்துவில் போட்டோக்கள் வரிசைப் படுத்தி வைக்கும் முறை, கட்டுரைக்கு தக்க படத்தை எடுத்துக் கொடுக்க அவர் கையாளும் முறை... எல்லாம் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போது இன்டக்ஸிங் வெகு சுலபம். படங்களை நிகழ்வுகள் வாரியாக ஏ டூ இஸட் இன்டக்ஸ் செய்து, கீ வேர்ட் கொடுத்து டேடாபேஸில் சேமித்து, தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் கணினி வராத காலத்தில் எப்படி பெட்டிகளை அடுக்கி, அவற்றில் காலவரிசை, அகரவரிசைப் படி போட்டோக்கள் வைத்திருப்போம் என்ற பணி நுட்பத்தை சொல்லிக் கொண்டிருந்தார்....

கென்னடி தெரு முனையில் உள்ள பெட்டிக் கடையில் வெத்தலை பாக்கு பீடா வாங்கி வாயில் போட்டு விட்டு என் தோளைப் பற்றிய படி நடக்க முனைந்தார்... அதை மெல்லத் தொடங்குவதற்குள் என்ன ஆனதோ....  (கொஞ்சம் லோக்கல் மொழியில் செல்லமாகத் திட்டியபடி) வரா வரா... என்று சொல்லிக் கொண்டே... வாயில் போட்ட  பீடாவை அப்படியே உள்ளங்கைக்கு கொண்டு வந்து, கைகளைப் பின்னால் கட்டி மறைத்துக் கொண்டு... பேசத் தொடங்கினார்.

அப்போது அவரது மகள், உறவினர்கள் சிலர் எங்களைக் கடந்து போனார்கள். அவர்களிடம் நான் சீராமோட வரேன்... நீங்க போங்கோ... என்று சொல்லி விட்டு மெதுவாக நடந்து வந்தார். பின்னர் சொன்னார்... என்னை வெத்தலை போடக்கூடாதுன்னு பொண்ணு கண்காணிச்சிண்டிருப்பா .. பின்னாடியே வந்துடுவா.... என்று சொல்லி பீடாவையும் 'தி ஹிந்து' அலுவலகக் கதையையும் மென்றுகொண்டு வந்தார்.  (நிற்க...)

எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க.. இதைப் போயா பகிருந்து கொள்வது என்று இதைப்  படிக்கும் உங்களுக்கு தோன்றக் கூடும். இதை நான் சொல்லக் காரணம், ஒரு குடும்பத்தில் உள்ள முதியவரின் குழந்தைத்தனமான மனநிலையை ஒரு இளைஞனாக நான் கண்டுகொண்ட ஒரு சம்பவம் இது என்பதால்தான்! உடல் நலம் சார்ந்த பிரச்னைகளை முதியவர்கள் சந்திக்கும்போது, உணவு முறைகளில் நாம் கட்டுப்பாடுகளை விதிப்போம். அது நம் நல்லதுக்குத்தானே என்ற எண்ணம் அந்த நேரத்தில் ஒரு சிலருக்கு வராது. குழந்தைகள் ஐஸ்க்ரீம்க்கு அடம்பிடிப்பதுபோல்... யாருக்கும் தெரியாமல் வாங்கி சாப்பிட்டுவிட்டு... பின்னர் சளி, தொண்டைப் பிரச்னை என்று அவதிப்படுவதுபோல்தான்... ஆனால், நாம் அந்த முதியவர்களை அவர்களின் மனநிலையில் அனுக மறந்துவிடுகிறோம் என்று தோன்றும். இன்றும் என் தந்தையின் பொடி போடும் பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. சட்டையில்தான் மூக்குப் பொடி எல்லாம் தன் வண்ணத்தைக் காட்டியிருக்கும்..! முதலில் சொல்லிப் பார்த்தேன். இப்போது அவர் போக்கில் விட்டுவிட்டேன்!

மீண்டும் ராமரத்னம் சார் கதைக்கு வருகிறேன்....
மஞ்சரிக்கு துணுக்குகள் அதிகம் அனுப்புவார். அவர் படித்த இதழ்களில் வரும் துணுக்குகள், சைலன்ட் ஜோக்ஸ், படங்கள், சார்ந்த செய்திகள், சிறு சிறு மொழிபெயர்ப்புகள், ஓரிரு முறை கதைகள் கூட அனுப்பியிருக்கிறார். ஏழ்வரைக்கடியான், விஜயகீதா, எம்.ஆர்.எம்., ராமரத்னம் உள்ளிட்ட பெயர்களில் அவற்றை அப்போது மஞ்சரியில் பிரசுரித்திருக்கிறேன். அவ்வாறு அவர் அனுப்பிய இந்தப் படம்...  அன்று அவர் வெத்தலையை உள்ளங்கைக்கு அனாயாசமாக வாயில் இருந்து எவருக்கும் தெரியாமல் சடாரெனக் கொண்டு வந்த அந்தக் குழந்தைத்தனமான செயலை நினைவுபடுத்திப் பார்க்க வைக்கும். வயதாகிவிட்டாலே குழந்தைத்தனம் குடிகொள்ளும் என்பதை அவரிடம் நான் முழுமையாகக் கண்டேன். அப்போது அவர் 70ஐக் கடந்துவிட்ட மனிதர். அவரை என் வண்டியில் அமரவைத்து ஓரிரு முறை ஆழ்வார்பேட்டை தி ஹிந்து பணியாளர்களுக்கான அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.

அவர் உடல் நலம் குன்றியிருந்தபோது,  நங்கநல்லூர் ஹிந்து காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு இரு முறை சென்றிருக்கிறேன். 2010க்குப் பின் அவரைப் போய்ப் பார்க்க நேரம் அமையவில்லை.

அவர் நம் நண்பர் புகைப்படக் கலைஞரும்,  இதழாளர் எழுத்தாளருமான க்ளிக் ரவி யின் சிற்றப்பா முறை உறவினரும் கூட. அவ்வகையில் க்ளிக் ரவி எங்கெல்லாம் தட்டுப் படுகிறாரோ... அவருடன் போனில் எப்போது பேச வாய்ப்பு வந்தாலும் அப்போதெல்லாம் ... ராமரத்னம் சார் எப்படி இருக்கார் என்று நலம் விசாரிப்பேன். இரு வாரங்களுக்கு முன்னர் கிருஷ்ண கான சபா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோதும், க்ளிக் ரவி சார்.. சித்தப்பா எப்படி இருக்கார் என்று நலம் விசாரித்தேன். அவர் பாவம் சார்.. படுத்த படுக்கையா இருக்கார். ரொம்ப கஷ்டமான நிலைதான் என்றார். அப்போதே ஒரு முறை சென்று நேரில் பார்த்து வர எண்ணம்... ஆனால் தள்ளிப்போடப்படும் வேலைகளால் இவ்வாறு சில நெகிழ்வான தருணங்களை வாழ்க்கையில் இழக்க நேரிடுகிறது.

காரணம் இன்று க்ளிக் ரவி அனுப்பியிருந்த குறுந்தகவல். ஏழ்வரைகடியான் - எம்.ராமரத்னம் காலமானார். இன்று 12 மணிக்கு இறுதிச் சடங்குகள் அவரது நங்கநல்லூர் இல்லத்தில் இருந்து என்று!

வேறு என்ன செய்வது? என் மன நிலையை இப்படித்தான் என்னால் வெளிப்படுத்த முடிகிறது! 

திங்கள், செப்டம்பர் 14, 2015

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்


என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ...
எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்...
கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.

திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் - நா.பா.

சிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் - எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.

என் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.

பத்திரிகை - எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக - திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர்  கிடைத்தார்கள்.

கௌதம நீலாம்பரன் - ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.

ஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருடைய விகடன் தொடர்பான அனுபவம்,  முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்... எல்லாம்தான்!

இவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.

15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது முதல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.

தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.

சிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்...  அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும்! சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்...

கலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.

சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான்! இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.

பல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்... நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என...?! மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான்! பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.

அண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.

அண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்!

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

சரணாகதியின் பொருள் உரைத்தவன்!


அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே” என்று வருந்தினவாம். அதற்கு இறைவன் “உங்களுக்கு ஏற்றம் தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம். பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.
ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே பிறந்தாரென்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதத்தில் அவதரித்தார். ஸ்ரீராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுதான் ஸ்ரீராம ஜன்மோத்ஸவம் – ஸ்ரீராமநவமி என்று நாட்டு மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.
ஸ்ரீராமர் பிறந்ததே அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். அவர் பால பருவத்தில் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றதும், வனவாசத்திற்காகப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் அலைந்ததும் நல்ல வெய்யிலில் தான். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் பிறந்ததை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.
இராமரைப் பற்றி எத்தனையோ பக்தகவிகள் பாடி இருக்கிறார்கள். புரந்தரதாஸர், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் என்ற மும்மூர்த்திகளைப் போல பல்வேறு புகழ்பெற்ற கீர்த்தனைகளைக் கொடுத்தவர் திருவாங்கூர் மகாராஜா. அவர் பிறந்ததுகி.பி.1813 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – ஆம் தேதி18 ஆண்டுகள் அவர் சமஸ்தானத்தைப் பரிபாலித்தார். ஸம்ஸ்க்ருதம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 300 -க்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியுள்ளார். அவரது பட்டாபிஷேக கீர்த்தனையான “பாவயாமி ரகுராமம் பவ்ய ஸுகுணா ராமம்” என்ற கீர்த்தனை. இன்றும் இந்தக் கீர்த்தனையைக் கேட்டு அதில் லயிக்காதவர் யாருளர்?
ஸ்ரீராமர் என்று சொன்னாலே சரணாகதித் தத்துவம் தான் அனைவர் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமபிரான். பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான். ஆரண்ய காண்டத்தில்தண்டகவனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராமபிரானைச் சரணடைந்தான். சுந்தரகாண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறையிருந்தபோது, ஸ்ரீராமபிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன்.
அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்” என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  இராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி.
ஸக்ருதவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம
ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா
விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்
பகைவனுக்கும் அருளும் பண்பாளன் அல்லவா ஸ்ரீராமபிரான். அதை சரணாகதியின் உச்சத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தில் அறிந்து கொள்ளலாம்.
விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான் கூறுகிறார்…
நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த இராவணனாகவேதான் இருக்கட்டும்… இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது” என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் ஸ்ரீராமபிரான்.
இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு. மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர். வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப் படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்பது ஒரு வகை. ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு. இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும் புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து.
ஸ்ரீராமபிரானை எண்ணும்போது நம் நினைவில் உடனே வருபவர் குலசேகராழ்வார். சேரமான் பெருமாளாக மன்னர் குலத்தில் ஸ்ரீராமபிரான் பிறந்த அதே புனர்பூச நட்சத்திரத்தில் உதித்தார் குலசேகராழ்வார். மன்னராயினும் ஸ்ரீராமபிரானிடம் அளவற்ற பக்தி அவருக்கு. இராமாயணத்தைக் கேட்பதில் தனி ஆனந்தம். ஒரு முறை வைணவப் பெரியார் ஒருவர், குலசேகரருக்கு வால்மீகி ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார். இவரும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பொங்கும் வண்ணம் மனம் லயித்துக் கேட்டு வந்தார். ஒருநாள் இராமபிரான் அரக்கர்களோடு போர்புரிந்த நிகழ்ச்சியை விவரித்தார் அந்த வைணவப் பெரியார்.
இலக்குமணன் வில்லேந்திக் கவசம் தரித்து இராமனிடம் வந்து, அரக்கர்களுடன் போர் புரிய விடை கேட்டான். ஸ்ரீராமரோ, நீ சீதையைக் காத்துக் கொண்டிரு, நான் போய் அரக்கர்களை அழித்து வருகிறேன் என்று கூறிப் பர்ண சாலையினின்றும் வெளிக் கிளம்பி விட்டார். அதுகண்ட சூர்ப்பணகை, இவனே அரக்கர் குலத்தின் பகைவன் என்று கத்தினாள். அம்மொழிகேட்ட அரக்கர்கள் நாலாத்திசைகளிலிருந்தும் இராமபிரானைத் தாக்கினார்கள். அவர்களின் படைக்கலன்கள் இராமபிரானின் மீது பட்டு விழுந்தன” என்று கதை கூறிக் கொண்டிருந்தார் அவர்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரரோ அந்தக் கட்டத்தில் மனம் லயித்து, “ஆ! அரக்கர்கள் மாயப் போர் புரிவதில் வல்லவர்களாயிற்றே. கரன், தூஷணன், திரிசரன் போன்ற அரக்கர்கள் மாயத்தந்திரங்களால் தனியராய் இருக்கும் ஸ்ரீராமபிரானைத் தாக்குகிறார்களே! இப்பெரும் படையை தனி ஆளாய் இருக்கும் ஸ்ரீராமபிரான் எப்படி சமாளிக்கப் போகிறாரோ!” என்று எண்ணி, தம் படையைப் போருக்கு ஆயத்தமாகுமாறு படைத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டார்.
படைத்தளபதிகளோ, ஆச்சர்யம் அடைந்தனர். நம்மை எதிர்த்த சோழ, பாண்டியர்கள் மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள். எதிரிகளே நமக்கில்லையே. பின் யார் மீது போர்? என்று குழம்பித் தவித்தனர். ஆனால் அரச கட்டளையாயிற்றே! அவர்கள் பெரும் படையைத் திரட்டித் தயாராயினர். குலசேகரரும் போர்க்கோலம் பூண்டு நிற்கையில், காரணம் அறிந்த அமைச்சர் இராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பெரியாரை அழைத்து, இச்சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டினர்.
அப்பெரியவரும், “ஸ்ரீராபிரான் தனியொருவராக நின்று, மாயங்கள் புரிந்த அரக்கர்களை அழித்து வெற்றி வாகைசூடி, பர்ணசாலையடைந்தார். சீதாதேவி எம்பெருமானின் மார்பில் பட்ட புண்களுக்கெல்லாம் மருந்தாக அவரைத் தழுவி மகிழ்ந்தாள்” என்று கதையைச் சொல்லி ஸ்ரீராம பட்டாபிஷேகம் வரை, சொல்லி முடித்த பிறகே குலசேகரர் தெளிவு பெற்றார். தம் படையை மீண்டும் தத்தம் இடம் திரும்புமாறு கட்டளையிட்டு அரண்மனை திரும்பினார்.
ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பது பெரியோர் வாக்கு. வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில் (பாணம்). ஒரே சொல். ஒரே இல். (மனைவி) என்று வாழ்ந்துகாட்டிய ஸ்ரீராமபிரானின் வழியில் சிந்தித்து சுகம் பெறுவோமே!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix