சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    புதன், ஆகஸ்ட் 15, 2012

    இந்தியத் தாயின் பெயர் சூட்டிய 66ம் ஆண்டு விழா!



    ஆக.15 என்றால் என்ன தோன்றும்?
    ஆர்வமுடன் கேட்டான் அந்தச் சிறுவன்!
    இந்தியத் தாயின் சுதந்திரத்தை
    இன்முகத்தோடு நான் நினைவுகூர்வேன்...
    இப்படித்தான் எதிர்பார்த்தான் அவன்!
    ஆனால் எனக்கோ அடிமை வரலாறல்லவா
    அகத்தில் அடுக்கிக் கொண்டே போகிறது..!?

    முன்னைப் பழமைக்கும் பழமையாய்
    பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்
    கற்காலத்தினும் முற்காலத்தினளாய்
    உலகுக்கு வழிகாட்டும் உன்னத நாடாய்
    எத்தனையோ நாடுகள் ஏக்கத்தில் பார்த்திருக்க...
    இந்தியத் தாய்க்கு இது 66வது பிறந்தநாளாம்!
    ஊரெங்கும் அதிர்வேட்டு உற்சாக முழங்கங்கள்!

    ஏதோ நேற்றுப் பிறந்த குழந்தைக்கு
    இன்று பெயர் வைத்துத் தாலாட்டி
    நாளை பிறந்தநாள் கொண்டாடுவதைப் போல...
    என்று பிறந்தவள் என்றறியாத இயல்பினள்!
    சிந்துவும் பிரமபுத்ராவும் சிரத்தினில் துலங்க
    கங்கையும் சரஸ்வதியும் கரத்தினில் விரிக்க
    நர்மதையும் கோதாவரியும் ஒட்டியாணமாய் மின்ன
    காவிரியும் தாமிரபரணியும் பாதத்தில் கழுவ
    இந்தியத் தாய் ஏதோ இன்று பிறந்தவளாம்!
    ஊரெங்கும் ஆர்ப்பாட்டம் உற்சாகப் பெருமுழக்கம்!

    ஐம்பத்து நான்கு தேசங்களாய் அடுத்தடுத்து
    நம்பாரதத் தாயோ நன்றாய்த்தான் இருந்துவந்தாள்
    பிள்ளைகளுக்குள்ளே பிக்கல் பிடுங்கல் என்றால்
    பாவம் அவள் என்ன செய்வாள் வேதனைதான்!
    சேரசோழபாண்டியனாய் பல்லவனாய் சாளுக்கியனாய்
    மௌரியனாய் மகதனாய் மகாவம்சத்து மன்னனாய்
    எத்தனை எத்தனை பிள்ளைகள் உன்மடியில்!
    வசதிக்கேற்ப வயல்வெளிகள் பிரிந்துகிடந்தாலும்
    விளைச்சல் என்னமோ ஒரே நெற்கதிராய்!
    அரசியலால் அரசப்பிள்ளைகள் பிரிந்துகிடந்தாலும்
    ஆன்மாவால் மக்களை ஒன்றிணைத்து வைத்திருந்தாய்!

    அந்தோ என் சாபம்! நாயும் பேயும் நடுவீட்டுள்புக
    நாடும் நலமும் நலிவுற்று நைந்ததுவே!
    ஆன்மாவின் குரல்வளையை வாள்முனையில் நெரித்தான்
    பாலைவனக் காட்டுமிராண்டி கலாசாரத்தை சிதைத்தான்!
    பரங்கி வணிகனாய் பார்த்துப் பார்த்து நுழைந்தவன்
    பீரங்கிக் குண்டுகளாலே பிரித்தாண்டு வந்தானே!
    பிள்ளைகள் எத்தனைபேர் உன்பழம்பொலிவைக் கண்டிடவே
    உயிர்த்தியாகம் செய்துநின்றார் உடலாலே உலகுவென்றார்!

    எத்தனை எத்தனை இன்னல்கள் அத்தனையும் தாங்கி
    இத்தனை நாள் உயிர்ப்புடன் இளமைமாறாது இருக்கின்றாய்!
    இந்தியத் தாயே உனக்குப் பெயர்சூட்டிய விழாநாள் இன்று!
    பிறந்தநாளாய் பிதற்றுகின்ற பிள்ளைகளை மன்னிப்பாய்
    பெயர்சூடிய பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்
    66ஆம் ஆண்டெனவே அகிலத்தில் முழங்குகின்றோம்!
    தாயே வணக்கம்! தாயே வணக்கம்!
    Rathnavel Natarajan சொன்னது…

    ஆஹா அருமை.
    படித்துப் பாருங்கள். நமது இளைஞர்களின் திறமையை.
    நெகிழ்கிறேன்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு செங்கோட்டை ஸ்ரீராம்

     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX