சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், ஜனவரி 05, 2015

பேராசிரியர் இல.ஜானகிராமன் நினைவலைகள்:: கம்பன் என்ற கணக்குச் சக்கரவர்த்தி


இலக்கியச்சாரல் அமைப்பில் இருந்து ரசிகமணி டிகேசி நினைவு விழா நடத்துவதாகவும், அதற்கு, செங்கோட்டையில் இருந்து ஜனார்த்தனன் சாரை அழைத்து வர முடியுமா என்றும் கேட்டார் அந்த அமைப்பின் நிறுவனர் கவிமாமணி இளையவன்.
அவர் வேண்டுகோளின்படி, செங்கோட்டை ஜனார்த்தனன் சாரை அழைத்து வந்து, என் வீட்டில் தங்கவைத்து, நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று, அவரை பத்திரமாக அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்ச்சியில், ஆழ்வார்குறிச்சி பேராசிரியர் இல.ஜானகிராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்தது 17/9/2004 என்று இந்தக் கரும்பலகையில் எழுதியுள்ள தேதியில் இருந்து தெரிகிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்ச்சியில் இருவரும் ரசிகமணி டி.கே.சி குறித்து பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் பேசிக் கொண்டிருப்பவர் இல.ஜா. அருகே அமர்ந்திருப்பவர் ஜனார்த்தனன் சார்.
என் புகைப்படத் தொகுப்பில் பொக்கிஷமாக வைத்திருந்த படம். அப்போதைய எனது கேனான் ஃபிலிம் ரோல் கேமராவில் இதை க்ளிக்கியிருந்தேன்.


***
நான்... ஒரு கணித மாணவன். பள்ளி முதல் கல்லூரிக் காலம் வரை கணிதம் என்னை ஆட்கொண்டிருந்தது. என் கணித ஆர்வத்தால் நான் ஆசிரியராகப் பணிபுரிந்த மஞ்சரி இதழில் கணிதப் பாடங்கள் தொடர்பான சுவாரஸ்யமான நுணுக்கங்களை அதிகம் வெளியிட்டேன்.
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி பள்ளியில் ஒரு வருடம் படித்தேன். அப்போது அறிமுகமானவர்கள், பரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியர்கள் லக்ஷ்மிநாராயணன்(தமிழ்), இல.ஜானகிராமன்(கணிதம்) ஆகியோர்.
லக்ஷ்மிநாராயணன் சார் தென்காசியில் இருந்தார். இல.ஜா. ஆழ்வை அக்ரஹாரத்தில் இருந்தார்.
பின்னாளில் ஒரு முறை கீழாம்பூர் சாரைப் பார்க்க கலைமகள் அலுவலகத்துக்கு இல.ஜா., வந்திருந்தபோது, பழைய நினைவுகளைக்கூறி, என்னிடம் அவர் கணிதத்தில் சில புதிர்களைச் சொல்லி மகிழ்ந்தார். அவர் பாணியில் கேட்ட விளக்கத்தால், அவரிடம் நான் அதை எழுதித் தரச் சொல்லிக் கேட்டு, மஞ்சரியில் வெளியிட்டேன். கணிதம் குறித்து சில கட்டுரைகள் எழுதினார். ஆர்வத்துடன் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தாமே அனுப்பி வைப்பார். கான்சக்ரேஷன் என்ற ஆங்கில இதழில் இருந்து, ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த கட்டுரைகளை மொழிபெயர்த்து அனுப்புவார். ஒரு முறை "கணக்கன் கம்பன்" என ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், கம்பன், படைகளின் கணக்கை எப்படி கணிதப் புதிராகக் காட்டியிருப்பார் என்று விளக்கியிருந்தார். என் சகோதரியை, "என்ன ஸ்ரீ ஸ்கொயர்... என் ஜாதி எப்படி இருக்கா?" என்று விசாரிப்பார். என் சகோதரி ஆசிரியப் பணியில் இருந்தவள். அதனால் அப்படி! நான் ஸ்ரீ.ஸ்ரீராம் என்று எழுதுவேன். அதனால் ஸ்ரீ ஸ்கொயர் என்று என்னை அழைப்பார்.
9 வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை நானும் கீழாம்பூர் சாரும் பம்மலில் அவர் வீட்டுக்குச் சென்றோம். உடல் நலமின்றி இருந்தபோதும், சிரத்தை எடுத்து உபசரித்தார். அவர் மகன் லட்சுமணன் பம்மலில் சங்கரா கண் மருத்துவமனை நடத்துகிறார். எங்கள் இருவரையும் ஆசையுடன் ஃபோட்டோ க்ளிக் செய்து, பத்திரமாக வைத்துக் கொண்டார்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சாருக்கு இல.ஜா., மீது மிகுந்த மதிப்பு உண்டு. இரு வருடங்களுக்கு முன்னர் தினமணி ஆசிரியருடன் ஆழ்வார்குறிச்சி சென்றிருந்தபோது, அக்ரஹாரத்தில் அவர் வீட்டு மாடியைக் காட்டி, சிறு குழந்தையைப் போல்... நான் இங்குதான் தங்கியிருந்தேன்.. இதுதான் ஜானகிராமன் சார் வீடு என்றெல்லாம் பரபரவென அந்தத் தெருவில் அங்குமிங்கும் ஓடி மகிழ்ந்தார். எங்களுக்குள் பழைய நினைவுகள் ஏதேனும் குறித்து பேச்சு எழுமானால்... அது இல.ஜா., குறித்த பேச்சுடனே துவங்கும்.
முன்னர் இருந்த நாங்குனேரி ஜீயருக்கும் இல.ஜா.,வுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. ஜீயரையோ, அல்லது இல.ஜா., வையோ சந்திக்கும்போது, இருவர் குறித்தும் மாறி மாறி விசாரித்துக் கொள்வேன்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் தினமணி ஆசிரியரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. இல.ஜா., மனைவி சரோஜா ஜானகிராமன் 75ஆவது வயதில் காலமான செய்தி. அன்புடன் இணைந்து வாழ்ந்த தம்பதியர். மனைவி மீதான பிரியத்தில் வீட்டுக்கு சரோஜம் என்றே பெயரிட்டிருந்தார் இல.,ஜா!
கீழாம்பூர் சார் போட்ட இந்த புகைப்படம் இத்தகைய நினைவுகளைக் கிளறிவிட்டது..! இந்த நினைவுகளை விட்டால் எனக்குத் துணை வேறில்லை


***
என் ஆசான்களில் ஒருவரான ஆழ்வார்குறிச்சி கணிதப் பேராசிரியர் இல.ஜானகிராமன் மஞ்சரியில் நான் ஆசிரியராக இருந்தபோது எழுதிக் கொடுத்த கட்டுரை. மஞ்சரியில் 2005ல் வெளியானது.
இதில், கம்பன் தன் கவிதையில் கணக்கை எப்படி கணக்காகக் கையாண்டிருக்கிறார் என்பதைக் காட்டியுள்ளார்.
***

கம்பன் கணக்கு சக்ரவர்த்தி
தமிழ் கவிஞர்களுக்கு கணக்கின் மேல் ஒரு மாளாத காதல்! கவிதைகள் மூலம் கணக்கைக் கற்பிக்கும் பாங்கு மிக நயமானது.
தமிழ்ப் புலவர்கள் "பதினாங்கு உலகங்கள்' என்று கூறமாட்டார்கள். ""ஈரேழு பதினான்கு உலகங்கள்'' என்று வாய்ப்பாட்டைச் சொல்லித்தான் கூறுவார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. பலப்பல உதாரணங்களைக் கூறலாம்.
"சாதாரண கவிஞர்களே இப்படி என்றால் கவிச்சக்கரவர்த்தி எப்படி என்று பார்ப்போமா?
வாலியும் மாயாவியும் கடும் சண்டை போடுகிறார்கள். சண்டை போட்டுக் கொண்டே மாயாவி ஒரு குகைக்குள் ஒளிந்து கொள்கிறான். வாலி தொடர்ந்து குகைக்குள் சென்று அரக்கன் மாயாவியை ஒழித்துக்கட்ட விரும்புகிறான். வாலி தனது தம்பி சுக்ரீவனை அழைத்து ""தம்பி! நீ குகை வாயிலில் காவல் இரு. மாயாவி தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள். நான் உள்ளே சென்று அக்கொடியவனைக் கொன்று வருகிறேன்'' என்று சொல்லி குகைக்குள் சென்றான். பல நாட்கள் ஆகியும் வாலியோ, அரக்கனோ வெளியே வரவில்லை. எத்தனை நாட்கள்? கம்பனிடம் கேட்போமா? ""ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ்'' மாதம் போரிட்டான் என்கிறார் கம்பன்.
ஏழொடு ஏழ் என்றால் 7+7=14
இருது என்றால் இரு மடங்கு
இருது ஏழொடு ஏழ் என்றால் 2 x 14=28
இருது என்பது, twice, square என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான அழகு தமிழ்ச் சொல். இருபத்து எட்டு மாதங்கள் என்று உப்புச் சப்பில்லாமல் கூறுவதற்கு மாறாக என்ன அருமையான கவிதைக் கணக்கு பாருங்கள்!
சுக்ரீவன், இராமனுக்கு வாலியை எதிர்கொள்ளும் அளவிற்கு வலிமை இருக்கிறதா என்று சோதிக்க விரும்புகிறான். மராமரத்தில் ஒன்றைத் துளைத்து உன் வலிமையைக் காட்டு என இராமனை வேண்டுகிறான். மராமரங்கள் எத்தனை? இதோ கம்பனின் கூற்று: ""ஐந்தினொடு இரண்டின் ஒன்று உருவ உன் அம்பு போகவே!'' ஏழு மராமரங்கள் என்பதை 5+2 என்கிறார் கம்பர்.
அனுமனை எதிர்த்துப் போரிட அக்ஷய குமாரன் பெரும்படையுடன் புறப்படுகிறான். அவனுடன் "நான்கு லக்ஷம்' வீரர்கள் செல்கின்றனர். ""நான்கு லக்ஷம் என்று கூறினால் கம்பன் எப்படி கணக்குச் சக்ரவர்த்தி ஆக முடியும்! எனவே ""ஈர் இரண்டு இலக்கம்'' வீரர்கள் என்கிறார்.
இன்னொரு இடத்தில் ஒரு பெரிய கணக்கையே போடுகிறார் கம்பர்.
ஜம்புமாலி அனுமனை எதிர்க்கச் செல்கிறான். அவனுடன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என பின் தொடர்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் எத்தனை எண்ணிக்கை சென்றன? கம்பனின் அருமையான கணக்குக் கவிதை இதோ.
""ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடந்தேர் அத்தேர்க்கு
ஏயின இரட்டியானை, யானையின் இரட்டிபாய் மா,
போயின, பதாதி சொன்ன புரவியின் இரட்டிபோலாம்
தீயவள், தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை''
ஐந்தாயிரத்தொடு ஒரு ஐந்தாயிரம் = 10000/ தேர்கள். அதில் இரட்டி = 20000 யானை. அதில் இருது = 40000 பாயும் குதிரைகள். அதில் இருமடங்கு = 80000 பதாதிகள் அதாவது காலாட் படைகள்!
எத்தனை அருமையான கணக்கு!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix