ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது... இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட,
தவறு செய்யத் தூண்டி, வண்டியோட்டியின் கண்ணில் படாதவாறு இடது புறம் மரத்துக்குப் பின்னோ, தெருவிளக்கு மின் பெட்டிக்குப் பின்னோ மறைந்து நின்று... திடீரென இடப்புறம் திரும்பி வருபவரை கப் என்று பிடித்து, கறந்து விடுவது... போக்குவரத்து போலீஸாரின் இயல்பு. அவர்கள் என்றுமே, தவறு செய்யாமல் தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் நிற்பதில்லை!
இது கிட்டத்தட்ட ஸ்டிங் ஆபரேஷன் போல்தான்! அதாவது பொறி வைத்துப் பிடிப்பது.
ஏற்கெனவே சபல புத்தியுள்ள ஒருவனை, விதி மீற வைத்து, அபராதம் கறக்கும் ஒரு செயலைச் செய்வது அறமா?
இது போன்றதற்கான விடையை, ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை வைத்து நீதிபதி ராமசுப்ரமணியன் சொன்னது ரசிக்கும் படி இருந்தது. நல்ல தகவலாகவும் இருந்தது.
எங்கே என்று கேட்கிறீர்களா?
***
தினமணி அறக்கட்டளையின் சார்பில், மார்ச் 1 ஆம் நாள், ஏ.என்.எஸ்., நினைவுச் சொற்பொழிவு என்றும், முதல் சொற்பொழிவாக நீதிபதி ராமசுப்ரமணியன் சிறப்புச் சொற்பொழிவு என்றும் பார்த்தேன். தலைப்பு இன்னும் தூண்டுதலாக அமைந்துவிட்டது. "இதழியல் அறம்” என்பதுதான் அது.
நீதிபதி ராமசுப்ரமணியன் மீது பெரும் மரியாதை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் உண்டு எனக்கு! நேரில் சந்தித்து அளவளாவிய தன்மையால் மட்டுமல்ல... எவர் ஒருவர் பசுவை வைத்து பூஜை செய்து நியமப்படி நடந்து கொள்கிறாரோ... அவர் காமதேனுவின் அம்சம் ஆகிறார்!
நீதிபதி ராமசுப்ரமணியன் தமது இல்லத்தில் இப்போதும் பசு மாடு வைத்து, கோ பூஜை முறையாகச் செய்து, தர்ம நெறிப்படி வாழ்வை நகர்த்திச் செல்பவர். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு! மேலும், நல்ல பேச்சுத் தமிழ் நடை கைவரப் பெற்றவர். கெக்கே பிக்கே நகைச்சுவை என மலிவான சரக்கை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல், இயல்பான கௌரவமான நகைச்சுவையைக் கையாளக் கூடியவர். அந்த எண்ணத்தில் ஏ.என்.எஸ்ஸுக்காகவும், தினமணிக்காகவும், நீதிபதியாருக்காகவும் இந்த நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வராவிட்டாலும், தினமணியின் பொது அழைப்பு காரணத்தால், தினமணி வாசகனாகவே இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்!
***
நிகழ்ச்சியில் பேசிய அனைவரின் பேச்சுமான, ஓரளவு முழுமையான ரிப்போர்ட்... தினமணியில் 2ம் பக்கம் முழுமைக்கும் பிரசுரமாகியிருக்கிறது. பார்த்துப் படித்துக் கொள்க!
நீதிபதியார் பேசியவை வழக்கம்போல் ரசிக்கத் தக்கனவாய் அமைந்திருந்தது.
அவர் பேசியவற்றில் ஒரு கருத்து...
***
அறம் விலகக் காரணம்..?
இதழ்களின் எண்ணிக்கை பெருகியது; (இதழ்கள் பெருகிய அளவுக்கு வாசகர்கள் பெருகாதது); இதழ்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை! முந்தித் தருதலில் குளறுபடி; கிடைத்தது மலினமாக இருந்தாலும் காசுக்காக செய்தியாக்குவது! தவிர்க்க இயலாத போட்டியால் பொறிவைத்தல் செய்திச் செயல்களில் ஈடுபடுவது....
- இப்படி சில காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
அடுத்தது... அவரின் உரைத் தொகுப்பில் கடைசியாக இடம்பெற்ற முத்தாய்ப்பு வார்த்தைகள்!
ஓர் இதழ், அறத்தில் பால் நிற்கிறதா அல்லது அப்பால் தள்ளிப் போகிறதா என்பதை, அந்த இதழ் வெளியிடும் செய்திகள், அதில் இடம்பெறும் கட்டுரைகளின் உண்மைத் தன்மை, பொதுநலன் மட்டுமே அதில் பொதிந்துள்ளதா அல்லது தங்களுடைய சுழற்சி (சர்குலேஷன்), மலிவான பரபரப்பு விற்பனையை மையமாகக் கொண்டுள்ளதா என்ற தன்மை, (சுயவிளம்பரம், சுயதம்பட்டம் கொண்டு விளங்கும் தன்மை) இவற்றுக்கான விடையில்தான் இதழியல் அறத்தின் உயிர் நாடி உள்ளது.
***
இப்படியாக,
இந்த உயிர்நாடியை உயர் நாடித் துடிப்பாய்க் கொண்டு செயல்பட்டதால்தான், ஏ.என்.எஸ் என்ற ஒரு சித்தாந்தத்தை இன்றளவும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்த உயர் தனிச் சிந்தனை!
இருக்கும்போது, ஜால்ரா போட்டு, அண்ணன் வாழ்க, ஐயா வாழ்க கோஷம் போடுவதெல்லாம் அவ்வப்போதைக்கு காதுக்கு குளிராகவும் மனதுக்கு போதையாகவும் இருக்கும்... ஆனால் காலம் கடந்து நிற்பதுதான் பிறப்பின் பயன்.
அந்தப் பிறவிப் பயனை அடைந்த ஏ.என்.எஸ் போன்றவர்கள், நமக்கு வழிகாட்டிகளாய் அமையட்டும்!
கருத்துரையிடுக