கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்
- என்றொரு வெண்பாவை படித்த நினைவு. சான்றோரின் சினம் எத்தகையது என்பதை ஔவை இந்தப் பாட்டில் சொல்லியிருப்பதாக பாடம் படித்த நினைவு.
கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் அதே பழைய நிலையில் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர்களின் சினமும் அதனால் விளையும் பிளவும்.
ஆனால், பொன்னை வெட்டியோ உருக்கியோ பிளந்தால் எப்படி மீண்டும் அது நல்லதொரு ஆபரணமாக அணிகலனாக அல்லது பொன் கட்டியாகவோ உருமாறுமோ அதுபோன்றது சான்றோரின் சினம். அந்த சினமும் கூட, தண்ணீரில் வேகமாக விர் என்று எய்யப் படும் அம்பானது தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பாயும். அப்போது இரண்டாகப் பிரியும் தண்ணீர், அம்பு போனபின்னே மீண்டும் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.
- என்ன அருமையான உவமை!
உவமைகள் மட்டும் இல்லாதிருந்தால், நம் வாழ்வில் சுவையேயிராது. கானல் நீராகக் கரைந்து போகும் கண நேர வாழ்க்கையில், வாழ்வீன் முழுமையை ரசித்து அனுபவிக்க உவமைகள் எப்படிக் கைகொடுக்கின்றன.
பார்க்கும் ஒரு பொருளை சொல்ல வரும் பொருளோடு பொருத்திப் புரிய வைக்க முயலுதல் உவமையின் பலன்!
அதுபோன்றதே, சிறு கதைகள் உதாரணக் கதைகள் வழியே விளக்குதல்....
சான்றோர் சினத்தைச் சொல்ல வந்துவிட்டு, சான்றோர் சினத்தின் இயல்பைக் கூறிவிட்டு, சான்றோர் குணத்தைக் கூறாது விட்டால்...? முழுமை பெறாதல்லவா?!!
ஸ்ரீராமகிருஷ்ணர் முதற்கொண்டு பலரும் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு கதை...
துறவி ஒருவர்... ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேலிருந்து நீரில் தேள் ஒன்று தவறி விழுந்தது.
குளித்துக் கொண்டிருந்த துறவி, நீரில் விழுந்த தேளை கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார். சாகக் கிடக்கும் தன்னைக் கைதூக்கிக் காப்பாற்றுகிறார் இந்தத் துறவி என்ற ஞானம் அந்தத் தேளுக்கு இல்லை. வழக்கம்போல் தன் இயல்பான குணத்தைக் காட்டி, துறவியின் கையில் நறுக்கென்று கொட்டியது தேள்.
வலியால் துடித்த துறவி, தவறிப்போய் தேளை நீரில் தவறவிட்டார். இருப்பினும் தன் இயல்பு குணமான கருணையைக் கைக் கொண்டு, மீண்டும் கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார்... தேளோ மறுபடியும் கொட்டியது.
மீண்டும் அதே கதை. இதனைக் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், துறவியிடம் கேட்டார்...
துறவியாரே... தேள்தான் வலி ஏற்படுத்தும் விதமாய்க் கொட்டுகிறதே… நீங்கள் ஏன் அதைத் திரும்பத் திரும்ப கையில் எடுத்து கொட்டுப் படுகிறீர்கள்.
அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்றார்!
அதற்கு துறவி கூறினார்...
“கொட்டுவது தேளின் குணம்; துடிக்கும் உயிரைக் காப்பது மனிதனின் குணம். அதன் இயல்பை அது விடாத போது என் இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்?”. என்றார்.
இங்கே துறவி கூறியதே, ஸ்வதர்மம் என்ற பொருளில் முன்னோர் உரைத்தனர்.
இது நம் ஸ்வதர்மம் என்று நாம் கைக்கொண்ட பின், நம் இயல்பை விட்டு நாம் மீறலாமோ?!
(இதே விளக்கமாக ஸ்ரீவைஷ்ணவம் காட்டும் கதை ஒன்றும் கூரத்தாழ்வான் - கிருமிகண்ட சோழன் விஷயத்தில் உண்டு.)
என் வாழ்நாளில்... இந்தக் கதையில் கொட்டிய தேளைப் போல் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்... பதிலுக்குக் கொட்டாமல் தூக்கிக் கரையேற்ற முற்பட்டதால், தேள்களெல்லாம் காப்பாற்றுபவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பை வெளிப்படுத்துகின்றன. பதிலுக்குக் கொட்டியிருந்தால், முதிர்ச்சி அடைந்த மனிதன் என்றும், ராஜ தந்திரி என்றும் சாணக்கியன் என்றும் பட்டம் கிடைத்திருக்கும். நம் ஸ்வதர்மம் காத்த பலன் சின்னப் பையன் என்றும், அப்பாவி என்றும்தான் பட்டம் கொடுக்கிறது இந்த உலகம்!
கருத்துரையிடுக