சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஜூன் 09, 2013

பொன்மொழி காட்டிய புதுமொழி!

வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |
சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||
எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது. ஆனால் கவலையில் தவித்துக் கற்றவன் தளர்ந்தால், அந்தக் கல்வியாலோ அறிவாலோ என்ன பயன்?
- இது ஒரு சுபாஷிதம். அதாவது, சம்ஸ்க்ருதப் பொன்மொழி.

இது எனக்குள் பலசமயங்களில் பலவித எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும். பல ஞானிகளைப் பற்றி நாம் படித்தால் ஒன்று தெரியும்... அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப் பட்டதில்லை. கவலை என்பது, அரக்கன் போன்றது. அது மனத்துள் புகுந்து விட்டால், பல நற்சிந்தனைகள் அந்த மனத்தைவிட்டு காணாமல் போய்விடும். நல்ல சிந்தனை ஓட்டம் என்பது தவம் போன்றது. ஒன்றைப் பற்றிய எண்ண அலைகள் மனத்தில் மீண்டும் மீண்டும் மோத, அது இறுதியில் ஒரு புதிய பரிணாமத்தை அடையும். அதுவே தவத்தின் இறுதியில் கிடைக்கும் வரம் போன்றது.
நல்ல சிந்தனைகள் என்று மட்டும் இல்லை... சுய நினைவும், கற்றதனால் பெற்ற அறிவும் கூட, கவலையில் தோய்ந்திருந்தால் மனத்தில் உடனே எழுவதில்லை; உடனடியாய் செயல்படுவதில்லை! குறிக்கோள் மற்றும் சுயமுயற்சியின் துணை கொண்டு அமைய வேண்டிய நம் முன்னேற்றம், கவலையின் காரணத்தால் உண்டான மழுங்கிய மனநிலையால், அமையாமல் போகிறது.
கவலைகள் பலவிதம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதம். அந்தக்காலத்தில் "படைப்பாளிகள், புலவர்கள் போன்றோருக்கு கவலைகள் மனத்தை அரிக்கக்கூடாது; அப்படி அரித்தால் அவர்களின் படைப்பாற்றல் போய்விடும், தமது நாட்டின் சிறப்பும் போய்விடும்' என்று எண்ணிய புரவலர்கள், தகுந்த சன்மானம், பொற்காசுகள், நிலம், பசுக்கள் என அளித்து அவர்களை போஷித்து வந்ததை அறிவோம். தமிழில் எழுந்துள்ள இத்தனை படைப்புகளுக்கும் இலக்கியச் சிறப்புக்கும் புலவர்கள் மட்டும் காரணமில்லை; அவர்களை போஷித்த அரசர்களும் தனவான்களும் முக்கியக் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.
இதை எண்ணும் போது, மகாகவி பாரதியின் உள்ள உணர்வு நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
கவலை என்பதோடு கூட, அதன் காரணத்தால் எழும் பதட்டம் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் நம் யோசிக்கும் திறனும் குறைந்து விடுகிறது. அப்போது நாம் படித்த படிப்போ கற்ற அனுபவங்களோ உடனடியாய் கைகொடுப்பதில்லை. எனவேதான் எதையும் யோசித்து, பிறகு செயல்படுத்தச் சொல்கிறார்கள். 
சென்ற வாரம் ஒருநாள், இரவு மணி 1.10. கைபேசி மணி அடித்து எடுத்தேன். இரண்டு தெரு தள்ளி இருக்கும் மூத்த சகோதரி ஒருவர் அழைத்தார். 84 வயதான அவர் அம்மாவுக்கு இதய நோய் உண்டு. அன்று இரவு அவருக்கு உடல் நிலை சற்று மோசமாகிவிட்டது. வேறு யாரும் வீட்டில் இல்லாததால் குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொண்டு "என்ன செய்வது' எனக் கேட்டிருக்கிறார். அவரும் ஒரு மாத்திரையின் பெயர் சொல்லி, "இப்போது கொடுங்கள்; நாளை காலை பார்க்கலாம்' என்றிருக்கிறார். வேறு வழியில்லாமல் அந்த இரவில் அவரும் எனக்கு போன் செய்து குறிப்பிட்ட அந்த மாத்திரையை உடனே வாங்கித் தருமாறு கேட்டார். நானும் 24 மணி நேரம் திறந்திருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று கேட்டேன். "எங்களிடம் ஸ்டாக் இல்லை; (ஒரு கடையின் பெயர் சொல்லி) அந்தக் கடையில் கேளுங்கள்' என்றார். இப்படி இரண்டு கடைகள் மூன்று பெரிய மருத்துவமனைகளின் மருந்தகங்களுக்குத் துரத்தியடிக்கப்பட்டு கேட்டால், ஒரே பதில்... "எங்களிடம் ஸ்டாக் இல்லை; அங்குக் கேளுங்கள்...!'
பிறகு அந்த சகோதரிக்கு தகவல் தந்து உடனடியாக அருகிலுள்ள நர்ஸிங் ஹோமுக்கு ஆட்டோ வில்அழைத்துவரச் சொல்லி நானும் காத்திருந்தேன். ஈ.சி.ஜி மற்றும் உடனடி சோதனைகள் முடித்து அந்த மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டோடு அதே மருத்துவமனையின் மருந்தகத்தில் கேட்டால், அவர், நான் முதலில் என்ன மருந்து கேட்டேனோ அதை, (இவரும் அதையேதான் எழுதியிருந்தார்) எடுத்துத் தந்தார். குழப்பத்தோடு வாங்கிச் சென்று முதலில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்துவிட்டு ஆறஅமர மருந்தின் காம்பினேஷனைப் பார்த்துவிட்டு யோசித்ததில் புரிந்தது - ஏன் இத்தனைபேரும் ""எங்களிடம் ஸ்டாக் இல்லை, வேறு கடையில் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று! அதாவது, கல்லூரி முடித்த கையோடு திருச்சியை மையமாகக் கொண்டும் நெல்லையை மையமாகக் கொண்டும் சுமார் மூன்றரை வருடங்கள் மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ்வாகப் பணிபுரிந்திருக்கும் அனுபவத்தாலும் படிப்பாலும் புரிந்தது - அந்த மருந்து லோராஜிபாம் வகையறா என்று!
பெரும்பாலான கம்பெனிகள் வித்தியாசமான பெயரை வைத்திருப்பதால் உடனடியாக மருந்தின் தன்மை நம் நினைவுக்கு வருவதில்லை. மேலும் அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து பதட்டமான மனநிலையில் என்ன ஆகுமோ என்ற கவலை தோய்ந்த முகத்தோடு மாத்திரையைத் தேடிச் சென்றதால், அது என்ன வகையறா மருந்து என்று யோசிக்கக்கூட முடியவில்லை. இப்போது முதலில் சொன்ன சுபாஷிதத்தை மீண்டும் படியுங்கள்.
முதல் கடையில் கேட்டபோதே, அந்த நபர், "சார் இந்த மருந்தை டாக்டரின் சீட்டு இல்லாமல் தரமாட்டோ ம்' என்று சொல்லியிருந்தால், எனக்கும் விஷயம் விளங்கியிருக்கும்; மற்ற இடங்களுக்கும் அலைந்திருக்க வேண்டாம்.
நிறையப்பேர் இப்படித்தான் தங்களை ஒரு வழிகாட்டியாக எண்ணிக் கொண்டு, தவறான வழியைக் காட்டிவிடுவார்கள், அது பயணப் பாதையோ அல்லது வாழ்க்கைப் பாதையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வழிகாட்டி என்றவுடன் கீதை சொன்ன கண்ணன் நம் நினைவுக்கு வருகிறார். கீதாசார்யனான கண்ணன் பரத கண்டத்து மக்களுக்காகக் கொடுத்த அரிய அறவுரைகள் நல் வழிகாட்டி. ஆனால் அதற்கு விளக்கம் சொல்லும் பேர்வழிகள், கீதையின் உள்ளர்த்தத்தை சிதைத்து ஆன்மா, அமைதி, தவம் என்று மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் வீரத்தையும் அழித்து கோழைகளாக்கி விடுகிறார்கள். கீதையின் அர்த்தம் மிகத் தெளிவு. எவரெவர் எந்தெந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்களோ அவரவருக்குத் தக்க நல் போதனை நல்குவது. இல்லறத்தானுக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன. பிரம்மச்சாரியான இளைஞனுக்கு என்று சில கடமைகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த இருவருக்கும் ஒரு சன்யாசிக்குண்டான சாத்வீகத்தையும் சன்யாசிக்கேயுரிய தன்மைகளையும் போதித்தால்... மக்களின் ஸ்வபாவம் மாறிப்போகுமே! இதுதான் ஆஸ்ரமக் குழப்பம் என்பதோ!
இன்று நடக்கும் பெரும்பாலான கீதை விளக்கவுரை நிகழ்ச்சிகளும், ஆன்மீகவாதிகள் நடத்தும் வகுப்புகளும் இப்படித்தான் மாறிப்போயிருக்கின்றன. போர்க்களத்தில் அதர்மத்திற்கு எதிராக யுத்தம் நடத்த அர்ஜுனனைத் தயார் செய்த கண்ணனின் போதனைகளை ஆஸ்ரமக் குழப்பத்தின் காரணத்தால் எல்லா ஆஸ்ரமத்தார்க்கும் பொதுவானதென்று கருதி, தாம் அறிந்தவற்றை போதிக்கும் ஆன்மிகவாதிகள் செயலால் சாதாரண மக்களிடையே கொடுமையை எதிர்க்கும் நெஞ்சுரமும் வீர உணர்வும் மழுங்கிப் போனதுதான் மிச்சம்!? இந்த நாட்டின் அடையாளம் - பார்த்தனுக்குத் தேரோட்டி, பாரதவாசிகளுக்கு வழிகாட்டியாகி, அவரவர் தர்மத்தைக் கடைப்பிடிக்க ஆணையிட்டு, அவரவர் கடமையை சரியாகச் செய்யச் சொன்ன, வீரமும் வெல்லும் உபாயங்களும் போதித்த கண்ணனே!

உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி


கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி.
அது அழகிய கவிதை!
கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!
ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்!
எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்...!
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாதஇதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு.
சிறுவயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுப் பூர்வமாகப் படித்ததாலோ என்னவோ... கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ... பெண்ணின் அழகு முகமோ... எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு... அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது... என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!?
அப்படி ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுவார் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும்.
மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்... ஏன் ஸ்ரீராம்... இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?
நான் சொன்னேன்... நீங்க படம் வரைவீங்களே... ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்... ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..!
இந்த பதிலில் இரண்டு வெளிப்படும். ஒன்று என் உளக்கிடக்கை. இரண்டு அவருக்கான பாராட்டு!
அவர் முறுவலிப்பார். ம்... நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன்.
இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம்.
இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் - அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே!
கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது!
கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது வேறு எங்கோ வெறித்துக் கொண்டோ பேசுபவரிடம் நான் பேச்சைத் தொடர்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?! அட... இப்போதுதான் புரிகிறது... கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறார்கள் என்று! கண்களைத் திறந்து கொண்டு பேசினால் கேட்பவர் கண் திறந்துவிடுவாரே!

ஆழ்வார் - நாச்சியாரின் அமுதத் தமிழ் அழகு!


மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.

 ---------------------

அரங்கன் தன் பக்கலில் உள்ளதைக் காட்டி என் பக்கலில் இருந்ததைக் கொள்ளை கொண்டு போனானே என்ன திருமங்கை ஆழ்வார் தலைவியானவளாய்ப் புலம்பித் தவிக்கிறார். இந்தப் பாசுரத்துக்கு ஒரு ரஸமான கதையும் உண்டு.
விக்கிரம சோழன். நல்ல தமிழ் ரசிகன். ஒரு நாள் அவன் அவையில் வைணவ, சைவ பண்டிதர்கள் இரு தரப்பும் தத்தமது பாடல்களைக் கூறி அவனை மகிழ்விப்பராம். அவனுக்கு என்ன மனத்தாங்கலோ..? அரசியைப் பிரிந்து அடுத்த தேசம் கிளம்பினானோ அல்லது, பட்டத்து ராணி பாராமுகம் காட்டினளோ என்னவோ? திடீரென ஒரு கேள்வி கேட்டான். தலைவன் பிரிந்திருந்தபோது, தலைவியின் நிலையை ரசமாகச் சொல்லும் பாட்டு ஏதாவது சொல்லுங்கள்.. என்று! வைணவ அறிஞர் இந்த "மின்னிலங்கு” பாசுரத்தைச் சொன்னாராம். சைவ அறிஞர் ஒரு பாடலைச் சொன்னாராம்.. (என்ன பாடல் என்பதை முன்னோர் சமுதாய நலன் கருதி தவிர்த்திருக்கிறார்கள்... இருந்தாலும், சாம்பல் பூசிய மேனி எனும் உவமையைக் காட்டியிருக்கிறார்கள்..) இரண்டையும் கேட்ட சோழன், “அடடா... மின்னிலங்கு திருவுருவும், பெரிய தோளும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்குருகி, தன் நெஞ்சைக் கொள்ளையிட்டுப் போன தலைவனை நினைந்து உருகும் இவளன்றோ தலைவி..! மற்றவளோ பிணந்தின்னி!” என்றானாம்.
இங்கே ஆழ்வார் பெண் தன்மையிட்டு பெருமாளின் திருவுரு அழகைக் காட்டிய இந்தப் பாசுரத்தை விடவும், எனக்கு என்னவோ மிகவும் பிடித்ததாயும், வசீகரிக்கும் தன்மையதாயும் இன்றுவரை தோன்றுவது நாச்சியாரின் வசீகரத் தமிழே!
என்னமாய் ழ-வும் ள-வும் ல-வும் கொஞ்சி விளையாடுகிறது?! அரங்கன் அழகு காட்டி என் உடல் உருக் குலைத்தானே என்று கைவளை கழல, உடல் மெலிவு கண்டு கதறித் துடிக்குமளவும் இயல்பாய் பெண்ணான கோதை காட்டும் உணர்வுபூர்வமான அந்த அழகு...!
எழிலுடைய அம்மனையீர் என் அரங்கத்து இன்னமுதர் - குழல் அழகர்; வாய் அழகர்; கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்; எம்மானார்! என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே! என்று கதறுங்காலை நம்முள்ளுணர்வு பக்தியின் பாற் கிளர்ந்தெழுமோ? அல்லையாயின் அன்பின் தன்மை உணரச் செய்யுமோ!? எல்லாம்தான்!!

புதன், ஜூன் 05, 2013

பேரளியும்... பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம்.
மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன். இந்தப் பேரளியில் தொழில்முனைபவராகத் திகழ்கிறார். அவருடைய தந்தையார் நீலமேகம் ஐயங்கார் நல்லதொரு ஆன்மிகச் சொற்பொழிவாளராக, ஆன்மிக நிகழ்ச்சிகள், குடமுழுக்கு உள்ளிட்ட விழாக்களை நடத்தி அந்தப் பகுதியில் நற்பெயர் பெற்றவர். நான் எழுதியிருந்த புத்தகங்கள் ஓர் இரண்டைப் படித்துவிட்டு என் மீது நல்ல அபிமானம் கொண்டிருந்தாராம். நண்பர் ஸ்ரீனிவாசன் அடிக்கடி தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் அவரைப் பார்த்து நமஸ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் துரதிருஷ்டம், சென்ற வருடம்(2012) அக்டோபர் மாதக் கடைசியில் அதே பேரளியில் ஒரு சாலை விபத்தில் சிக்கிய அவர் பின்னர் மருத்துவமனையில் வைத்து காலமானாராம். தந்தையார் மீது பெருமதிப்பு கொண்டிருந்தது நண்பரின் அந்தக் குடும்பம்.
அப்போது, நண்பர் ஸ்ரீனிவாசன் ஒரு செய்தி சொல்லியிருந்தார். அவர்கள் ஊரில், ஊரை விட்டு சற்றே ஒதுக்குப்புறத்தில், வயல்களின் ஊடே இரண்டு பாழடைந்த கோயில்களை இவர்கள் கண்டார்களாம். முட்புதர்கள் சூழ மிகவும் பாழடைந்து வெளித்தெரியாது இருந்த இரு கோயில்களை ஊர் மக்கள் ஒத்துழைப்பில் முட்புதர்களை அகற்றி உழவாரப் பணி மேற்கொண்டார்களாம். அப்போதுதான் தெரிந்தது, இரு கோயில்களும் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் என!  ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு இருந்த அந்தக் கோயில்களில் உழவாரப் பணி செய்து, கோயில்களில் தினமும் விளக்கேற்றி, பூஜை செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக நீலமேகம் ஐயங்கார் பரமபதித்துவிட, எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சி.
கோயில் பணிகளில் இருந்து சற்றே பின்வாங்கினார்கள் சிலர். நண்பர் ஸ்ரீனிவாசனுக்கோ அவரது இளைய சகோதரர்களுக்கோ பெரும் துயரம். இனி இந்தக் கோயில்களுக்கு பூஜை செய்யலாமா? கூடாதா? இறைவன் நம்மை ஏன் இப்படி சோதித்தான்... இப்படியாக உள்ளூர எண்ணம் அவர்களுக்கு!
இதனிடையே, கோயில் உழவாரப் பணிகள் குறித்து பரவலாக செய்தி வெளியான போது, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வந்து பார்க்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் பகுதியிலும் பழைமையான கோயில்கள் இருந்துள்ளனவே என்ற ஆச்சரியத்தில்!
ஆனால், இது அருகில் இருந்த வயல், தோப்பு தொரவு உரிமையாளர்களுக்கோ, அல்லது ஊர் நலன் விரும்பாத ஒரு சிலருக்கோ பிடிக்கவில்லையோ என்னவோ? கோயிலில் இருந்து எடுத்து வைத்த கற் சிலைகள் சில திடீரென காணாமல் போயின! இடையில் சிலர், அந்தக் கோயில்களுக்குள் சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் அந்தக் கால மன்னர்கள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்களை புதைத்து வைத்திருப்பார்கள் என்று கட்டி விட, புதையல்  ஆசையில் ஒரு கூட்டம் கோயில்களை நோட்டம் விடத் தொடங்கியது.
விடுவாரா.. நம் ஆவியின் சூவியார்?! இப்படி ஒரு கட்டுரையையும் எழுதி இதழில் வெளியிட்டும் விட்டார்கள்...
------
சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?
தங்கப் புதையல் இருப்பதாகப் பரவிய செய்தி பெரம்பலூர் மாவட்டத்தை தகதகக்க​வைத்துள்ளது!  சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி - மருவத்தூர் இடையே முட்புதர்களுக்குள் பழைமையான இரண்டு கோயில்களைக் கண்டு​பிடித்தனர் கிராம மக்கள். 'அந்தக் கோயில்களில் இருந்த சில சிலைகள் திருடப்பட்டுள்ளன என்றும் தங்கப் புதையல் இருக்கிறது’ என்றும் பரபர தகவல்கள் கிடைக்கவே, விசாரணையில் இறங்கினோம். காட்டுப் பாதைக்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோயில் திடீர் பிரபலம் ஆகி விட்டதால், ஏராளமான மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்த பிறகு, ஊர்ப் பெரியவரான ஆறுமுகத்திடம் பேச்சுக் கொடுத்தோம். ''அந்தக் காலத்துல கோயில்களைச் சுற்றி பேரளி கிராமம் இருந்ததாகவும், அதன்பிறகு, பேரளி மருவத்தூர், பேரளி, பனங்கூர் என்று மூன்று ஊர்களாகப் பிரிஞ்சுட்டதாகவும் சொல்வாங்க. மக்கள் புழக்கம் இல்லாததால், நாளடைவில் கோயில்​களைச் சுற்றி முள்வளர்ந்துடுச்சு. ஒரு கட்டத்தில் கோயில்களையே மறைச்சிடுச்சு. -
--
என்று கட்டுரை நீண்டுகொண்டே போனது!
ஆட்சியருக்கு செய்தி பறந்தது. தொல்பொருள் இலாகா- தூக்கம் கலைந்தது. ஓடி வந்தார்கள் பேரளியில் பேரணியாக! கோயில்களின் சுவர்களை அளவெடுத்தார்கள். அங்குலம் அங்குலமாக அடியெடுத்து கற்களையும் சிலைகளையும் கணக்கெடுத்தார்கள்...
ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை! சரி.. அரசு ஏதோ செய்கிறது. நம் ஊர் கோயில்கள் திரும்பவும் ஒரு நல்ல நிலையை அடைந்துவிடுமென்று!
இப்படியாக மூன்று நான்கு மாதங்கள் கழிந்த நிலையில்தான்....
நண்பர் ஸ்ரீனிவாசன் திரும்பவும் என்னை தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியிருந்தார். எங்கள் ஊருக்கு வாருங்கள். அந்தக் கோயில்களை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். என் அப்பா உங்களைப் பார்க்க ஆசைப்பட்டார்... உங்களை அழைத்துக் கொண்டு அந்தக் கோயில்களுக்குப் போய்க் காண்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்... இப்படியாக நண்பர் அவரது அப்பா பெயரைச் (செண்டிமெண்டை) சொன்னதும் எனக்கும் ஆவல் அதிகமாயிற்று! சரி போய் வருவோமே என்று எண்ணி, அவரிடமும் நான் வருவதாகச் சொன்னேன்.
அதற்கு நான் தேர்ந்தெடுத்தது, என் பிறந்தநாளை! மார்ச் 14. ஸ்ரீரங்கத்திலிருந்து காலை கிளம்பி, திருப்பட்டூர் சென்றுவிட்டு, அங்கிருந்து பெரம்பலூர் சென்றேன். (இந்தக் கோயிலை மறு மாதமே தினமணி - வெள்ளிமணியில், தலையெழுத்தை மாற்றித்தரும் பிரம்மா கோவிலாகப் பதிவு செய்தேன்..)
மதியம் பேரளி சென்று அவர் வீட்டை அடைந்தது முதல் அப்பாவைப் பற்றியும், அந்தக் கோயில்களைப் பற்றியுமே சொல்லிக் கொண்டிருந்தார். உண்டு முடித்து சற்று நேரத்தில் அவருடன் அந்தக் கோயில்களைப் பார்க்கலாமே என்று கிளம்பினேன்!
எத்தனையோ பாழடைந்த கோயில்களைப் போய்ப் பார்த்து எழுதியிருக்கிறோம். அவற்றின் அவல நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்... அதுபோல் எண்ணி இந்தக் கோயில்களுக்கும் சென்றேன். கிராமத்துச் சாலையின் இரு புறத்திலும் பார்த்தால்... கீழ்ப் பக்கம் சிவன் கோயிலும் மேற்புறத்தில் பெருமாள் கோயிலுமாக வெளித்தெரிந்தது. கோயில்களைச் சுற்றியிருந்த புதர்களை அப்புறப்படுத்தியிருந்தார்கள். கோயில் நன்றாகவே வெளியில் தெரிந்தது.
சிவன் கோயிலுக்கு முதலில் அழைத்துச் சென்றார் நண்பர். வௌவால்களின் வாசம்... அந்த வாசத்தால் வெளிப்பட்ட வாசம்... எல்லாம்தான்! கையில் எண்ணெய் திரியுடன் சென்ற நண்பர், உள்ளே விளக்கேற்றி, தீப ஆராதனையும் செய்து, கற்பூரத்தைக் கொளுத்தி வெளிச்சத்தை ஏற்படுத்தி வெளியில் வந்தார்.
கோயில் பகுதியைச் சுற்றிப்பார்த்து வந்தேன்.
சுரங்கம் இருப்பதாகச் சொன்ன ஒரு இடம்... பின்னப்பட்டுப்போன விக்ன விநாயகர் சிற்பம், கொடிமரம், இடிந்து விழுந்த நிலையில் அம்பாள் சந்நிதி, சுற்றிவலம் வரும்போது சண்டிகேசர் சந்நிதி, நந்தி, பலிபீடம்... எல்லாம் ஒரு பழமையின் செழுமையை கண்ணில் காட்டியது.
அடுத்து பெருமாள் கோவிலுக்குப் போனோம். நல்ல அமைப்பு. துவஜஸ்தம்பம், விளக்குத்தூண் போல்! பெருமாள் சந்நிதி. நல்ல அமைப்புடன் விக்ரஹம். பன்னிரு ஆழ்வார்கள் விக்ரகங்கள், தாயார் சந்நிதி உரு மாறாமல்.. தாயார் விக்ரஹம் மிகத் திருத்தமாக அழகுடன்! இப்படியே பார்த்து வந்தபோது, பெருமாள் சந்நிதி பின்புறத்தே மேற்சுவரில் ஒரு சிற்பம் மிக அழகாக இருந்ததைக் கண்டேன்.
மூன்று பேர் இருவர் போல்  தோற்றம் அளிக்கும்  வண்ணம் ஒட்டியபடி செதுக்கப்பட்ட சிற்பம், இடது புறத்தை மறைத்தால் வலது புறத்தில் ஒருவர் ஓடுவது போல், வலதுபுறத்தை மறைத்தால் இடது புற நபர் ஓடுவதுபோல், இரண்டு கைகளையும் மறைத்துப் பார்த்தால் நடுவில் ஒருவர் நிற்பதுபோல்... ஆசனத்தில் அமர்வதுபோல் என்று வித்தியாச சிற்பம்...
இப்படியாக இந்தக் கோவில்களைப் பார்த்துவிட்டு வெளிவந்தேன். ஏற்கெனவே இவர்கள் நம்பிக் கொண்டிருப்பதுபோல்....இந்தக் கோயில்களைப் பார்த்துவிட்டு வந்ததால் நம் ராசியும் தலைஎழுத்தும் எப்படி இருக்கப்போகிறதோ என்ற குதர்க்கமான (அல்லது நக்கல் கலந்த) எண்ண ஓட்டத்துடன் வண்டிபிடித்து, பெரம்பலூர் புறவழிச்சாலை அடைந்து, வந்து நின்றவுடனே விருட்டென வந்த சென்னை விரைவுப் பேருந்தில் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்...
(ம்ஹும்... அப்பாடா....! ஒரே மூச்சு.. பெருமூச்சு!)
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix