சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஜனவரி 02, 2013

சொற்சுவை பொருட்சுவை தமிழ்ச்சுவை: நண்பா நந்தலாலா.. இது உன் சிறப்பு!



தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்... அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை!
கவிஞர் நந்தலாலா-நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்... கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும்.
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான்.
இன்று காலை... பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் எனை மறந்து.
அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார்.
சிறுவயதில் சொல்விளையாட்டு எங்களுக்கும் அத்துபடி. எல்லாம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்து பழகியிருக்க வேண்டும்... அந்த வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது யாம் செய்த புண்ணியம்.
கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி?
அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்... அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு!
பெரியவர் கேட்பாராம்... "இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?” இதற்கான ஒற்றைச் சொல் பதில் - “இராமன் தாரத்தால்”! அதெப்படி? இலங்கை அழிந்தது - இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது - இரா மந்தாரத்தால்!
இன்னொன்று..
அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்?
இதற்கான பதில்... “பார்ப்பான் இல்லாமையால்!” பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்துவருகிறது!
தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்...
இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்!
- உள்ளத்தில் உழன்றுகொண்டிருக்கிறது இந்த வாசகம்!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix