சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், அக்டோபர் 02, 2013

ஸ்வதர்மம்!


கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்
- என்றொரு வெண்பாவை படித்த நினைவு.

சான்றோரின் சினம் எத்தகையது என்பதை ஔவை இந்தப் பாட்டில் சொல்லியிருப்பதாக பாடம் படித்த நினைவு.

கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் அதே பழைய நிலையில் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர்களின் சினமும் அதனால் விளையும் பிளவும்.

ஆனால், பொன்னை வெட்டியோ உருக்கியோ பிளந்தால் எப்படி மீண்டும் அது நல்லதொரு ஆபரணமாக அணிகலனாக அல்லது பொன் கட்டியாகவோ உருமாறுமோ அதுபோன்றது சான்றோரின் சினம். அந்த சினமும் கூட, தண்ணீரில் வேகமாக விர் என்று எய்யப் படும் அம்பானது தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பாயும். அப்போது இரண்டாகப்  பிரியும் தண்ணீர், அம்பு போனபின்னே மீண்டும் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.
- என்ன அருமையான உவமை!

உவமைகள் மட்டும் இல்லாதிருந்தால், நம் வாழ்வில் சுவையேயிராது. கானல் நீராகக் கரைந்து போகும் கண நேர வாழ்க்கையில், வாழ்வீன் முழுமையை ரசித்து அனுபவிக்க உவமைகள் எப்படிக் கைகொடுக்கின்றன.

பார்க்கும் ஒரு பொருளை சொல்ல வரும் பொருளோடு பொருத்திப் புரிய வைக்க முயலுதல் உவமையின் பலன்!

அதுபோன்றதே, சிறு கதைகள் உதாரணக் கதைகள் வழியே விளக்குதல்....
சான்றோர் சினத்தைச் சொல்ல வந்துவிட்டு, சான்றோர் சினத்தின் இயல்பைக் கூறிவிட்டு, சான்றோர் குணத்தைக் கூறாது விட்டால்...? முழுமை பெறாதல்லவா?!!

ஸ்ரீராமகிருஷ்ணர் முதற்கொண்டு பலரும் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு கதை...

துறவி ஒருவர்... ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேலிருந்து நீரில் தேள் ஒன்று தவறி விழுந்தது.
குளித்துக் கொண்டிருந்த துறவி, நீரில் விழுந்த தேளை கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார். சாகக் கிடக்கும் தன்னைக் கைதூக்கிக் காப்பாற்றுகிறார் இந்தத் துறவி என்ற ஞானம் அந்தத் தேளுக்கு இல்லை. வழக்கம்போல் தன் இயல்பான குணத்தைக் காட்டி, துறவியின் கையில் நறுக்கென்று கொட்டியது தேள்.
வலியால் துடித்த துறவி, தவறிப்போய் தேளை நீரில் தவறவிட்டார். இருப்பினும் தன் இயல்பு குணமான கருணையைக் கைக் கொண்டு, மீண்டும் கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார்... தேளோ மறுபடியும் கொட்டியது.
மீண்டும் அதே கதை. இதனைக் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், துறவியிடம் கேட்டார்...
துறவியாரே... தேள்தான் வலி ஏற்படுத்தும் விதமாய்க் கொட்டுகிறதே… நீங்கள் ஏன் அதைத் திரும்பத் திரும்ப கையில் எடுத்து கொட்டுப் படுகிறீர்கள்.
அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்றார்!
அதற்கு துறவி கூறினார்...
“கொட்டுவது தேளின் குணம்; துடிக்கும் உயிரைக் காப்பது மனிதனின் குணம். அதன் இயல்பை அது விடாத போது என் இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்?”. என்றார்.
இங்கே துறவி கூறியதே, ஸ்வதர்மம் என்ற பொருளில் முன்னோர் உரைத்தனர்.
இது நம் ஸ்வதர்மம் என்று நாம் கைக்கொண்ட பின், நம் இயல்பை விட்டு நாம் மீறலாமோ?!

(இதே விளக்கமாக ஸ்ரீவைஷ்ணவம் காட்டும் கதை ஒன்றும் கூரத்தாழ்வான் - கிருமிகண்ட சோழன் விஷயத்தில் உண்டு.)

என் வாழ்நாளில்... இந்தக் கதையில் கொட்டிய தேளைப் போல் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்... பதிலுக்குக் கொட்டாமல் தூக்கிக் கரையேற்ற முற்பட்டதால், தேள்களெல்லாம் காப்பாற்றுபவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பை வெளிப்படுத்துகின்றன. பதிலுக்குக் கொட்டியிருந்தால், முதிர்ச்சி அடைந்த மனிதன் என்றும், ராஜ தந்திரி என்றும் சாணக்கியன் என்றும் பட்டம் கிடைத்திருக்கும். நம் ஸ்வதர்மம் காத்த பலன் சின்னப் பையன் என்றும், அப்பாவி என்றும்தான் பட்டம் கொடுக்கிறது இந்த உலகம்!

காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை


1988 - மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி 'மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன்.

இடம்: தென்காசி திருவள்ளுவர் கழகம். தென்காசி பெரிய கோவில் கோபுரம் அப்போது கட்டப்பட்டு வந்தது. குற்றால மலைக் காற்று சுகமாய் மோதித் தலை கோதும்! நான் அப்போது தென்காசி கீழப்புலியூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன். அதற்கு முன்னர் பள்ளிகள் அளவிலான சிறு சிறு போட்டிகளில் பங்கு பெற்றிருந்தேன் என்றாலும், அவை எல்லாம் மைக் இல்லாமல் சிறிய அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் பேசும் பேச்சுப் போட்டிகளாகத்தான் இருந்தன! அன்று... அக்.2. காந்தி ஜயந்தி!

தென்காசி திருவள்ளுவர் கழகம், பொதிகைத் தென்றலுடன் அகத்தியம் கண்ட தமிழ் ஒலிக்கும் திருக்கூடம்! இலக்கியவாதிகள் பலர் களம் கண்ட புனிதமான மேடை!

காந்தி ஜயந்தி என்பதால் அன்று மாணவர்கள், பெரியவர்களின் பேச்சுக்கு திருவள்ளுவர் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லாரும் காந்தியைப் பற்றியே பேசுகிறார்களே... நாம் வேறு ஏதாவது பேசலாமே என்று தலைப்பை யோசித்தேன். காந்தியைப் போல் தென்னகத்தில் தாக்கம் ஏற்படுத்தியவர் கர்மவீரர் காமராஜர். அவருடைய அரசியல் குருவாகத் திகழ்ந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் குறித்தே பேசலாமே என்றார் ஆசிரியர் ராமலிங்கம். குறிப்பெடுத்தேன். முதல் ’மைக் பிடித்து’ மேடையேற்றம் கண்டேன்!

பேசி முடித்த பின்னர் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார்கள். "இந்திய சுயராஜ்யம்” என்ற புத்தகம். மதுரை காந்தி இலக்கியப் பண்ணை வெளியிட்ட புத்தகம். அதில், காந்திஜி ஒரு வாசகரும் ஆசிரியரும் பேசுவது போல் பல கருத்துகளை விதைத்திருப்பார். இந்தியாவின் நிலைமை, ஹிந்துக்களும் முஸ்லிம்களும், சுயராஜ்யம் என்றால் என்ன, இந்தியா எப்படி விடுதலை அடைய வேண்டும், மிருக பலத்தால் என்ன சாதிக்க முடியும், சாத்வீக எதிர்ப்பை பதிவு செய்வது எப்படி, கல்வி, இயந்திரம் போன்றவற்றைப் பற்றி தமது கருத்துகளை அலசியிருப்பார். இயந்திரம் பற்றி அவர் குறிப்பிடும் ஓர் இடத்தில், இயந்திரங்களால் மனிதனின் பணிகள் பாதிக்கப்படுவதையும், மனித உழைப்புக்கு மதிப்பில்லாது போவதையும் குறிப்பிடுவார். அதில், ரயில்களுக்கும் டிராம் வண்டிகளுக்கும் எதிரான அவரின் அதீத எதிர்ப்பு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எந்த ரயில் வண்டியில் ஏறி இந்தியா முழுமைக்கும் ஊர் சுற்றி மக்களைச் சந்தித்தாரோ, அதே ரயில் வண்டியின் மீதான கோபம், ஆலைகளுக்கு எதிரான கொள்கை, இயந்திரங்கள் வேண்டாம் என்ற கருத்து... எல்லாம் 13 வயது மாணவனாக இருந்த எனக்குள் ஒரு தீவிர யோசனையைக் கிளப்பியிருந்தது. எனக்கு எழுந்த அதே சந்தேகத்தை அவரே ஒரு கேள்வியில் கேட்டு பதிலாகவும் ஆக்கியிருந்தார்.

நீங்கள் குறிப்பிடும் இந்த எதிர்ப்பு உணர்வையெல்லாம் அதே இயந்திரத்தின் மூலம்தான் அச்சிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.. என்று கேள்வியும் கேட்டு, அதற்கு பதிலாக, “விஷத்தைக் கொல்ல விஷம்தான் பயன்படும்” என்றும் கூறியிருப்பார் மகாத்மா காந்தி.
சிறு வயதிலேயே வேறு பொழுது போக்குகள் இல்லாத காலம் என்பதால், புத்தகங்களைப் படிப்பதே ஒரே பொழுது போக்கு! இந்த இந்திய சுயராஜ்யம் புத்தகத்தை நீண்ட நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன். அதில் என் பெயரும் வருடமும் திருவள்ளுவர் கழக இலச்சினையும் இருக்கும்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர். காந்திஜியின் கிராம சுயராஜ்யம் குறித்து குறிப்புகளைக் கேட்டார். கைவசம் இருந்த இதே நூலை அவரிடம் கொடுத்து உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிவந்தேன். ஆண்டுகள் பலவானாலும் காந்திஜியின் தர்ம சிந்தனைகள் மட்டும் உள்ளத்தில் பதிந்து விட்டன.

(பின் குறிப்பு: இலக்கிய தாகத்தை வளர்த்தது திருவள்ளுவர் கழகமும் ரசிகமணி டி.கே.சி., வாரிசுகளாய் தமிழ் கற்பித்த (பள்ளி சாராத) பெரியவர்களும் என்றால், அரசியல் வாசனையை வெறுக்க வைத்ததும்கூட அதை ஒட்டிய இடமும் தமிழாசிரியர்கள் என்ற போர்வையில் கட்சிப் பணிகளுக்கு அழைத்துச் சென்ற வாத்தியார்களும்தான்! திமுக கூட்டத்துக்கு ஆள் சேர்க்க எங்களை அழைத்துச் சென்றார்கள். தென்காசி பெரிய  கோயில் எதிரே நடக்கும் திமுக கூட்டத்தில், வை.கோபால்சாமி அடுக்கு மொழியில் பேசினால் அடுத்தடுத்து கை தட்ட நாங்கள் வேண்டும்! தேர்தல் நோட்டீஸ் கொடுக்க நாங்கள் பயன்படுத்தப் பட்டோம். கருணாநிதியைத் தவிர வேறு தமிழறிஞர்களே தமிழகத்தில் தோன்றியதில்லை என்று கற்பிக்கப்பட்டோம். அண்ணாத்துரையைத் தவிர வேறு மேடைப் பேச்சாளரே கிடையாது என்று பாடம் புகட்டப்பட்டோம். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சரிதானே!)

(இந்தப் படம், ஓவிய நண்பர் ஜெ.பிரபாகர் வரைந்து கொடுத்தது.)

வியாழன், செப்டம்பர் 19, 2013

தினமணி: பத்திரிகை வரலாறில் ஒரு விநோதம்!


தினமணி நாளிதழ் துவக்க வரலாற்றில் ஒரு புதுமை, வித்தியாசம், விநோதம்... என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.
அது என்ன விநோதம் என்றால்... முதல் நாள் இதழ் வெளிவந்து அந்நாளே பத்திரிகை அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதுதான். அநேகமாக முதல் நாள் இதழ் வெளிவந்த அன்று, மாலை அலுவலகத்தில் அன்றைய முதல் பத்திரிகையை பார்த்திருக்க அலுவலகப் பணியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று தோன்றுகிறது.
தமிழர்க்காக தமிழர் நடத்தும் நாளிதழ் என்ற கொள்கை முழக்கத்துடன் துவங்கியது தினமணி. ஆசிரியர்- தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் (நானும் அந்த ஊருதானுங்கோ).
பாரதி தினத்தில் செப்.11 அன்று (1934ம் வருடம்) துவக்க விழா கண்டு முதல் இதழ் வெளியானது. முதல் நாள் தலையங்கத்தில் பாரதி குறித்த நினைவு அஞ்சலி, செய்தி, பாரதி விழா குறித்த செய்திகள் எல்லாம் வந்துள்ளன. (தொடர்ந்த வருடங்களில் - செப்டம்பர் 11ம் தேதியை ஒட்டி ஓரிரு நாட்கள்- பாரதி விழா நிகழ்ச்சிகள் என அரைப் பக்கம், முக்கால் பக்கத்துக்கு செய்திகள் வெளிவந்துள்ளன)
அன்றைய முதல்நாள் தலையங்கத்தில், சற்று மேலே ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.
------------------------
அறிவிப்பு:
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு “தினமணி” காரியாலயத்திற்கு நாளைக்கு விடுமுறை. அடுத்த இதழ் 13-9-1934 வியாழக்கிழமை வெளிவரும்.
- மானேஜர்
-----------------------
இந்தக் குறிப்புப் படி, 10ம் தேதி பணியாளர்கள் வேலை செய்து, 11ம் தேதி காலை இதழ் வந்திருக்கும். அன்றைய தினம் அதாவது 11ம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்தால், 12ம் தேதி இதழ் வெளிவந்திருக்காது, 13ம் தேதி தொடர்ந்து வெளியாகியிருக்கும்.
அல்லது, இந்தக் குறிப்பில் கண்டபடி, 11ம் தேதி மாலை ஆசிரியர் குழுவில் உள்ள சிலர் குறிப்பிட்ட அளவில் பணிகளைச் செய்து முடித்துவைத்து, 12ம் தேதி விடுமுறை எடுத்துக் கொண்டு, சில பணியாளர்களை வைத்து அச்சகத்தை ஓட்டியிருக்கலாம்.
அல்லது, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காரியாலயத்துக்கு நாளை விடுமுறை என்று 11ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால், 12ம் தேதி காலை விநாயக சதுர்த்தியை முடித்து, அன்று மாலை பணியாளர்கள் வந்து பதிப்புப் பணியைத் தொடங்கியிருக்கலாம்.
1934 செப்.11 அன்று பஞ்சாங்கப்படி, காலை 8 மணி வரை த்விதியை என்றும் பின்னர் திரிதியை என்றும் உள்ளது. எனவே அன்று மாலையே விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, செப்.12 அன்று காலை சதுர்த்தி பூஜைகள் கொண்டாடப் பட்டிருக்கலாம்.
இதையெல்லாம் குறிப்பிடக் காரணம், இந்த வருடம் செப்.9ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, தினமணியின் 9ம் பதிப்பு விழுப்புரத்தில் தொடங்கப்பட்டது என்பதே! விநாயக சதுர்த்தி நாளில் என்றில்லாமல் அதற்கு முந்தைய நாளாக இருந்தாலும், விநாயக சதுர்த்தியை ஒட்டியும் (விழாக் கால நாளில்) பாரதி தினத்திலும் தினமணி உதயமானது என்பதும், அடுத்த 80 ஆண்டுகளில் அதே நாளில் தினமணி 9ம் பதிப்பைக் கண்டுள்ளது என்பதும் இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று!!!

சனி, ஆகஸ்ட் 10, 2013

கல்யாணம் களைகட்டும்!

சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றுப் பாலம் கடந்தவுடன் வரும் கிராமச்சாலையில் வலப்புறம் திரும்பி 3 கி.மீ. சென்றால் மெய்யூர் கிராமம் வருகிறது. திருமணத்திற்காகக் காத்திருப்போர் இங்கு வந்து சேவித்து, திருக்கல்யாண உற்ஸவம் செய்ய வேண்டிக்கொண்டால், காரியம் உடனே கைகூடுகிறது.
13ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பால் தென்னகத்தில் பல கோயில்களும் நிர்மூலமாயின. தென்னாட்டைச் சேர்ந்த கோயில் விக்கிரகங்கள் ஆந்திரம் மற்றும் கர்நாடக திவ்ய தேசங்களைச் சென்றடைந்தபோது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இந்த சுந்தரராஜப் பெருமாள் விக்கிரகமும் இங்கு வந்து சேர்ந்ததாம். அப்படி ஆந்திரத்தை நோக்கிச் செல்லும்போது, பாலாற்றைத் தாண்டிச் செல்ல மனமில்லாமல், மறைந்து கொண்டார்களாம்.
உடன் வந்த திருவகீந்திரபுரத்து தேவநாதப் பெருமாள், அருகிலுள்ள செட்டிபுண்ணியம் கிராமத்தில் போய்ச் சேர்ந்து கொண்டாராம். வெள்ளம் வடிந்தபிறகு, பாலாற்றில் வெளிப்பட்ட இந்த விக்கிரகங்களை எடுத்துவந்த மெய்யூர் கிராமவாசிகள், ஏற்கெனவே இருந்த பல்லவர் காலத்துக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார்கள். இந்த செüந்தர்ராஜப் பெருமாள் சிரிப்பழகில் லயித்துப் போய், ""பொன்னிவர் மேனி, மரகதத்தின் பொங்கிளஞ்சோதி அகலத்தாரம்மின்'' என்று திருநாகையில் பாடப்படும் பாசுரங்களையே இங்கும் பாடி மகிழ்கிறார்கள்.
இங்கே மூலவர் சந்நிதியில் உபய நாச்சிமார்களோடு சுந்தரராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். பெருமாளின் வசீகரிக்கும் திருமுகம் நம்மை அங்கேயே நின்று அவர் அழகில் ஈடுபடச் செய்துவிடுகிறது. தனி சந்நிதியில் சுந்தரவல்லித் தாயார் சேவை சாதிக்கிறார். உற்ஸவமூர்த்திகளும் தனியாக ஆழ்வாராசாரியரும் விக்கிரக ரூபத்தில் அழகுடன் காட்சியளிக்கிறார்கள். வெளியே தனியாக கருடன் சந்நிதியும் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. வரும் ஆக. 16,17,18 தேதிகளில் பவித்ரோத்ஸவம் நடைபெறுகிறது.
தகவலுக்கு: 94440 06963

புதன், ஆகஸ்ட் 07, 2013

உலகின் - முதல் காதல் கடிதம்காதல் கடிதங்கள் கோலோச்சிய காலம் போய் எஸ்.எம்.எஸ்ஸும் எம்.எம்.எஸ்ஸும் பறந்து கொண்டிருக்கும் நாட்கள் இவை. இருந்தாலும், கடிதம் எழுதுவதும், அதை அவ்வப்போது, பகுதி பகுதியாகப் படித்து மகிழும் சுகம் தனி சுகம்தான்!
நம் இந்திய மரபில் முதல் காதல் கடிதமாகக் கருதப் படுவது, ருக்மிணி, ஸ்ரீகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதம்தான். ஸ்ரீமத் பாகவதம் - தசமஸ்கந்தம் - 52வது சதகத்தில் வரும் அற்புதமாக நடை அழகு இந்தக் கடிதத்தில் காணப்படும். இது, எழுதிய ருக்மிணியின் சொற்களா.. இல்லை ஸ்ரீமத் பாகவதத்தைத் தொகுத்த மகரிஷியின் சொல்நடையா? எப்படி இருந்தால் என்ன..? கண்ணன் என்னும் காதலனின் கம்பீரத்தைக் காதால் கேட்டுக் கேட்டு வளர்த்தெடுத்த காதல் அல்லவா? அவனின் குணநலன்களை எல்லாம் இவள் மனத்தில் தேக்கி வைத்தாள். கடிதத்தில் வெளிப்படுத்தினாள்... அர்ச்சனைப் பூக்களாக!
ஓர் அந்தணர் மூலமாக கண்ணனை மனத்தில் வரித்து எழுதிய இந்த முதல் காதல் கடிதத்தில், அவனையே மணவாளனாக அடைய, தான் ஆசை கொண்டிருப்பதையும், எப்போது எப்படி, தன்னை கடத்திச் சென்று, கடிமணம் புரிய வேண்டும் என்ற வழியையும் காட்டி... ருக்மிணி வேண்டுகோள் விடுப்பது... எண்ணி எண்ணி ரசிக்கத் தக்கதுதான்!
அந்த: புராந்தர சரீம் அனிஹத்ய பந்தூ: த்வாமுத்வஹே கதம் இதி ப்ரவதாம் உபாயதம்... பூர்வ இத்யுரஸ்தி மஹதீ குலதேவி யாத்ரா... யஸ்யாம் பஹிர்நவவதூர் கிரிஜாம் உபேயாத் - குலதேவியைக் கும்பிட்டு வணங்க யாத்திரையாக வரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்து என்கிறாள் ருக்மிணி. உபாயத்தை அவளே சொல்லும் அழகு, அழகிய மணவாளனுக்கு வேலையை மிச்சப் படுத்துகிறது. ஒரு பெண்ணின் விருப்பத்தையே பூர்த்தி செய்தான் கண்ணன் என்ற ஆண்மகன் என்பதாக உலகம் பேச வேண்டும்; ஒரு பெண்ணை அவள் விருப்பம் இன்றி கடத்திச் சென்றான் என்ற அவச் சொல் தன்னை அண்டக் கூடாது என்பதில் கண்ணன் மட்டுமல்ல, அதைச் சொன்ன வியாசரும் குறிப்பாக இருந்திருக்கிறார்.
கடிதத்தின் அழகையும், உள் மன உணர்வையும் ரசிப்பதை விட்டு, இந்தக் காலத்தில் இதற்கும் ஒரு பலனை இட்டுக் கட்டி விட்டார்கள். இந்தக் கடிதத்தை பாராயணமாகச் சொன்னால், விரைவில் திருமண பாக்கியம் கூடி வரும் என்று ஒரு கதை விடப்படுவதுதான் அது. இது ஒரு புறம் இருக்கட்டும்; ஆனால், இந்தக் கடிதத்தில் உள்ள மொழி நடையையும், காதல் வயப்பட்ட பெண்ணின் உள்ளத்து அழகையும் உணர்ந்தால் போதும்..! பாராயணமாவது ஒண்ணாவது..! எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிப் பார்க்கலாமே என்று தோன்றும்!
கடிதத்தின் முதற்சொல்லே கம்பீரத்தைக் காட்டும். கரு நிறக் கண்ணனை அழகன் என்று உலகு சொன்னாலும், தான் காதால் கேட்டு அறிந்த கண்ணனை, எடுத்த எடுப்பிலேயே புவன சுந்தரா... என, உலகில் சிறந்த அழகனே என்று விளிக்கும் ருக்மிணியின் மனத்தை என்னவென்பது? அழகு - கண்களால் கண்டு புறவுலகில் காணத் தெரிவதா? இல்லையெனின் காதால் குண நலன் கேட்டு மனத்தில் உருவத்தை வரைந்து அழகெனக் கொள்வதா?
அடியேன் மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராக இருந்த போது, ஒரு முறை கலைமகள் காரியாலயத்தின் நூலகத்தில் கிடந்த பழைய தாள்கள், குப்பைகளைக் கிளறி, இடத்தை தூய்மைப் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. முத்து முத்தான அழகுக் கையெழுத்து. கட்டுரையின் அடியில்- கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்று போட்டிருந்தது. கட்டுரையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டேன். அது ஏற்கெனவே பிரசுரமாகியிருக்கக் கூடும். ஆனாலும் மீண்டும் ஒரு முறை "முதல் காதல் கடிதம்” என மஞ்சரியில் பிரசுரித்தேன். என் காலத்து வாசகனுக்கு அறிமுகப் படுத்தலாமல்லவா! இதன் சம்ஸ்க்ருத நடை அழகும், தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ எழுதிய நடை அழகும்..!! என்றென்றும் ரசிக்கத் தக்கவை!

=========================
ருக்மிணி எழுதிய உலகின் முதல் கடிதம்:
------------------------------------
ச்ருத்வா குணான் புவனஸுந்தர ச்ருண் வதாம்தே
நிர்விச்ய கர்ண விவரைர் ஹரதோங்க தாபம்
ரூபம் த்ருசாம் த்ருசிமதாம் அகிலார்த்த லாபம்
த்வை அச்யுதா விசதி சித்தமபத்ர பம்மே

காத்வா முகுந்த மஹதி குலஸீலரூப
வித்யா வயோ த்ரவிணதாம் அபிராத்ம துல்யம்
தீராபதிம் குலவதீந வ்ருணீத கன்யா
காலே ந்ருஸிம்ஹ நரலோக மனோபிராமம்

தன்மே பவான் கலுவ்ருதபதிரங்க ஜாயாம்
ஆத்மார்பிதச்ச பவதோத்ர விபோ விதேஹி
மாவீர பாக மபிமர்சது சைத்யஆராத்
கோமா யுவன் ம்ருகபதேர் பலிமம்புஜாக்ஷ

பூர்தேஷ்ட தத்த நியமவ்ரத தேவ விப்ர
குர்வர்சனாதி பிரலம் பகவான் பரேச:
ஆரோதிதோ யதி கதாக்ரஜ ஏத்யபாணிம்
க்ருஹ்னாது மே ந தமகோஷ ஸுதாதயோன்யே

ச்வோ பாவினி த்வமஜிதோத் வஹனே விதர்பான்
குப்த: ஸமேத்ய ப்ருதநா பதிபி: பரீத:
நிர்மத்ய சைத்ய மகதேந்த்ர பலம் ப்ரஸஹ்ய
மாம் ராக்ஷஸேன விதினோத்வஹ வீர்ய ஸுல்காம்

அந்த: புராந்தரசரீம் அனிஹத்ய பந்தூ:
த்வாமுத் வஹே கதமிதி ப்ரவதாம் யுபாயதம்
பூர்வேத்யுரஸ்தி மஹதீ குலதேவி யாத்ரா
யஸ்யாம் பஹிர் நவவதூர் கிரிஜா முபேயாத்

யஸ்யாங்கி பங்கஜ ரஜ: ஸ்நபனம் மஹாந்தோ
வாஞ்சந்த்யுமாபதிரிவாத்ம மதமோபஹத்யை
யர் ஹ்யம்புஜாக்ஷ நலபேய பவத் ப்ரஸாதம்
ஜஹ்யாமஸீந்வ்ரத க்ருசான் சத ஜன்மபி: ஸ்யாத்
===========================


முதல் காதல் கடிதம்
- கா.ஸ்ரீ.ஸ்ரீ
----------------------
அவள் ஓர் அரசகுமாரி; ஆயிரம் கண்களால் பார்க்கத்தக்க பேரழகி. அவளுக்குத் திருமண வயது; ஆனால் சுயம்வரம் நடக்கவில்லை. சுயம்வரம் நடந்திருந்தால், அவள் தான் விரும்பிய இள மன்னனுக்கு மாலையிட்டிருப்பாள். ஆயினும் அவள் தந்தையும் அண்ணன்மாரும் அவளை ஒரு தீய இளவரசனுக்கு மணம் முடிக்க நிச்சயித்தனர். அவளுடைய கருத்தையோ விருப்பத்தையோ கேட்க அந்த அரண்மனையிலும் தலைநகரிலும் எவரும் இல்லை. நகர மக்கள் அவள் அந்தத் தீயவனை மணப்பதை விரும்பவில்லை ஆயினும், அரசனை எதிர்த்து மக்கள் என்ன பேச முடியும்?
இந்த நிலையில் அந்த அரசகுமாரி மனஉறுதியுடன் தானே ஒரு முடிவுக்கு வந்தாள். திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அரண்மனையில் தெய்வ வழிபாடுகள் நடத்த ஒரு வேதியர் வருவதுண்டு. அவள் அந்த வேதியரைத் தனியே அழைத்து, தான் ஓர் இளமன்னனிடம் காதல் கொண்டிருப்பதாகவும், தன் கடிதத்தை அவனிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவரை வேண்டினாள். ""குழந்தாய், உனக்கு உதவுவது என் பெரும் பாக்கியம். இன்றிரவு நீ உன் கடிதத்தை எழுதி வைத்திரு. நாளைக் காலையிலேயே நான் உன் கடிதத்துடன் அந்த நகருக்குப் புறப்படுவேன்'' என்றார் வேதியர்.
அரசகுமாரி அன்றிரவில் அனைவரும் தூங்கிய பின்பு, தன் அந்தப்புர அறையில் தனியே அமர்ந்து, கடிதம் எழுதுவது பற்றிச் சிந்தித்தாள். கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது? மணம் ஆவதற்கு முன்பே "பிராணநாதா' என்று ஆரம்பிக்கலாமா? அது சரியன்று. பெயரைக் குறிப்பிட்டு எழுதலாமா? சே! அது மரியாதைக் குறைவாகும். அந்த இளமன்னனின் இணையற்ற எழிலும், ஒப்பற்ற நற்குணங்களும் அவள் கண்முன்பு நின்றன. உடனே அவள் கடிதம் வரையலானாள்:

புவன ஸுந்தர!
உங்கள் அழகைக் கண்டு மட்டுமே நான் உங்களை விரும்புவதாக நினைக்க வேண்டாம். உங்களுடைய சிறந்த மேன்மையான குணங்களைப் பல நல்லோர் வாயிலாகக் கேள்வியுற்றிருக்கிறேன். அந்த நற்பண்புகள் என் காதின் வழியே நெஞ்சிற் புகுந்து என் இதய தாபத்தைத் தணித்துள்ளன.
நீங்கள் கண்ணின் ஒளி, கண்ணைப் படைத்தவர்கள் உங்களைக் கண்டதுமே அனைத்துப் பெரு நலன்களையும் பெறுகின்றனர். நாணமற்ற எனதுள்ளம் உங்கள் நினைவிலேயே மகிழ்ந்துள்ளது.
குலம், நல்லொழுக்கம், எழில் வடிவம், கல்வி, வயது, செல்வ நிறைவு ஆகிய அனைத்திலுமே தனக்கு மிகவும் பொருத்தமானவரான உங்களை, நற்குலத்திலுதித்த எந்தத் தீரமுள்ள மங்கைதான் மணம்புரிய வரிக்க மாட்டாள்? நரர்களிற் சிங்கமாகவும், அனைவரின் உள்ளத்தையும் கவரும் அழகராகவுமுள்ள உங்களை நான் என் கணவராக வரிக்கிறேன். உங்களிடம் தன் ஆத்மாவையே அர்ப்பிக்கும் மனைவியாக என்னை ஏற்றருளுங்கள்.
தாமரைக் கண்ணரே! சிங்கத்துக்குரிய பொருளைக் காட்டுக்   குள்ளநரி எடுத்துப் போக விடாதீர்கள். நான் பல நேம நிஷ்டைகளையும் விரதங்களையும் மேற்கொண்டு, அந்தணர்களையும் பெரியோர்களையும் துணைகொண்டு, எம்பெருமானை வழிபட்டிருக்கிறேனென்றால், நீங்கள் வந்து என் கையைப் பற்ற வேண்டும். இந்தக் கரம் வேறு எவருக்கும் உரியதன்று.
விரைவில் நடைபெறவிருக்கும் என் திருமண நாளுக்கு முன்பு, நீங்கள் படைவலிமையுடன் வந்து, பிறர் படையை வென்று, வீரமகளான என்னைக் கரம் பற்ற வேண்டும்.
"அந்தப்புரத்திலுள்ள உன்னை - எவரையும் கொல்லாதபடி - நான் எப்படிக் கரம் பற்ற முடியும்?' என்று நீங்கள் வினவலாம். அதற்கேற்ற உபாயம் சொல்லுகிறேன்; திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் தன் தோழிகளுடனும் உறவினருடனும் காவலுடனும், தன் குல தெய்வமான கௌரியை வழிபடுவதற்கு, நகரத்துக்கு வெளியிலுள்ள கோவிலுக்குப் பவனியாக வருவாள். தாங்கள் வந்து என்னை அழைத்துச் செல்வதற்கு அதுவே தகுந்த தருணம்.
சிவபெருமான் முதலிய பெரியோர் எவருடைய திருவடித் தூளியில் மூழ்கித் தங்கள் துயரம் நீங்கித் தங்களைத் தூயவராக்க முனைகிறார்களோ, அத்தகைய உங்களின் பேரருளை நான் பெற விரும்புகிறேன். அம்புயக் கண்ணரே! உங்களை நான் பெறவில்லையென்றால், உயிரை விடுவதைத் தவிர்த்து எனக்கு வேறு வழி இல்லை. நூறு பிறவிகளாயினும், கடுமையான நோன்புகள் நோற்று உங்களையே பெற விரும்புவேன்.
இப்படிக்கு
உங்கள் அன்புக்குரியவள்

அரசகுமாரி கடிதத்தை எழுதி முடித்துத் தன் காதலனையே நினைந்த வண்ணம் படுத்துத் தூங்குகிறாள். மறுநாள் விடிகாலையில் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அரசகுமாரி கதவைத் திறந்து பார்த்தாள். எதிரே வேதியர் நின்றார். அவள் அவரிடம் தன் கடிதத்தைக் கொடுத்தாள். அவர் உடனே தேரிலேறி, வேகமாக இளமன்னனின் நகரத்துக்குப் புறப்பட்டார். ஐந்தாறு நாளில் அவர் அந்த நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
அந்தத் தலைநகரத்துக்குச் சென்று, அவர் அரண்மனையை அணுகினார். எங்கும் பலத்த காவல் இருந்தும், வேதியர்களை உள்ளே போகத் தடுப்பவர் எவருமில்லை. வேதியர் அரண்மனைக்குள் போய், ஐந்தாவது கட்டில், தங்கத் தவிசில் தனியே வீற்றிருந்த இளமன்னனைக் கண்டார். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
வேதியர் மன்னனைக் கண்டு, தாம் கொண்டு வந்த கடிதத்தை அவனிடம் கொடுத்தார். அதைப் படித்த இளமன்னன் மலர்நகை பூத்தான். ""வேதியரே, நீங்கள் இன்று இங்கு இருந்து ஓய்வு கொண்டு, நாளைக்குப் புறப்படுங்கள். அந்த அரசகுமாரியைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன். நீங்கள் வந்தபோது அவள் நினைவில்தான் இருந்தேன். எல்லாம் சரியாக நடக்குமென்று அவளிடம் சொல்லுங்கள்'' என்றான்.
திருமணத்துக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. பகலைத் துரத்திக் கொண்டு வந்தது இரவு. அரசகுமாரி அந்தப்புரச் சாளரத்திலிருந்து ராஜவீதியை நோக்குகிறாள். வீதியில் பல ரதங்கள் போயின, வந்தன. எதிர்பார்த்த வேதியரைக் காணவில்லை. அவள் மனம் துணுக்குற்றது; "வேதியருக்கு வழியில் ஏதாவது தடை ஏற்பட்டிருக்குமோ? அரண்மனையில் இளமகனைப் பார்க்க முடியாமலிருந்திருக்குமோ? அல்லது என் காதலர் என்னை மறுத்திருப்பாரோ?' ஒன்றும் தோன்றாமல், சாளரத்தைப் பிடித்தபடி அவள் நின்றிருந்தாள்.
""என்ன பார்க்கிறாய், குழந்தாய்? இதோ நான் வந்துவிட்டேன். அந்த இளமன்னன் தக்க தருணத்தில் வந்து, உன் கையைப் பற்றுவான்'' என்ற ஒலி கேட்டது. அரசகுமாரி ஒரு நவரத்தின மாலையை அவருக்கு அளித்தாள்; ஆனால் அவர் அதைப் பெற மறுத்துவிட்டார். ""குழந்தாய், அரண்மனையில் எனக்குக் கிடைப்பதே யதேஷ்டம். நீ நல்லபடி மணமாகி வாழ்ந்தால் அதுவே எனக்குப் பரம சந்தோஷம்'' என்று கூறிவிட்டு அவர் தம் வீட்டை நோக்கி நடந்தார்.
திருமணத்திற்கு முதல் நாள் விடியற்காலை. அரசகுமாரி எழுந்தாள்; "இன்று நல்ல நாளாக இருக்க வேண்டும்' என்று தேவியை வேண்டினாள். தோழியர் அவளுக்கு மங்கல நன்னீராட்டி, கதிரவன் போல் ஜொலிக்கும் நகைகளை அணிவித்தனர். வழிபாட்டிற்குரிய மலர்மாலை, அட்சதை, மஞ்சள், வெற்றிலை பாக்கு, குங்குமம், கனி வகைகள் ஆகியவற்றுடன் அரசகுமாரி, கௌரியைப் பூஜிக்கப் புறப்பட்டாள். ஆயுதமேந்திய காவலர் அவளைக் காத்து வந்தனர். தோழிகளும் சுற்றமும் சூழ, அவள் அன்னமாக நடந்தாள்.
கோவில் நெருங்கியதும் அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. "என்ன நேருமோ?' என்ற திகிலுடன் அவள் கோவிலுக்குள் நுழைந்தாள். தேவியை முழுமனத்துடன் வணங்கி, ""அம்மா தாயே! நான் விரும்பும் இளமன்னனை மணக்க எனக்கு அருள் செய்'' என்று உருக்கத்துடன் வேண்டினாள்.
வழிபாடு முடிந்ததுமே அவள் கோவிலை விட்டு மெதுவாக வெளியே வந்தாள். பூஜை செய்து வந்த அவள் முகத்தில் ஒரு பேரொளி! தேவர் அனை வரும் தங்கள் ஆற்றல் முழுவதையும் கொண்டு படைத்த தெய்வ பிம்பமாக அவள் விளங்கினாள். மென்முறுவலுடன் அவள் அன்னமாக நடந்தாள். அவள் காதில் குண்டலங்கள் மின்னின. காற்சிலம்புகள் ஒலித்தன. அணிகலன்களுக்கு உயர்ந்த அணிகலனாக அவள் விளங்கினாள். நெஞ்சு துடிக்கக் கவலையுடன் அவள் எதிரே பார்த்தாள்.
ஒரு சித்திரத் தேர் நின்றிருந்தது. அதில் மேக வண்ணனான இளமன்னன் தேர்ப்படியில் அவளுக்காகக் காத்திருந்தான். மின்னலைப் போல அவள் வேகமாக ஓடினாள். மழை முகிலில் மின்னல் கலந்தது. இடியோசையுடன் தேர் புறப்பட்டு ஓடியது.
அங்கே இருந்தவரனைவரும் இந்த அழகுக் காட்சியைத் தம்மை மறந்து பார்த்தனர். காவலர்களின் கையிலிருந்து அவர்களையறியாமல் ஆயுதங்கள் கீழே விழுந்தன. தேர் மறைந்ததுமே யாவரும் சுயநினைவு பெற்றனர். அரசகுமாரி மறைந்த செய்தி நகரெங்கும் பரவியது.
சென்ற தேரைத் துரத்துவதற்கு உடனே மன்னன் படைவீரர்களை அனுப்பினான். வேகமாக ரதங்களிற் சென்ற படைவீரர்கள், மிகத் தொலைவில் அரசகுமாரி தேரில் வருவதைக் கண்டனர். அந்தத் தேரை நிறுத்த, அவர்கள் அம்புகளை எய்தனர். ஆனால் இதென்ன! அவர்கள் எய்த அம்புகள் அவர்களை நோக்கியே திரும்பின. மேலும் அம்பு மழை பொழிந்தது. அவர்களின் ரதங்கள் எரியலாயின; குதிரைகள் படுகாயமடைந்து வீழ்ந்தன. உயிர் தப்பினால் போதுமென்று அவர்கள் திரும்பினர்.
அரசகுமாரியை மணக்கவிருந்த தீய இளவரசன் இந்தச் செய்தி கேட்டு, வானத்தை அண்ணாந்து பார்த்து அவமானம் தாங்காமல் தன் நகரத்துக்குத் திரும்பினான். பிறகு அவன் எவளை மணந்து படுகாயப்படுத்தினானோ, அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்!
அரசகுமாரியுடன் சென்ற இளமன்னனின் தலைநகரம் திருமண விழாக் கோலம் பூண்டது. பசுமையான கொடிகள் தென்றலில் எங்கும் பறந்தன. முரசங்கள் ஆர்த்தன. நாகசுரங்கள் ஒலித்தன. தேவசபை போன்ற அழகிய மணிமண்டபத்தில், நகர மக்களும் சுற்றமும் அந்தணரும் சூழ, இளமன்னன் அரசகுமாரியின் கையைப் பிடித்து, அக்கினியின் முன்பு, ""முதுமை வரையில் நாம் பிரிவின்றி இணைந்திருந்து நல்வாழ்வு வாழ்வோம்'' என்று வேத முறைப்படிப் பிரதிக்கினை செய்தான். அவள் கரத்தைப் பிடித்தபடியே தீயை ஏழு முறை வலம் வந்தான். திருமணம் இனிதே நிறைவேறியது.
அந்த அரசகுமாரி அந்த இளமன்னனுடன் நெடுநாள் ஸகல ஸௌபாக்கியத்துடன் இன்பமாக வாழ்ந்தாள்.
இந்த அரசகுமாரி எழுதிய கடிதமே, இன்றும் உலகில் ஒப்பற்ற முதல் காதற்கடிதமாகப் பொலிவுற்றுத் திகழ்கிறது.
- ஆதாரம்: ஸ்ரீமத்பாகவதம், 10, 52, 37-43.

செவ்வாய், ஜூலை 23, 2013

மொழியின் பயன்பாடு: வளர்ச்சியா? தேய்மானமா?


ஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்த்து பலரும் மிரண்டு விட்டார்களாம்.
பின்னே...
‘சா’வை வரவேற்கிறோம் என்று எழுதி வைத்திருந்தால்..?!
----
ஸ்ரீ.ஸ்ரீ. ->
ஸ்ரீ, ஜ, ஹ, க்ஷ, ஸ, ஷ இந்த எழுத்துகள் எல்லாம் வந்தால், ஏதோ தீண்டத் தகாத எழுத்துகள் வந்துவிட்டதுபோல், பலரும் க-ன வரையுள்ள எழுத்துகளில் ஏதேனும் ஒன்றை, அதன் ஒலிக்குறிப்பை இட்டு நிரப்புவதைப் பார்த்திருக்கிறேன்.
ஷ, ஸ, ஜ - இம்மூன்றுக்கும் ‘ச’ எழுத்தை இட்டு நிரப்புவதும்,
ஹ -வுக்கு ‘க’ என்று எழுதுவதும்,
க்ஷ-வுக்கு ட்ச என எழுதுவதும் வழக்கமாக உள்ளது.
நானும் கூட பெரும்பாலும் காமாட்சி, மீனாட்சி, இமாலயம், இமாசலம், அலகாபாத் என்று க்ஷ, ஹ வுக்கு மாற்றெழுத்துகளை மரபுரீதியாக பயன்படுத்தி விடுகிறேன்.
ஆனால், ஷ - ட வாவதும், ஸ, ஜ வை என்ன செய்வது என்றே தெரியாமல் விடுவதும் நடக்கத்தான் செய்கிறது.
விஷம் - விடமாகிவிடும். கஜம் - கசமாகுமா? ஜாங்கிரி- சாங்கிரி ஆகுமா? ஜடம்- சடம் என்றாகும்... சரி... ஜட்டி சட்டியானால் பொருள் சுட்டும் பொருள்களே வேறாகுமே!
சரி கிடக்க்கட்டும்... ’ஸ்ரீ’ என்னாவது? 'திரு’வாக்கலாம். இருந்தாலும் ஒலிக் குறிப்பு ஒன்றாயிருந்தால் நலமாக இருக்குமே என்று எண்ணத் தோன்றும்.
----
2003ம் ஆண்டு ஜனவரி 29ம் நாள். மஞ்சரி இதழாசிரியராக இருந்த நானும் கலைமகள் இதழாசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனும் திருவல்லிக்கேணிப் பக்கம் சென்று கொண்டிருந்தோம். திடீரென திருவல்லிக்கேணி  நெடுஞ்சாலையில் உள்ள பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புத்தகக் கடைக்குள் நுழைந்தோம். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தவர், எனக்கு அவர் எழுதிய நூல் ஒன்றைப் பரிசளித்தார். முகப்பில் எழுதிக் கையெழுத்திட்டு. ஆனால், அவரோ பெருங்கவிக்கோ ஆயிற்றே.... அதனால் ஒரு வெண்பாவையே ஒரு வாழ்த்துரையாக எழுதிக் கையெழுத்திட்டு என்னிடம் அளித்தார்.
நூலை வாங்கி தலைப்பைப் படித்தேன். சில நொடிகள் புரியவில்லை. கீழாம்பூராரும் சற்று விழித்தார். என் முகத்தைப் பார்த்தார்.
நூலின் பெயர் இதுதான்.... “அமெரிக்க அன்னை கூசுடன் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்”
அமெரிக்க அன்னை - சரி... அது என்ன "கூசுடன்..?” 
அப்புறம்தான் எனக்கு ஒருவாறு  புரிந்தது... அது "ஹூஸ்டன்” என்று!
ஹூஸ்டனில் கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி அம்மைக்கு பிள்ளைத் தமிழ் பாடியிருக்கிறார் வா.மு.சே.
காப்புப் பருவம் தொடங்கி, ஊசல் பருவம் முடிய பிள்ளைத் தமிழின் இலக்கணம் அமைய பத்துப் பருவங்களில் பாடல்களையும் அதற்கான விளக்கவுரையையும் எழுதியிருந்தார் அந்த நூலில்.
விடயம் இத்துடன் முடியவில்லை...
அவர் எழுதித் தந்த வெண்பாவில் என் பெயரையும் சிரீராம் என்றோ, சிறீராம் என்றோ தோன்ற எழுதியிருந்தார்- அந்த முதல் ஈரெழுத்துக்கும் அசை அமைய!
அவர் எழுதியிருந்த வெண்பா... இதுதான்!
தமிழ் வாழ்க!
மஞ்சரி நல்லிதழ் மாபணி யாளர்நல்
கொஞ்சு தமிழ் சிரீராம் - விஞ்சுவளம்
மென்மேல்நல் ஆக்கங்கள் செய்கவே வெல்கவே
நன்றுவளம் வாழ்க நனி!
- அன்புடன்
(29/1/2003)
சென்னை
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
இந்த சிரீயைப் பார்த்தவுடன் எனக்கு ஆழ்வாரின் பாசுரங்கள்தான் நினைவுக்கு வந்தது.
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே...; சிரீதரா என்றழைத்தக்கால் நங்கைகாள் நாரணன் தன் அன்னை நரகம் புகாள்...; செய்தன சொல்லிச் சிரித்தங்கு இருக்கில் சிரீதரா..; செங்கண் நெடுமால் சிரீதரா என்றழைத்தக்கால்..; என்றெல்லாம் ஆழ்வார்கள் இந்த ஸ்ரீ-யைச் சொல்லி பாடியிருக்கிறார்கள்.
இப்போது ஒரு கேள்வி-
அந்தக் காலத்தில் உச்சரிப்புக்கு வேறு எழுத்தில்லாமல் உச்சரிப்பை சரியாகச் செய்து ஒலிக்கவே இப்படி இட்டுக் காட்டியிருந்தார்கள்.
நமக்கு இந்த ஐந்து எழுத்துகளும் சரியான ஒலிக்குறிப்பைக் காட்டுவதற்கு இடைக்காலத்தில் எப்படியோ புகுந்துவிட்டன. சரி... நமக்கு இவை கிடைத்திருக்கும்போது, நாம் ஏன் இந்த எழுத்துகளைப் புறக்கணிக்க வேண்டும்?
ஏற்கெனவே ழ,ள,ல-க்கள் எல்லாம் ஒரே ஒலிக்குறிப்பாக நம்மவர் உதடுகளில் திருநடம் புரியும்போது, ண,ன,ந-க்கள் எல்லாம் ஒரே ந-வாக ஒலிக்கப்படும்போது, சின்ன ர-வா, பெரிய ற-வா என்ற கேள்விகளெல்லாம் கேட்கப்படும்போது...
இந்த ச,க,சிரீ,ட்ச-வையும் நாம் முடக்க வேண்டுமா?
குறைந்த எழுத்துகள் உள்ளது நம் மொழியின் பலம். உண்மைதான்! ஆனால், எழுதி வைத்ததைப் படிக்கும்போது, உச்சரிப்பு கெட்டுப் போனால் மொழியின் வளர்ச்சி எங்கே இருக்கும்?! தேய்ந்து கொண்டேதான் வரும்!
ஓர் எழுத்து கூடுவதால் நமக்கு என்ன பாரம்..? வலுக்கட்டாயமாக அதை ஏன் நாம் புறக்கணிக்க வேண்டும்? கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற இடத்தில் நாம் பயன்படுத்தலாமே!

வியாழன், ஜூலை 18, 2013

கவிஞர் வாலி : ஆத்மாவின் சங்கமம்!!


சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும்.
கவிஞர் வாலியைப் பற்றி என்னுள் பதிந்த பிம்பமும் அதுதான்! ஒரு ரசிகனாக... தமிழைக் காதலிக்கும் ஒரு காதலனாக என் பள்ளிப் பருவத்தில் இருந்து கேட்டுக் கேட்டு வளர்ந்த வாலியின் பாடல்களும் கவிதைகளும் அவரைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் சினிமாக்காரர்கள் என்றால் போலித் தனமும் அதிகம் இருக்கத்தான்  செய்யும் என்ற உள்மனப் பதிவும் கூடவே இருந்ததால், கிட்டே நெருங்கிப் பார்த்தும் எட்டியே நிற்க வைத்திருந்தது மனது. இருப்பினும் இன் இளமைக் கால எதிர்பார்ப்புகளுடனேயே இருந்த எனக்கு சென்னையில் பத்திரிகை வாசம், அவருடன் நெருங்கிய வாசத்தை ஏற்படுத்தித் தந்திருந்தது.
மயிலாப்பூர்வாசியாக இருந்தேன். அதனால், அடிக்கடி வாலியைப் பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு பத்திகையாளனாக... பார்ப்போம், சிரிப்போம்... விலகிச் செல்வோம்.
வாலியின் அரசியல் பார்வைகளையும், அரசியலார்களுடன் சரிந்து விழுந்து, மொத்தத்தில் சரணாகதியாகக் கிடப்பதையும் கண்டு ஒரு வித வெறுப்பே வளர்ந்திருந்தது. ஸ்ரீரங்கத்து மண் வாசத்தில் பிறந்து வளர்ந்திருந்த போதும், எனக்கு ஏனோ ஓர் அன்னியோன்யம் அவரிடம் பிறந்ததில்லை. அன்னியப்பட்டே விலகியிருந்தேன். ரங்கநாயகி என்று ஒருவரைப் பாடுவதையும், இன்னொருவரை அண்டிக் கிடப்பதையும் கண்டு சீச்சீ... என்று எண்ணிய காலமும் உண்டு.
ஆனால்... அவர் ஒரு கவிஞர். அந்தக் காலத்தில் மன்னரைப் பாடி பரிசில் பெறும் புலவன் இருந்தானில்லையா? அவன் என்ன... மன்னன் என்ற மனிதனையா பாடினான்..? மனிதனாக இருந்த, மன்னன் பதவியில் உள்ள நபரைத்தானே பாடினான்.. அதுபோல்தான் பரிசில் பெற விழையும் இந்தக் கவிஞனும்! - என்று சமாதானம் சொல்லும் என் மனம்.
விகடன் பிரசுரத்தின் பொறுப்பில் இருந்தபோது.... ஒருநாள்...
வாலியின் புதிய கவிதை நூலுக்கான கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து படித்துப் பார் எனக் கொடுத்தார் அப்போதைய ஆசிரியர் வீயெஸ்வி.

கம்பன் எண்பது, ஆறுமுகன் அந்தாதி என இரண்டு பிரதிகள். அப்போது வாலியின் கவிதைகள் விகடனில் தொடராக வந்து பின்னர் புத்தகமாக உருப்பெற்றதுண்டு. ஆனால், நூலாகப் பிரசுரம் செய்வதற்காகவே தனியாகக் கொடுத்திருந்தார் அதனை.
அனைத்தும் வெண்பாக்கள். கம்பன் எண்பது - என்பது மரபுக் கவிதை களிநடம் புரிய அமைந்திருக்கும் வெண்பாத் தொகுப்பு. படிக்க மிகவும் சுகமாக இருந்தது. அந்தப் பாடல்களுக்கு விளக்கமும் எழுதியிருந்தார் பேராசிரியை வே.சீதாலட்சுமி என்பவர். அதுபோல், ஆறுமுகன் அந்தாதிக்கு ம.வே.பசுபதி விளக்கம் எழுதியிருந்தார்.
இவற்றை நூலாக்கும் முயற்சியில் இருந்தேன். ஏதோ கொஞ்சம் தமிழ் படித்த காரணத்தால் கம்பன் எண்பது நூலில் உள்ள வெண்பாப் பாடலில் ஓரிரு இடங்களில் தளை தட்டுவதையும், சில வார்த்தைகளின் பொருள் புரியாமையையும் உணர்ந்தேன்.
நூலின் பிழை திருத்தப் படியை எடுத்துக் கொண்டு வாலியின் வீட்டுக்குச் சென்றேன். குங்குமப் பொட்டு துலங்க, வாலியின் எப்போதும்போன்ற வசீகரம் அப்போதும் இருந்தது. எப்போதும் கூட்டத்திலேயே சந்தித்துப் பழகிய நான், முதல் முறையாக வீட்டில் தனிமையில் சந்தித்தேன்.
நூல் திருத்தப் படிகளை கையில் வாங்கியவர் அதை அப்படியே சற்றுத் தள்ளி ஒரு மேஜையில் வைத்தார்.
”ம்... அப்புறம்.. உன்னைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்?” என்று தொடங்கினார்... அவருக்கு என் நெற்றிக் குறி, இந்தக் காலப் பத்திரிகை உலகத்தில்... என்னைக் குறித்தான ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்த்தியிருந்தது எனக்குப் புரிந்தது.
வைணவ பரிபாஷையில் பேச்சுக் கொடுத்தேன்... "அடியேன்... ஸ்ரீராமன். பிறந்தது அரங்கன் காலடி. வளர்ந்தது பொதிகை மலையடி. கல்லூரி திருச்சி பிஷப். அத்யயனம் ஆசாரியன் திருமாளிகை!”
"எனக்கும் ஆசைதான்! ஆனால்.. எவ்வளவோ துறந்து, எத்தனையோ சமரசங்களுக்குப் பின் இந்த நிலையை அடைந்துள்ளேன்! இந்த உலகம் பொல்லாதது. உன் புறத்தோற்றம் உன்னை இந்தத் துறையில் முன்னேற விடாது. பத்திரிகைப் பொறுப்பாச்சே! தண்ணீர் சமாசாரம் என எல்லாம் இழுப்பாங்களே!.." - என்னமோ சொன்னார். ஆனால் எனக்கோ  மனம் அதில் ஒப்பவில்லை. நான் என் நிலையில் நின்றேன்.
"இல்லை ஸ்வாமி. இதற்குப் பெயர் திருமண் காப்பு. இது வெறும் புறச் சின்னம் என்று கூறுகிறீர்களா? இல்லை. இதனை ரட்சை என்போம். இது அடியேன் உடலுக்கு மட்டுமா ரட்சை..? நீங்கள் சொல்வது போன்ற சூழ்நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் ரட்சையல்லவா? ஒன்று... இதற்கு மதிப்பு கொடுப்பவராக இருந்தால் நாம் இதுபோன்ற இசகுபிசகான இடங்களுக்குச் செல்ல மாட்டோம். அடுத்தது, நம்மை எவரும் இத்தகைய இடங்களுக்கு அழைக்க மாட்டார்கள்... ஸ்வதர்மத்தை எப்போதும் நினைவுறுத்திக் கொண்டிருக்கும்” - இப்படியாகப் போனது என் விளக்கம். எனது சிறுவயதும் துடுக்குத்தனமும் அவரிடம் அப்படிப் பேசியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்!
ஆனால் அவரோ நான் பரந்த தளத்துக்கு வந்து எல்லோருடனும் பழகும் பத்திரிகையாளனாக வேண்டும் என்று தன் ஆசையைத் தெரிவித்தார். அதனால் என் புறச் சின்னங்களை கைவிட்டுவிட அறிவுரை கூறினார். ”இவற்றை அகத்தளவில் வைத்துக் கொள்ளலாமே!” என்றார்.  
ஆனால் நானோ, "அடியேன் என்னளவில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். தேவரீர் க்ஷமிக்கணும்...” என்றேன்.
"இல்லை சீராமா... நான் உன் நல்லதுக்குச் சொல்கிறேன்.... அதான் சொன்னேனே.. எனக்கு மட்டும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசையில்லையா என்ன?! ஆனால், நான் இந்தத் துறைக்கு வந்த கால கட்டம், மிகவும் கடினமான கால கட்டம்! எங்கே திரும்பினாலும் நாத்திகர்கள் ஆதிக்கம். சினிமாத் துறை முழுக்க பிராமண எதிர்ப்பாளர்கள் கோலோச்சினார்கள். காதுபட பாப்பான் என திட்டத்தான் செய்தான்... அதையும் மீறி அவர்களுக்கிடையே வளர வேண்டும்! ஒரு வெறி! வயிற்றுப் பாடு! வேறு வழி. அதனால் சமரசம் செய்து கொண்டேன்.. எல்லோருடனும் எல்லா இடத்துக்கும்தான் போயாக வேண்டும்! எல்லாம்தான் சாப்பிட்டாக வேண்டும்! இல்லை என்றால்... இன்றைய (....) உள்பட... பகாசுரர்கள் பலர் இருந்த சினிமாத் துறையில் என்னால் போட்டி போட்டு வந்திருக்க முடியுமா?” -  கேட்டார்... சற்று நேரம் மௌனம்!
அடுத்தது... அவரே தொடங்கினார்.
"காவிரிக் கரையில் இருந்து 3 ரங்கராஜன்கள் சென்னைக்கு வந்தோம். எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி எங்கள் துறையில் கால் பதித்தோம்... (அவர் சொன்ன 3 ரங்கராஜன்கள் - சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், வாலி... இவர்களைப் பற்றிய பேச்சு சற்று நேரம் ஓடியது...)
... நாங்கள் எங்கள் அளவில் குடும்பத்தில் எங்களுக்கான ஸ்வதர்மத்தைக் கைவிட்டுவிட்டோமா? -
கேள்வி எழத்தான் செய்தது. ஆனாலும், என் விடாப்பிடி விவாதமும் தொடர்ந்தது. சிறிது நேரத்தில்... "சரி உன்னிஷ்டம். நான் வேறு எதுவும் சொல்லவில்லை. நீ நல்ல நிலைக்கு வர வேண்டும். அது என் உள்ளக் கிடக்கை" என்று அத்தோடு என் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணி விவாதத்தை முடித்துவிட்டார்.
இப்போது, கம்பன் எண்பது - நூலின் பிழைதிருத்தும் படியை எடுத்துக் கொண்டார். அதில் சில இடங்களில் நான் கைவைத்திருந்தேன். ஒவ்வொரு பாடலாக நான் போட்டிருந்த திருத்தங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். விளக்கக் குறிப்புகளில் போடப்பட்டிருந்த திருத்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டார். இரண்டு வெண்பாவில் தட்டிய தளையை சுட்டிக் காட்டினேன். "இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்; வாசகருக்குப் புரியுமா என்று தெரியவில்லை?!” - சொல்லிக் கொண்டே வாலியின் முகத்தை சற்றே நோக்கினேன்.. (நீ யார் சின்னப் பையன்? என் பாடலில் கை வைக்க..? - இப்படிக் கேட்டுவிடுவாரோ என்று சற்றே அச்சமும் இருக்கத்தான் செய்தது.)
"இதோ... பார்.. சீராமா. நீ விகடனுக்கு வந்து... என்ன... ஒரு வருடம் ஓடியிருக்குமா? ஆனால் விகடன் மூலம் என்னைப் படிக்கும் வாசகர்கள், ஆண்டாண்டு காலமாய் இருக்கிறார்கள். வாசிக்கிறார்கள். அவர்களுக்கு வாலி என்ன சொல்கிறான் என்பது புரியும். விட்டுவிடு..." என்றார்,.
நான் மறுப்பேதும் சொல்லவில்லை. "சரி ஸ்வாமி.. அப்படியே இருக்கட்டும்...” சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டேன்.
அதன் பின்னர் அவரை தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. நானும் அதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இடமாற்றம் காரணமாக இருந்தது.
அண்மைக் காலத்தில் அழகியசிங்கர் நூலை எழுதி வெளியிட்டார். நிகழ்ச்சிக்குச் சென்று வாலியைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம்தான்! ஆனால்... செய்திகளின் பின்னே வேட்டை நாயாய்த் துரத்திக் கொண்டிருக்கும் அறிவுக்கு, வாலியின் கவித்துவத்தை ரசிக்கும் ரசனை கொஞ்சம் மக்கிப் போய்விட்டது என்றுதான் தோன்றியது. நிகழ்ச்சியை மட்டும் தவறவிட்டேனல்லேன்... வாலி என்னும் என் நலம்விரும்பிய கவிஞனையும்தான்!
அவர் சொன்ன வழிமுறைகள் வேண்டுமானால் எனக்குக் கசப்பாய்த் தெரிந்திருக்கலாம்... ஆனால், என் மீதான உள்ளார்ந்த அக்கறையை நான் உணர்ந்தே இருந்தேன்.
காவிரிக் கரையில் பிறந்து கூவத்தில் குளித்தெழுந்த வாலி என்னும் நளினமான ஆறு.... நிறைவாக ஆச்சார்யன் என்னும் கங்கையில் ஆச்சரியமாகக் கலந்தது. அவர் கடைசியாக எழுதிய நூல்... அதனைக் காட்டும்! அழகியசிங்கர் நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய ஏற்புரையில் வாலி சொன்னார். "எல்லாவற்றையும் கடந்து ஆத்மா கரையேறத் துடிக்கிறது!" - இது ஓர் ஆத்மாவின் அனுபவம் மட்டுமல்ல; ஆத்மார்த்தமான அனுபவமும்தான்! 

ஞாயிறு, ஜூன் 09, 2013

பொன்மொழி காட்டிய புதுமொழி!

வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |
சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||
எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது. ஆனால் கவலையில் தவித்துக் கற்றவன் தளர்ந்தால், அந்தக் கல்வியாலோ அறிவாலோ என்ன பயன்?
- இது ஒரு சுபாஷிதம். அதாவது, சம்ஸ்க்ருதப் பொன்மொழி.

இது எனக்குள் பலசமயங்களில் பலவித எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும். பல ஞானிகளைப் பற்றி நாம் படித்தால் ஒன்று தெரியும்... அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப் பட்டதில்லை. கவலை என்பது, அரக்கன் போன்றது. அது மனத்துள் புகுந்து விட்டால், பல நற்சிந்தனைகள் அந்த மனத்தைவிட்டு காணாமல் போய்விடும். நல்ல சிந்தனை ஓட்டம் என்பது தவம் போன்றது. ஒன்றைப் பற்றிய எண்ண அலைகள் மனத்தில் மீண்டும் மீண்டும் மோத, அது இறுதியில் ஒரு புதிய பரிணாமத்தை அடையும். அதுவே தவத்தின் இறுதியில் கிடைக்கும் வரம் போன்றது.
நல்ல சிந்தனைகள் என்று மட்டும் இல்லை... சுய நினைவும், கற்றதனால் பெற்ற அறிவும் கூட, கவலையில் தோய்ந்திருந்தால் மனத்தில் உடனே எழுவதில்லை; உடனடியாய் செயல்படுவதில்லை! குறிக்கோள் மற்றும் சுயமுயற்சியின் துணை கொண்டு அமைய வேண்டிய நம் முன்னேற்றம், கவலையின் காரணத்தால் உண்டான மழுங்கிய மனநிலையால், அமையாமல் போகிறது.
கவலைகள் பலவிதம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதம். அந்தக்காலத்தில் "படைப்பாளிகள், புலவர்கள் போன்றோருக்கு கவலைகள் மனத்தை அரிக்கக்கூடாது; அப்படி அரித்தால் அவர்களின் படைப்பாற்றல் போய்விடும், தமது நாட்டின் சிறப்பும் போய்விடும்' என்று எண்ணிய புரவலர்கள், தகுந்த சன்மானம், பொற்காசுகள், நிலம், பசுக்கள் என அளித்து அவர்களை போஷித்து வந்ததை அறிவோம். தமிழில் எழுந்துள்ள இத்தனை படைப்புகளுக்கும் இலக்கியச் சிறப்புக்கும் புலவர்கள் மட்டும் காரணமில்லை; அவர்களை போஷித்த அரசர்களும் தனவான்களும் முக்கியக் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.
இதை எண்ணும் போது, மகாகவி பாரதியின் உள்ள உணர்வு நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
கவலை என்பதோடு கூட, அதன் காரணத்தால் எழும் பதட்டம் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் நம் யோசிக்கும் திறனும் குறைந்து விடுகிறது. அப்போது நாம் படித்த படிப்போ கற்ற அனுபவங்களோ உடனடியாய் கைகொடுப்பதில்லை. எனவேதான் எதையும் யோசித்து, பிறகு செயல்படுத்தச் சொல்கிறார்கள். 
சென்ற வாரம் ஒருநாள், இரவு மணி 1.10. கைபேசி மணி அடித்து எடுத்தேன். இரண்டு தெரு தள்ளி இருக்கும் மூத்த சகோதரி ஒருவர் அழைத்தார். 84 வயதான அவர் அம்மாவுக்கு இதய நோய் உண்டு. அன்று இரவு அவருக்கு உடல் நிலை சற்று மோசமாகிவிட்டது. வேறு யாரும் வீட்டில் இல்லாததால் குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொண்டு "என்ன செய்வது' எனக் கேட்டிருக்கிறார். அவரும் ஒரு மாத்திரையின் பெயர் சொல்லி, "இப்போது கொடுங்கள்; நாளை காலை பார்க்கலாம்' என்றிருக்கிறார். வேறு வழியில்லாமல் அந்த இரவில் அவரும் எனக்கு போன் செய்து குறிப்பிட்ட அந்த மாத்திரையை உடனே வாங்கித் தருமாறு கேட்டார். நானும் 24 மணி நேரம் திறந்திருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று கேட்டேன். "எங்களிடம் ஸ்டாக் இல்லை; (ஒரு கடையின் பெயர் சொல்லி) அந்தக் கடையில் கேளுங்கள்' என்றார். இப்படி இரண்டு கடைகள் மூன்று பெரிய மருத்துவமனைகளின் மருந்தகங்களுக்குத் துரத்தியடிக்கப்பட்டு கேட்டால், ஒரே பதில்... "எங்களிடம் ஸ்டாக் இல்லை; அங்குக் கேளுங்கள்...!'
பிறகு அந்த சகோதரிக்கு தகவல் தந்து உடனடியாக அருகிலுள்ள நர்ஸிங் ஹோமுக்கு ஆட்டோ வில்அழைத்துவரச் சொல்லி நானும் காத்திருந்தேன். ஈ.சி.ஜி மற்றும் உடனடி சோதனைகள் முடித்து அந்த மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டோடு அதே மருத்துவமனையின் மருந்தகத்தில் கேட்டால், அவர், நான் முதலில் என்ன மருந்து கேட்டேனோ அதை, (இவரும் அதையேதான் எழுதியிருந்தார்) எடுத்துத் தந்தார். குழப்பத்தோடு வாங்கிச் சென்று முதலில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்துவிட்டு ஆறஅமர மருந்தின் காம்பினேஷனைப் பார்த்துவிட்டு யோசித்ததில் புரிந்தது - ஏன் இத்தனைபேரும் ""எங்களிடம் ஸ்டாக் இல்லை, வேறு கடையில் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று! அதாவது, கல்லூரி முடித்த கையோடு திருச்சியை மையமாகக் கொண்டும் நெல்லையை மையமாகக் கொண்டும் சுமார் மூன்றரை வருடங்கள் மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ்வாகப் பணிபுரிந்திருக்கும் அனுபவத்தாலும் படிப்பாலும் புரிந்தது - அந்த மருந்து லோராஜிபாம் வகையறா என்று!
பெரும்பாலான கம்பெனிகள் வித்தியாசமான பெயரை வைத்திருப்பதால் உடனடியாக மருந்தின் தன்மை நம் நினைவுக்கு வருவதில்லை. மேலும் அரைகுறைத் தூக்கத்தில் எழுந்து பதட்டமான மனநிலையில் என்ன ஆகுமோ என்ற கவலை தோய்ந்த முகத்தோடு மாத்திரையைத் தேடிச் சென்றதால், அது என்ன வகையறா மருந்து என்று யோசிக்கக்கூட முடியவில்லை. இப்போது முதலில் சொன்ன சுபாஷிதத்தை மீண்டும் படியுங்கள்.
முதல் கடையில் கேட்டபோதே, அந்த நபர், "சார் இந்த மருந்தை டாக்டரின் சீட்டு இல்லாமல் தரமாட்டோ ம்' என்று சொல்லியிருந்தால், எனக்கும் விஷயம் விளங்கியிருக்கும்; மற்ற இடங்களுக்கும் அலைந்திருக்க வேண்டாம்.
நிறையப்பேர் இப்படித்தான் தங்களை ஒரு வழிகாட்டியாக எண்ணிக் கொண்டு, தவறான வழியைக் காட்டிவிடுவார்கள், அது பயணப் பாதையோ அல்லது வாழ்க்கைப் பாதையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வழிகாட்டி என்றவுடன் கீதை சொன்ன கண்ணன் நம் நினைவுக்கு வருகிறார். கீதாசார்யனான கண்ணன் பரத கண்டத்து மக்களுக்காகக் கொடுத்த அரிய அறவுரைகள் நல் வழிகாட்டி. ஆனால் அதற்கு விளக்கம் சொல்லும் பேர்வழிகள், கீதையின் உள்ளர்த்தத்தை சிதைத்து ஆன்மா, அமைதி, தவம் என்று மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் வீரத்தையும் அழித்து கோழைகளாக்கி விடுகிறார்கள். கீதையின் அர்த்தம் மிகத் தெளிவு. எவரெவர் எந்தெந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்களோ அவரவருக்குத் தக்க நல் போதனை நல்குவது. இல்லறத்தானுக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன. பிரம்மச்சாரியான இளைஞனுக்கு என்று சில கடமைகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த இருவருக்கும் ஒரு சன்யாசிக்குண்டான சாத்வீகத்தையும் சன்யாசிக்கேயுரிய தன்மைகளையும் போதித்தால்... மக்களின் ஸ்வபாவம் மாறிப்போகுமே! இதுதான் ஆஸ்ரமக் குழப்பம் என்பதோ!
இன்று நடக்கும் பெரும்பாலான கீதை விளக்கவுரை நிகழ்ச்சிகளும், ஆன்மீகவாதிகள் நடத்தும் வகுப்புகளும் இப்படித்தான் மாறிப்போயிருக்கின்றன. போர்க்களத்தில் அதர்மத்திற்கு எதிராக யுத்தம் நடத்த அர்ஜுனனைத் தயார் செய்த கண்ணனின் போதனைகளை ஆஸ்ரமக் குழப்பத்தின் காரணத்தால் எல்லா ஆஸ்ரமத்தார்க்கும் பொதுவானதென்று கருதி, தாம் அறிந்தவற்றை போதிக்கும் ஆன்மிகவாதிகள் செயலால் சாதாரண மக்களிடையே கொடுமையை எதிர்க்கும் நெஞ்சுரமும் வீர உணர்வும் மழுங்கிப் போனதுதான் மிச்சம்!? இந்த நாட்டின் அடையாளம் - பார்த்தனுக்குத் தேரோட்டி, பாரதவாசிகளுக்கு வழிகாட்டியாகி, அவரவர் தர்மத்தைக் கடைப்பிடிக்க ஆணையிட்டு, அவரவர் கடமையை சரியாகச் செய்யச் சொன்ன, வீரமும் வெல்லும் உபாயங்களும் போதித்த கண்ணனே!

உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி


கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி.
அது அழகிய கவிதை!
கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!
ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்!
எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்...!
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாதஇதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு.
சிறுவயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுப் பூர்வமாகப் படித்ததாலோ என்னவோ... கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ... பெண்ணின் அழகு முகமோ... எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு... அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது... என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!?
அப்படி ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுவார் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும்.
மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்... ஏன் ஸ்ரீராம்... இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?
நான் சொன்னேன்... நீங்க படம் வரைவீங்களே... ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்... ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..!
இந்த பதிலில் இரண்டு வெளிப்படும். ஒன்று என் உளக்கிடக்கை. இரண்டு அவருக்கான பாராட்டு!
அவர் முறுவலிப்பார். ம்... நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன்.
இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம்.
இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் - அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே!
கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது!
கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது வேறு எங்கோ வெறித்துக் கொண்டோ பேசுபவரிடம் நான் பேச்சைத் தொடர்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?! அட... இப்போதுதான் புரிகிறது... கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் அவிழ்த்து விடுகிறார்கள் என்று! கண்களைத் திறந்து கொண்டு பேசினால் கேட்பவர் கண் திறந்துவிடுவாரே!

ஆழ்வார் - நாச்சியாரின் அமுதத் தமிழ் அழகு!


மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.

 ---------------------

அரங்கன் தன் பக்கலில் உள்ளதைக் காட்டி என் பக்கலில் இருந்ததைக் கொள்ளை கொண்டு போனானே என்ன திருமங்கை ஆழ்வார் தலைவியானவளாய்ப் புலம்பித் தவிக்கிறார். இந்தப் பாசுரத்துக்கு ஒரு ரஸமான கதையும் உண்டு.
விக்கிரம சோழன். நல்ல தமிழ் ரசிகன். ஒரு நாள் அவன் அவையில் வைணவ, சைவ பண்டிதர்கள் இரு தரப்பும் தத்தமது பாடல்களைக் கூறி அவனை மகிழ்விப்பராம். அவனுக்கு என்ன மனத்தாங்கலோ..? அரசியைப் பிரிந்து அடுத்த தேசம் கிளம்பினானோ அல்லது, பட்டத்து ராணி பாராமுகம் காட்டினளோ என்னவோ? திடீரென ஒரு கேள்வி கேட்டான். தலைவன் பிரிந்திருந்தபோது, தலைவியின் நிலையை ரசமாகச் சொல்லும் பாட்டு ஏதாவது சொல்லுங்கள்.. என்று! வைணவ அறிஞர் இந்த "மின்னிலங்கு” பாசுரத்தைச் சொன்னாராம். சைவ அறிஞர் ஒரு பாடலைச் சொன்னாராம்.. (என்ன பாடல் என்பதை முன்னோர் சமுதாய நலன் கருதி தவிர்த்திருக்கிறார்கள்... இருந்தாலும், சாம்பல் பூசிய மேனி எனும் உவமையைக் காட்டியிருக்கிறார்கள்..) இரண்டையும் கேட்ட சோழன், “அடடா... மின்னிலங்கு திருவுருவும், பெரிய தோளும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்குருகி, தன் நெஞ்சைக் கொள்ளையிட்டுப் போன தலைவனை நினைந்து உருகும் இவளன்றோ தலைவி..! மற்றவளோ பிணந்தின்னி!” என்றானாம்.
இங்கே ஆழ்வார் பெண் தன்மையிட்டு பெருமாளின் திருவுரு அழகைக் காட்டிய இந்தப் பாசுரத்தை விடவும், எனக்கு என்னவோ மிகவும் பிடித்ததாயும், வசீகரிக்கும் தன்மையதாயும் இன்றுவரை தோன்றுவது நாச்சியாரின் வசீகரத் தமிழே!
என்னமாய் ழ-வும் ள-வும் ல-வும் கொஞ்சி விளையாடுகிறது?! அரங்கன் அழகு காட்டி என் உடல் உருக் குலைத்தானே என்று கைவளை கழல, உடல் மெலிவு கண்டு கதறித் துடிக்குமளவும் இயல்பாய் பெண்ணான கோதை காட்டும் உணர்வுபூர்வமான அந்த அழகு...!
எழிலுடைய அம்மனையீர் என் அரங்கத்து இன்னமுதர் - குழல் அழகர்; வாய் அழகர்; கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்; எம்மானார்! என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே! என்று கதறுங்காலை நம்முள்ளுணர்வு பக்தியின் பாற் கிளர்ந்தெழுமோ? அல்லையாயின் அன்பின் தன்மை உணரச் செய்யுமோ!? எல்லாம்தான்!!

புதன், ஜூன் 05, 2013

பேரளியும்... பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம்.
மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன். இந்தப் பேரளியில் தொழில்முனைபவராகத் திகழ்கிறார். அவருடைய தந்தையார் நீலமேகம் ஐயங்கார் நல்லதொரு ஆன்மிகச் சொற்பொழிவாளராக, ஆன்மிக நிகழ்ச்சிகள், குடமுழுக்கு உள்ளிட்ட விழாக்களை நடத்தி அந்தப் பகுதியில் நற்பெயர் பெற்றவர். நான் எழுதியிருந்த புத்தகங்கள் ஓர் இரண்டைப் படித்துவிட்டு என் மீது நல்ல அபிமானம் கொண்டிருந்தாராம். நண்பர் ஸ்ரீனிவாசன் அடிக்கடி தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் அவரைப் பார்த்து நமஸ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் துரதிருஷ்டம், சென்ற வருடம்(2012) அக்டோபர் மாதக் கடைசியில் அதே பேரளியில் ஒரு சாலை விபத்தில் சிக்கிய அவர் பின்னர் மருத்துவமனையில் வைத்து காலமானாராம். தந்தையார் மீது பெருமதிப்பு கொண்டிருந்தது நண்பரின் அந்தக் குடும்பம்.
அப்போது, நண்பர் ஸ்ரீனிவாசன் ஒரு செய்தி சொல்லியிருந்தார். அவர்கள் ஊரில், ஊரை விட்டு சற்றே ஒதுக்குப்புறத்தில், வயல்களின் ஊடே இரண்டு பாழடைந்த கோயில்களை இவர்கள் கண்டார்களாம். முட்புதர்கள் சூழ மிகவும் பாழடைந்து வெளித்தெரியாது இருந்த இரு கோயில்களை ஊர் மக்கள் ஒத்துழைப்பில் முட்புதர்களை அகற்றி உழவாரப் பணி மேற்கொண்டார்களாம். அப்போதுதான் தெரிந்தது, இரு கோயில்களும் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் என!  ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு இருந்த அந்தக் கோயில்களில் உழவாரப் பணி செய்து, கோயில்களில் தினமும் விளக்கேற்றி, பூஜை செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக நீலமேகம் ஐயங்கார் பரமபதித்துவிட, எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சி.
கோயில் பணிகளில் இருந்து சற்றே பின்வாங்கினார்கள் சிலர். நண்பர் ஸ்ரீனிவாசனுக்கோ அவரது இளைய சகோதரர்களுக்கோ பெரும் துயரம். இனி இந்தக் கோயில்களுக்கு பூஜை செய்யலாமா? கூடாதா? இறைவன் நம்மை ஏன் இப்படி சோதித்தான்... இப்படியாக உள்ளூர எண்ணம் அவர்களுக்கு!
இதனிடையே, கோயில் உழவாரப் பணிகள் குறித்து பரவலாக செய்தி வெளியான போது, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வந்து பார்க்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் பகுதியிலும் பழைமையான கோயில்கள் இருந்துள்ளனவே என்ற ஆச்சரியத்தில்!
ஆனால், இது அருகில் இருந்த வயல், தோப்பு தொரவு உரிமையாளர்களுக்கோ, அல்லது ஊர் நலன் விரும்பாத ஒரு சிலருக்கோ பிடிக்கவில்லையோ என்னவோ? கோயிலில் இருந்து எடுத்து வைத்த கற் சிலைகள் சில திடீரென காணாமல் போயின! இடையில் சிலர், அந்தக் கோயில்களுக்குள் சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் அந்தக் கால மன்னர்கள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்களை புதைத்து வைத்திருப்பார்கள் என்று கட்டி விட, புதையல்  ஆசையில் ஒரு கூட்டம் கோயில்களை நோட்டம் விடத் தொடங்கியது.
விடுவாரா.. நம் ஆவியின் சூவியார்?! இப்படி ஒரு கட்டுரையையும் எழுதி இதழில் வெளியிட்டும் விட்டார்கள்...
------
சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?
தங்கப் புதையல் இருப்பதாகப் பரவிய செய்தி பெரம்பலூர் மாவட்டத்தை தகதகக்க​வைத்துள்ளது!  சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி - மருவத்தூர் இடையே முட்புதர்களுக்குள் பழைமையான இரண்டு கோயில்களைக் கண்டு​பிடித்தனர் கிராம மக்கள். 'அந்தக் கோயில்களில் இருந்த சில சிலைகள் திருடப்பட்டுள்ளன என்றும் தங்கப் புதையல் இருக்கிறது’ என்றும் பரபர தகவல்கள் கிடைக்கவே, விசாரணையில் இறங்கினோம். காட்டுப் பாதைக்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோயில் திடீர் பிரபலம் ஆகி விட்டதால், ஏராளமான மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்த பிறகு, ஊர்ப் பெரியவரான ஆறுமுகத்திடம் பேச்சுக் கொடுத்தோம். ''அந்தக் காலத்துல கோயில்களைச் சுற்றி பேரளி கிராமம் இருந்ததாகவும், அதன்பிறகு, பேரளி மருவத்தூர், பேரளி, பனங்கூர் என்று மூன்று ஊர்களாகப் பிரிஞ்சுட்டதாகவும் சொல்வாங்க. மக்கள் புழக்கம் இல்லாததால், நாளடைவில் கோயில்​களைச் சுற்றி முள்வளர்ந்துடுச்சு. ஒரு கட்டத்தில் கோயில்களையே மறைச்சிடுச்சு. -
--
என்று கட்டுரை நீண்டுகொண்டே போனது!
ஆட்சியருக்கு செய்தி பறந்தது. தொல்பொருள் இலாகா- தூக்கம் கலைந்தது. ஓடி வந்தார்கள் பேரளியில் பேரணியாக! கோயில்களின் சுவர்களை அளவெடுத்தார்கள். அங்குலம் அங்குலமாக அடியெடுத்து கற்களையும் சிலைகளையும் கணக்கெடுத்தார்கள்...
ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை! சரி.. அரசு ஏதோ செய்கிறது. நம் ஊர் கோயில்கள் திரும்பவும் ஒரு நல்ல நிலையை அடைந்துவிடுமென்று!
இப்படியாக மூன்று நான்கு மாதங்கள் கழிந்த நிலையில்தான்....
நண்பர் ஸ்ரீனிவாசன் திரும்பவும் என்னை தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியிருந்தார். எங்கள் ஊருக்கு வாருங்கள். அந்தக் கோயில்களை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். என் அப்பா உங்களைப் பார்க்க ஆசைப்பட்டார்... உங்களை அழைத்துக் கொண்டு அந்தக் கோயில்களுக்குப் போய்க் காண்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்... இப்படியாக நண்பர் அவரது அப்பா பெயரைச் (செண்டிமெண்டை) சொன்னதும் எனக்கும் ஆவல் அதிகமாயிற்று! சரி போய் வருவோமே என்று எண்ணி, அவரிடமும் நான் வருவதாகச் சொன்னேன்.
அதற்கு நான் தேர்ந்தெடுத்தது, என் பிறந்தநாளை! மார்ச் 14. ஸ்ரீரங்கத்திலிருந்து காலை கிளம்பி, திருப்பட்டூர் சென்றுவிட்டு, அங்கிருந்து பெரம்பலூர் சென்றேன். (இந்தக் கோயிலை மறு மாதமே தினமணி - வெள்ளிமணியில், தலையெழுத்தை மாற்றித்தரும் பிரம்மா கோவிலாகப் பதிவு செய்தேன்..)
மதியம் பேரளி சென்று அவர் வீட்டை அடைந்தது முதல் அப்பாவைப் பற்றியும், அந்தக் கோயில்களைப் பற்றியுமே சொல்லிக் கொண்டிருந்தார். உண்டு முடித்து சற்று நேரத்தில் அவருடன் அந்தக் கோயில்களைப் பார்க்கலாமே என்று கிளம்பினேன்!
எத்தனையோ பாழடைந்த கோயில்களைப் போய்ப் பார்த்து எழுதியிருக்கிறோம். அவற்றின் அவல நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்... அதுபோல் எண்ணி இந்தக் கோயில்களுக்கும் சென்றேன். கிராமத்துச் சாலையின் இரு புறத்திலும் பார்த்தால்... கீழ்ப் பக்கம் சிவன் கோயிலும் மேற்புறத்தில் பெருமாள் கோயிலுமாக வெளித்தெரிந்தது. கோயில்களைச் சுற்றியிருந்த புதர்களை அப்புறப்படுத்தியிருந்தார்கள். கோயில் நன்றாகவே வெளியில் தெரிந்தது.
சிவன் கோயிலுக்கு முதலில் அழைத்துச் சென்றார் நண்பர். வௌவால்களின் வாசம்... அந்த வாசத்தால் வெளிப்பட்ட வாசம்... எல்லாம்தான்! கையில் எண்ணெய் திரியுடன் சென்ற நண்பர், உள்ளே விளக்கேற்றி, தீப ஆராதனையும் செய்து, கற்பூரத்தைக் கொளுத்தி வெளிச்சத்தை ஏற்படுத்தி வெளியில் வந்தார்.
கோயில் பகுதியைச் சுற்றிப்பார்த்து வந்தேன்.
சுரங்கம் இருப்பதாகச் சொன்ன ஒரு இடம்... பின்னப்பட்டுப்போன விக்ன விநாயகர் சிற்பம், கொடிமரம், இடிந்து விழுந்த நிலையில் அம்பாள் சந்நிதி, சுற்றிவலம் வரும்போது சண்டிகேசர் சந்நிதி, நந்தி, பலிபீடம்... எல்லாம் ஒரு பழமையின் செழுமையை கண்ணில் காட்டியது.
அடுத்து பெருமாள் கோவிலுக்குப் போனோம். நல்ல அமைப்பு. துவஜஸ்தம்பம், விளக்குத்தூண் போல்! பெருமாள் சந்நிதி. நல்ல அமைப்புடன் விக்ரஹம். பன்னிரு ஆழ்வார்கள் விக்ரகங்கள், தாயார் சந்நிதி உரு மாறாமல்.. தாயார் விக்ரஹம் மிகத் திருத்தமாக அழகுடன்! இப்படியே பார்த்து வந்தபோது, பெருமாள் சந்நிதி பின்புறத்தே மேற்சுவரில் ஒரு சிற்பம் மிக அழகாக இருந்ததைக் கண்டேன்.
மூன்று பேர் இருவர் போல்  தோற்றம் அளிக்கும்  வண்ணம் ஒட்டியபடி செதுக்கப்பட்ட சிற்பம், இடது புறத்தை மறைத்தால் வலது புறத்தில் ஒருவர் ஓடுவது போல், வலதுபுறத்தை மறைத்தால் இடது புற நபர் ஓடுவதுபோல், இரண்டு கைகளையும் மறைத்துப் பார்த்தால் நடுவில் ஒருவர் நிற்பதுபோல்... ஆசனத்தில் அமர்வதுபோல் என்று வித்தியாச சிற்பம்...
இப்படியாக இந்தக் கோவில்களைப் பார்த்துவிட்டு வெளிவந்தேன். ஏற்கெனவே இவர்கள் நம்பிக் கொண்டிருப்பதுபோல்....இந்தக் கோயில்களைப் பார்த்துவிட்டு வந்ததால் நம் ராசியும் தலைஎழுத்தும் எப்படி இருக்கப்போகிறதோ என்ற குதர்க்கமான (அல்லது நக்கல் கலந்த) எண்ண ஓட்டத்துடன் வண்டிபிடித்து, பெரம்பலூர் புறவழிச்சாலை அடைந்து, வந்து நின்றவுடனே விருட்டென வந்த சென்னை விரைவுப் பேருந்தில் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்...
(ம்ஹும்... அப்பாடா....! ஒரே மூச்சு.. பெருமூச்சு!)
புதன், மே 22, 2013

சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..?ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே. தொடர் தோல்விகளால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும், அவ்வளவு ஏன்... கிரிக்கெட் விளையாட்டின் மீதுமே ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் புறக்கணித்தல் எண்ணத்தையும் வெளிப்படுத்தியபோது, கபில்தேவ் என்ற ஆபத்பாந்தவன் ஐசிஎல் என்ற அமைப்பின் மூலம் மீண்டும் உயிர்கொடுக்க முனைந்தார். ஜீ டிவி தயவில் வர்த்தக ரீதியில் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட்கள் ஐசிஎல் என்ற பேனரில் மீண்டும் உலா வரத் தொடங்கியபோது, பணக்குவியலில் சுக போக வாழ்க்கையை  நடத்தி வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடித்தான் போனது. தங்களுக்கு இதனால் பெரும் வர்த்தக இழப்பு வந்துவிடுமே என்ற கவலையில், கவாஸ்கரையும் கபில்தேவையும் மோத விட்டு, ஐசிஎல் அமைப்புக்கு எதிராக போட்டி அமைப்பையும் ஏற்படுத்தி, அதற்கு ஐபிஎல் என்ற நாமகரணமும் சூட்டி... எல்லாம் நடந்துவிட்ட பழங்கதைதான்!
இன்று பணம் பெருக்கெடுத்து ஆறாய் கடலாய் பொங்கி வழியும் ஒரே துறையாக ஐபிஎல் இருப்பது கண்கூடு! எங்கே பணம் மிதமிஞ்சிப் பெருக்கெடுத்துக் குவிகிறதோ அங்கே முறைகேடுகளும் சூதாட்டமும் சமூக விரோதச் செயல்களும் இயல்புதானே! ஐபிஎல் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? தேர்ந்த நாடகமாக, மூன்று மணி நேரத்  திரைப்படமாக ஐபிஎல் டி20 போட்டிகள் உருவான பின்னே, திரைப்படங்களின் மவுசு எல்லாம் தூசாகிவிட்டது இந்த மே மாதங்களில்! பள்ளிப் பிள்ளிகளில் படிப்பு கெடுகிறது என்றார்கள் பெற்றோர்கள்! இளைஞர்களின் எத்தனை மணி நேர உழைப்பு வீணாகிறது என்றார்கள் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள். இரவெல்லாம் விழித்திருந்து சிறுவர்கள் உடல் நலனைக் கெடுத்துக் கொள்கிறார்களே என்று வருத்தப்பட்டார்கள் வீட்டின் பெரியவர்கள். இதெல்லாம் யாருக்குக் கேட்கப் போகிறது..?
சூதாட்டம் பெரும் குற்றம்தான் நம் நாட்டில்! சீட்டுக் கட்டுகளை வைத்து ஆடுகின்ற சிறிய அளவாக இருந்தால் என்ன..? அல்லது ஐபிஎல்,.லில் லட்சக் கணக்கில் பணம் வைத்து ஆடும் பெரிய அளவாக இருந்தால் என்ன...? எல்லாம் குற்றம் தான்! ஆனால், இந்தியாவில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்கிறார் ஒரு வெளிநாட்டு வீரர். இத்தகைய அறிவுரைகள் நம் நாட்டுக்கு ஒரு வெளிநாட்டு வீரரிடம் இருந்து தேவைதானா?
பணம் பண்ணுவது என்று வந்துவிட்டால், சூதாட்டமும், போட்டி பொறாமைகளும் தலைதூக்காமல் இருக்குமா? பாலிவுட்டில் எடுத்த பணத்தை மேலும் பெருக்கிக் கொள்ள நடிகர்களும் நடிகைகளும் தங்கள் திறனைக் காட்டி வருகிறார்கள் என்றால், இங்கே மலின அரசியல் களத்தில் ஏமாற்று வித்தைகளால் பணம் பெருக்கியவர்கள் டிவி., சினிமா, ஊடகம் என்று கால் பரப்பி ஒரு அணியை பேரம் பேசி எடுத்து நடத்துகிறார்கள் என்றால்..?
இருப்பதைப் பெருக்குவதும், சில நேரம் அதனை இழப்பதும் சூதாட்டத்தில் இயல்புதானே! அப்படித்தான் கொச்சி அணி காணாமல் போனது. டெக்கான் சார்ஜஸ் அணி பெயரும் சரி, உருவமும் சரி கரைந்து போனது. ஊடக உலகில் கோலோச்சிய நிறுவனம் திவாலாகும் அளவுக்கு உரு கரைந்து போனது!
இப்படியெல்லாம் பார்த்துவிட்ட சூதாட்ட ஐபிஎல் குழந்தைக்கு ஆறு வயதுதான் என்றாலும், அதன் அசுர வளர்ச்சி இந்த நாட்டையே கபளீகரம் செய்து விடுமோ என்று தேசப் பற்றாளர்கள் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்! இந்த அசுரக் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்தால் இதன் எதிர்காலப் பரிணாமம் எப்படி இருக்கும் என்பதை
ஐபிஎல் சீஸன் 1 முதல் போட்டி தொடங்கியபோது அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். வீரர்களை ஏலம் எடுக்கும் விவகாரம், ஒப்பந்தம் என்ற பெயரில் அடிமை சாசனம் அளிப்பது, அதற்காக விலை போக மாட்டோமா என்று வீரர்கள் ஏங்குவது.. எல்லாம் இந்தியாவுக்குப் புதிதுதான்!
வெளிநாட்டு வீரர்களின் எல்லையற்ற எதிர்பார்ப்பு, அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இந்திய வீரர்களே ஊர் ஊராக, அணி அணியாக, மாநிலம் மாநிலமாகப் பிரிந்து போய் நின்ற காட்சி  இந்தியர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ரஞ்சி டிராபி போட்டிகளும், கவுண்டி போட்டிகளும், மண்டல அணிகளாகப் பிரிந்து மோதிய போது இல்லாத பிரிவினை எண்ணங்கள் எல்லாம், ஐபிஎல் துளிர்விட்டபோது, கூடவே மக்கள் மனங்களில் துளிர்விட்டன. காரணம், இந்தியாவில் கிரிக்கெட்டும் தேசபக்தியும் பிரிக்க முடியாமல் போய்விட்டதுதான்!
கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை ஏதோ, நாட்டின் போர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமாக மாறிப்போன இந்தியாவில், மாநில உணர்வுகளோடு இந்திய தேசிய உணர்வு சிதைந்து போனபோது வருத்தப்படாத நெஞ்சமே இல்லை!
இதற்கு முதல் வித்தாக அமைந்தது -  முதல் ஐபிஎல் போட்டியில் வீரேந்திர சேவாக் மீது கல் எறிந்த நிகழ்ச்சி!
அது 2008 மே 16. முகமெங்கும் பூரிப்புடனும் மகிழ்ச்சிப் பெருக்குடனும் களத்தில் நின்று கொண்டிருந்த டில்லி அணியின் கேப்டன் வீரேந்திர சேவாக், தனது சொந்த மைதானத்தில் சொந்த மக்களால் கல்லடி பெற்றார் என்றால்...? ஆம்.. பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், அன்றைய டெக்கான் சார்ஜஸ் அணியை 12 ரன் வித்தியாசத்தில் பந்தாடி, வெற்றிப் பாதையில் சென்றது டெல்லி அணி. அன்றைய போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், வெற்றி பூரிப்பு முகத்தில் தெரிய உற்சாகமாக இருக்க வேண்டிய சேவாக், வருத்தத்தின் உச்சத்தில் காணப்பட்டார். காரணம் அன்றைய 19 வது ஓவரின் போது, களத்தில் எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த சேவாக் மீது கல்லை எறிந்து காயப்படுத்தியிருந்தனர் சிலர். உடனே நடுவர் பிரைன் ஜெர்லிங்கிடம் புகார் அளித்த சேவாக், "டெல்லியில் டெல்லி அணி ஆட்டக்காரர் மீது, அதுவும் டெல்லிக்காரரான ஓர் இந்தியர் மீது, கல்லை எறிந்தது துரதிருஷ்ட வசமானது” என்று எச்சரிக்கை மணி அடித்தார்.
அடுத்து, 2008 ஏப்.25ல் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க களப் போர், இந்திய ரசிகர்களை பெரிதும் காயப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மும்பை அணிக்காக ஆடிய ஹர்பஜன், பஞ்சாப் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த்.. இருவருமே உணர்ச்சி வசப்படுபவர்கள்தான்! ஆனால், அதனை அனைவர் முன்னிலையிலும் களத்தில் காட்டியது, மற்றவர் உணர்ச்சியைத் தட்டியெழுப்பிவிட்டது. இந்திய வீரர்களாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய இருவரும், பஞ்சாப் அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமிதத்தில் ஸ்ரீசாந்த் வாயெடுக்க, தோல்வி சோகத்தில் ஹர்பஜன் கையெடுக்க, ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஓர் பளார் அறை விட்டு ஹர்பஜன் தன் வீரத்தைக் காண்பித்து விட்டார். விளைவு - அடுத்து வந்த 11 போட்டிகளில் ஹர்பஜனுக்கு தடை! அழுது தீர்த்த ஸ்ரீசாந்த், மீடியாக்களின் வெளிச்சத்தில்! அனுதாபம் கிடைப்பதற்குப் பதிலாக அறுவெறுப்புதான் மிஞ்சியது!
அதே வருடம் ஏப்.19. மொஹாலி, சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியின் துவக்க நிகழ்ச்சி.  சியர்லீடர்ஸ் என ரசிகர்களை உற்சாகப் படுத்தும் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்களில் இருவர் கருப்பாக இருக்கின்றனர் என்ற நிறவேறுபாடு காரணத்தால், மேடையில் அவர்களுக்கு இடம் கொடுக்காமல், கீழே இருத்தி வைத்தது. இந்தச் சர்ச்சை இந்தியாவில் எழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது! மொஹாலி அணிக்காக விஸ்க்ராப்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தால் பணி அமர்த்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும்,  மொஹாலி மைதானத்தை விட்டே வெளியேறச் செய்த கொடுமையும் நடந்தது!
ஐபிஎல் சீஸன் 2ல் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக் கான் தன் அணி பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாகப் பேசியதில் எழுந்த சர்ச்சை, தொடர் பிரச்னைகளால் தவித்த கோல்கத்தா அணியில் விளையாட்டு வீர்ர்களிடம் இன வேற்றுமை பாராட்டிய புகார், அதற்கு முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியது, அப்போதைய கேப்டன் கங்குலியை குறிவைத்து புகார் கூறப்பட்டது. அவர் அணியில் பிளவு ஏற்படுத்தினார் என்றார் ஜடேஜா.
ஐபிஎல் சீஸன் 3 சோகமான தொடராக அமைந்துவிட்டது. ஐபிஎல் தலைவர் லலித் மோடியால் வெடித்த விவகாரம் அது. கிரிக்கெட் வாரியம் லலித் மோடியை நீக்கியதுடன், கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பெரும் அவப்பெயரைத் தந்து விட்டார் என்று வர்ணித்தது. அடுத்து, 2010 ஏப்.23ல் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்த வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் க்ரூப்புக்கும் சோனி மல்டி ஸ்கிரீன் மீடியாவுக்கும் ஒளிபரப்பு தொடர்பாக நிகழ்ந்த சண்டைகள்! ஏப்.22ல், அரசியல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சசி தரூர் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த பிரச்னைகள் பெரிதும் எதிரொலித்தது.
ஏப்.20ல் லலித் மோடியின் உறவினருக்கு எங்கள் அணியில் எந்தவித மறைமுகப் பங்குகளும் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படாலே கூறியதால் எழுந்த சர்ச்சை! 
ஏப்.19ல் ஐபிஎல்- இணையதளத்தில் அதிகாரபூர்வ பெயராக லலித் மோடியின் பெயர் இருந்ததும், அணி உரிமையாளர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. பிசிசிஐக்கும், ஐபிஎல்லுக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி எழுப்பினார் ராஜஸ்தான் கிரிக்கெட் அசோஷியேஷன் செயலாளர் சஞ்சய் தீக்‌ஷித். மேலும், 2005-2008 வரை மட்டுமே தலைவராக இருந்த லலித் மோடியின் பெயர் ரூ.800 கோடி மதிப்புள்ள ஐபிஎல் இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறுவது ஏன் என்றும் சர்ச்சையைக் கிளப்பினார்.
அதே நாளில் சசிதரூர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அரசு அதிகாரத்தை தனது தனிப்பட்ட வியாபாரத் தொடர்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவ்கை மேற்கொள்ளப்பட்டது. கொச்சி டஸ்கர்ஸ் அணி பங்குகளை மனைவி பெயரில் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சசி தரூர் பெரும் சர்ச்சையை அந்த ஆண்டில் கிளப்பியிருந்தார். இவை எல்லாம் அரசியல்வாதிகளால் கிளம்பியது என்றால், அணி உரிமையாளர்களோ தேசியத்தின் மடியில் கைவைத்தனர்.
2010 மார்ச் 22ல் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா, அதன் இன்னொரு உரிமையாளர் நெஸ் வாடியா இருவருக்கும் எதிராக ஐபிஎல் அணி விளம்பரங்களில் பகத் சிங், ராஜகுரு உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக சண்டிகர் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் பெரிதும் பேசப்பட்டது. மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை அது!
அதே ஆண்டு பிப்ரவரியில், சிவ சேனாத் தலைவரான பால்தாக்கரே, ஆஸ்திரேலிய வீரர்களை மும்பை மண்ணில் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்றார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் வரிசையாகத் தாக்கப்பட்டு வருவதால், ஆஸ்திரேலியர்கள் விளையாட வந்தால் ஐபிஎல் நடத்த விட மாட்டோம் என்றார் அவர். இருப்பினும் பின்னர் இந்திய சகோதரர்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், இந்த முடிவைக் கைவிடுவதாக அறிவித்தார்.
அதே நேரத்தில், கோல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான், பாகிஸ்தான் வீரர்களுக்கு தனி சலுகைகளைக் காட்டுவதாக பால் தாக்கரே கூறிய குற்றச்சாட்டும் பெரிதும் எதிரொலித்தது. 
ஐபிஎல் சீஸன் 4ல் பிசிசிஐயுடன் கொச்சி டஸ்கர்ஸ் அணி வைத்திருந்த உறவு பொசுங்கிப் போனது. பண விவகாரத்தால், கொச்சி அணி நீக்கப்பட்டு, இனி ஐபிஎல் சீஸன் 5 முதல், 9 அணிகளே விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஐசிஎல்லுக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஐசிஎல் நடத்தும் போட்டிகளுக்கு மைதானங்களைத் தரக்கூடாது என்று பிசிசிஐ விதித்த கட்டுப்பாடு. அதைத் தொடர்ந்து ஐசிஎல் அமைப்பைத் தடை செய்தது, ஐசிஎல் அமைப்பில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பிசிசிஐயின் அணியில் இடம்பெற இயலாது என்ற அறிவிப்பு எல்லாம் சர்ச்சையோ சர்ச்சைகள்தான்! தாங்கள் உருவாக்கிய அமைப்பு என்பதால் பிசிசிஐ, ஐபிஎல்லை மட்டுமே முன்னிறுத்துவது என்று முடிவானது. அதற்காக ஐசிஎல் குறித்து மோடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய விவகாரம், அதே வருடத்தில் ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்து லலித் மோடி கழற்றிவிடப்பட்ட விவகாரம் எல்லாம் ஐபிஎல்லின் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மகிமையைப் பறை சாற்றியது.
அதே ஆண்டில், ஐபிஎல் அணிக்காக தேசிய அணியில் இடம்பெறாமல் தவிர்க்க எண்ணிய காம்பிரின் செயல்பாடு, அந்த வருடத்தில் மிக அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட காம்பிர், மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தில் தேசிய அணியில் இடம்பெறாமல் விட்டது எல்லாம் வீரர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் காயம் பட்டபோதும், காயத்துடன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என்று காம்பிர் அடம்பிடித்தது... அப்போது, காம்பிரின் உடல் காயம் குறித்த மருத்துவ அறிக்கை கூட விவாதப் பொருளானது.
2011 மே மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற சியர்லீடர் பெண் ஒருவர், பின்னணியில் நடைபெற்ற தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களைக் குறித்து இணைய வலைப்பூவில் தகவல் வெளியிட்டார் என்பதற்காக அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப் பட்டார். அப்போது அவர், நான் பார்த்த அளவில், கிரிக்கெட் வீரர்கள்தான் விளையாட்டு வீரர்களிலேயே அறிவிலிகளாகவும் மோசமான நடத்தையாளர்களாகவும் அறிகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் சீஸன் 5ல், அனைவரையும் உலுக்கிய சர்ச்சையாக அமைந்தது, பெங்களூர் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வீர்ர் லுக் போமர்ஸ்பெக்கின் செயல். இந்திய அமெரிக்கரான பெண் ஒருவர், தில்லி ஹோட்டல் மௌர்யா ஷெர்ட்டனில் இருந்தபோது, தவறாக நடந்துகொண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு போமர்ஸ்பெக்கால் தாக்கப்பட்டார் என்று கிளம்பிய சர்ச்சை. அவருக்கு ஐபிசி சட்டப்படி தண்டனையும் வழங்கப்பட்டது.
2012 மே 18ல் கோக்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வெற்றிக் களிப்பில் மும்பை வாங்க்டே மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டு அதிகாரிகளை கேவலப்படுத்தினார் என்பதால், அவருக்கு மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மே 15ல் ஐந்து வீரர்கள் மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. டெக்கான் சார்ஜஸ் அணியின் டிபி சுதிந்திரா, புனே அணியின் மோனிஷ் மிஸ்ரா, பஞ்சாப் அணியின் அமித் யாதவ் மற்றும் சுலப் ஸ்ரீவஸ்தவா, தில்லியைச் சேர்ந்த அபினவ் பாலி ஆகியோர் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முறைகேடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்று ஸ்டிங் ஆபரேஷன் என்ற முறையில், ஸ்பாட் பிக்ஸிங்கை அம்பலப்படுத்தியது.
ஏப்.18ல் நடந்த கோல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியின் பேட்ஸ்மென் ஷான் மார்ஷ் ஆட்டம் இழந்த விதம் குறித்து நடுவருக்கு தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் விதத்தில் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் நேரத்தின் போது, நடந்து கொண்டது, அதைத்தொடந்து, நடுவருக்கு விளக்கம் எதிர்பார்த்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா அறிக்கை அனுப்பியது எல்லாம் சர்ச்சை மயமே!
இது அல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங் ஆகியோர் சூடான பேச்சுகளால் மைதானத்தில் சண்டையிட்டது போன்ற செயல்களுக்கு அபராதமும் கண்டனமும் விதிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாகிவிட்டது.
ஏப். 8ம் தேதி, பஞ்சாப் அணியினர் அறையை சேதப்படுத்திவிட்டார்கள் என்று கூறி, மகாராஷ்டிர கிரிக்கெட் அசோஷியேஷன் புகார் பதிவு செய்தது போன்ற சம்பவங்களும் ஐபிஎல்லின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்லும் போலும்!

புதன், ஏப்ரல் 03, 2013

தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதக் குழுக்களின் பின்னணியில் இந்த நாட்டுக்கு எதிரான, பாரத நாட்டின் வல்லமை வளர்ச்சிக்கு எதிரான ஏதோ ஒரு சக்தி பின்னால் இருந்து இயங்குவது நன்றாகத் தெரிகிறது. அந்த சக்தி, இளைஞர் சக்தியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறது. மாணவப் பருவத்தை திசை திருப்பி, ஏற்கெனவே என் தலைமுறை உள்ளிட்ட இரண்டு தலைமுறையை நாசமாக்கிவிட்ட அரசியல் இயக்கங்களின் சக்தியை விட வலிமையானதாகத் தெரிகிறது. சாதிக் கட்சிகளின் சுயலாபத்தில், சாதீயம் பேசும் சாக்கடைகளின் பின்னணியில் இயங்குவது நன்றாகத் தெரிகிறது.  இந்த நிலையில்தான் இந்தக் கடிதத்தையும் கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. அதனால், ஜெ.மோ.வின் வாசகனாக இதை அப்படியே எடுத்துப் போட்டுவிட்டேன்!  

 

இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,
தமிழக அரசியல் களத்தில் தமிழ்த்தேசியம் ஒரு தவிர்க்க முடியாத உந்துசக்தியாக மாறக்கூடிய காலகட்டத்தில் அதை எவ்வாறு சரியான திசையில் வழிப்படுத்துவது என்பது குறித்த சிந்தனைகள் அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன்.
உலகெங்கும் பரந்துவிரிந்துள்ள தமிழினத்தின் ஆதி ஊற்றாக தமிழகம் விளங்குவதால் அத்தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டிய உணர்வு மற்றும் அறம் சார்ந்த கடப்பாட்டை அது கொண்டுள்ளது.அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதே இன்று தமிழகத்திற்கு முன்னுள்ள சவாலாகும்.அதற்குரிய அரசநயம்(diplomacy) தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதா என்பதுதான் நேர்மையுடன் எழுப்பவேண்டிய கேள்வியாகும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்நலன்கள் பாதிக்கப்படும்போது தமிழகத்திலுள்ள தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாடு தனியாகப் பிரிந்துவிடும் என்று கூறுவதை வழமையாகவே வைத்துள்ளனர்.இன்று இவ்வாறான சிந்தனை தமிழக இளையதலைமுறையினரிடையேயும் பரவ ஆரம்பித்துள்ளமை இணையத்தளங்களை நோக்கும்போது தெரிகின்றது.இது சரியானதுதானா?பயனுடையதுதானா என்று அவர்களில் எவரும் சிந்தித்துப்பார்ப்பதில்லை.
இலங்கையில் தமிழர்களுடைய தனிநாட்டுக்கான நியாயங்களும் இந்தியாவில் பிரிவினைக்கான கோரிக்கையும் எவ்வாறு வேறுபடுகின்றன என ஆராய்ந்தால் அவற்றுக்கிடையிலுள்ள பெரும் வேறுபாடுகளை அறியலாம்.
1)இலங்கை ஒரு தனிப்பெரும்பான்மை இனத்தைக் கொண்டநாடு.இலங்கையின் மக்கள் தொகையில் சிங்களவர்கள் 75 சதவீதமானவர்கள்.இந்தியா அவ்வாறு எந்த ஒரு தனிப்பெரும்பான்மை இனத்தையும் கொண்ட நாடு அல்ல.இந்தியாவில் அதிகமானோர் பேசும் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோரை ஒரு மொழிவாரி இனமாகக்கொண்டால் கூட(அவ்வாறு மொழிவாரி இனமாக ஹிந்திபேசுவோர் அடையாளப்படுத்தப்படுவதில்லை என்பது வேறுவிடயம்) அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் மட்டுமே.ஹிந்தி அல்லாத மற்றைய மொழிச்சமூகங்கள் மிகச்சாதாரணமான அரசியல் ஒற்றுமை மூலமே ஹிந்தி தொடர்பான எந்த ஆதிக்கத்தையும் முறியடித்துவிட முடியும்.
2)மதம்.சிங்களவர்களில் பெரும்பான்மையோர் பௌத்தர்களாகவும்(தீவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம்)தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவும்(மொத்த மக்கள் தொகையில் 1981 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி 15.48 சதவீதம்.இது போரிற்கு பிந்திய தற்போதைய மதிப்பீட்டின்படி 12.61 சதவீதமாக குறைந்துவிட்டது.)இருப்பது மட்டுமன்றி சிங்களவர்களில் இந்துக்களோ தமிழர்களில் பௌத்தர்களோ கிடையாது.அதாவது இலங்கையில் இரு இனங்களுக்கும் மதத்தினாலான இணைப்பு அமையவில்லை.ஆனால் இந்தியாவிலோ காஷ்மீர்,நாகாலாந்து போன்ற சில மாநிலங்களைத்தவிர ஏனைய மாநிலங்களில் பெரும்பான்மை மதமாக இந்துமதம் இருப்பதனால் அது ஒரு பலமான இணைப்பு சக்தியாக விளங்குகின்றது.
3)பொருளாதாரவளம்.இலங்கைதீவில் தமிழர்களின் தாயகத்தைவிட சிங்களப்பிரதேசங்கள் அதிக இயற்கை வளங்கள் உடையன.இது சிங்களவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்துகிறது.ஆனால் இந்தியாவில் ஹிந்தி பேசும் மாநிலங்கள் அரசியலில் முக்கிய இடத்தை வகித்த போதும் அவற்றிற்குப் பொருளாதாரரீதியான மட்டுப்பாடுகள் உள்ளன.ஹிந்திபேசும் மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டவை.இவற்றிற்குக் கடற்கரையே கிடையாதென்பது பொருளாதாரத்தில் அவை மற்றைய மாநிலங்களைச் சார்ந்து இயங்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதால் அவற்றிற்கு இடையே ஒருவிதமான சமநிலை பேணப்படுவதைக்காணலாம்.
4)பொது உளவியல்.ஒரு தேசத்தின் கட்டமைப்பில் புறநிலைக் காரணங்களுக்கு இணையாக முக்கியபங்கை ஆற்றுவது பொதுவகமாகும்.அதாவது பொதுமனநிலை.முறைப்படி தமது வரலாற்றை எழுதிப்பேணிய மிகச்சில பண்டை சமூகங்களில் சிங்கள இனமும் ஒன்றாகும்.கிபி மூன்றாம் நான்காம் நூற்றாண்டளவில் சிங்களவர்களின் முதல் வரலாற்றுப்பதிவான தீபவம்சம் தொகுக்கப்படுகிறது.ஆறாம் நூற்றாண்டில் மகாநாமதேரர் மகாவம்சத்தை எழுதுகிறார்.இதன் தொடர்ச்சியாக சூளவம்சம்,ராஜாவலிய என்று பௌத்தபிக்குகள் சிங்கள பௌத்த வரலாற்றை பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை எழுதிவந்துள்ளார்கள்.மகாவம்சத்தின்படி சிங்கள இனத்தின் மூதாதையரான விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் லாட்ட என்ற நாட்டிலிருந்து கப்பலில் நாடுகடத்தப்பட்டு கரையோரமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் தரையிறங்கி அங்கிருந்தும் விரட்டப்பட்டு இறுதியாக இலங்கையை வந்தடைகின்றார்கள்.இதில் முக்கியமானது எப்போது அவர்கள் வந்தடைந்தார்கள் என்பதுதான் .சரியாக புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அதேநாளில் அவர்கள் இத்தீவில் காலடி எடுத்து வைத்தார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது..விஜயனும் அவனுடைய தோழர்களும் வருவதற்கு முன்பு இலங்கைக்கு மூன்று முறை புத்தர் வருகைதந்ததாகவும் இத்தீவு மக்கள் பௌத்த தர்மத்தை பேணிப்பாதுகாப்பார்கள் என்று அவர் பிரகடனப்படுத்தியதாகவும் மகாவம்சம் தெரிவிக்கிறது.
சிங்களப்பொதுமனதில் மகாவம்சம் இரண்டு முக்கிய விடயங்களை கட்டியெழுப்பியுள்ளது.முதலாவது தமது மூதாதையர் நாட்டைவிட்டுவிரட்டப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இந்தியாவின் எந்தவொரு பிரதேசத்தினும் நிலப்பகுதியினும் நீட்சியாக தம்மைக்கருதுவதில்லை.அவ்வாறான பூர்வீக இடம் தொடர்பான பற்றுதலும் அவர்களுக்கு இருப்பதுமில்லை.இரண்டாவது இலங்கைத்தீவென்பது பௌத்தத்தை பேணிப்பாதுகாத்து உலகிற்கு பரப்பவேண்டிய நிலமென்பதும் அதனை நிறைவேற்றவேண்டிய பொறுப்பை புத்தர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் என்பதுமான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
புத்தர் மறைந்ததினத்தன்று விஜயனும் அவனுடைய தோழர்களும் இலங்கையை வந்தடைந்தமை அவர்களைப் பொறுத்தவரை பெரும் குறியீட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு.மகாநாமதேரர் வாழ்ந்த ஆறாம் நூற்றாண்டு இந்துமத மறுமலர்ச்சியின் ஆரம்பகாலகட்டம் என்பதும் பௌத்தம்,சமணம் என்பன இந்தியாவில் செல்வாக்கு இழக்க ஆரம்பித்த காலகட்டமென்பதையும் கருதும்போது மகாநாமதேரரின் எழுத்துக்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமானதல்ல.இலங்கையின் சிங்கள பௌத்தமக்களின் மனதில் இந்திய உபகண்டத்தில் பௌத்தமதத்தின் வீழ்ச்சி பிராமணர்களின் சதியினாலேயே ஏற்பட்டது என்ற நம்பிக்கை ஆழமாகப்பதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பௌத்தம் செல்வாக்கிழந்தமை தொடர்பாக சிங்கள பௌத்த பிக்குகளின் கருத்துகளை அவதானித்தால் இதை அறியலாம்.அவற்றின் சாரமாக பிராமணர்களின் சதி என்ற கோட்பாடே வலியுறுத்தப்படும்.இதிலிருந்தே இந்தியாமீதான வெறுப்பும் தமிழர்கள் மீதான வெறுப்பும் தொடங்குகின்றது.சிங்கள பொதுமனத்தின் உளவியலில் இருந்து சிறுவயதில் இருந்தே ஊட்டப்படும் மகாவம்ச சிந்தனைகளை அகற்றுவதென்பது மிகவும் கடினமாகும்.அத்துடன் அப்பொதுவகமே மகாவம்சத்தினைக்கொண்டுதான் கட்டியெழுப்பபட்டதென்பதை கவனத்தில் கொள்ளாமல் சிங்கள மக்களையோ,அவர்களின் அரசியலையோ புரிந்து கொள்ளமுடியாது.மறுபுறமாக இலங்கைத்தமிழர்களின் பொதுமனம் தன்னை இந்தியாவின் நீட்சியாக கருதுவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.1987 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழ்வீடுகளில் விவேகானந்தர்,காந்தி,சுபாஷ் சந்திரபோஸ்,நேரு,ராஜாஜி என்று இந்தியத் தலைவர்களின் படங்களையே காணலாம்.பெரும்பாலான வீடுகளில் குறைந்தபட்சம் யாராவது ஒரு இந்தியத்தலைவரின் படமாவது சுவரில் கொழுவப்பட்டிருக்கும்.இது அவர்களின் மனச்சாய்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.இலங்கையின் அரசியலை புரிந்துகொள்வதற்கு இந்த உளவியலையும் புரிந்து கொள்வது மிகமுக்கியமானது.
இதற்கு நேரெதிராக இந்தியப் பொதுமனம் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களையும் ஒரு பண்பாட்டுவெளியாகக் காணுகின்றது.மகாவம்சத்திற்கு முரணாக இந்தியாவின் ஆரம்பகால இதிகாசங்களான இராமாயணம்,மகாபாரதம் என்பன பலவேறு மக்களையும் பிரதேசங்களையும் தொடர்புபடுத்துவதில் பெரும்பங்கை ஆற்றியுள்ளன.இராமாயணம் தெற்குநோக்கி ப் பிரதேசங்களையும் மக்களையும் தொடர்புபடுத்தியே செல்கின்றது.மறுபுறத்தில் மகாபாரதம் இந்தியாவின் பல்வேறுபிராந்தியங்களின் மன்னர்களை குருசேத்திரத்தில் ஒன்று குவிக்கின்றது.தூரதெற்கிலிருந்து பாண்டியமன்னனும் போரிற்கு சென்று உயிர்துறக்கிறான் என்ற காட்சியையும் மகாபாரதம் காட்டுகின்றது.இவ்வாறாகப் பல்வேறு வேற்றுமைகளுக்கு இடையிலும் பண்பாட்டு இணைவுகளினூடாக இந்திய பொதுமனம் உருவாகிவந்துள்ளது.அதன் உளவியல் என்பது இலங்கையின் மக்களினங்களின் உளவியலைப்போன்று ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியதல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
5)வரலாற்றுப்போக்கு.இன,மொழி,மத,பண்பாட்டு வேறுபாடுகள் மட்டுமே ஒருதனிநாட்டுக்கான தேவையையோ உரிமையையோ உருவாக்கிவிடுவதில்லை.இலங்கைத் தீவின் வரலாற்றுப்போக்கு தமிழ் மக்களின் உரிமைகளை அழித்து,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் மூலம் பாரம்பரியதாயகத்தில் தமிழர் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி,அவர்களை ஒரு இன அழிப்புக்கு உள்ளாக்கிய திசையினூடாக நகர்ந்திருக்கின்றது.மறுபுறத்தில் தமிழகத்தமிழர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்து தமது வரலாற்று நிலத்தில் தங்களைத்தாங்களே ஆட்சிசெய்துவருகின்றார்கள்.இந்தியாவில் மாநிலங்கள் மேலும் அதிக அதிகாரங்களைப் பெற்று கூட்டாட்சியை செழுமைப்படுத்தக் கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.அத்துடன் கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்களின் அரசியல் பலம் நடுவண் அரசில் அதிகரித்தே வந்துள்ளதுடன் தமிழ்நாடு பொருளாதாரவளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.அவர்களின் வரலாற்றுப்போக்கு வேறொருதிசையினூடாக நகர்ந்திருக்கிறது.
தமிழகத்தமிழர்களின் நிலைக்கும் ஈழத்தமிழர்களின் நிலைக்கும் மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடு உள்ளது.இதனைக் கருத்திற்கொள்ளாது தமிழ்நாடு தனிநாடாகும் என்பதுபோன்ற பேச்சுக்கள் தமிழகத்தமிழரிற்கு பிழையான புரிதலை ஏற்படுத்துவதுடன் ஈழத்தமிழர்களின் விடியலுக்கும் தடைக்கல்லாகவே மாறிவிடும்.
சரி,ஒருவாதத்திற்காக இவர்கள் கூறுவதுபோன்று தமிழ்நாடு தனிநாடாக உருவாகிவிடுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.அதனால் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுமா?அல்லது மேலும் பாதிக்கப்படுமா எனப்பார்ப்போம்.
இந்தியாவில் காஷ்மீரிலும் சில வடகிழக்கு மாநிலங்களிலும் தவிர ஏனைய மாநிலங்களில் தனிநாட்டுக்கான முனைப்பு என்பது இல்லை.அப்படி இருந்தாலும் அது ஒருசிலரால் முன்வைக்கப்படும் மக்களாதரவற்ற நிலைப்பாடாகவே இருக்கிறது.இவ்வாறான நிலையில் தமிழ்நாடு தனியாகப்பிரிந்தால் கூட இந்தியாவின் ஏனைய பகுதிகள் தொடர்ந்து ஒரே நாடாகவே நீடிக்கும்.இந்தியாவின் ஒருமாநிலமாக இருக்கும்போதே தமிழ் நாட்டின் நலனை உறுதி செய்வதற்கு எவ்வளவுதூரம் போராடவேண்டியுள்ளது என்று காவிரி,முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் அறியலாம்.இவ்வாறிருக்கையில் தனிநாடு என்பது இவ்வாறான பிரச்சனைகளில் தமிழகத்திற்கு இருக்கக்கூடிய ஓரளவு சாதகமான நிலையையும் இல்லாமற் செய்வதற்கே வழிவகுக்கும்.அத்துடன் இதேபோன்ற புதிய பிரச்சனைகளையும் உருவாக்குவதற்கு ஊக்குவிக்கும்.
தமிழ்நாடு தன்னில் ஒரு மாநிலமாக இருக்கும்போதே சிங்களவர்களுடன் ஒத்துழைக்கும் இந்தியா அது தனிநாடானால் எவ்வாறுநடந்து கொள்ளும் என்பதற்கு பதிலளிப்பது கடினமானதல்ல.
இந்தச் சூழ்நிலை தமிழர்களை ஒருபுறம் பலம்வாய்ந்த இந்தியநாட்டிற்கும் மறுபுறம் இனவாதத்திலேயே ஊறிப்போன சிங்களநாட்டிற்கும் இடையில் பாக்குவெட்டிக்கு நடுவில் வைக்கப்பட்ட பாக்கிற்கு இணையாக மாற்றிவிடும் என்பதே உண்மையாகும்.
இந்தியா மொழிரீதியான தேசிய இனங்களைக் கொண்ட நாடு.இத்தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடுகளை உருவாக்கவேண்டும் என்றும் சிலகுரல்கள் கேட்கின்றன.இந்தக்காட்சியையும் பார்த்துவிடுவோம்.மொழியடிப்படையிலான தேசிய இனங்கள் எல்லாம் தனிநாடுகளாக மாறிவிட்டால் என்ன நடைபெறும்?வடமேற்கில் மதவாதத்தில் ஊறிய பாகிஸ்தான் போன்ற நாடுகளும்,வடக்கில் தொடர்ச்சியாக ஆதிக்க எண்ணத்துடன் செயற்பட்டுவரும் சீனாவும்,வடகிழக்கில் தனது நிலப்பரப்புக்கு பொருந்தாத விகிதத்தில் சனத்தொகை பெருத்துத்தடுமாறும் பங்களாதேஷும் அந்நாடுகளை சுதந்திரமாக இருக்க விட்டுவிடுமா?ஆட்டுக்கொட்டகையை ஓநாய்களுக்கு திறந்துவிட்டது போன்றதாகிவிடும்.இவ்வாறான ஆபத்தெல்லாம் வட இந்திய பிரதேசங்களுக்குதான் ஏற்படும் என்பதில்லை.பதின்மூன்றாம் நூற்றாண்டில் வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்பாளர்களிடம் தில்லி வீழ்ந்து ஒருநூற்றாண்டு காலத்தில் மதுரை மாலிக்கபூரிடம் வீழ்ந்தது என்ற வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது.எனவே இந்தியாவில் உள்ள மொழிவாரித்தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனிநாடுகளாகவேண்டும் என்பது அடிப்படை விவேகமற்றதென்பதுடன் அனைவரையும் பேரழிவிற்குள் தள்ளிவிடக்கூடிய சிந்தனையாகும்.
அப்படியானால் இந்தியாவில் தமிழ்தேசியம் தேவையற்றதா என்ற கேள்வி எழலாம்.உண்மையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் உள்ளது.ஆனால் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்பதை சரியாகப்புரிந்து வரையறுத்துக்கொள்ளவேண்டும்.தமிழ்த்தேசியம் என்றால் தமிழர்நல அரசியல் என்பதுதான்.அதில் இருந்துதான் சமஷ்டியா,சுயாட்சியா,தனிநாடா என்பதெல்லாம் தீர்மானமாகின்றதே தவிர தமிழ்த்தேசியம் என்றாலே பிரிந்து சென்று தனிநாட்டை உருவாக்குதல் என்று சிந்திப்பது அறியாமையே தவிர வேறொன்றில்லை.இந்தியாவை பொறுத்தவரைத் தமிழர்களின் நலன்கள் தனித்தமிழ் நாட்டுக்கோரிக்கையால் பேணப்படப்போவதில்லை.மேலும்,அது தமிழர்களின் நலன்களை பாதிக்கக்கூடியது என்பதே உண்மையாகும்.
தற்போது பரவலாகவுள்ள சிந்தனையில் மிகமுக்கியமான மாற்றம் ஏற்படவேண்டும்.தமிழ்த்தேசியம் என்றால் இந்தியத்தேசியத்திற்கு எதிரானது என்று கருதுவதோ அல்லது இந்தியத்தேசியம் என்றால் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கருதுவதோ ஒருபோதுமே பலனளிக்கப்போவதில்லை.இன்றுள்ள பலசிக்கல்களுக்கு அவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதாக மாற்றப்பட்டுள்ளதே முக்கியகாரணமாகியுள்ளது.அடிப்படையில் இந்தியத்தேசியமும் தமிழ்த்தேசியமும் ஒன்றின் நலன்களை ஒன்றுபாதுகாக்க கூடியவையாகவே இருக்கின்றன.ஆனால் குறுங்குழு மனப்பான்மையுடைய கொள்கை வகுப்பாளர்களும்,சிந்தனையற்ற உணர்வாளர்களும் இவை இரண்டையும் முரண்பாடானதாகக்கருதி தமது செயற்திட்டங்களை உருவாக்குவதே தற்போதைய அனைத்து நலன்சார் பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
இந்தியத்தேசியம் என்பது ஒரு பண்பாட்டுத்தேசியம்.இந்தப்பண்பாட்டிலிருந்து தமிழர்களை தனியே பிரித்துவிடமுடியாது.அவ்வாறே தமிழர்கள் இல்லாமல் இந்தியப்பண்பாட்டையே புரிந்துகொள்ளமுடியாது.
இந்தியா இன,மொழி,மத,சாதி எனப்பல்வேறு அடையாளங்களைக்கொண்ட சமூகங்களால் ஆனதென்பதால் ஏதாவது ஒரு அடையாளத்தை மையப்படுத்திய ஆதிக்க அரசியல் என்பதை உருவாக்குவது மிகவும் கடினமாகும்.இவ்வாறான ஒரு சாதகமான சூழலில் அரசனயத்துடன் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு தமது அரசியல் பலத்தை பயன்படுத்தும் எந்தவொரு சமூகமும் தனது நலன்களை வென்றெடுப்பது சாத்தியமே.தமிழ்நாட்டுத்தமிழர்கள் இந்தத்திசையிலேயே சிந்திக்கவேண்டும்.
அமெரிக்காவின் மக்கள் தொகையில் யூதர்கள் ஏறத்தாழ 2 சதவீதத்தினர் மட்டுமே.ஆனால் அவர்களால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கமுடிகின்றது.இத்தனைக்கும் யூதர்கள் அமெரிக்காவின் பெரும்பான்மை சமூகத்தினரான வெள்ளையர்களுடன் இனரீதியாகவும் மதரீதியாகவும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.அவ்வாறிருந்தபோதும் அமெரிக்காவின் நலன்களுடன் தமது நலன்களையும் வெற்றிகரமாக இணைத்து முன்னெடுக்ககூடிய புத்திசாலித்தனம் அவர்களிடம் இருக்கின்றது.நோபல் பரிசுகளில் 20 சதவீதத்திற்கு அதிகமானவற்றைப்பெற்ற உலகமக்கள் தொகையில் 0.2 சதவீதம் மட்டுமேயுள்ள அச்சமூகத்திடம் இருந்து நாம் கற்றுக்கோள்ளவேண்டிய சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்றாகும்.
அமெரிக்காவில் நேரடியான அரசியல் பலமற்ற யூதர்களால் அந்நாட்டின் கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்தமுடியுமாயின் ஏறத்தாழ இந்தியமக்கள் தொகையில் 6 சதவீதத்தையுடைய 7 கோடி மக்களையும்,சக்திவாய்ந்த ஒரு மாநிலத்தையும்,ஒரு யூனியன் பிரதேசத்தையும் உடைய தமிழினத்தால் இந்தியாவின் கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்தமுடியாதா?
நெடுமாறன்,வைகோ,சீமான் போன்ற தலைவர்களில் ஈழத்தமிழர்கள் பெருமதிப்பையும் பேரன்பையும் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.பாரததேசத்தின் அழிந்துவிடாத தர்மத்தின் குரலாக அவர்கள் வரலாற்றில் இடம்பெறுவார்கள் என்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை.ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக விடக்கூடிய ஒரு தவறை,அரசியல் விவேகமற்றதன்மையை,தந்திரோபாயச்சறுக்கலை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
தமிழர்களின் நலன்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக நினைத்தோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள்.அவ்வாறான முடிவுகளை எடுத்த,எடுக்கின்ற ஆட்சியாளர்களிலும் அதிகாரவர்க்கத்தினரிலும் எத்தனைபேர் இந்தியாவின் நலன்களில் உண்மையான அக்கறையுடையவர்கள் என்று சிந்திப்பதில்லை.ஊழலையும்,அதிகாரத்துஷ்பிரயோகத்தையும் வாழ்க்கைமுறையாகக்கொண்டு நாட்டின்நலன்களை விற்று பிழைப்பவர்களே அவர்களில் பெரும்பான்மையானோர் என்பது தெரியாதா?இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவுடன் இப்படிப்பட்டவர்கள் அதைப்பற்றி கவலையடைந்து தங்களின் கோரிக்கைகளின் பக்கம் கவனம் திருப்புவார்கள் என்று நினைப்பதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை.இவ்வாறான ஆட்சியாளர்கள்,அதிகாரவர்க்கத்தினர்,அரசியல் தரகர்கள்,ஊடகவியலாளர்கள் ஆகியோரிடமிருந்து இந்தியதேசத்தையும் அதன் மக்களையும் வேறுபடுத்திப்பார்த்தேயாக வேண்டும்.
தமிழ் உணர்வுடைய சிறு அமைப்புகள் தமிழகத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் தமது தீவிர எதிர்ப்பிரச்சாரத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை கரைத்துவிட்டதுடன் அதனுடன் கூட்டணியமைத்திருந்த திமுகவையும் பலவீனப்படுத்தி தற்காப்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன.இது தமிழகத்தின் அரசியல் சமன்பாடுகளை மாற்றியுள்ளது.தமிழ்த்தேசிய அமைப்புகள் தமது அரசியல் பலத்தைப் பெருக்கிகொண்டால் ஜனநாயக வழியினூடாகவே தமது இலக்குகளை அடையமுடியும் என்பதற்கு இது ஒரு வெள்ளோட்டமாகவும் அமைந்துள்ளது.
இந்தியா என்பது ஒரு யானை அதன் பாகனாக யார்யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.அதனால் அந்த யானையின் தும்பிக்கை என்னுடையது,தலை என்னுடையது,கால் என்னுடையது என்று வேறுவேறாக வெட்டி எடுப்பதால் எவருக்கும் பயனில்லை.
தமிழ்த்தேசியவாதிகளின் நோக்கம் எப்படி அந்த யானையின் பாகனாவது அல்லது குறைந்தபட்சம் அந்தப்பாகனை தமிழர் நலன்களையும்,இலக்குகளையும் எட்டுவதற்குரிய விதத்தில் யானையை செலுத்துபவனாக மாற்றுவதற்கு எவ்வாறு அரசியல் பலத்தை பயன்படுத்துவது என்பதாகவே இருக்கவேண்டும்.
வளமான வலிமையான இந்தியா அதில் முதன்மையான தமிழகம் என்பதே குறிக்கோளாக இருக்கவேண்டும்.
“ இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க … ”
ந.சிவேந்திரன்
அன்புள்ள சிவேந்திரன்
ஈழத்திலிருந்து இப்படி ஒரு கடிதம் வந்திருப்பது நிறைவை அளிக்கிறது. வெறும் உணர்ச்சிவேகங்களுக்கு அப்பாற்பட்டு யோசிப்பதன் விளைவு இது. இன்று ஈழம் என்ற சொல் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைச் சக்திகளின் ஆயுதமாக ஆகியிருக்கும் நிலையில் இந்தப்பார்வை முக்கியமான ஒன்று
நான் எப்போதும் நம்பி சொல்லிவருவது, வலிமையான இந்தியா என்பது மட்டுமே வலிமையான தமிழ்ச்சமூகத்தின் பீடமாக இருக்க முடியும். தமிழர்கள் இந்தியா எங்கும்பரவி வலிமையாக இருக்கிறார்கள். அவர்களின் வெற்றி இந்தியாவின் கூட்டு அதிகாரத்தை தன் வசம் திருப்பும் முகமாக ஒருங்கிணைக்கப்படுவதே இன்றைய தேவையாக இருக்க முடியும். பிரிவினை கோரிக்கைகளுக்குப்பின்னால் நாமறியா ஐயத்திற்குரிய சக்திகள் இருக்கின்றன. அவை தமிழகத்தையும் இந்தியாவையும் அழிவை நோக்கிக் கொண்டுசெல்லும் நோக்கம் கொண்டவை
நீங்கள் சொல்லும் கடைசி வரி ஈராயிரம் வருடம் முன்பே சொல்லப்பட்டுவிட்டது. நமக்குக் கிடைக்கும் பழந்தமிழிலக்கியத்தின் ஆகப்பழைய பகுதி என்பது புறநாநூற்றின் முதல் இருபது பாடல்கள். அவற்றிலேயே இந்தியா என்ற பண்பாட்டு தேசத்தின் நிலவியல் எல்லைகள் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டன. அதில் உள்ள ஓர் சிறந்த கூறாகத் தமிழ்கூறும் நல்லுலகம் அடையாளப்படுத்தப்படுவது மேலும் பல நூற்றாண்டுகள் கழித்து சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் அளித்த பாயிரத்திலும்தான்
ஜெ
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix