நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்!
காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில் மாட்டப் பட்டிருக்கும் அழகிய சித்திரம் கண்டால் போதும்..... அன்றைய மனநிலை மகிழ்ச்சிகரமாகத் துவங்கும்.
சில நேரம் மன அழுத்தத்தின் காரணத்தால் அதே அழகான படம்கூட சலிப்பைத் தரலாம்.
விருப்பு வெறுப்பற்ற மனநிலை கைவர வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வந்தேன். ஆனால்... பழக்கத்தால் சிலரிடம் விருப்பும் நடத்தையால் சிலரிடம் வெறுப்பும் தொற்றிக் கொண்டு விடுகிறது. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் மனத்தில் வெறுப்பைத் தோற்றுவித்த சில நபர்கள் பணியிடத்தில் இருந்தபோதும், வெறுப்பை விலக்கி விருப்பை விதைக்க முயன்றேன். முடியவில்லை. நினைக்கும் போதெல்லாம் மனது வெறுப்பையும் வெறுமையையும் தந்துவிடுகிறது. எனவே புறக்கணித்தல் அல்லது அம்மக்களை மறத்தல்- இதுவே வழி என செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும்.... உளவியலில் இன்னொரு புறம்..!
தினந்தோறும் பார்த்து ரசிக்கும் அதே காட்சி... அதே முகங்கள்... அதே அழகு! அதே புன்னகை! இருந்தாலும், காட்சியின் கோலமும் எழிலும் மனம் நன்றாக இருக்கும் நேரத்தில் எழிலாய்த் தோன்றும், மனநிலை மாய்ந்தால் வெறுப்பாய்க் கழியும். மாற்றம் பார்க்கப்படும் பொருளில் இல்லை என்றாலும், பார்க்கும் மனத்தில் இருந்துவிடுகிறது.
இப்படியெல்லாம் எத்தனை எத்தனை உளவியல் தத்துவங்களை படிப்பது, எழுதுவது, பேசுவது?!
இந்த உளவியல் கலையை எப்படி நம் முன்னோர் தமிழ்க் கவியாய்ப் படைத்துக் காட்டியுள்ளனர்.? தோழியும், தலைவன், தலைவியும், தாயும், தாதியும் இல்லாமல் சங்க இலக்கியமா? ஒவ்வொருவரின் கூற்றும் ஒவ்வொரு உளவியல் காட்சியைக் காட்டிச் செல்லுமே!
ஒரு பாடல்..... பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் படித்த நினைவு, ஆண்டு பல கழிந்தாலும் அகல மறுக்கிறது மனதை விட்டு!
தோழியின் கூற்றாக வருகிறது...
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே!
- என்று வாயில் வேண்டிப் புக்க தலைவனுக்கு தோழி கூறியதாக வருகிறது.
(அதாவது, தன்னுடன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம், ஊடலைத் தணித்து உடன்படச் செய்யுமாறு தூது செல்ல தலைவியின் தோழியிடம் தலைவன் துணை நாடுகிறான். அதற்கு, தோழியானவள், இந்தப் பாடலைக் கூறி, உன்னுடைய மனது அன்று எப்படி இருந்தது... அன்று என் தோழியை எப்படி எல்லாம் புகழ்ந்தீர்... இன்று எல்லாம் மாறிவிட்டதே! எப்படி உம்மை நாம் நம்புவது என்று தூது செல்ல மறுக்கிறாள்....)
ஒரு காலத்தில், கசப்போ கசப்பென்று படுகசப்பாக இருக்கும் வேம்பின் இளங்காயை என் தோழி உமக்குத் தந்தபோது, நீர் அதனை வாங்கி,.. அட... அட... என்ன ஓர் இனிப்பு!? வெல்லக் கட்டி போல் அல்லவா இருக்கிறது என்று புகழ்ந்து உண்டீர். அவள் அழகும் அணுக்கமும் உம்மை கிறக்கத்தில் ஆழ்த்தியிருந்தன. ஆனால் இன்று... பாரி வள்ளலின் பறம்பு மலையில் தை மாதக் குளிரில் அதனினும் குளிர்ந்த தண்மையுடன் சுனையில் வரும் சுவை நீரை வாங்கிப் பருகிய நீர், என்ன இது இவ்வளவு வெப்பமாக உவர்ப்புச் சுவையுடன் இருக்கிறது என்று கூசாமல் வெறுப்பை உமிழ்கிறீர். அன்று நீர் எம் தோழியைப் பாராட்டிய போது வசந்த காலத்தே மகிழ்வில் மிதந்தாள் தோழி.... இன்று வெறுப்பில் இயற்கை அழகை, இனிய சுவையை மறுத்து ஒதுக்குகையில், மனம் கசந்த காலமிதுவோ என எம் தோழி மருண்டு ஒதுங்குகிறாள்... என்னே உம் மன நிலை?! இனியும் உமக்காகத் தூது போவானென்? என்று விலகிச் செல்கிறாள் அவள்.
இந்தப் பாடல் காட்டும் தலைவனின் மனநிலையில் நான்..!
அருமையான பதிவு.
நன்றி.
கருத்துரையிடுக