சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஜனவரி 23, 2011

கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!


அப்துல் கலாம் துணைவேந்தரானது தமிழருக்குப் பெருமை. விஞ்ஞானி ஆனது இந்தியருக்குப் பெருமை. குடியரசுத் தலைவரானது உலகுக்கே பெருமை. அவர் இப்போது கவிஞராகியிருக்கிறார், இது இயற்கைக்குப் பெருமை. அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் அவர் அளித்த கவிதை இங்கே ...

ஓ! என் இல்லத்தின் இனிய மரமே!
எல்லா மரங்களிலும் நீ தான் பெருமைக்குரியவன்!
எத்தனை தலைமுறைகளை நீ வளப்படுத்தி இருக்கின்றாய்?!
வருடங்கள் பலப்பலவாய் பாசமுடன் பயன் தருகின்றாய்
உன் அக்கறை கவனிப்பில் இன்றும் வாழ்பவை எத்தனையோ?!
உன் வாழ்வின் கீதத்தை நானும் பாசத்துடன் கேட்கின்றேன்!
ஓ... என் நண்பனே! கலாம்!
உன் தாய் தந்தையைப் போல நான் வயது நூறைக் கடந்துவிட்டேன்
ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மணிநேரம் நீ நடை பயில்கின்றாய்!
முழு நிலாப் பொழுதுகளிலும் நான் உன்னைக் காண்கிறேன்
சிந்தனையில் ஆழ்ந்தபடி நடக்கின்றாய்...
என் நண்பனே... உன் மன ஓட்டத்தை நான் உணர்வேன்...
""நான் என்ன கொடுக்க இயலும்''
ஏப்ரல் மாதப் பொழுதில், என்னை நீ ஏறிட்டுப் பார்த்தாய்!
மீண்டும் மீண்டும் நீ, மீளாப் பார்வை பார்த்தாய்!
ஆயிரம் ஆயிரமாய் இலைகள் உதிர்ந்திருக்க, நீ என்னைக் கண்டாய்!
என் நண்பனே, என்னிடம் கேட்டாய் நீ...
என் பாரம் எதுவோ!?
இலைகளை நான் கழித்ததும், புத்திலைகள் பிறப்பெடுக்கின்றன!
மலர்களின் மலர்ச்சி, வண்ணத்துப் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்கின்றது.
எனவே, கலாம்... இது எனக்குப் பாரம் அன்று!
இது என் வாழ்வின் அழகான ஒரு கட்டம்!
கலாம்... இப்போது நீ என்னைச் சுற்றி வா!
அடர்ந்து செழித்த என் கிளைகளின் வழியே புகுந்து, அகத்தில் ஆழ்ந்து பார்.
தேன் நிரம்பித் ததும்பும் ஒரு தேனடையைக் காண்பாய்.
ஆயிரமாயிரம் வேலைக்காரத் தேனீக்களின் அயராத உழைப்பால் விளைந்தது...
அந்தத் தேனடை!
அவற்றின் ஓயாத உழைப்பால் சொட்டுச் சொட்டாகச் சேர்ந்தது... அங்கே தேன்!
தித்திக்கும் தேன் துளிகள் நிரம்பிய தேனடையின் பாரம் அபாரமானதுதான்!
ஆயிரமாயிரம் தேனீக்களின் காவலால் காக்கப்படுகிறது...
யாருக்காக இந்தத் தேன் சேகரிக்கப்பட்டது? பாதுகாக்கப்பட்டது?
அது உமக்காக, எத்தனையோ ஏழையருக்கு... சீமான்களுக்கு!
எல்லா உயிர்க்கும் பகிரப்பட வேண்டும் என்பதுதானே நம் நோக்கம்!
கலாம்! நீ பார்த்திருக்கிறாயா?
என் கிளைகளின் பல பாகங்களில் பல பறவைகள்
எத்தனை எத்தனை கூடுகளைக் கட்டியிருக்கின்றன..?
என் பெரும்பாலான நுனிக் கிளைகள் எத்தனை வசீகரமாயிருக்கும்?
நூற்றுக்கணக்கான கிளிகள் அதனைத் தம் வீடுகளாக்கியிருக்கின்றனவே!
எனவே, என்னை நீ கிளிமரம் என்று அழைப்பாய்.
இப்போதும் என்னை நீ தேன் மரம் என்பாய்.
என்னைப் பற்றி உன் பேரனிடம் நீ பேசியதைக் கேட்கும்போது,
நான் முறுவலிப்பேன்.. புன்னகைப்பேன்.
என் மரப்பொந்துகளிலும் கிளைகளிலும் பறவைகளின் வீடுகளுக்கு இடமளித்தேன்
நான் பறவைகளின் கீதத்தை செவிமடுத்திருக்கிறேன்...
அவற்றின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் காதலாகிக் கண்டிருக்கிறேன்...
அவை என்னைச் சுற்றிச் சுற்றிச் சிறகடித்துப் பறந்து
மகிழ்ச்சிப் பெருக்கை பரிமாறியிருக்கின்றன.
இப்போதெல்லாம் கலாம்... உன் நித்திய நடைப்போதுகளில்
என் அருகே வருவாய். இன்னும் அருகே வந்து என் வேர்ப் பற்றை பரிவோடு பார்ப்பாய்.
வெல்வெட் மெத்தையாய் புல்படுக்கை... சுற்றிலும் அடர்ந்த பூக்காடு!
அங்கே ஓர் அழகுப் பெண்மயில்
அது உள்ளக் களிப்பால் ஈந்த முட்டைக்கு கதகதப்பைத் தந்தது.
எல்லாப் போதுகளும்... அங்கே தாய்ப்பாசம் மீதுற அரவணைக்கும் அழகுக் காட்சி!
உன் வீட்டின் உள்ளிருந்து நோக்கும் அருமைக் காட்சி!
அந்தப் பெண்மயில் ஏழு குஞ்சுகளுடன் உலவியது
என்னைச் சுற்றிச் சுற்றி கம்பீரமாய் உலா வந்தது...
பகலும் இரவும் தன் குஞ்சுகளைப் பாதுகாத்தபடி!
இப்போது, ஒரு கேள்வி கலாம்...
என் குறிக்கோள்... எனக்கான கட்டளை, என் பிறவியின் நோக்கம்...எது?
நூறு வருடங்கள் உயிர்ப்போடு திகழ்வதா?
நான் பெற்றதை வைத்து ஆனந்தமாகக் கழிக்கிறேன் என் பிறவிப் பயனை!
நான் பரிமாறினேன்... பூக்கள் மற்றும் தேனை!
இருப்பிடம் தந்தேன், நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு!
நான் கொடுப்பேன் கொடுப்பேன் இன்னும் கொடுப்பேன்...
எனவே, நான் இருப்பேன்...
இன்றும் இளமையாக!
என்றும் இன்பமாக!

(அர்ஜூனா என்ற இந்த மரத்தின் அறிவியல் பெயர் TE​R​M​I​N​A​L​IA AR​J​U​NA- தமிழில் இதன் பெயர் மருத மரம்)
இது, 2009,ஜூன் 10 அன்று வடக்கு அயர்லாந்து, பெல்பாஸ்ட் குயின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அளிக்கப்பட்ட கவிதை)

தமிழில்: செங்கோட்டை ஸ்ரீராம்

தினமணிக் கதிரில் வெளியான கவிதை!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix