சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?



அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது!
ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றேன்!
தெரிந்த வியாபாரிகளிடம் அப்படியே கொஞ்சம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வியாபார நிலை, விலை நிலவரம் எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் அரிசி வாங்கும் கடைக்குச் சென்றேன். முகத்தை தொங்கப் போட்டிருந்தார் அந்தத் தாத்தா! என்னைக் கண்டதும் என்ன சார் எப்படி இருக்கீங்க? என்று என்னிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு விசாரிக்க வாயெடுத்தால்... சரளமாக வந்தது அன்னாரிடம் இருந்து!
என்ன சார் பண்றது? அரிசி மூட்டையா குமிச்சி வெச்சிருப்பேன்... இப்ப பாருங்க..? லோடு டம்ப் பண்ண முடியலே! வியாபாரமும் டல்! போன மாசம் இட்லி அரிசி 20 ரூபாய்க்கு இருந்தது. இப்போ 33ம் 35ம்! பிரியாணி அரிசி நிறைய வாங்குவாங்க... இப்போ கிலோ ரூ.120. நீங்க வழக்கமா வாங்கற 42 ரூபாய் பச்சரிசி இன்னிக்கு ரூ.56. எப்படி போடட்டுமா உங்களுக்கு...? என்றார்.
போடுங்க ... போடுங்க...  என்றேன்.
பின்னர் பச்சரிசி புழுங்கரிசி என்று எல்லா அரிசி விலை நிலவரத்தையும் விசாரித்தேன். குறைந்தது, கிலோவுக்கு ரூ. 8ல் இருந்து 14 வரை உயர்ந்திருக்கிறது. அதுவும் குறுகிய காலத்தில்!
பொதுவாக தை மாதம் பிறந்தால் விலை குறையும்! ஆனால்.. இப்போது  எகிறிப் போயுள்ளது!
காவிரி நீர் இன்மை, பருவ மழை பொய்த்தது, விவசாயிகளுக்கான ஊக்கம் இல்லாதது, வெளி மாநில வரத்தை நம்பியிருப்பது... இப்படி பல காரணங்கள் இருந்தாலும்....
கடந்த பத்து வருடங்களாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வரும் சில காரணிகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது...
* இளைய தலைமுறை - கணினி தொடர்பான வேலைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது! விவசாயம் சார்ந்த, உணவுப் பொருள் சார்ந்த அறிவியல் ரீதியான நவீன வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படாதது!
* சில வருடங்களுக்கு முன்னர் டபிள்யுடிஓ வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து நாம் அதிகம் பேசியபோது, ஐ.நா.வின் ஜெனீவா மாநாடுகளில் வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாய இடுபொருள்கள், உரங்கள் உள்ளிட்டவற்றுக்கு மானியத்தை அதிகப் படுத்திக் கொண்டு, வளரும் நம் போன்ற நாடுகளுக்கு விவசாய மானியங்களைக் குறைக்குமாறு வலியுறுத்தியது... இது எப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பத்தாண்டுகளுக்கு முன்னர் நாம் அதிகம் விவாதித்தோம்! இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
* விளைபொருள்களை பாதுகாப்பதற்கான எந்த கட்டமைப்பையும் நம் அரசுகள் மேற்கொள்ளாதது. இன்று கூட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகள், குடோன்களில் அடுக்க வழியின்றி வெளியில் வைக்கப்பட்டபோது, மழைநீரில் நனைந்து வீணானது... எத்தனை மாத காலம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு நெற்கதிரையும் தடவிக் கொடுத்து ஆசையோடு அறுவடை செய்து விற்பனைக்கு வரும் நேரத்தில் இப்படி என்றால்... தவறு மழை என்ற இயற்கையினுடையது அல்ல! விவசாயிகளுக்கு இடம்தராமல் ஏஜெண்டுகளுக்கு இடம்தந்து கோல்மால் செய்யும் அதிகாரிகளுடையது... தகுந்த கட்டுமான ஏற்பாடுகளைச் செய்துதராத அரசுகளுடையது!
* இந்த ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேணாம் வேணாம்... என்று அடித்துக் கொண்டாலும், கேட்பார் யாருமில்லை! விளை நிலத்தை மலடாக்கிப் போட்டு வைத்து, மனைப் பிரிவாக்கி, விவசாயத்தைப் பாழ்படுத்தி... இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

மறைந்து போகும் முறங்கள்!



அரிசியில் கல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அரிசியை பாத்திரத்தில் போட்டி அதில் நீர் விட்டுக் களைந்து மேலே வரும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அடியில் தங்கும் அரிசியையும் சிறுசிறு கற்களையும் பிரித்தெடுத்து.... அப்பப்பா.. சின்ன வயதினிலே இப்படியெல்லாம் என்னவொரு சுவாரஸ்யங்கள்!
இன்று அப்படியெல்லாம் நேரம் போக்குவதில்லை!
அதுபோல்தான் முறமும்!
ஞாயிற்றுக் கிழமை - வேலைப்பளு அதிகம் இல்லாத இன்று காலை சமையலறையை சுத்தப் படுத்தி வந்தேன். அபோது ஒரு பையில் அவல் மொத்தமாக இருந்ததைக் கண்டேன். பையனின் காலை உணவுக்கு அம்மா ஆசையோடு கொடுத்து விட்டது. வெகுநாட்களாக கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டேன்! எடுத்துப் பார்த்தால்... தூசு, துகள்கள், மாவு... இத்யாதிகள்!
இதனைச் சரி செய்ய முறத்தை எடுத்து, அந்த அவலைப் போட்டு புடைத்து, மாவு, தூசுகளை நீக்கி எடுத்து வைத்தேன்!
அப்போது இந்த முறத்தைப் பற்றிய சிந்தனை வெகுவாக எழுந்தது. இன்றைய பாக்கெட் உணவுப் பொருள்கள், உடனடி பொருள்கள் ஷாப்பிங் மால்கள், கூட்டுறவு அங்காடிகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்போது, முறமாவது.. ஒண்ணாவது..? அடுத்த தலைமுறை இதனைப் பார்க்கவும் வாய்ப்பு உண்டோ இல்லையோ தெரியாது..!
இதனை மனதில் கொண்டு, இந்த விஷயத்தை இணையத்தில் ஏற்றி வைக்கிறேன். தேடலின்போது எவரேனும் சிலருக்கு பின்னாளில் உதவக்கூடும்!
தகுந்த படமும் கிடைத்தது. இந்தப் படத்தை அழகாக வரைந்திருப்பவர், உஷா சாந்தாராம். கர்நாடக மாநிலம், பெங்களூரூச் சேர்ந்த நுண்கலை ஓவியர்! அவருக்கு நன்றி!
இந்தக் கட்டுரை, டாக்டர் ஷியாம் சுந்தர்கோஷ் என்பவர் ஹிந்தியில் எழுதிய கட்டுரை. முன்னர் மஞ்சரி இதழாசிரியராக அடியேன் இருந்தபோது, அனுபவித்துப் படித்து, மொழிபெயர்க்கச் சொல்லி வாங்கி வெளியிட்ட கட்டுரை!
------------------------------------------------------
நமது கிராமத்து முறங்கள் எங்கே ?
தூற்ற, தூசு தட்ட, புடைக்கப் பயன்படுவது முறம். இவ்வளவு நாள் வரை நமது பெண்மணிகளின் தளராத பணி களால் சுத்தமாக்கப்பட்ட தானியங்கள் கொண்டு சமைக்கப்பட்ட நல்ல உணவைப் பெற்று வந்தோம்.
இவைகளைப் புடைக்கும்போது உண்டாகும் ஒலி, எவ்வளவு மதுரமானது. இப்படிப்பட்ட முறங்கள் இப்போது காணக்கிடைக்குமா? முறங்களில் திறமையுடன் எல்லா வேலைகளையும் செய்து வந்த மாதரசிகள் உள்ளனரா? வியக்கிறார் டாக்டர் கோஷ்.
நேற்று நான் மிகவும் குறுகலான வீதியில் சென்று கொண்டிருந்தேன். ஒரு வீட்டிலிருந்து ஒருவித ஒலி வந்தது. நின்றேன். சற்று சிந்தித்தேன். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஒலி.
ஆம், நினைவுக்கு வந்துவிட்டது. முறத்தால் புடைத்தல், தானியத்தை  கோதுமையோ, அரிசியோ, தாத்தி எடுக்கும்போது முறத்திலிருந்து உண்டாகும் ஒலி.
எனது சிறு வயதில் எனது தாயாரும், அக்காவும், பாட்டியும் முறத்தால் தானியங்களைச் சுத்தம் செய்வார்கள். புடைத்து அதிலிருந்து ஒருவித ஒலி உண்டாகும். அதே ஒலிதான் இது.
நான் சிறுவனாக இருந்தபோது காலை உணவிற்கு கஞ்சி சத்துமாவு, அவல் போன்றவை அதிகமாக உபயோகப்பட்டு வந்தன. இவைகளுக்கு முறம் கட்டாயம் தேவை?
அப்போதெல்லாம் முறம் புடைக்கவும், தாத்தவும் அனுபவம் உள்ள பெண்கள் செய்து வந்தனர். எல்லாப் பெண்களுக்கும் தெரிந்திருந்தாலும் இதில் சிலர்தான் நிபுணர்களாக விளங்கினர். இதில் அவர்களின் திறமைதான் என்ன?
இரண்டு கைகளின் உள்ளங்கைகளும் முறத்தைத் தாங்கியிருக்கும். முறத்தின் பின்னால் நான்கு விரல்களும் தாளம் போட்டுக் கொண்டிருக்கும். இது தபேலாவின் ஒலியை நினைவுபடுத்தும். தபேலா வாசிக்கும்போது மணிக்கட்டும் விரல்களும் தங்கள் திறனைக் காட்டும். ஆனால் முறத்தின் அடிப்பகுதியில் விரல்கள்தான் நடனமாடும்.
நான் எனது சிறுவயதில் முறத்தின் நாதத்தையும், விரல்களின் நடனத்தையும் பார்த்திருக்கிறேன். உள்ளங் கைகளையும் கட்டை விரலும் முறத்தைத் தாங்கியிருக்கும். மற்ற நான்கு விரல்களும் முறத்தின் அடிப்பகுதியில் இருக்கும். அவை நல்ல சப்தத்தை எழுப்பும். நடமாடும். இது எவ்வளவு மதுரமாக இருக்கும்!? அதை நான் கவனமாகப் பார்த்து ரசிப்பேன்.
இப்போது அப்படிப்பட்ட உயர்ந்த முறங்களும் கிடையாது. முற விற்பனையும் கிடையாது. முறங்களை முடைபவர்கள் பெண்கள்தான். இப்போது உள்ளவர்களுக்கு முன்போல தரமான உறுதியான முறங்கள் பின்னத் தெரியாது. அவை அழகாகவும் உறுதியாகவும் இருப்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
இப்போது தகரத்தால் செய்யப்பட்ட முறங்களும் வந்துவிட்டன. ஆனால் இந்தத் தகரத்தால் செய்த முறங்களில் அழகு இருக்காது. சங்கீதத்தின் ஒலியும் இருக்காது. தகரத்தால் செய்த முறங்களைக் காட்டிலும் மூங்கிலால் செய்த முறங்கள்தான் உயர்ந்தவை.
முறம் விற்பவன் வந்தாலும் வீட்டில் உள்ள வயதான பெண்கள்தான் அவைகளைச் சோதித்து வாங்குவார்கள். தட்டிப்பார்ப்பார்கள். நீண்ட நேர சோதனைக்குப் பின்னரே முறம் தேர்ந்தெடுக்கப்படும். முறங்கள் வாங்குவதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை. அவைகளை மெழுகுவார்கள். காகிதக்கூழ் மெழுகப் பயன்படுவதுண்டு. அவைகளின் பின்புறம் பலநிறங்களால் அழகுபடுத்துவர். படங்கள் வரைவார்கள். அவைகளுக்குச் சிலர் வழவழப்பான துணிகளால் உறையும் தயார் செய்வார்கள். முறங்களில் விசேஷ நாட்களில் இனிப்புகள் பலகாரங்கள் வைத்து உறவினர்களுக்கு அன்பளிப்பாகவும் சீர் வரிசையாகவும் அனுப்புவார்கள்.
முறத்தின் வேலை முடிந்தாலும் அதை மெழுகி நிழலில் உலர்ந்ததும் நன்றாகத் துடைத்து சுவரில் மர ஆணி அடித்து அதில் மாட்டிவிடுவார்கள்.
நான் சிறுவனாக இருந்தபோது பாலிதீன், எவர்சில்வர், அலுமினியம் முதலியவைகளாலான பாத்திரங்கள்  முறங்கள்  வந்ததில்லை.
கிராமங்களின் எல்லைகளில் மூங்கில் புதர்கள் காணப்படும். இவைகளைக் கடந்துதான் போகவேண்டும். அதன் நிழலில் தங்கவும், ஓய்வு பெறவும் செய்யலாம். இதனால் மனதிற்குக் குளுமை... இதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
அந்த நாளில் மூங்கில்களும் வாரைகளும் சமூக வாழ்வுக்கு இன்றியமையாதவை. வீடு கட்டவும், குடிசைகள் அடைக்கவும் இவை தேவைப்படுகின்றன. மூங்கிலை லேசாகச் சீவி விசிறிகள் செய்வது, கட்டுமான வேலைகள்  எல்லாவற்றிற்கும் மூங்கில்களும் வாரைகளும் தேவை.
ஹிந்தியில்: டாக்டர் சியாம் சுந்தர் கோஷ் / தமிழில்: டி.எஸ்.ஆர்.

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது



உண்மைதான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக ' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம் செய்தாலோ சாதி வேறுபாடு ஒழிந்துவிடுமா?

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் இறை உணர்வுக்கு ஆட்பட்ட அடியார்களுக்கு மட்டுமே சாதி தொலைந்திருக்கிறது. வெளி வேஷதாரிகள் சுயநலமிகளாக இருந்தனர் என்பதை ஒதுக்கி விட்டு இறையடியார் வாழ்வையே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி எத்தனையோ அடியார்கள் இருந்து உணர்த்திய போதிலும் வைணவ மார்க்கம் பாரதமெங்கும் தழைக்கச் செய்த மகான் ராமானுஜரின் வாழ்வு உணர்த்திய விதம் வெள்ளிப்படையானது. அவர் வாழ்வின் இரண்டு உதாரண வெளிப்பாடுகள்...

உறையூர் சோழராஜாவிடம் மெய்க்காப்பாளனாக இருந்தவர் பிள்ளை உறங்காவில்லி. அவர் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடை பிடித்துக்கொண்டு போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் மனையாளின் பின்னே சேவகனாய்ச் சென்ற இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே?

ஒரு நாள் நண்பகல். காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற பிள்ளை உறங்காவில்லியின் செயலைக் கண்டார். இப்படியோர் பெண்பித்தரோ? என்று வியந்து, அவரைத் திருத்திப் பணிகொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரிடம் அவர் செயல் குறித்து வினவ, அவரோ இவள் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன் என்றார். எம்பெருமானார் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார்... இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக் காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்... கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ? என்றார்.

சொல்லிவிட்டு, திருவரங்கம் அரங்கனின் சன்னதி நோக்கி அழைத்துச் சென்றார். அரவணைத் துயிலும் அரங்கனின் பேரழகை , கண்ணழகைக் காட்டி, அந்த அழகை அனுபவிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன.

பங்குனி பிரம்மோற்சவ தீர்த்த வாரி சமயம் நீராடப் போகும் போது. முதலியாண்டான் என்ற சீடர் கரம் பற்றி நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்து கரையேறும்போது பிள்ளை உறங்காவில்லி தாசரின் கரம் பற்றி எழுவார். இது வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது என்றும் பிராமணன், கீழ்குலத்தோனைத் தொடுவது தவறல்லவோ என்று கூறி சீடர்கள் ராமானுஜரின் செயலுக்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர் இப்படி பதிலளித்தார்...

எத்தனை தான் ஞானம் பெற்றாலும் உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணமே ஆணவமாக நின்று, இறைவனை அடையும் நிலையான அடியார்க்கு அடிமை என்ற நைச்யம் (தாழ்ந்த நிலை) பெற முடியாமல் போய் விடுகிறது. எனவே இப்பிறவியால் உண்டான அகங்காரத்தை, அகங்காரமே சிறிதுமற்ற இந்த அடியவரைத் தீண்டி உடல் சுத்தி செய்து கொள்கிறேன்... என்றார்.

பிறப்பின் பெருமையால் ஒருவன் அகங்காரம் கொள்வதோ, அல்லது மனத்தாழ்ச்சி கொள்வதோ தகாது. இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மிக உள்ளமும் மகான் ராமானுஜரின் இந்த உபதேசத்தை மனத்தில் கொள்ள் வேண்டும்.

பிள்ளை உறங்காவில்லி தாசரின் இந்தக் கதையிலிருந்து இன்னொரு செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. பிள்ளை உறங்காவில்லி மனையாளின் பின்னே மோகத்தால் சுற்றி வந்தார். எம்பெருமானார் அவரை அரங்கனிடம் ஆற்றுப்படுத்திய பிறகு, சோழராஜனிடம் செய்து வந்த சேவையை விட்டு, அரங்கன் மேல் பக்தியும் அன்பும் கொண்டு கையில் வாளேந்தி பெருமாளின் விக்கிரகத்திற்குப் பாதுகாவலாய் செல்லத்தொடங்கினார்.
இவர் பரமபதித்த போது, அவருடைய திருமேனிக்கு பொன்னாச்சியார் கண்ணீர் உகுக்காமல் சடங்குகளை உடனிருந்து ஆற்றினார். அத்திருமேனி கொண்டு செல்லப்பட்டு அவர் பார்வையிலிருந்து மறையும் வரை இருந்து, மறைந்ததும் தன் உடலை விட்டு உயிர் பிரியப் பெற்றார். இந்த ஆச்சர்யத்தை அறிந்து இரு திருமேனிகளையும் ஒன்றாய்த் தகனம் செய்தார்கள்.

இருவரும் கொண்ட அன்பின் ஆழம் அத்தகையது. பிள்ளையுறங்காவில்லி மனைவிதாசனாய் இருந்தபோது மனைவியின் பின் இவர் சென்றார். அவரே அரங்கன் தாசனாய் ஆனபின்பு, பொன்னாச்சியார் இவர் பின்னே சென்றார். இறை பக்தியின் பெருமை அத்தகையது. இதற்குக் காரணமாக இருந்தது, எம்பெருமானாரின் திருவுள்ளம்.

ராமானுஜரின் இன்னொரு வாழ்வியல் செய்தி....

ஆளவந்தாரின் எண்ணப்படி ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து வைத்த பெரிய நம்பிகள், தம் ஆசார்யரான ஆளவந்தாரின் இன்னுமொரு சீடரான (தாழ்குலத்தைச் சேர்ந்த) மாறனேரி நம்பிக்கு, ராஜபிளவை என்ற புண்ணைக் கழுவி மருந்திட்டு, உணவும் அளித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பிராமணர்கள் நிந்தையை அவர் பொருட்படுத்தவில்லை. மாறனேரி நம்பி திருநாடு அலங்கரித்த போது, ஞானத்தால் சிறந்த அந்தணர்க்குரியதான ப்ரஹ்மமேத சம்ஸ்காரம் என்ற சிறந்த நிலையால் பள்ளிப்படுத்தினார். இதற்கு, வர்ணாஸ்ரம தர்மத்தை மீறி இப்படிச் செய்யலாமோ? என்று பெரிய நம்பிகளிடம் ராமானுஜர் கேட்டார்.

அதற்கு பெரிய நம்பிகள், ""சாமான்ய தர்மத்தை நிலை நாட்டுகிற சக்ரவர்த்தித் திருமகனான ராம பிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு இந்த சம்ஸ்காரத்தைச் செய்தாரே! அவரிலும் நான் பெரியனோ? அல்லது ஜடாயுவைக் காட்டிலும் மாறனேரி நம்பி சிறியரோ? இது கிடக்கட்டும். சாமான்ய தர்மத்தைக் கொண்ட யுதிஷ்டிரன் விதுரருக்கு இதைச் செய்யவில்லையா? தர்மபுத்திரரைக் காட்டிலும் நான் பெரியவனோ? அல்லது விதுரரைக் காட்டிலும் இவர் சிறியவரோ? சரி இதுவும் இருக்கட்டும்... ஆழ்வார், "பயிலும் சுடரொளி" என்ற பதிகத்திலும், "நெடுமாற்கடிமை" என்ற பதிகத்திலும் பாகவதர்களின் சிறப்பைக் கூறி, "எம்மையாளும் பரமர்" என்றும், "எம் தொழுகுலம் தாங்களே" என்றும் கூறியவை எல்லாம் வெற்று வார்த்தைகளேயோ? அவை அனுஷ்டிக்கத் தக்கவை அன்றோ?'' என்று சொல்லி, (தாழ்குலத்தோராயினும்) பாகவத உத்தமர்கள் எவ்வகையிலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்களே என்று கூறி நிலைநிறுத்தினார்.

இது எம்பெருமானாருக்குத் தெரியாததல்ல! ஆயினும் தகுந்த பெரியோர் மூலமாக, தம்மைச்சேர்ந்தவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற அவாவினால் இப்படியோர் நிகழ்வை நிகழ்த்தினார்.

பாகவத உத்தமர்களுக்குள்ளே சாதியால் உயர்வு தாழ்வு இல்லை என்பதே ராமானுஜரின் இவ்விரு வாழ்வியல் செய்திகளும் சொல்லும் உண்மை...

கி.பி.1017 இல் அவதரித்த மகான் ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் உற்ஸவங்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை உலகுக்கு எடுத்துச் சொல்லும் கடமை தமிழர் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

வியாழன், பிப்ரவரி 07, 2013

மனம் காட்டும் கண்ணாடி!



நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்!
காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில் மாட்டப் பட்டிருக்கும் அழகிய சித்திரம் கண்டால் போதும்..... அன்றைய மனநிலை மகிழ்ச்சிகரமாகத் துவங்கும்.
சில நேரம் மன அழுத்தத்தின் காரணத்தால் அதே அழகான படம்கூட சலிப்பைத் தரலாம்.
விருப்பு வெறுப்பற்ற மனநிலை கைவர வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வந்தேன். ஆனால்... பழக்கத்தால் சிலரிடம் விருப்பும் நடத்தையால் சிலரிடம் வெறுப்பும் தொற்றிக் கொண்டு விடுகிறது. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் மனத்தில் வெறுப்பைத் தோற்றுவித்த சில நபர்கள் பணியிடத்தில் இருந்தபோதும், வெறுப்பை விலக்கி விருப்பை விதைக்க முயன்றேன். முடியவில்லை. நினைக்கும் போதெல்லாம் மனது வெறுப்பையும் வெறுமையையும் தந்துவிடுகிறது. எனவே புறக்கணித்தல் அல்லது அம்மக்களை மறத்தல்- இதுவே வழி என செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும்.... உளவியலில் இன்னொரு புறம்..!
தினந்தோறும் பார்த்து ரசிக்கும் அதே காட்சி... அதே முகங்கள்... அதே அழகு! அதே புன்னகை! இருந்தாலும், காட்சியின் கோலமும் எழிலும் மனம் நன்றாக இருக்கும் நேரத்தில் எழிலாய்த் தோன்றும், மனநிலை மாய்ந்தால் வெறுப்பாய்க் கழியும். மாற்றம் பார்க்கப்படும் பொருளில் இல்லை என்றாலும், பார்க்கும் மனத்தில் இருந்துவிடுகிறது.
இப்படியெல்லாம் எத்தனை எத்தனை உளவியல் தத்துவங்களை படிப்பது, எழுதுவது, பேசுவது?!
இந்த உளவியல் கலையை எப்படி நம் முன்னோர் தமிழ்க் கவியாய்ப் படைத்துக் காட்டியுள்ளனர்.? தோழியும், தலைவன், தலைவியும், தாயும், தாதியும் இல்லாமல் சங்க இலக்கியமா? ஒவ்வொருவரின் கூற்றும் ஒவ்வொரு உளவியல் காட்சியைக் காட்டிச் செல்லுமே!
ஒரு பாடல்..... பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் படித்த நினைவு, ஆண்டு பல கழிந்தாலும் அகல மறுக்கிறது மனதை விட்டு!
தோழியின் கூற்றாக வருகிறது...
வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே!
- என்று வாயில் வேண்டிப் புக்க தலைவனுக்கு தோழி கூறியதாக வருகிறது.
(அதாவது, தன்னுடன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம், ஊடலைத் தணித்து உடன்படச் செய்யுமாறு தூது செல்ல தலைவியின் தோழியிடம் தலைவன் துணை நாடுகிறான். அதற்கு, தோழியானவள், இந்தப் பாடலைக் கூறி, உன்னுடைய  மனது அன்று எப்படி இருந்தது... அன்று என் தோழியை எப்படி எல்லாம் புகழ்ந்தீர்... இன்று எல்லாம் மாறிவிட்டதே! எப்படி உம்மை நாம் நம்புவது என்று தூது செல்ல மறுக்கிறாள்....)
ஒரு காலத்தில், கசப்போ கசப்பென்று படுகசப்பாக இருக்கும் வேம்பின் இளங்காயை என் தோழி உமக்குத் தந்தபோது, நீர் அதனை வாங்கி,.. அட... அட... என்ன ஓர் இனிப்பு!? வெல்லக் கட்டி போல் அல்லவா இருக்கிறது என்று புகழ்ந்து உண்டீர். அவள் அழகும் அணுக்கமும் உம்மை கிறக்கத்தில் ஆழ்த்தியிருந்தன. ஆனால் இன்று... பாரி வள்ளலின் பறம்பு மலையில் தை மாதக் குளிரில் அதனினும் குளிர்ந்த தண்மையுடன் சுனையில் வரும் சுவை நீரை வாங்கிப் பருகிய நீர், என்ன இது இவ்வளவு வெப்பமாக உவர்ப்புச் சுவையுடன் இருக்கிறது என்று கூசாமல் வெறுப்பை உமிழ்கிறீர். அன்று நீர் எம் தோழியைப் பாராட்டிய போது வசந்த காலத்தே மகிழ்வில் மிதந்தாள் தோழி.... இன்று வெறுப்பில் இயற்கை அழகை, இனிய சுவையை மறுத்து ஒதுக்குகையில், மனம் கசந்த காலமிதுவோ என எம் தோழி மருண்டு ஒதுங்குகிறாள்... என்னே உம் மன நிலை?! இனியும் உமக்காகத் தூது போவானென்? என்று விலகிச் செல்கிறாள் அவள்.
இந்தப் பாடல் காட்டும் தலைவனின் மனநிலையில் நான்..!

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

அம்மா... என்னை மன்னித்துவிடு!


எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... 
------------------------------------------
அன்புள்ள அம்மாவுக்கு.....
-----------------------------------------
அம்மா... என் அம்மா...!
கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!
கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்
அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!
இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!
நிறைவேற்றினேன்!
சங்கீதப் பயிற்சிக்கு உடன் வந்து நின்றீர்கள்!
சேர்ந்திசை பாடினோம்!
எத்தனை நாள் பசியோடு நான் பள்ளியில் இருந்து திரும்பியிருப்பேன்!
சந்தியா வந்தனம் இன்றி சாப்பாடு இல்லை என்றீர்கள்!
வெறுப்போடு துவங்கி வேறு வழியின்றிப் பழக்கினேன்!
ஒழுங்கு முறையாய்ப் புகுந்து உள்கலந்தது!
அம்மா... என் வாழ்க்கை என் விருப்பத்தால் அமைந்ததில்லை!
ஒவ்வொன்றும் உங்கள் விருப்பம்! உங்கள் கனவு!
நனவாக்கிக் காட்ட முயன்றதே என் லட்சியம்!
எத்தனை நாட்கள் அம்மா...
என் கவிதைக் கிறுக்கல்களை தலைமாட்டில் வைத்துத் தூங்கியிருக்கின்றேன்!
எழுந்து பார்க்கும்போது அதைச் சொல்லி சிலாகிப்பீர்கள்!
என் தாத்தா தமிழ்ப் புலவர்! புத்தனேரி புத்தி உனக்கும் வந்ததடா என்பீர்கள்!
உற்சாகம் தந்த உங்கள் பதிலால்...
பதின்ம வயதினிலே தேடித்தேடித் தமிழ் படித்தேன்!
அப்போதெல்லாம்...
தமிழ் சோறு போடுமாலே! ஒழுங்கா படிக்கிற வழியைப் பார்!
திட்டித் தீர்த்த அப்பா... எனக்கு வில்லனாய்த்தான் தோன்றினார்!
நெருப்புக் கோளமாய் வெறுப்புக் கோபம் சுமந்தேன்!
வேறு வழியின்றி...
கல்லூரிக் காலத்தே கணக்கு புகுந்தது!
பிணக்கின்றி தமிழும் ஆண்டது!
வேதம் கற்கச் சொன்னீர்கள்... கற்றேன்!
தர்மம் மீறாதிருக்க வேண்டும் என்பீர்கள்!
தருமச் சிந்தை நீங்கள் சொன்ன கதைகளால் என்னுள் புகுந்தன!
பிரபந்தம் பாடச் சொன்னீர்கள்... செய்தேன்!
சமையல் கற்றுத் தந்தீர்கள்! நுணுக்கம் கற்றேன்!
தையல் இயந்திரத்தின் சத்தத்தில் கவிச் சந்தம் தருவேன்!
ரசித்துக் கேட்பீர்கள்! உன் விளக்கமே அலாதி என்பீர்கள்!
யாரோ இதழ்களில் எழுதிய துணுக்குத் தோரணங்களையும் கட்டுரைகளையும்
பிழை மலிந்தும் பிழைத்திருக்கின்றனவே என்றீர்கள்!
நீ மட்டும் இதை எழுதினால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...?
உங்கள் ஆசையை நிறைவேற்ற... எழுதத் தொடங்கினேன்!
படிப்பு வேறாயினும் பணி வேறாயினும்
அம்மா... இந்த எழுத்தின் சுவையால்...
பத்திரிகை எனை ஆட்கொண்டது! இதழியல் என்னுள் ஊற்றுக் கொண்டது!
எனை அறியாமல் என்னை ஆக்கிரமித்த இந்தத் துறைக்காக
மகிழ்வு கண்டவர் என்னவோ நீங்கள்தானே அம்மா!
வானொலிப் பேச்சா..? தொலைக்காட்சி நேரலையா...?
நீ பேசி நான் கேட்க வேண்டும் என்றீர்கள்!
எல்லாமும் நன்றாய்த்தான் நிகழ்ந்தன!
இதழியலின் எல்லா எல்லைகளிலும் கால்பதிக்க...
என் னம்மா... எல்லாம் நீங்கள் தந்த ஊக்கம்தானே!
ஆனால் இப்போது..!
என்னம்மா ஆயிற்று உங்களுக்கு..?
வேறு வேலையில் நீ இருந்திருக்கக் கூடாதா என்கிறீர்கள்?!
உங்கள் மனத்தை மாற்றியது எது?
ஆசைக் கூட்டைக் கலைத்தவர் யார்?
உங்களின் எல்லா ஆசைகளையும் இத்தனை நாள்
நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்!
எல்லாம்
அந்த இறைவன்.. அரங்கன் பின்னே நின்று இயக்கியதால்!
எல்லாச் சூழலிலும் சக்தி வாய்ந்ததாக அவன் அருள் இருந்திருக்கிறது...
ஆனால் அம்மா....
அண்மைக் காலமாக நீங்கள் புதிதாக ஓர் ஆசையை வெளியிட்டீர்கள்!
வருடங்கள் பல உருண்டோடிய பின்னே...
பேரன் பேத்தி பார்க்க எனக்கும் ஆசையிருக்காதா என்றீர்கள்!
உண்மைதான் அம்மா!
ஆனால் காலம் மாறிவிட்டதே! கருத்தும் கடந்துவிட்டதே!
கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால்...
அம்மா....
இது மட்டும் நிறைவேற்ற இயலாமல் போகிறது!
கடவுளைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவராக
பெண்ணைப் பெற்றவர் முன் நிற்கிறார்!
இந்துஇசத்தைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக
கன்ஸ்யூமர்இசம் முன் நிற்கிறது!
அளவற்ற பேராசைகளுடன் கல்யாணச் சந்தை!
எல்லையற்ற எதிர்பார்ப்புகளுடன் கல்யாணப் பெண்!
உங்கள் பையனுக்கு பத்திரிகை வேலையா?
அப்படி என்றால் மேற்கொண்டு பேச வேண்டாம்...
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்டு நீங்கள் வருந்தினால்....
அம்மா... விட்டு விடுங்கள்!
புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்!
அம்மா...
இவர்களுக்காக..... நீங்கள் கற்றுத் தந்த
எளிமையை, ஒழுக்கத்தை, பண்பை, தர்ம நெறியை
அம்மா....
என்னால் கைவிட முடியாது!
மன்னித்து விடுங்கள் உங்கள் மகனை!

வெள்ளி, பிப்ரவரி 01, 2013

கவிதை - ரசனை- வார்த்தைகள் அற்ற பரிமாற்றம்!

Photo: எழுத அமர்ந்தால் வருவதில்லை! 
எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்!
வேறென்ன...?
கவிதைதான்!
உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், 
மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம்.
கடலைச் சென்று சேராத நதியைப் போல்
மனதைச் சென்று தொடாத கவியும் வீண்!
நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்!
மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்!
பார்வை சரி... வார்த்தைகள் வேண்டுமே! 
வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா?
வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்! 
காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு! 
ஆம் ஆம்!
கவி எழுதச் சொற்கள் அவசியமா?  
கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பலகாலம்!
எண்ணக் குதிரை பாய்ந்தோட... 
எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்!
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்!
ரசித்துப் படித்தேன்...
ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்!
ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்!
ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..!

மொழியின் முன் மண்டியிட்டு 
வார்த்தை வரம் கேட்டேன்
அரசியல் வாதிகள் 
அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்
கட்டுரையாளர்கள் சிலர் 
கேட்டு வாங்கிப் போனார்கள்
மீதமிருந்ததை பேசவும் ஏசவும் 
மனைவியார் வாங்கிக் கொண்டார்
தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என 
மொழி மிகவும் வருத்தியது.
வேறு வழியின்றி 
வெற்றுக் காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்... 
“வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என 
எனக்குத் தெரியும்” என்றாள்.
வார்த்தைகளே இல்லாத கவிதையை 
வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது....
"கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று! 
- ஏர்வாடியாரின் இந்தக் கவிதை 
ஏனோ எனை வாட்டிவிட்டது! 
ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை 
வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே! 
உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!

எழுத அமர்ந்தால் வருவதில்லை! 
எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்!
வேறென்ன...?
கவிதைதான்!
உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், 
மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம்.
கடலைச் சென்று சேராத நதியைப் போல்
மனதைச் சென்று தொடாத கவியும் வீண்!
நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்!
மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்!
பார்வை சரி... வார்த்தைகள் வேண்டுமே!
வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா?
வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்!
காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு!
ஆம் ஆம்!
கவி எழுதச் சொற்கள் அவசியமா?
கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பலகாலம்!
எண்ணக் குதிரை பாய்ந்தோட...
எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்!
ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்!
ரசித்துப் படித்தேன்...
ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்!
ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்!
ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..!

மொழியின் முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்
அரசியல் வாதிகள்
அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப் போனார்கள்
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியார் வாங்கிக் கொண்டார்
தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என
மொழி மிகவும் வருத்தியது.
வேறு வழியின்றி
வெற்றுக் காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்...
“வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என
எனக்குத் தெரியும்” என்றாள்.
வார்த்தைகளே இல்லாத கவிதையை
வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது....
"கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று!
- ஏர்வாடியாரின் இந்தக் கவிதை
ஏனோ எனை வாட்டிவிட்டது!
ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை
வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே!
உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!


(1) Senkottai Sriram
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix