சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஆகஸ்ட் 01, 2007

ஸ்ரீ சுதர்ஸனர்சக்கரத்தாழ்வார் மகிமை

ஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம:

ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத்

அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிய எய்தும் அற்புதம் வாய்க்கப்பெற்ற இந்நாளில், இத்தகைய பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஒரு முதல் கண்டுபிடிப்பாக ஒன்று நம் நினைவில் வரும்... அது என்ன?

மனிதன் தன் சக்தியை உணரத்தொடங்கிய முதல் கால கட்டம். அதை கற்காலம் என்று வகுத்திருக்கிறார்கள் இன்றைய அறிவியலார். அந்தக் கற்காலத்தில் உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடியும், கிடைத்த தாவரங்கள், கனிகளை உண்டும் வாழ்ந்துவந்த ஆதிமனிதனின் முதல் முயற்சியாக அவன் கண்டுபிடித்தது இதைத்தான். அது என்ன?

வானத்தை நிமிர்ந்து பார்த்த அந்த ஆதிமனிதன், தன் தலைக்கு மேல் வளர்ந்த மரத்தை நோக்கினான். நெடிதுயர்ந்து விண்ணை முட்டிய மரங்கள், ஒருநாள் மண்ணை முட்டின. அவற்றை அப்புறப்படுத்தி வேற்றிடம் கொண்டு செல்ல எண்ணிய மனிதன், அதை அப்படியே அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் தள்ளிவிட்டான். அந்த மரம் அப்படியே உருண்டு சென்று ஆற்றின் நீர்ப்பரப்பில் மிதந்து சென்றது. தரையில் உருண்டு கொண்டே சென்று ஆற்றுத் தண்ணீரில் சுற்றிச் சுழன்ற அந்த மரத்துண்டைப் பார்த்து அவன் ஒன்றைக் கற்றுக் கொண்டான். அதுதான் அறிவியல் கண்டுபிடிப்பின் மூலாதாரம் - சக்கரம். சுதர்ஸனம்.


ஸ்ரீ சுதர்ஸன மகிமை

ஜந்துனாம் நரஜன்ம துர்லபம் - எண்ணரிய பிறவியிலே மானிடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண் என்று மகான் தாயுமானவரும் போற்றுகிறார். இந்த மானிடப் பிறவி ஏன் சிறந்தது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஆறறிவு பரைத்ததினால்தானே!

இறைவன் எங்குமிருக்கிறான். அவன் தன்னுள்ளும் இருக்கிறான். அவனைக் காண வேண்டும் என்ற முதிர்ந்த சிறந்த அறிவு, அந்த ஞானம் ஏற்பட வேண்டும் என்றால், இந்த மானிடப் பிறவியில்தான் முடியும். அதனால்தான் மனிதன் சிறந்தவனாகிறான்.

இறைவனைக் காண முயற்சி செய்யும்போது அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் பல. உத்திகள் அநேகம். அகண்டாகாரமான ஒரு பெரும் பொருளை தன் மனதுக்குகந்த உருவிலே வழிபட்டு வெற்றியடைந்து, முடிவிலே அப்பரம்பொருளினை அனுபவிப்பதே சிறப்பாகும். இதுவே தெய்வ உபாசனையாகும். முத்திக்கு வித்தான மூர்த்தி, சித்திக்கும் உதவுவதே உபாசனா மார்க்கத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு ஞான மார்க்கத்திலே அதன் நடுவிலே இகத்திற்கும் மிகவிரைவிலே பலனளிக்கும் நிலையிலேயுள்ள உபாசனைகளில் சுதர்சனம் ந்ருஸிம்ஹம், ஆஞ்சநேயம், ஹயக்ரீவம், வராஹம் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

உக்கிர வடிவிலே உள்ள பரம்பொருளைத் தீவிர உபாசனையின் மூலம் அணுகுவதே மகா சுதர்ஸன உபாசனையாகும். மகா விஷ்ணுவின் திருக்கையை அலங்கரிக்கும் சுதர்சனர் அவருக்கும் அவரை அனவரதமும் வணங்கி பூஜிப்பவருக்கும், பாதுகாவலராயிருந்து சத்ருக்களை சம்ஹாரம் செய்து நம்மை ரக்ஷித்து வருகிறார்.

ஸ்ரீசுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்கட்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவதாக பல நூல்களும் கூறுகின்றன.

ஸ்நானே, தானே, ஜபாதௌச ச்ராத்தே சைவ விஷேத: சிந்தநீய: சக்ரபாணி ஸர்வா கௌக விநாசந: - ஸர்வ கர்மஸு பூர்ணம் ஸ்யாத் ஸத்யம் ஸத்யம் ஹி நாரத:

என்று பிரமன் நாரதருக்கு ஸ்ரீ சுதர்ஸனர் ஸ்நானம், தானம் தவம் ஜபம் த்தம் முதலியவற்றை குறிப்பிட்டு எக்காலத்திலும் தியானிக்கத்தக்கவர் என்று ஸத்யம் செய்து கூறுகிறார் என்கிறது புராணம்.

உலகத்தைக் காக்கும் சகல வல்லமை கொண்டுள்ள விஷ்ணு பகவானே - சுதர்ஸனரைநிரந்தரமாக தனது திருக்கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ சுதர்ஸன மகிமை:
பலவித உபாசனைகளில் யந்திர உபாசனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ சுதர்ஸன யந்திரம், ஸ்ரீ சுதர்ஸன மகா யந்திரம்- இரண்டும் முறையே சக்ரரூபி விஷ்ணு, நவகிரகங்களின் நடு நாயகர், பஞ்ச பூதங்களுக்குச் சக்தியூட்டும் பரம் பொருள் - ஸ்ரீ சூரிய பகவான் உடன் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. யந்திரங்களுடன் கூடிய படத்தை கண்ணாடி போட்டு பூஜையில் வைத்து ஸ்நானம் செய்து மிகவும் ஆசாரத்துடன் வழிபாடு செய்து வர வேண்டும். எண்ணிய காரியங்கள் யாவற்றிலும் வெற்றி பெறலாம்.

பயங்கரமான துர்ஸ்வப்னங்கள் சித்தப்பிரமை, சதா மனோவியாகூலம், பேய் பிசாசு பில்லி சூனியம் ஏவல் இவைகளால் உண்டாகிற சகலவிதமான துன்பங்களையும் ஸ்ரீ சுதர்ஸன மகாயந்திரம் நிவர்த்திக்கும்.

சிலருக்கு ஜாதகத்தில் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்பட்டு சுபயோகங்கள் தடைபட்டு தரித்திரத்வம் ஏற்படும். ராஜயோகங்கள் பங்கப்படும். சரீர பலம், மனோபலம், தைர்யம், இவை குறைபட்டு எதிலும் தெளிவில்லாது சபை கோழையாயிருப்பார்கள். இவைபோன்ற கஷ்டங்களை ஸ்ரீசுதர்ஸன மூல மந்திரத்தை பெற்றோர் அல்லது குருவிடம் உபதேசம் பெற்று தினசரி ஜபம் செய்து யந்திர ஆராதனை செய்ய வேண்டும்.

மொத்தம் 1008 வகை சுதர்சன மந்திரங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 108 மந்திரங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை ஸித்தி செய்தல் நலம் தரும்.

காயத்ரி மஹாமந்திரம், சூரிய மண்டலம் நடுவே உள்ள ஸ்ரீமந்நாராயணன் - ஸ்ரீசுதர்சன பகவான் இவர்களைக் குறிப்பதாகும். எனவே தினமும் காயத்ரீ ஜபம் செய்த பின்னரே சுதர்சன ஜபம் செய்யவேண்டும்.

அழகு வாய்ந்த எல்லா அங்கங்களுடன் பிரகாசிப்பவரும் எட்டுக் கைகள் கொண்டவரும் மூன்று கண்கள் உடையவரும் தித்திப் பற்களால் பயங்கரமான முகத்தை உடையவரும் பயத்திற்கும் பயத்தை அளிப்பவௌம் பயங்கரமான மஞ்சள் நிறத்தலை முடி உடையவரும் அக்னி ஜ்வாலையின் மாலைகளால் சூழப்பட்டவரும் கண்களுக்கு எட்டாதவரும் குறிப்பிட முடியாதவரும் பிரமாண்டம் முழுவதும் வியாபித்த சரீரம் உடையவரும் எட்டு ஆயுதங்களால் சூழப்பட்டவரும் எட்டு சக்திகளுடன் கூடியவர்ம் எட்டு ஆரங்களுடன் கூடிய மிக பயங்கரமான சக்ரத்தை உடையவரும் இந்த சக்ரம், உலக்கை, ஈட்டி, தாமரை என்ற நான்கையும் வலது கைகள் நான்கில் தரித்தவரும்  இடதுபுறம் உள்ள நான்கு கைகளில் சங்கம் அம்புடன் கூடிய வில் பாசக்கயிறு கதை ஆகியவைகளை தரித்தவரும் சிவப்பு புஷ்ப மாலையால் சோபிப்பவரும் சிவப்பு சந்தனத்தால் பூசப்பட்ட அங்கங்களை உடையவரும், திவ்ய ரத்னங்களால் இழைக்கப்பட்டதும் விசித்திரமானதும் ஆகிய கிரீடத்தால் பிரகாசிப்பவரும் துஷ்டர்களை அடக்கி பக்தர்கட்கு அனுக்ரஹம் செய்பவருமான ஸ்ரீ சுதர்ஸனர் என்ற பெயருள்ள சக்ரத்தாழ்வாரை தனக்கு எதிரில் இருப்பதாக ஸ்மரித்துக் கொண்டு சூர்ய பகவான் த்யானம் செய்ததாக பவிஷ்யோத்தர புராணம் கூறுகிறது.

கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா அவப்ருத ஸ்னானம் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சகக்ரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு ஸ்ரீ சக்ரபாணியாக கட்சி தருகிறார்.

ஸாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்ரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும். திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு.

சுதர்சன மந்திரத்தில் ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று தொடங்கும் மந்திரமே பெரும்பாலும் சுதர்சன ஹோமத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஸர்வ சத்ரு நாசன சுதர்சன மந்த்ரம் இதுதான்...
ஓம் மஹா ஸுதர்சனாய
ஸர்வ சத்ரு ஸம்ஹர ஸம்ஹர
ஸர்வ க்ஷுத்ரம் மாரய மாரய
ஸர்வ ரோகம் நிவாரய நிவாரய
மஹா ஸுதர்சனாய சக்ர ராஜாய ஹும்பட் ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை வெண்கடுகு, ஸமித்து கொண்டு ஹோமம் செய்தால் சத்ருக்கள் அழிவார்கள். நாயுருவி உபயோகித்தால் வியாதி நாசம்... வெண்பட்டு ஹோமத்தில் இட்டால் ஐச்வர்ய விருத்தி... செந்தாமரையை இட்டால் கடன் நிவாரணம் ஆகியவை ஏற்படும்.
ரோக நிவர்த்திக்கு அஸ்வினி நட்சத்திரத்திலும் பரணி, திருவாதிரை, உத்திரட்டாதி ஸம்ஹார பிரயோகத்திற்கும், பைசாச உபாதைகளை நீக்க ஸ்வாதியும், ஏகாதசி சத்ரு நாசத்திற்கும், திரயோதசி பௌர்ணமி வச்ய ப்ரயோகம் செய்யவும் பயன்படுமென்று மந்த்ர மஹோததி மந்த்ர தத்வநிதி மந்த்ர மஹார்ணவம் முதலிய சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம் காம்யார்த்தங்கள் நிறைவேற ஹோமமே சிறந்த ஸாதனம். பீஜங்கள் சேர்த்த மூல மந்திரத்தைப் பிரயோகத்திற்கு ஏற்றபடி தக்க ஹவிஸ்ஸுடன் நாம் அக்னிதத்வத்தில் ஸமர்ப்பிக்கிறோம். எண்ணையில் இட்ட பச்சை அப்பளம் சாப்பிடக்கூடிய நிலையில் பொரிந்து வருவதைப்போல ஹவிஸ்ஸுடன் சேர்ந்த மந்திரம் தீயில் ஸ்வாஹா என்று இடப்பட்டு உடனே நம் காம்யார்த்தங்கள் பலன் ரூபத்தில் நிறைவேறுகின்றன.

மந்திர சாஸ்திரங்களின் பிரயோகங்கள் வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை. நாட்டு மருத்துவத்தில் பச்சிலைகள் எவ்விதம் மறைபொருளாகக் கூறப்படுகின்றனவோ அவ்விதமே மந்த்ரமும் இலைமறை காய்மறையாகவே உபதேசிக்கப்பட்டு வந்துள்ளது. செய்யப்போகும் பிரயோகத்திற்கு தகுந்தபடி, பஞ்சபூத தத்வங்களான லம், ஹம், யம், ரம், வம் என்ற பீஜங்களையும் யாருக்காக செய்யப்படுகிறதோ அவர் பெயரையும் அதற்கு மந்திரத்தில் ஸூக்ஷ்மமாக அமைந்திருக்கும் இடத்தில் மந்த்ர பாண்டித்யம் உள்ளவர்கள் சேர்ப்பார்கள்.
பெயரில்லா சொன்னது…

The pages are wonderful. Keep it up. -Thiruppur Krishnan

பெயரில்லா சொன்னது…

very nice
V.kumar Thiyagadurgam

S.SRINIVASAN சொன்னது…

GOOD INFORMATION.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix