சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

அம்மா... என்னை மன்னித்துவிடு!


எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... 
------------------------------------------
அன்புள்ள அம்மாவுக்கு.....
-----------------------------------------
அம்மா... என் அம்மா...!
கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!
கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்
அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!
இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!
நிறைவேற்றினேன்!
சங்கீதப் பயிற்சிக்கு உடன் வந்து நின்றீர்கள்!
சேர்ந்திசை பாடினோம்!
எத்தனை நாள் பசியோடு நான் பள்ளியில் இருந்து திரும்பியிருப்பேன்!
சந்தியா வந்தனம் இன்றி சாப்பாடு இல்லை என்றீர்கள்!
வெறுப்போடு துவங்கி வேறு வழியின்றிப் பழக்கினேன்!
ஒழுங்கு முறையாய்ப் புகுந்து உள்கலந்தது!
அம்மா... என் வாழ்க்கை என் விருப்பத்தால் அமைந்ததில்லை!
ஒவ்வொன்றும் உங்கள் விருப்பம்! உங்கள் கனவு!
நனவாக்கிக் காட்ட முயன்றதே என் லட்சியம்!
எத்தனை நாட்கள் அம்மா...
என் கவிதைக் கிறுக்கல்களை தலைமாட்டில் வைத்துத் தூங்கியிருக்கின்றேன்!
எழுந்து பார்க்கும்போது அதைச் சொல்லி சிலாகிப்பீர்கள்!
என் தாத்தா தமிழ்ப் புலவர்! புத்தனேரி புத்தி உனக்கும் வந்ததடா என்பீர்கள்!
உற்சாகம் தந்த உங்கள் பதிலால்...
பதின்ம வயதினிலே தேடித்தேடித் தமிழ் படித்தேன்!
அப்போதெல்லாம்...
தமிழ் சோறு போடுமாலே! ஒழுங்கா படிக்கிற வழியைப் பார்!
திட்டித் தீர்த்த அப்பா... எனக்கு வில்லனாய்த்தான் தோன்றினார்!
நெருப்புக் கோளமாய் வெறுப்புக் கோபம் சுமந்தேன்!
வேறு வழியின்றி...
கல்லூரிக் காலத்தே கணக்கு புகுந்தது!
பிணக்கின்றி தமிழும் ஆண்டது!
வேதம் கற்கச் சொன்னீர்கள்... கற்றேன்!
தர்மம் மீறாதிருக்க வேண்டும் என்பீர்கள்!
தருமச் சிந்தை நீங்கள் சொன்ன கதைகளால் என்னுள் புகுந்தன!
பிரபந்தம் பாடச் சொன்னீர்கள்... செய்தேன்!
சமையல் கற்றுத் தந்தீர்கள்! நுணுக்கம் கற்றேன்!
தையல் இயந்திரத்தின் சத்தத்தில் கவிச் சந்தம் தருவேன்!
ரசித்துக் கேட்பீர்கள்! உன் விளக்கமே அலாதி என்பீர்கள்!
யாரோ இதழ்களில் எழுதிய துணுக்குத் தோரணங்களையும் கட்டுரைகளையும்
பிழை மலிந்தும் பிழைத்திருக்கின்றனவே என்றீர்கள்!
நீ மட்டும் இதை எழுதினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...?
உங்கள் ஆசையை நிறைவேற்ற... எழுதத் தொடங்கினேன்!
படிப்பு வேறாயினும் பணி வேறாயினும்
அம்மா... இந்த எழுத்தின் சுவையால்...
பத்திரிகை எனை ஆட்கொண்டது! இதழியல் என்னுள் ஊற்றுக் கொண்டது!
எனை அறியாமல் என்னை ஆக்கிரமித்த இந்தத் துறைக்காக
மகிழ்வு கண்டவர் என்னவோ நீங்கள்தானே அம்மா!
வானொலிப் பேச்சா..? தொலைக்காட்சி நேரலையா...?
நீ பேசி நான் கேட்க வேண்டும் என்றீர்கள்!
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தன!
இதழியலின் எல்லா எல்லைகளிலும் கால்பதிக்க...
என் னம்மா... எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம்தானே!
ஆனால் இப்போது..!
என்னம்மா ஆயிற்று உங்களுக்கு..?
வேறு வேலையில் நீ இருந்திருக்கக் கூடாதா என்கிறீர்கள்?!
உங்கள் மனத்தை மாற்றியது எது?
ஆசைக் கூட்டைக் கலைத்தவர் யார்?
உங்களின் எல்லா ஆசைகளையும் இத்தனை நாள்
நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்!
எல்லாம்
அந்த இறைவன்.. அரங்கன் பின்னே நின்று இயக்கியதால்!
எல்லாச் சூழலிலும் சக்தி வாய்ந்ததாக அவன் அருள் இருந்திருக்கிறது...
ஆனால் அம்மா....
அண்மைக் காலமாக நீங்கள் புதிதாக ஓர் ஆசையை வெளியிட்டீர்கள்!
வருடங்கள் பல உருண்டோடிய பின்னே...
பேரன் பேத்தி பார்க்க எனக்கும் ஆசையிருக்காதா என்றீர்கள்!
உண்மைதான் அம்மா!
ஆனால் காலம் மாறிவிட்டதே! கருத்தும் கடந்துவிட்டதே!
கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால்...
அம்மா....
இது மட்டும் நிறைவேற்ற இயலாமல் போகிறது!
கடவுளைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக
பெண்ணைப் பெற்றவர் முன் நிற்கிறார்!
இந்துஇசத்தைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக
கன்ஸ்யூமர்இசம் முன் நிற்கிறது!
அளவற்ற பேராசைகளுடன் கல்யாணச் சந்தை!
எல்லையற்ற எதிர்பார்ப்புகளுடன் கல்யாணப் பெண்!
உங்கள் பையனுக்கு பத்திரிகை வேலையா?
அப்படி என்றால் மேற்கொண்டு பேச வேண்டாம்...
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு நீங்கள் வருந்தினால்....
அம்மா... விட்டு விடுங்கள்!
புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!
அம்மா...
இவர்களுக்காக..... நீங்கள் கற்றுத் தந்த
எளிமையை, ஒழுக்கத்தை, பண்பை, தர்ம நெறியை
அம்மா....
என்னால் கைவிட முடியாது!
மன்னித்து விடுங்கள் உங்கள் மகனை!
Rathnavel Natarajan சொன்னது…

திரு செங்கோட்டை ஸ்ரீ ராம் அவர்களின் அருமையான பதிவு.

அம்மா என்னை மன்னித்து விடு.

என்னை நெகிழ வைத்த பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு செங்கோட்டை ஸ்ரீ ராம்.

ரிஷபன் சொன்னது…

புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!

உங்களின் எல்லா ஆசைகளையும் இத்தனை நாள்
நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்!
எல்லாம்
அந்த இறைவன்.. அரங்கன் பின்னே நின்று இயக்கியதால்!

அந்த அரங்கன் இதற்கும் பதில் வைத்திருப்பான்.

பெயரில்லா சொன்னது…

vaazhthukkal thambi
keezhai .a.kathirvel
singapore

Mythili Ravi சொன்னது…

All the best for a suitable life partner..!

Mythili Ravi சொன்னது…

All the best for a suitable life partner..!

செங்கோட்டை ஶ்ரீநிவாசன் சொன்னது…

ஶ்ரீராம்...
உங்களது இந்த பதிவு மனதை பிழிந்து உணர்வுக் கொடியில் உலர்த்தி விட்டது....
பண்பும் பணிவுள்ள ஆண்மகனை தயிர்சாதம் என்றும் ..
Software தவிர மற்ற துறைகளை waste என்றும்
அலட்சியப்படுத்தும் நவீன நங்கையருக்கு மனதை
பண்படுத்தும் பத்திரிகை துறை பற்றி என்ன புரியப்போகிறது

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix