சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், அக்டோபர் 02, 2013

காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை


1988 - மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி 'மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன்.

இடம்: தென்காசி திருவள்ளுவர் கழகம். தென்காசி பெரிய கோவில் கோபுரம் அப்போது கட்டப்பட்டு வந்தது. குற்றால மலைக் காற்று சுகமாய் மோதித் தலை கோதும்! நான் அப்போது தென்காசி கீழப்புலியூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன். அதற்கு முன்னர் பள்ளிகள் அளவிலான சிறு சிறு போட்டிகளில் பங்கு பெற்றிருந்தேன் என்றாலும், அவை எல்லாம் மைக் இல்லாமல் சிறிய அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் பேசும் பேச்சுப் போட்டிகளாகத்தான் இருந்தன! அன்று... அக்.2. காந்தி ஜயந்தி!

தென்காசி திருவள்ளுவர் கழகம், பொதிகைத் தென்றலுடன் அகத்தியம் கண்ட தமிழ் ஒலிக்கும் திருக்கூடம்! இலக்கியவாதிகள் பலர் களம் கண்ட புனிதமான மேடை!

காந்தி ஜயந்தி என்பதால் அன்று மாணவர்கள், பெரியவர்களின் பேச்சுக்கு திருவள்ளுவர் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லாரும் காந்தியைப் பற்றியே பேசுகிறார்களே... நாம் வேறு ஏதாவது பேசலாமே என்று தலைப்பை யோசித்தேன். காந்தியைப் போல் தென்னகத்தில் தாக்கம் ஏற்படுத்தியவர் கர்மவீரர் காமராஜர். அவருடைய அரசியல் குருவாகத் திகழ்ந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் குறித்தே பேசலாமே என்றார் ஆசிரியர் ராமலிங்கம். குறிப்பெடுத்தேன். முதல் ’மைக் பிடித்து’ மேடையேற்றம் கண்டேன்!

பேசி முடித்த பின்னர் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார்கள். "இந்திய சுயராஜ்யம்” என்ற புத்தகம். மதுரை காந்தி இலக்கியப் பண்ணை வெளியிட்ட புத்தகம். அதில், காந்திஜி ஒரு வாசகரும் ஆசிரியரும் பேசுவது போல் பல கருத்துகளை விதைத்திருப்பார். இந்தியாவின் நிலைமை, ஹிந்துக்களும் முஸ்லிம்களும், சுயராஜ்யம் என்றால் என்ன, இந்தியா எப்படி விடுதலை அடைய வேண்டும், மிருக பலத்தால் என்ன சாதிக்க முடியும், சாத்வீக எதிர்ப்பை பதிவு செய்வது எப்படி, கல்வி, இயந்திரம் போன்றவற்றைப் பற்றி தமது கருத்துகளை அலசியிருப்பார். இயந்திரம் பற்றி அவர் குறிப்பிடும் ஓர் இடத்தில், இயந்திரங்களால் மனிதனின் பணிகள் பாதிக்கப்படுவதையும், மனித உழைப்புக்கு மதிப்பில்லாது போவதையும் குறிப்பிடுவார். அதில், ரயில்களுக்கும் டிராம் வண்டிகளுக்கும் எதிரான அவரின் அதீத எதிர்ப்பு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எந்த ரயில் வண்டியில் ஏறி இந்தியா முழுமைக்கும் ஊர் சுற்றி மக்களைச் சந்தித்தாரோ, அதே ரயில் வண்டியின் மீதான கோபம், ஆலைகளுக்கு எதிரான கொள்கை, இயந்திரங்கள் வேண்டாம் என்ற கருத்து... எல்லாம் 13 வயது மாணவனாக இருந்த எனக்குள் ஒரு தீவிர யோசனையைக் கிளப்பியிருந்தது. எனக்கு எழுந்த அதே சந்தேகத்தை அவரே ஒரு கேள்வியில் கேட்டு பதிலாகவும் ஆக்கியிருந்தார்.

நீங்கள் குறிப்பிடும் இந்த எதிர்ப்பு உணர்வையெல்லாம் அதே இயந்திரத்தின் மூலம்தான் அச்சிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.. என்று கேள்வியும் கேட்டு, அதற்கு பதிலாக, “விஷத்தைக் கொல்ல விஷம்தான் பயன்படும்” என்றும் கூறியிருப்பார் மகாத்மா காந்தி.
சிறு வயதிலேயே வேறு பொழுது போக்குகள் இல்லாத காலம் என்பதால், புத்தகங்களைப் படிப்பதே ஒரே பொழுது போக்கு! இந்த இந்திய சுயராஜ்யம் புத்தகத்தை நீண்ட நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன். அதில் என் பெயரும் வருடமும் திருவள்ளுவர் கழக இலச்சினையும் இருக்கும்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர். காந்திஜியின் கிராம சுயராஜ்யம் குறித்து குறிப்புகளைக் கேட்டார். கைவசம் இருந்த இதே நூலை அவரிடம் கொடுத்து உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிவந்தேன். ஆண்டுகள் பலவானாலும் காந்திஜியின் தர்ம சிந்தனைகள் மட்டும் உள்ளத்தில் பதிந்து விட்டன.

(பின் குறிப்பு: இலக்கிய தாகத்தை வளர்த்தது திருவள்ளுவர் கழகமும் ரசிகமணி டி.கே.சி., வாரிசுகளாய் தமிழ் கற்பித்த (பள்ளி சாராத) பெரியவர்களும் என்றால், அரசியல் வாசனையை வெறுக்க வைத்ததும்கூட அதை ஒட்டிய இடமும் தமிழாசிரியர்கள் என்ற போர்வையில் கட்சிப் பணிகளுக்கு அழைத்துச் சென்ற வாத்தியார்களும்தான்! திமுக கூட்டத்துக்கு ஆள் சேர்க்க எங்களை அழைத்துச் சென்றார்கள். தென்காசி பெரிய  கோயில் எதிரே நடக்கும் திமுக கூட்டத்தில், வை.கோபால்சாமி அடுக்கு மொழியில் பேசினால் அடுத்தடுத்து கை தட்ட நாங்கள் வேண்டும்! தேர்தல் நோட்டீஸ் கொடுக்க நாங்கள் பயன்படுத்தப் பட்டோம். கருணாநிதியைத் தவிர வேறு தமிழறிஞர்களே தமிழகத்தில் தோன்றியதில்லை என்று கற்பிக்கப்பட்டோம். அண்ணாத்துரையைத் தவிர வேறு மேடைப் பேச்சாளரே கிடையாது என்று பாடம் புகட்டப்பட்டோம். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சரிதானே!)

(இந்தப் படம், ஓவிய நண்பர் ஜெ.பிரபாகர் வரைந்து கொடுத்தது.)
Sk சொன்னது…

ஆம், அந்த நாளில் தமிழாசிரியர் என்ற போர்வையில் தி.மு.க.ஊழியர்கள் ஆடிய ஆட்டத்திற்கு அளவே இல்லை. மாணவர்களிடம் கெரசின் டப்பாவைக் கொடுத்து ரயிலைக் கொளுத்தச் சொன்னவர்கள் எங்கள் பள்ளியில் இருந்தனர். (இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது -௧௯௬௫ வாக்கில்.)

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix