சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், ஜனவரி 18, 2016

வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்

பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!
ஸ்ரீரங்கத்து ராஜா ரங்கராஜன். குடிமக்கள் எல்லாம் அவனை அரசனாகவே கருதி பணிவிடை செய்ததுண்டு. அவன் குடிகொண்ட கோவில், அவனது அரண்மனை. நம் தென்னகத்து ராஜாக்கள் எல்லாம் தனக்கும் தன் வசதிக்காகவும் அரண்மனைகளைக் கட்டிக் கொண்டதைவிட அந்த அந்த ஊரில் ஆட்சி புரியும் ஆண்டவனுக்கே அரண்மனைகள் போல் ஆலயங்களைக் கட்டிக் கொடுத்தார்கள்.
இப்படியாக பாலாற்றின் கரையினிலே கச்சிப் பதியை ஆளும் அரசனான வரதராஜன் தன் குடிமக்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், விழாக் கொண்டாட்டத்தின் மூலம் மக்களை ஒன்று கூட்டி, மகிழ்ச்சியடையச் செய்யவும்... எத்தனை தொலைவு கடந்து எழுந்தருள்கிறான்.
எவருக்கும் உள்ளர்த்தமும் காரணமும் புரியாத எழுந்தருளல்தான் இது!
கொட்டும் பனி, நடுக்கும் குளிர், கரடுமுரடு பாதை, பாலாற்றின் மணல்வெளி, அச்ச இரவு... எல்லாம் கடந்து, அவன் எழுந்தருளும் காரணம் யாருக்கும் தெரியாது! கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவு. அவனடியார் குழாம் அவனை எழுந்தருளச் செய்துகொண்டு, அவன் நாமம் பாடி, பஜனை பாடல்கள் என உற்சாகம் மிகக் கொண்டு வரும் அழகே தனி!
இந்த நாகரிக யுகத்திலும் இவ்வளவு பேர் திரண்டு இத்தனை விசுவாச பக்தியுடன் அவனை வரவேற்கிறார்கள் எனில்... சற்று கால ஓட்டத்தின் பின்நோக்கிப் பார்த்தால், கற்பனை சிறகு விரிகிறது. சரித்திரத்தின் பக்கங்களில் காலங்காலமாக வரதனின் இந்தப் புறப்பாட்டுச் சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. ஆயினும் காரணம் இதுவென்ற புரிதலின்றி!
***
சிந்தனை ஓட்டம் வரதனைப் பற்றியே இருந்தது. கேள்விப்பட்ட சங்கதிதான்! ஆயினும் கண்ணாரக் கண்டு உணர்வில் கலந்ததில்லை! எப்படியும் இன்று சென்றுவிடலாம். எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு! எடுத்தால்... நான் முன்னர் பணிபுரிந்த நாளிதழில் தற்போதும் பணிபுரியும் ஒரு நண்பர். கட்டாயத்தின் பேரில் தான் விருதாவாகத் தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதைச் சொன்னார். நான் திருமுக்கூடல் சென்று, பாலாற்றின் கரையில் பொழுது போக்கச் செல்லவதாகச் சொன்னேன்! "நீங்க கொடுத்து வெச்சவர்ண்ணா" என்ற வாசகத்தோடு முடித்துக் கொண்டார்.
வாளுக்கு ஆட்பட்டவன் பரம்பரைப் பெருமை மறந்து வாழ்க்கையின் உன்னதம் மறந்தான்; கூழுக்கு ஆட்பட்டவன் கொண்ட கொள்கை துறந்து வாழ்க்கையின் உட்பொருள் மறந்தான்!
வாழ்க்கையின் உள்ளர்த்தம் புரியாத கோட்பாடுகள் என்னைச் சுற்றிச் சுற்றி உழலத் தொடங்கின. இயற்கையின் விளையாடல் எத்தனையோ அத்தனையும் புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இல்லைதான்! ஏன்... சிறு துளிகூட நம் மனத்தில் ஏறுவதில்லைதான்! ஆனாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
***
வரதனின் விழாக் கற்பனைகள் ஒரு புறமும், கசந்த காலத்தைக் கடந்து வாழ்க்கையின் வசந்த காலத்தை எதிர்நோக்கிச் செல்லும் கற்பனைகள் ஒரு புறமுமாய்... வழக்கம்போல் பைக் பறந்து கொண்டிருந்தது. காட்டாங்குளத்தூர், மறமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் கடந்து பாலார் செல்லும் காட்டுப் பாதையினூடே தனியனாய் பயணம். ஆளரவமற்ற பகுதி என்பார்களே... அதன் வடிவத்தைக் கண்டுகொள்ளும் சாலைதான்! இடையில் இரு கிராமங்கள். ஆனாலும் அமைதியாய் அடங்கிக் கிடந்தன. காஞ்சிபுரத்தின் பழைமைச் செழுமையைக் கண்ணுக்குள் நிரப்பலாம். எல்லாம் வரதனின் ராஜாங்கம் ஆயிற்றே!
அண்மையில் பெய்த அடைமழையில் நிரம்பி, அதற்குள் தன் இயல்புக்கு வந்துவிட்ட சாலையோர ஏரிப் பரப்பில் இளைஞர்கள் கிரிக்கெட்டிக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் சிறு குன்று. நடுவே செல்லும் பாதை. இரவில் திரும்பி வரும்போது இந்தப் பாதையின் இயல்பை கற்பனை செய்து கொண்டே சீவரம் அடைந்தேன்.
மக்கள் வெள்ளம்தான்! சுற்றுப் பகுதி கிராமத்து மக்களின் பக்தியும் அன்பும்தான் பெருமிதத்தைத் தரும். எத்தனை சிறுவர்களும், பெண்களுமாய் வரதனின் உற்ஸவத்தைக் கண்ணுற அங்கே கூடிருந்தார்கள்! போட்டிக்கு கார்களும் பைக்-களும் சாலையின் இருமருங்கும் ஆக்கிரமித்திருந்தன.
ஹஸ்திகிரி எனும் சிறுகுன்றில் வீற்றிருக்கும் வரதன், இன்று பழைய சீவரம் மலைக்கு எழுந்தருளி மண்டபத்தில் காட்சியளித்தான். பணிவிடைகள் அவனுக்கு ஏராளம். பளிச்செனத் திகழும் படிகள். பக்தர் குழாம் புடைசூழ அந்த அத்திரிகி வரதன், இந்த மலையில் இருந்து இறங்கிவரும் அழகே அழகுதான்!
மலையில் இருந்து இறங்கி பாலாற்றின் மணல் வெளியில் இறங்கிச் செல்கிறான் வரதன். துணைக்கு உடன் வருகிறார் சீவரம் பெருமாள். இருவரும் பாலாற்றின் மணல் வெளியில், ஓரளவு ஓடைபோல் ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கால நனைத்து திருமுக்கூடல் செல்லும் போது, பாகவத பக்தர் குழாம் பின்னே பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறது.
***
திருமுக்கூடல் - மூன்று ஆறுகள் கூடும் இடம்! பெருமான் அந்தக் கரையில் எழுந்தருளியதால் 'திரு' சேர்ந்து கொண்டுள்ளது. நீர் இன்றி ஏதோ ஆற்றின் பெயரைத் தன்னளவில் கொண்டுள்ள பாலாறு. ஒருவேளை பால் போல் வெண்மை என்பதால் வெண்மணல் சேர்ந்து வெளித் தெரிகிறதோ? இடப்புறத்தே ஓடிவந்து கலந்துவிடும் செய்யாறு மட்டும் தன்னில் நீர் தாங்கி அங்கே நிரம்புகிறது! வேகவதி ஒரு சிற்றோடையாகி அங்கே சங்கமித்து விடுகிறது.
சென்ற வருடம் பிரயாகையில் திரிவேணிசங்கமத்தில் எத்தகைய உணர்வுடன் நதியில் கால் நனைத்தேனோ அதே உணர்வு இங்கே! புண்ணியத்தைப் பெருகச் செய்வதில் இந்த மூன்று ஆறுகளும் பின்வாங்கியதல்ல! ஆயினும் அவற்றில் நீர் பெருகச் செய்யத்தான் நாம் மறுத்துவிடுகிறோம்; மறந்துவிடுகிறோம்!
***
திருமுக்கூடல் தலத்தைப் பற்றி என்றோ படித்தும் எழுதியும் இருக்கிறேன் என்றாலும், முதல்முறை நேரில் காணும் பரவசம்! தொல்லியல் துறைப் பராமரிப்பின் வெளித்தோற்றம் பளிச்செனப் படுகிறது. கோபுரமற்ற புகுவாசல் வெண்மைக் கற்கள் தாங்கி நெடிது நிற்கிறது! உள்ளே ஒரு பசுமைப் பூங்காவின் தோற்றம். செதுக்கப்பட்ட பாதைகள். புல்வெளி. ஈரடிக்கு வளர்ந்து பராமரிக்கப்படும் செடிகள். பூக்களைத் தாங்கி நந்தவனத்தின் அருமை காட்டுறது.
கோயிலில் அப்பன் வேங்கடேசப் பெருமாள் சந்நிதி அழகு. பெருமாள் கரிய நிற வண்ணனாய் விளக்குகளின் ஒளி முகத்தில் பட்டு மின்ன பளிச்சென்று திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறான். நெடிதுயர் உருவம். தாயார் சந்நிதி, வரதன் சந்நிதியிலும் பக்தர்கள் வரிசை கட்டி ஒழுங்காகச் சென்று தரிசித்து எந்தவித நெருக்கடியும் குழப்பமும் இன்று அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். கோயிலினுள் மொத்தம் 4 காவலர்களே நின்றிருந்தனர்! சந்நிதிகளின் பராமரிப்பு அவ்வளவு தூய்மை!
ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ்வொரு பெருமாள். எல்லோரையும் ஸேவித்து இறங்கி, மணல்வெளியில் கலக்கிறது பக்தர் வெள்ளம். அந்த வெள்ளத்தினூடே அடியேன் பெயர் சொல்லி அழைத்த சிலர். நண்பர்களான ஸ்ரீ உ.வே. அனந்தபத்மநாபன் ஸ்வாமி, ஆசார்ய லட்சுமிநரசிம்மன், முகநூலில் மட்டுமே அடியேன் முகம் கண்டு பழகிய உப்பிலி ஸ்வாமி... இப்படியாக!
பெருமாள்கள் ஐவரும் இதை அடுத்து திருமுக்கூடல் கிராமத்துக்குச் செல்கிறார்கள். பின்னே சென்றேன். தெரு மிகத் தூய்மை. வாசலில் கோலமிட்டு, தங்கள் ராஜாவை வரவேற்கும் உற்சாகத்துடன்!
கிராமத்தின் கடைக்கோடி வரை சென்று பெருமாள் அங்கேயே எழுந்தருளி, சற்று நேரம் அந்தக் காலனிவாசிகளின் பூஜையையும் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்கியதையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் திரும்புகிறார். சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான்! பெருமாள் தனியாக வந்தால் இராது! பாகவத கோஷ்டியும், இத்தகைய பக்த கோஷ்டியும்தான் இந்த உற்ஸவத்துக்கு வலு, அழகு!
பெருமாளை எழுந்தருளச் செய்துகொண்டு காஞ்சிக்குத் திரும்பும் அந்தக் கைங்கர்ய கோஷ்டியைப் பார்த்தால், அதைவிட சிலிர்ப்பு. வரதனுக்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, அவனுடனேயே நடந்து, இரவெல்லாம் விழித்து, பத்திரமாக அவன் அரண்மனையில் அவனை சேர்ப்பிக்கும் வரை இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! நிச்சயம் அரங்க நகர் கோஷ்டிக்கு சளைத்ததல்ல!
***
இரவு 8 மணி ஆயிற்று! சீவரம் பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பினேன். சீவரத்தை அடுத்த பெட்ரோல் பங்கில் திரும்பினேன். யாருமே இல்லாதது போன்ற நிலை. ஆனால், ஒரு ஓரத்தில் நின்று செல்லில் சினுங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒற்றை ஆளாய் எனைக் கண்டதும் அசைந்து வந்தார். அவரை மெதுவாகப் பேசிவிட்டு பிறகு வருமாறு சைகை செய்தேன். சில நொடிகளில் வந்தார். அவரை நிதானமாக வருமாறு சைகை காட்டியதாலோ என்னவோ... பெட்ரோல் நிரப்பிக் கொண்டே வெகுநாள் பழகிய சிநேகத்துடன் பேசினார்... "வண்டிங்க வந்துட்டு இருக்கு சார். வீட்ல இருந்து பேசினாங்க. கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல இருந்தே சொல்லிக்கிட்டிருந்தாங்க! ஆனா பாருங்க இன்னிக்குன்னு நெறய பேர் லீவு. சிலர் சாப்ட போய்ட்டாங்க. பெட்ரோல் போட ஆளில்ல. அதான் வீட்ல சொல்லி புரியவெச்சிட்டிருந்தேன். இப்பவாவது 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் கூட்டிட்டு சீவரம் பெருமாளயாச்சும் பாத்துட்டு வந்துடணும்... ஆனா... நீங்க கொடுத்து வெச்சவங்க சார்...!"
அடடே! ஒரே மாதிரியான வாசகம்! சீவரம் செல்லும் முன்பு அந்த நாளிதழ் பணியில் இருக்கும் நண்பரும், இந்த நபருமாக!
***
அதே காட்டுப் பாதையில் திரும்பினேன். இரவுப் பொழுதுக்கேயுரிய வண்டுகள் பூச்சிகளின் சப்தங்கள் நிசப்தத்தைக் கடந்து கொண்டு கேட்கிறது! பாலார் ஊர் கடந்து, ரெட்டிப்பாளையம் காட்டுப் பகுதியினூடே செல்கையில், சாலையின் ஓரத்தில் இருந்த புதரில் இருந்து மர அணில் போன்ற ஏதோ ஒன்று... பைக் விளக்கின் வெளிச்சத்துக்கு அப்படியே கீழிருந்து தாவி சரியாக என் வலது தோளில் பாய்ந்து கீழே விழுந்தது! நள்ளிரவும் காட்டுப் பாதையும் தனிமையும் எனக்குப் புதிதல்ல. பொதிகை மலைப் பகுதியின் காட்டுப் பாதைகளில் சிறுவயது முதலே தனித்துச் சென்று பழகிய பழக்கம்தான்! பள்ளிப் பருவத்துக்குப் பிறகான வாழ்க்கையிலும் வருடம் பல தனித்திருந்தே கடந்து விட்டவனுக்கு, காட்டுப் பாதையில் மட்டும் தனிமைப் பயணம் அச்சத்தைத் தந்துவிடவில்லை!
ஆனாலும்... இப்போதும் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெருந்தேவித் தாயாரைத் துறந்து, உபய நாச்சிமாரான தேவியர் இருவரைத் துறந்து, ராஜ மாளிகை துறந்து, எந்த உற்சவமானாலும் எல்லோரும் துணையிருக்க நடத்திக் கொண்டு, இந்த ஒரு உற்ஸவம் காண மட்டும் வரதன் ஏன் தன்னந் தனியனாக இங்கே வருகிறான்!?
***
இந்த உற்ஸவம் குறித்து தினசரியில் வெளியிட்ட செய்தி:
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன. இந்தக் கூடுதுறையில், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாச பெருமாள், காவான்தண்டலம் லட்சுமி நாராயண ஸ்வாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் தரிசனம் அளித்தனர்.
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ் விழாவின்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இவ் விழாவையொட்டி முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலை வந்தடைந்தார். அங்கு வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து திருமுக்கூடல் சென்று பார்வேட்டை உற்ஸவத்தில் பங்கேற்றார்.
இவ் விழா முடிந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் கோயிலை சென்றடைந்தார்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix