சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஆகஸ்ட் 13, 2011

தேசம் விற்பனைக்கல்ல!



தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை
சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை
பாசிசம் பகன்றவனோ பல வகை
நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை
பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா?

தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?
அடிமைத்தனம் அறுத்து அவதி நீக்க அல்ல!
அடிமை மோகத்தால் அவதி பெருக்க!

நம் தேசத்தின் இசம் எது?
இந்துயிசமா? புத்திசமா?
கிறிஸ்துவ இஸ்லாமிசமா?
இல்லவே இல்லை!

இந்த இசங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி
நம்பர் ஒன் இடம்பிடித்த இசம் ஒன்றுண்டு!

அந்த இசம்...
கூட்டுக் குடும்பத்தைக் கொலை செய்தது!
கூட இருந்தவனைக் குழிபறிக்கச் செய்தது...
பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை
துறக்கச் சொன்ன இசத்தையும் இம்சித்தது...

பாசத்தைப் படுகுழியில் தள்ளி,
சுயநலப் பித்தை வளர்த்தெடுத்தது!
நண்பர்களோ, உறவினர்களோ...

ஏன் ஏன்...
அண்ணன் தம்பி அம்மா அப்பா என்றாலும்,
ஓர் அறைக்குள் ஒட்டிக் கொண்டிருந்தாலும்,
இருவேறு ஆசைகளை வளர்த்தெடுத்தது!

வாழ்க்கை நெறிமுறை தொலைக்க வைத்து
வாழுதற்காய் முறைதவறும் மனம் வளர்த்தது!
நட்பு தொலைத்தது; நல் உளம் சிதைத்தது...

உதவும் எண்ணத்தை உருத்தெரியாமல் ஆக்கியது!
உடன் வந்தான் உதவி செய்வோம் உருப்படுவான் என்று பார்த்தால்,
கடன் வாங்கிக் கம்பி நீட்டிக் கழுத்தறுக்கச் செய்தது!
ஊழல், லஞ்சம், ஏமாற்றல், நயவஞ்சகம்...
எல்லாம் இந்த இசத்தால்தான்!

தேசத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம்
இந்த இசத்தின் வீச்சும் ஆளுமையுமே காரணமாம்!

தேசத்தை விலை பேச வைக்குது!
வாயில் சுதேசியம் பேசி, கையில் தேசியம் பிடித்து,
வாயில் கதவோ வெளிநாட்டுப் பொருளுக்கு திறக்க வைக்குது!

பெரும்பான்மை மதம் போலே
நமக்குள் நுழைந்திட்ட இந்த இசம்...
எந்த இசம்..?

எல்லாம் இந்த
கன்ஸ்யூமரிசம்தான்!

கன்ஸ்யூமரிசம்தான்!

இந்த இசத்தின் வழி நடப்போர்க்கு
நுகர்வோர் என்பது பெயர்...

நாமும் நுகரத் தலைப்பட்டோம்
வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட
நுகர்வோராய்!

இப்போது சொல்லுங்கள்...
நம் தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix