சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, டிசம்பர் 13, 2014

தினமணியில் இருந்து வெளியேறினேன்..!



அன்பு நண்பருக்கு... 

நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டேன்.

வெளியேறியதன் பின்னணி...  இதுதான் !

*****
தினமணி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜீரோ நியூஸ் வேல்யூ ஐட்டம் எல்லாம் (எடிட்டர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், படங்கள் என) வருவதாக எல்லாருமே பேசுகிறார்கள். 

வெப்பில் கமெண்ட்களை மாடரேட் செய்யும் பொறுப்பில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். அசிங்கமான வார்த்தைகள் கொண்டு திட்டுகிறார்கள்... ஒவ்வொரு முறையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.. தினமணியை அடுத்த நமது எம்.ஜி.ஆர். என்று சொல்ல வைத்துவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். 

உடன் இருந்து பார்த்து பல முறை நல்லது சொல்லியிருக்கிறேன்.. ஆனால், அவர் கேட்கவில்லை. ஆனால், என் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.  பல முறை உரசல்கள் ... தவறுகளைச் சுட்டிக் காட்டினால் தகராறு. 

இந்த முறை இண்க்ரிமெண்ட் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். 
பிப்ரவரி மாசமே அவரிடம் எங்கள் டாட்காம் டீம் பேப்பர்களை கொடுத்தேன். ஆனால், போன மாசம் வரை அதை கையெழுத்திட்டு அனுப்பவேயில்லை. 

தீபாவளி நேரத்தில் அனுப்பியிருந்தாலாவது, போனஸ் போல் ஏதோ கொஞ்சம் பணம் சகாக்களுக்கு கிடைத்திருக்கும். என் டீம் மக்கள் மட்டுமல்லாது, தினமணியின் ஒவ்வொரு எடிஷன் நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் என அனைவருக்குமே பல சிரமங்கள். ஒழுங்காக ஏப்ரலில் அனுப்பினால், மே மாதம் டிரான்ஸ்பர் ஆகிப் போறவங்க, போகிற இடத்தில் வீடு பார்த்து செட்டில் ஆக முடியும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது  உள்பட. 

ஆனால், இவரோ அக்டோபரிலும் நவம்பரிலும் போட்டால் எப்படி அவர்களால் போய் வேலை செய்ய முடியும். ? 

எடுத்துச்சொன்னாலும், கேட்க மாட்டார். சுய வேலைக்காக சி.எம்.டியைப் பார்த்து கேட்பவர்.. பணியாளர் குறித்து எதையும் முன்வைக்கவில்லை....

இத்தகைய சூழலில்தான் இந்தமுறை பெரும் ஏமாற்றத்துக்கு உட்பட்டு, தீபாவளி அன்று பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டேன்...

**** 

பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்த பேஸ்புக் ஸ்டேடஸ் இதுதான்...
ஆனால், இதனால் பிரச்னை பெரிதாகி, மேலிடத்தில் இருந்து அழைப்பார்கள் என எதிர்பார்த்தேன்.

அதன்படியே சி.எம்.டி. அழைத்துப் பேசினார். அவரிடம், நீங்கள் என்னை அழைத்துப் பேசுவீர்கள் எனத் தெரியும் என்றேன். என் கருத்துகளை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒவ்வொரு எடிஷன் செய்தி ஆசிரியர்களையும் அழைத்து, அவரவர் எடிஷனில் உள்ள காலியிடங்களை நிரப்ப அவரவர்க்கு அதிகாரம் அளித்தார்.

எல்லாமே எடிட்டர் மூலம்தான் நடக்கும் என்ற நிலையை மாற்றினார். எல்லோருக்கும் இண்க்ரிமெண்ட் உடனடியாகப் போடவும், அரியர்ஸுடன் இந்த மாத சம்பளத்திலேயே சேர்க்கப்படவும் ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் சரியான தீர்வு கிடைத்தது... ஓரளவு தினமணி என் அதிரடி நடவடிக்கையால் ஒரு சரிவிலிருந்து தப்பித்தது. 

ஆனால், எடிட்டர் வைத்தியநாதனோ.. ஒன்று நான் இங்கே இருக்க வேண்டும், இல்லை சீராம் இருக்கட்டும்.. என்று சி.எம்.டி.யிடம் பேரம் பேசி, அவரைப் பணிய வைத்துள்ளார். இந்த நிலையில் நானே ராஜினாமா செய்வதாகச் சொல்லி கடிதம் கொடுத்தேன்... 
எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

என் பேஸ்புக் ஸ்டேடஸ்!
Senkottai Sriraam feeling angry
October 19 at 4:53pm ·
இந்த முறை 
தீபாவளி .. கொண்டாட்டத்தில் சுரத்தில்லை! 
எனக்கு மட்டுமில்லை... 
சகாக்களுக்கும்தான்!

உள்ளத்தில் சோர்வடைந்து 
வெளியில் பல்லிளித்து நடித்து...

விட்டமின் 'ப' 
கிட்டாமல் செய்து விட்டதற்காக...
அந்த ஒருவருக்கு
நொந்த ஒருவனாய் 
ஒரு கோடி புண்ணியம்!

என் 
சகாக்களின் மனச்சோர்வில் பங்கெடுத்து...
அலுவலக வேலையைப் பார்த்தபடி
தீபாவளியைக் கொண்டாடுகிறேன்..!

உழைப்பை உறிஞ்சி உலா வருபவருக்கு
எல்லா நாளும் திருநாளே!

உழைத்துக் களைப்பவருக்கு 
எல்லா நாளும் ஒரேநாளே!

திங்கள், டிசம்பர் 08, 2014

வரலாற்றுக் கால ஐயப்பன் கதை!

இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்...
உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருந்தான். ஒருசமயம் சபரிமலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவனால் முடியாமல் போகவே, அங்கிருந்த ஒரு மாந்திரீகரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அவர், சபரிமலையில் தர்மசாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனின் கோயில் இருப்பதாலும், அதன் அபார சக்திதான் அந்தக் கிராமத்தைக் காத்து வருவதாகவும் கூறினார்.
அதனால் வெகுண்டெழுந்த உதயணன், எப்படியாவது அந்தக் கோயிலை நாசப்படுத்தி, கோயிலையும் கொள்ளையடிப்பேன் என்று சபதம் செய்து, அவ்வாறே சபரிமலைக் கோயிலை தீக்கிரையாக்கி நாசப்படுத்தினான். தடுக்க வந்த கோயில் நம்பூதிரியைக் குத்திக் கொலை செய்தான். தனது அப்பா உதயணனால் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்த நம்பூதிரியின் மகன் ஜெயந்தன், மீண்டும் சபரிமலைக் கோயிலை எடுத்துக் கட்டுவேன் என்றும், உதயணனைப் பழிவாங்குவேன் என்றும் சபதம் செய்தான்.
உதயணனே அறியாமல் அவனது கொள்ளைக் கூட்டத்திலேயே போய்ச் சேர்ந்தான் ஜெயந்தன். இதற்கிடையில் உதயணனுக்கு பந்தள ராஜாவின் சகோதரியைத் திருமணம் செய்துகொண்டு, தனக்கு ராஜமரியாதை வரவேண்டும் என்ற ஆசை பிறந்தது. எனவே அவன் ராஜகுமாரியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிவந்து விட்டான். தன்னுடன் வந்த ஜெயந்தனிடம் ராஜகுமாரியை பத்திரமாகத் தனது இருப்பிடத்தில் கொண்டுபோய் விடுமாறும், தான் மேலும் கொள்ளையடித்துவிட்டு வருவதாகவும் கூறி, உதயணன் சென்று விட்டான்.
இந்நிலையில் ஜெயந்தன் ராஜகுமாரியிடம் தனது சபதத்தைக் கூறினான். ராஜகுமாரியும் தனக்கு உதயணனைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றாள். ஜெயந்தனையே திருமணம் செய்துகொண்டு, சபரிமலைக் கோயிலைப் புதுப்பிக்க தானும் உதவிசெய்யப் போவதாகக் கூறினாள். அவள் விருப்பப்படி ஜெயந்தனையே திருமணம் செய்து கொண்டாள்.
அவர்கள் இருவரும் அருகிலுள்ள குகையில் வாழ்க்கை நடத்தினார்கள். கோயிலைக் கட்ட இறையருள் வேண்டும் என்று எண்ணி, தர்மசாஸ்தாவை நோக்கித் தவம் புரிந்தனர். தர்ம சாஸ்தா அவர்களுக்குப் பிரசன்னமாகி, வேண்டும் வரம் கேட்டார். தங்கள் விருப்பத்தை அவர்கள் கூறினர். ஐயப்பனாக தானே மறுபிறப்பு எடுத்து வருவதாக அவர்களிடம் வாக்களித்தார் சாஸ்தா. அதன்படி ஐயப்பன் அவதரிக்க, இது பற்றி விவரமாகக் கடிதம் எழுதி, அக்குழந்தையை பந்தள ராஜனிடம் அனுப்பி வைத்தார்கள்.
பந்தள ராஜாவும் குழந்தை ஐயப்பனை நல்ல முறையில் வளர்த்து வந்தார். ஓரளவுக்கு வயது வந்தவுடன் தனது தந்தையான ஜெயந்தன் போட்ட சபதத்தை நிறைவேற்ற, தனது படைவீரர்களுடனும் சகாக்களுடனும் கானகத்திற்குக் கிளம்பினார் ஐயப்பன். காட்டிற்குச் செல்லும் வழியில் கண்ணில்பட்ட உதயணனின் ஒவ்வொரு முகாமையும் தாக்கி, கொள்ளையர்களை அழித்தவாறே சபரிமலையை நோக்கிச் சென்றனர் அனைவரும்.
அப்போதுதான் அராபியக் கடல் கொள்ளைக்காரரான வாபர் ஐயப்பனுக்கு அறிமுகமானார். இவர் அலிக்குட்டி அஸீமா தம்பதியினருக்குப் பிறந்தவர். எரிமேலி பகுதியிலுள்ள உதயணனின் முகாமைத் தாக்கி அழித்து, அந்த இடத்திற்குக் காவலாக வாபரை நிறுத்திவிட்டுச் சென்றார் ஐயப்பன்.
இறுதியில் கரிமலைக்கோட்டை என்ற இடத்தில் உக்கிரமான சண்டை நடந்தது. அந்தச் சண்டையில் உதயணனைக் கொன்றார் ஐயப்பன்.
சண்டை உக்கிரமாக நடந்த போது உதயணனின் கூட்டத்திலிருந்த ஒரு கொள்ளையன் தப்பித்து விட்டான். வரும் வழியில் எரிமேலியில் வாபரைப் பார்த்தான். ஐயப்பனின் மேல் இருந்த கோபத்தால் வாபரைக் கொன்று விட்டான்.
பின்னர் பந்தளராஜனும் சபரிமலை வந்து சேர்ந்தார். நல்ல நாள் பார்த்து அனைவரது முன்னிலையிலும் சபரிமலைக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டும் பணி நடைபெற்றது.
கோயில் கட்டி முடிக்கப்பட்டதும், குடமுழுக்கு மற்றும் ஆராதனைகளை நடத்தினார்கள். இறுதியில் மங்கள தீபாராதனையின் போது, ஐயப்பன், தர்மசாஸ்தாவான தான் அவதாரமெடுத்த நோக்கத்தினை அனைவருக்கும் கூறி, மனி உடலோடு அப்படியே மறைந்துவிட்டார்.
ஐயப்பன் ஜோதி ரூபமாக ஐயனின் விக்கிரஹத்திடம் ஐக்கியமனார். அக்காட்சியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்தார்கள். ஐயப்பனைப் போற்றி வணங்கினார்கள். சபரிமலைக் கோயிலை மீண்டும் கட்டுவதற்காக தானே மறு அவதாரமெடுத்த ஐயப்பனை நினைந்து போற்றித் துதித்தார்கள்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix