சனி, ஜனவரி 24, 2009
Vivekananda Pictures Exhibition















இங்கே நீங்கள் காண்பது, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விவேகானந்தர் ஓவியக் கண்காட்சி. இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் பிரபலமான ஓவியர்கள் இல்லை. அனைவருமே பள்ளி கல்லூரி மாணவ மாணவியரே. இளைய சமுதாயத்தை உயர்த்துவதையே தன் லட்சியமாகக் கொண்டிருந்த சுவாமிஜிக்கு, இளைய சமுதாயம் என்ன குருதட்சிணை தரப்போகிறது...? அவருடைய வீரியம் மிகுந்த சிந்தனைகளை மனத்தில் கொண்டு, அவரை லட்சிய புருஷராக எண்ணி அவரை வெளிப்படுத்த வேண்டுவதுதானே! அதுதான் இந்த ஓவியங்களாக வெளிப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்கள் இந்தியா மட்டுமல்லாது இலங்கை நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மாணவக் கண்மணிகளாலும் வரையப் பெற்றவை. கிட்டத்தட்ட 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஓவியங்கள் இந்தக் கண்காட்சிக்குப் போட்டிக்காக அனுப்பப்பெற்றனவாம். அவற்றில் மிகச் சிறந்த சில ஓவியங்களை இங்கே கண்காட்சியில் வைத்துள்ளனர். அருமையான வடிவமைப்பு.
ஓவியங்களைப் பார்ப்பதற்கு நல்ல வழிவகை செய்துள்ளனர். ஒரு இடத்திலிருந்து நீங்கள் பார்த்துக்கொண்டு சென்றீர்களானால், முதல் தளம், இரண்டாம் தளம் பார்த்துவிட்டு, அப்படியே கீழே இறங்கிச் செல்லலாம். அவ்வளவு துல்லியம். மாணவக் கண்மணிகள் நன்றாக வழிகாட்டுகிறார்கள்.
இந்த இல்லம், விவேகானந்தர் தங்கியிருந்த இல்லம் என்பதால், இந்தப் பெயர். சென்னை மெரீனா கடற்கரையின் அழகை ரசிக்க வரும் நீங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இல்லத்துக்கும்தான் வருகை தந்து ரசியுங்களேன்.
திங்கள், ஜனவரி 12, 2009
சடங்குகள் சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு?

சடங்குகள் சம்பிரதாயங்கள் ...
ஏன்? எதற்கு?
விகடன் பிரசுர வெளியீடான இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம்...
தினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். பூஜை அறையில் விளக்கேற்றுகிறோம். புஷ்பங்கள் வைக்கிறோம். சாம்பிராணி காட்டுகிறோம். கற்பூரம் ஏற்றுகிறோம். மணி அடிக்கிறோம். _ ஏன் எதற்கு என்று தெரியாமலேயே இப்படி பல சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். பாரத நாட்டின் பண்பாடும், கலாசாரமும் தொன்மை மிக்கவை. வேதகாலத்திலிருந்து முனிவர்களும், ரிஷிகளும் வகுத்துக் கொடுத்தவை. உபநிடதங்களும், புராணங்களும் நம் சிந்தனையைத் தூய்மைப்படுத்தவும், செயல்களைப் பண்படுத்தவும் பல வழிமுறைகளை விவரிக்கின்றன. இன்றும்கூட நடக்கும்போது காலில் புத்தகமோ, தாளோ மிதிபட்டால், அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். அடுத்தவரின் மீது நம் பாதம் பட்டுவிட்டாலும் அப்படியே செய்கிறோம். அதுமாதிரியே மாலை வேளையில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்தால், பொழுது புலர்ந்து விளக்குகளை எரிய விடும்போது ஒரு விநாடி கண்மூடிப் பிரார்த்திக்கிறோம். இப்படி பல சடங்குகள்... சம்பிரதாயங்கள். இவற்றின் அடிப்படைத் தத்துவங்களை இந்த நூலில் அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம். ஒவ்வொரு சடங்குகளையும் தொடர்ந்து நாம் செய்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் என்பதால், அவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவை ஒவ்வொன்றின் தாத்பர்யத்தையும் அறிந்து கொண்டு நாம் செயல்படும்போது ஓர் திருப்தி கிடைக்கிறது. பிள்ளையாருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதிலிருந்து கோ பூஜை செய்யப்படுவது வரை நம் செயல்பாடுகளுக்கு பின்னணிக் காரணங்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. படித்து பயன்பெறுவோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)