சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்


விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்

First Published : 14 Aug 2011 03:03:11 AM IST

மிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக் களம் கண்டார். உலக இலக்கியத்துக்கு இணையாக உயர்ந்த தரத்தில் நவீனத் தமிழ் இலக்கியமும் திகழ வேண்டும் என்ற விருப்பத்தால், இப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.
 க.நா.சு. என்ற மூன்றெழுத்தால் இலக்கிய உலகில் செல்லமாக அழைக்கப்பட்டவர் க.நா.சுப்ரமணியம். கந்தாடை நாராயணசாமி ஐயரின் புதல்வராக சுவாமிமலையில், 1912-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்தார்.
40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.
 ÷சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு தொடர்ந்தது. அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணம், அவருக்கு இலக்கிய அறிவையும் கூடவே ஆங்கிலப் புலமையையும் தந்தது.
படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த "காந்தி' இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.
 ÷தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்தவர், தன் எழுத்துகளுடன் கால் பதித்தது "தினமணி' அலுவலகத்தில். அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார்.
வ.ரா. கேட்டார்... ""நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா... கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?'' வெடுக்கென்று கேட்டார். சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். ""கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர்... கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும்'' என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.
ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்கள் தமிழில் மொழிபெயர்ப்பது, 10 பக்கங்கள் ஆங்கிலத்தில் புதிதாகப் படைப்பது, இத்துடன் மதிப்புரை, விமர்சனங்கள் எழுதுவது என்பதை எழுத்துப் பணிக்கான திட்டமிடலாகக் கொண்டார். தழுவல் எனும் உத்தியோடு விகடன், சுதேசமித்திரன், இமயம், சக்தி, ஜோதி உள்ளிட்ட இதழ்களில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் தந்தார்.
 "சூறாவளி' எனும் இலக்கிய இதழைத் துவக்கினார். ராமபாணம், சந்திரோதயம், இலக்கிய வட்டம், ஞானரதம், முன்றில்... இவை எல்லாம் க.நா.சு.வால் தொடங்கப்பட்ட இதழ்கள்தான். இவற்றால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம், தமிழுலகுக்கு மாபெரும் மொழிபெயர்ப்பு இலக்கிய நஷ்டத்தைத் தந்துவிட்டது.
 ÷தயவு தாட்சண்யமற்ற கண்டிப்பான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர் க.நா.சு. "தினமணி'யில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அதிகம் எழுதியவர். அசுரகணம், பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களையும் எழுதியுள்ளார். 1979-இல் குமாரன்ஆசான் நினைவு விருது, 1986-இல் சாகித்ய அகாதெமி விருது என விருதுகளும் பெற்றவர். பொய்த்தேவு - இவரது பிரபலமான நாவல்களுள் ஒன்று.
 ÷அந்நாவலில் இவரது எழுத்து நடை கதை நடையாக இல்லாமல் பல இடங்களில் கட்டுரை நடையாகவே இருக்கிறது என்பது அந்தக் கால விமர்சகர்களின் கணிப்பு.
 ÷க.நா.சு. மேற்கத்திய எண்ணம் கொண்டவர்; தமிழ்நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணி அதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், மொழிபெயர்க்கப் படைப்புகளைத் தேர்வு செய்யும்போது அதை உணர்வுப்பூர்வமாகவே செய்தார் என்பது புரியும். ÷தமிழர்களை, தமிழ்க் கலாசாரத்தை மனதில் கொண்டே, அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதையும் உடனிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 ஆனால், க.நா.சு.வே விமர்சனக் கலைக்கு உரமிட்டவர். அவருடைய விமர்சனங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. அந்த வகையில், க.நா.சு.வுக்கு எழுத்துத் துறைக்கு அப்பால் நண்பர்கள் அதிகம் இருந்ததில்லை. சம காலத்து எழுத்தாளர்கள் பற்றி, படைப்புகள் பற்றி நிறைய விமர்சனங்கள் செய்துள்ளார் க.நா.சு. ஆனால், பாரதி பற்றி அவரிடம் ஒரு மெüனமே இருந்திருக்கிறது. பாரதியைக் குறைசொல்லி எழுதியதுமில்லை; பாராட்டியும் சொன்னதில்லை.
 தன் விமர்சனங்கள் பற்றி அவர் ஓரிடத்தில் சொன்னது...
 ÷""நீங்கள் அழிக்கும் விமர்சனம் ஏன் எழுதுகிறீர்கள்; ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமர்சனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால், ஆக்க விமர்சனம் இல்லாமல் அழித்தல் விமர்சனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே என்றுதான் பதில் தரவேண்டும். மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக் கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும், டாண்டேயும், ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம்; ஆனால், இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு; அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்...'' என்கிறார் க.நா.சு.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix