சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, மே 28, 2010

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் !


ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் !


கோயில்களில்... அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்து, கருவறையின் உள் சென்று, துளஸி அல்லது பூக்களால் ஓர் அர்ச்சகர் அஷ்டோத்திர அர்ச்சனை செய்வது என்பது பழகிய நடைமுறை. ஆனால், நகரங்களில் உள்ள பெரும்பாலான பெரிய கோவில்களில் கூட்ட நெரிசல்... கிராமத்துக் கோயில்கள் பலவற்றிலோ, முறையான பயிற்சி பெறாத அர்ச்சகர்கள். இந்த நிலையில், அஷ்டோத்திர அர்ச்சனை என்று சங்கல்பம் செய்துகொண்டு, நூற்றியெட்டுக்குப் பதிலாக பதினெட்டு அல்லது இருபத்தியெட்டு திருநாமாக்களால் அர்ச்சனை செய்துவிட்டு, ஏனோதானோவென்று நைவேத்தியமும் செய்துவிட்டு, பிரசாதத் தட்டை கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவதை அன்றாடம் சந்நிதிகளில் காண்கிறோம். நம் இந்து மதத்தில்தான் கேள்விகள் கேட்பது பரம்பரை பிரசித்தமாயிற்றே. சிலர் முனகிக் கொண்டே, பெருமானின் வழிபாட்டில் மன ஈடுபாட்டைக் காட்டாமல், நடைபெறும் தவறுகளிலேயே மனத்தைச் செலுத்தி, ஏனடா கோவிலுக்கு வந்தோம் என்ற மன நிலையில் வெளியேறுகின்றனர். இதுவும் அன்றாடக் காட்சிதான்!

சரி... கோவில் என்று வந்தாயிற்று! வழிபாடு என்பதும் நம் மனத்தைப் பொறுத்தது. இது கீதை நாயகன் சொன்ன விஷயம்தான்! எனவே இறை வழிபாட்டைத் தவிர உள்ள கோயிலின் மற்ற நடவடிக்கைகளில் நம் மனத்தை (கருவறையில் இருக்கும் அந்தப் போது மட்டும்) செலுத்தாமல், இந்த அஷ்டோத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு வரிசையில் செல்லும் போதே அர்ச்சித்துக் கொண்டு செல்லுங்கள். உள்ளே அர்ச்சகர் உங்கள் அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ஏற்ப பகவானின் பாதத்தில் துளஸி/ பூக்களை சமர்ப்பிப்பதாக மனத்தில் எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் வழிபாடு பூர்த்தியாகும்.

செம்மொழித் தமிழும் பகவானுக்கு பிரியமான மொழிதான். எனவே சம்ஸ்க்ருத வார்த்தை பழக்கம் இல்லாதவர்கள், தமிழில் அதன் அர்த்தத்தைச் சொல்லி, போற்றி போற்றி என்று முடித்து அர்ச்சிக்கலாம்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

- என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் ஸ்ரீ ஆண்டாள். தெய்வத் தமிழின் கம்பீரத்தை உணர்த்திய ஆண்டாளம்மை காட்டிய வழியில் இந்த கிருஷ்ண அஷ்டோத்திரத்தை (நூற்றியெட்டு போற்றி வழிபாட்டை) சொல்லி வழிபடுவோம். பெரும்பாலான பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண அஷ்டோத்திரமே அர்ச்சகர்களால் சொல்லப்படுகிறது.

எனவே, இந்த நாமாக்களை அச்சு எடுத்து (பிரிண்ட் எடுத்து) கையில் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும். சமஸ்கிருத நாமாக்களை இயன்ற அளவுக்கு பதம் பிரித்து, எளிமையாகச் சொல்ல வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ண அனுக்கிரஹம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

சம்ஸ்கிருத அர்ச்சனைப் பெயராக இருந்தால், ஓம் என்று முதலிலும் நம: என்று பின்னாலும் சேர்க்கவேண்டும். தமிழில் என்றால், ஓம் என்பது பொது. எனவே ஓம் சொல்லி, போற்றி என்பதை பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்

0. ஓம்........................நமஹ -   ஓம் .................................... போற்றி!
1. க்ருஷ்ணாய - கருமை நிறம் உள்ளவரே
2. கமலநாதாய - ஸ்ரீலட்சுமி நாதரே
3. வாஸுதேவாய - வஸுதேவ புத்திரரே
4. ஸநாதநாய - பிரம்மா உள்ளிட்ட தேவருக்கும் மிகப் பழைமையாகத் திகழ்பவரே
5. வஸுதேவாத்மஜாய - வசுதேவரின் பிரார்த்தனையால் புத்திரராகப் பிறந்தவரே
6. புண்யாய - புண்ணியத்தைச் செய்பவரே
7. லீலாமானுஷ விக்ரஹாய - விளையாட்டாக மானிட சரீரத்தை எடுப்பவரே
8. ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய - ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, கௌஸ்துபம் என்னும் மணி ஆகியவற்றைத் தரித்திருப்பவரே
9. யசோதாவத்ஸலாய - யசோதையிடம் மிக்க (வாத்சல்யம்) அன்பு கொண்டவரே
10. ஹரயே - அண்டியவரின் பாவங்களை அப்படியே அறுத்து எறிபவரே
11. சதுர்புஜாத்த சக்ராஹிகதா சங்காத்யுத ஆயுதாய - நான்கு கைகளிலும் சக்கரம், கத்தி, தண்டு, சங்கம் என்னும் ஆயுதங்களை தரித்திருப்பவரே
12. தேவகீநந்தனாய - தேவகியின் புத்திரரே
13. ஸ்ரீஸாய - திருமகள் நாயகரே
14. நந்தகோப ப்ரியாத்மஜாய - நந்தகோபருக்கு மிகவும் பிரியமான பிள்ளையே
15. யமுனா வேக ஸம்ஹாரிணே - யமுனையின் வேகத்தைத் தடுத்தவரே
16. பலபத்ர ப்ரிய அநுஜாய - பலராமருக்கு மிகவும் பிரியமான தம்பியானவரே
17. பூதனாஜீவித ஹராய - கொல்லவந்த கொடிய பூதனையின் உயிரைப் போக்கியவரே
18. சகடாசுர பஞ்சனாய - சகடனாக வந்த அசுரனை முறித்து எறிந்தவரே
19. நந்த வ்ரஜஜநா நந்திதே - வ்ரஜபூமியான திருஆய்ப்பாடி மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவரே
20. சச்சிதானந்த விக்ரஹாய - சச்சிதானந்த மயமான சரீரம் உடையவரே
21. நவநீத விலிப்தாங்காய - புத்தம்புது வெண்ணெயை முழுவதும் பூசிக்கொண்ட உடம்பினைக் கொண்டவரே
22. நவநீத நடாய - வெண்ணெய்க்காக நாட்டியம் ஆடுபவரே
23. அநகாய - தோஷம் சிறிதும் இல்லாதவரே
24. நவநீத நவாஹாராய - புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய்யையே அமுது செய்பவரே
25. முசுகுந்த ப்ரஸாதகாய - முசுகுந்தருக்கு அனுக்கிரஹம் செய்தவரே
26. ஷோடசஸ்த்ரீ ஸஹஸ்ரேசாய - பதினாயிரம் பெண்களுக்குத் தலைவரானவரே
27. த்ரிபங்கீ லலிதா க்ருதயே - வயிற்றில் உள்ள மூன்று மடிப்புகளால் அழகான உருவம் கொண்டவரே
28. சுகவாக் அம்ருதாப்த்த இந்தவே - சுகாசாரியாரின் அமுத வாக்காகிய பாற்கடலுக்கு சந்திரன் போன்றவரே
29. கோவிந்தாய - பசுக்களுக்கு இந்திரன் என உலகத்தால் துதிக்கப்படுபவரே
30. யோகிநாம்பதயே - யோகிகளுக்கு தலைவரானவரே
31. வத்ஸ வாடசராய - கன்றுகளின் கூட்டங்களில் சஞ்சாரம் செய்பவரே
32. அநந்தாய - எவராலும் அறிய முடியாதவரே
33. தேநுகாசுர மர்த்தனாய - தேனுகன் என்ற அசுரனைக் கொன்றவரே
34. த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய - திருணாவர்த்தன் எனும் அசுரனை புல்லுக்கு இணையாக்கியவரே
35. யமளார்ஜுன பஞ்சனாய - யாமளார்ஜுனர்கள் மருத மரங்களாக நிற்க, அவற்றை முறித்தவரே
36. உத்தாலதால பேத்ரே - உயர்ந்த பனை மரங்களை முறித்தவரே
37. தமால ச்யாமளாக்ருதயே - பச்சிலை மரத்தைப் போன்ற (சியாமள) நீல நிறம் உள்ளவரே
38. கோபகோபி ஈஸ்வராய - கோபர்கள் கோபிகள் இவர்களுக்கு தலைவரானவரே
39. யோகிநே - தத்துவ ஞானத்தால் (யோகத்தால்) அடையப்படுபவரே
40.  கோடிசூர்ய சமப்ரபாய - கோடி சூரியர்களுக்கு இணையான ஒளி பொருந்தியவரே
41. இளாபதயே - பூதேவியாக இளையின் பதியே
42. பரஸ்மை ஜ்யோதிஷே - பரஞ்சோதி ஸ்வரூபமானவரே
43. யாதவேந்த்ராய - யாதவர்களின் தலைவரே
44. யதூத்வஹாய - யாதவர்களின் பாரத்தை வகிப்பவரே
45. வநமாலினே - வைஜயந்தி எனும் வனமாலையினை அணிந்திருப்பவரே
46. பீதவாஸஸே - பீதாம்பரதாரியே
47. பாரிஜாத அபஹாரகாய - பாரிஜாத விருட்சத்தை அபகரித்தவரே
48. கோவர்த்த நாச லோத்தர்த்ரே - கோவர்த்தன மலையை அநாயாசமாக எடுத்தவரே
49. கோபாலாய - பசுக்களைக் காப்பவரே
50. ஸர்வபாலகாய - எல்லோரையும் காத்து ரட்சிக்கும் ரட்சகரே
51.  அஜாய - ஜனனம் எனும் பிறப்பு இல்லாதவரே
52. நிரஞ்ஜனாய - தோஷம் சிறிதும் அற்றவரே
53. காமஜனகாய - மன்மதனுக்கு தந்தையானவரே
54. கஞ்ஜலோசனாய - தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரே
55. மதுக்னே - மது என்னும் அசுரனைக் கொன்றவரே
56. மதுரா நாதாய - மதுரையம்பதிக்குத் தலைவரே
57. த்வாரகா நாயகாய - துவாரகாபுரியின் தலைவரானவரே
58. பலிநே - மிகுந்த பலம் பொருந்தியவரே
59. ப்ருந்தாவனாந்த சஞ்சாரிணே - பிருந்தாவனப் பிரதேசத்தில் சஞ்சரிப்பவரே
60. துளஸீ தாமபூஷணாய - துளசி மாலையை ஆபரணமாகப் பூண்டவரே
61. ஸ்யமந்தக மணேர் ஹர்த்ரே - சியமந்தக மணியைக் கொண்டவரே
62. நரநாராயணாத்மகாய - நரநாராயண ஸ்வரூபமாக உள்ளவரே
63. குப்ஜாக்ருஷ்டாம்பரதராய - திரிவக்கிரை எனும் கூனியினால் இழுக்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்தவரே
64. மாயினே - மாயையினை உடையவரே
65. பரமபூருஷாய - புருஷ உத்தமரே
66. முஷ்டிகாஸுர சாணூர மல்ல யுத்த விசாரதாய - முஷ்டிகாசுரன், சாணூரன் இவர்களுடன் மல்யுத்தம் செய்வதில் சமர்த்தரே
67. ஸம்சார வைரிணே - சம்சார பந்தம் அற்றுப் போகச் செய்பவரே
68. கம்ஸாரயே - கம்சனுகுப் பகையானவரே
69. முராரயே - முரன் எனும் அசுரனுக்கு எதிரியானவரே
70. நரக அந்தகாய - நரகன் எனும் அசுரனை முடித்தவரே
71. அநாதி ப்ரஹ்மசாரிணே - தொன்றுதொட்டு பிரம்மசாரியாக இருப்பவரே
72. க்ருஷ்ணா வ்யஸநகர்ஸகாய - கிருஷ்ணா என்று அழைத்த திரௌபதியின் துக்கத்தைத் துடைத்தவரே
73. சிசுபால சிரச்சேத்ரே - சிசுபாலன் சிரத்தைத் துண்டித்தவரே
74. துர்யோதன குலாந்தகாய - துரியோதனன் குலத்தை அழித்தவரே
75. விதுர அக்ரூர வரதாய - விதுரர், அக்ரூரர் இவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்தவரே
76. விஷ்வரூப ப்ரதர்சகாய - அர்ஜுனன் முதலானவர்களுக்கு விசுவரூபக் காட்சியை அளித்தவரே
77. ஸத்யவாசே - சத்தியமான வாக்கினை உடையவரே
78. ஸத்ய சங்கல்பாய - சொன்ன சொல் தவறாதவரே
79. ஸத்யபாமாரதாய - சத்யபாமையிடத்தில் விசேஷ அன்பு பூண்டவரே
80. ஜயிதே - எப்போதும் வெற்றியைக் கொண்டவரே
81. ஸுபத்ரா பூர்வஜாய - சுபத்திரைக்கு முன் பிறந்தவரே (அண்ணன் ஆனவரே)
82. ஜிஷ்ணவே - ஜயசீலரே
83. பீஷ்ம முக்தி ப்ரதாயகாய - பீஷ்மருக்கு மோட்சத்தை அளித்தவரே
84. ஜகத்குரவே - அகில உலகங்களுக்கும் குருவானவரே
85. ஜகந்நாதாய - அகில உலகங்களுக்கும் தலைவர் ஆனவரே
86. வேணுநாத விசாரதாய - புல்லாங்குழல் ஊதுவதில் சமர்த்தரானவரே
87. வ்ருஷபாசுர வித்வம்ஸினே - விசுஷபாசுரனைக் கொன்றவரே
88. பாணாசுர பலாந்தகாய - பாணாசுரனின் சேனையை ஒன்றுமில்லாமல் முடித்தவரே
89. யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே - தருமபுத்திரரை நிலைக்கச் செய்தவரே
90. பர்ஹிபர்ஹாவதம்ஸகாய - மயில் தோகையினை ஆபரணமாக அணிந்தவரே
91. பார்த்தசாரதயே - அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தவரே
92. அவ்யக்தாய - இப்படிப்பட்டவர் என்று எவராலும் அறியமுடியாதவரே
93. கீதாம்ருத மஹோததயே - கீதை எனும் அமுதக் கடலானவரே
94. காளீய பணிமாணிக்யரஞ்சித ஸ்ரீபதாம்புஜாய - காளியன் எனும் பாம்பின் படத்தில் உள்ள மாணிக்கத்தால் சிவந்த பாதக் கமலத்தை உடையவரே
95. தாமோதராய - யசோதை உரலோடு கட்டிய கயிற்றினை வயிற்றில் கொண்டவரே
96. யஜ்ஞபோக்த்ரே - யாகத்தின் பலனைப் பெற்றுக்கொள்பவரே
97. தாநவேந்த்ர விநாசகாய - அசுரர் தலைவனை நாசம் செய்தவரே
98. நாராயணாய - ஆன்மாக்களை தமக்கு இருப்பிடமாகக் கொண்டவரே
99. பரப்ரஹ்மணே - பரப்ரம்ஹ ஸ்வரூபியானவரே
100. பந்நகாசந வாஹநாய - பாம்புகளை உண்ணும் கருடனை வாகனமாகக் கொண்டவரே
101. ஜலக்ரீடா ஸமாசக்த கோபீ வஸ்த்ர அபஹாரகாய - நீரில் விளையாடிய கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தவரே
102. புண்யஸ்லோகாய - புண்ணியமே கீர்த்தியாக உடையவரே
103. தீர்த்தபாதாய - பரிசுத்தமான பாதங்களைக் கொண்டவரே
104. வேதவேத்யாய - வேதங்களால் அறியப்படுபவரே
105. தயாநிதயே - தயைக்கு இருப்பிடமானவரே
106. ஸர்வ பூதாத்மகாய - எல்லாப் பிராணிகளின் ஸ்வரூபமும் ஆனவரே
107. ஸர்வ க்ரஹ ரூபிணே - சூரியன் முதலிய எல்லா கிரகங்களின் உருவமும் உடையவரே
108. பராத்பராய - உயர்ந்தவர்கள் யாவருக்கும் உயர்ந்தவரே
நாநாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

வியாழன், மே 27, 2010

ஸ்ரீரங்கம் :: காட்டழகியசிங்கர் திருக்கோவில் தரிசனம்

காட்டழகியசிங்கர் திருக்கோவில் தரிசனம்
காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||
அநந்தானந்த சயன! புராண புருஷோத்தம!
ரங்கநாத! ஜகந்நாத! நாததுப்யம் நமோ நம:||
--------------------------------------------------------------------
ஸ்ரீரங்கத்தைப் பற்றிய அற்புதமான ச்லோகம் இது.
திருவரங்கப் பெருநகரில் உபய காவேரி மத்தியில் துயிலும் அரங்கனின் திருக்கோவில் எவ்வளவு மகிமையுடன் திகழ்கிறதோ அதற்குச் சற்றும் குறைவு இல்லாமல் திகழ்கிறது, அதே உபய காவேரி மத்தியில் ஸ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில்.

அதென்ன காட்டழகிய சிங்கர்..? காட்டழகியசிங்கர் மட்டுமா? மேட்டழகியசிங்கரும் இங்கு உண்டே!

வைணவர்களுக்கு பெரிய கோவில் என்று போற்றத்தக்கதான திருவரங்கம் பெரிய கோவிலில் தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோவில். திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் சந்நிதிகள் மிகப் பெருமை வாய்ந்தவை. அதிலும் மேட்டழகிய சிங்கர், திருவரங்கம் திருக்கோவிலிலேயே சந்நிதி கொண்டிருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோரும் தரிசிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், காட்டழகிய சிங்கர் சற்று தொலைவில், கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளதால், பலரும் அறியாத நிலை உள்ளது.

கம்பரின் ராமாயண அரங்கேற்றம், மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் நடந்ததாம். அரங்கேற்றத்தின்போது அழகியசிங்கர் சிரித்த ஒலி இடியென அனைவருக்கும் கேட்டதாம். அழகிய சிங்கரைப் பாட எண்ணியே கம்பர் தம் ராமாயணத்தில் சிங்கப் பெருமானின் பெருமையையும் பக்தன் பிரகலாதனின் மூலம் நாராயண மந்திரப் பெருமையையும் சொல்ல எண்ணி, இரணியன் வதைப் படலம் என்ற ஒன்றையே வைத்துப் பாடினாராம். மூல நூலான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றாலும், கம்பர் இந்த மேட்டழகிய சிங்கருக்காகவே பாடியதுதான் இரணியன் வதைப் படலம் என்பர்.

இனி, காட்டழகிய சிங்கருக்கு வருவோம்...

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்... இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் இருந்தது. திருவானைக்காவுக்குப் பிறகு திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகளும் இதர கொடிய மிருகங்களும் உலவும் இடமாகத் திகழ்ந்ததாம். இந்தப் பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பய நெருக்கடியைத் தந்திருக்கிறது. அந்த நிலையில், யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்றதுதான் இந்தக் கோவில். கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகள் பழைமையான ஆலயமாகத் திகழ்கிறது. இருந்தபோதும், கி.பி.1297 வாக்கில், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்தக் கோவிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து, கோவில் அழகுறத் திகழ வழி ஏற்படுத்தினான். இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு. இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது.

(உபரி தகவல்: இந்த மன்னனின் வீரதீரங்களைச் சொல்லும் ஒரு மெய்கீர்த்தி (கல்வெட்டு), திருவெள்ளறை திவ்யதேசத்தில் ஆலய சிறுகோபுரத்து நுழைவாயிலில் ஒரு புறத்தில் இருப்பதாக திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். அதில் சோழன் - பாண்டியன் மோதலும், மோதலின் விளைவாக ஒருவரின் அரண்மனைகளை ஒருவர் அழித்துச் சென்றதும், ஆனால், ஒருவரின் பெயரால் கோவிலில் நிபந்தங்களை ஏற்படுத்திய செயலுக்கு மதிப்பளித்து, எதிராளியாக இருந்தாலும் அவர் பெயராலேயே அந்த நிபந்தம் தொடர்ந்து வர இந்தப் பாண்டியன் வழி ஏற்படுத்திச் சென்றதையும் அந்த மெய்கீர்த்தி உணர்த்தும் விதத்தைத் தெரிவித்தார்.)

ஸ்ரீரங்கம் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். முகப்பில் வரவேற்பு வளைவு உள்ளது. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழையும்போதே இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் ஒன்றைக் காண்கிறோம். திருவரங்கம் நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார். இங்கே நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆனபிறகு தங்கக் குதிரையில் ஏறி பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். இந்தக் கோவிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆனபிறகு, வேட்டை உற்ஸவம் தொடங்குகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது.

கோவிலின் உள்ளே செல்கிறோம். பலிபீடத்தைத் தாண்டி, கோவிலின் முன் மண்டபத்துக்குள் செல்கிறோம். மேலே பார்த்தால், அழகான திருவுருவப் படங்கள். திருச்சுற்றில் வலம் வருகிறோம். பரிவார தேவதைகளாக விஷ்வக்சேனரின் படைத்தலைவரான கஜானனர் தரிசனம் முதலில்! இதில் யோகஅனந்தர், யோக நரஸிம்ஹர் ஆகியோருடைய தரிசனமும் கிட்டுகிறது. காயத்ரி மண்டபத்தில் யோக நாராயணர், யோக வராஹர் ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது.

பிராகார வலத்தில், சந்நிதியின் பின்புறம் வரிசையாக ஒன்பது துளசி மாடங்கள் உள்ளன. வலப்புறத்தில் வன்னிமரம் மற்றும் நாகப் பிரதிஷ்டையோடு கூடிய மரங்களையும் காண்கிறோம்.

உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம். முகமண்டபம், மஹாமண்டபங்கள் பொலிவோடு திகழ்கின்றன. எதிரே கருடனுக்கு சந்நிதி உள்ளது. கர்ப்பக்ருஹம், அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன் சந்நிதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன. இன்னும் பல மண்டபங்கள், உத்தமநம்பி வம்சத்தில் உதித்த சக்ரராயராலும்,நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர நரஸிம்ஹராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன் நரஸிம்ஹரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்ஹர், யோக நரஸிம்ஹர், அனந்த நரஸிம்ஹர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்ஹரின் தரிசனம் இங்கே நமக்குக் கிடைக்கிறது.
குலசேகரன் திருச்சுற்றான துரை பிரதட்சிணத்தில் உள்ள தூண்களில் தசாவதார உருவங்கள் அழகுற அமைந்துள்ளன. அதிலும் ஸ்ரீநரஸிம்ஹரின் உருவம் அவ்வளவு அழகு; தெளிவு!

சுற்று வலம் வந்து, சந்நிதிக்குள் செல்கிறோம். பழைமையின் கம்பீரம் உள் மண்டபத்தில் தெரிகிறது. உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்; ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்|| என்று ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரம் நம்மை ந்ருஸிம்ஹப் பெருமானைக் குறித்த தியானத்துக்கு தூண்டுகிறது. சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கிறோம். மிகப் பெரீய்ய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது.

சகல நலன்களையும் வாரி வழங்கும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை தரிசித்து வெளியே வருகிறோம்.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. அதுபோல்,பிரதோஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. சிங்கப்பெருமானின் வருஷத் திருநட்சத்திரம் ஆனி மாததிலும், ஜ்யேஷ்டாபிஷேகம் ஆடி மாதத்திலும் நடைபெறுகிறது. இந்தக் கோவிலில் உற்ஸவர் தனியாக இல்லை. எனவே, மற்ற உற்ஸவங்கள் அதாவது பிரம்மோற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவம் போன்றவை நடைபெறுவதில்லையாம்!

ஸ்ரீநரஸிம்ஹர் கோயிலில் பிரதோஷ வழிபாடா? எப்படி சாத்தியம்?
நரஸிம்ஹரும் மூன்று கண்களை உடையவர். பிரதோஷ காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிட்டும். ஆனால், இவர் ருத்ர அம்சம் இல்லை. பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒரு அவதாரம். ஆனால், ஸ்ரீந்ருஸிம்ஹ ஸ்வாமி அவதாரம் செய்தது, பிரதோஷ காலத்தில்தான்! காரணம், ஹிரண்யகசிபு கேட்டுப் பெற்ற வரம் அது. பகலிலும் அல்லாமல் இரவிலும் அல்லாமல் பிரதோஷ காலத்தில் அந்த வரத்தை அனுசரித்து ந்ருஸிம்ஹ அவதாரம் நிகழ்ந்தது. அதனால், இங்கே பிரதோஷ சிறப்பு வழிபாடு உண்டு.

இந்தக் கோவிலுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார். அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரஹஸ்ய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த இடம் இந்தக் காட்டழகியசிங்கர் திருக்கோவிலே! ஆகவே, வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்.

ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்த்ர போகமணி ரஞ்ஜித புண்யமூர்த்தே|
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்||

- என்று லக்ஷ்மி ந்ருஸிம்ஹரைத் துதித்தபடி கோயிலில் இருந்து வெளியே வருகிறோம். என்றும் எல்லோருக்கும் காட்டழகிய சிங்கப் பெருமானின் திருவருள் கிடைப்பதாக!


காலை 6.15 முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 வரை கோவில் திறந்திருக்கும். கோவில் தொடர்புக்கு: 0431- 2432246

- கட்டுரை மற்றும் படங்கள் : 

செங்கோட்டை ஸ்ரீராம்

செவ்வாய், மே 18, 2010

மறந்துபோன பக்கங்கள் புத்தகம் பற்றிய கலாரசிகனின் பார்வை

தினமணி 16.05.2010 தேதிய ஞாயிறு தமிழ் மணியில் கலாரசிகன் பார்வையில் இருந்து...
பத்திரிகையாளர், நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். பெரியவர்களையும், குழந்தைகளையும் பார்க்கப் போகும்போது வெறும் கையோடு போகக்கூடாது என்பார்கள். அதேபோல, பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திக்கச் செல்லும்போது, கூடவே தங்களது படைப்புகளையும் எடுத்துக்கொண்டுதான் போகவேண்டும் என்பார் எங்கள் ஆசிரியர் "சாவி' சார்.
"என்ன சார், கதை, கட்டுரை எதுவும் இல்லாமல் வெறுங்கையோடு வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டேவிடுவார். மஞ்சரி, ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றியிருக்கும் செங்கோட்டை ஸ்ரீராமுக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனக்குப் பரிசளிக்க அவர் எழுதிய "மறந்துபோன பக்கங்கள்' புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார்.
படைப்பாளிகள் தங்களது புத்தகங்களை இன்னொருவருக்குப் பரிசளிக்கும்போது தவறாமல் அதில் தங்களது கையெழுத்தைப் பதிவுசெய்துகொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதை இன்னொருவர் இரவல் கேட்கும்போது மறுக்க முடியாமல் போய்விடுகிறது. ஸ்ரீராம் கையெழுத்துப் போடாமல்தான் தனது புத்தகத்தை எனக்குத் தந்தார் என்பதைக் குத்திக்காட்ட இதைச் சொல்லவில்லை. இதுவே மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கட்டுமே என்கிற நல்லெண்ணம்தான் காரணம்.
"மறந்துபோன பக்கங்கள்' புத்தகத்தை சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் அமர்ந்து படித்து முடித்தேன். இந்த இளைஞர் என்னவெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அற்புதமான பல செய்திகளை உள்ளடக்கிய அந்தத் தகவல் களஞ்சியத்தை மீண்டும் ஒருமுறை படித்துக் குறிப்பெழுதிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சி என்று அழைக்கப்படும் வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாளுக்கு அவரது கணவர் இறந்துபோன செய்தி தெரிவிக்கப்படவே இல்லையாம். சொன்னபோது அவர் நம்பவும் இல்லையாம். கடைசிவரை சுமங்கலியாகவே வாழ்ந்து மறைந்தாராம் அந்த அம்மையார். அதுமட்டுமல்ல, நாட்டுக்காக உயிர் துறந்த மாவீரன் வாஞ்சிநாதனிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஆண்டுதோறும் தீபாவளிக்குப் புடவை எடுத்துக்கொண்டு போய் சமர்ப்பித்து, பொன்னம்மாளின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசிபெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாராம்.
கம்பனையும், வால்மீகியையும், ஆழ்வார்களின் பாசுரங்களையும் ஸ்ரீராம் கரைத்துக் குடித்திருக்கிறார் என்றால், சமூக நடைமுறைகளை அவர் இலக்கியங்களை உவமைகாட்டி சாடும், பிரச்னைகளுக்குத் தீர்வுகூறும் பாங்கு பலே... பலே...
மும்பையிலுள்ள "கேட் வே ஆஃப் இந்தியா'வைப் பார்க்கும் போதெல்லாம் என் மனது இதுவொரு அடிமைச்சின்னம் என்று சினமடையும். 1911-இல் தில்லி தர்பாருக்குச் செல்ல வந்திறங்கிய ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், ராணியும் இந்த வழியாகத்தான் இந்திய மண்ணில் நுழைந்தனர். அதேபோல, சுதந்திர இந்தியாவிலிருந்து ஆங்கிலப் படைகளின் கடைசிப் பட்டாலியன் இதே வழியாகத்தான் 1948-இல் வெளியேறியது. எனக்கு இருக்கும் அதே உணர்வை செங்கோட்டை ஸ்ரீராமும் பிரதிபலித்திருப்பது நெகிழவைத்தது. எல்லாம் சரி ஸ்ரீராம்... கான கந்தர்வன் எஸ்.ஜி.கிட்டப்பா பற்றிய ஒரு தகவல் விடுபட்டுப் போயிருக்கிறது. அவர் முறையாக சங்கீதம் கற்றவர் அல்ல. எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இயற்கையாகவே ராக ஆலாபனைகள் அபாரமாக வருமே தவிர, ஸ்வரம் பாடத்தெரியாது. தமது பிருகாக்களின் ராக சாரங்களை அவர் பிழிந்தெடுத்துத்தர, அதை அவரது நண்பர் நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளைவாள் வாசித்து அசத்துவாராம். அதுதான் "சிங்கார வேலனே தேவா...' பாடலுக்கு அடிப்படை.
செங்கோட்டை ஸ்ரீராமின் பிரமிக்கவைக்கும் பல பரிமாணங்களை "மறந்துபோன பக்கங்கள்' என்னில் மறக்கவே முடியாதபடிபதிவுசெய்துவிட்டிருக்கிறது.
**************

திங்கள், மே 03, 2010

சிருங்கேரி தரிசனம் :: சிருங்கேரி மஹா சுவாமிகளின் 60வது வர்தந்தி மஹோத்ஸவம்

சிருங்கேரி தரிசனம்!

பரந்து விரிந்த பாரத நாடெங்கும் தன் பாதம் படும்படியாக நடந்து, ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்திய ஸ்ரீஆதிசங்கரர், திசைக்கு ஒன்றாக, நான்கு பீடங்களை நிறுவினார். கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி என அவர் அமைத்த நான்கு மடங்களில், முதலாவதாகத் திகழ்கிறது சிருங்கேரி. 

அதென்ன சிருங்கேரி? 

சிர்ங்க கிரி என்பதே சிருங்கேரி என்றானதாம். தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்திக் கொடுத்தவர், விபாந்தக முனிவரின் புதல்வரான ரிஷ்யசிருங்கர். அதாவது, 'மான் கொம்பு உடையவர்' என்று பொருள். இவர் வாழ்ந்த பகுதியே சிருங்கேரி.
(இந்த ரிஷ்யசிருங்கருக்கு என்று ஒரு கோயிலும் சிருங்கேரி பகுதியில் உள்ளது. சிருங்கேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் ஒற்றையடி மலைப்பாதையில் சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். சிருங்கேரியில் இருந்து பேருந்து, ஜீப் வசதிகள் உள்ளன. மழைக் கடவுளாக இவர் வணங்கப் படுகிறார்.) சிருங்கேரி - இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. மலைப் பகுதியில் அமைந்துள்ளது ஊர். இயற்கையின் எழிலுக்கு எழில் சேர்த்தபடி ஓடுகிறது துங்கா நதி. நதியின் இரு கரையிலும் அழகாகத் திகழ்கிறது சிருங்கேரி மடமும், ஸ்ரீவித்யாசங்கரர் ஆலயமும்.

ஆதிசங்கர பகவத்பாதரின் முக்கிய சீடராகத் திகழ்ந்த சுரேஷ்வராச்சார்யரை முதலாவதாகக் கொண்டு சிருங்கேரி மடத்தின் குருபரம்பரை தொடர்கிறது. 

மலையாள தேசத்தின் காலடி என்ற இடத்தில் இருந்து வடக்கு நோக்கி யாத்திரை சென்ற ஆதிசங்கரர், தாம் செல்லும் வழியில் பண்டிதர்களுடன் வாதம் செய்து, தோற்கடித்து, அவர்களைத் தன் சீடர்களாக்கினார். அப்படி ஒருமுறை... மண்டனமிச்ரர் என்ற விஸ்வரூபரிடம் வாதம் செய்தார். அவரின் மனைவி, சரஸ்வதி தேவியின் அம்சமான உபயபாரதி. அந்த வாதத்தில் விஸ்வரூபர் தோற்று, துறவறம் ஏற்றார். அவருக்கு சுரேஷ்வரர் என்ற திருநாமம் கொடுத்து சீடராக்கினார் ஆதிசங்கரர். மேலும், சாட்சாத் சரஸ்வதியின் அம்சமான உபயபாரதியும் உடன் வரவேண்டும் என வேண்டினார். அதற்கு உபயபாரதி, ''சரி... உங்கள் பின் வருகிறேன். நீங்கள் திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும். அப்படிப் பார்த்துவிட்டால், நான் அங்கேயே நின்றுவிடுவேன்'' என்றாள்.

மேற்குத் தொடர்ச்சி மலை வழியே சீடர்களுடன் ஆதிசங்கரர் நடந்து சென்றார். அவர்களின் பின்னே உபயபாரதியும் கால் சலங்கை 'கலீர் கலீர்' என ஒலிக்க நடந்து வந்தாள். துங்கை நதிக்கரையோரம் வந்தபோது, அவர்கள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டனர். 
சுட்டெரிக்கும் வெயில். தவளை ஒன்று பிரசவ வேதனையில் தவித்தது. அப்போது, விறுவிறுவென வந்த பாம்பு ஒன்று, தவளையின் மீது வெயில் படாதவாறு படம் எடுத்து பாதுகாத்தது. இதைக் கண்ட ஆதிசங்கரர், விரோதமுள்ள பிராணியிடம்கூட இரக்கமும் அன்பும் தவழும் இந்த இடத்தை தியானம் செய்ய சிறந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார். 

அதேநேரம், தேவியின் சிலம்பொலியும் நின்றுவிட, திரும்பிப் பார்த்தார் சங்கரர். நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. பிறகு அங்கேயே ஸ்ரீசக்ரம் வடித்து, தேவிக்கு 'சாரதா' எனும் திருநாமம் சூட்டி (மரத்தில்) பிரதிஷ்டை செய்தார். 

இவருக்கு காட்சி கொடுத்த அன்னை, ''இந்த பீடம் சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கப் படட்டும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடிகொண்டு அருள் வழங்குவேன்'' என அருள்பாலித்தாள். 

தேவி ஸ்ரீசாரதாவின் ஆலயம்... பாம்பும் தவளையும் ஒற்றுமையுடன் இருந்த தலம்... இப்படி எல்லாம் யோசித்தபோதே, என் உள்ளத்தில் விவரிக்க முடியாத உணர்ச்சி ஆக்கிரமித்தது. 
அந்தத் தலத்தை எப்போது தரிசிக்கப் போகிறோம் என்ற ஏக்கத்துடன் மங்களூரு ரயில் நிலையத்தில் இறங்கினேன். நண்பர்களான கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் மற்றும் ஜோதிடர், எழுத்தாளர் சீதாராமன் ஆகியோர் அடிக்கடி சிருங்கேரி சென்று வருபவர்கள். சிருங்கேரியைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லியடியே உடன் அழைத்துச் சென்றார்கள். 
காலைப் பனியின் குளிர்ச்சி வெளியில்; அன்பு மயமான சிருங்கேரித் தலத்தின் குளுமை உள்ளத்தில்!

மங்களூருவில் இருந்து பேருந்தில் பயணித்தோம். அருமையான மலைப் பிரதேசம்; குறுகலான பாதை. சுமார் நான்கு மணி நேர பயணத்தில் சிருங்கேரியை அடைந்தோம். மடத்தின் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதிகளில் நல்ல வசதிகள் உள்ளன. முன்னதாகவே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யவும் வசதி உண்டு. 

மடத்தின் கோயில் வளாகத்தில்... மிக மிக அழகாகக் காட்சி தருகிறது வித்யாசங்கரர் ஆலயம். விஜயநகர கட்டடக் கலையின் கம்பீரத்தைக் காட்டி நிற்கும் கற்கோயில். அருகில் கோபுரத்துடன் ஸ்ரீசாரதாம்பாள் கோயில். எதிர்ப்புறத்தில் ஸ்ரீநரசிம்மபாரதி யாக மண்டபம்; அழகான அமைப்பு; வேதகோஷங்கள் முழங்கிய வண்ணமாக மாணவர்கள். மனது குளிர்கிறது. தோரணவாயில் கணபதியை தரிசித்து, கோயிலுக்குள் செல்கிறோம். அன்னை சாரதாம்பாளின் அற்புத தரிசனம். கூடியிருக்கும் பக்தர்களின் கோஷத்தைக் கேட்கும்போது உடல் சிலிர்க்கிறது. வலப்புறம் பெரிய மண்டபம். அழகான ஓவியங்கள், சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன.

அடுத்து, சிற்பக் கலையின் அற்புதமாகத் திகழும் வித்யாசங்கரர் கோயிலுக்குச் செல்கிறோம். ஸ்வாமியை தரிசித்து, வெளிவரும் நம்மை மெய்ம்மறக்கச் செய்கின்றன கற்சிற்பங்கள். இங்கே, ஆதிசங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, அனுமன், கருடன், ராமர், ஹரிஹரன், மலையாள பிரம்மா, சுப்ரமணியர் என தனிச் சந்நிதிகளில் அருளும் தெய்வங்களை தரிசிக்கலாம்.

கோயிலை ஒட்டி ஓடுகிறது துங்கை நதி. படிகளில் இறங்கிச் சென்றால், நதியை ஒட்டி, படித்துறையில் சிறு மண்டபம். அதனுள்ளே, தவளைக்கு நிழல் தந்த பாம்பின் சிலை... வாலினைச் சுற்றியபடி காட்சி தருகிறது. சுற்றிலும் தண்ணீர். காணும் நம் கண்களிலோ ஆனந்தக் கண்ணீர். படிகளில் ஏறி, பாலத்தில் செல்கிறோம். துங்கை ஆற்றின் மறுகரையில் உள்ளது சிருங்கேரி பீடாதிபதிகளின் மடம். இயற்கை கொஞ்சி விளையாடும் பச்சைப் பசேல் இடம். வெற்றிலைக் கொடிகளும் மரங்களும் நம் மனத்தை மயக்குகிறது. சற்று தொலைவில் மடம் தென்படுகிறது. அழகிய பூங்கா, நீரூற்று என்று அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள். நவீன மயமான பெரிய அரங்கு நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்கிறோம். பக்தர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அனைவருக்கும் சிருங்கேரி சுவாமிகள் சிரித்த முகத்துடன் பிரசாதம் வழங்குகிறார். சிலரிடம் அவர்களின் குறைகளைக் கேட்டு, அது நிவர்த்தி ஆக ஆசி அளிக்கிறார். சிலரிடம் குடும்ப நலன்களை விசாரிக்கிறார். அந்த அரங்கத்துள்ளே மேடையில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான மண்டபம். அதில் இறைவனின் விக்கிரகங்கள். சுவாமிகள் பூஜை செய்யும் இடம் இதுதான்! 

அம்பாளை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமான சந்திரமௌலீஸ்வரரையும், ரத்தினகர்ப்ப கணபதியையும், சிருங்கேரி பீடத்தின் முதல் பீடாதிபதி சுரேஷ்வராச்சார்யரிடம் கொடுத்து பூஜை செய்யக் கூறினாராம். இந்த ஸ்படிகலிங்கத்துக்கே, இன்றுவரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனராம். 

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரை தரிசித்து, சுவாமிகளை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொள்கிறோம். அங்கே ஓர் ஓரமாக பாதபூஜை தனியாக நடக்கிறது. இந்த வருடம்(2010) ... சிருங்கேரி பீடத்தின் தற்போதைய 36-வது பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகளின் 60-வது வர்தந்தி (பிறந்தநாள்) என்பதால், அந்த உற்ஸவ பணிகளில் மடத்தில் உள்ளவர்கள் மிக உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார்கள்! சுவாமிகளின் 60-வது வயது நிகழ்வை நாடெங்கிலுமுள்ள மடத்தின் சிஷ்யர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். 

ஸ்ரீபாரதீ தீர்த்த மகாசுவாமிகளின் பூர்வாஸ்ரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் அலகுமல்லபாடு அக்ரஹாரத்தில், 11.4.1951-ல் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே சிவபக்தியும் சம்ஸ்கிருத ஞானமும் மிளிர்ந்தது. இவருடைய 9-வது வயதில், சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளை நரசராவ்பேட்டை எனும் இடத்தில் தரிசித்து, அவருடன் சம்ஸ்கிருதத்திலேயே உரையாடினார். இவருடைய அபார ஞானத்தை அறிந்து மகிழ்ந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தருக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. சுவாமிகள்பேரில் சீதாராம ஆஞ்சநேயலுவுக்கும் குருபக்தி அதிகமானது. 
பின்னாளில் அவர் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தருடன் பாரத நாடெங்கும் தீர்த்த யாத்திரைகளில் பங்கேற்றார். அவருடன் இருந்து சாஸ்திரங்கள் கற்றார். 11.11.1974- ல் ஸ்ரீசாரதாம்பாள் அனுக்ரஹத்தில் சுவாமிகளால் முறைப்படி பீடத்தின் சீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு உரிய சடங்குகள் செய்விக்கப்பட்டன. ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் காலத்துக்குப் பிறகு, 19.10.1989-ல் சிருங்கேரி பீடத்தின் 36-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்று பூஜைகளை குறைவற நடத்தி வருகிறார். 

சுவாமிகள் தமிழில் அழகாகப் பேசுகிறார்; தெலுங்கு கலந்த நடை. மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பன்மொழிப் புலமை மிக்கவராகத் திகழ்கிறார். சிறந்த அறிஞர்; அன்பே உருவான வடிவம்... முகத்தில் தெய்விக ஒளி பொங்கக் காட்சி தந்த சுவாமிகளின் உத்தரவு பெற்று வெளி வருகிறோம்.

அந்த அரங்கத்தையும் பழைய மடத்தையும் அடுத்து, இதற்கு முன் பீடாதிபதிகளாக இருந்த சுவாமிகள் சிலரின் அதிஷ்டானங்கள் உள்ளன. அங்கே வணங்கி சற்று நேரம் தியானம் செய்தேன். தூய்மையான மண்டபமும், வீசும் காற்றும், ஆழ்ந்த அமைதியும் அங்கே வருபவர்களை தியானம் செய்யத் தூண்டுகிறது. 

அன்பும் அருளும்தானே வாழ்வின் ஆதாரங்கள். அதை சிருங்கேரிக்குச் சென்று வரும் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர்வார்கள்.

சிருங்கேரி எங்கே இருக்கிறது?
கர்நாடகாவில், மங்களூருவில் இருந்து சுமார் 108 கி.மீ. தொலைவு. காலை 5 மணி முதல் மாலை 4.30 வரை மலைப்பாதையில் பஸ் வசதி உண்டு. பெங்களூருவில் இருந்தும் செல்லலாம். தங்குவதற்கு மடத்தின் சார்பில் குறைந்த கட்டணத்தில் விடுதிகள் உள்ளன. தனியார் விடுதிகளும் உண்டு. காலை மணி 6-2, மாலை 5-9 வரை கோயில் திறந்திருக்கும். மதியம் 12 முதல் 3 மணி, இரவு 7 முதல் 9 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
நிர்வாகி,
ஸ்ரீஜகத்குரு சங்கராச்சார்ய மகாசம்ஸ்தானம், 
தக்ஷிணாம்னாய ஸ்ரீசாரதா பீடம்,
சிருங்கேரி - 577 139
போன்: 08265 - 250123 / 250192
-
கட்டுரை மற்றும் படங்கள்:

 © செங்கோட்டை ஸ்ரீராம்
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix