சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், பிப்ரவரி 16, 2017

தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!

அதீத அன்புள்ளம் கொண்ட
தினமணி ஆசிரியராக இருந்துவரும்
திரு.வைத்தியநாதருக்கு,

வணக்கம்.

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறேன்...

இத்தனை நாட்களாய் தங்களை மறந்துவிட்டதற்காக மன்னிக்கவும்.

தங்கள் டிவிட் ஒன்று, ஓ மன்னிக்கவும்! தங்களுக்கு சுட்டுரை என்றால்தான் பிடிக்கும் இல்லையா? தங்களுக்குத்தான் ’தமிழ்மணி’யின் மீது தீராக் காதல் அல்லவா! அப்படியான தங்களின் சுட்டுரை ஒன்று மாலையில் என் கவனத்துக்கு வந்தது. ரசித்தேன்! உடனே கடிதம் எழுதத் தோன்றிவிட்டது! 

//”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று தாங்கள் குறிப்பிட்டதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். 

தொடர்ந்து அதே சுட்டுரையின் தொடர்ச்சியாய் ஒருவர் கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலைக் கண்டு மயங்கிப் போனேன்...

// சார், அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை தமிழக அரசியலை பற்றிய தலையங்கம் உங்களுக்கு திருப்தியா// என்ற வாசகர் ஒருவர் கேள்விக்கு 
// @rajeshksy நிச்சயமாக. சரி என்று படுவதைப் பதிவு செய்கிறேன்.அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் சில கசப்பையும் சகித்துக் கொண்டாக வேண்டும்// என்று பதிலளித்திருக்கிறீர்கள்! 

மிக்க மகிழ்ச்சி. மெத்த சந்தோஷம்!

குறுகிய காலத்தில் தாங்கள் இவ்வளவு தூரம் நவீனத் தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைத்தளங்களில் உலா வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. கைப்பிடித்து அட்சரப்யாஸம் கொடுத்த தகப்பனும் தாய்க்கும் இருக்கும் மகிழ்ச்சி அது! 

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்த தங்களுக்கென, டிவிட்டர், பேஸ்புக் கணக்குகளை நானே உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்து சுவை ஏற்படுத்தியவன் என்ற வகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி! 

உங்களுடன் எத்தனையோ இடங்களுக்கு உடன் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், ”சீராமுக்கு எங்க போனாலும் ஒரு பிளக்பாயிண்ட் இருந்தா போதும்.. அவன் பாட்டுக்கு லேப்டாப்பை எடுத்துண்டு வேலை செய்வான்; வேற எதப் பத்தியும் அவனுக்கு கவலை கிடையாது” என்று சொல்வீர்கள். அப்படியாக என் தொழில்நுட்ப ஆர்வத்தைப் பாராட்டி, எனக்கு ஒரு ’சாம்சங்க் டேப்’ பரிசளித்தீர்கள். எவரிடமும் எந்தப் பொருளோ பணமோ கைநீட்டி வாங்கியிராத நான், உங்கள் நட்புமுறை பரிசளிப்புக்கு மகிழ்ந்தேன். ஆனால், எப்போது அந்த நட்புமுறை உடைந்ததோ, அப்போதே அதையும் உடைத்துவிட்டேன் என்பதை இங்கே பதியவைக்கிறேன்.

நிற்க...

அண்மைக்கால தமிழக அரசியல் சூழலில் தாங்கள் எழுதும் தலையங்கம், தங்களின் ஆசிரியர் குழு போடும் முதல்பக்க கட்டுரை, உள்பக்க லீட், ஆப் எட் லீட் ஆகியவற்றை கவனித்து வரும்போது, தங்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஆனால் தன்மானம் தடுத்து, மனம் அப்படியே நின்று விடும்! நான் தினமணியின் இணையதளப் பொறுப்பில் இருந்த வரை, பல நாட்களில் தங்கள் தலையங்கக் கருத்துகளை விமர்சித்திருக்கிறேன். சிலவற்றில் பாராட்டும்படியான அம்சம் இருக்கும். சிலவற்றில் தவிர்க்கும்படியான தடுமாறல்கள் இருக்கும். எல்லாவற்றையும் உரிமையோடு விமர்சித்திருக்கிறேன். நீங்களும் பல முறை அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!  காரணம், தலையங்கம் எப்போதும் தாங்கள் எழுதுவதில்லை! நாமக்கல்லில் தாங்கள் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழிப் பரிசு பெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டினீர்கள் நினைவிருக்கலாம்... ”தலையங்கத்துக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்துத் தரும் திருச்சி செய்தி ஆசிரியர் சோமு” என்று! அந்த சோமுவும், குருசாமியும் இன்னும் லோக்கல் தாதாக்களும் எழுதாமல் போகும் நாட்களில் தாங்கள் எழுதி வரும் தலையங்கத்தையும் ஒப்பிட்டு, உங்கள் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு, கையாளும் வார்த்தைகளைச் சொல்லி எப்படி தனித்துத் தெரிகிறது என்று சுட்டிக் காட்டுவேன். என்ன இருந்தாலும் கருத்து நாந்தானே அவர்களுக்குச் சொல்லி அதைத் திருத்துகிறேன் என்பீர்கள்! இப்போது அவற்றில் தடுமாற்றங்களைக் காணும்போது.... சரி.. அது கிடக்கட்டும்! அது உங்கள் உள் விவகாரம்!  

இப்போது, தாங்கள் திருவாளர் சோமுவைக் கழட்டி விட்டதாலும், வேறு எவரும் தங்களுக்குத் தோதாகப் படவில்லை என்பதாலும், தலையங்கத்தை மிக முயன்று தாங்களே எழுதுகிறீர்கள் என்பது தெரிகிறது. நான் முன்பே சொன்னதுபோல், தங்களின் எழுத்து நடை அங்கங்கே பல்லைக் காட்டிச் சிரித்துக் கவர்கிறது! அந்தக் கவர்ச்சிகரமான உந்துதலிலேயே தலையங்கத்தைப் படிக்க ஆவலாக இருப்பதாக நான் நேற்று எழுதியிருந்தேன்! எதை எல்லாம் நாங்கள் சகிக்கல என்று யோசிக்கிறோமோ அதெல்லாம் தங்களுக்கு சிறந்த சகிப்புத்தன்மையைக் காட்டி, சசிகலா என்று சஹஸ்ரநாம அர்ச்சனையை செய்யத் தூண்டிவிட்டிருக்கிறது. 

இதே டிவிட்டில் ஒருவர் கேள்வி கேட்கிறார்... நானும் வெகு நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... 

@KVaidiyanathan சார், மதி அவர்களின் கார்ட்டூன் கடந்த 2 மாதமாக வருவதில்லையே என்ன காரணம்..?

@rajeshksy அவர் விடுப்பில் இருக்கிறார். அலுவலகம் வருவதில்லை
என்பது உங்கள் பதில். அவர் விடுப்பில் இருக்கிறார் என்பது, வாசகருக்குச் சொல்வதற்குப் போதுமான தகவல்! ஆனால், அடுத்த, அலுவலகம் வருவதில்லை என்று கூறும் பதில், ஏன் வருவதில்லை, என்ன காரணம் அவர் வராமலிருக்க என்றெல்லாம் பின்னணியின் அலசலை தானாக ஏற்படுத்தி, எங்களைச் சிந்திக்க வைத்துள்ளது. 
தாங்களும் சசிகலா போல்தான் இந்த வாக்கியத்தைக் கையாண்டிருக்கிறீர்கள். தங்கள் உள்மனசை வெளிக்காட்டியபடி! 
சரி கிடக்கட்டும்.. இது உங்கள் உள்நாட்டுக் குழப்பம், கம்பெனி உள்விவகாரம்! 

ஆனால் தாங்கள் டிவிட்டினீர்கள் ஒரு டிவிட்...! 
”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று...

இதுதான் என்னை இக்கடிதத்தை எழுதத் தூண்டிவிட்டுள்ளது. 

ஐயா... உங்கள் வார்த்தையில் சொல்லப்போனால்... நான் நானாக இருக்கிறேன், இருப்பேன்! என்று சசிகலா அம்மையார் ஜெயலலிதா சமாதியில் வைத்து சபதமிட்டதைப் போல் அதிபயங்கர சபதமாகத் தெரிகிறது உங்கள் சபதம்!  

ஒரு விஷயம் என்ன என்றால்...

நான் தங்களுடன் ஒரே அலுவலகத்தில் பணியில் இருந்த அந்த நாலரை வருடங்களும்... நீங்கள் நீங்களாக இருக்கக் கூடாது என்றுதானே அவ்வளவு தூரம் முயற்சி செய்தேன். உங்களை உங்கள் இயல்பில் இருந்து வெளியில் கொண்டுவந்து, நீங்கள் தினமணி ஆசிரியராக இருக்க வேண்டும், தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு ஏற்ப உங்களைத் தகவமைக்க வேண்டும் என்றுதானே முயன்றோம்... 

ஏனென்றால், 
தினமணியின் வரலாறையும் அதன் ஆசிரியர்களின் வரலாறையும் படித்து, ஊர்ப் பாசத்தாலும் ஜில்லா பாசத்தாலும், தேசியமும் தமிழும் விதைவிட்டுக் கிளைத்த நெல்லை மண்ணில் இருந்து வந்து நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒருவனாக அணுகியதாலும்... குறிப்பாக தாங்களும் அதே நெல்லை மண்ணில் கல்லூரிக் காலத்தைக் கழித்தவர்; என் ஆசிரியர் உங்களுக்கும் கல்லூரி ஆசிரியர், என் நட்பு வட்டம் உங்களின் நட்பு வட்டத்தில் ஒரு பகுதி என்றெல்லாம் இருந்த காரணத்தால் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் பாசம் வைத்துப் பழகியதன் வெளிப்பாடுதான்... தங்கள் கௌரவத்தின் மீதான, தங்கள் வளர்ச்சியின் மீதான அக்கறையாக அன்று இருந்தது. ஏற்பவோ ஏற்ப இல்லாமலோ தாங்கள் தினமணியின் ஆசிரியர் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள்; தினமணியின் வரலாற்றில் தங்கள் இடம்பெறப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வையே தங்களுக்கு அவ்வப்போது பதிய வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், உங்கள் உள்மனத்தின் உந்துதலை அறியத் தவறிவிட்டோம்! 

நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள்... முட்டாள்கள்தான் இங்கே வேலை செய்வான்; தினமணியை விட்டுச் செல்பவன் நல்ல அறிவுஜீவியாக இருப்பான் என்று!

அதை குறுகிய காலத்தில் உணர்ந்தேன்.

எத்தனை பேர் அப்படி! 
தினமணிக் கதிரில் சிவக்குமார் வேலை செய்தார். தங்கள் வாக்கை மெய்ப்பிக்க, அவர் பணி ஓய்வு பெறும் வயதில் திருச்சிக்குத் திசைதிருப்பினீர்கள். சிரமப்பட்டு அவர் போதுமென்று வந்துவிட்டார்.
தங்கள் அறிவுஜீவிப் பட்டத்தைச் சுமக்காமலே சினிமா எக்ஸ்பிரஸ் சிவகுமார்... ( தங்கள் ஜெயலலிதா பாணி தண்டனையைப் பார்க்காமலே மறைந்தது மகிழ்ச்சி என்ற வாசகத்தின்படி) பாவம் மறைந்துபோனார்.

இந்தப் பட்டியலில் எத்தனையோ பேர். அனைவரின் பெயரையும் பட்டியலிடுவது பொதுவெளியில் தகாது என்பதால் உங்கள் வாக்கியத்தின் படி ஓர் அறிவுஜீவியாக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஓர் இலக்கிய மாத இதழ், தங்கள் முகப்பில் “இதழல்ல இயக்கம்” என்று போட்டுக் கொண்டிருக்கும். 

ஆனால், அதை அழகாக செயல்படுத்தி வருபவர் தாங்களே.
தினமணியை இதழாக இல்லாமல் ஒரு அரசியல் இயக்கமாகவே நடத்தி வருவதை, உலகம் அறியும். அதைத்தான் இப்போது நான் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறேன்... தினமணி பின்னேற்றக் கழகம் என்று! - அதன் தலைவர் தாங்கள்! ஒவ்வொரு பதிப்பும் ஒரு மண்டலம். அதற்குள் மாவட்டம். வட்டம். அதன் நிருபர்கள், செய்தியாளர்கள் அந்த அந்த மாவட்ட,வட்ட செயலர்கள். உள்ளே செ.ஆ., பொ.ஆ., உ.ஆ., தலைமை செய்தியாளர்கள், எல்லோருக்கும் ஒரு பொறுப்பு. தலைவரின் சுற்றுப்பயணம், கூட்டங்கள் குறித்த விவரங்கள் தினமணியில் முன்னதாகவே பிரசுரிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுவிடும். 

அங்கங்கே, தலைவர் பயணம் செய்யும் ரயில் வரும் போது, ரயில் நிலையங்களில் வட்டச் செயலர் தலைவருக்குப் பிடித்த உணவு, இனிப்பு, இட்லி சாம்பார் பாக்கெட்டுகளுடன் காத்திருந்து கையசைப்பார். எவர் தீவிர விசுவாசியோ, அவருக்கு வருடாந்திர கவனிப்பு நன்றாக இருக்கும். 

இப்படியாக ஓர் அரசியல் கட்சியில் இருந்து எதைப் பார்க்க வேண்டுமோ அதை, அரசியல் கட்சிகள் என்றாலே அடியோடு வெறுக்கும் நான் குறுகிய காலத்தில் தி.பி.க.,வில் இருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். அதற்காக நன்றி. இனி நானும் அரசியலில் ஈடுபடலாம். 

எப்படி நம்மை நாமே முன்னிறுத்திக் கொள்வது, எப்படி ஒரு கட்சியைக் கையாள்வது, எப்படி போட்டுக் கொடுத்து இடத்துக்குத் துண்டு போடுபவர்களின் பேச்சைக் கேட்டு அரவணைப்பது, போட்டுக் கொடுக்கப் பட்டவர்களின் சீட்டைக் கிழிப்பது எல்லாம் உடனிருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். எல்லாம் அனுபவம். அந்த அனுபவத்தைப் படிக்க வைத்த தங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.  

இத்தகைய பின்னணியில் நீங்கள் எழுதிய தலையங்கத்தை விமர்சிக்க விழைகிறேன். ஏனெனில் தங்களுடன் தொடர்பு விட்டுப் போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும், தங்களிடம் நேரில் சொல்ல முடியாது என்பதாலும், அப்படியே சொல்பவர்களின் பேச்சையே தட்டிக் கழிக்கும் தாங்கள் என் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று என் உள்மனம் சொல்வதாலும் இதனை இங்கே பதிவு செய்கிறேன்.
 நிற்க...

தங்கள் 15.2.2017ம் தேதியிட்ட தலையங்கத்தில்...

//மது கோடாவும், ஓம் பிரகாஷ் செளதாலாவும் ஊழல் வழக்கிலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.// 
ஆஹா... ஊழல் செய்யாமல் சொத்துக் குவிப்பது எப்படி என்பதையும், ஊழலுக்கும் சொத்துக் குவிப்புக்கும் என்ன வித்யாசம் என்பதையும் வாசகர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகச் சொல்லிவிட்டால், நானும் தங்களை உயர்ந்த ஆசிரியராகக் கொண்டு கற்றுக் கொள்கிறேன். காசு இல்லாம ரொம்ப கஷ்டப் படுறேனுங்க ஸாமீ. 

//"...ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்போது நிலமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி ஒரு அவமானத்தை எதிர் கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லதுதான் என்று கூறத் தோன்றுகிறது..."//

// "யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு  நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி படுத்தியிருக்கிறது"//

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

தீர்ப்பும், தண்டனையும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை ஜெயலலிதா அனுபவிக்காதது நல்லது... 
என்ன நியாயமோ? புரியவில்லை!

2014ல் இதே கர்நாடக நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பு அளித்த போது வராத அவமானம், இப்போது வந்துவிடுமா? எந்த மாநிலத்துடன் காவிரிப் பிரச்னைக்காக சண்டை போட்டு மல்லுக்கட்டினாரோ அந்த மாநிலத்தில் கேவலப்பட்டு, அந்த மாநில மக்களால் சிரிப்பாய்ச் சிரித்து, ஒட்டு மொத்த தமிழகத்தையே கேலி பேசும் விதமாக நின்றபோது வராத அவமானம் இப்போது வந்துவிடப் போகிறதா?

ஜெயலலிதா மறைந்த போது (டிச.6,2016) முதல் பக்க சிறப்பு தலையங்கத்தில்,

"இனி ஜெயலலிதா ஓர் அசைக்க முடியாத சக்தி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இடியென தாக்கியது பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும், அதைத் தொடர்ந்த அவரின் சிறைவாசமும் அவரை நிலை குலைய வைத்துவிட்டன. அந்த அதிரடி தாக்குதலிலிருந்து ஜெயலலிதா மனதளவில் மீளவே இல்லை.
 அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இப்போது மரணத்தை தழுவி இருப்பதற்கு குன்ஹா வழங்கிய தீர்ப்புத்தான் காரணம் என்று சரித்திரம் பதிவு செய்தால் வியப்பதற்கில்லை...." 
  
- என்று ஜெயலலிதா மரணத்துக்கு குன்ஹாவைக் காரணம் காட்டுகிறீர்கள். நீதிபதி அல்ல;  ஜெயலலிதா அன்கோ செய்த தவறுகள் தான் காரணம் என்று சொல்லத் தோன்றாத நடுநிலையைத் தாங்கள் கொண்டிருப்பது மெத்த மகிழ்ச்சி தருகிறது. 

நிற்க...

ஜெயலலிதா மறைந்த போது மிக பதட்டமான சூழல் இருந்தது. பிரச்னை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, கட்சியினர்கூட அமைதியாக  இருந்து அந்த நேரத்தை எதிர்கொண்டனர். ஆனால் அப்போது இந்தச் சூழலை குன்ஹாவுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, சசிகலா மீது பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்தை திசை திருப்பி விட்ட அற்ப சந்தோஷத்தை தாங்கள் அடைந்திருப்பீர்கள். 
ஆனால் இன்று குன்ஹா, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலால், நேர்மையாளர் என வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார். கோடிகளுக்கு விலைபோகிறவர்கள் கேடிகளாவர் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் குமாரசாமி கேலிக்கு ஆளாகிவிட்டார். 

தலையங்கத்தின் கடைசிப் பகுதியில் தாங்கள் ஒரு அதிமுக., கட்சி நாளேட்டின் தகுதி வாய்ந்த  ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் கவனம் தெரிகிறது. அதற்காக நீங்கள் சொல்லும் வழிமுறைகள், திரு.எம்.நடராஜனாரை சந்தித்து அடிக்கடி பேசுவதில் இருந்து வெளிப்படுகிறது. ஏன்.. உங்கள் சிந்தனை இப்படிப் போகாதா?
பன்னீர்செல்வமும் சசிகலா காலில் விழுந்து கும்பிடு போட்டவர்தான். அவரை முதல்வராக நீடிக்க வைத்து, தாங்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தங்கள் அராஜக/பிறர் சொத்தை, அரசாங்க சொத்தை கபளீகரம் செய்யும் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலட்டுமே என்று! அப்படி எனில் கட்சி உடையும் நிலை வராது இல்லையா?

எப்படிப் பார்த்தாலும் தாங்கள் தமிழக மக்களுக்கு துர்நலனை நாடும் துர்போதனையைச் செய்கிறீர்கள் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்!

ஒருவேளை தாங்களே நேரடியாக பாதிக்கப்பட்டால் பொங்கி எழுவீர்கள் போலும்! 

ஆளுநரை குறை சொல்லும் நீங்கள், ஆளுநரின் செயல், மோடி, குருமூர்த்தி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் திருவாளர் தி.க. வீரமணியின் கருத்தைச் சொல்லி, திருவாளர் எம்.என்.னின் கைக்கூலி ஆகிவிட்டீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே! அதை எப்படித் துடைப்பீர்கள்! தேவையில்லைதான்... உண்மை அதுவாகவே இருக்கும்போது!

ஆனால் இப்போது ஒன்று சொல்லத் தொடங்கியிருக்கிறீர்கள். எல்லாம் முதலாளியின் கட்டளை என்று! அமரர் கோயங்கா தொடங்கி, இன்று வரையுள்ள முதலாளியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெளிவாகக் கூறுவார்கள்... தினமணியின் ஆசிரியர் குழுவுக்கு இருக்கும் கௌரவமே சுதந்திரம்தான்! முதலாளியுடன் பழகி அறிந்தவன் என்ற வகையில், அவர் ஒன்றே ஒன்று சொல்வார்... எல்லா முதலாளிகளும் சிந்திக்கக்  கூடியதுதான்.. இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பாதகமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே! அது நம் தார்மீக கடமையும்கூட! இந்த ஓர் இதழின் இயக்கத்தில்தான் எத்தனை பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது!?
ஆனால் எக்காலத்திலும் இப்படிப் போடு என்று கட்டளையிடும் முதலாளி இல்லை! 
தாங்களாகவே சசிகலா நட்பு வட்டம் நாடி, ஆதரவு நிலை எடுத்து, முதல் பக்கத்தில் இருந்து செய்தியைப் பிரதானப் படுத்தி... எல்லாம் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

வெகுஜன இயக்கத்தில் இருந்து தனித்துப் போகும் உங்கள் திபிக., இயக்கம்... பெரும் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமே என்றும், இதழை நம்பியுள்ள பலரின் வாழ்க்கை கெட்டுப் போய்விடக் கூடாதென்ற கவலையினாலும் இவ்வளவு நேரத்தை செலவிட்டு இதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

ஆசிரியரே! நாங்கள் எதிர்பார்த்தது தினமணி ஆசிரியராக, தன் பெருமையைக் காக்கும் ஒருவராக தாங்கள் இருப்பதைத்தானே ஒழிய, அதிமுக., கட்சிப் பத்திரிகையின் ஆசிரியராக அல்ல! ஆகவே ஆசிரியரே நீங்கள் நீங்களாக இருக்க வேண்டாம். தினமணி ஆசிரியராக இருங்கள்! 

இப்படிக்கு, 
தினமணியின் நலன் நாடும்
உங்கள் முன்னாள் நண்பன்.


Best Regards,

Senkottai Sriram

(Journalist / Writer)

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix