சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஏப்ரல் 03, 2013

தமிழக அரசே! தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு!

ஆலயங்கள் அரசின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட வேண்டும்!
ஆலயங்களை அரசு அலுவலகங்கள் ஆக்கிய தமிழக அரசே... தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு!
ஆலய கருவறையை அருங்காட்சியகம் ஆக்கிய தமிழக அரசே தமிழக அரசே..! கோயில்களை விட்டு வெளியேறு!
உண்டியல் இருக்கும் இடமெல்லாம் அரசு கஜனா என்று எண்ணிச் செயல்படும் தமிழக அரசே தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு வெளியேறு!
மதச்சார்பற்ற அரசுக்கு இந்துமத கோயில்கள் கட்டுப்பாடு மட்டும் எதற்கு?
ஆலய பூஜை உரிமைகளில் அரசு தலையிட அனுமதிக்கக் கூடாது! நாத்திகர்கள் கோயில் செயல் அலுவலர்களாக செயல்பட அனுமதிக்கக் கூடாது!
இப்படிச் சொல்லும்போது, ஆலயங்களை விட்டு அரசு வெளியேறினால், அது மிராசுதாரர்களின் கீழ் வந்துவிடுமே! பின்னர், ஏழைகள் நுழைய அனுமதி கிடைக்குமா? அல்லது, தமிழில்தான் அர்ச்சனைகள் நடக்குமா? என்று கேள்வி எழுப்பப் படுகிறது.
இப்போது மட்டும் என்ன வாழுகிறது என்றே இதற்குப் பதிலாகக் கேட்கத்தோன்றுகிறது.
காசு உள்ளவன் மட்டுமே பெரிய கோயில்களில் சென்று சாமி கும்பிடும் நிலை உள்ளது. ரூ.50ம் 250ம், 300ம், 500ம் டிக்கெட் வாங்கிச் சென்று கருவறைக் கடவுளை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளதே!~
இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஆட்கள் அதிகம் வரும், அல்லது வருமானம் வரும் கோயில்தான் மிராசுதார்களின் கண்களில் படும் அல்லவா? ஆட்கள் வராத கிராமத்துக் கோயிலைச் சீண்டுவார் யாருமில்லை. எனவே, கிராமக் கோயில்கள் பெரிய கோயில்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு, கோயில்கள் மக்கள் சபையின் மூலம் நடத்தப் படவேண்டும். மக்களால் தேர்வு செய்யப்படும் ஒரு குழு, ஒவ்வொரு பெரிய கோயிலையும் கட்டுப் படுத்த வேண்டும். அவற்றின் கீழ் அவற்றை அடுத்த சிறிய கோயில்கள் கொண்டு வரப்படவேண்டும். இநதக் குழுவில் ஆன்மிகப் பெரியவர்கள், மடத்தின் அதிபதிகள், உள்ளூர் பிரமுகர்கள்(குறிப்பாக ஏழையர்கள்) இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது நடக்கும். காரணம் இன்றைய கூத்துகள் எல்லை மீறிவிட்டனவே.
இப்படிச் சொல்லும்போது, நாத்திகர்கள் கோயில் அலுவலராக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பது சரி; ஆனால், மறுபடியும் சாதாரண மக்களை அல்லது எளியவர்களை சாதீய ரீதியாக தனிமைப் படுத்தி, வெளியில் நிற்கச் சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? என்ற கேள்வி பிறக்கிறது.
அதனால்தான் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். யார் யாருக்கு எந்த வேலை என்று கோயில்களில் சீர்திருத்தம் செய்தார் ஸ்ரீராமானுஜர். அங்கே சாதிப் பாகுபாடு கிடையாது. பூக்கட்ட ஒருவன், நந்தவனம் அமைக்க ஒருவன், துணிகளைத் துவைக்க ஒருவன், காவலுக்கு ஒருவன், கணக்குப் பார்க்க ஒருவன், மேலதிகாரி ஒருவன், கண்க்கு வழக்குகளை செய்ய ஒருவன், பிரச்னை வந்தால் தீர்த்து வைக்க அரசன்போல் ஒருவன். பூசை செய்வதற்கு ஒருவர், நைவேத்தியப் பொருள்களைத் தயாரிக்கும் மடப்பள்ளிக்கு ஒருவன் என்று... இதில் வேறு யாரும் மற்றவர்கள் வேலையில் தலையிட முடியாது. யார் யார் எந்த வேலையைச் செய்யத் தகுதி வாய்ந்தவனோ அவன் அங்கே இருக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்களை, கோயில்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், வெறுமனே நுகர்வோர் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள், சம்பாதிக்க நினைப்பவர்கள், தர்மத்தில் பற்றில்லாதவர்கள், தர்மத்தின் வழியில் நடக்க நினைக்காதவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
அதென்னவோ தெரியவில்லை... சூடன் தட்டு ஏந்தி பக்தர்களுக்கு காண்பிக்கும் பூசாரியின் இடத்தை மட்டுமே எல்லாரும் குறிவைக்கிறார்கள்.
இப்படிக் குறி வைத்துதானே தமிழக அரசியலில் ஆட்சி பீடத்தில் ஏறி கஜானாவைக் கொள்ளை அடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்திருக்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு மடப்பள்ளியில் சமைக்கும் பார்ப்பனன் கண்ணுக்குத் தெரியவில்லை?! காசு பேறாது என்பதால்தானே! அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் இவர்களின் அடிமடியில் கைவைத்து இவர்கள் எந்த சமத்துவத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்?
சரி... இப்படி. இதில் யார் யார் எந்த வேலையைச் செய்ய தகுதி வாய்ந்தவனோ அவன் அங்கே இருக்க வேண்டும் என்று சொல்லும்போது, இங்கேதான் பிரச்சினையே தொடங்குகிறது என்கிறார்கள். எங்களை வெளியில் நிறுத்த யார் உரிமை தந்தது என்றும், நாங்கள் தரும் வருமானத்தில் நடக்குது கோவில் நிர்வாகம். ஆனா உள்ளே போக அனுமதிக்கறது யாரோ? என்றும், அப்படி ஒரு கோவில் தேவையா என்பதுதான் கேள்வியே என்றும் கேட்கிறார்கள் சிலர்.
அப்படிப் பார்த்தால், நான் கொடுக்கும் வரியிலும் காசிலும்தான் இந்த அரசாங்கம் நடக்கிறது. கல்வித் தகுதி இருந்தும், திறமையிருந்தும், எனக்கு ஒரு ஆர்.டி.ஓ.வாகவோ, கலெக்டராகவோ, முதலமைச்சராகவோ, நீதிபதியாகவோ, உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ ஆகத்தான் ஆசை. ஆனால் என் போன்றவர்களை ஏன் வெளியில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது இந்த அரசும், சட்டமும், சமூகமும்?!
எல்லாப் பதவிகளிலும், பொறுப்புகளிலும், அரசாங்க வேலைகளிலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, ஆலயங்களில்யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று இந்த அரசும் நீதிமன்றங்களும் கருத்து தெரிவித்தால் வரவேற்கலாம்.
அரசுப் பணிக்கு விளம்பரம் வெளியிடும்போதே எஸ்.சி.எஸ்.டி பிரிவுக்கு மட்டும்... அவ்வளவு ஏன்... நீதிபதி நியமன ஒதுக்கீட்டு கோட்டா என்று அதிலும் சாதிப் பிரிவைச் சொல்லி நியமனம் செய்துவிட்டு,... இவர்களிடம் பொதுவான தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்?
ஆங்கிலேயன் காலத்தில், நீதிபதிகளின் பங்களாக்களும் கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் பங்களாக்களும் ஊரை விட்டு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்தன,. காரணம் அவர்கள் எந்த மக்களிடமும் ஒட்டிக் கொண்டு அவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அந்த அந்த மக்கள் சார்பாக தீர்ப்புகளை பாரபட்சத்துடன் கொடுக்கக் கூடாது என்று ஒழுங்குமுறையை வைத்திருந்தார்கள்... ஆனால் இன்று..? நீதிபதிகள்தான் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறுகிறார்கள். எங்கே போயிற்று நம் ஒழுங்குமுறை? எங்கேபோயிற்று நம் நேர்மை எல்லாம்...?
இப்படிச் சொன்னால், இதனை விதண்டாவாதம் என்பர்.
உண்மையில் பதில் சொல்ல முடியாவிட்டால் விதண்டாவாதம் என்று கூறிவிடுவர். மிகச் சுலபம். கோயிலுக்குள் செல்வது மட்டுமல்ல, அங்கிருப்பவர்களை, சாமி சிலைகளை, பூஜைப் பொருள்களை நாங்களும் தொட வேண்டும், அதில் என்ன குற்றம் என்று கேள்வி எழுப்புபவர் பலர். உண்மையில் எல்லோரும் அப்படி உள்ளே சென்று பூஜைப் பொருள்களையோ, சாமி சிலைகளையோ தொட்டுவிட முடியாது. ஏன்..! நாமும்தான் தொடமுடியாது...! நம்மிடம் என்ன கேடு கண்டார்கள் கோயில்காரர்கள்? அதற்காக நாம் என்ன கோயிலுக்குள் போய் சாமியை வேரோடு பிடுங்கிக் கொண்டு வரவேண்டும் என்று கோஷமா போடுகிறோம். உண்மையான பக்தி இருப்பவர்கள்... வெளியில் இருந்து கூட கடவுளைக் கண்டுகொண்டு செல்வார்கள். அப்படித்தான் நாமும் நடந்துகொள்கிறோம். நானும் கூட, எந்தக் கோயிலிலும் பத்திரிகையாளன் என்ற சலுகையைக்கூட எதிர்பார்ப்பதில்லை., வெளியில் எங்கும் சொல்லிக் கொள்வதுமில்லை!
அரசாங்கம் கையில் இருப்பதால்தான் எல்லோரும் உள்ளே போக முடிகிறது என்று ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். சிதம்பரம் கோயில் பிரச்னையை ஏன் தீர்க்க முடியவில்லை என்றும் கேட்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலுக்கு சென்றேன். ஐயப்பன் சந்நிதியில் பூஜை நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் சந்நிதியில் இரவு நேர பூஜை நடந்து கொண்டிருந்தது. நான் கிருஷ்ணன் சந்நிதியில் அந்த கம்பியின் பக்கமாகச் சென்றேன். ஒருவர் ஓடோடி வந்தார். என்னைத் துரத்தாத குறை. இவிடே ... நிக்க.... ம்... ஒன்றும் பேசாமல் நம்தவறு தெரிந்து விலகிச் சென்றேன். காரணம் அது அவர்கள் வழிமுறை. சந்தனம் கொடுக்கும்போது தூக்கி வீசுவதுபோல்தான் அள்ளித் தெளிப்பார்கள்! அது அவர்கள் வழிமுறை. அதற்காக அவர் கழுத்தைப் பிடித்து உலுக்கவா முடியும்! அப்படி உலுக்கும்போதுதான் பிரச்னை எழுகிறது.
சிதம்பரம் கோவிலுக்குப் போய் கோவிந்தராஜன் சந்நிதியை கும்பிட்டுவிட்டு, அங்கேதான் நான் அமர்ந்து பாசுரம் பாட வேண்டுமே தவிர, நடராஜர் திருச்சிற்றம்பல மேட்டில் ஏறி நின்று... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுன்னு பாடினால்...! அங்கே நடராஜர் சந்நிதிக்கு இருக்கும் வெளிச்சமும் பார்வையும் - கோவிந்தராஜன் சந்நிதிக்கு இல்லை! இருள் அடைந்து கிடக்கிறது. எதிரே இருக்கும் கொடிமரத்தில் முட்டி மோதி இரவு வெளிவர வேண்டியிருக்கிறது. ... அதற்காக, நான் நடராஜர் திருச்சிற்றம்பல மேட்டில் ஏறி பாடத் தொடங்கினால்... என் செயலைக் கண்டு என் மீது நாலு பேர் கவனம் விழும், பத்திரிகைகளில்... இருக்கவே இருக்கிறீர்கள்... பொழுதுபோகாமல் 24 மணி நேர செய்தி சேனல்கள்... பத்த வைக்க என்னடா நியூஸ் கிடைக்கலாம்னு உப்பு சப்பில்லாத மேட்டரையெல்லாம் சினிமா மாதிரி ஓட்டுவதற்கு.... உங்கள் கவனத்தைக் கவர்ந்து அரசியல் செய்ய வேண்டுமானால் பயன்படுமே தவிர,.... இந்த சமுக்கத்துக்கு பைசா பிரயோசனம் இல்லை!
கட்டு திட்டங்களை மதிக்காமல் அரசியல் செய்பவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த(ஊடக) சமுதாயம் - கேடு கெட்ட சமுதாயம்!

ஆண்டவன்முன் அனைவரும் சமம்! இந்த உறுதி அனைவருக்கும் வேண்டும். ஆலயங்கள் அனைவருக்கும் பொது! இது அனைவரின் மனதிலும் உறுதியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆலயத்துக்குள் நுழைய அனைத்து சாதியினருக்கும் உரிமை உண்டு. இது இந்து மதத்தில் மத ஆச்சாரியர்களால் உறுதி செய்யப்பட்டு வழிகாட்டப்பட்டுள்ளது. சில சமூக விரோதிகள் பிரச்னை செய்கிறார்கள் என்றால் அவர்களின் அறிவு களை எடுக்கப்பட வேண்டும். ஆனால்... நாங்களும் போய் பூசை செய்வோம் என்று அடம்பிடிப்பது... புரட்சிகரமான கருத்து அல்ல... சமநோக்கமுள்ள செயலும் அல்ல... சமத்துவக் கருத்தும் அல்ல! மதத்தின் கட்டமைப்பை வேரோடு அழிக்கும் வேற்று மத பிரசாரகர்களின் குயுக்திகளுக்கு பலியாகும் கோடரிக் காம்பு செயல் என்பதை அனைவரும் நிலை நிறுத்திக் கொள்வோம்.
உன் கோயிலுக்குள் என்னை விடவில்லை என்றால், என் சமுதாயத்துக்காக நான் கோயில் கட்டி, அதில் உன் ஆண்டவனை குடியேற்றுவேன் என்று சொன்ன நாராயண குருவின் பாதங்களில் சிரம் பணிவேன். அவர்தான் உண்மையில் சீர்திருத்தவாதி. சமூக சீர்திருத்தவாதி. அவர் கட்டிய கோயில்கள் இன்றும் ஆண்டவன் தெய்வீக அழகுடன் குடியிருக்கிறான். அங்கே மக்கள் மனம் நிறைந்த வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள். இந்த உறுதி நமக்கு எப்போது வரப்போகிறது!
கோடிக்கணக்கான சிதம்பரம் நடராஜருக்குச் சொந்தமான சொத்தினை, நிலத்தை தீட்சிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் அவர்கள் குறைந்த வாடகை கொடுத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் சிலர்.
அப்படிப் பார்த்தால், அறிவாலயம் என்ன கோடிக்கணக்கான இழப்பீட்டைக் கொடுத்து கட்டி முடிக்கப்பட்டதா? (அரசுக்கு).
எத்தனை சர்ச்சுகள் இங்கே கோயில் நிலங்களில் வெறூம் சிலநூறு ரூபாய்கள் வாடகைக்கு 99 வருடம் 999 வருடம் குத்தகைகளுக்கு விடப்பட்டிருக்கின்றன... இவற்றை எல்லாம் எங்கே போய்ச் சொல்வது? இதற்காக யார் போராட்டம் நடத்துவது...
இன்னும் சொல்லப்போனால்.... நாடு சுதந்திரம் பெற்ற போதும், சென்னை போன்ற இடங்களில் எவ்வளவு கோடிக்கணக்கானமதிப்புள்ள நிலங்களை சர்ச்சுகளுக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். இன்று ரியல் எஸ்டேட்தொழிலில் ஆதிக்கம் செலுத்துவது... அவர்கள் தானே! இதை எல்லாம் யார் கேட்பது?
சும்மாவா சொன்னார்கள்.. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று! அவன் மட்டும் கையில் பீரங்கியும், துப்பாக்கியும், வைத்திருந்தால்,.... இப்படி எல்லாம் பேசுவீர்களா? எல்லாவற்றையும் கடவுள் பார்த்துப்பான் என்று அவன் கடவுள் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு... இவன் அழுது கொண்டிருக்கிறானல்லவா? நீங்கள் குட்டுவீர்கள் குட்டுவீர்கள் இன்னும் குட்டிக் கொண்டு இருப்பீர்கள்...! ஆனால் இவற்றுக்கு எல்லாம் ஒரு முடிவு பிறக்காமல் போகாது!
ஆலயச் சொத்தை தனி நபர்கள் யாரும் விற்க முடியாது. பத்திரப் பதிவுத் துறை அரசாங்கம் எல்லாம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது என்ற நிலை. இப்போது, அரசே அல்லவா அதைச் செய்து கொண்டிருக்கிறது. கோயில் சொத்துகளை அந்தத் திட்டம், இந்தத் திட்டம் என்று புறம்போக்கு நிலம் போல் அதை தீர்மானித்து, அடிவிலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..?!
இதற்கு, ஒரு குழு அல்லது, அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோயில் சொத்துகள் முறைப்படுத்தப்பட்டு, அவற்றைக் கண்காணித்து, ஒழுங்காக வாடகை, குத்தகை வசூலித்து கோயிலை சிறப்பான முறையில் பராமரிக்கலாம். அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை நீதிமன்றங்களும் அரசும் ஏற்கலாம். அதை விட்டுவிட்டு, எல்லாவற்றையும் அரசே வைத்துக் கொள்வது மிகத் தவறு என்பதே நமது எண்ணம்!
padmini சொன்னது…

கடவுள் முன் அனைவரும் சமம் என்கிறீர்..சமீபத்தில் நடந்த அனுபவம் என்னை மிகவும் வருத்தத்தில் அழ்தியது. ஊரில் உள்ள குலதெய்வ பெருமாளுக்காக பவித்ரா உச்தவம் கொண்டாடும்படி எல்லாம் வருடமும் எங்கள் குலத்தார் மேற்கொண்டபடி நானும் ஒரு தடவை கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்தது. மூன்று நாட்களும் விழா கோலம் போல் அமைந்தபடியே இருந்தது . ஊர் மக்களும் திரண்டு, தரிசித்தும் சென்ற வண்ணம் இருந்தனர். கடைசி நாள் மதியானம் அனவைருக்கும் சாப்பாடு..நல்ல சுவையான இனிப்போடு கூடிய சாப்பாட்டை களித்தவண்ணம் சுற்றி வரும் போதுதான் கவனித்தேன்..வேறு இடத்தில் வேறு ஜாதியினருக்கு சாப்பாடு பரிமாறிகொண்டிருந்தனர்,,இதில் சாப்பாடும் தீந்து விட்ட நிலையில், வேறு என்ன செய்வது என்று கை பிசைந்துகொண்டிரிதனர்..எனக்கு வருத்தமாகிவிட்டது..ஒரு சிலர் சாப்பாடு சாப்பிடாமல் செல்லாமல் செல்கிரர்கள், ஏன் இவர்களை முன் பந்தியில் பரிமாறவில்லை என்று கேட்டதற்கு இவர்கள் நம்மோடு சேர்ந்து சமபந்தி கூடாது, அப்படி மீறி செய்தால் பூஜைகாரர்கள் கோபித்து சென்றுவிடுவர் என்று...இந்த காட்சி என் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை ..சாப்பிட்ட சாப்பாடும் ஜெரிக்கவில்லை ..எத்தனை ராமானுஜர்கள் பிறந்து புரட்சி செய்தாலும், ஜாதி இனபிரச்சினை என்றும் ஓயாது ..கடவுள் முன் எல்லோரும் சமம்தான் ..ஆனால் பின்னால் அல்ல!!

பெயரில்லா சொன்னது…

அய்யப்பன் கோவில்களையும், அய்யனார் கோவில்களையும் கூட அரசு ஏற்குமோ?
கோடிக்கணக்கான வருமானம் உள்ள வேற்று இனத்தான் வழிபடும் இடங்களை அரசு ஏன் எடுப்பதில்லை?
காலத்தின் கட்டாயம்.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix