சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஜூன் 05, 2014

செல்ஃபோன் நெம்பர் தொலைந்த கதை!

விகடன் பிரசுரத்தின் பொறுப்பில் இருந்தபோது ஒரு நாள்...
கல்கியில் தொடர் ஒன்றை எழுதி வந்தார் கல்கி ராஜேந்திரன் சார். அப்போது கல்கி தனியாக பதிப்பகம் வைத்து புத்தக வெளியீட்டில் இறங்கியிருக்கவில்லை. எனவே அந்தத் தொடரை விகடன் பிரசுரத்தில் நூலாக்கி வெளியிடச் செய்யலாமே என்ற எண்ணத்தில் கல்கி ராஜேந்திரன் சாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். மிக மிக மென்மையானவர், நுணுக்கமான விஷயங்களையும் பொறுமையாக அணுகுபவர் அவர். என் மஞ்சரி இதழ் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, மெதுவாக அவரிடம் புத்தகம் பற்றி பேச்சுக் கொடுத்தேன். அப்போதுதான் அவர் "கல்கியிலேயே பிரசுரம் தொடங்கலாம் என்று யோசிக்கிறோம். நீங்கள் என்னிடம் கேட்டதற்கு நன்றி. அப்படி அந்த யோசனை எதுவும் சரிவரவில்லையானால், உங்களிடம் தொடர்பு கொள்கிறேன்... உங்கள் செல்ஃபோன் நம்பர் தாருங்கள்" என்றார்.
9444809108 - என செல்ஃபோன் எண்ணை அவரிடம் சொல்லிவிட்டு, வழக்கமாக என்னிடம் இருக்கும் துடுக்குத் தனத்துடன் சற்றே நீட்டி முழக்கினேன்.
சார்... இந்த நம்பரை நீங்க நினைவில் கொள்ள, நான் எல்லாரிடமும் சொல்வது போல் சொல்லட்டா...? - கேட்டேன்.
ம்.. சொல்லேன்! - என்றார்.
9444 - கோட்; நீங்க சதாபிஷேகம் காண (80) நான் நவக்கிரஹத்துக்கு (9) ஒரு அஷ்டோத்ரம் (108) பண்ணிக்கறேன்... - என்றேன்.
எப்படி எப்படி..? இன்னொரு தடவை சொல் - கேட்டார்.
எண்ணைச் சொல்லி மீண்டும் சொன்னேன்.
சற்றுப் பொரு. நல்லாயிருக்கே.. நீ சொல்றது. பேப்பர்ல அப்படியே குறிச்சு வெச்சுக்கறேன்... - என்றார்.
அவர் பேனா எடுத்து ஒரு துண்டுப் பேப்பரில் எழுதிக் கொள்வது என் மனக்கண்ணில் தெரிந்தது.
என் வயதை விட சுமார் அரை நூற்றாண்டு மூத்தவரான ராஜேந்திரன் சாருக்கு அநேகமாக அப்போதுதான் 80 வயது கடந்திருந்தது என்று நினைக்கிறேன். அதை அவரும் சிரித்துக் கொண்டே குறிப்பிட்டார். எனக்கு சதாபிஷேகம் கடந்தாச்சு... இருந்தாலும் ஒரு ஆசீர்வாதம் மாதிரி இருக்கு உன்னோட வார்த்தைகள். அதுக்காக நன்றி என்று சொல்லி வைத்துவிட்டார்.
2 வருடங்களுக்கு முன்னர் ராஜேந்திரன் சாரை அவர் வீட்டில் சந்தித்து, தினமணி சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தேன். அப்போது மேற்சொன்ன சம்பவத்தை நினைவு கூர்ந்தேன். சிறிது நேரம் யோசித்து பின்னர் நினைவுக்குக் கொண்டு வந்தார்.

இந்தச் சம்பவத்தை இங்கே குறிப்பிடக் காரணம்... சென்ற மாதம் இந்த பிஎஸ்என்எல் செல்பேசி எண்ணை, நான் கோவை - சென்னை ரயிலில் பயணித்தபோது, மர்ம நபர் ஒருவர் ஆசைப்பட்டு எடுத்துச் சென்றுவிட்டார். இந்த எண்ணை என் சொந்த முயற்சியில் என் பெயரில் வாங்காமல், நண்பர் ஒருவர் 10 வருடங்களுக்கு முன்னர் வாங்கித் தந்ததால்... இதே எண்ணை மீண்டும் பெற நான் முயற்சி மேற்கொள்ளவில்லை. மேற்கண்ட 9444809108 எண்ணில் என்னை கடந்த ஒரு மாதமாகத் தொடர்பு கொண்டு, தொடர்பு கிடைக்காமல் என்னைத் திட்டித் தீர்த்த நண்பர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக இதனை இங்கே சொல்ல வேண்டியதாயிற்று!

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix