பேயொன்னு ஆடுதுன்னு...
விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க...
பட்டுக்கோட்டையார் அவ்வப்போது மனசுக்குள் பாட்டு படிச்சாலும்... ம்ஹும்... சரியா அந்த நேரத்துக்கு இதயத் துடிப்புதான் அதிகமாகுமே தவிர... புத்தி வேலை செய்யாது!
இது எனது சிறுவயது அனுபவம்...
அப்போது வயது 10,11 இருக்கலாம். தென்காசியில் குலசேகரநாதர் கோவில் அருகில் உள்ள விண்ணகரப் பெருமாள் கோயிலில்
புரட்டாசி சனிக்கிழமை பூஜை, கருடவாகன சேவை முடித்து, இரவு 12 மணி அளவில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவிலுள்ள கீழப்புலியூர் வீட்டுக்கு சைக்கிளில் தனியாக வருவேன். கையில் பெருமாள் பிரசாதமாக பூமாலைகள், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சகிதம் சைக்கிளில் மாட்டிக் கொண்டு வருவேன். கீழப்புலியூர் ரயில் நிலையம் கடந்து, சாலை முனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சற்று முன்னர் இருக்கும் இந்தச் சிறிய பாலம் கடக்கும்போது தான் கதிகலக்கும்...
காரணம், அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் நாய், அல்லது கழுதை இந்தப் பாலத்தின் அடியில் அடிபட்டு, நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கும்.
அதற்கு ஒரு கதை கட்டிவிட்டார்கள் சிலர். இந்தப் பாலத்தின் அருகில் வயக்காட்டுக்குள் ஒரு சமாதி. அதிலிருந்து பேய் ஒன்று இப்படிச் செய்கிறது என்று!
கிராமத்துக் கதைகளுக்கு கட்டுப்பாடா இருக்கிறது..?!
கட்டற்ற கதைக் களஞ்சியங்களாயிற்றே!~
ஒரு சனிக்கிழமை... தெரு விளக்குகள் எதுவும் இல்லை. அப்போதே கிலி பிடித்துக் கொண்டது. துணைக்கு யாரும் இல்லை! தனியனாக சைக்கிளில் நள்ளிரவு 12.30க்கு மிதித்துக் கொண்டு வந்தேன்... பேய் இருக்குமோ..? அது எப்படி வரும்? எந்த உருவில் வரும்..? நம்மை என்ன செய்யும்?! எல்லாம் யோசித்து யோசித்து வந்தபோது... இரும்பையோ செருப்பையோ வைத்திருந்தால் பேய் ஒண்ணும் செய்யாது என்று ஒரு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்களே! அப்படி என்றால் ஒரு இரும்புக் கம்பியை கையில் வைத்துக் கொள்ளலாமா? எண்ண அலைகளுடன்... சைக்கிளை படுவேகமாக மிதித்து... துரத்துதுரத்து என்று துரத்தி... சரியாக இந்தச் சாலை திருப்பத்தில் வந்தபோது சைக்கிள் செயின் கழன்று கொள்ள... அவ்வளவுதான்.. இதயத் துடிப்பின் வேகத்தை எண்ணுவதற்கு எந்தக் கருவியும் உலகில் இல்லை!
சைக்கிளின் ஹாண்ட்பாரைப் பிடித்துக் கொண்டு, இந்த இரும்பைத் தொட்டுக் கொண்டிருந்தால்... பேய் ஒண்ணும் செய்யாதுல்ல... என்ற மன சமாதானம்.. இருந்தாலும் கேட்கவில்லை! சைக்கிளில் இருந்து இறங்கி... ஓட்டமும் நடையுமாக தள்ளிக்கொண்டு... பிள்ளையார் கோவிலைக் கடந்து.. ஒரு தெரு விளக்கு வெளிச்சத்தில் நின்றபோதுதான்.. இதயத்துடிப்பின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது... ஆனாலும் பேயும் வரவில்லை, பிசாசும் வரவில்லை! பயம்தான் மிஞ்சியது!
அந்த ஒரு நாள் பயத்தின் உச்ச அனுபவம்... அதன் பின்னர் காணாமல் போனதுதான் ஆச்சரியம்! ஏனென்றால், இனிமேல் அதற்கு மேல் பயப்பட வேறு எதுவுமில்லை... அந்தப் பேயே ஒன்றும் இல்லாமல் போச்சே! அப்புறம் வேறு பேயென்ன பிசாசென்ன? என்ற எண்ணம்தான்!
பதின்ம வயது கடந்து 4 வருட மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்) பணியில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி, இராப் பகல் பாராமல் தெருக்களில் அர்த்த ராத்திரிகளில் சுற்றி... ம்ஹும்... பேயுமில்லை பயமுமில்லை!!!
இந்த ஊருக்கு எப்போதாவது செல்வதுண்டு. தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் அழகான இயற்கை வெளி வழி! வயல் சூழ்ந்த பகுதி! நீர் சலசலத்து ஓடும் சிற்றாற்றின் கிளைக் கால்வாய்கள் அழகு! மணிரத்தினத்தின் ரோஜா படத்திலும், புதுநெல்லு புதுநாத்து படத்திலும் இன்னும் சில திரைப்படங்களிலும் அள்ளிப் புகுந்துகொண்ட அழகு இடம்! என் இளமைக் கால ரசனை மனதில் வெளிப்பட்டுக் கிளம்பிய கவிதைகளின் கருவாய் அமைந்த அழகு பூமி!
புலிக்குட்டி விநாயகர் என்ற பெயரோடு அமைந்த பிள்ளையார்! அந்தத் தெருவில் இருந்த இந்த வீடு! எல்லாம் இப்போதும் அடிக்கடி கனவில் வருவதுண்டு. இனம்புரியாமல் நானும் எழுந்து அமர்ந்து அசை போடுவதுண்டு. சின்னஞ்சிறு மனதில் ஆழப் பதிந்த காட்சிகளாயிற்றே!
இன்று அந்த வீடு... பாழ் பட்டு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. 5 வீடுகளை அடுத்து நான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்ட அந்த வீடு.. பாட்டு மாமி என்று நாங்கள் அன்போடு அழைக்கும் அந்த லட்சுமி மாமி இருந்த வீடு.. இப்போது மதிமுக கொடிக் கம்பத்துடன் கட்சி அலுவலகமாக இருக்கிறது...
தெருவின் கடைசியில் உள்ள தோட்டம்... பச்சைப் பசேல் என விளையும் கீரை! நாலணாவும் எட்டணாவும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குக் காலையில் சென்றால்... ஒரு அம்மா பிறையாய் வளைந்த கீரையறுப்பு அரிவாளால் அழகாகக் கொத்துக் கொத்தாக கீரையை லாகவமாகப் பிடித்து அறுத்துக் கொடுப்பார்.. அதன் சுவை... இன்றுவரை கிட்டவில்லை! ஏற்றம் இறைக்கும் அழகைக் கண்டு ரசித்திருக்கிறேன். பம்புசெட் புகுந்திராத தோட்டம். கிணற்றுக்கு உள்ளே அது புகுவதும், காளைகள் இரண்டு இழுப்பதும், நீரை மொண்டு கொண்டு வெளியே ஊற்றி அது மீண்டும் நீர் தேடித் தாழ்வதும்... எல்லாம் இப்போதும் நெஞ்சில் இழையோடுகிறது...
பழைமை நினைவுகளினூடே அமைந்த இந்த முறைப் பயணம்... நினைவில் நின்ற ஒன்றுதான்!