சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஜனவரி 13, 2013

தை மகள் பிறந்த நாள்!தை மகள் பிறந்த நாள்! 


வெய்யோன் கால்மாறிப் பயணிக்கும் நன்னாள்!

மறந்துபோன நன்றிக்கடனைச் செலுத்துகிறோம்!

வரும் ஆண்டிலேனும் மழையும் வளமையும் பொங்கட்டும்! 


கதிரவனே!

வயிற்றுப்பாட்டைத் தீர்க்கும் தாயாம் விவசாயக் குடி

வயிறு நிறைய நீர்ப் பெருக்கை அளிப்பாய்!


வரும் வருடங்களில்...

வயக்காட்டுச் சகதியில்தான் 

உழவோன் பாதம் மிதித்து விளையாட வேண்டும்!

உன் கிரணங்களால் சுட்டெரிக்கும் தார்ச் சாலைகளில் 

இனியும் அவன் கால் நோகப் போராடக் கூடாது!


ஆதவனே!

பாதகம் செய்யாதே! பாவமும் செய்யாதே!

என் பாட்டாளியின்

பாவம் பார்த்துப் படியிறங்கு! 

படைத்தோம்...

மனம் 

பொங்கிப் படைத்தோம்!


ஒழுக்கத்தை இழந்ததாலே

புழுக்கத்தால் தவித்தோம்! 

அறிவூட்டும் ஆதவனே...

ஒழுக்க நெறி சிறக்கட்டும்!


பண்பூட்டும் பகலவனே...

பயிர் வளம் பெருகட்டும்!

பொங்கும் மங்களம்

எங்கும் தங்கட்டும்!


அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

வியாழன், ஜனவரி 03, 2013

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து...


ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து...


த்ருணாதபி சுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா |
அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி: ||

-- வைணவன் என்போன் எப்படிப்பட்டவன் என்று நாமக்கல் கவிஞர் பாடியது பலருக்கும் நினைவிருக்கலாம். அத்தகைய தன்மையை ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபு பாடிவைத்தது இப்படி...

த்ருணாத் அபி சு நீச-ஏன:  தரோர் அபி ஸஹிஷ்ணுனா |  அமானி- நா மானத ஏன கீர்த்தனீய ஸதா ஹரி ||

புல்லைக் காட்டிலும் தன்னைத் தாழ்ந்தவனாக (நீசனாக) நினைப்பவன்; மரத்தைப் போல் பொறுமை காப்பவன்; (மானம் அவமானம் என) புகழையோ, மதிப்பையோ பெற விரும்பாதவன்; (ஆனால் இவற்றைப் பிறருக்கு வழங்க எப்போதும் ஆர்வத்துடன் இருப்பவன்) இத்தகையவனே திருமாலின் திருநாமத்தை கீர்த்தனம் பண்ணத்  தகுதி பெற்றவன்!

- இப்போது நம்மை நாமே மனமெனும் உரைகல்லில் உரசிப் பார்ப்போம்! இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று!

3rd text:
trinad api sunichena taror api sahishnuna
amanina manadena kirtaniyah sada harih
One should chant the holy name of the Lord in a humble state of mind, thinking oneself lower than the straw in the street; one should be more tolerant than a tree, devoid of all sense of false prestige and should be ready to offer all respect to others. In such a state of mind one can chant the holy name of the Lord constantly.

pic:thanks to: http://www.harekrsna.de/Siksastaka/Siksastakam-E.htm

புதன், ஜனவரி 02, 2013

நாடகங்களில் வளர்ந்த தமிழிசை!


ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீ ரங்க நாதா ... ஏன் பள்ளி கொண்டீர் அய்யா?
இந்தப் பாடலைப் பாடிக் கேட்கும் போது உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் தமிழிசையின் மகத்துவத்தைப் பறைசாற்றும். தமிழிசை மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் இயற்றிய இது ஏதோ ஒரு தனிப்பாடல் போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது அவர் இயற்றிய ராம நாடகத்தில் உள்ள பாடல் அல்லவா?
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாண் ஆக்கி என்று பாடும்போது, இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் சிலப்பதிகார நாடகமும் நமக்கு நினைவில் வந்துவிடும்.
இப்படி எத்தனையோ தமிழ்ப் பாடல்களை, தமிழிசையை வளர்க்க நாடகங்கள் பெரிதும் உதவின. இவை அந்ததந்தக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தன.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எளியோர்க்கும் புரியும் வண்ணம் இசை அமைய வேண்டும் என்பதால், நாடகங்களில் தமிழ் முழக்கம் முழுதாய் நிறைந்தது. நாடகக் கலையை வளர்த்த எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் அமுத கானத்தைக் கேட்கவே நாடகக் கொட்டாய்களில் மக்கள் வெள்ளம் குவிந்ததுண்டு. குறிப்பாக, இசை ஏதோ மேட்டுக்குடி மக்களுக்கானது என்ற எண்ணத்தை விதைத்திருந்த காலத்தில், மேட்டுக்குடி மக்களையும் சாதாரண நாடகக் கொட்டாய்களுக்கு வரவழைத்தவர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவரது சுண்டியிழுக்கும் குரல், மைக் செட் இல்லாமல் பல காத தூரத்துக்கு மக்களின் செவிகளில் இசையைப் பாய்ச்சி இழுத்து வந்தது. வள்ளி நாடகத்தில் காயாத கானகத்தே என்று கிட்டப்பா பாடிய தமிழிசைக்கு மயங்காதவர் உண்டோ? அன்றைய காலத்தில் காயக சிரோன்மணியாக வலம் வந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கிட்டப்பாவின் நாடகக் கொட்டாயில் முதல் வரிசையில் நின்று கேட்டு மயங்கினாரென்றால், நாடகத்தின் வலிமையை என்னென்பது?!
ராமநாடகம் போன்றே, அக்காலத்தே புகழ்பெற்று விளங்கியது நந்தனார் சரிதம் நாடகம். வேடன், வேலன், விருத்தன் என அனைத்திலும் நடித்து கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப பாடல்களைப் பாடி மேடைகளில் வெளுத்துக் கட்டியவர்கள் கிட்டப்பாவும் சுந்தராம்பாளும். நந்தனார் சரிதம் நாடகமும் இதற்குச் சற்றும் குறைவின்றி மக்களின் ஆதரவைப் பெற்றதே!
நாடகங்களை நடத்துவதற்கென்று, கூத்தர், பாணர் ஆகியோரை தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. இவர்கள் இசையில் வல்லவராகத் திகழ்ந்தனர்.
நாடகங்களில் சில மரபுகள் உண்டு. கட்டியக்காரன் இல்லாத சரித்திர நாடகம் இல்லை. சபையோர்க்கு இவர் வருகின்றார் என்று அறிவிக்கும் அறிவிப்பாளன் கட்டியக்காரன். பெரும்பாலான நாடகங்களில் விநாயகர், கலைமகள், மோகினிராஜன், மோகினி போன்றோரெல்லாம் நாடகத்தின் துவக்கத்தில் வருவார்கள். இந்த நாடகங்கள் வசனம், விருத்தம், கீர்த்தனம் என மூன்று அமைப்புகளைக் கொண்டிருந்தன. எல்லா நாடகங்களுமே இன்றைய காலத்தைப் போல் வெறும் வசனம் மட்டுமே கொண்டிருக்கவில்லை. கதாபாத்திரங்கள் இடையிடையே கீர்த்தனம் செய்வர். விருத்தங்களின் மூலம் முன்னர் நிகழ்ந்ததைச் சொல்வர். இந்த நபர் இந்த சம்பிரதாயத்துடன் வருகிறார் என்று அறிவிக்கும்படி கீர்த்தனங்களாய் அமைவது உண்டு. கட்டியங்காரன் நிகழ்ச்சிகளைச் சொல்லும்வகையில் பாடல்களாய்ப் பாடுவதும் உண்டு.
நாடக சம்பிரதாயத்தில் கீர்த்தனங்களுக்கு தரு என்று பெயர். சிந்து என்றும் கூறுவர். இந்த வசனம், கீர்த்தனம், விருத்தங்களில் மக்களின் வழக்குச் சொற்கள் அதிகம் கலந்திருக்கும். அதுதான் இவற்றின் வெற்றி. இந்த வகையில், குறவஞ்சி நாடகங்கள் அக்காலத்தே பிரபலமாகத் திகழ்ந்திருக்கின்றன. திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியும் இவ்வகையில் தமிழிசைக்கு பலம் சேர்த்த குறவஞ்சி நாடகமே!
தமிழ்ப் பாடல்களால் நிறைந்த நாடகங்கள் பெரும்பாலும் தெருக்கூத்து வகையைப் போல், எளியோரைக் கவர்ந்தவையாக இருந்திருக்கின்றன.
அக்காலத்துப் பேச்சுநடை, பழமொழிகள், பழங்காலப் பொருள்களைப் பற்றிய செய்திகளும் பாடல்களிலே இருந்ததால், இவை வெறுமனே துதிப் பாடல்களாக அமையாமல் வாழ்க்கைப் பாடல்களாக அமைந்தன.
தமிழிசை துலங்கும் நாடகங்கள் பழங்காலம் முதற்கொண்டே மேடையேற்றப்பட்டு வந்தாலும், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்
தஞ்சை நாயக்கர் காலத்தில் மீண்டும் உத்வேகம் கொண்டு புதிது புதிதாக வலம்வந்தன. அருணாசலக் கவியால் இயற்றப் பெற்ற மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம் என்ற நாடகம், நாராயண கவி என்பார் இயற்றிய பாண்டிய கேளீ விலாச நாடகம் ஆகியவை தஞ்சை நாயக்கர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ளன.
மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம் என்பது, மதன சுந்தரேசராகிய சிவபெருமானின் திருவருளால் பெற்ற குழந்தைகளின் விளையாட்டைச் சொல்லும் நாடகம் என்ற பொருளில் அமைந்தது. மதன சுந்தரேசரைக் குல தெய்வமாக உடைய சோழ மன்னன் ஒருவனின் பிள்ளைகள் நான்கு பேர் பலவிதமான விளையாடல்களைச் செய்வதும், சிவபெருமானை நோக்கி பக்தி செய்வதும், சோழனின் பிரார்த்தனைக்கு இரங்கி சிவபெருமான் எழுந்தருளி அந்தப் பிள்ளைகளுக்கு நலன்கள் பல அருள்வதுமாகிய செய்திகள் இந்த நாடகத்தில் கூறப்பட்டிருக்கும்.
இந்த சோழன்தான் என்று குறிப்பிடாமல், யாரோ ஒரு சோழனாக சோழேந்திரன் எனும் பெயரில் இவன் குறிப்பிடப்படுகிறான். சேரன், பாண்டியன், கொங்கு நாட்டரசன், கேரள நாட்டு அரசன் என நான்கு பேரின் புதல்வியரை மணந்து, நான்கு புதல்வர்களைப் பெற்று அவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறான் சோழேந்திரன்.
அப்போது, முதலில் கழற்சிக்காய் விளையாட்டைத் தொடங்கினர். எண்களை எண்ணி ஒன்றெனில் தெய்வம், இரண்டெனில் சக்தியும் சிவமும், மூன்றெனில் மும்மூர்த்திகள், நான்கு எனில் நால் வேதங்கள், ஐந்து எனில் ஐம்பூதங்கள், ஆறு எனில் சாத்திரங்கள் என... இவ்வாறாக எண்களை வைத்து பாடல்கள் இசைக்க விளையாடுகிறான். பின்னர் கழற்சிக்காய் ஊசல் என விளையாட்டு. பந்து அடிப்பது, குதிரைப்பந்து, பந்தை வீசுவதும் பிடிப்பதுமான விளையாட்டு, கிட்டிப் பந்து, கிட்டியினால் பந்தை அடிப்பது மற்றவர் எடுப்பது, பின்னர் பாண்டி விளையாட்டு... சில்லை வீசிக் காலால் ஏற்றி விளையாடுவது. பின் உப்புக்கோடு, நாலுமூலைத்தாச்சி, கண்ணாமூச்சி என விளையாட்டு தொடர்கிறது. பின்னர் நால்வரும் சேர்ந்து கொப்பி தட்டிப் பாடி விளையாடுவது. இது முடிந்தவுடன் மதன சுந்தரேசரைப் புகழந்து பாடுவது...
இவ்வாறு குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ந்த அரசன், பெருமானை பிரார்த்தனை செய்து, இவர்களுக்கு தீர்க்காயுளும் மற்ற நலன்களும் கிட்ட வேண்டும் என்று வேண்ட, அவன் பக்திக்கு இரங்கிய பரமன் காமசுந்தரி அம்பிகையுடன் தோன்றி வரம் அருள்கிறான். இவ்வாறு இந்த நாடகம் முடிவடைகிறது.
கணபதி காப்புடன் தொடங்குகிறது இந்த நாடகம். பின்னர் ஹரிகதா போன்று, கதாசங்கிரகம் என்ற பெயரில் முன்கதைச் சுருக்கமாக சொல்லப்படும். கதை சொல்பவர்கள் கதை முழுதும் அமையும் ஒரு பாடலைப் பாடுவார்கள். அதை நிரூபணம் என்று சொல்வார்கள். இதே பாணியில்தான், கோபாலகிருஷ்ண பாரதியார் நொண்டிச் சிந்தில் கதைச் சுருக்கத்தை “பழனமருங்கணையும்” என்ற பாடலின் வழி அமைத்திருக்கிறார். இந்த அகவல் பாவின் முடிவில், இந்த நாடகம், சரபேந்திர மன்னனின் குமாரன் சிவாஜி ராஜேந்திரன் உத்தரவுப்படி அருணாசலக் கவியால் இயற்றப்பட்டது என்ற செய்தி வெளியிடப்படும்.
விநாயகர் காப்பு விருத்தமாகவும், கதாசங்கிரகம் அகவலாகவும், கட்டியங்காரன் வருகை விருத்தமாகவும் அமையும். பின்னர் சிந்து. கல்யாணி ராகத்தில் ஆதி தாளம் அமைய, பல்லவி மற்றும் சரணத்துடன் பாடல் அமையும். விநாயகர் வருகையை இந்துஸ்தானி சேர்ந்த கமாஸ் ராகத்தில் ஐங்கரர் வந்தாரே என்ற பல்லவியுடன், சங்கரி கிருபாகரி  தவத்தினால் பெற்றெடுத்த சச்சிதானந்த மய நித்யகல்யாண குண -- ஐங்கரர் வந்தாரே... என்று பாடல் தொடர்கிறது.
விளையாட்டுப் பாடல்களில், நாதநாமக்கிரியை, தோடி, மோகனம், பந்துவராளி, சௌராஷ்டிரம், மத்யமாவதி, மாஞ்சி, ஆனந்தபைரவி, புன்னாகவராளி என இந்தப் பாடல்கள் அமைந்த ராகங்களின் பட்டியல் நீள்கிறது.
பாண்டிய கேளீ விலாச நாடகத்தில் பாண்டிய மன்னனொருவன் தன் மனைவியுடன் இன்ப விளையாடல் புரிவதும், ஒரு பூங்காவுக்குச் சென்று அங்குள்ள மலர்களையும் பறவைகளையும்கண்டு களிப்பதும், அப்போது இரண்டு ரத்தின வியாபாரிகள் தம்மிடம் இருந்த மணிகளையும் அணிகளையும் காட்ட, அவற்றில் விருப்பமானதை அரசன் வாங்குவதும், பூசாரிகள் பின்னர் குறி சொல்வதும் என நாடகம் எளிமையாகத் திகழ்கிறது. நாராயண கவி என்பாரின் தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. இதிலும் கதாசங்கிரகம் என்ற கதை கூறல், கட்டியங்காரன் வருகை, விநாயகர் வருகை, இயற்கை வருணனை, வியாபாரிகள் வருகை, அணிகளின் அழகை வர்ணித்தல், பின்னர் பூசாரி வருதல், முருகனை வேண்டல், அன்னை மீனாட்சியை வேண்டல், குறி சொல்லல் என அனைத்துக்கும் பாடல்களும் அவற்றுக்கேற்ற ராகங்களும் அமைந்து பூரணமாய்த் திகழ்கிறது.
தற்போதெல்லாம் நாடகங்கள் நகைச்சுவையையும் டைமிங் காமெடியையும் மையமாக வைத்து உருவெடுத்துவிட்டன. நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழிசையை மையமாக வைத்துத் தோன்றிய நாடகங்கள் இன்று திரைப் படங்களாக உருமாற்றம் பெற்றுவிட்டன. இருப்பினும் தமிழிசை வளர, மீண்டும் அருணாசலக் கவிராயரையும் நந்தனாரையும், கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் நடக்கும் கருத்துப் பரிமாறல்கள் இவை எல்லாமும் கலந்த இது போன்ற நாடகங்களை இனியும் பாடுவது தேவை. அவை வெற்றி பெற்று, மேடைக் கச்சேரிகளில் பாடப்பட்டால் தமிழிசை ஊக்கமும் உரமும் பெறும்.    
- செங்கோட்டை ஸ்ரீராம்

(தினமணி இசை விழா மலர் 2012க்காக எழுதப்பட்ட கட்டுரை)

சொற்சுவை பொருட்சுவை தமிழ்ச்சுவை: நண்பா நந்தலாலா.. இது உன் சிறப்பு!தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்... அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை!
கவிஞர் நந்தலாலா-நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்... கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும்.
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான்.
இன்று காலை... பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் எனை மறந்து.
அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார்.
சிறுவயதில் சொல்விளையாட்டு எங்களுக்கும் அத்துபடி. எல்லாம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்து பழகியிருக்க வேண்டும்... அந்த வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது யாம் செய்த புண்ணியம்.
கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி?
அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்... அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு!
பெரியவர் கேட்பாராம்... "இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?” இதற்கான ஒற்றைச் சொல் பதில் - “இராமன் தாரத்தால்”! அதெப்படி? இலங்கை அழிந்தது - இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது - இரா மந்தாரத்தால்!
இன்னொன்று..
அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்?
இதற்கான பதில்... “பார்ப்பான் இல்லாமையால்!” பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்துவருகிறது!
தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்...
இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்!
- உள்ளத்தில் உழன்றுகொண்டிருக்கிறது இந்த வாசகம்!

பாரதிக்கு அஞ்சலி!


பாரதிக்கு அடியேனின் அஞ்சலி!
அடியேன் இல்லத்தே மேஜைக் கணினிக்கு சற்று மேலே மாட்டப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர்களின் படங்கள் இவை. ஒருவர் மகாகவி- பாரதி! மற்றொருவர் வீரத்துறவி விவேகானந்தர். இன்று மகாகவி நினைவாக, அவருக்கு அடியேன் இல்லத்தே ஒரு சிறு நினைவு அஞ்சலி நடத்தினேன். எல்லாம் தனியாகத்தான்!
இந்தப் படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பாரதியின் இந்தப் படத்தை அடியேனுக்கு அளித்தவர், மஞ்சரியில் அடியேனுக்கு முன்னர் ஆசிரியராக இருந்த லெமன் என்கிற லட்சுமணன் ஐயா! பாரதியின் இந்தப் படம் ஆர்யா வரைந்தது என்பது அவர் அடியேனுக்குச் சொன்ன தகவல்.
இன்னொரு சிறப்பு: சென்ற மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, சந்நிதியில் அடியேனுக்கு அளித்த சுவாமியின் வெட்டி வேர் மாலையினை இல்லத்தில் பத்திரமாக வைத்திருந்தேன். பாரதியின் படத்துக்கு இன்று சூட்டி, வெட்டி வேர் மணம் அறையில் கமகமக்க பாரதியின் தமிழ் அறையில் எதிரொலிக்க அவரின் பாடல்களைப் பாடி, தனியொருவனாக அந்த மகாகவிக்கு அடியேனான் இயன்ற அஞ்சலியைச் செலுத்தினேன்.
வாழ்க தேசியக் கவியின் புகழ்!

பாரதி... யாராம்?!

நான் மயிலாப்பூரில் இருந்த நேரம்... 
வீட்டுக்கு வந்த விருந்தினர் குழாமில் ஒரு பெண்மணி... சற்றே வித்தியாசமாகப் பேசியபடி தொணதொணவென்று இருந்தார். திடீரென்று சுவரில் மேலே பார்த்தவர், பாரதியின் இந்தப் படத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். பாரதியின் இந்தப் படத்துக்கு ஒரு சந்தன மாலையை அணிவித்திருந்தேன். மாலையின் நுனியில் இருந்த குண்டலங்கள் மணிகள் காற்றில் அசைந்து கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
திடீரென அவர் கேட்ட கேள்வியால் நான் நிலைகுலைந்து போனேன். முதலில் இது யார் படம் என்றார் அவர்... அதற்கு எம் அம்மை ’இது பாரதியார் படம்’ என்று பதிலளித்தார்.
உடனே அவர், ‘பாரதியார் உங்க சொந்தக்காரரா?” என்று கேட்டார். என் அம்மைக்கு பதில் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. உதட்டளவில் சிரித்தபடி என்னைப் பார்த்தார். விட்டுத் தள்ளுங்கள் என்று நான் ஜாடை காட்டினேன்... பேச்சு வேறு புறம் திரும்பியது...
இப்போது எனக்குள் ஒரு எண்ணம் எழுகிறது. நேரு மாமாவாம். காந்தி தாத்தாவாம். இது தேசிய அளவில். இங்கும் ஒரு சிலர் தந்தை, அண்ணா என்றெல்லாம் ஒரு சிலரை சொந்தம் கொண்டாடும்போது, பாரதியை மட்டும் நாம் ஏன் சொந்தம் கொண்டாடாது போனோம் என்று!
சின்னஞ்சிறு வயதில் மரித்து விட்ட பாரதியை சமூகம் எந்த சொந்தத்தில் பார்க்க விரும்பும்?!

அசுரனும் தேவனும் நமக்குள்ளே!12 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி! அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அந்த நாளை முன்னிட்டு 40% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். எனக்கும் புத்தகங்கள் என்றால் அப்போதும் கொள்ளைப் பிரியம்தான்! புத்தகங்கள் வாங்கச் சென்றேன். முதல் முறையாக என்பதால் கையில் 50 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு சிறு சிறு புத்தகங்களை கொஞ்சம் வாங்கினேன்... 
தைத்ரீயமந்த்ரகோஷம், தைத்ரீய உபநிஷதம் இத்யாதிகளை வாங்கிக் கொண்டு, மனத்தில் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரூ.46 சுமாருக்கு வந்தது. சரி போதும் என்று முடிவு செய்து, புத்தகங்களோடு வரிசையில் நின்று பில் போட்டு, கையில் வைத்திருந்த ரூ.50ஐயும் கொடுத்தேன். கூட்டம் அதிகமாக இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் மடத்தின் அந்த பிரம்மச்சாரி சுவாமி புத்தகங்கள், பில், அதோடு ரூ.50ம் 4 ரூபாய்க்கு நாணயங்களும் மீதி கொடுத்து அவசரப் படுத்தி அனுப்பினார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், நெருக்குதலால் அந்த இடத்தை விட்டு நான்கைந்து அடி வைத்து புத்தகக் கவரை வாங்கி நகர்ந்தேன். ஓ... அந்த பிரம்மச்சாரி சுவாமி நான் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு, ஐம்பது ரூபாயையும் சேர்த்துத் தந்தார் போலும்! எனக்கு நடந்த தவறு புரிந்தது.
என் மனசாட்சிக்குத் தெரிந்து நான் கையில் ரூ.50தானே வைத்திருந்தேன். எனவே நாம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை புத்தகம் ஓசிக்குக் கிடைத்து மேலே நமக்கு நாலைந்து ரூபாய் சில்லறையும் கிடைத்திருக்கிறதே! இப்போது என் மூளையின் இரண்டு பக்க பல்புகளும் எரிந்து அணைந்து எரிந்து அணைந்து ஏதோ இம்சைப் படுத்தின.
தர்ம சாஸ்திரம் மண்டையில் ஏறிய ஒரு இளைஞனாக நெல்லை மண்ணில் இருந்தவரை நாம் இப்படி யோசித்ததே இல்லையே! சென்னை மண்ணை மிதித்த சில நாட்களில் இப்படியும் நம் மனம் எண்ணுமா? என் மனம் அடைந்த அவஸ்தையை வார்த்தைகளில் சொல்ல முடியாது! சிறு வயது முதல் சுவாமிஜியின் எழுத்துகளைப் படித்த நான், இப்படியும் நடக்கலாமோ?! மனம் திரும்பிய அதே நேரம் என் கால்களும் பின்னோக்கி நகர்ந்தன. மீண்டும் வரிசையை ஒதுக்கித் தள்ளி, அதே பிரம்மசாரி சுவாமியிடம் போய், சுவாமி நான் கையில் ரூ.50தான் வைத்திருந்தேன். அவசரத்தில் நீங்கள் கொடுத்த சில்லறையைக் கவனிக்கவில்லை... என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் ஓ நான் ஏதாவது குறைவாக மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டேனா என்றார். இல்லை சுவாமி... அடியேன் கொடுத்த பணமே மீண்டும் அடியேனுக்கு வந்துவிட்டது. நான் தான் தவறுதலாக கூடுதல் பணம் வாங்கிக்கொண்டுவிட்டேன் என்று கூறி ரூ.50 ஐ திருப்பிக் கொடுத்து திரும்பினேன்.
இப்போது நான் படித்துக் கடைப்பிடித்த தர்மம் என் மனதை லேசாக்கி உற்சாகப் படுத்தியது. ஆவலுடன் புத்தகத்தைப் புரட்டினேன்... தைத்ரீய உபநிஷத்தில் கண்ணுக்குத் தெரிந்தது. சீக்‌ஷா வ்யாக்யாஸ்யாம... உதட்டளவில் உச்சரித்தேன். கடைசிப் பக்கம் திருப்பினேன். சந்நோ மித்ர சம்வருண: சந்நோ பவத் வர்யமா... வருணன் நண்பனாகட்டும், அர்யமான், இந்திரன், பிருஹஸ்பதி எல்லோரும் நலம் செய்பவர்களாக ஆகட்டும்.. மனதில் யோசித்துக் கொண்டே வந்தேன். புத்தகத்தினூடே புக்மார்க்-வைத்துச் செருகுவதற்காக இலவசமாகத் தந்த சுவாமிஜியின் நின்ற படம் பக்கங்களினூடே தெரிந்தது. என் ஆதர்ஷ புருஷரான சுவாமிஜியின் கண்கள் தீர்க்கமாக என்னை நோக்குவது போல் தெரிந்தது. இப்போது உற்சாக நடை போட்டேன்!

செவ்வாய், ஜனவரி 01, 2013

ஆதீனமாகியும் பழைய முரசொலியை மறக்காத அருணகிரியார்!


தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்: மதுரை ஆதினம்!

செய்தி:

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.
இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.
-------------------
என் கருத்து:

பெண்கள் எப்படி உடை உடுத்தினால் என்ன? அவர்கள் குறைந்த அளவு மானத்தை மறைக்கும் அளவுதான் உடையே போட்டுக்கொண்டு வெளியில் உலவ சுதந்திரம் இருக்கட்டுமே! கட்டுப்பாடு ஆணுக்குத்தான் இருக்க வேண்டும்! ஆன்மிகம் பேசும் மனிதர், உடலை துச்சமாக மதிக்க வேண்டும். உயிர் இருக்கும் வரைதான் உடலுக்கு மதிப்பு. உடலுக்கும் காயம், நோய், கிருமிகள் தாக்காதவரைதான் மதிப்பு! ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் பாடியது நினைவுக்கு வருகிறது. ரத்தமும் சீழும் சதையும் கொண்ட உடல்மீது இவ்வளவு பற்று வைப்பதா? என்று! நல்ல குழந்தைகளைப் பெற்று அடுத்த சந்ததியை உலகத்துக்குக் கொடுத்து, உலகம் ஒழுங்காக இயங்க இயற்கைக்கு ஒத்துழைப்பதே ஆண்-பெண்ணின் கடமை! காமத்தால் கண்டதையும் கண்டு மேய்வது- மனிதனுக்கு விதிக்கப்பட்ட தர்மம் அல்ல!
உண்மையில் சொல்லப்போனால், நம் மனத்தையும், நம் கட்டுப்பாட்டையும் சோதிக்கும் களம் இந்த உலகம். வீட்டில் பெண்குழந்தைகள் வளர்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். ஒரு சகோதரனாக, தகப்பனாக ஆண் தன் வீட்டுப் பெண்களின் வளர்ச்சியைக் காண்கிறான். அவர்கள் விரும்பிய உடைகளை, விரும்பிய உணவுகளை என்று வாங்கிக் கொடுக்கிறான் அல்லது அந்த சுதந்திரத்துக்கு சம்மதிக்கிறான். வீட்டின் அதே பார்வையை வெளியிலும் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அந்தப் பக்குவம் வருவதற்கு ஆண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதுதான் ஆன்மிகக் கடமையாக இருக்க வேண்டும். தவறுகளை ஆண் செய்துவிட்டு, பெண் மீது பழி போடுவது பாவம்; பாவம்! நீ உடை உடுத்துவது அப்படி, அதனால் தூண்டப் பெற்றேன் என்றால் தவறு செய்பவன் மனோபாவம்தான் தண்டிக்கப்பட வேண்டியதே தவிர, தூண்டுவதாகக் கூறப் படுபவர் இல்லை! கண்முன் பணம் நிறைந்து கிடக்கிறது. கையாடல் செய்யும் நபர்தான் தண்டிக்கப் படுபவரே தவிர, தவறு சூழ்நிலையில் அல்ல! இதை முதலில் ஆதினத்துக்கு உணர்த்த வேண்டும். நம் நாட்டில் இத்தகைய மனோநிலை ஆதி காலத்தில் இருந்து இல்லவே இல்லை! அதெல்லாம் பர்தா போட்டுக் கொண்டு பெண்களை கட்டுப் படுத்தி, அவர்களைக் குற்றவாளிகளுக்கும் ஆணாதிக்க நாடுகளில்தான்! நம் நாட்டில் பெண்ணுக்குப் பாதுகாப்பு ஆண் - ஒரு சகோதரனாக, ஒரு தகப்பனாக, கணவனாக, மகனாக, உறவினனாக! இந்த மனநிலையைத் தகர்த்தவை வெளிநாட்டு ஆணாதிக்க சமுதாய சிந்தனைகளே! மதுரை ஆதினத்துக்கு இந்த சிந்தனை வந்தது வருந்தத் தக்கது!

யலேய்... எதுக்குலே இந்த ஆர்ப்பாட்டம்லாம்?!


ஹலோ... வெங்கட்! 
சொல்லுங்க சார்...
வெங்கட் இரண்டாவது முறையா அதே உதவி...
என்ன சார்... சர்க்கரைதானே! 
ஆமாம்.
ஓகே சார் வரும்போது வாங்கிட்டு வந்துடறேன்!
- மணி 10. ஆவடியில் பஸ் ஏறி, அம்பத்தூர் தொ.பே. வந்து, அலுவலகத்துக்குள் நுழைந்த வெங்கட்.டின் கையில் 1 கிலோ சர்க்கரை பொட்டலம்!
அதற்கு உண்டான ரூ.36ஐக் கொடுத்துவிட்டு, ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். இரவு அலுவலக வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது எல்லா கடைகளும் அடைத்து விடுகிறார்கள். ஊரே நிசப்தமாக உறங்குகிறது. நான் எங்கே போய் அப்போது சர்க்கரையை வாங்க முடியும். காலை எழுந்தால், காபி பொடியை பில்டரில் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கி, காபி குடித்தால்தான் அடுத்த வேலை ஓடுகிறது. கூடவே 2 தமிழ், 2 ஆங்கிலம் என நாலைந்து செய்தித்தாள்களையும் வைத்துக் கொண்டு செய்திகளை மேய வேண்டியுள்ளது. இது மாற்ற முடியாத பழக்கமாகிவிட்டது.
இரண்டு மூன்று நாள்களாக சர்க்கரை டப்பா காலியாகி பல்லிளித்தது. சட்டையைப் போட்டுக்கொண்டு, வீட்டைப் பூட்டி, செல்போனை கையில் எடுத்து, ஒரு துணிப் பையையும் இடுக்கியபடி, தரைத்தளமாக இருந்தாலும் கீழே ஓரிரண்டு படிகள் இறங்கி தெருவில் இறங்கி, தெரு முக்கில் திருப்பத்தில் இருக்கும் கடைக்குப் போய், சர்க்கரை, தோசை மாவு, சேமியா, ரவை, ஏதேனும் காய்கறி என இந்த இத்யாதிகளை வாங்குவதற்குள்... அப்பாடா என்றாகிவிடும். கூட்டம் இருந்தால் ஒவ்வொருவருக்காக பொருளை எடுத்துக் கொடுத்து நம் முறை வருவதற்குள்... கால் மணியில் இருந்து அரை மணி கடந்துவிடும். இதற்கு சோம்பல்பட்டே... காலை நேரம் கடைக்குப் போக பெரும் சோம்பல்.!
வேறு வழி..! அடடே! கல்கண்டு இருக்கிறதே! அதைப் போட்டு காப்பி போட்டுக் குடித்து காலம் போக்கியாச்சு... சரி! காலை நேரம் அலுவலகம் போகும் போதாவது கடையில் வாங்கிக் கொண்டு போகணும்... நினைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினால்... அது நேரே அலுவலகத்தில்தான் போய் நிற்கிறது. ஹெல்மெட் கழற்ற சோம்பல்! சரி... மாலை நேரம் திரும்பும் போது வாங்கிக் கொள்ளலாம் என்றால்... அலுவலகத்தில் நேரம் போவது தெரியாமல்... பதினொன்றும் பன்னிரண்டும் ஆகிவிடுகிறது!
இந்த நிலையில்தான் இரவுப் பணிக்கு வரும் சக பணியாள நண்பர் வெங்கட்டிடம் வாங்கி வரச் சொல்லி, அவரை தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வு...
சர்க்கரையும் எடுத்துக் கொண்டு, விடைபெற்று மணியைப் பார்த்தால் 11.30. அப்படியே வண்டியை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தால்... மக்கள் நடமாட்டம்! ஆச்சரியத்தில் யோசித்தால்.. அட ஆங்கிலப் புத்தாண்டு! அதற்குத்தானா இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம். தெருவெங்கும் வெடியோசை. பாடி சாலையில் கடைகளில் இன்னும் நிறுத்தப் படாத மின்சார வெளிச்சம்! அப்படியே வில்லிவாக்கம் வந்தால்... சூப்பர் மார்க்கெட் கடைகளும் ஓரிரண்டு திறந்து வைத்து வியாபாரம் ஜரூர்... எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டமாம்!
தீபாவளி என்றால் 10 மணிக்கு மேல் வெடிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் நீதித் துறையும், ஜட்ஜ் பெருமக்களும், செயல்படுத்தும் காவல்துறையும் ஆங்கிலப் புத்தாண்டு என்று அலறிக் கொண்டு தெருவெல்லாம் டாஸ்மாக் போதையில் தள்ளாடி இரு சக்கர வாகனங்களில் மூவராய் பயணிக்கும் இளசுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டு, இந்த ஒரு நாளைக்கு மட்டும் கறுப்புத் துணியை கண்களில் கட்டிக் கொண்டு மூடிவிடுவது ஏன்?
எல்லாம் இந்த மேல்நாட்டுக் கல்வி செய்த மாயம்தானே!? இந்த மாயம் நடக்கும் என்று திட்டமிட்டுத்தானே இருநூறு வருடங்களுக்கு முன்னர் மெக்காலே சொல்லிச் சென்றான்!

கண் பேசும் வார்த்தை புரிகிறதே!


கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. 
அது அழகிய கவிதை!
கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!
ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்!
எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்...!
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாதஇதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு.
சிறுவயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுப் பூர்வமாகப் படித்ததாலோ என்னவோ... கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ... பெண்ணின் அழகு முகமோ... எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு... அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது... என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!?
அப்படி ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுவார் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும்.
மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்... ஏன் ஸ்ரீராம்... இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?
நான் சொன்னேன்... நீங்க படம் வரைவீங்களே... ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்... ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..!
இந்த பதிலில் இரண்டு வெளிப்படும். ஒன்று என் உளக்கிடக்கை. இரண்டு அவருக்கான பாராட்டு!
அவர் முறுவலிப்பார். ம்... நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன்.
இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம்.
இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் - அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே!
கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது!
கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது வேறு எங்கோ வெறித்துக் கொண்டோ பேசுபவரிடம் நான் பேச்சைத் தொடர்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?! அட... இப்போதுதான் புரிகிறது... கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறார்கள் என்று! கண்களைத் திறந்து கொண்டு பேசினால் கேட்பவர் கண் திறந்துவிடுவாரே!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix