சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், மே 01, 2014

ஸ்வதர்மம்!


கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்
- என்றொரு வெண்பாவை படித்த நினைவு. சான்றோரின் சினம் எத்தகையது என்பதை ஔவை இந்தப் பாட்டில் சொல்லியிருப்பதாக பாடம் படித்த நினைவு.
கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் அதே பழைய நிலையில் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர்களின் சினமும் அதனால் விளையும் பிளவும்.
ஆனால், பொன்னை வெட்டியோ உருக்கியோ பிளந்தால் எப்படி மீண்டும் அது நல்லதொரு ஆபரணமாக அணிகலனாக அல்லது பொன் கட்டியாகவோ உருமாறுமோ அதுபோன்றது சான்றோரின் சினம். அந்த சினமும் கூட, தண்ணீரில் வேகமாக விர் என்று எய்யப் படும் அம்பானது தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பாயும். அப்போது இரண்டாகப் பிரியும் தண்ணீர், அம்பு போனபின்னே மீண்டும் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.
- என்ன அருமையான உவமை!
உவமைகள் மட்டும் இல்லாதிருந்தால், நம் வாழ்வில் சுவையேயிராது. கானல் நீராகக் கரைந்து போகும் கண நேர வாழ்க்கையில், வாழ்வீன் முழுமையை ரசித்து அனுபவிக்க உவமைகள் எப்படிக் கைகொடுக்கின்றன.
பார்க்கும் ஒரு பொருளை சொல்ல வரும் பொருளோடு பொருத்திப் புரிய வைக்க முயலுதல் உவமையின் பலன்!
அதுபோன்றதே, சிறு கதைகள் உதாரணக் கதைகள் வழியே விளக்குதல்....
சான்றோர் சினத்தைச் சொல்ல வந்துவிட்டு, சான்றோர் சினத்தின் இயல்பைக் கூறிவிட்டு, சான்றோர் குணத்தைக் கூறாது விட்டால்...? முழுமை பெறாதல்லவா?!!
ஸ்ரீராமகிருஷ்ணர் முதற்கொண்டு பலரும் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு கதை...
துறவி ஒருவர்... ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேலிருந்து நீரில் தேள் ஒன்று தவறி விழுந்தது.
குளித்துக் கொண்டிருந்த துறவி, நீரில் விழுந்த தேளை கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார். சாகக் கிடக்கும் தன்னைக் கைதூக்கிக் காப்பாற்றுகிறார் இந்தத் துறவி என்ற ஞானம் அந்தத் தேளுக்கு இல்லை. வழக்கம்போல் தன் இயல்பான குணத்தைக் காட்டி, துறவியின் கையில் நறுக்கென்று கொட்டியது தேள்.
வலியால் துடித்த துறவி, தவறிப்போய் தேளை நீரில் தவறவிட்டார். இருப்பினும் தன் இயல்பு குணமான கருணையைக் கைக் கொண்டு, மீண்டும் கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார்... தேளோ மறுபடியும் கொட்டியது.
மீண்டும் அதே கதை. இதனைக் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், துறவியிடம் கேட்டார்...
துறவியாரே... தேள்தான் வலி ஏற்படுத்தும் விதமாய்க் கொட்டுகிறதே… நீங்கள் ஏன் அதைத் திரும்பத் திரும்ப கையில் எடுத்து கொட்டுப் படுகிறீர்கள்.
அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்றார்!
அதற்கு துறவி கூறினார்...
“கொட்டுவது தேளின் குணம்; துடிக்கும் உயிரைக் காப்பது மனிதனின் குணம். அதன் இயல்பை அது விடாத போது என் இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்?”. என்றார்.
இங்கே துறவி கூறியதே, ஸ்வதர்மம் என்ற பொருளில் முன்னோர் உரைத்தனர்.
இது நம் ஸ்வதர்மம் என்று நாம் கைக்கொண்ட பின், நம் இயல்பை விட்டு நாம் மீறலாமோ?!
(இதே விளக்கமாக ஸ்ரீவைஷ்ணவம் காட்டும் கதை ஒன்றும் கூரத்தாழ்வான் - கிருமிகண்ட சோழன் விஷயத்தில் உண்டு.)
என் வாழ்நாளில்... இந்தக் கதையில் கொட்டிய தேளைப் போல் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்... பதிலுக்குக் கொட்டாமல் தூக்கிக் கரையேற்ற முற்பட்டதால், தேள்களெல்லாம் காப்பாற்றுபவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பை வெளிப்படுத்துகின்றன. பதிலுக்குக் கொட்டியிருந்தால், முதிர்ச்சி அடைந்த மனிதன் என்றும், ராஜ தந்திரி என்றும் சாணக்கியன் என்றும் பட்டம் கிடைத்திருக்கும். நம் ஸ்வதர்மம் காத்த பலன் சின்னப் பையன் என்றும், அப்பாவி என்றும்தான் பட்டம் கொடுக்கிறது இந்த உலகம்!

கி.வா.ஜ. நினைவில்...


என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக்  குறுகிய காலத்திலேயே சென்னை வாழ்க்கை சில பல படிப்பினைகளைத் தந்தது என்றாலும், மூத்த இதழாளர்களின் வழிகாட்டலும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்தது பெரும் பேறு.
ஒரு சிலரை பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில்தான்  படித்திருந்தேன் என்றாலும், அவர்கள் தொடர்புடையவர்கள் அல்லது சீடர் குழாமை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதும் பெரும் பேறுதான்.
இலக்கிய யாகம் வளர்த்த தென்காசியில் ரசிகமணியின் பெயரனார் தீப.நடராஜன் உள்ளிட்டோருடன் ஒரு தொடர்பு இருந்ததென்றால், நம் ஊர்க்காரர் என்று சொல்லிச் சொல்லியே உரம் ஏற்றப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கமும் ஏ.என்.சிவராமனும் பத்திரிகையியல் தாகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இருந்தாலும், தமிழ்த் தாத்தா என்று உ.வே.சா. உரம் ஏறிய அளவுக்கு அவர் சீடர் பெயர் மனத்தில் பதியாமல் போனது. பள்ளிக்கூடப் புத்தகத்தில் அவர் பெயர் அழுத்தமாய் ஏறாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும் ஓரளவு வயது வளர்ந்த நிலையில், சிற்சில ஏடுகள் அந்தப் பெயரைப் பளிச்சிட்டுக் காட்டின.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன் கலைமகள் காரியாலயத்தில் காலடி வைத்த பிறகுதான் கி.வா.ஜ., என்ற அறிஞரின் பெருமையும் திறமையும் எனக்குள் பிடிபட்டது. அதுவரை வெறுமனே கி.வா.ஜ. என்றால் அவரின் சிலேடைகள் என்று மட்டுமே பதியப் பட்டிருந்தது. ஆனால், தமிழ் உலகுக்கு அவர் அளித்த கொடைகளைப் பார்க்கையில், எட்டவியலாத் தொலைவுதான் என்று தோன்றியது.
மஞ்சரி இதழாசிரியராக இருந்த லெமன் என்ற லெட்சுமணன் ஐயாதான், அப்போது உடன் இருந்த எனக்கு கி.வா.ஜ.வின் இயல்புகள், அவர் தமிழறிஞர்கள் எழுத்தாளர்களிடம் நடந்துகொண்ட விதம், அவர்களுடனான உரையாடல்கள் என பலவற்றைச் சுவையாகச் சொல்லி மகிழ்ந்தார். கலைமகள், கண்ணன் இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு.
கலைமகள் அலுவலகத்தில் நான் பணியில் இருந்த சுமார் ஐந்து வருடங்கள், அந்த நூலகத்தில் இருந்த பழைய கலைமகள் இதழ்களில் இருந்து அவருடைய இதழியல் நுணுக்கங்களை உணர்ந்து கொள்ள முற்பட்டிருக்கிறேன். அவருடைய கதைகள், இலக்கியக் கட்டுரைகள் என்னைக் கவர்ந்திருந்தாலும், ஏதோ ஓரளவு தமிழ் படித்திருந்த எனக்கு அவரின் விடையவன் பதில்களே பெரிதும் கவனத்தை ஈர்த்து, தமிழ் இலக்கணத்தைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தியிருந்தது. வாசகர்களின் இலக்கண, இலக்கிய, தமிழ்ச் சொல்லாடல்களின் ஐயங்களுக்கு அவர் அளித்த விடைகள் அவ்வளவு அற்புதமானவை.
கி.வா.ஜ.வின் இலக்கியக் கட்டுரைகளில் அவர் சங்க இலக்கியப் பாடல்களுக்கு அளித்திருக்கும் விளக்கமே அலாதியானதுதான். படிக்கத் தொடங்கினால் தமிழ் நடை தெளிந்த நீரோடை போல தட்டுத் தடங்கின்றி எங்கும் தேங்காமல் சென்று கொண்டேயிருக்கும்.

கி.வா.ஜ. பிறந்த நாள் நினைவுக் கட்டுரை : மரம் அனையான்

ஒரு நாள் ஒளவைப் பிராட்டியார், ஒரு வீட்டுக்குப் போயிருந் தார். அங்கே ஒரு பெண்ணின் அழுகைக் குரல் கேட்டுக் கொண் டிருந்தது. அந்தப் பெண்ணின் கணவன், அவளை அடித்துக் கொண்டிருந்தான். ஒளவையார் உள்ளே எட்டிப் பார்த்தார். அந்தப் பெண் சிறந்த அழகியாக இருந்தாள்.

""அட பாவி! இவ்வளவு அழகான மனைவியைப் போட்டு அடிக் கிறானே? அவன் மனிதன்தானா? அல்லது மரமா? இவனுடைய கைகள் கட்டைகளைப் போல் இருக் கின்றன. அவற்றால் இவளைப் போட்டு அடிக்கிறானே?'' என்று ஒளவைப் பிராட்டிக்கு இரக்கம் உண்டாயிற்று.

""ஏன் அப்பா, இந்த அழகியை அடிக்கிறாய்?'' என்று கேட்டாள். ""இவளை அடிக்கும் உரிமை எனக்கு உண்டு. இவள் நான் சொன்னபடி செய்யவில்லை! இவள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன?'' என்றான். ""நீ என்ன சொன்னாய், இவள் அதைச் செய்யவில்லை?'' என்று கேட்டாள் ஒளவை. ""இவள் நினைத்துக் கொண்டால் கோயிலுக்குப் போய்விடுகிறாள். அங்கே சாமியிடம் வரம் கேட்கப் போகிறாளோ? வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் சாமி தரிசனம் என்ன வேண்டிக் கிடக்கிறது?''

""கோயிலுக்குப் போவது நல்ல காரியந்தானே! பெரியவர்கள் எல்லாம் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று சொல்லி யிருக்கிறார்களே & இறைவன் திரு வருள் கிடைத்தால் எல்லா நன்மை களும் உண்டாகும்'' என்றாள் ஒளவைப் பாட்டி. ""அதெல்லாம் உன்னைப் போன்ற கிழவிகளுக்கு ஏற்ற காரியம். இவள் கோயிலுக்குப் போனால் பல வீட்டுப் பிள்ளைகள் இவளைக் கண்டு கண் அடிப் பார்கள். அது முறையாகுமா? அதனால்தான் இவளைக் கோயிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறேன்'' என்றான் அவன்.

அவன் நல்ல வழியில் நடப்பதாகத் தெரியவில்லை. ஒளவைப் பிராட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது. யாரை நோவது? ""இந்த அழகான பெண்ணுக்கு மரத்தைப் போன்றவனைக் கணவ னாகும்படி தலையில் எழுதிய பிர மனைத்தான் கோபிக்கவேண்டும்'' என்று எண்ணினாள். அந்தப் பிராட்டியினுடைய கருத்து ஒரு பாடலாக உருவெடுத்தது.

அற்றதலை போக அறாத்தலை
நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ & வற்றல்
மரம்அனை யானுக்கிந்த மானை
வகுத்திட்ட
பிரமனையான் காணப் பெறின்!
பிரமனுக்கு ஆதியில் ஐந்து தலைகள் இருந்தன. சிவபெரு மானுக்கும் ஐந்து தலைகள் உண்டு. அதனால், "சிவனும் நானும் ஒன்று' என்ற கர்வம் பிரமனுக்கு உண்டா யிற்று. அதனை அறிந்த சிவ பெருமான் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அந்தத் தலையின் கபாலத்தைக் கையில் ஏந்திக் கொண்டார். அதனால் அவருக்குக் கபாலி என்ற பேர் வந்தது. ஒளவைப்பிராட்டி இந்த வரலாற்றை எண்ணிப் பாடினார்.
சிவபெருமான் கிள்ளிய ஒரு தலை போக, மற்ற நான்கினையும், கையால் இறுகப்பற்றிப் பறிக்க மாட்டேனோ? உயிரற்ற கட்டை போன்ற இந்தக் கொடியவனுக்கு, மானைப் போன்ற மென்மை உடையவளை மனைவியாக அமைத்த பிரமனை நான் கண்டால், "அறாத்தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ?' என்று பின் முன்னாகக் கூட்டிப் பொருள் காணவேண்டும்.
இந்தப் பாடலைக் கேட்ட பிறகாவது அந்த மரம் அனையான் திருந்தினானோ இல்லையோ, யார் அறிவார்?

கலைமகளில் வெளியான என் முதல் முத்திரைக் கதை: நிஜமனம்

2001 கலைமகள் தீபாவளி மலரில் நான் எழுதிய கதை.
இந்தக் கதையின் பின்னணியில் ஓர் உண்மைச் சம்பவமே உள்ளது. அப்படி நான் பார்த்து அனுபவித்த ஒரு சம்பவத்தை பெயர்களை மட்டும் மாற்றி, ஒரு கதையாக்கினேன். கலைமகளில் சிறுகதைகள் சிலவற்றை அவ்வப்போது எழுதியிருக்கிறேன். ஆனால், இதுதான் கலைமகளுக்காக நான் எழுதிய முதல் சிறுகதை. இந்தக் கதையில் வரும் காதர் என்ற பாத்திரம் இப்போது எப்படி இருக்கிறானோ தெரியாது! கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தபோது, ஏனோ இதை இப்போது இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது.
நம் ஒவ்வொருவருக்கும் உலக நிகழ்வுகளைப் பார்த்து கொதிப்படைந்த ஒரு மனம்  இருக்கும். ஆனால் அதையும் மீறி, நம் மண்ணுக்கே உரிய இயல்புடன் ஒரு கருணை மனமும் இருக்கும். இதை என்னில் நான் உணர்ந்து எழுதிய உண்மைச் சம்பவம் இது.
=======================
நிஜ மனம்
-----------------
செப்.11. பயங்கரவாதத்தின் கொடூரத்தைப் பற்றி அலறிக் கொண்டிருந்தது உலகம். 'எப்பேர்ப்பட்ட அமெரிக்காவே இப்படி ஆடிப் போயிடுச்சே!” குரல்கள் என் காதுகளில் ரீங்காரமிட்டன. டி.வி. முன் உட்கார்ந்தேன். தரைமட்டமாகிவிட்ட கட்டிடங்கள், அதிக உஷ்ணத்தை என் மனதில் ஏற்றிக் கொண்டிருந்தது.
மற்ற எல்லோரையும் போலவே எனக்கும் அந்த மத வெறியர்கள் மீது கோபம் கோபமாய் வந்தது. காஷ்மீர் தொடங்கி இஸ்லாமிய பயங்கரவாதத்தின் வலியை மும்பையிலும் கோவையிலும் நெல்லையிலும் என்று வரிசையாகக் கண்டுவிட்டதால், என் மனம் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது....
குல்லாவையும் குறுந்தாடியையும் முட்டுக்கு மேல் ஏற்றிக் கட்டிய கைலியையும் கண்டபோதெல்லாம் என் கண்கள் சந்தேகப் பார்வை வீசியது...
நாட்கள் கழிந்தன. சென்னையிலிருக்கும் என்னைப் பார்க்க அப்பா வந்திருந்தார். வந்த கையோடு மறுநாளே ஊருக்குக் கிளம்பிவிட்டார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊர் வெறிச்சோடிக் கிடந்தாலும் பஸ் ஸ்டாண்ட் மட்டும் பரபரப்பாக இருந்தது. இரவு மணி எட்டு. அப்பாவை செங்கோட்டை பஸ்ஸில் ஏற்றிவிட்டு அவருக்கு வசதியான சீட்டாகப் பார்த்து உட்கார வைத்தேன். புழுக்கமாக இருந்தது. கீழே இறங்கி நின்றேன். பஸ் கிளம்பட்டும் என்று காத்திருந்தேன்.
அரக்கப்பறக்க மூன்று சிறுவர்கள் அந்த பஸ்ஸைப் பார்த்து ஓடி வந்தார்கள்.
“சார் இந்த பஸ் தென்காசி போகுமா?” என்ற சிறுவர்களின் கேள்விக்கு “ம்... போகும்... போகும்... ஏறிக்கிங்க..” என்றார் கண்டக்டர்.
வேகவேகமாக ஏறிய அம்மூவரில் ஒருவன், அப்பாவைப் பார்த்துக் கேட்டான்... “தாத்தா... நீங்க தென்காசி வரைக்கும் போறீங்களா?”
அப்பா ஒரு ‘உம்’ போட்டார்.
“டேய் காதர், இந்த சீட்ல உட்காருடா...” என்றான் அவன்.
அப்பா சீட்டுக்கு அடுத்த சீட்டில் பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுவன் காதர் வந்து உட்கார்ந்தான்.
காதரின் சூட்கேஸை கவனமாக மேலே வைத்தான் ஒருவன். அதற்குள் இன்னொருவன் அதை எடுத்துக் கொண்டே அப்பாவை நோக்கி, “தாத்தா இந்த சூட்கேஸை ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்குங்க. இந்தப் பையன் தூங்கிடுவான். யாராவது எடுத்துட்டுப் போயிட்டா கஷ்டம்..” என்று சொல்லியவாறே, அப்பாவின் பெட்டியை ஒட்டி, அதை வைத்தான்.
கொஞ்சம் விவரமாகத் தெரிந்த ஒரு பையன் கண்டக்டரிடம் போய் டிக்கெட் வாங்கி வந்தான். வாங்கிய டிக்கெட்டை காதரிடம் கொடுக்காமல், நேரே அப்பாவிடம் கொடுத்தான். “தாத்தா இதை நீங்களே வெச்சிருங்க.. இவன் தொலைச்சிடுவான்” என்றான்.
அப்பா மறுப்பேதும் சொல்லவில்லை.
வேகமாக பஸ்ஸை விட்டு இறங்கிய ஒருவன், கடையை நோக்கி ஓடினான். அடுத்த ஐந்து நிமிடத்தில் கையில் உணவுப் பொட்டலத்துடன் திரும்பினான். காதரிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
கீழே நின்று கொண்டு இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்... “அப்பா... என்னவாம்?”
அப்பாவிற்கு இயல்பிலேயே எல்லோரிடமும் சிநேகமாய்ப் பழகும் சுபாவம். அதிலும் அவரிடம் அறிமுகமாகிற யாராயிருந்தாலும் சரி... “எலேய்.. நீ அவன் மகன்தானலே...” என்று தனக்குத் தெரிந்தவரைப் போல் கேட்பார். அவ்வாறு காட்டிக் கொள்வதில் அவருக்கு அவ்வளவு அலாதிப் பிரியம்.
இப்பவும் அப்படித்தான்... “ஒண்ணுமில்லடா... சம்பங்குளம் சாய்பு பையன்!” என்றார். காதர் என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
காதரைப் பற்றி தெரிந்து கொள்ள என் மனம் அலைபாய்ந்தது. இந்தப் பையன் ஏன் தனியாக ஊருக்குப் போகணும்? கூட வந்திருக்கும் பசங்க யார்? யோசித்தேன்.
பஸ் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். இரண்டு சிறுவர்களும் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினர். நான் மெதுவாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். ஒருவன் பெயர் யூசுப் என்றும், மற்றவன் மதன் என்றும் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. நான் காதரைப் பற்றி விசாரித்தேன்...
யூசுப் சொன்னான்... “அண்ணே... காதர் பயலோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டிங்கண்ணே.! மூத்தவங்க பையந்தான் காதரு. அந்த ஆளு... அதான் காதரோட அப்பா, இவன் அம்மாவ வூட்டவுட்டு தொரத்திட்டாரு. அப்பால அந்த அம்மா செத்துட்டாங்க... அதுக்கப்புறம் காதர் அவன் சித்திகிட்டதான் இருந்தான். அவுங்க சரியான ராட்சசி. ரொம்ப கொடுமைப்படுத்துவாங்க!”
மதன் இடைமறித்தான்.. “பக்கத்து வூட்டுக்காரங்கதான் பாவப்பட்டு எழும்பூர்ல இருக்கற குழந்தைங்க ஆஸ்பத்திரியில வேலைக்கி சேத்து விட்டாங்க... அவன் சித்தியும் அங்கதான் வேலை பாக்குது. காதர் வேலைக்கி சேந்து பத்து நாள்தான் ஆச்சி. அதுக்குள்ள நீ இங்க வேல பாக்கக்கூடாதுன்னு, சித்தி அவனைத் தொரத்தி விட்டுட்டுது. பாவம்ணே காதரு. அழுதுக்கிட்டிருந்தான். நாங்கதான் அவனைக் கூட்டியாந்து அவனோட தாத்தா ஊருக்கு அனுப்பிச்சிடலாம்னு நெனச்சி இங்க பஸ் ஏத்தி விட வந்தோம்” என்றான்.
“சரி.. காதருக்கு அவன் தாத்தா ஊருக்குப் போகிற வழி தெரியுமா?” நான் கேட்டேன்.
அதுவரை எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காதர் என்னைப் பார்த்து “சம்பங்குளம் போய்ட்டேன்னா எனக்கு தாத்தா வூட்டுக்குப் போகிற வழி தெரியும்” என்றான்.
“அதுசரி, சம்பங்குளம் தென்காசிலேர்ந்து 25 கிலோ மீட்டருக்கும் மேல இருக்குமே... அதுவும் பஸ் வேற அதிகம் கிடையாதே” என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மதனும் யூசுப்பும் பதறிப் போனார்கள். “தாத்தா, இவன எப்படியாச்சும் சம்பங்குளம் பஸ்ஸில் ஏத்தி விட்டுடுங்க.. ப்ளீஸ்...” கெஞ்சினார்கள். அவர்களின் பரிதவிப்பு என் மனதை என்னவோ செய்தது.
“எலேய்... எனக்கு தென்காசி பஸ் ஸ்டாண்ட் டைம் கீப்பரை நல்லாத் தெரியும்லே. அவன்ட பத்திரமா ஏத்தி விடச் சொல்றேன்.. ஒண்ணும் கவலைப் படாதீங்க” தேற்றிக் கொண்டிருந்தார் அப்பா.
நான் கீழிருந்தபடியே.. காதரின் முதுகைத் தட்டிக் கொடுத்து “பாத்து ஜாக்கிரதையாப் போ.. வழியில் எங்கயும் இறங்கினா தாத்தாவோட சேந்துதான் இறங்கணும். என்ன!” என்றேன் கனத்த இதயத்துடன்!
பஸ் கிளம்பியது. யூசுப்பும் மதனும் டாட்டா காட்டினார்கள். “காதரை ஜாக்கிரதையா பஸ்ஸில் ஏத்தி விட்டுடுங்கோ” அப்பாவிடம் கூறினேன்.
அன்று இரவு கனவில் காதர் அடிக்கடி வந்து போனான். மறு நாள் இரவு அப்பாவுக்கு போன் செய்தேன். பிரயாணம் நல்லபடியாக இருந்ததா, வண்டி சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்ததா... பாவம் அப்பா என்ன செய்தாரோ... அப்பாவிடம் கேட்கவேண்டும்... வழக்கம்போல் மனதில் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. மறுமுனையில் அப்பா போனை எடுத்தார். எடுத்த வேகத்தில் அப்பாவிடம் கேட்டேன்... “அப்பா.. காதரை சம்பங்குளம் பஸ்ஸில் ஏத்தி விட்டேளா?”
===================

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு நாளில்....


இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான்.
நம் நாட்டில் நடைபெற்ற சுதந்திர வரலாற்றுப் போர் நிகழ்ச்சிகளை நினைவுகூர்தல் என்பது, நமது அடுத்த சந்ததிக்கான தேசப் பற்றை மனதில் பதியச் செய்வது. நம் நாடு எத்தகைய இன்னல்களைத் தாண்டி, இந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை உணரச் செய்வது.
இன்று இந்தச் செய்தியை இணையத்தில் பதிவு செய்திருந்தோம்.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு
By அம்பிகாபதி, வேதாரண்யம்
First Published : 30 April 2014 10:34 AM IST
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வின் 85வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து, திருச்சியில் இருந்து சென்ற வேதாரண்யம் உப்புசத்தியாக்கிரகக் குழுவினர் வேதாரண்யம் கடல் பகுதியில் உப்பு அள்ளி, அன்றைய சுதந்திரப் போராட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.
ஆங்கிலேயர் கடந்த 1930 ஆம் ஆண்டில் இந்தியர்கள் கடல் பகுதியில் உப்பு அள்ள விதித்த கட்டுப்பாட்டுத் தடையை எதிர்த்து காந்திஜி தலைமையில் தண்டி யாத்திரை நடைபெற்றது. அதுபோல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு யாத்திரை திருச்சியில்  இருந்து வேதாரண்யம் வரை நடைபெற்றது.
இந்த நிகழ்வின் 85 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக குழுவின் தலைவர் செல்வகணபதி, சர்தார் வேதரத்தினத்தின் பெயரன் வேதரத்தினம் உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், குருகுலம் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், காந்தியவாதிகள், காந்தியவாதி சசிபெருமாள் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- மேற்கண்ட இந்தச் செய்திக்கான கருத்தாக ஒருவர் இவ்வாறு பதிவு செய்திருந்தார்....
//வேலை வெட்டியில்லாத வெட்டிப் பயலுகளுக்கு வேற வேலையைச் சொல்லுங்கள் பார்ப்போம். ஏன், காந்தி ஒத்துழையாமை இயக்கம் கூட தான் நடத்தினார், அதையும் நடத்துங்களேன்.//
- இந்தக் கருத்தினைப் படித்த எனக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியக் கட்டமான உப்புச் சத்தியாக் கிரக நிகழ்வின் பின்னணி  நெஞ்சில் நிழலாடியது.
உப்பு சத்தியாகிரகம் நடந்து 85 ஆண்டுகளில் இப்போது இந்தியா இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால், அதன் மகத்துவம் புரியும்.
நமது மத்திய அரசு சாதாரண உப்பு விற்பதற்குத் தடை விதித்தது. பன்னாட்டு நிறுவனங்கள், இப்போதெல்லாம் சாதாரண சில்லரை விற்பனைத் துறையில்கூட நுழையத் தொடங்கியாயிற்று. பன்னாட்டு நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டுவதற்கும் அரசுக்கு ஒரு வகையில் பங்கு கிடைக்கவும் இன்றைய மத்திய அரசு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது. இதற்காக அரசு தங்கள் கைவசம் உள்ள விளம்பரத் துறையின் மூலம் பலத்த பிரசாரம் ஒன்றைச் செய்து வந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, அயோடின் கலந்த உப்பின் அவசியம் பற்றி பிரசாரம் செய்து, அதைத் தவிர வேறு சாதாரண உப்பு வாங்கி சாப்பிட்டால், கைகால் வீக்கம் வரும், உடல் வலு குன்றும் என்றெல்லாம் பயமுறுத்தப் பட்டு வருகிறது.
அரசின் இந்த விளம்பர உத்தியால் பாதிக்கப்பட்டது சாதாரண உப்பு வியாபாரிகள்தான்.
சாதாரண உப்பு தயாரிக்க எந்த வித மூலதனமும் தேவையில்லை. அயோடின் உப்பு தயார் செய்ய மூலதனம் வேண்டும். அதற்கு அந்த ஏழை உப்பு உற்பத்தியாளர்கள் எங்கே போவார்கள். தூத்துக்குடியில் சென்று பார்த்தால், இவர்களின் வாழ்க்கைத் தரமும் நிலையும் நமக்குப் புரியவரும்.
அரசின் இந்த முடிவுக்குப்  பின்னர் சாதாரண உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்க்கை நிலை கடினமாகத்தான் போனது. பொதுமக்களாகிய நம்மை எடுத்துக் கொண்டால்கூட முன்பெல்லாம் உப்பு வாங்க ரூ.2 முதல் ரூ.5 வரை செலவு செய்தோம். 20 வருடங்களுக்கு முன்னர் என் கிராமத்தில் பெரிய உப்பு மூட்டையை சைக்கிளில் வைத்துக் கொண்டு வீதிகளில் சுற்றி வரும் வியாபாரியிடம் ஒரு படி (பக்கா) ரூ.2க்கும் 3க்கும் வாங்கியதும் உண்டு. ஆனால், இப்போது அதற்குப் பதிலாக ரூ.15/- முதல் ரூ.20 வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச் சென்று 67 ஆண்டுகள் ஆகியும், நமது அடிமைத்தனம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. உப்புக்கு வரி விதித்ததற்காக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில், நமது அரசே, நம் நாட்டின் சாதாரண உப்பை விற்கத் தடை விதித்தது. அறிவுஜீவிகள் சிலரோ அயோடின் கலந்த உப்பையே விற்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
அயோடின் உப்பு சாப்பிடுவதால் மட்டுமே குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாகும் என்கிறது அரசுத் தரப்பு. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக சாதாரண உப்பைச் சாப்பிட்ட நமது முன்னோர்கள் புத்திக் குறைபாடுடையவர்களாக, மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவா இருந்தார்கள்?
உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் தைராய்ட் நோய் வரும் என்றது அரசு. மேலும் அதிகமாக உடலில் அயோடின் சத்து இருந்தாலும் பலதரப்பட்ட நோய்கள் வரத்தான் செய்கின்றன. அயோடின் மனிதனுக்கு மிகவும் அவசியம் என்று அரசுத் தரப்பிலிருந்து எந்த நிரூபணமும் தரப்படவில்லை! மருத்துவம் நன்கு அறிந்திவர்கள், நாம் தினமும் உண்ணும் உணவிலிருந்தே ஒரு மனிதனின் உடலுக்குத் தேவையான அயோடின் சத்து கிடைக்கிறது என்கிறார்கள்.
1920 இல் முதலில் அமெரிக்கா அயோடின் கலந்த உப்பைத் தயார் செய்தது. 1950 இல் அந்த நாட்டுக் கம்பெனிகளின் கவனம் சீனா, மற்றும் இந்தியாவின் மீது திரும்பியது. அயோடின் உப்பு இல்லாமல் உண்பதால் உலகமே ஆபத்தை நோக்கிச் செல்கிறது என்று பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகியவையும் கைகோத்தன.
1997 இல் நமது நாட்டில் முதலில் சாதாரண உப்பு விற்க தடை வந்தது. அந்த நேரத்தில் சிலர் அயோடின் உப்பை பயன்படுத்தத் துவங்கினார்கள். முதலில் இதை 71% மக்கள் வாங்கத் தொடங்கி நாளடைவில் அது குறைந்து அதிகபட்சமாக 22% பேர்தான் அந்த உப்பை பயன்படுத்தினர். வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசு, சாதாரண உப்பை விற்கும் தடையை நீக்கி, அதை எல்லோரும் பயன்படுத்தலாம் என்ற நடைமுறையை மீண்டும் அமலுக்குக் கொண்டு வந்தது. ஆனால் அது சிறிது நாட்களிலேயே வந்த வழி போனது. சாதாரண உப்பு விற்கும் திட்டத்திற்கு தடை விதித்தது ஐ.மு.கூட்டணி அரசு.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix