சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஆகஸ்ட் 01, 2007

எப்பேர்ப்பட்ட ஊரில் இப்படி ஒரு நிலையில் கோயிலா?


அபிராமி அம்மை குடியிருக்கும் ஊரான திருக்கடையூரில் கோயில் கொண்ட பெருமாள் இப்போது ஓலைக்குடிசையில் வாசம் செய்கிறார். அவரைப் பற்றிய ஓர் அறிமுகம்.

இவர் அமிர்த நாராயணப் பெருமாள். மார்க்கண்டேயனைக் காக்கும் அவசரத்தில் சிவபிரான் கோபத்தில் எமதர்மனைக் காலால் எட்டி உதைத்தார். அதற்கான சாட்சியாய் இந்தப் பெருமாளை சுட்டிக் காட்டினார் சிவனார் என்பது கதை.

அண்மையில் நண்பர்கள் புடைசூழ திருக்கடையூருக்குப் பயணமானேன். மூத்த நண்பர் திரு. வல்லிபுரம் சுபாஷ் சந்திரனுக்கு 60 வயது பூர்த்தியானதை ஒட்டி திருக்கடையூர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்கள். அதற்காகத்தான் அவ்வூருக்குப் பயணமானேன். அதுவே எனது முதல் பயணம் அந்த ஊருக்கு.

ஊர் நன்றாகவே உள்ளது. கோயில் ஜே ஜே என்று இருக்கிறது. ஒரே நாளில் சுமார் நாற்பது, அறுபதாம் கல்யாண உற்சவம் நடக்கிறது. கோயிலலச் சுற்றியுள்ள மக்களுக்கு பிழைப்புக்கு கொஞ்சம் வழியும் இருக்கிறது. சத்திரங்களை எடுத்து காண்ட்ராக்ட் முறறயில் எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். கோயிலில் 60ம் கல்யாணத்துக்கு ஒவ்வொரு மண்டபத்திலும் உட்கார தனி ரேட். இப்படிக் கொழிக்கிறார் அமிர்த கடேஸ்வரர். அவர் பெயரால் கொஞ்சம் வைதீகர்களுக்கும் பிழைப்பு ஓடுகிறது. செழிப்பு தெரிகிறது. ஆனால் பரிதாபத்துக்குரியவர் யயர் என்றால், இந்தப் பெருமாள்தான்.


நானும் கலைமகள் பத்திரிகை ஆசிரியர் கீழாம்பூரும் அப்படியே கொஞ்சம் முள்காட்டில் நடந்து பெருமாள் கோயிலைத்தேடிப் போனோம். இவர்கள் செய்திருக்கும் ஒரே நல்ல காரியம், எக்கச்சக்க கூட்டம் வரும் அபிராமியம்மை கோயிலின் வாசலில் பெருமாள் கோயிலுக்குப் போகும் வழி என்று ஒரு போர்ட் வைத்திருப்பதுதான்.


வழியில் ஒரு கிழவி மூங்கில் பிரம்பில் தன் கைவித்தையைக் காட்டிக் கொண்டிருந்தாள். அவளிடம் போய் பாட்டி பெருமாள் கோயில் எவ்வளவு தொலவு இருக்கு? ன்னு கேட்டேன். மிகச் சாதாரணமாக ஒன்று சொன்னாள். அதான் தங்கச்சிக்காக அவரு போட்ருந்த நக நட்டல்லாம் கழட்டிக் கொடுத்துட்டு ஒண்ணும் வேணாம்னு ஓட்டாண்டியா போய் ஓரத்துல போய் ஒதுங்கியிருக்காரே! போங்க போய்ப் பாருங்கண்ணு சொல்லி வழியயும் காட்டினாள்.





அப்படியே போய்ப் பார்த்தோம். அந்தக் காட்சிகள்தான் இங்கே நீங்கள் காண்பது. சும்மா சொல்லக்கூடாது, விக்ரக ரூபியாக எழுந்தருயிருக்கும் தாயார் அழகே அழகு. சௌந்தர்ய ரூபியாய் பாவம்... இடிந்துபட்ட வீட்டில் இருக்கிறாள் உலகுக்கே படியளப்பவள்.


கிழவி சொன்ன யதார்த்த வார்த்தைக்கு ஒரு கதையும் இருக்கிறது. அதுதான் இந்த தலபுராணம்.


பாற்கடலைக் கடைந்தார்கள் தேவர்களும் அசுரர்களும். அதிலிருந்து அமுதம் குடத்தில் வெளிப்பட்டது. அமுதக் குடத்தை எடுத்துக் கொண்டு திருக்கடையூர் குளக்கரையில் உட்கார்ந்துவிட்டனர் அனைவரும். அசுரர்களை குளித்துவிட்டு வரச் சொல்லி, தேவர்கள் நைஸாக அமுதக் குடத்தை பங்கு போட ஆரம்பித்து விட்டனர். விஷ்ணுவோ தேவர்களின் அடிபிடி சண்டையை சமாதானப் படுத்தி ஒழுங்காக டிஸ்ட்ரிபூட் பண்ணனும்னு வந்தார். குடத்துக்குள்ளே கையைவிட்டா லிங்கம்தான் இருக்கு. யாருக்கும் ஒன்னும் புரிபடலே. அப்புறமாத்தான் தெரிஞ்சது, விஷத்த மட்டும் சிவனாருக்கு அள்ளிக் கொடுத்து விட்டு, இந்த அமுதம் கிடைக்க அவரும் காரணம்னா அப்டின்னு கொஞ்சம் கூட ஒரு நன்றியுணர்ச்சி இல்லாம இந்த தேவர்கள் எல்லாம் அமுதத்தைப் பங்கு போட அடிபோட்டாண்ணா... சிவனாரும் தன்னோட லீலையைக் காட்ட வேண்டாமா? அதான் அப்படியே குடத்துக்குள்ள வந்து அப்படியே ஒக்காந்துட்டார்.


பெருமாளுக்குப் புரிஞ்சது... உடனே தன்னோட ஆபரணத்தக் கழட்டி வெச்சார். லிங்கத்துக்குப் பக்கத்துல சக்தி தேவிய... அதான் அபிராமியம்மைய நெனச்சுக்கிட்டே அமுதம் சித்திக்கணும்னு தேவர்கள்ளாம் பிரார்த்தனன பண்ணினா. உடனே அமுதம் அந்தக் குடத்துல தெரிஞ்சது. அப்புறம் எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்....
இப்படிப் போகிறது கதை.


அடுத்த ஒரு கதைதான், நான் முதலில் சொன்னது. மார்க்கண்டேயன் தன்னோட முடிவு நாள் நெருங்கற சமயத்துல சிவபெருமானத் தஞ்சம் அடைஞ்சான். லிங்கத்தோட கழுத்தக் கட்டிப் பிடிச்சுட்டு சிவநாமம் ஜபிச்சான்.


காலன் வரும் நேரமும் வந்தது. அவன் தன்னோட பாசக் கயிற்றை வீசினான். அது அப்படியே லிங்கத்தோட கழுத்துலயும் மாட்டிண்டது. சிவனார் ருத்ர அவதாரியானார். காலனின் கயிற்றுக்குப் பதிலாக தன் காலால் ஒரே மிதி, மிதித்துத் தள்ளினார். அப்படியே சும்மா இருக்கப்படாதோ? தான் காலனை காலால் மிதிச்சதுக்கு சாட்சியாக இருக்கணும்னு இந்த அமிர்தநாராயணப் பெருமாளப் பார்த்து விரலக் காட்டி சைகை செஞ்சாராம். இப்போதும் அபிராமி அம்மை சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில்ல இருக்கற சிவபெருமான் இந்தப் பெருமாளப் பார்த்து ஒரு விரல நீட்டி சைகை காமிக்கிறார் என்கிறார்கள்.


இதச் சொன்னபோது, தொழிலதிபர், மூத்த நண்பர் திரு பி.சங்கரன், ஒரு கேள்வி கேட்டார். ''அது சரி ஸ்ரீராம், மார்க்கண்டேயனுக்கு எப்போ காலன் வருவான்னு தெரிஞ்சது. ஆனா நாமோ எப்போ என்ன வரும்னு தெரியாத நிலையில இருக்கோம். அப்ப, எப்பத்தான் நாம இங்க வந்து பூஜை செய்யிறது?"

அதுக்குத்தான், ஆழ்வார் ஒரே வார்த்தை சொன்னார்... ''அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கமா நகருளானே!" ன்னு.. அப்படின்னு சொல்லி கொஞ்சம் விளக்கமும் கொடுத்தேன்.


சரி விஷயத்துக்கு வருகிறேன். திருக்கடையூருக்குப் போகிற அன்பர்கள், அதுவும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, வண்டியெல்லாம் வைத்துக் கொண்டு கண்மண் தெரியாமல் செலவு செய்து கொண்டு திருக்கடையூர் போகிறவர்கள், அப்படியே தங்களால முடிஞ்சத அந்தப் பெருமாளுக்கும் தாயாருக்கும் செய்துவிட்டு, அவர்களின் வீடும் அழகோடு திகழ வழி செய்தார்களானால் புண்ணியமாகப் போகும்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix