சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, அக்டோபர் 02, 2015

ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!





காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா... அது நல்லாருக்குமா?

காந்தி ஜெயந்தி என்றதும்... எனக்கு திடீரென ஒரு நூலும் மனிதரும் நினைவுக்கு வந்தனர்.

காந்திஜியின் உதவியாளராக இருந்த திரு.கல்யாணம் 14 வருடங்களுக்கு முன்... ஒரு முறை தேனாம்பேட்டையில் உள்ள தன் இல்லத்துக்கு வருமாறு சொல்லியிருந்தார். சில அரிய புகைப்படங்கள் காட்டுகிறேன் என்றார். போய்ப் பார்த்தேன். நான் சென்ற அந்த நேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பிளாட்டில் வசிக்கும் திரு.கல்யாணம், கீழே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைகளை விளக்குமாறு கொண்டு பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே அவரிடம் காரணம் கேட்டேன்... "காந்திஜி கட்டளை" என்றார்.

எல்லா வசதிகளும் இருந்தும், உடன் அதிகம் பேர் இருந்தும் தனக்கான வேலையை தான் பார்ப்பது, தன் இருக்குமிடத்தை தானே தூய்மைப் படுத்துவது... இப்படியாக அந்தப் பேச்சு சென்றது. 

(நானும் கூடத்தான். எனக்கான வேலைகளை நானே செய்து கொள்கிறேன். சமைப்பதும், துவைப்பதும், தூய்மைப் படுத்துவதும் என... [ அட.... இது வேறு வழியில்லாமல்... காலத்தின் கட்டாயம்ங்க... அதையெல்லாம் இப்படித்தான் காந்தி ரேஞ்சுக்கு நாங்களும்தான்னு விளம்பரப்படுத்திக்கணும்... இல்லைன்னா எந்தப் பய நம்ம மதிப்பான்? எல்லாத்துக்கும் ஒரு வெளம்பரம் தேவைப்படுது இல்ல..?!! ]

ஆக.. அப்படியாக... அந்த வகையில்... நாமும் காந்தி வழியில் நடக்கிறோம்; அதை இந்த காந்தி ஜெயந்தியில் ஊருக்கு நல்லது சொல்வோம்னும், உண்மை தெரிந்தது சொல்வோம்னும் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டு... ஒரு புத்தகம் குறித்த தகவலையும் சொல்லிவிடலாம் என்று தோன்றியதன் பேரில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். )

மயிலாப்பூரில் அமைந்த - வயதுக்கு மீறிய - நட்புகளில் ஒருவர் நாடகப்பணி அருணகிரி. ம.பொ.சி ரேஞ்சுக்கு வெளுத்த முறுக்கிய மீசையுடன் வருவார். ஒல்லியான உருவம். நாடகங்கள் பல எழுதியவர். சென்னை வானொலியில் வைத்து எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உண்மையில் சொல்லப் போனால்... சென்னை வானொலி நிலையத்தில் மாதம் ஐந்தாறு முறை சென்றபோதே பல பேருடைய அறிமுகம் கிடைத்தது எனலாம். நாடகக் கலைக்காகவே வாழ்வை அர்ப்பணித்த அருணகிரி ஐயாவுக்கு நாடகப்பணி அருணகிரி என்றே பெயரும் சேர்ந்து அமைந்துவிட்டது. நாடகம், திரைக்கலை, நாடகக் கலைக்காக பத்திரிகைகளை நடத்தியவர்.

ஒரு முறை "ஊருக்கு ஒரு மனிதர்" என்ற நாடகத்தின் அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது அடியேன் மஞ்சரி இதழாசிரியர் பணியில். 2005 ல் ! பத்து வருடங்கள் ஓடி விட்டன. இப்போதும் பசுமையாக நினைவில் உள்ள சம்பவம்.  இந்த நாடகத்தை 1998ல் எழுதி மேடை ஏற்றினாராம். அந்த நாடக நூலுக்கு அணிந்துரை எழுதித் தர வேண்டும் என்றார். அடடா.. சார். நான் முப்பது வயதைக் கடக்காத ஒரு சிறு இளைஞன். என்னிடம் போய்.... என்று இழுத்தேன். வற்புறுத்தி பிரதியைக் கொடுத்து விட்டு சொன்னார்... இந்த நாடகம் இளைஞர்களிடம் செல்ல வேண்டும். நீங்கள் தேசியம் தெய்வீகம் இரண்டிலும் ஆழமான பற்று கொண்டவர். மேலும் அணிந்துரை என்று யாரிடம் கொடுத்தாலும், ஓரிரு பக்கங்களுக்கு மேல் எழுதித் தரமாட்டார்கள். நீங்கள் இதனை முழுதாகப் படித்து, எனக்கு ஐந்தாறு பக்கம் வருவது போல்... பெரிதாக எழுதித் தரவேண்டும்... என்று அன்புக் கட்டளை  இட்டார்.

அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தேன். காந்தியவாதியாக ஒருவர் எப்படி ஊரைத் திருத்துகிறார்; இளைஞர்கள் துணையுடன் ... என்ற வகையில் அமைந்த கதை. அதற்கு அடியேன் எழுதிய அணிந்துரையை  விருப்பமுள்ளவர்கள் படித்து அனுபவிக்கலாம். அவற்றின் ஒளிப்பட நகல் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix