சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும்.
கவிஞர் வாலியைப் பற்றி என்னுள் பதிந்த பிம்பமும் அதுதான்! ஒரு ரசிகனாக... தமிழைக் காதலிக்கும் ஒரு காதலனாக என் பள்ளிப் பருவத்தில் இருந்து கேட்டுக் கேட்டு வளர்ந்த வாலியின் பாடல்களும் கவிதைகளும் அவரைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் சினிமாக்காரர்கள் என்றால் போலித் தனமும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என்ற உள்மனப் பதிவும் கூடவே இருந்ததால், கிட்டே நெருங்கிப் பார்த்தும் எட்டியே நிற்க வைத்திருந்தது மனது. இருப்பினும் இன் இளமைக் கால எதிர்பார்ப்புகளுடனேயே இருந்த எனக்கு சென்னையில் பத்திரிகை வாசம், அவருடன் நெருங்கிய வாசத்தை ஏற்படுத்தித் தந்திருந்தது.
மயிலாப்பூர்வாசியாக இருந்தேன். அதனால், அடிக்கடி வாலியைப் பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு பத்திகையாளனாக... பார்ப்போம், சிரிப்போம்... விலகிச் செல்வோம்.
வாலியின் அரசியல் பார்வைகளையும், அரசியலார்களுடன் சரிந்து விழுந்து, மொத்தத்தில் சரணாகதியாகக் கிடப்பதையும் கண்டு ஒரு வித வெறுப்பே வளர்ந்திருந்தது. ஸ்ரீரங்கத்து மண் வாசத்தில் பிறந்து வளர்ந்திருந்த போதும், எனக்கு ஏனோ ஓர் அன்னியோன்யம் அவரிடம் பிறந்ததில்லை. அன்னியப்பட்டே விலகியிருந்தேன். ரங்கநாயகி என்று ஒருவரைப் பாடுவதையும், இன்னொருவரை அண்டிக் கிடப்பதையும் கண்டு சீச்சீ... என்று எண்ணிய காலமும் உண்டு.
ஆனால்... அவர் ஒரு கவிஞர். அந்தக் காலத்தில் மன்னரைப் பாடி பரிசில் பெறும் புலவன் இருந்தானில்லையா? அவன் என்ன... மன்னன் என்ற மனிதனையா பாடினான்..? மனிதனாக இருந்த, மன்னன் பதவியில் உள்ள நபரைத்தானே பாடினான்.. அதுபோல்தான் பரிசில் பெற விழையும் இந்தக் கவிஞனும்! - என்று சமாதானம் சொல்லும் என் மனம்.
விகடன் பிரசுரத்தின் பொறுப்பில் இருந்தபோது.... ஒருநாள்...
வாலியின் புதிய கவிதை நூலுக்கான கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து படித்துப் பார் எனக் கொடுத்தார் அப்போதைய ஆசிரியர் வீயெஸ்வி.
கம்பன் எண்பது, ஆறுமுகன் அந்தாதி என இரண்டு பிரதிகள். அப்போது வாலியின் கவிதைகள் விகடனில் தொடராக வந்து பின்னர் புத்தகமாக உருப்பெற்றதுண்டு. ஆனால், நூலாகப் பிரசுரம் செய்வதற்காகவே தனியாகக் கொடுத்திருந்தார் அதனை.
அனைத்தும் வெண்பாக்கள். கம்பன் எண்பது - என்பது மரபுக் கவிதை களிநடம் புரிய அமைந்திருக்கும் வெண்பாத் தொகுப்பு. படிக்க மிகவும் சுகமாக இருந்தது. அந்தப் பாடல்களுக்கு விளக்கமும் எழுதியிருந்தார் பேராசிரியை வே.சீதாலட்சுமி என்பவர். அதுபோல், ஆறுமுகன் அந்தாதிக்கு ம.வே.பசுபதி விளக்கம் எழுதியிருந்தார்.
இவற்றை நூலாக்கும் முயற்சியில் இருந்தேன். ஏதோ கொஞ்சம் தமிழ் படித்த காரணத்தால் கம்பன் எண்பது நூலில் உள்ள வெண்பாப் பாடலில் ஓரிரு இடங்களில் தளை தட்டுவதையும், சில வார்த்தைகளின் பொருள் புரியாமையையும் உணர்ந்தேன்.
நூலின் பிழை திருத்தப் படியை எடுத்துக் கொண்டு வாலியின் வீட்டுக்குச் சென்றேன். குங்குமப் பொட்டு துலங்க, வாலியின் எப்போதும்போன்ற வசீகரம் அப்போதும் இருந்தது. எப்போதும் கூட்டத்திலேயே சந்தித்துப் பழகிய நான், முதல் முறையாக வீட்டில் தனிமையில் சந்தித்தேன்.
நூல் திருத்தப் படிகளை கையில் வாங்கியவர் அதை அப்படியே சற்றுத் தள்ளி ஒரு மேஜையில் வைத்தார்.
”ம்... அப்புறம்.. உன்னைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்?” என்று தொடங்கினார்... அவருக்கு என் நெற்றிக் குறி, இந்தக் காலப் பத்திரிகை உலகத்தில்... என்னைக் குறித்தான ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்த்தியிருந்தது எனக்குப் புரிந்தது.
வைணவ பரிபாஷையில் பேச்சுக் கொடுத்தேன்... "அடியேன்... ஸ்ரீராமன். பிறந்தது அரங்கன் காலடி. வளர்ந்தது பொதிகை மலையடி. கல்லூரி திருச்சி பிஷப். அத்யயனம் ஆசாரியன் திருமாளிகை!”
"எனக்கும் ஆசைதான்! ஆனால்.. எவ்வளவோ துறந்து, எத்தனையோ சமரசங்களுக்குப் பின் இந்த நிலையை அடைந்துள்ளேன்! இந்த உலகம் பொல்லாதது. உன் புறத்தோற்றம் உன்னை இந்தத் துறையில் முன்னேற விடாது. பத்திரிகைப் பொறுப்பாச்சே! தண்ணீர் சமாசாரம் என எல்லாம் இழுப்பாங்களே!.." - என்னமோ சொன்னார். ஆனால் எனக்கோ மனம் அதில் ஒப்பவில்லை. நான் என் நிலையில் நின்றேன்.
"இல்லை ஸ்வாமி. இதற்குப் பெயர் திருமண் காப்பு. இது வெறும் புறச் சின்னம் என்று கூறுகிறீர்களா? இல்லை. இதனை ரட்சை என்போம். இது அடியேன் உடலுக்கு மட்டுமா ரட்சை..? நீங்கள் சொல்வது போன்ற சூழ்நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் ரட்சையல்லவா? ஒன்று... இதற்கு மதிப்பு கொடுப்பவராக இருந்தால் நாம் இதுபோன்ற இசகுபிசகான இடங்களுக்குச் செல்ல மாட்டோம். அடுத்தது, நம்மை எவரும் இத்தகைய இடங்களுக்கு அழைக்க மாட்டார்கள்... ஸ்வதர்மத்தை எப்போதும் நினைவுறுத்திக் கொண்டிருக்கும்” - இப்படியாகப் போனது என் விளக்கம். எனது சிறுவயதும் துடுக்குத்தனமும் அவரிடம் அப்படிப் பேசியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்!
ஆனால் அவரோ நான் பரந்த தளத்துக்கு வந்து எல்லோருடனும் பழகும் பத்திரிகையாளனாக வேண்டும் என்று தன் ஆசையைத் தெரிவித்தார். அதனால் என் புறச் சின்னங்களை கைவிட்டுவிட அறிவுரை கூறினார். ”இவற்றை அகத்தளவில் வைத்துக் கொள்ளலாமே!” என்றார்.
ஆனால் நானோ, "அடியேன் என்னளவில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். தேவரீர் க்ஷமிக்கணும்...” என்றேன்.
"இல்லை சீராமா... நான் உன் நல்லதுக்குச் சொல்கிறேன்.... அதான் சொன்னேனே.. எனக்கு மட்டும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசையில்லையா என்ன?! ஆனால், நான் இந்தத் துறைக்கு வந்த கால கட்டம், மிகவும் கடினமான கால கட்டம்! எங்கே திரும்பினாலும் நாத்திகர்கள் ஆதிக்கம். சினிமாத் துறை முழுக்க பிராமண எதிர்ப்பாளர்கள் கோலோச்சினார்கள். காதுபட பாப்பான் என திட்டத்தான் செய்தான்... அதையும் மீறி அவர்களுக்கிடையே வளர வேண்டும்! ஒரு வெறி! வயிற்றுப் பாடு! வேறு வழி. அதனால் சமரசம் செய்து கொண்டேன்.. எல்லோருடனும் எல்லா இடத்துக்கும்தான் போயாக வேண்டும்! எல்லாம்தான் சாப்பிட்டாக வேண்டும்! இல்லை என்றால்... இன்றைய (....) உள்பட... பகாசுரர்கள் பலர் இருந்த சினிமாத் துறையில் என்னால் போட்டி போட்டு வந்திருக்க முடியுமா?” - கேட்டார்... சற்று நேரம் மௌனம்!
அடுத்தது... அவரே தொடங்கினார்.
"காவிரிக் கரையில் இருந்து 3 ரங்கராஜன்கள் சென்னைக்கு வந்தோம். எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி எங்கள் துறையில் கால் பதித்தோம்... (அவர் சொன்ன 3 ரங்கராஜன்கள் - சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், வாலி... இவர்களைப் பற்றிய பேச்சு சற்று நேரம் ஓடியது...)
... நாங்கள் எங்கள் அளவில் குடும்பத்தில் எங்களுக்கான ஸ்வதர்மத்தைக் கைவிட்டுவிட்டோமா? -
கேள்வி எழத்தான் செய்தது. ஆனாலும், என் விடாப்பிடி விவாதமும் தொடர்ந்தது. சிறிது நேரத்தில்... "சரி உன்னிஷ்டம். நான் வேறு எதுவும் சொல்லவில்லை. நீ நல்ல நிலைக்கு வர வேண்டும். அது என் உள்ளக் கிடக்கை" என்று அத்தோடு என் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணி விவாதத்தை முடித்துவிட்டார்.
இப்போது, கம்பன் எண்பது - நூலின் பிழைதிருத்தும் படியை எடுத்துக் கொண்டார். அதில் சில இடங்களில் நான் கைவைத்திருந்தேன். ஒவ்வொரு பாடலாக நான் போட்டிருந்த திருத்தங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். விளக்கக் குறிப்புகளில் போடப்பட்டிருந்த திருத்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டார். இரண்டு வெண்பாவில் தட்டிய தளையை சுட்டிக் காட்டினேன். "இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்; வாசகருக்குப் புரியுமா என்று தெரியவில்லை?!” - சொல்லிக் கொண்டே வாலியின் முகத்தை சற்றே நோக்கினேன்.. (நீ யார் சின்னப் பையன்? என் பாடலில் கை வைக்க..? - இப்படிக் கேட்டுவிடுவாரோ என்று சற்றே அச்சமும் இருக்கத்தான் செய்தது.)
"இதோ... பார்.. சீராமா. நீ விகடனுக்கு வந்து... என்ன... ஒரு வருடம் ஓடியிருக்குமா? ஆனால் விகடன் மூலம் என்னைப் படிக்கும் வாசகர்கள், ஆண்டாண்டு காலமாய் இருக்கிறார்கள். வாசிக்கிறார்கள். அவர்களுக்கு வாலி என்ன சொல்கிறான் என்பது புரியும். விட்டுவிடு..." என்றார்,.
நான் மறுப்பேதும் சொல்லவில்லை. "சரி ஸ்வாமி.. அப்படியே இருக்கட்டும்...” சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டேன்.
அதன் பின்னர் அவரை தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. நானும் அதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இடமாற்றம் காரணமாக இருந்தது.
அண்மைக் காலத்தில் அழகியசிங்கர் நூலை எழுதி வெளியிட்டார். நிகழ்ச்சிக்குச் சென்று வாலியைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம்தான்! ஆனால்... செய்திகளின் பின்னே வேட்டை நாயாய்த் துரத்திக் கொண்டிருக்கும் அறிவுக்கு, வாலியின் கவித்துவத்தை ரசிக்கும் ரசனை கொஞ்சம் மக்கிப் போய்விட்டது என்றுதான் தோன்றியது. நிகழ்ச்சியை மட்டும் தவறவிட்டேனல்லேன்... வாலி என்னும் என் நலம்விரும்பிய கவிஞனையும்தான்!
அவர் சொன்ன வழிமுறைகள் வேண்டுமானால் எனக்குக் கசப்பாய்த் தெரிந்திருக்கலாம்... ஆனால், என் மீதான உள்ளார்ந்த அக்கறையை நான் உணர்ந்தே இருந்தேன்.
காவிரிக் கரையில் பிறந்து கூவத்தில் குளித்தெழுந்த வாலி என்னும் நளினமான ஆறு.... நிறைவாக ஆச்சார்யன் என்னும் கங்கையில் ஆச்சரியமாகக் கலந்தது. அவர் கடைசியாக எழுதிய நூல்... அதனைக் காட்டும்! அழகியசிங்கர் நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய ஏற்புரையில் வாலி சொன்னார். "எல்லாவற்றையும் கடந்து ஆத்மா கரையேறத் துடிக்கிறது!" - இது ஓர் ஆத்மாவின் அனுபவம் மட்டுமல்ல; ஆத்மார்த்தமான அனுபவமும்தான்!
Your remembrances are really touching.yes, he had to compromise at every stage to come up in life but he never gave up his basic ideals of cinema and epic poetry. That way, he is a logical role model for all vaishnavites.
வாலியின் வரிகளைப் போல என்றும் மனதில் நிற்கும் பதிவு ...
When millions of upper caste people deprived of education, because of VP Singh,he criticized anti quota protestors as having casteist.If its a choice between truth and growth I admire people who follow the first.Unfortunaely Vaali didn't follow.But he is one of the very best poets.
கருத்துரையிடுக