சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

செவ்வாய், ஜனவரி 01, 2013

ஆதீனமாகியும் பழைய முரசொலியை மறக்காத அருணகிரியார்!


தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்: மதுரை ஆதினம்!

செய்தி:

இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.
இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.
-------------------
என் கருத்து:

பெண்கள் எப்படி உடை உடுத்தினால் என்ன? அவர்கள் குறைந்த அளவு மானத்தை மறைக்கும் அளவுதான் உடையே போட்டுக்கொண்டு வெளியில் உலவ சுதந்திரம் இருக்கட்டுமே! கட்டுப்பாடு ஆணுக்குத்தான் இருக்க வேண்டும்! ஆன்மிகம் பேசும் மனிதர், உடலை துச்சமாக மதிக்க வேண்டும். உயிர் இருக்கும் வரைதான் உடலுக்கு மதிப்பு. உடலுக்கும் காயம், நோய், கிருமிகள் தாக்காதவரைதான் மதிப்பு! ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் பாடியது நினைவுக்கு வருகிறது. ரத்தமும் சீழும் சதையும் கொண்ட உடல்மீது இவ்வளவு பற்று வைப்பதா? என்று! நல்ல குழந்தைகளைப் பெற்று அடுத்த சந்ததியை உலகத்துக்குக் கொடுத்து, உலகம் ஒழுங்காக இயங்க இயற்கைக்கு ஒத்துழைப்பதே ஆண்-பெண்ணின் கடமை! காமத்தால் கண்டதையும் கண்டு மேய்வது- மனிதனுக்கு விதிக்கப்பட்ட தர்மம் அல்ல!
உண்மையில் சொல்லப்போனால், நம் மனத்தையும், நம் கட்டுப்பாட்டையும் சோதிக்கும் களம் இந்த உலகம். வீட்டில் பெண்குழந்தைகள் வளர்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். ஒரு சகோதரனாக, தகப்பனாக ஆண் தன் வீட்டுப் பெண்களின் வளர்ச்சியைக் காண்கிறான். அவர்கள் விரும்பிய உடைகளை, விரும்பிய உணவுகளை என்று வாங்கிக் கொடுக்கிறான் அல்லது அந்த சுதந்திரத்துக்கு சம்மதிக்கிறான். வீட்டின் அதே பார்வையை வெளியிலும் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அந்தப் பக்குவம் வருவதற்கு ஆண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதுதான் ஆன்மிகக் கடமையாக இருக்க வேண்டும். தவறுகளை ஆண் செய்துவிட்டு, பெண் மீது பழி போடுவது பாவம்; பாவம்! நீ உடை உடுத்துவது அப்படி, அதனால் தூண்டப் பெற்றேன் என்றால் தவறு செய்பவன் மனோபாவம்தான் தண்டிக்கப்பட வேண்டியதே தவிர, தூண்டுவதாகக் கூறப் படுபவர் இல்லை! கண்முன் பணம் நிறைந்து கிடக்கிறது. கையாடல் செய்யும் நபர்தான் தண்டிக்கப் படுபவரே தவிர, தவறு சூழ்நிலையில் அல்ல! இதை முதலில் ஆதினத்துக்கு உணர்த்த வேண்டும். நம் நாட்டில் இத்தகைய மனோநிலை ஆதி காலத்தில் இருந்து இல்லவே இல்லை! அதெல்லாம் பர்தா போட்டுக் கொண்டு பெண்களை கட்டுப் படுத்தி, அவர்களைக் குற்றவாளிகளுக்கும் ஆணாதிக்க நாடுகளில்தான்! நம் நாட்டில் பெண்ணுக்குப் பாதுகாப்பு ஆண் - ஒரு சகோதரனாக, ஒரு தகப்பனாக, கணவனாக, மகனாக, உறவினனாக! இந்த மனநிலையைத் தகர்த்தவை வெளிநாட்டு ஆணாதிக்க சமுதாய சிந்தனைகளே! மதுரை ஆதினத்துக்கு இந்த சிந்தனை வந்தது வருந்தத் தக்கது!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix