சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, டிசம்பர் 13, 2014

தினமணியில் இருந்து வெளியேறினேன்..!



அன்பு நண்பருக்கு... 

நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டேன்.

வெளியேறியதன் பின்னணி...  இதுதான் !

*****
தினமணி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜீரோ நியூஸ் வேல்யூ ஐட்டம் எல்லாம் (எடிட்டர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், படங்கள் என) வருவதாக எல்லாருமே பேசுகிறார்கள். 

வெப்பில் கமெண்ட்களை மாடரேட் செய்யும் பொறுப்பில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். அசிங்கமான வார்த்தைகள் கொண்டு திட்டுகிறார்கள்... ஒவ்வொரு முறையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.. தினமணியை அடுத்த நமது எம்.ஜி.ஆர். என்று சொல்ல வைத்துவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். 

உடன் இருந்து பார்த்து பல முறை நல்லது சொல்லியிருக்கிறேன்.. ஆனால், அவர் கேட்கவில்லை. ஆனால், என் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.  பல முறை உரசல்கள் ... தவறுகளைச் சுட்டிக் காட்டினால் தகராறு. 

இந்த முறை இண்க்ரிமெண்ட் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். 
பிப்ரவரி மாசமே அவரிடம் எங்கள் டாட்காம் டீம் பேப்பர்களை கொடுத்தேன். ஆனால், போன மாசம் வரை அதை கையெழுத்திட்டு அனுப்பவேயில்லை. 

தீபாவளி நேரத்தில் அனுப்பியிருந்தாலாவது, போனஸ் போல் ஏதோ கொஞ்சம் பணம் சகாக்களுக்கு கிடைத்திருக்கும். என் டீம் மக்கள் மட்டுமல்லாது, தினமணியின் ஒவ்வொரு எடிஷன் நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் என அனைவருக்குமே பல சிரமங்கள். ஒழுங்காக ஏப்ரலில் அனுப்பினால், மே மாதம் டிரான்ஸ்பர் ஆகிப் போறவங்க, போகிற இடத்தில் வீடு பார்த்து செட்டில் ஆக முடியும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது  உள்பட. 

ஆனால், இவரோ அக்டோபரிலும் நவம்பரிலும் போட்டால் எப்படி அவர்களால் போய் வேலை செய்ய முடியும். ? 

எடுத்துச்சொன்னாலும், கேட்க மாட்டார். சுய வேலைக்காக சி.எம்.டியைப் பார்த்து கேட்பவர்.. பணியாளர் குறித்து எதையும் முன்வைக்கவில்லை....

இத்தகைய சூழலில்தான் இந்தமுறை பெரும் ஏமாற்றத்துக்கு உட்பட்டு, தீபாவளி அன்று பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டேன்...

**** 

பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்த பேஸ்புக் ஸ்டேடஸ் இதுதான்...
ஆனால், இதனால் பிரச்னை பெரிதாகி, மேலிடத்தில் இருந்து அழைப்பார்கள் என எதிர்பார்த்தேன்.

அதன்படியே சி.எம்.டி. அழைத்துப் பேசினார். அவரிடம், நீங்கள் என்னை அழைத்துப் பேசுவீர்கள் எனத் தெரியும் என்றேன். என் கருத்துகளை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒவ்வொரு எடிஷன் செய்தி ஆசிரியர்களையும் அழைத்து, அவரவர் எடிஷனில் உள்ள காலியிடங்களை நிரப்ப அவரவர்க்கு அதிகாரம் அளித்தார்.

எல்லாமே எடிட்டர் மூலம்தான் நடக்கும் என்ற நிலையை மாற்றினார். எல்லோருக்கும் இண்க்ரிமெண்ட் உடனடியாகப் போடவும், அரியர்ஸுடன் இந்த மாத சம்பளத்திலேயே சேர்க்கப்படவும் ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் சரியான தீர்வு கிடைத்தது... ஓரளவு தினமணி என் அதிரடி நடவடிக்கையால் ஒரு சரிவிலிருந்து தப்பித்தது. 

ஆனால், எடிட்டர் வைத்தியநாதனோ.. ஒன்று நான் இங்கே இருக்க வேண்டும், இல்லை சீராம் இருக்கட்டும்.. என்று சி.எம்.டி.யிடம் பேரம் பேசி, அவரைப் பணிய வைத்துள்ளார். இந்த நிலையில் நானே ராஜினாமா செய்வதாகச் சொல்லி கடிதம் கொடுத்தேன்... 
எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

என் பேஸ்புக் ஸ்டேடஸ்!
Senkottai Sriraam feeling angry
October 19 at 4:53pm ·
இந்த முறை 
தீபாவளி .. கொண்டாட்டத்தில் சுரத்தில்லை! 
எனக்கு மட்டுமில்லை... 
சகாக்களுக்கும்தான்!

உள்ளத்தில் சோர்வடைந்து 
வெளியில் பல்லிளித்து நடித்து...

விட்டமின் 'ப' 
கிட்டாமல் செய்து விட்டதற்காக...
அந்த ஒருவருக்கு
நொந்த ஒருவனாய் 
ஒரு கோடி புண்ணியம்!

என் 
சகாக்களின் மனச்சோர்வில் பங்கெடுத்து...
அலுவலக வேலையைப் பார்த்தபடி
தீபாவளியைக் கொண்டாடுகிறேன்..!

உழைப்பை உறிஞ்சி உலா வருபவருக்கு
எல்லா நாளும் திருநாளே!

உழைத்துக் களைப்பவருக்கு 
எல்லா நாளும் ஒரேநாளே!

திங்கள், டிசம்பர் 08, 2014

வரலாற்றுக் கால ஐயப்பன் கதை!

இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்...
உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்தான். ஒருசமயம் சபரிமலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவனால் முடியாமல் போகவே, அங்கிருந்த ஒரு மாந்திரீகரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர், சபரிமலையில் தர்மசாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனின் கோயில் இருப்பதாலும், அதன் அபார சக்திதான் அந்தக் கிராமத்தைக் காத்து வருவதாகவும் கூறினார்.
அதனால் வெகுண்டெழுந்த உதயணன், எப்படியாவது அந்தக் கோயிலை நாசப்படுத்தி, கோயிலையும் கொள்ளையடிப்பேன் என்று சபதம் செய்து, அவ்வாறே சபரிமலைக் கோயிலை தீக்கிரையாக்கி நாசப்படுத்தினான். தடுக்க வந்த கோயில் நம்பூதிரியைக் குத்திக் கொலை செய்தான். தனது அப்பா உதயணனால் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நம்பூதிரியின் மகன் ஜெயந்தன், மீண்டும் சபரிமலைக் கோயிலை எடுத்துக் கட்டுவேன் என்றும், உதயணனைப் பழிவாங்குவேன் என்றும் சபதம் செய்தான்.
உதயணனே அறியாமல் அவனது கொள்ளைக் கூட்டத்திலேயே போய்ச் சேர்ந்தான் ஜெயந்தன். இதற்கிடையில் உதயணனுக்கு பந்தள ராஜாவின் சகோதரியைத் திருமணம் செய்துகொண்டு, தனக்கு ராஜமரியாதை வரவேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ராஜகுமாரியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிவந்து விட்டான். தன்னுடன் வந்த ஜெயந்தனிடம் ராஜகுமாரியை பத்திரமாகத் தனது இருப்பிடத்தில் கொண்டுபோய் விடுமாறும், தான் மேலும் கொள்ளையடித்துவிட்டு வருவதாகவும் கூறி, உதயணன் சென்று விட்டான்.
இந்நிலையில் ஜெயந்தன் ராஜகுமாரியிடம் தனது சபதத்தைக் கூறினான். ராஜகுமாரியும் தனக்கு உதயணனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றாள். ஜெயந்தனையே திருமணம் செய்துகொண்டு, சபரிமலைக் கோயிலைப் புதுப்பிக்க தானும் உதவிசெய்யப் போவதாகக் கூறினாள். அவள் விருப்பப்படி ஜெயந்தனையே திருமணம் செய்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் அருகிலுள்ள குகையில் வாழ்க்கை நடத்தினார்கள். கோயிலைக் கட்ட இறையருள் வேண்டும் என்று எண்ணி, தர்மசாஸ்தாவை நோக்கித் தவம் புரிந்தனர். தர்ம சாஸ்தா அவர்களுக்குப் பிரசன்னமாகி, வேண்டும் வரம் கேட்டார். தங்கள் விருப்பத்தை அவர்கள் கூறினர். ஐயப்பனாக தானே மறுபிறப்பு எடுத்து வருவதாக அவர்களிடம் வாக்களித்தார் சாஸ்தா. அதன்படி ஐயப்பன் அவதரிக்க, இது பற்றி விவரமாகக் கடிதம் எழுதி, அக்குழந்தையை பந்தள ராஜனிடம் அனுப்பி வைத்தார்கள்.
பந்தள ராஜாவும் குழந்தை ஐயப்பனை நல்ல முறையில் வளர்த்து வந்தார். ஓரளவுக்கு வயது வந்தவுடன் தனது தந்தையான ஜெயந்தன் போட்ட சபதத்தை நிறைவேற்ற, தனது படைவீரர்களுடனும் சகாக்களுடனும் கானகத்திற்குக் கிளம்பினார் ஐயப்பன். காட்டிற்குச் செல்லும் வழியில் கண்ணில்பட்ட உதயணனின் ஒவ்வொரு முகாமையும் தாக்கி, கொள்ளையர்களை அழித்தவாறே சபரிமலையை நோக்கிச் சென்றனர் அனைவரும்.
அப்போதுதான் அராபியக் கடல் கொள்ளைக்காரரான வாபர் ஐயப்பனுக்கு அறிமுகமானார். இவர் அலிக்குட்டி அஸீமா தம்பதியினருக்குப் பிறந்தவர். எரிமேலி பகுதியிலுள்ள உதயணனின் முகாமைத் தாக்கி அழித்து, அந்த இடத்திற்குக் காவலாக வாபரை நிறுத்திவிட்டுச் சென்றார் ஐயப்பன்.
இறுதியில் கரிமலைக்கோட்டை என்ற இடத்தில் உக்கிரமான சண்டை நடந்தது. அந்தச் சண்டையில் உதயணனைக் கொன்றார் ஐயப்பன்.
சண்டை உக்கிரமாக நடந்த போது உதயணனின் கூட்டத்திலிருந்த ஒரு கொள்ளையன் தப்பித்து விட்டான். வரும் வழியில் எரிமேலியில் வாபரைப் பார்த்தான். ஐயப்பனின் மேல் இருந்த கோபத்தால் வாபரைக் கொன்று விட்டான்.
பின்னர் பந்தளராஜனும் சபரிமலை வந்து சேர்ந்தார். நல்ல நாள் பார்த்து அனைவரது முன்னிலையிலும் சபரிமலைக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டும் பணி நடைபெற்றது.
கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், குடமுழுக்கு மற்றும் ஆராதனைகளை நடத்தினார்கள். இறுதியில் மங்கள தீபாராதனையின் போது, ஐயப்பன், தர்மசாஸ்தாவான தான் அவதாரமெடுத்த நோக்கத்தினை அனைவருக்கும் கூறி, மனி உடலோடு அப்படியே மறைந்துவிட்டார்.
ஐயப்பன் ஜோதி ரூபமாக ஐயனின் விக்கிரஹத்திடம் ஐக்கியமனார். அக்காட்சியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தார்கள். ஐயப்பனைப் போற்றி வணங்கினார்கள். சபரிமலைக் கோயிலை மீண்டும் கட்டுவதற்காக தானே மறு அவதாரமெடுத்த ஐயப்பனை நினைந்து போற்றித் துதித்தார்கள்.

ஞாயிறு, நவம்பர் 23, 2014

தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள் - செங்கோட்டை ஸ்ரீராம்

செவ்வாய், நவம்பர் 04, 2014

அன்புள்ள தினமணி ஆசிரியருக்கு...



அன்புள்ள ஆசிரியருக்கு....

உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு எழுதும் கடிதம் ..

இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஒரு நாள் நீங்கள் புத்தக விமர்சனத்துக்கு புத்தகங்களை பிரித்துக் கொண்டிருந்தபோது, உங்களிடம் சொன்னேன்... “சார் உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதுகிறேன்” என்று!

அது இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னர்தான் சாத்தியமானது என்பது, என் நேரமின்மையா, சோம்பேறித்தனமா, அல்லது ஒத்திவைக்கும் மனப்பாங்கா தெரியவில்லை. இருந்தாலும், இப்போதாவது, என் உள்ளத்தில் உள்ளதை உங்களிடம் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்பதால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 

கடிதம் மூலம் நம் உள்ளக் கிடைக்கையைக் காட்டுவது போன்ற மன உணர்ச்சி, நேரில் பேசுவதாலோ, செல்போன் உரையாடலிலோ கிட்டிவிடாது என்ற எண்ணத்தால் இதை எழுதுகிறேன். மேலும், ரசிகமணி டி.கே.சி., ஜஸ்டிஸ் மகராஜன் ஆகியோரின் கடித இலக்கியத்தை நுகர்ந்தவன் என்பதாலும், ரசிகமணியின் ஊர்-குடும்பத்தார் அணுக்கத்தாலும் இந்த எண்ணம் ஏற்பட்டது. எப்படியாயினும், இந்தக் கடிதம், என் திறந்த மனத்தின் வெளிப்படைத் தன்மையை உங்களுக்கு உணர்த்தினால், இந்தக் கடிதம் வரையப் பட்டதன் நோக்கம் முழுமையடையும் என்று எண்ணுகிறேன்.

அறிமுகமே இவ்வளவுக்குத் தேவையில்லைதான்... ஆனாலும், எழுத்தின் சுவைக்கு ஆட்பட்ட உங்கள் ரசிக உள்ளம், நிகழ்வுகளின் நினைவுகளை அசைபோடும்போது இன்னும் சற்றே ஆழ்ந்து அனுபவிக்கத் தோன்றலாம்!

அதற்கு முன் ஒரு விஷயத்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் மனத்தில் பதியவிட்டு, பிறகு நகர்த்திச் செல்கிறேன். 

நான் உங்களின் எதிரியோ, உங்களை காயப் படுத்தும் துரோகியோ இல்லை. அன்றும் சரி.. இன்றும் சரி.. உங்களின் நண்பர்தான்! என்றுமே உங்களை நான் வெறுப்பு உணர்வுடன் அணுகியதில்லை. அப்படி ஏதாவது உங்கள் மனத்தில் பட்டிருந்தால், அது உங்களுடைய சுற்றுவட்டார சகவாசம் உங்களை அப்படி ஆக்கியிருக்கக் கூடும்; என்னைப் பற்றிய எதிர்மறை பிம்பத்தை உங்களிடம் உருவாக்கியிருக்கக் கூடும் என்றே எண்ணுகிறேன். 

இதை நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டு பின்னர் நான் சொல்லும் விஷயங்களைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

நிற்க...

ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்கி ப்ரியன் போன் செய்து, "என்ன ஸ்ரீராம்... நீங்க பேஸ்புக்கில் ஏதோ போட்டீங்களாம். அது பிரச்னை ஆச்சாமே... என்ன விவரம். எனக்கு ஒன்றும் தெரியாது. நான் பார்க்கவில்லை. மனோபாரதிதான் சொன்னார்....” என்று கேட்டார். 

எனக்கு அப்போது ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ”சார் அது எங்கள் இண்டர்னல் மேட்டர்” என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டேன். வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவர் வற்புறுத்திக் கேட்ட பின்னர், அவரிடம், நம் நண்பர் குறித்து மோசமாக அப்படி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனையோ நாட்கள் சொல்லிப் பார்த்தேன். நிலைமை விபரீதம் ஆகவே ஒரு தீர்வு கிடைக்க அப்படிச் செய்தேன். நோக்கம் நிறைவேறியது. உடனே அந்தக் குறிப்புகளை நீக்கி விட்டேன்...” என்று கோடிட்டுக் காட்டினேன். அவ்வளவே.

என் வாழ்க்கை ஊடக வரலாற்றில் ஓர் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். எக்காரணத்தை முன்னிட்டும், ஆசிரியர் வைத்தியநாதன் மூலம் தினமணிக்கு வந்த ஸ்ரீராம், பின்னாளில் அவருக்கே பிரச்னையைக் கொடுத்தான் என்ற அவப் பெயரைச் சுமக்க நான் விரும்பவில்லை. கனவில் கூட அவ்வாறு நான் நினைக்கவுமில்லை! அதற்காக தர்மத்தை அறிந்து அதன் வழி நடக்க நினைக்கும் நான், நடக்கும் அதர்மங்களைக் கண்டு வாய்பொத்திச் செல்லவும் எண்ணவில்லை. அது, தர்மாத்மாவுக்கு உகந்ததுமல்ல! இந்த இருதலைக்கொள்ளி நிலையில்தான் நானிருந்தேன். துரியோதனனைக் காட்டிலும், பீஷ்மரும், துரோணரும், கர்ணனும்தான் குருக்ஷேத்திரக் களத்தில் மாபெரும் பாபிகளாக முன் நின்றார்கள். தர்மம் அறிந்த அம்மூவரும் ஒழுங்காக தர்மத்தின் படி நடந்து கொண்டிருந்தால், துரியோதனன் தவறு செய்திருக்க மாட்டான். அவன் தவறு செய்வதற்கான ஊக்கமே இவர்களால்தான் வந்தது என்பது வால்மீகியின் அபிப்ராயம்.
 
நீங்கள் எத்தனை திருக்குறள்கள் தலையங்கத்துக்குக் கீழ் எழுதியிருக்கிறீர்கள்..!!! இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்று~! அப்படி ஒருவரை நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாமல் போனது உங்கள் துர்அதிர்ஷ்டம்தான்! 

நிற்க...

தொடர்ந்து செல்வதற்கு முன், சிலவற்றை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தாக வேண்டும்!!

உங்களுக்கு, என் தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் இன்க்ரிமெண்ட் விவகாரத்தில் இந்த முறை சுரத்தில்லை, என்று நான் போட்டிருந்த குறிப்பு மட்டுமே கண்ணில் பட்டுள்ளது. ஆனால், உங்கள் "நம்பிக்கைக்குரிய” நிருபர்களும், உங்களையே சுற்றிக் கொண்டிருக்கும் சகபாடிகளும் என்ன செய்கிறார்கள், அல்லது சொல்கிறார்கள் என்பது உங்கள் காதுகளில் பட நியாயமில்லைதான்! 
ஆனால் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்... 

என் வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் தாய் தந்தையை நீங்கள் பார்த்துப் பேசியிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் நான் எவ்வளவோ அளவளாவியிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், உங்களை என் குடும்ப உறுப்பினராகத்தான் நான் பார்த்து வருகிறேன். 

வசுதைவ குடும்பகம் என்ற சங்கத்தின் கொள்கை மனத்தில் ஆழமாகப் பதிந்து, எல்லாரையும் குடும்பத்தினர்களில் ஒருவராகக் கருதும் பண்பு வளர்ந்து விட்டிருந்தாலும், அதையும் மீறி, ஒரு எடிட்டர், நியூஸ் எடிட்டர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கும் அலுவலக ரீதியான உணர்வுகளைக் காட்டிலும், அன்பையும் பாசத்தையும் பரிமாறும் குடும்ப ரீதியான அணுகுமுறையைத்தான் உங்கள் மீது நாங்கள் கொண்டிருக்கிறோம். 

அன்று உங்கள் தாயார் பிறந்த நாள் அன்று வீட்டில் பூஜை வைத்திருந்தீர்கள். கடைசி நேரத்தில் நீங்கள் அழைத்தாலும், அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதே மகிழ்ச்சியில் நானும் உடன் இருந்து லலிதா சஹஸ்ரநாமம் சொன்னேன். மங்கள சூத்ரம் உடன் சொன்னேன். ஆசீர்வாத மந்த்ரம் உடன் உரைத்தேன். எல்லா நலன்களும் எஜமானருக்குக் கிட்டட்டும் என்று உபாத்யாயர் சொன்ன போது, நிறைந்த மனத்துடன் ஒரு வேத ப்ராம்மணனாக ததாஸ்து என மந்த்ர புஷ்பமிட்டேன். 

சரி.. அப்படி இருக்கும்போது, ஏன் நீ இவ்வாறு பேஸ்புக்கில் எழுத வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. 

இதற்குக் காரணம் - புரிந்துணர்வில் ஏற்பட்ட குறைபாடுதான்!

நான் கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது, என் நண்பி ஒருத்தி ஆட்டோகிராப் வாசகம் ஒன்று எழுதிக் கொடுத்தாள். அது என் நினைவுக்கு வருகிறது.... 

மலையின் உச்சியில் இருந்து நீ கீழே விழுந்தாலும் தவறில்லை. ஆனால், எக்காரணம் கொண்டும் புரிந்துணர்வற்ற தன்மையில் விழுந்துவிடாதே (Never fall into misunderstanding) என்று எழுதியிருந்தாள். 

எத்தனையோ வேத வாக்கியங்களை நான் உள்ளுக்குள் புகுத்தியிருந்தாளும், அந்தப் பெண் எனக்குச் சொன்ன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையின் முக்கியமான வேத வாக்கியமாகக் கொள்கிறேன். 

அதன் காரணத்தால் உங்களுக்கு நிகழ்ந்தவற்றின் உண்மைப் பின்னணியை எடுத்துச் சொல்ல விழைகிறேன்.
***
உங்கள் முதுகில் குத்தும் சகாக்களைப் போல் என்னால் குழைந்து கொண்டு உங்கள் முன்னால் நடித்து, பின்னால் சென்று வேறு துரோகச் செயல் புரியத் தோன்றாது. அது, நான் ஒரே ஒரு வேளை செய்யும் சந்தியாவந்தனத்துக்கும், சாளக்ராம ஆராதனைக்கும், நான் மேற்கொண்டிருக்கும் வேள்வியான வாழ்க்கைக்கும் உகந்ததல்ல! 

காந்தி எப்படி தன் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்து வெளிநாடு சென்றாரோ அதுபோல், சென்னைக்கு பத்திரிகைத் துறைக்கு வரும் முன்னர் நானும் என் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்தேன்...

எந்த நிலையிலும், மது இருக்கும் பக்கமே போவதில்லை, சிகரட் புகைப்பவர் முன்னர்கூட நிற்பதில்லை, எவரிடமும் கை நீட்டி காசு வாங்குவதில்லை, பொய் பேசுவதில்லை, தர்மத்தை எந்த நிலையிலும் மீறுவதில்லை.. இப்படியாக நீ என்னிடம் சொல்ல வேண்டும் என்றார் அம்மா. அதை இன்று வரை நான் கடைப்பிடிக்கிறேன். 

இதில், சில தார்மீக நெறிமுறைகளும் அடங்கும். 

அதன்படி, என் புகைப்படத்தை நான் எடிட் செய்யும் பத்திரிகையில் போட்டுக் கொள்வதில்லை என்ற முடிவு. என் கருத்தாலும் கொள்கையாலும் நான் வெளித் தெரிய வேண்டும் என்பதால்தான் இதன் நோக்கம். இன்று வரை, மஞ்சரியிலோ, விகடனிலோ, என் புகைப்படங்கள் வந்ததில்லை. ஏன்.. தினமணி இணையத்திலும், வலைப்பூவிலும் கூட என் கட்டுரைகள், கவிதைகள், அனுபவங்கள் எல்லாம் "கண்டண்ட்” அதிகம் தேவைப்படும் காரணத்தினால் இடம் பெறுமே தவிர, என் புகைப்படம் ஒன்று கூட இராது. என் தனிப்பட்ட பேஸ்புக், வலைப்பூவில் உள்ளன. நான் வாசித்து வெளியிடும் ஆடியோ செய்தியில் கூட, என் பேரை... வாசிப்பவர் என்று சொல்லிக் கொண்டதில்லை. வெறுமனே செய்தி மட்டுமே ஒலி வடிவில் இருக்கும். ஆனால், இப்போது, அதையும் விட்டுவிட்டேன்... என் டீம் சகாக்கள் மட்டுமே வாசிக்கிறார்கள்.
- இதனை இங்கே சொல்லக் காரணம்... நானே என்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதாக, சில நேரங்களில் நீங்கள் சொன்ன கருத்துகள்தான்!

இத்தனை ஆண்டு காலம் பிரம்மசரியத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறேன். என் மனம் அறிந்து, எந்தப் பெண்ணிடமும் நெருங்கிக்கூட நின்றதில்லை. உடல் ரீதியாக இச்சை கொண்டதில்லை.... இப்படியாக இளமை வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, வாலிப வயதின் முடிவு நிலையில், விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோமே என்று இப்போது மாபெரும் கவலையுடன் உள்ளுக்குள் குமைந்து போகிறேன். 

வேலை, வேலை என்று வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி, எனக்கே எனக்கான பாசமுள்ள ஒரு குடும்பத்தை அமைக்கத் தவறிவிட்டேன். இப்போதாவது ஓர் அறிவார்ந்த துணை கிட்டாதா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. 

இவை பற்றியெல்லாம் ஏற்கெனவே உங்களிடம் விவாதித்திருக்கிறேன்... ஆனால் இப்போது சொல்லக் காரணம்.... - எத்தனையோ வடிவங்களில் என் எழுத்துத் திறமையை வெளிக் காட்டிக் கொண்டிருந்த நான், இப்போது வெற்று உலகத்தில் வாழ்வதாய் உணர்வதுதான்! 

என் மனக் கவலைகளை பகிர்ந்து கொள்ள சரியான துணை இல்லை, நல்ல நண்பர்கள் இல்லை. மயிலாப்பூரில் இருந்த போது, கீழாம்பூர் அமைந்தது போன்ற நல்ல நட்பு இல்லை. அதன் வெளிப்பாடு, பேஸ்புக்கில் நேரத்தை வீணடிப்பது! பேச்சுத் துணைக்கு உள்ளத்தோடு ஒட்டி உறவாடும் தகுந்த நட்புகளைத் தேடல்!

என் உள்ளக் குறையை வெளிப்படுத்த நம்பிக்கைக்குரிய நபர்கள் இல்லாத நிலையில், வழக்கம்போல் அன்று பேஸ்புக்கில் என் கருத்தைப் பதிந்தது. தீபாவளி நேரத்திலும் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாத மனக் கசப்பில் இருந்த நிலையில் என்னில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. 

அது மட்டுமல்ல...

அது, ஒட்டுமொத்த பணியாளர்களின் குரல். வெளிப்பட்டது என் முகம் மூலம். அவ்வளவே! நீங்கள் ரொம்பவும் நம்பிக் கொண்டிருக்கும் நிருபர்கள் உள்பட எத்தனை பேர் மொட்டைக் கடிதங்களும் புகார்களும் அனுப்பியிருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். அப்படியே தெரிந்தாலும், உங்களுக்கே உரிய குணத்தில், அதை  உதாசீனப் படுத்தி, வழக்கம்போல் எங்களிடம் வேறு ஒரு கதை சொல்வீர்கள். இப்படியே சொல்லிச் சொல்லி, உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள மாட்டாமல், அசட்டையுடன் இருந்து விட்டீர்கள். உங்களின் இந்த இறுமாப்பைச் சொல்லிச் சொல்லி எவ்வளவு வருத்தப் பட்டிருப்பேன்...

அதைவிட முக்கியமான ஒன்றும் உள்ளது. அதை உங்கள் மனசாட்சி சொல்லும். அந்த ஒரே ஒரு விஷயத்தால் ஏற்படும் மதிப்புக் குலைவும், விளைவுகளும் உங்களுக்கு அவப்பெயரையே தரும். அதை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு நண்பராக உங்கள் வாழ்க்கையின் மேன்மையைப் பார்த்து ஆனந்தப்பட்ட நான், சரிவைக் காணச் சகிக்க மாட்டாத மனநிலையில் இருக்கிறேன். 
****
இப்போது, நண்பர் என்ற வகையிலும், ஆசிரியர் என்ற வகையிலும் அன்று நடந்ததை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது....

திங்கள் கிழமை மாலை 6.30. சி.எம்.டி., அழைத்தார். உன்னைப் பற்றி ஒரு புகார் என்றார். கேட்டேன்... 

நீ பேஸ்புக்கில் நம் மேனேஜ்மெண்ட் பத்தியும் எடிட்டர் பத்தியும் தப்பாக எழுதியிருக்கியாமே என்று சொல்லி, அந்தக் கருத்துகளை வாசித்துக் காட்டினார். 

அப்போது நான் அவரிடம் என் தரப்பு விளக்கத்தைச் சொன்னேன்...

சார். இந்த விவகாரம் எப்படியும் உங்கள் முன் வரும் என்று தெரியும். இப்போது ஒரு மோசமான சூழல். பிரச்னை எழுந்தால்தான் ஒரு தீர்வு கிடைக்கும். இப்போது பிரச்னை எழுந்துள்ளது. சிலர் விரக்தியில் உள்ளனர். தகுந்த மாற்று வழி இல்லை என்பதால் பலர் இங்கே உள்ளனர். இப்போது டைம்ஸ் ஆஃப் இண்டியா ஒரு தமிழ் நாளிதழ் தொடங்கினால் பலர் வெளியேறிவிடுவார்கள்... இதுதான் கிரவுண்ட் ரியாலிடி! 

நான் ஏற்கெனவே எடிட்டரிடம் இரண்டு மூன்று முறை இன்க்ரிமெண்ட் விவகாரத்தில் கேட்டு விட்டேன். நான் மேனேஜ்மெண்ட் பற்றி தவறாக எதுவும் எழுதவில்லை. நான் எங்கு வேலையில் உள்ளேனோ அந்த நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பேன். என்றேன்..

நீ இங்கிருந்து வேறு ஆபீஸ் போனால் இவ்வாறு எழுதலாம் என்றார்....

ஆனால் நான், அப்படிச் செய்தால் அதுதான் என் பழைய முதலாளிக்குச் செய்யும் துரோகம், எனக்குத் தேவை பிரச்னைக்கான தீர்வுதானே ஒழிய, காழ்ப்புணர்ச்சியைக் காட்டி விமர்சிப்பது அல்ல. இதற்குக் காரணம் ஒருவர் என்றுதான் எழுதினேனே தவிர, ஆசிரியர் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. அதுவும் என் தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில், என் மனக் குமுறலை வெளிப்படுத்தியது. அவர் என் நண்பர். அவர் மூலம்தான் நான் இந்த அலுவலகத்துக்கு பணிக்கு வந்தேன். ஆகவே எடிட்டரை நான் தவறாகப் பேசமாட்டேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே என் நோக்கம்...

இப்போது நீங்கள் அழைத்து என்ன நடந்தது என்று கேட்டீர்கள். என்னால், எடிட்டரை பைபாஸ் செய்து உங்களுக்கு கடிதமோ, தகவலோ தர இயலாது. மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் படித்த நான் அலுவலகத்தில் ஹையரார்க்கியை கடைபிடிப்பவன். இப்போது நீங்கள் அழைத்துக் கேட்டதால், பிரச்னை முடிந்து விட்டது. நான் உடனே என் பேஸ்புக்கில் இருந்து அவற்றை நீக்கி விடுகிறேன். எதிர்காலத்தில் நிச்சயம் இவ்வாறு செய்ய மாட்டேன். ஸாரி சார்... என்று சொல்லி வந்துவிட்டேன்.
***
- இப்போது நான் உங்களுக்குத் தெரிவித்துள்ள தகவல் 100% உண்மை. கூட்டியோ குறைத்தோ எதையும் நான் சொல்லவில்லை. 

இதுதான் நடந்தது. ஆனால், இவற்றைக் கேட்கும் மனநிலையில் நீங்கள் இல்லை என்பது எனக்குப் புரிகிறது. 

இதே போல்தான்.. அன்று நீங்கள் சீராம் என்னைப் பற்றி சித்தார்த்திடம் கம்ப்ளெயிண்ட் செய்திருக்கிறான் என்று பிறரிடம் சொன்னதும். ஆனால், உண்மையில் அப்போது நான் திரு.சித்தார்த்திடம் எதுவுமே பேசவில்லைதான். இன்னும் சொல்லப் போனால், உங்களை நான் பைபாஸ் செய்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்விலேயே என் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கும். அன்று அவரிடம் இந்தத் தகவலைக் கொண்டு சென்றதும் உங்களுக்கு நெருக்கமானவர்தான். ஆனால் அவரை நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. 
***
கடந்த 2 வருடங்களாக நீங்கள் என்னை அழைத்து, என்ன பிரச்னை என்று கேட்டதில்லை. உனக்கு என்ன மனக்குறை என்று என்னிடம் விவாதித்ததில்லை. அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கும் போது! 

வந்த புதிதில், என்னிடம் என்ன கண்டீர்களோ, இப்போது என்ன மாற்றம் காண்கிறீர்களோ எனக்குத் தெரியாது. இந்த இரண்டு வருடங்களில் நீங்கள் என்னை  புறக்கணிக்கத்  தொடங்கியிருக்கிறீர்கள் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. ஒவ்வொரு செயல்பாட்டில் இருந்தும் விலக்கி வைத்திருக்கிறீர்கள். ஆனால், நான் இப்போதும் உங்களிடம் அதே மரியாதையுடன் தான் உள்ளேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் செக்ரடரி உங்களுக்கு பதில் தருவார். 

என் தரப்பில் நடக்கும் எந்தத் தகவலையும், உங்கள் காதுக்குக் கொண்டு வர, அவரிடம்தான் சொல்லி வைப்பேன். இது இது நடக்கிறது, இது தவறு, இது சரிப்படாது, இது நன்றாக இல்லை... இப்படி! 

உங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இங்கே குறைவு. என் பணி நேரமும் உங்கள் நேரமும் அப்படி. அப்படியே நீங்கள் இங்கு இருந்தாலும், என்னைப் பார்க்க நீங்கள் விரும்புவதில்லை. அதுவும் எனக்குப் புரிகிறது. 

உங்களிடம் ஏன் இந்த மாற்றம்? எனக்குத் தெரியவில்லை! என்னைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை நீங்கள் எப்படிக் கொண்டீர்கள்...? அதுவும் எனக்குப் புரியவில்லை.
நிற்க....

நான் அடிக்கடி கீழாம்பூரை சிறந்த உதாரணமாகக் காட்டுவேன்... காரணம் - நட்புக்குக் கொடுக்கும் மரியாதையும், உண்மைத் தன்மையும்தான்!

அவர் மூலம் எனக்குக் கிடைத்த நட்பும், வெளி வட்டாரத் தொடர்பும் அதிகம். அவருடைய நட்பு வட்டங்களில் இருந்து யாராவது என்னைத் தொடர்பு கொண்டு ஏதேனும் கேட்டால், அது பாதகம் தராத வகையில் என்றால், உடனே கீழாம்பூரிடம் தகவல் கொடுத்து விடுவேன். சார்.. இவர் பேசினார். இன்ன கேட்டார். நான் இதைச் சொன்னேன். என்று!

அதுபோல், அவருடைய பெயரைப் பயன்படுத்தி அவர் நட்பு வட்டாரத்தில் ஏதாவது எனக்குத் தேவைப்பட்டால், அதுகுறித்த தகவலையும் அவரிடம் சேர்த்துவிடுவேன்.

இந்த கம்யூனிகேஷன் - இன்று வரை தொடர்கிறது. நான் இந்தத் துறைக்கு வந்த இந்த 15 வருடங்களில் எனக்கு பலரை அறிமுகப் படுத்தி, அவர்களிடம் பழகும் முறையை சொல்லிக் கொடுத்தவர் அவர். இது நெல்லை மண் சம்பந்தப் பட்ட பாசத் தொடர்பு என்பது ஒரு புறம் இருந்தாலும், குடும்ப ரீதியாக அமைந்த நட்புறவு. இன்றும், என்னை அடையாளம் காணும் பலரும், கீழாம்பூரையும் சேர்த்தே நினைவில் கொண்டு வருவார்கள். நான் துவக்க காலத்தில் வளர்ந்ததும் அவரால்தான்!

இப்படிப்பட்ட ஒரு சிநேகத்தைத்தான் நான் தங்களிடம் எதிர்பார்த்தேன். 

தினமணிக்கு நான் வந்த புதிதில், நீங்களும் என்னிடம் ஏதோ கவிதை மொழிமாற்றம், தீபாவளி மலர், இசை விழா மலர், வெள்ளி மணி, தமிழ்மணியில் ஈடுபாடு என்று அச்சு ஊடகத்தில் எனக்கிருந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நானும் எந்நேரமும் முழு ஈடுபாட்டுடன் பணி செய்யத் தயாராகவே இருந்தேன். 

ஆனால், உங்களுக்கு என்ன மனத்தாங்கலோ? எல்லாவற்றில் இருந்தும் ஓரங்கட்டி விட்டீர்கள். அதற்காக நான் வருத்தப் படவில்லை. 

ஏதோ என் நேரம்.. அஷ்டமத்து சனியின் விளைவு என்று பொறுமையாக இருந்து, இத்தகைய சூழ்நிலையில் இருந்து விலகியே இருக்கிறேன். என் மனசையும் விலக்கியே வைத்திருக்கிறேன். 
***
ஹையரார்க்கி - இந்தச் சொல்தான் எத்தனைதூரம் விளையாடுகிறது? விகடனில் நான் அனுபவித்த மனக் கஷ்டத்தை ஏற்கெனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதே போன்ற நிலை இங்கு வரக் கூடாது என்றுதான் கவனமாக இருக்கிறேன். உங்களை மீறி திருச்சி சோமு, சி.எம்.டிக்கு எழுதிய கடிதம் குறித்து நீங்கள் எவ்வளவு வருத்தப் பட்டு என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்?! எனக்குத் தெரியும். அதே போன்ற தவறை நான் நிச்சயம் செய்ய மாட்டேன். 

ஆனால்... இந்த நெருக்கமும் நட்பும் மட்டும் நம்மைப் பிணைத்திருந்தால், இப்படிப்பட்ட துன்பங்களுக்கு இடம் இல்லைதான்! ஆனால், நாம் ஒரே அலுவலகத்தில்! உங்களுக்குக் கீழ் நான் பணி செய்கிறேன். நீங்கள் தலைமையிடத்தில்! 

நான் எப்படி நடந்து கொள்கிறேனோ அப்படித்தான் உங்களிடம் நான் எதிர்பார்த்தேன். அதனால்தான் முன்னமேயே சொன்னேன்... "சார். ஈ.என்.பி.எல்லில் உடன் இருக்கும் எல்லாருக்கும் போட்டாச்சு... அதனால், என் டீம் மெம்பர்களுக்கு நான் போட்டு அனுப்புகிறேன். என்னுடைய பேப்பரை நீங்கள் அனுப்புங்கள். நான் உங்களுக்குக் கீழ்தான் உள்ளேன். நீங்கள் என்ன செய்தாலும் சரி..” என்று! 

ஆனால் நீங்கள், உங்கள் ஆசிரியர் என்ற கௌரவத்தை, கம்பீரத்தை கவனத்தில் கொள்ளவே இல்லை! சமத்துவம் வேண்டும்தான்! அதற்காக தகுதி, தராதரம் இல்லாமல் எல்லாரையும் உங்கள் அறைக்குள் நேரம் கெட்ட நேரத்தில் அழைத்துப் பேசுவது, ஆசிரியர் இடத்துக்கான கௌரவத்தைக் குலைக்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல.... 

அப்படித்தான் நீங்கள் என்னை மட்டம் தட்டுவதாய் நினைத்துக் கொண்டு, என் டீம் மெம்பர்களை நீங்களாகவே உங்கள் அறைக்குள் அழைத்து கேள்வி கேட்பதும்! இது உளவியல் ரீதியாக எத்தகைய மாற்றத்தை கீழ்நிலைப் பணியாளரிடம் ஏற்படுத்தும் என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்! 

சென்னைக்கு காஞ்சி சுவாமிகள் வந்தால், சீண்டக்கூட மாட்டார்கள். சிருங்கேரி சுவாமிகள் வந்தால் எல்லாம் தடபுடல்தான்! காரணம், முன்னது அடிக்கடி நிகழ்வு. பின்னது எப்போதாவது நிகழ்வது! இதன் உள்ளர்த்தம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

இங்கே உங்களின் சில செயல்பாடுகளால் ஒவ்வொரு செய்தி ஆசிரியரும் உங்களைப் பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்! நீங்கள் நிருபர் குழாமுடன் நல்ல உறவு கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நல்லதுதான். 

ஆனால், உங்களை நேரடியாகச் சந்திக்கும் எவரும் அவர்களின் தலைமையை மதிப்பதில்லை; அவர்கள் இடும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை; ஆசிரியரே என் கையில், நீ என்ன ஜுஜுபி என்ற போக்கில் செயல்படுகிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியவர நியாயமில்லைதான்!  புலம்பல்களின் குரல்களைக் கேட்கும் என் காது, என் இதயத்துக்கு எடுத்துச் சொல்லும்... ஆசிரியரிடம் எப்படி இதைச் சொல்வது என்று?

இன்னும் எடிட் மீட்டிங் முடிந்த பின்னர், காரணமில்லாமல் தகுதியற்ற சிலருக்கு நீங்கள் கொடுக்கும் சலுகைகள் குறித்த பேச்சு வரத்தான் செய்யும். அப்போது, நான் ஒரு பார்வையாளர் மட்டுமே!

இன்னும், உங்களைக் குறித்த விமர்சனங்கள், தனிப்பட்ட வகையில் தாக்கி இணையத்தில் வரும்போது, அவற்றைப் படித்து நீக்கக் கூடிய பொறுப்பை இன்று வரை சரியாகச் செய்து வருகிறேன். 

இவற்றை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்... உங்களைப் பற்றிய அவதூறுகளை வெளித் தளத்தில் நீக்கிக் கொண்டிருக்கும் நான், உங்களைப் பற்றி ஏன் அவதூறு சொல்லப் போகிறேன் என்பதை உங்கள் மனத்தில் பதியவைக்கத்தான். இருப்பினும், என் பேஸ்புக்கில் அப்படி ஒரு குறிப்பை எழுத வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிட்டதும் தாங்கள் ஏற்படுத்திய அசாதாரண சூழல்தான்! 

ஆனால், இப்போதும் வெளி உலகம் என்னை வைத்தியநாதனின் கையாள் என்றுதான் சொல்கிறது. 
****
நன்றாக நினைத்துப் பாருங்கள்... நீங்கள் சாவி சார் என்று சொல்லும்போது, உங்களிடம் ஒரு நாள் காரில் பயணிக்கையில் சொன்னேன்...  சாவி சார் பேர் சொல்ல நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்... ஆனால் உங்கள் பேர் சொல்ல யார் இருக்கிறார்கள் என்று!?

இதன் உள்ளர்த்தத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அல்லது  உணராமல் போயிருக்கலாம். ஆனால், என் மனத்தில் இருந்த எண்ணம் இதுதான் - இப்போது எப்படி என்னை அடையாளம் காணும் உலகம் கீழாம்பூரின் பெயரையும் சேர்த்தே பார்க்கிறதோ, அது போல், நாளைய பத்திரிகை உலக வரலாறை எழுதுபவர்கள், என் பெயருடன் உங்களையும் சேர்த்துக் காண வேண்டும் என்று விரும்பினேன்.

எனக்கு இப்போது வயது 39. இங்கோ அல்லது எங்கோ... கடவுள் எனக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பான் என்றால், எப்படியும் ஊடக உலகில் நல்ல பொறுப்பில் இன்னும் குறைந்தது 20 வருடங்கள் நிற்க முடியும். பத்திரிகை/எழுத்துலகில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். என் சாதனைகளின் பின்னே, உங்கள் பெயரும் இடம் பெற வேண்டும். அதை மனதில் கொண்டால், நிச்சயம் நீங்கள், உங்களைத் தேடி தினமணிக்கு வரும் நல்லவர்களை என் போன்றோர்க்கு அறிமுகம் செய்து வைத்து, வட்டத்தைப் பெருக்கி வைக்க முடியும். அதிகம் எழுத ஊக்குவித்து முன்னிலைப் படுத்தியிருக்க முடியும். உண்மையில், நான் உங்களை மீறி செயல்படப் போவதில்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகளை இதுவரை நீங்கள் ஏற்படுத்தவேயில்லை. 

இந்த மனக்குறை எனக்கு வெகுநாட்களாகவே உண்டு. 

நான் ஏற்கெனவே சொன்னதுதான்... நாம் வரலாற்றில் இடம்பிடிப்பவர்கள். நாம் செய்யும் செயல்களாலும், சாதனைகளாலும் நம் பெயர்கள் எழுதப் படுவது, ஊடக வரலாற்றில். இது அடுத்த அடுத்த தலைமுறைகளிலும் கொண்டு சேர்க்கப்படும் ஒன்று. அந்த கவனம் ஒவ்வொரு கணமும் என்னிடம் உண்டு. அந்த ஒரே ஒருகாரணத்துக்காகவே இத்தகைய நல்ல கொள்கைகளை வகுத்துக் கொண்டு, ஒரு சித்தாந்தத்தில் அகப்பட்டு பயணிக்கிறேன். 
இங்கே நான் தோல்வியுற்றால், தோல்வியுறுவது நானில்லை... ஒரு சித்தாந்தம்! 

வேதனையுடன் 

உங்கள் நண்பராக....
ஸ்ரீ.

திங்கள், நவம்பர் 03, 2014

மஞ்சரி டைஜஸ்ட் : ஓர் அறிமுகம்


மஞ்சரி டைஜஸ்ட் : ஓர் அறிமுகம்
-----------------------------------------------
மஞ்சரி தொடங்கப்பட்ட ஆண்டு :
1947 நவம்பர்
இதழ் நிறுவுனர் : என்.ராமரத்னம்.

தற்போதைய ஆசிரியர் வெளியீட்டாளர் : ஆர்.நாராயணஸ்வாமி

வெளியாகும் காலம் : மாத இதழ், ஆங்கில மாதத்தின் முதல் தேதி

இதழ் தொடங்கப்பட்ட நோக்கம்: டைஜெஸ்ட் பாணி
பல நாடுகள் பல மொழிகளில் வெளியாகும் பத்திரிகைகளில் இருந்து சிறந்த செய்திகள் கலைஇலக்கியப் படைப்புகள், மனித நேய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை சுவை குன்றாமல் சுருக்கித் தருதல்.

பாரத நாட்டின் கலை இலக்கியம் வரலாறு சமூகம் மருத்துவம் மனத் தத்துவம் விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற பலதரப்பட்ட கட்டுரைகளை தமிழில் தருதல், உலகப் புகழ்பெற்ற நாவல்கள், சுயசரிதங்களின் புத்தகச் சுருக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தல்...

இதழ் ஆசிரியர்களாக இருந்தவர்கள் :
தி.ஜ.ரங்கநாதன், த.நா.சேனாபதி, எஸ்.லட்சுமணன் (லெமன்), செங்கோட்டை ஸ்ரீராம், கார்த்திகேயன்...

தற்போதைய இதழாசிரியர் : குரு.மனோகரவேல்

மொழி ஆசிரியர்களாக இருந்தவர்கள் :
கி.வா.ஜகன்னாதன், த.நா.குமாரஸ்வாமி, வி.எச்.சுப்பிரமணிய சாஸ்திரிகள், சீதாதேவி, கௌரி அம்மாள், கா.ஸ்ரீ.ஸ்ரீ, குமுதினி, கி.சாவித்திரி அம்மாள், ஆர்.வி, டி.வி.பரமேஸ்வரன், மோ.ஸ்ரீ.செல்லம்...

ஓவியங்களை வரைந்தவர்கள் : ஸாமி, சங்கர், மகான், சுப்பு இன்னும் பலர்.

மஞ்சரி இதழில் வெளிவந்த பிரபலமான தொடர்கள்:
இதிகாசத் தொடர்கள் : ராமாயணம் , மகாபாரதம்
பாகவதத் தொடர்கள் : ஹரிவம்சம்
என்னைக் கேளுங்கள் : மருத்துவ பதில்கள், கேப்டன் சேஷாத்ரிநாதன் பதிலகள்.
டாக்டரைக் கேளுங்கள்: டாக்டர் ஜகதீசன் பதில்கள்
கி.வா.ஜ தொடர்கள் : கவிபாடலாம் தலைப்பில் கவிபாடப் பயிற்சி, சங்க நூல்கள் அறிமுகக் கட்டுரைகள்.
தேவி பாகவதக் கதைகள்
விநாயகர் விஜயம்
நேயர் கேள்விகளுக்கு பதில்கள் : தென்கச்சி பதில்கள்
தையல் கலை கட்டுரைகள்
ஃபிலோ இருதயநாத் மானிடவியல் கட்டுரைகள்
ஓவியர் சுசியின் அறிவியல் கட்டுரைகள்
மின்னணு எலக்டிரானிக் கட்டுரைத் தொடர்கள்,
ரேடியோ, டி.வி.போன்ற மின்னணு சாதனங்கள் குறித்த விளக்கங்கள், செய்முறை விளக்கப் பயிற்சிக் கட்டுரைகள்.
காந்தி\வாழ்வும் வாக்கும்
ரமணர்\வாழ்வும் வாக்கும்
கவி தாகூர் \ வாழ்வும் வாக்கும்
விவேகானந்தர் \ வாழ்வும் வாக்கும்
பல மொழி புத்தகச் சுருக்கங்கள்...
ஜோதிடக் கலைத் தொடர்கள், நியூமராலஜி தொடர்கள்...


மஞ்சரி இதழ் தோன்றிய விதம் :

1947இல் பாரத நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு. அந்த ஆண்டில், நவம்பர் மாதம் மஞ்சரி இதழ் தோன்றியது.
தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்றுத் திகழும் கலைமகள் மாத இதழை நல்ல முறையில் நடத்தி வந்த அதன் உரிமையாளர் என்.ராமரத்னம், தங்கள் நிறுவனத்தில் இருந்து தமிழ் வாசகர்களுக்கு உலக அனுபவமும் உலகச் செய்திகளையும் உலக இலக்கியங்களையும் தெரிந்து கொள்ள வைக்கும் வகையில் ஒரு இதழை தொடங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு அவருக்கு உந்துதலாக இருந்தது, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இதழாக வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று வெளிவந்துகொண்டிருந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்தான். அதுபோல் தமிழில் டைஜஸ்ட் இதழ் ஒன்றைக் கொண்டுவரவேண்டும் என்று எண்ணினார் என்.ராமரத்னம்.

ஏற்கெனவே கலைமகள் இதழ் தவிர எம்.எல்.ஜே என்ற சட்டப் பத்திரிகையையும் அவர் நடத்தி வந்தார். எனவே புதிதாக பத்திரிகை தொடங்குவது ஒன்றும் அவருக்கு கடினமாக இருக்கவில்லை. தன் குடும்பத்தாரிடம் அவர் இதற்கான தன் கனவைச் சொன்னவுடன் அனைவருமே அதற்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்தார்கள். காரணம், என்.ராமரத்னம் குடும்பத்தார், தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். எனவே பல நாடுகள், பல மொழிகளில், பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை, கட்டுரைகளை, இலக்கிய அறிவியல் செய்திகளை மொழிபெயர்த்து வெளியிடுவதில் சிரமம் பெரிதாக இருந்திருக்கவில்லை. இந்தக்கனவுப் பத்திரிகைக்கு அழகான பெயராக மஞ்சரி என்ற பெயரை என்.ராமரத்தினத்தின் சிறிய தாயாரும், பிரபல எழுத்தாளருமான கி.சாவித்திரி அம்மாள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாராம்.

இதழின் முதல் ஆசிரியர் :

மஞ்சரி இதழுக்கு முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் தி.ஜ.ரங்கநாதன். இவரது பெயரை இதற்கு சிபாரிசு செய்தவர் பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பில் கைதேர்ந்தவராக இருந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அப்போது கா.ஸ்ரீ.ஸ்ரீ கலைமகள் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்துள்ளார்.
தி.ஜ.ர., பிரபல தமிழ் பதிப்பாளராக இருந்த சக்தி வை.கோவிந்தன் நடத்திவந்த சக்தி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். அருமையான சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிப் புகழ்பெற்றிருந்தார். மொழிபெயர்ப்பில் சாதனை பெற்றவராகத் திகழ்ந்தவர். தமிழில் வரவேண்டிய கருத்துகளையும் கட்டுரைகளையும் மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்டு, அவற்றை சரியான நபர்களிடம் கொடுத்து மொழிபெயர்த்து வாங்கி வெளியிட்டார். நாட்டு விடுதலைக்காகச் சிறை சென்ற தேசபக்தர் அவர்.
இவருக்குத் துணையாக, தமிழிலும் வங்காளி மொழியிலும் புலமை பெற்றிருந்த த.நா.சேனாபதி நியமிக்கப்பட்டார். பிரபல எழுத்தாளரான த.நா.குமாரஸ்வாமியின் இளைய சகோதரர் இவர்.

மொழி ஆசிரியர் குழு :

மஞ்சரி இதழுக்கு மொழி ஆசிரியர்கள் என்று கதை கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கவும், மொழி பெயர்த்துத் தரவும் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களும் பத்திரிகைத் தொடர்புள்ளவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள்...

கி.சந்திரசேகரன்
மொழி ஆசிரியர் குழுவில் இருந்த இவர், தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தவர். கவி ரவீந்திர தாகூர், கவி காளிதாசன், ஷேக்ஸ்பியர் உள்ளிட்டவர்களைப் பற்றி எழுதவும் பேசவும் வல்லவராயிருந்தார். சிறுகதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள் நிறைய எழுதியிருக்கிறார்.

கி.சாவித்திரி அம்மாள்
என்.ராமரத்தினம் அவர்களின் தாயாரின் இளைய சகோதரி இவர். தாகூரின் நாவலை வீடும் வெளியும் என்ற பெயரில் சிறப்பாக மொழிபெயர்த்தார். மகாகனம் சீனிவாச சாஸ்திரியின் ராமாயணப் பேருரைகளைத் திறம்படத் தமிழாக்கி வழங்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் பிரபல எழுத்தாளரான கே.எஸ்.வேங்கடரமணியின் முருகன் ஓர் உழவன் என்ற நாவலை கிருஷ்ணகுமாரி என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ
இவர் சம்ஸ்கிருதம், இந்தி, மராட்டி, குஜராத்தி ஆகிய மொழிகளை நன்கு கற்றறிந்தவர். வேத உபநிஷத்துகளையும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலான வைணவ இலக்கியங்களையும் முறையாகப் பயின்றவர். மராட்டி நாவலாசிரியரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான வி.ஸ.காண்டேகரின் நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர். பிரேம்சந்த்தின் புகழ்பெற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்த்து தமிழுக்குத் தந்த பெருமை இவரையே சேரும்.

பிரம்மஸ்ரீ வி.எச்.சுப்பிரமணிய சாஸ்திரி
சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராக இருந்த இவர், மஞ்சரி மொழியாசிரியர் குழுவிலும் ஒருவராக இருந்தார். இவர் ராமாயணம், பாரதம் போன்ற தொடர் பகுதிகளை எழுதி வந்ததோடு, மலையாளப் பத்திரிகைகளில் வெளியான சிறந்த விஷயங்களை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்.

மோ.ஸ்ரீ.செல்லம்.
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் தமிழ் பயின்ற மாணவர்களில் இவரும் ஒருவர். இவரும் மஞ்சரி மொழியாசிரியர் குழுவில் இருந்துள்ளார். இவருடைய மனைவி திருமதி சீதாதேவி, தெலுங்கு, கன்னட மொழிகளில் புலமை பெற்றவர். அவற்றில் இருந்து சிலவற்றை இவர் மஞ்சரிக்காக மொழிபெயர்த்துள்ளார்.

திருமதி குமுதினி மற்றும் திருமதி கௌரி அம்மாள்
ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை கொண்ட குமுதினி, மற்றும் கௌரி அம்மாள் இருவரும் குடும்பப் பாங்கான நாவல்களை, கதைகளைப் படைப்பதில் வல்லவர்களாக இருந்தனர். காஞ்சி மகாசுவாமிகள் மற்றும் மகான் ஸ்ரீ ரமணர் ஆகியோரிடம் உரையாடி, அவ்வப்போது பெற்றபதில்களைக் கொண்டு இரண்டு தொடர்களை எழுதியுள்ளனர்.
இவர்களோடு டி.வி.பரமேஸ்வரன் மற்றும் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரும் மொழியாசிரியர் குழுவில் இருந்துள்ளனர்.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள்

வாரும் சோதர சோதரிகாள்... கணீரென்று ஒலித்து கவனத்தை ஈர்க்கும் கூட்டுக் குரல்கள். கூடவே கிண்கிணியாய் ஒற்றை ஜால்ரா சப்தம். கால்கள் தாமாகவே விரைகின்றன. மயக்கும் சங்கீதம். சரி.. யாரை அழைக்கிறார்கள்? எதற்காக..? தங்கள் பஜனை சங்கத்தில் சங்கமித்து நீங்களும் பாடுங்களேன் என்று நம்மையும் அந்தக் கூட்டத்தில் சேரத்தான் அழைக்கிறார்கள்.

1980களில் பள்ளிச் சிறுவனனான நான் எங்கள் ஊரில் கண்ட காட்சி இது. ஏழு பிராகாரங்கள் என்று ஒரு தலத்தின் சிறப்பைச் சொல்வார்கள். எங்கள் ஊர் செங்கோட்டையில் அப்போது ஏழு அக்ரஹாரங்கள் இருந்தன. ஏழு தெருக்களிலும் போட்டி போட்டு பஜனைகளும் உற்ஸவங்களும் களை கட்டும். ஊருக்கு ஒரு சத்திரம் என்பார்கள். எங்கள் ஊரிலோ தெருவுக்கு ஒரு சத்திரம். சிறப்பு தினங்களா... கொண்டாட்டங்களா... அற்றை நாட்களில் சத்திரத்தில் விழா களைகட்டும். தீபாவளியை ஒட்டி வரும் கோலாட்டத் திருவிழா அதில் சிறப்பு. கோலாட்டப் பாடல்கள் குழந்தைகளுக்கும் அத்துபடிதான்!

இப்படி திண்ணைகளில் அமர்ந்து மாமிகளால் பாடப்பட்ட பாடல்களாகட்டும், பசுவும் கன்றும் பொம்மையாகச் செய்து வைத்து, சப்பரத்தில் சுமந்து பெண்களும் குழந்தைகளுமாய் கோல் தட்டி குரல் எழுப்பி ஆடும் கோலாட்டப் பாடல்களாகட்டும்... அவற்றில் எல்லாம், எங்கள் ஊரில் ஒரு ஞானியாக வாழ்ந்து அத்வைத ஞானத்தை பெண்களுக்கும் மக்களுக்கும் வழங்கிச் சென்ற ஆவுடையக்காளின் பாடல்கள் விரவிக் கலந்திருக்கும்.

யார் இந்த ஆவுடையக்காள்? ஒரு பெண்மணியான அவர் எப்படி ஞானியானார்? அவர் அப்படி எவ்வளவு பாடல்கள் எழுதியுள்ளார்..? அவரின் பாடல்கள் எப்படிப்பட்டவை? அறிந்து கொள்ள ஆவல்தானே?
***

இன்றில் இருந்து சுமார் 300 வருடங்களுக்கு முன்னால்... அது திருவிதாங்கூர் ராஜ்யத்தின் எல்லையாய் இருந்த அழகிய கிராமம். தென்றல் காற்று இனிமையாய் வீசித் தவழும் பூலோக சொர்க்கம். மரம் செடி கொடிகள் விரிந்து பச்சை மரகதப் போர்வையாய் பூமியில் போர்த்திய இயற்கை அழகு தவழும் இன்ப பூமி. சிவனடியார்கள் மிகுந்திருந்த கர்ம பூமி. ஆலயங்களும் வழிபாடுகளுமாய் மக்களின் இறையன்பை வளர்த்தெடுத்த பக்தி பூமி. இக் காரணத்தால் சிவன்கோட்டை என்றே திகழ்ந்தது காலப்போக்கில் மருவி செங்கோட்டை ஆனதாம்!

செங்கோட்டை சுற்றுப் பகுதிக்கு பலம் சேர்க்கும் ஹரிஹரா நதி சலசலத்து ஓடுகிறது. பொதிகை மலைச் சாரலும் தென்றலும் சுகமாய் வீசுகிறது. மலையிற் பிறந்து குளங்களில் நீர் பெருக்கி வளப்படுத்தும் ஹரிஹரா நதியை ஒட்டிய வீரகேரளவர்மபுரம் தெருவில் பக்தி மணம் கமழ்கிறது. ஆற்றின் கரையில் இருந்ததால் ஆற்றங்கரைத் தெரு என்றே அழைக்கப்பட்ட அந்தத் தெருவில் கிழக்கே மண்டபத்தினை ஒட்டிய வீட்டில் பிறந்தது அந்தக் குழந்தை. பெண் குழந்தை என்றால் செல்லம் அதிகம்தானே! பெற்றோர்க்குச் செல்வ மகளாய் செல்ல மகாளாய்த் திகழ்ந்த குழந்தைக்கு ஆவுடை எனப் பெயரிட்டனர். ஓடி விளையாடும் சிறுமியாய் வளர்ந்திருந்தாள் ஆவுடை. கல்விப் பயிற்சிக்கு வழியில்லை. பாவாடை சட்டை போட்டு, ஒற்றைச் சடை பின்னி, நெத்திச்சுட்டியும் ஒட்டியாணமும் சூட்டி பெண் குழந்தையை அலங்கரித்து கொஞ்சி விளையாடினர் பெற்றோர். அவர்களுக்கு என்ன தோன்றியதோ? பாவாடை கட்டக் கூட அறியாத பால்ய வயதில், ஆவுடைக்கு ஒருவனை மணம் முடித்தனர். கழுத்தில் பூண்ட மங்கல நாணின் மஞ்சள் மணம் போகவில்லை; தலையில் சூடிய பூவாடை அங்கிருந்து விலகவில்லை; ஆனால் அவள் கணவனின் உயிர் அந்தக் கணத்தில் அவன் உடல் விட்டு விலகியது! ஆவுடையின் மங்கலக் கோலமும் அவளை விட்டுப் போனது!

ஆவுடையின் தாயாரும் சுற்றத்தாரும் கூடி நின்று அழுதனர். ஆவுடை திகைத்து நின்றாள். பால் சிரிப்பு மாறாத பாலக வயதில், அடுத்திருப்போர் அழுவது கண்டால்... அம்மாவிடம் கேட்டாள்... “ஏனம்மா எல்லாரும் அழுகிறீர்கள்?”
"பையன் செத்துப் போய்ட்டான்”
“அவா ஆத்துப் பையன் செத்துட்டான்னா... நீங்கள்லாம் ஏன் அழணும்?”

இந்தக் கேள்வி, ஆவுடையின் தாயாருக்கு பொட்டிலடித்தாற்போல் தோன்றியது. விவேகத்தால் அழுவதை நிறுத்திக் கொண்ட அந்த அம்மாள், ஆவுடையை கட்டியணைத்துக் கொண்டார். குழந்தை சொல்வதன் உள்ளர்த்தம் அவளுக்குப் புரிந்தது. இதற்காக அழுவதற்கு நாம் யார் என்று எண்ணியவர், அன்று முதல் குழந்தையை முன்னிலும் கவனமாக பராமரிக்கத் தொடங்கினார். குழந்தைக்கு சீவி முடித்து சிங்காரித்து அழகு பார்த்தார். கல்வி பயிற்றுவிக்கவும் ஏற்பாடு செய்தார்.

ஆனால்... ஊர் வாய்? வம்பு பேசியது. அடுப்பங்கரையில் காலம் கழிக்க வேண்டிய கைம்பெண்ணுக்குக் கல்வி எதற்கு என்று வம்பளந்தது. ஊரில்தான் கேலிப் பேச்சு என்றால், குடும்பத்துக்குள்ளோ பலத்த எதிர்ப்பு! ஆவுடையின் தாயார் அனைத்தையும் மலை போல் நின்று தடுத்தார்.

நாட்கள் நகர்ந்தன. குழந்தைப் பருவத்தில் குதூகலமாய்க் கழித்த குழந்தை, பருவம் அடைந்தபோது தாயாரின் தலையில் பேரிடியாய் இறங்கியது அந்தச் செய்கை! கைம்பெண் அவள் எனக் காட்டி, கைம்மைக் கோலத்தை அந்தச் சிறு வயதில் வலியத் திணித்தது உலகம். தாயார் அழுது புரண்டார். சீவி முடித்து சிங்காரப் பின்னலிட்டு பார்த்துப் பழகிய அழகு இனி கனவே என்றானது. தெருக்களில் ஓடியாடிய கால்கள், ஒற்றை அறையில் ஓர் மூலையில் முடங்கிப் போனது. தன் நிலை புரிந்த ஆவுடை கண்ணீரும் கம்பலையுமாய் நாட்களைக் கடத்தி, அந்த நிலையை மனத்தில் ஒருவாறு ஏற்றுக் கொண்டார். கோயிலுக்கும் செல்ல முடியாத துர்பாக்கியவதியானேனே என்று ஏங்கித் தவித்தார் ஆவுடை!

இத்தகைய சூனியச் சூழலில்தான் ஒரு நாள்...

செங்கோட்டை ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. கதிரவன் விழித்தெழும் முன்னே காரியமாற்றக் கிளம்பிவிட்டார்கள் பெண்மணிகள். வாசல் தெளித்து, அழகுக் கோலமிட்டு, வீடுகளின் முன்னே மாவிலைத் தோரணங்கள் கட்டி வீதி எங்கும் அலங்கார மயம்தான்! பெரியவர்கள் குளித்து மடி வஸ்திரங்கள் கட்டிக் கொண்டு பஜனை மடத்தின் வாசலில் கூடினர். மாவிலைக் கொத்தும் மாலைகளும் பூர்ண கும்பமுமாய் பஜனை மடத்தின் திண்ணையில் எல்லாம் தயாராய் வைக்கப் பட்டிருந்தது. காத்திருந்தோர் உள்ளம் எல்லாம் அந்த ஒரே ஒருவரின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தன. வரப்போகிறவர் பெரிய மகானாயிற்றே!

திருவிசநல்லூர் வேங்கடேச ஐயாவாள். கங்கையைத் தன் வீட்டின் கிணற்றிலேயே பொங்க வைத்த மகான். பெரும் ஞானி. தன் திருவடித் தாமரை பதித்து, அந்த மண்ணையும் புனிதமாக்கத்  திருவுள்ளம் கொண்டார் போலும். அவர் தரிசனத்துக்காய் ஊரார் காத்திருந்தனர். அவருக்கு என்னென்ன வசதிகளைச் செய்து கொடுப்பதென்று பெரியோர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நேரம் கடந்தது. வயதானவர் ஆயிற்றே... எவ்வளவு தொலைவுக்கு நடந்து வரவேண்டும்.? தென்காசிக்குச் சென்று, குற்றாலம் வழியாக வரப் போவதாய்ச் சொல்லியிருந்தார்களே! கவலை ஆட்கொண்டது அவர்கள் முகங்களில்!

ஒருவழியாய் தொலைவில் ஜால்ராக்களின் சத்தம் கிண்கிணியாய்க் காதில் விழுந்தது. பஜனைப் பாடல்களின் வசீகரம் அவர்களைக் கவர்ந்திழுத்தது. அய்யாவாள் அங்கே எழுந்தருளினார். கால்களில் கட்டிய சதங்கை. ஜில் ஜில் என்ற ஒலியெழுப்பியது. கைகளில் சிப்ளாக் கட்டை. தலைப்பாகையாய்க் கட்டப்பட்ட சிவப்புத் துணி தோள்களில் புரண்டு நீளமாய்ச் சிறகு விரித்தாடியது. தோளில் உஞ்சவிருத்தி செம்பு. சுருதிப் பெட்டி. தம்புரா, டோல்க்கி என இசைக்கருவிகளுடன் சூழ்ந்து நின்றபடி சிலர். "கோவிந்தம் பஜ...” என நாமாவளி சகிதமாய் சுற்றிச் சுற்றிச் சுழன்றாடியபடி கிராமத்துள் புகுந்தார் ஸ்ரீஅய்யாவாள்.

ஓவ்வொரு வீட்டின் முன்னும் சற்று நின்று அந்த வீட்டினர் தரும் உபசாராதிகளை ஏற்றுக் கொண்டு நகர்ந்தார் அய்யாவாள். வாசலில் இட்ட கோலத்தின் மீது மணை வைத்து, ஸ்ரீஅய்யாவாள் அதில் ஏறி நின்றதும் அவரது பாதங்களை நீரால் சுத்தம் செய்து, ஸ்ரீபாத தீர்த்தம் எடுத்துக் கொண்டு, அவரின் உஞ்சவிருத்திச் செம்பில் அரிசி, தான்யங்களை இட்டு நமஸ்கரித்தனர். ஸ்ரீஅய்யாவாள் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் நின்று சென்றார்.

தெருவின் கடைக்கோடியில் ஒரு வீடு. வாசல் குப்பை கூளம் நிறைந்து, ஊரோடு ஒன்றாகி இல்லாமல் தனித்திருந்தது. அருகேயிருந்த வீட்டின் வாசலில் கோலம் பளிச்சென்றிருக்க, இங்கோ அலங் கோலமாய்க் கிடந்தது வீட்டின் வாசல்! சுற்றிலும் மகிழ்ச்சிக் குரல் ஆரவாரிக்க, இங்கோ வீட்டின் உள்ளிருந்து அழுகைக் குரல்!

உடன் வந்தவர்களோ அந்த வீட்டின் வாசலில் நிற்பதும் தகாதென ஒதுங்கிச் சென்றனர். ஆனால் ஸ்ரீஅய்யாவாளோ அந்த வீட்டின் வாசலில் சற்றே நின்றார். அவரை அங்கே நிற்க வேண்டாம் என்று சொல்ல மற்றவர்களுக்கு தைரியமும் தெம்பும் இல்லை. உற்சாக மிகுதியால் ஸ்ரீஅய்யாவாள் பாடத் தொடங்கிவிட்டார்.

பாட்டின் வேகத்துக்கு ஏற்ப காற்சதங்கைகள் இனிய லயத்தை எழுப்பி ஆவுடையின் மனத்தைக் கொள்ளை கொள்வதாய் இருந்தது. வீட்டின் உள்ளே வெறுமையையும் இருட்டையுமே வாழ்வின் கதியெனக் கொண்டிருந்த ஆவுடைக்கு ஒரு வெளிச்சக் கீற்று தென்பட்டது. அறையை விட்டு ஆவேசமாய் எழுந்தாள். உடனிருந்தோர் தடுத்தனர். திமிறிக் கொண்டு வந்தாள் ஆவுரை. வீட்டின் கதவு படீரெனத் திறந்தது. அடுத்த நொடி, வாசலில் பாடியாடிக் கொண்டிருந்த ஸ்ரீஅய்யாவாளின் காலடியில் விழுந்து கிடந்தாள் ஆவுடை.

பதினாறு வயதுப் பெண். கைம்பெண் கோலத்தில்! அய்யாவாள் தன் பாட்டை நிறுத்தினார். கனிவுடன் ஆவுடையை நோக்கினார். நயன தீட்சை அளிப்பது போல் அவளைத் தேற்றும் விதமாய், "குழந்தாய் வருந்தாதே! பகவான் இருக்கிறார். சந்த்யா காலத்தில் ஆற்றங்கரைக்கு வா” என்று கூறி ஆவுடையின் தலையில் மெதுவாய் வருடினார். ஸ்ரீஅய்யாவாளின் ஸ்பரிச தீட்சை, அந்தக் கணமே ஆவுடை மனத்தில் குருநாதர் அருள் தமக்குக் கிட்டியதாய் எண்ண வைத்தது.

ஆனால்... ஊரார்? கேலிப் பார்வை பார்த்தனர். அதுவரை சுவாமிகள் என்று சுற்றி வந்த கும்பல், வெறுப்பைக் காட்டி ஒதுங்கியது. தெருப் பெண்கள் சிலரைத் தவிர வேறு எவரும் இல்லை. அதன்பிறகு அவருக்கான உபசாரமும் அப்படி இப்படித்தான் இருந்தது. அவரோ எதிலும் மனத்தைச் செலுத்தவில்லை. வழக்கம்போல் பாடிக்  கொண்டு மாலை நேரம் ஆற்றங்கரை மண்டபத்தை அடைந்தார்.

வீட்டிலோ ஆவுடைக்குத் தடை போட்டார்கள். ஆற்றங்கரை மண்டபத்துக்குச் செல்வதாவது? குரல்கள் பலவிதம்! தாயார் சமாதானம் சொன்னார். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வேறு வழியின்றி ஒரு பெண்ணை ஆவுடைக்குத் துணையாக இருக்க வைத்து, வீட்டில் உள்ளோர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். ஆவுடை அந்தப் பெண்ணையே நல்ல வார்த்தை சொல்லி உடன் வரச் செய்தாள்.

ஆதவன் தன் கிரணங்களை பொதிகை மலையின் உச்சியில் மறைத்துக் கொண்டு அப்புறம் சென்றான். ஆற்றங்கரை மண்டபத்தின் முன்னே இருள் கவியத் தொடங்கியிருந்தது. ஸ்ரீஅய்யாவாள் சொன்னபடி மண்டபத்தின் ஓரத்தில் நின்றிருந்தாள் ஆவுடை. சந்தியாவந்தனாதிகள் முடித்துக்  கரையேறினார் அய்யாவாள். விபூதி ருத்திராட்சாதிகளுடன் அவரது திருமுகம் கண்ட நொடி, ஆவுடை அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கையில் புனித நீர் எடுத்து ஆவுடையின் சிரத்தில் தெளித்த அய்யாவாள்.... “குழந்தாய்! கண்களைத் திற. என்னை குருவாக ஏற்று நான் உனக்கு உபதேசிக்கப் போகும் மந்திரத்தை உயிரெனப் பற்றி உச்சரித்து வா. உனக்கான ஞான வாசற் கதவு திறந்தது. உலகைப் பற்றிக் கவலைப் படாதே! நான் அடிக்கடி வந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன். தெம்புடனிரு”  என்றார்.

ஆவுடையின் கண்கள் திறந்தன. ஸ்ரீவேங்கடேசரின் அந்த ஞான உபதேசம், ஆவுடையை ஆத்மானுபூதியில் லயிக்கச் செய்தது. மந்திர ஜபம் மனத்தில் பற்றி, உன்மத்தையாய் ஏக சிந்தையில் லயித்திருந்தாள். அவளின் நிலை கண்டு, ஊரார் அவளை சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தனர். குருதேவர் கட்டளைப்படி, ஆவுடை ஊரில் இருந்து வெளியேறினாள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டாள். நாட்கள் கடந்தன. ஆவுடையின் பக்தியும் பாடல்களும் இதற்குள் பல ஊர்களிலும் புகழ் பெற்றிருந்தது. அது அவளது சொந்த ஊரான செங்கோட்டையையும் எட்டியிருந்தது. ஊரை விட்டு வெளியே சென்ற பின்னர்தான் ஆவுடையின் மகிமை ஊராருக்குத் தெரியவந்தது.

ஒரு நாள் துலாக்காவேரி ஸ்நானத்துக்கு மாயவரத்துக்கு வந்து சேர்ந்தாள் ஆவுடை. துலாக்காவேரி ஸ்நானத்தில் ஆவுடைக்கு பேதாபேதம் அற்று, சர்வ சமரஸ பரிபூர்ண ஸ்வனுபோதம் கிட்டியது. காவேரி நீரில் எச்சில் பட்ட மாவிலை மிதந்து வந்தது. அதை எடுத்து பல்துலக்கினார் ஆவுடையக்காள். சுற்றிலும் ஸ்நானம் செய்து கொண்டிருந்த பெண்கள் அவரை பரிகாசம் செய்தனர். ஆனால் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் புன்சிரிப்புடன் படியேறினார் ஆவுடையக்காள். அங்கே அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஸ்ரீஅய்யாவாள், பீஜாட்சரத்தை ஆவுடையக்காளின் நாக்கில் தர்ப்பையினால் எழுதி, அவரை ஆசீர்வதித்தார். "உனக்கு ஜீவன்முக்தி நிலை ஏற்பட்டு விட்டது. நீ எங்கிருந்தாலும் இனி உன்னை கர்ம பந்தம் அணுகாது. உன் சொந்த ஊருக்கே சென்றிரு” என்று உபதேசித்தார்.

ஆவுடையக்காள் ஊர் திரும்பினார். பழைமை மறந்து புதுமை ஏற்று ஆவுடையக்காளை ஊரார் வரவேற்றனர். மரியாதை செய்தனர். அவரின் அத்வைத ஞானத்தைப் பெற்று அவரை ஏற்றுப் போற்றினர்.

ஆவுடையக்காள் வெகுகாலம் அங்கே வாழ்ந்திருந்தார். பாடல்கள் பல புனைந்தார். அவருடைய அத்வைதப் பாடல்கள் ஊரில் பெண்கள் பலராலும் பாடப் பெற்றது. அங்கே ஒரு சத்சங்கம் முளைத்தது. ஆவுடையக்காளுக்கு சீடர் குழாம் பெருகியது. பாடல்கள் பல அங்கே பிறந்தன. விதவிதமாய் வேதாந்தப் பாடல்கள்.

ஐயா! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழ வேண்டாமோ?
தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே!
அம்மா! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்
அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?
- என்று கேட்கிறார் பண்டிதன் கவி என்ற பாடலில். இதில், தனது குருநாதரைப் பற்றியும் அவரின் தீட்சை ரகசியத்தையும் கூறுகிறார்.

ஒளியை விளக்க ஓர் ஒளி உண்டோ பெண்ணே!
வெளியாக நான் உனக்கு விளம்பினேன் உண்மை!
விண்ணில் சூரியன் பார்க்க கண்ணே போதாதோ?
விளக்கைக் கொண்டு அதைக் காட்டி விளக்குவார் உண்டோ?
ஒருக்கால் உண்மை சொன்னால் உதிக்குமோ? அறிவு
உபமானம் உரைத்திட்டால் உடனே நான் அறிவேன்~!
ஒப்பிக்க அதற்கு இங்கே உபமானம் இலையே உன்
உணர்வால் அனுபவித்து உணர்ந்து கொள் என்றாள்...!
- இவ்வாறு ஞானக் குறவஞ்சி நாடகத்தில் வெளிப்படுத்துகிறார். இன்னும்,

அத்வைத மெய்ஞான ஆண்டி, வேதாந்த அம்மானை, வேதாந்த ஆச்சே போச்சே, மனம் புத்தி ஸம்வாதம்- அன்னே பின்னே என்னும் வேதாந்த சார பிரத்தியோத்திரக் கும்மி, சூடாலைக் கும்மி, வேதாந்த கும்மி, சூடாலைக் கதை, கோலாட்டப் பாட்டு, வேதாந்த ஞான ரஸ கப்பல், வேதாந்தக் கப்பல், கண்ணிகள் வகைகளில் கிளிக் கண்ணி, குயில் கண்ணி, பராபரக் கண்ணி; ஸ்ரீதட்சிணாமூர்த்தி படனம், அத்வைத ஏலேலோ, வேதாந்தப் பள்ளு, வேதாந்த நொண்டிச் சிந்து, ஞானக் குறவஞ்சி நாடகம்,  வாலாம்பிகை பந்து, ஸ்ரீவித்தை சோபனம், அனுபோக ரத்னமாலை வேதாந்த வண்டு, அத்வைத தாலாட்டு, தொட்டில் பாட்டு, ஊஞ்சல் என அக்காளின் பாடல்கள் பல நிலைகளில் பல வடிவங்களை எடுத்து விரிவாக நின்றது. பகவத் கீதை வசனம் என்கிற ஸ்ரீபகவத்கீதா ஸாரஸங்கிரஹத்தையும் ஸ்ரீமத் பகவத் கீதை ஸாரம் என்பதையும் செய்தார் ஆவுடையக்காள்.

அத்வைத சித்தாந்தத்தை அழகாக வெளிப்படுத்தும் அக்காளின் கோலாட்டப் பாட்டு இன்றும் பாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, செங்கோட்டை அக்ரஹாரங்களில் உள்ள பெண்மணிகள், குழந்தைகள் ஒரு பசுவும் கன்றுமாய் பொம்மை செய்து, சப்பரத்தில் அதனை எடுத்துவைத்து விழா எடுக்கின்றனர். சப்பரத்தின் முன் கோலாட்டம் ஆடி, ஆவுடையக்காள் பாடல்கள் உள்ளிட்ட பஜனைப் பாடல்கள் பாடி, முளைப்பாரியையும் பசு-கன்று பொம்மையையும் முன்னிரவில் வயல்வெளியில் சென்று கரைத்து விட்டு வருவர். இந்த விழா இன்றும் நடைபெற்று வருகிறது.

ஆவுடையக்காளின் கோலாட்டப் பாட்டில்,
ஆதியில் ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே
வேதமும் அறியாக் கோலே வேதாந்தக் கோலே!
காடு மேடு எல்லாம் திரிந்தாய் காம வேதை கொண்டு அலைந்தாய்
வீடு அறியாமல் மெலிந்தாய் மெத்தவே நொந்தாய்!
........
போற்றியார் அடிபணிந்து பந்துக்களும் வீடும் விட்டு
கூற்றுவன் அழைக்கும் போது கூட வா ராது!
புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே
பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே!
ஆகா வழிக்கு அதிதூரம் ஆத்ம அனாத்ம விசாரம்
தொகுத்துப் பார்க்க இது நேரம் தோன்றுமே சாரம்! - என்று வேதாந்த சார விளக்கம் செல்லும்.
***

நாட்கள் வருடங்களாகின. ஓர் ஆடி அமாவாசை நன்னாள். திருக்குற்றால அருவியில் ஸ்நானம் செய்துவிட்டு, மலையின் மீதேறிச் சிறிது தொலைவு சென்று தியானம் செய்யப் போவதாய் சிஷ்யைகளிடம் கூறிச் சென்றார் ஆவுடையக்காள். சென்றவர் சென்றவர்தாம். எங்குத் தேடியும் ஆவுடையக்காள் அதன்பின்னர் தென்படவில்லை. அவரின் உடலும் கிடைக்கவில்லை. இது யாருக்குமே புரிபடாத ரகசியம்தான்!
***

பின்குறிப்பு:
தமிழகத்தில் நமது ஞானப் பரம்பரையில், பட்டினத்தார் போல், காரைக்கால் அம்மையார், தாயுமானவர், வள்ளலார் என சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஞானிகளின் வரிசையில் ஒப்பற்ற இடத்தை வகிப்பவர் செங்கோட்டை ஆவுடையக்காள்.
செங்கோட்டை ஆவுடையக்காள் குறித்து 50 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோமதி ராஜாங்கம் என்பவர் எழுதி வைத்த குறிப்புகள், ஆவுடையக்காளின் அத்வைதப் பாடல்கள் தொகுக்கப் பட்டு ஞானானந்த நிகேதனின் சுவாமி நித்யானந்தகிரி சுவாமிகளால் நூல் ஆக்கப்பட்டுள்ளது. கோமதி அம்மையார், மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் அக்காள் மகள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் இந்த நூலில் எழுதிய குறிப்புகளின் படி, மகாகவி பாரதி, தன் பாடல்களின் முன்னோடியாக ஆவுடையக்காளையே கொண்டிருந்தார் என்பதுதான். பாரதிக்கு ஆவுடையக்காளின் சரிதத்தை அறிந்து கொள்வதிலும், பாடல்களைப் புடம் போடுவதிலும் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. திருநெல்வேலி ஜில்லாவின் எல்லையான செங்கோட்டையில் தொடங்கி, அக்காளின் பாடல்கள் சுந்தரபாண்டியபுரம், பாவூர், சாம்பவர் வடகரை, கடையம், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, நாகர்கோயில், வடிவீஸ்வரம், முன்னீர்பள்ளம், முஞ்சிறை என மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் அதிகம் பரவியிருந்தது. அந்தக் காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே தாரகமென இருந்தது. முற்பகல் உணவுக்குப் பின்னர் மதிய நேரம் பத்துப் பதினைந்து பெண்களாகக் கூடி, அக்காளின் பாடல்களைப் பாடி ஆறுதல் அடைவது வழக்கம்.
இவ்வாறு செல்லம்மாள் பாரதி வாழ்ந்த கடையத்தில் ஆவுடையக்காளின் பாடல்கள் பாடக் கேட்டு மனத்தைப் பறி கொடுத்த சுப்பிரமணிய பாரதி, தன் பாடல்களில் அக்காளின் கருத்தையும் கவிச் சொற்களையும் ஆங்காங்கே கையாண்டுள்ளார். ஆவுடையக்காளின் கண்ணி, கும்மி, சிந்து, பள்ளு இவையெல்லாம் பாரதியின் கவி வடிவிலும் தானாய்ப் புகுந்தது. அக்காளைப் போல் பாரதியும் பகவத் கீதை விளக்க வசனம் எழுதி, அக்காளின் கவி வடிவ மறுபதிப்பாய் அமைந்தார். அந்த வகையில், எட்டையபுரம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் முன்னோடியென செங்கோட்டை ஆவுடையக்காளைச் சொல்லலாம்!

-செங்கோட்டை ஸ்ரீராம்

===================================
பாக்ஸ்:
ஞானி ஆவுடையக்காளின் சரிதையில் வரும் குறிப்புகளில் இருந்து... இந்த மண்டபத்தை அடுத்த வீடுகளில்தான் அவர் வாழ்ந்திருக்க வேண்டும். தெருவின் கடைக்கோடி வீட்டில் வாழ்ந்துள்ளார். மண்டபத்தை அடுத்த மரத்தின் அடியில் அவருக்கு ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் ப்ரும்ம உபதேசம் செய்து, ஞானம் அளித்துள்ளார். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதால், இப்போதிருக்கும் எவருக்கும் இதுதான் என்று ஆவுடையக்காள் வாழ்ந்த வீட்டையோ சம்பவங்களையோ உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆவுடையக்காளை நினைவுகூர தற்போது ஊரில் யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை! அந்தத் தலைமுறை போய்விட்டது.

வியாழன், ஆகஸ்ட் 14, 2014

சுதந்திர தினச் சிந்தனை



சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை!
வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!
சுதந்திர தினக் கொடியேற்றம்...
கொடியின் நிறங்கள்...
பசுமை-செழுமை-இஸ்லாமாம்...
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...
காவி-தியாகம்-இந்துவாம்...
குண்டூசிகளால் குத்துப்பட்டும்
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது
தேசியக் கொடி!
குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும்
அதனால்தானே விழாமல் தாங்கி நிற்கிறது?!
அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!
தியாகம் மட்டும் இல்லை என்றால்
தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!
குத்துப் பட்டும் சிரிக்கும் காவியைப்போலே
வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பீர்...
இந்திய நாட்டின் இந்துக்களே!
தியாகிகளே!

வியாழன், ஆகஸ்ட் 07, 2014

சிறை மீட்க வாராயோ..?


அன்று...!
தனிமைத் தவம் அன்று...!
ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!
சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்...
தனிமையைத் தேடி ஏங்கியது மனம்.

தனிமை கிடைத்தபாடில்லை!
தவம் தொடங்கியபாடில்லை!

இறைவனை இருத்தி இயங்க வேண்டும்!
இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்!

ஆனாலும்...

தனிமை கிட்டிய பாடில்லை!
தவமும் முட்டிய பாடில்லை!

இன்று..!
செல்லரிக்கும் தனிமைதான்!
அமைதி தவழும் பூக்காடு

மனசு மரத்துவிட்ட மயானத் தோற்றம்!
தனிமை தவிர்க்க தவியாய்த் தவித்தேன்!
ஆரவாரத்தை நோக்கி அலைந்தது மனம்!

நன்றாய்த்தான் முகம் காட்டினாள்!
நாள்கள் சிலநூறு கடந்து விட்டது!
நாணமும் சிலநாளில் நகர்ந்து விட்டது!

அவள்...
நன்றாய்த்தான் முகம் காட்டினாள்!
நாணலாய் நானும் வளைந்து கொடுத்தேன்!

அன்பை போதிக்கும் 'டீச்சர்' என எண்ணி..!

ஆனாலும்...
ஒவ்வொரு நொடியும் 'டார்ச்சர்' தான்!
சிந்தையில் புகுந்து துவம்சம் செய்கிறாள்!

நான் செய்த குற்றம்...
இதயவாசல் கதவு திறந்து
இருத்தி வைத்தேன் உள்ளுக்குள்!

எனக்கான தண்டனை..!
தனிமைச் சிறையில் கைதியானேன்..!

நாட்கள்தான் நகர்கின்றன...

சிறைமீட்க வருவாளோ..
சிந்தையை மீட்டுத் தருவாளோ...?

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

ஆசாரக் கண்ணப்பர்


லிப்கோ என்ற புத்தக நிறுவனம் சென்னையில் உள்ளது. வைணவ, பக்தி வேதாந்த புத்தகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஆங்கில அகராதி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பெருமை பெற்றது. வைஷ்ணவ, ஸ்மார்த்த சந்தியாவந்தனம், நித்யானுஷ்டாக்ரமம், நித்யானுசந்தானம், உபாகர்மம், குடும்ப ஜோதிடம் உள்ளிட்ட புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. குடும்பத்தில், அல்லது நண்பர்கள் இல்லத்தில் ஏதாவது உபநயன முகூர்த்தம் இருந்தால், அவற்றில் நான் பெரும்பாலும் லிப்கோவில் சந்தியாவந்தனம் புத்தகத்துடனேயே கலந்து கொண்டு, உபநயனச் சிறுவனுக்கு புத்தகத்தை அளித்து ஆசிகூறுவது வழக்கம்.
இவ்வளவு ஆசார அனுஷ்டானாதிகளுடன் இருந்து புத்தகங்களைப் பதிப்பிதாலும், ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், இந்த நிறுவனத்தின் நிறுவனர் சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் 'கண் தான மையத்திற்கு' தானம் செய்தார் என்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஆச்சரியமான செய்தி.
அவருடைய வாழ்க்கைக் குறிப்பை ஒரு இடத்தில் படிக்க நேர்ந்தது.
***
ஸ்ரீ வரதாச்சாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா (லிப்கோ புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர்)
ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா 1908 -ஆம் வருடம் டிஸம்பர் மாதம் 7-ம் தேதியன்று பிறந்தார். உலகப் பெருந் தலைவர் ராஜாஜி தோன்றிய 'திருமலை நல்லான் சக்ரவர்த்தி' என்னும் பரம்பரையில் கிருஷ்ணஸ்வாமி சர்மாவும் பிறந்தார். பழைய தென் ஆர்காடு மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற கிராமமே அவர் பிறந்த ஊர். கிருஷ்ணஸ்வாமி சர்மா தணிக்கைத் துறையில் ஜி.டி.ஏ.(ACA என்று இன்று அறியப்படும்) தேர்வில் வெற்றி பெற்று, பல கோயில்களின் கணக்குகளைத் தணிக்கையும் செய்திருக்கிறார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தகங்களை வெளியிடும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான 'லிட்டில் ப்ளவர்' என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணஸ்வாமி சர்மா 'லிட்டில் ப்ளவர்' (www.lifcobooks.com) என்ற பெயரை ஏற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
வைணவ நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற ஒரு பெயரும் உண்டு. வகுள புஷ்பம் சிறியதாகவும், அழகானதாகவும், வாசனை கொண்டதாகவும் விளங்கும். அந்தச் சிறிய புனிதமான பூவைக் கருத்தில் கொண்டும், 'லிட்டில் ப்ளவர்' என்ற பெயர் அமைந்தது.
இவ்வாறாக 'தி லிட்டில் ப்ளவர் கம்பெனி' 1929-ம் ஆண்டில் பிறந்தது. வடகலை, தென்கலை வைணவப் பிரிவினரை முதலில் ஒற்றுமைப்படுத்தி, பிறகு அத்வைதிகளையும், துவைதிகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கம். அதைச் செயல்படுத்த அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவரிடம் இடையறாத பக்தி கொண்டவர். சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டதில் அவர் பிரதான பங்கு வகித்தார். இவ்வாறு பலப்பல சமயப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் பெரும் பணிகளைப் பாராட்டி மைசூர் ஸ்ரீ பரகால மட ஜீயர் ஸ்வாமிகள் 25-6-1977 அன்று 'ஹயக்ரீவ சேவா ரத்னம்' என்ற பட்டத்தை கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு அளித்தார். ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா 1979-ம் வருடம் ஜூலை மாதம் 22-ம் தேதியன்று ஆண்டவன் திருவடி அடைந்தார்.
கண்தானம் என்பது வெகுவாக பிரபலம் ஆகாத 1979-லேயே, ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் 'கண் தான மையத்திற்கு' தானம் செய்தார்.
'ஸ்ரீசடாரி சேவக', 'ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவா ரத்நம்', 'பக்தி பிரசாரண பிரவீண' போன்ற பல பட்டங்களைப் பெற்ற ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தக வெளியீட்டாளர்களிடையே ஒரு வைரமாக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்.
***
உண்மைதான். ஆசாரம், அனுஷ்டானம் என்று சொல்லி, பழைமைக் கருத்துகளோடு நவீனத்தை உள்ளே புக விடாமல் இருந்தால் நஷ்டம் சமூகத்துக்குத்தான் என்பதை உணர்த்தியவர். நம் நடைமுறைகள் கால மாற்றத்துக்குத் தக்க மாற்றிக்கொள்ளத் தக்கவை -  ஆனால், அடிப்படையை மாற்றாமல்! மறக்காமல்!!டும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான 'லிட்டில் ப்ளவர்' என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.

சனி, ஆகஸ்ட் 02, 2014

காதலிக்க நேரமில்லை....


எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்!
எனக்கு வேலை வைக்காமல்!
***
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு...
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசிச் செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து
இரவைக் கொல்கிறேன்...

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ......

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ...
காதல் தர
 நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா...
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே!
***


சனி, ஜூலை 26, 2014

பேய்ப் புராணம்





 
வேப்ப மர உச்சியில் நின்று
பேயொன்னு ஆடுதுன்னு...
விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க...
பட்டுக்கோட்டையார் அவ்வப்போது மனசுக்குள் பாட்டு படிச்சாலும்... ம்ஹும்... சரியா அந்த நேரத்துக்கு இதயத் துடிப்புதான் அதிகமாகுமே தவிர... புத்தி வேலை செய்யாது!
இது எனது சிறுவயது அனுபவம்...

அப்போது வயது 10,11 இருக்கலாம். தென்காசியில் குலசேகரநாதர் கோவில் அருகில் உள்ள விண்ணகரப் பெருமாள் கோயிலில்
புரட்டாசி சனிக்கிழமை பூஜை, கருடவாகன சேவை முடித்து, இரவு 12 மணி அளவில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவிலுள்ள கீழப்புலியூர் வீட்டுக்கு சைக்கிளில் தனியாக வருவேன். கையில் பெருமாள் பிரசாதமாக பூமாலைகள், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சகிதம் சைக்கிளில் மாட்டிக் கொண்டு வருவேன். கீழப்புலியூர் ரயில் நிலையம் கடந்து, சாலை முனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சற்று முன்னர் இருக்கும் இந்தச் சிறிய பாலம் கடக்கும்போது தான் கதிகலக்கும்...
காரணம், அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் நாய், அல்லது கழுதை இந்தப் பாலத்தின் அடியில் அடிபட்டு, நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கும்.
அதற்கு ஒரு கதை கட்டிவிட்டார்கள் சிலர். இந்தப் பாலத்தின் அருகில் வயக்காட்டுக்குள் ஒரு சமாதி. அதிலிருந்து பேய் ஒன்று இப்படிச் செய்கிறது என்று!
கிராமத்துக் கதைகளுக்கு கட்டுப்பாடா இருக்கிறது..?!
கட்டற்ற கதைக் களஞ்சியங்களாயிற்றே!~
ஒரு சனிக்கிழமை... தெரு விளக்குகள் எதுவும் இல்லை. அப்போதே கிலி பிடித்துக் கொண்டது. துணைக்கு யாரும் இல்லை! தனியனாக சைக்கிளில் நள்ளிரவு 12.30க்கு மிதித்துக் கொண்டு வந்தேன்... பேய் இருக்குமோ..? அது எப்படி வரும்? எந்த உருவில் வரும்..? நம்மை என்ன செய்யும்?! எல்லாம் யோசித்து யோசித்து வந்தபோது... இரும்பையோ செருப்பையோ வைத்திருந்தால் பேய் ஒண்ணும் செய்யாது என்று ஒரு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்களே! அப்படி என்றால் ஒரு இரும்புக் கம்பியை கையில் வைத்துக் கொள்ளலாமா? எண்ண அலைகளுடன்... சைக்கிளை படுவேகமாக மிதித்து... துரத்துதுரத்து என்று துரத்தி... சரியாக இந்தச் சாலை திருப்பத்தில் வந்தபோது சைக்கிள் செயின் கழன்று கொள்ள... அவ்வளவுதான்.. இதயத் துடிப்பின் வேகத்தை எண்ணுவதற்கு எந்தக் கருவியும் உலகில் இல்லை!
சைக்கிளின் ஹாண்ட்பாரைப் பிடித்துக் கொண்டு, இந்த இரும்பைத் தொட்டுக் கொண்டிருந்தால்... பேய் ஒண்ணும் செய்யாதுல்ல... என்ற மன சமாதானம்.. இருந்தாலும் கேட்கவில்லை! சைக்கிளில் இருந்து இறங்கி... ஓட்டமும் நடையுமாக தள்ளிக்கொண்டு... பிள்ளையார் கோவிலைக் கடந்து.. ஒரு தெரு விளக்கு வெளிச்சத்தில் நின்றபோதுதான்.. இதயத்துடிப்பின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது... ஆனாலும் பேயும் வரவில்லை, பிசாசும் வரவில்லை! பயம்தான் மிஞ்சியது!
அந்த ஒரு நாள் பயத்தின் உச்ச அனுபவம்... அதன் பின்னர் காணாமல் போனதுதான் ஆச்சரியம்! ஏனென்றால், இனிமேல் அதற்கு மேல் பயப்பட வேறு எதுவுமில்லை... அந்தப் பேயே ஒன்றும் இல்லாமல் போச்சே! அப்புறம் வேறு பேயென்ன பிசாசென்ன? என்ற எண்ணம்தான்!
பதின்ம வயது கடந்து 4 வருட மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்) பணியில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி, இராப் பகல் பாராமல் தெருக்களில் அர்த்த ராத்திரிகளில் சுற்றி... ம்ஹும்... பேயுமில்லை பயமுமில்லை!!!
இந்த ஊருக்கு எப்போதாவது செல்வதுண்டு. தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் அழகான இயற்கை வெளி வழி! வயல் சூழ்ந்த பகுதி! நீர் சலசலத்து ஓடும் சிற்றாற்றின் கிளைக் கால்வாய்கள் அழகு! மணிரத்தினத்தின் ரோஜா படத்திலும், புதுநெல்லு புதுநாத்து படத்திலும் இன்னும் சில திரைப்படங்களிலும் அள்ளிப் புகுந்துகொண்ட அழகு இடம்! என் இளமைக் கால ரசனை மனதில் வெளிப்பட்டுக் கிளம்பிய கவிதைகளின் கருவாய் அமைந்த அழகு பூமி!
புலிக்குட்டி விநாயகர் என்ற பெயரோடு அமைந்த பிள்ளையார்! அந்தத் தெருவில் இருந்த இந்த வீடு! எல்லாம் இப்போதும் அடிக்கடி கனவில் வருவதுண்டு. இனம்புரியாமல் நானும் எழுந்து அமர்ந்து அசை போடுவதுண்டு. சின்னஞ்சிறு மனதில் ஆழப் பதிந்த காட்சிகளாயிற்றே!
இன்று அந்த வீடு... பாழ் பட்டு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. 5 வீடுகளை அடுத்து நான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்ட அந்த வீடு.. பாட்டு மாமி என்று நாங்கள் அன்போடு அழைக்கும் அந்த லட்சுமி மாமி இருந்த வீடு.. இப்போது மதிமுக கொடிக் கம்பத்துடன் கட்சி அலுவலகமாக இருக்கிறது...
தெருவின் கடைசியில் உள்ள தோட்டம்... பச்சைப் பசேல் என விளையும் கீரை! நாலணாவும் எட்டணாவும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குக் காலையில் சென்றால்... ஒரு அம்மா பிறையாய் வளைந்த கீரையறுப்பு அரிவாளால் அழகாகக் கொத்துக் கொத்தாக கீரையை லாகவமாகப் பிடித்து அறுத்துக் கொடுப்பார்.. அதன் சுவை... இன்றுவரை கிட்டவில்லை! ஏற்றம் இறைக்கும் அழகைக் கண்டு ரசித்திருக்கிறேன். பம்புசெட் புகுந்திராத தோட்டம். கிணற்றுக்கு உள்ளே அது புகுவதும், காளைகள் இரண்டு இழுப்பதும், நீரை மொண்டு கொண்டு வெளியே ஊற்றி அது மீண்டும் நீர் தேடித் தாழ்வதும்... எல்லாம் இப்போதும் நெஞ்சில் இழையோடுகிறது...
பழைமை நினைவுகளினூடே அமைந்த இந்த முறைப் பயணம்... நினைவில் நின்ற ஒன்றுதான்!
(5 photos)

வெள்ளி, ஜூலை 25, 2014

நம் வழக்குரை காதை!


பீலா மன்னா புலம்புவது கேளேன்
நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்ப
புல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்ப
வாயிலோர் நற்சொல் வருதலும் விலக்க
பூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை....
(இது நம் - வழக்குரை காதை)

அக்ஞாத வாசம் அல்லது தலைமறை வாழ்க்கை!


















முகநூலில் என் (ஃபோட்டோ) படங்களைப் போடுவதில் நண்பர் சந்திரசேகரனுக்கு விருப்பம் இல்லை. வெளிப்படையாகவே கருத்துக் கூறியிருந்தார்....
என் புகைப்படத்துக்கு அவர் இட்ட கருத்துகள்...
***
Chandra Sekaran முகம் காட்டாதிருப்பதே நல்லது என்று கருதுகிறேன். ந்மக்கு நெருக்கமானவர்கள் நேரில் பார்க்கப் போகிறார்கள். இங்கே போடும் கருத்துகளுக்காக இணைப்பில் சேருபவர்களுக்கு நம்முடைய முகத்தைப் பற்றி என்ன வேண்டியிருக்கிறது?

Senkottai Sriram-> Chandra Sekaran-> இதை நான், எடிட் செய்யும் பத்திரிகையில் கொள்கையாக வைத்திருந்தேன். நான் எடிட் செய்யும் பத்திரிகையில் என் புகைப்படத்தை இதுவரை போட்டுக் கொண்டதில்லை. இது முக நூல் என்பதால் மூஞ்சி காட்டினேன்!

Chandra Sekaran சுய புகைப்படம் போடுவதை நிறுத்தறதுதான் எப்பவும் நல்லது. எல்லோருக்கும். பல சிக்கல்களை தவிர்க்கலாம். நம்மை பற்றி பிறர் ஒரு அனுமானமாகவே இருப்பார்கள்.

Senkottai Sriram Chandra Sekaran உங்கள் கருத்தை ஏற்கிறேன்... எப்போது வேண்டுமானும் பொதுவெளியில் திட்டித் தீர்ப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். போகட்டும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்... புகைப்படம் போடுவதை!
***
- இ
ப்படி அவருக்கு வாக்குறுதி கொடுத்தாலும், அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எல்லாம்.. அல்ப ஆசைதான் காரணம்! நம் தனிப்பட்ட முகநூல் பக்கம், தனிப்பட்ட வலைப்பூ எனக் கருதும் மன எண்ணம்தான் காரணம்!
***
- இன்னொரு நண்பர் சக்ரவர்த்தி பாலசுந்தரம் --- ஒரு முறை அவரின் கவிதையை ரசித்து விரும்பியிருந்தேன். அதற்கு அவர் அளித்த பதில்.
***
Chakravarthy Balasundaram பொதுவாக, கவிதை எழுதுபவர்கள், அத்தனை எளிதில் பிறரது கவிதைக்கு விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள். நீங்கள் எனது டைம்லைனுக்கு சென்று, லைக் தந்துள்ளது, உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. செங்கோட்டை ஸ்ரீராம், வாழ்த்துக்கள் நன்றி.

Chakravarthy Balasundaram முதலில் நான் ஒரு பத்திரிகையாளன்... இலக்கிய ரசிகன். குறிப்பாக இலக்கியத் தரமான பத்திரிகைகளில் அதிகம் பணி செய்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, இதழாசிரியராக, பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறேன்...
என் முதல் பணியே... ரசிப்பது. சரிசெய்வது, வெளியிடுவது, படைப்பாளனை வெளிக் கொணர்வது. என்னால் அடையாளம் காட்டப்பட்ட, முன்னிலைப் படுத்தப் பட்ட திறமையாளர்கள் அதிகம். என்னை அறிந்தவர்கள் அதனை உணர்வார்கள்.
நண்பரே...
பத்திரிகை ஆசிரியன் முதலில் தன்னை விட, தன் எழுத்தை விட, பிறர் எழுத்தை ரசித்து உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கொள்கையில் இப்போதும் மாறாமல் இருக்கிறேன்...
நான் கர்வத்துடன் சொல்லிக் கொள்வதுண்டு...
மிகச் சிறு வயதில், அதாவது 26 வயதில் எனக்கு மஞ்சரி இதழின் பொறுப்பாசிரியர் பணியை மிகவும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் அளித்தார் கலைமகள் இதழின் பதிப்பாளர் எம்.எல்.ஜே, பிரஸ் அதிபர் திருவாளர் நாராயணஸ்வாமி ஐயர்.
அவர் நம்பிக்கையை காப்பாற்றியது மட்டுமல்ல... எனக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன்...
நான் ஆசிரியராக இருந்து பணிபுரியும் இதழில் என் புகைப்படத்தை பிரசுரித்துக் கொள்ளக் கூடாது என்று! அதை இன்றளவும் 99% காப்பாற்றி வருகிறேன்.
மஞ்சரி இதழில் கடைசிப் பக்கத்தில் உங்களோடு ஒரு வார்த்தை என்று ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் என் பெயரை முழுமையாக... செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம் என்று போட்டுக் கொண்டேன்.
மற்ற இடங்களில் மொழிபெயர்ப்போ, கட்டுரையோ எழுத நேர்ந்தால்... புனை பெயர் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தேன்.
இன்றளவும் அந்த சபதத்தைக் காத்து வருகிறேன்.
தினமணி ஒலிச்செய்திகள் என் குரலில் வெளியானாலும், இதுநாள் வரை வாசிப்பவர் என்று என் பெயரை சொல்லிக் கொண்டதில்லை...
என் புகைப்படங்களை என் தனிப்பட்ட ஃபேஸ்புக், என் வலைப்பூ தவிர தினமணியின் எந்தப் பக்கத்திலும் நீங்கள் காண முடியாது.
காப்பது - விரதம் ! என்பதை எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடிகிறது பார்க்கலாம்...
எதற்கு இவ்வளவு சொல்ல வந்தேனென்றால்... உங்கள் கவிதையை வெறுமனே லைக் செய்ததற்காக மகிழ்கிறீர்கள்...
பத்திரிகைகளில் பணியாற்றும் நம் பணியே... படைப்பாளிகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதுதானே...
இந்த முகநூலிலும் கூட... எத்தனை பேரை இனம் கண்டு என் அதிகார எல்லைக்கு உட்பட்ட தளங்களில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறேன்... அது அவரவர்க்குத் தெரியும்.
***
ஆக, என் அல்ப ஆசைக்கு ஆட்பட்டு, 7 வருடங்களுக்கு முன்னர் 'க்ளிக் ரவி' எடுத்த இந்தப் படங்களை பொதுவெளியில் விடுகிறேன். இதுவரை எதிலும் வெளியாகாமல் என் கணினியின் சேமிப்பு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவை இவை. இன்றாவது விமோசனம் கிடைக்கிறதே! இந்தப் படங்கள், மஞ்சரி ஆசிரியராக பணிசெய்தபோது எடுக்கப்பட்டவை. கலைமகள், மஞ்சரி ஆண்டுவிழா நிகழ்ச்சி நவிமும்பை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை. நான், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், இரு இதழ்களின் பதிப்பாளர் திருவாளர் நாராயணஸ்வாமி ஐயர்.. இந்தப் படங்களில்..!
இதழாசிரியனாக என்னை அமர்த்தி வைத்து அழகு பார்த்த நாராயணஸ்வாமி ஐயர், இந்த நிகழ்விலும் நாற்காலியில் அமரவைத்து மரியாதை செய்து அழகு பார்த்தார். அந்தப் படத்தில் அவரின் புன்னகையும், முகமலர்ச்சியும் அதைக் காட்டும். பத்திரிகை ஆசிரியனுக்கும் பதிப்பாளருக்கும் இடையே ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் அதைக் காப்பாற்றுதலும் முக்கியம். உண்மையும் நேர்மையும் அதில் சேரும்.
***
என்னுடையவை எல்லாமே பழைமைதான். சிறுவயது சாதனைகள்தான்! கடந்த நாலைந்து வருடங்களாக குறிப்பிடும்படியாக அப்படி எந்த (நிகழ்வுகளோ) சாதனைகளோ, ஆக்கங்களோ நான் செய்துவிடவில்லை. இது என் அக்ஞாதவாசம்!


திங்கள், ஜூலை 21, 2014

எனைவிட்டு விலகாத என் காதலியே!

முகத்திரை விலக்கி
உன் மேனியின்
துகில் கலைக்கிறேன்.
நீ
துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.

உன் மெல்லிய மேனியில்
என் கை விரல்கள் கோலம் போட...
என் ரகசியங்களை
எனக்கே தெரிய வைத்தாயோ?

என் பார்வை எப்போதும் உன் மீதடி...
உன் வசீகரிக்கும் ஒளியால்
என் கண்ணொளி காணாமல் போகுதடி
என் கண்மணியே....

என் மனம் எப்போதும்
உன் குரலுக்காக ஏங்கிக் கிடக்குது பார்...
மௌனத்தின் வலியை நீ அறியாயோ?
பார்...
வதைகின்றாய் என்னை..!

மின்சாரத் தழுவல் ...
சூடேற்றும் சேமிப்புக்கலன்...
நினைவலைகள் உன்னாலே
நெஞ்சத்தில் மோதுதடி..

விரல்கள் பரபரத்து
உன் மேனியில் உரசிப் பார்க்க...
விளங்காத உலகத்தை
விளக்குகிறாய்...

எனை விட்டு
என்றும் விலகாத
அடி என் ஸ்மார்ட்ஃபோன் பெண்ணே!

வெள்ளி, ஜூலை 18, 2014

கபிலவாணர் விருதும் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகமும்!


 

ஏ.என்.சிவராமன் - தினமணியின் ஆசிரியராக நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு மத்திய அரசின் மதிப்பு மிக்க விருதான பத்மஸ்ரீ விருது கொடுக்க அவரிடம் அணுகினார்கள். ஏ.என்.எஸ்., மறுத்துவிட்டார். தான் ஏன் இந்த விருதைப் பெற மறுத்தேன் என்பது குறித்து தினமணிக் கதிரில் ஒரு கட்டுரையாக எழுதினார். 

பார்க்க... 

http://www.dinamani.com/impressions/article1331359.ece

(1968ம் ஆண்டில், தனக்கு மத்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் அளிப்பதாக இருந்த பத்மஸ்ரீ/பத்மபூஷன் விருதை தான் ஏன் ஏற்கவில்லை என்பதற்கு அன்றைய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அளித்த பதில்.

1968ம் வருட தினமணிக் கதிரில் இது குறித்து அவர் எழுதிய விளக்கம் இது...) 

ஏ.என்.எஸ்ஸுக்கு பட்டங்கள், விருதுகள் பேரில் விருப்பம் துளியும் இருந்ததில்லை என்று என் நண்பரும் வழிகாட்டியுமான கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அடிக்கடி சொல்வார். அப்படி விருதுகள் பேரில் துளியும் விருப்பம் இல்லாமல் தவிர்த்து வந்த ஏ.என்.எஸ்., ஒரே ஒரு விருது தன்னைத் தேடி வந்தபோது, சரி என்று ஒப்புக் கொண்டாராம். அது, திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கடந்த 38 ஆண்டுகளாக நடந்து வரும் கபிலர் விழாவில், வழங்கப்படும் கபிலவாணர் விருது. 

இந்தக் கழகத்தின் தலைவர் டி.எஸ்.தியாகராஜன் வருடந்தோறும் விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார். அவருடைய இந்தப் பணிக்காகவே ஏ.என்.எஸ்., விருதைப் பெற ஒப்புக் கொண்டதாகக் கருத இடமுண்டு. 

பின்னர் இந்த விருதைப் பெற்ற அடுத்த தினமணி ஆசிரியர்- ஐராவதம் மகாதேவன். 

தற்போது, ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை தினமணி ஆசிரியருக்கு இந்த அமைப்பின் கபிலவாணர் விருது வழங்கப் படுகிறது. பொற்கிழியாக ரூ.1 லட்சமும் வழங்கப் படுகிறது.

நமது. வாழ்த்துகள் ! ! 

==================

இந்த நிகழ்ச்சி குறித்து தினமணியில் வந்த செய்தியில் இருந்து...

--------------------------------

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா, ஜூலை 18-ஆம் தேதி இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி நடைபெறும் விழாவில், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கபிலவாணர் விருதும், ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

கபிலர் விழா தொடக்க நாள் நிகழ்வுகளாக, 18-ஆம் தேதி காலை கபிலர் குன்று வழிபாடு, மங்கல இசை, ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் ஆசியுரை, இலக்கியச் சோலை, இசை மாலை, திருமுறை இன்னிசை, பட்டிமன்றச் சோலை ஆகியவை நடைபெறுகின்றன.

வரும் 19-ஆம் தேதி காலை இலக்கிய விழா, மாலை அறிஞர் உலா, இரவு பரிசு நிலா நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராம.சுப்பிரமணியன் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

விழாவில், "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும், "கபிலவாணர்' விருதும் வழங்கி, மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் பாராட்டிப் பேசுகிறார். புது தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் பொதுச் செயலர் எம்.என்.எஸ்.மணியனுக்குத் "தமிழ் ஞாயிறு' என்கிற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது.

தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசை விழா நடைபெறுகிறது. வரும் 20-ஆம் தேதி காலை மங்கல இசை, தெய்வத் திருப்பாடல்கள் அரங்கு, இசை அரங்கு, நாகசுர இசை அரங்கு, திருமுறை இசை அரங்கு, நாட்டிய அரங்கு நடைபெறுகிறது.


வியாழன், ஜூலை 17, 2014

கொள்ளல் - கொல்லல்

கொள்ளலும் கொடுத்தலும்
எள்ளலும் ஏந்தலும்
அன்புடையோர் இலக்கணம்!

"என்னைக் கொள்" என் அன்பே...!

பல முறை பகன்றாலும்
பலன் மட்டும் இல்லவே இல்லை!

உதடுகள் ஒட்டாத தன்மை
உயிரோட்டம் இல்லாத வெறுமை!
நாவுக்கும் உதட்டுக்குமே
ஒட்டுறவு இல்லையே!

என்னால் மனத்தில்
நிறுத்த முடியாது - என்னை!

என்னாள் மனத்தில்
புகுத்த முடியாது - தமிழை!

என்னாழ் மனத்தில்
விலக்க முடியாது - அவளை!

ல-வுக்கும் ள-வுக்கும்
வேறுபாடி காட்டின்
லவ்வுக்கும் ளவ்வுக்கும்
போகும் எண்ணம்!

அட...
'என்னைக் கொள்' என் அன்பே!

நாள்கள் நகர்ந்தாலும்
நால்கல் மாறவில்லை!

ல் என்றே இயம்பி
என்னை இல்லாமல் ஆக்குகிறாள்...

கொன்று தின்னும் சாகசமோ?
லை....

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின்
அழகும் மணமும்
அறியவும் உளவோ ..?
சூடிய பூவே அறிந்திலேன் ...
வாடிய பூவே இயம்புவாய் ...!



 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix