சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, டிசம்பர் 21, 2012

நீ நீயாக இருப்பதால்!


தைரியமாகச் செல் என் சகோதரி! 
உனக்கு என் தோத்திரம்!


மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்
இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் 
நீ நீயாக இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


கல்லறைக் காதல் வசனம் சொல்லி மயக்கினாலும் 
சில்லறைப் பசங்களை சீண்டாமல் இருக்கிறாயல்லவா...
உனக்கு என் தோத்திரம்!


ஆனாலும் சகோதரி..,


என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்!
நீ ஏமாறுவதைக் கண்டு 
கையாலாகாத்தனத்தால் அழுவதற்காக அல்ல!
உன்னை ஏமாற்றுபவனைக்
கல்லெறிந்து விரட்டுவதற்காக!

வெள்ளி, டிசம்பர் 07, 2012

அருணகிரிநாதரின் முகநூல்





நமது நண்பர் திரு. மறவன்புலவு கே.சச்சிதானந்தன் அவர்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய விஷயம் மிகவும் சுவாரசியமாக இருந்ததால், அதனை மீண்டும் எடுத்து இங்கே கையாள்கிறேன். அதென்ன முகநூல்... நாம் ஏதோ புதிது புதிதாக சொல்லிக் கொண்டு வருகிறோமே! நம் முகநூல் எல்லாம் தூசுதான்... இந்த அருணகிரிநாதர் கூறும் முகநூல் தரிசனத்தைக் கண்டபின்!
மறவன்புலவு கே.சச்சிதானந்தம் ஐயாவின் மின்னஞ்சல் விவரம் இது...!

அருணகிரிநாதரின் முகநூல்:

Face book created by Arunagirinathar as retold in English by my good friend Prof. S. A. Sankaranaynan who kept the line of succession of Prof. Hensman of Jaffna at Arts College, Kumbakonam,
Prof. Hensman of Jaffna taught English to the famed Silver toungued Srinivasa Sasthiryar.
Prof. Hensman of Jaffna was the first in the island to organise the freedom movement for Tamils in 1905.
Please refer to GG Ponnambalam's marathon speech at the State Council in 1939.

A face flies the peacock and plays;
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
Another lisps the WORD with God;
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
A third undoes all our misdeeds;
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
One spears the hill that blocks the Way;
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
One slays the many-disguised Soora;
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
One weds Valli in bridal joy;
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
Six-in-one or six are you, grace me with your Face book!
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
O! LORD! Abiding on the sun-stone hill of yore!
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே.

- மறவன்புலவு கே.சச்சிதானந்தன்

சனி, ஆகஸ்ட் 18, 2012

நள்ளிரவில் ஏன் சுதந்திரம் பெற்றோம் என்பதற்கு அஷ்டமி நவமி காரணமாகுமா?

நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது ஏன் என்று ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு அஷ்டமி நவமி காரணம் என்று ஒரு ஜோதிடர் சொல்லியிருந்தாராம். 
----------------------
ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக சட்டம் இயற்றியது. நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர். ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர். ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங
்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.
--------------------------------------
இப்படியாக அந்தச் செய்தி இருந்தது. சரிதான்... எந்த செயலையும் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்பது ஒரு வகையில் சரிதான். ஆனால், நல்லோர்க்கு எந்நாளும் திருநாளே. எந்நேரமும் நன்நேரமே என்பது என் எண்ணம்.
இது கிடக்கட்டும். நம் தமிழ் மாதக் கணக்கீட்டின் படி பார்த்தால் ஆடி மாதமாயிருக்குமே. அப்போது எதுவும் நல்லது செய்ய மாட்டார்களாமே! ஆடியில் கிடைத்ததுதான் நம் நாட்டின் சுதந்திரமா? அப்ப இனிமேல் அதற்கு ஒரு காரணம் எழுதினாலும் எழுதப்படலாம்!
இந்தச் செய்தியின் அடிப்படையில், பஞ்சாங்கத்தை நோண்டினால், கிடைத்த தகவல் அன்று சதுர்த்தசி. மங்களகரமான வெள்ளிக்கிழமை. மறுநாள் பிறந்தால், நிறைந்த அமாவாசை. ஆகவே, இப்படி எல்லாம் சுதந்திர தினத்தை மாற்றிக் கேட்டதாக இருந்திருந்திருந்தால், 16ம் தேதி அமாவாசை அன்று கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். 15ம் தேதி இரவு 8.20க்கு மேல் அமாவாசை வந்துவிடுகிறது. ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. சரி எத்தனையோ புளுகுகளும் கதைகளும் நிறைந்திருக்கும் நாட்டில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

1947 - ஆகஸ்ட் 15ம் தேதி உள்ள பஞ்சாங்க விவரம்:
----------------------------------------------------------
Sunrise15/08/47 05:59 AM
Sunset15/08/47 06:26 PM
வாரம்: வெள்ளிக்கிழமை
நட்சத்திரம்: பூசம்
Start Time : 14/08/47 10:58 PM
End Time : 15/08/47 08:08 PM
திதி: சதுர்தசி
Start Time : 15/08/47 12:00 AM
End Time : 15/08/47 08:20 PM
பக்ஷ: கிருஷ்ண பக்ஷ
கரணம்: பத்திரை
Start Time : 15/08/47 12:00 AM
End Time : 15/08/47 10:11 AM
சகுனி
Start Time : 15/08/47 10:11 AM
End Time : 15/08/47 08:20 PM
யோகம் வ்யதீபாதம்
Start Time : 15/08/47 02:02 AM
End Time : 15/08/47 09:56 PM
இராகு : 10:40 AM - 12:13 PM
எமகண்டம்: 3:20 pm - 4:53 pm
குளிகை: 7:33 am - 9:06 am
Place : Chennai, INDate : Aug 15, 1947
Location : 13.09, 80.28
Time Zone : IST (+05:30)

புதன், ஆகஸ்ட் 15, 2012

இந்தியத் தாயின் பெயர் சூட்டிய 66ம் ஆண்டு விழா!



ஆக.15 என்றால் என்ன தோன்றும்?
ஆர்வமுடன் கேட்டான் அந்தச் சிறுவன்!
இந்தியத் தாயின் சுதந்திரத்தை
இன்முகத்தோடு நான் நினைவுகூர்வேன்...
இப்படித்தான் எதிர்பார்த்தான் அவன்!
ஆனால் எனக்கோ அடிமை வரலாறல்லவா
அகத்தில் அடுக்கிக் கொண்டே போகிறது..!?

முன்னைப் பழமைக்கும் பழமையாய்
பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்
கற்காலத்தினும் முற்காலத்தினளாய்
உலகுக்கு வழிகாட்டும் உன்னத நாடாய்
எத்தனையோ நாடுகள் ஏக்கத்தில் பார்த்திருக்க...
இந்தியத் தாய்க்கு இது 66வது பிறந்தநாளாம்!
ஊரெங்கும் அதிர்வேட்டு உற்சாக முழங்கங்கள்!

ஏதோ நேற்றுப் பிறந்த குழந்தைக்கு
இன்று பெயர் வைத்துத் தாலாட்டி
நாளை பிறந்தநாள் கொண்டாடுவதைப் போல...
என்று பிறந்தவள் என்றறியாத இயல்பினள்!
சிந்துவும் பிரமபுத்ராவும் சிரத்தினில் துலங்க
கங்கையும் சரஸ்வதியும் கரத்தினில் விரிக்க
நர்மதையும் கோதாவரியும் ஒட்டியாணமாய் மின்ன
காவிரியும் தாமிரபரணியும் பாதத்தில் கழுவ
இந்தியத் தாய் ஏதோ இன்று பிறந்தவளாம்!
ஊரெங்கும் ஆர்ப்பாட்டம் உற்சாகப் பெருமுழக்கம்!

ஐம்பத்து நான்கு தேசங்களாய் அடுத்தடுத்து
நம்பாரதத் தாயோ நன்றாய்த்தான் இருந்துவந்தாள்
பிள்ளைகளுக்குள்ளே பிக்கல் பிடுங்கல் என்றால்
பாவம் அவள் என்ன செய்வாள் வேதனைதான்!
சேரசோழபாண்டியனாய் பல்லவனாய் சாளுக்கியனாய்
மௌரியனாய் மகதனாய் மகாவம்சத்து மன்னனாய்
எத்தனை எத்தனை பிள்ளைகள் உன்மடியில்!
வசதிக்கேற்ப வயல்வெளிகள் பிரிந்துகிடந்தாலும்
விளைச்சல் என்னமோ ஒரே நெற்கதிராய்!
அரசியலால் அரசப்பிள்ளைகள் பிரிந்துகிடந்தாலும்
ஆன்மாவால் மக்களை ஒன்றிணைத்து வைத்திருந்தாய்!

அந்தோ என் சாபம்! நாயும் பேயும் நடுவீட்டுள்புக
நாடும் நலமும் நலிவுற்று நைந்ததுவே!
ஆன்மாவின் குரல்வளையை வாள்முனையில் நெரித்தான்
பாலைவனக் காட்டுமிராண்டி கலாசாரத்தை சிதைத்தான்!
பரங்கி வணிகனாய் பார்த்துப் பார்த்து நுழைந்தவன்
பீரங்கிக் குண்டுகளாலே பிரித்தாண்டு வந்தானே!
பிள்ளைகள் எத்தனைபேர் உன்பழம்பொலிவைக் கண்டிடவே
உயிர்த்தியாகம் செய்துநின்றார் உடலாலே உலகுவென்றார்!

எத்தனை எத்தனை இன்னல்கள் அத்தனையும் தாங்கி
இத்தனை நாள் உயிர்ப்புடன் இளமைமாறாது இருக்கின்றாய்!
இந்தியத் தாயே உனக்குப் பெயர்சூட்டிய விழாநாள் இன்று!
பிறந்தநாளாய் பிதற்றுகின்ற பிள்ளைகளை மன்னிப்பாய்
பெயர்சூடிய பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்
66ஆம் ஆண்டெனவே அகிலத்தில் முழங்குகின்றோம்!
தாயே வணக்கம்! தாயே வணக்கம்!

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

சாதி வெறியாளர் யார்?

2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயா வீட்டுக்கு வழக்கம் போல் சென்று கதவைத் தட்டினேன். காலை நேரம் எழுந்து மெதுவாக வந்து அமர்ந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இவர், பணி ஓய்வு பெற்ற நல்லாசிரியர். அகவை 82 தொட்டவர். செங்கோட்டை தொடர்பான ஊர்க் கதைகளை, சுதந்திரப் போராட்ட நினைவுகளை, திருவிதாங்கூர் சமஸ்தான சங்கதிகளை என் சிறுவயது முதல் எனக்குச் சொன்னவர் இவர். இவரிடம் இருந்து கட்டுரைகளை மலையாள மொழிபெயர்ப்புகள் பலவற்றினை கேட்டுப் பெற்று மஞ்சரி இதழ்களில் பிரசுரம் செய்திருக்கிறேன். வாசகர் விரும்பும் அருமையான எழுத்து நடை இவருக்கு!
இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன். 1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை. வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.... இப்படியாகப் பேச்சு போனது.
வீட்டுக்கு வந்து மாடியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, வாஞ்சிநாதன் குறித்து இணைய தளங்களில் எழுதப் பட்டிருந்த துர்பிரசாரங்கள் குறித்து யோசித்தேன். வாஞ்சி ஒரு சாதி வெறியாளன் என்று நிறுவுவதற்காக ஒரு கதையைக் கட்டியிருக்கிறார்கள். ஆஷ் துரையை 'ரொம்ப நல்லவன்’ ஆக்க மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வரலாறு பெரும்பாலும் கிறிஸ்துவ ஆதிக்க மேல்நாட்டு மக்களின் பாதிப்பில் எழுதப் பட்டவை. இங்குள்ள வரலாறுகள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, அதற்குத் தகுந்தபடி புனைந்து எழுதப் பட்டவை. பரப்பப் பட்டவை. அதில் ஒன்று, வாஞ்சிநாதன் விஷயத்திலும் நடந்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க, சுதந்திர வேட்கை கொண்ட வீரர்களை மனிதாபிமானமே சிறுதும் இல்லாமல் படாதபாடு படுத்திய ஆஷ் துரையை நல்லவனாகச் சித்திரிக்க, வாஞ்சி பலியாடு ஆக்கப்பட்டான்.
கதை இதுதான்... பிரசவ வலியால் துடித்தபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியே விட மறுத்தானாம் வாஞ்சி. அப்போது ஆஷ் துரை அங்கே வந்து அக்ரஹாரத்தின் வழியே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வழி செய்தானாம்... இதனால் ஆஷ் துரை மீது வஞ்சம் வைத்த வாஞ்சி, அவனை சுட்டுக் கொன்றானாம்... இப்படியொரு கதையைப் புனைந்தவர்களைக் காட்டிலும், அதைச் சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள்தானே சாதி வெறி பிடித்தவர்கள்! கட்டிய மனைவி பிரசவ காலத்தில் தவிப்பதையும், மாமனார் வீடு சென்ற அவளைக் காணவும் பொழுதின்றி, தாம் மேற்கொண்ட பாரதமாதா சங்கத்தின் விடுதலைப் போராட்டப் பணிகளில் முழு ஈடுபாடு காட்டிய சிற்றிளைஞன் வாஞ்சிக்கு இப்படியோர் அவப்பெயர் சூட்ட வேண்டுமானால், இவர்களின் உள்ளத்திலும் அறிவிலும் சாதி வெறி எப்படிப் புரையோடிப் போயிருக்க வேண்டும்!?
இந்தக் கதையில் இது எந்த அக்ரஹாரத்தில் நடந்தது என்று குறிப்பில்லை. பிரசவ வேதனையில் அந்தப் பெண் வந்தபோது, சரியாக அதே நேரம் ஆஷ் துரையும் வந்தது எப்படி என்று கூறவில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம், ஊரின் பூகோள அமைப்பைப் புரிந்துகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் கதைதான்!
செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அதற்கும், பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை. 1956ல் மொழி வாரி மாகாணங்கள் அமையப் பெற்ற போதுதான், கன்னியாகுமரி, நாகர்கோவில் சில பகுதிகள், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமவெளிப் பரப்பாக இருந்தாலும், சமஸ்தானத்துடன் இருந்த பகுதி என்பதால் அங்கே பிரிட்டிஷ் அதிகாரிகள், ராணுவத்தினர் நுழைவதற்கு அனுமதி தேவை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை இருந்தது பிரிட்டிஷாருக்கு. தேடப்படும் சுதந்திரப் போர் வீரர்கள் சமஸ்தானத்தில் எங்காவது ஒளிந்திருந்தால் அவர்களைப் பிடித்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும். இது உடன்படிக்கை. மற்றபடி, திருவிதாங்கூர் ஒரு சுதந்திரமுள்ள, அதே நேரம் அடிமைப்பட்ட நிலை என இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தது.
இத்தகைய சூழலில், திருநெல்வேலி சப்-கலெக்டர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி ஆஷ் துரை, தென்காசி வரை மட்டுமே வர இயலும். குற்றாலத்தில் குளிக்க உரிமை இருந்தது. அதைத் தாண்டி அவர்கள் சமஸ்தானப் பக்கம் வரவும் முடியாது. இன்றும் செங்கோட்டை நகருக்கு ஒரு கி.மீ. வெளியே பிரானூர் பார்டர் என்று ஒரு பகுதி உள்ளது. அதுதான் சமஸ்தானத்தின் நுழைவாயில். பார்டரைத் தாண்டி ஆங்கிலேயர்கள் வர இயலாது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும் கிடையாது. அவ்வாறு இருக்க, வாஞ்சிநாதன் இருந்த திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்ட செங்கோட்டையில் ஆஷ் துரை கட்டளை இட்டு ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிரசவத்துக்காக அக்ரஹாரம் வழியே செல்ல வைத்தார் என்று புனையப்பட்ட கதை எவ்வளவு மோசமான சாதி வெறியில் உமிழப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இன்றைய செங்கோட்டை ஊரின் அமைப்பில், அக்ரஹாரங்கள் இருந்த பகுதியில் நீங்கள் நின்று பாருங்கள் புரியும். மொத்தம் ஏழு அக்ரஹாரங்கள் இருந்துள்ளன. சிவன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவிலை ஒட்டிய இரண்டு மாட வீதிகள், கிருஷ்ணன் கோவில் பின்னுள்ள ஒரு மாடத் தெரு... இப்படி. இந்தப் பகுதிகள் ஊரில் இருந்து ஒதுக்குப் புறமாக தனித்திருக்கும். ஊரின் பிரதான கொல்லம் சாலை அக்ரஹாரங்களைச் சுற்றி வெளியே செல்லும். ஊருக்கு வெளிப்புறமாக தனித்திருக்கும் அக்ரஹாரங்கள் என்பதால், மருத்துவமனைகள் இருக்கும் செங்கோட்டை நகருக்குச் செல்வதற்கு நீங்கள் அக்ரஹாரங்களை அவசியம் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லவே இல்லை. அப்படி இருக்கும்போது, எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தாள் என்ற விவரம் யாராலும் சொல்லப் படவுமில்லை. அந்தப் பெண்ணை மருத்துவம் பார்க்க அக்ரஹாரம் வழியேதான் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசிய நிலை இல்லாத போது, எதற்காக அப்படி அழைத்துச் சென்றார்கள் என்ற குறிப்பும் இல்லை.
இப்படி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள். காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் சாதி பார்த்து பாரத மாதா சங்கம் அமைக்கவில்லை. 1911ல் மாண்டு போன வாஞ்சிநாதனும், அவனுடன் கதை முடிந்துபோன பாரத மாதா சங்கமும் இத்தகைய சிறுமதியாளர்கள் வளர்த்துவிட்ட சாதி வெறிச் சங்கமுமில்லை, சாதி வெறி மனிதமும் இல்லை.
மாவீரன் மாடசாமியின் வரலாற்றைப் படியுங்கள். கல்கி எழுதிய பொங்குமாங்கடல் சிறுகதையைப் படியுங்கள். தினமணியின் முதல் ஆசிரியர் தென்காசி எஸ். சொக்கலிங்கத்தின் வரலாற்றைப் பாருங்கள். எத்தகைய சுயநலமற்ற தியாகத் திருவுள்ளங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை. செண்பகராமன் பிள்ளை என்ற மாவீரன் ஜெர்மனியின் ஹிட்லரைக் கலங்கடித்தவர். நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க உந்து சக்தியாக இருந்தவர். ஜெய்ஹிந்த் கோஷம் கொடுத்த புண்ணியவான். அடிமை இந்தியாவில் என் உடல் அடக்கம் செய்யப் படக் கூடாது, என் உடலின் அஸ்தி கூட அங்கே விழக்கூடாது என்று சபதம் இட்ட வீரர். செண்பகராமன் இறந்து வெகு காலம் வரை அவரது மனைவியால் பாதுகாக்கப்பட்டிருந்த அஸ்தி, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியக் கொடி பறந்த கப்பலில் எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றின் கரையில் சுதந்திர இந்தியாவில் தூவப்பட்டது என்பதைக் கேள்விப் படும்போது எவ்வளவு சிலிர்ப்பும் மரியாதையும் நமக்கு வரவேண்டும்?! ஆனால்... சாதி வெறியின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமுதாயத்தில் செண்பகராமனின் வீரம் ஏன் கொண்டாடப் படாமல் போனது என்பது தெளிவாகத் தெரிகிறதே!
சுதந்திரம் பெற்ற பின்பு இப்படியெல்லாம் சாதிப் பிரிவினை பேசி இன்று இந்தியா கண்ட பலன், கிறிஸ்துவ மயமாக்கலும், தாழ்த்தப் பட்ட இனம் என்று சொல்லிச் சொல்லி சர்ச்சுகளுக்கு பேரம் பேசப்படுவதும்தான்!
வாழிய பாரதி மணித் திருநாடு! செண்பகராமா ஜெய்ஹிந்த்!!

வெள்ளி, ஜூலை 20, 2012

ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதி


பலன் தரும் பரிகாரத் தலம்

விரும்பிய மணவாழ்க்கை அமைய...



கூடல்நகராம் மதுரை நகர வீதிகளில் யானை மீதேறி வலம் வந்தார் விஷ்ணு சித்தர். சித்தமெல்லாம் விஷ்ணுவையே கொண்டிருந்தார் என்றதால் அப்பெயர் அவருக்கு. இந்த கவுரவத்தை பக்தர்கள் தந்தார்கள் என்றால், பாண்டிய மன்னனும் ஒரு கவுரவத்தைத் தந்தானே! பாண்டியன் வல்லபதேவனுக்கு இருந்த சந்தேகத்தைப் போக்கி, பரதெய்வம் யாரெனக் காட்டி, அவன் வைத்திருந்த பொற்கிழியை அறுத்து வந்தவராயிற்றே! அதனால்தான் யானை மீதேறி அரச மரியாதையுடன் வலம் வரும் இந்த கவுரவம். இந்த அதிசயத்தைக்  காண மக்கள்தான் படையெடுத்து வந்தார்கள் என்றால்... அதோ பரமனும் தன் வாகனம் மீதேறி மதுரையம்பதி வருகிறாரே..! அப்படி என்றால்..?  பெரியாழ்வாரின் பக்தியைத்தான் என்னென்பது? 

கருடன் மீதேறி வந்தவன் இறைவனேயாயினும் அவன் மீதே பரிவு வந்தது ஆழ்வாருக்கு! பொங்கிப் பெருகிய பரிவாலே பட்டர்பிரானாகத் திகழ்ந்தவர் பெரியாழ்வார் ஆனார்.
பெருமானுக்கு கண்ணெச்சில் (திருஷ்டி) படக்கூடாதென தான் ஏறி அமர்ந்த பட்டத்து யானையின் கழுத்தில் இருந்த மணிகளையே வாத்தியங்களாக்கி பல்லாண்டு பாடத் தொடங்கினார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்வி திருக்காப்பு!
இவ்வாறு பல்லாண்டு பாடியவரின் மகளான ஆண்டாளுக்கு ஸ்ரீவிஷ்ணுவின் மீது ஈடுபாடு இருந்ததில் வியப்பில்லைதான். அரங்கன் அவள் மனத்தை ஆட்கொண்டான். பிருந்தாவனத்திலே ஆடிப் பாடிய கண்ணன், ஆயர்பாடியில் ஆய்ச்சியர் கை பட்டு வெண்ணெய் உண்ட வாயன் அவள் மனத்தை ஆண்டான். எந்நேரமும் சிந்தையில் எம்பெருமானையே கொண்டிருந்ததால், அவனும் ஆண்டாளுக்கு வசப்பட்டான்.
திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியே பெரியாழ்வாரின் குரு, தெய்வம் எல்லாம். வடபத்ர சாயிக்காகவே மிகப்பெரிய நந்த வனம் அமைத்து பூக் கட்டி, பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார் பெரியாழ்வார். கோதையும் அந்தக் கைங்கர்யத்தில் பங்கு கொண்டாள். நூற்றியெட்டு திவ்ய தேசப் பெருமாளின் வைபவத்தையும் தந்தையிடம் கேட்டு வளர்ந்தாள் ஆண்டாள். அரங்கனின் குழல் அழகு, வாய் அழகு, கொப்பூழில் எழும் கமலப் பூவழகு மற்றும் கண்ணழகில் லயித்து வளர்ந்தாள். 'வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையுஞ் சோரும்' எனும் வைராக்கியத்துடன், அரங்கனையே நினைந்து, அரங்கன் மீதே ஆசை கொண்டாள்.
தந்தை பெரியாழ்வார், பெருமாளை வாழ்த்தி பல்லாண்டு பாடினார்; மகள் கோதையோ, பெருமாளையே துயில் எழுப்பினாள். இந்த ஆளுமை குணத்தால்தான் கோதை ஆண்டாள் ஆனாள்!
ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆனாள்... எவ்வாறு? நந்தவனக் கைங்கர்யம் செய்துவந்த பெரியாழ்வார், மாலைகளைக் கட்டி வடபெருங்கோயிலுடையானுக்கு அணிவிப்பார். ஒருநாள் அவர் சூட்டிய மாலையில் நீளமான தலைமுடி! அதைக் கண்டு வருத்தமுற்ற ஆழ்வார், மறுநாள் அந்த மர்மத்தைக் கண்டறிந்தார். ஆண்டவனுக்குச் சூட்டும் மாலையினை ஆண்டாள் தான் சூடி அழகு பார்த்து, பின்னர் அதனைப் பெரியாழ்வார் சுமந்து செல்லும் பூக்கூடையில் வைத்து விடுகிறாள் என்பது கண்டு அவருக்குக் கோபம். தன் செல்ல மகள் கோதையை கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்! அன்று அரங்கனின் அலங்காரத்துக்காக அவனுக்கு அணிவிக்கவேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.
அன்று இரவு, பெரியாழ்வாரின் கனவிலே காட்சி தந்தான் அரங்கன். தமக்கு மாலை வராத காரணம் கேட்டான். ஆழ்வாரும், தன் செல்ல மகளின் சிறுமைச் செய்கை சொல்லி ஆறாத் துயர் கொண்டார். அரங்கன் அவரைத் தேற்றினான். “நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உகப்பானது” என்பதைச் சொல்லி, கோதை நாச்சியாரின் பிறப்பினைப் புரியவைத்தார். தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்டார் பெரியாழ்வார். அவளுக்கு, ‘ஆண்டாள்’ என்றும், ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் அழைத்தார்.
மணப் பருவத்தே நின்ற பெண்ணைப் பார்த்து, பெரியாழ்வார் அவளுடைய மண வினை பற்றி பேசத் தொடங்கினார். ஆண்டாளோ, “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று உறுதியாக உரைத்தாள். ‘‘பின் என்ன செய்யப் போகிறாய்?’’ என்று அவர் கேட்க, ‘‘யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்’’ என்றாள்.
கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வார், ‘நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ?’ என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, “நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம்” என்று திருவாய் மலர்ந்தருளினான். அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, “நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக” என்று பணித்தான். மேலும் பாண்டியன் வல்லபதேவன் கனவிலும் தோன்றி, “நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக” என்றருளினான்.
மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். கோயில் பரிவார மாந்தரும் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கப்பிரான் காட்சி அளித்துச் சொன்ன செய்திகளை அறிவித்தனர்.
பட்டர்பிரான் இறைவனது அன்பை வியந்து போற்றினார். பின்னர் மறையவர் பலர் புண்ணிய நதிகளிலிருந்தும் நீர் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தி, பலவாறு ஒப்பனை செய்தனர். தோழியர் புடைசூழ கோதை தமக்கென அமைந்த பல்லக்கில் ஏறினார். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.
இப்படி எல்லோரும் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்தே, பலரும், “ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்! கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர் குல விளக்கு வந்தாள்!” என்று அந்தப் பல்லக்கின் முன்னே கட்டியம் கூறிச் சென்றனர். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.
பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுதற்காகத் தவமாய்த் தவமிருந்த அந்தப் பெருமாளைக் கண் குளிரக் கண்டாள். அகிலத்தையே வசீகரிக்கும் அந்த அரங்கனின் அழகு, ஆண்டாளைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே! சூடிக்கொடுத்த நாச்சியாரின் சிலம்பு ஆர்த்தது. சீரார் வளை ஒலித்தது. கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை நடந்து அரங்கன் அருகில் சென்றாள். அமரரும் காணுதற்கு அரிய அரங்கனின் அருங்கண்ணைக் கண்ட அந்நொடியில், அவள் இன்பக் கடலில் ஆழ்ந்தாள். உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையில், அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. சீதாபிராட்டியாகத் தான் கொடுஞ்சிறையில் தவித்தபோது, இந்த ராமன்தானே தனக்காக கல்லும் முள்ளும் பாதங்களில் தைக்க, கால் நோக நடந்து வந்து நம்மை மீட்டான். அவன் இப்போது சயனித்திருக்கிறான். அவன் கால் நோவு போக்க நாம் அவன் திருவடியை வருடி, கைமாறு செய்வோமே எனக் கருதினாள். அவனைச் சுற்றியிருந்த நாகபரியங்கத்தை மிதித்தேறினாள். நம்பெருமான் திருமேனியில் ஒன்றிப் போன அப்போதே அவள் அவன்கண் மறைந்து போனாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.
காணுதற்கரிய இக்காட்சி கண்டு பிரமித்துப் போய் இருந்தார்கள் ஆழ்வாரும் மற்றவர்களும். அரங்கன் ஆட்கொண்ட அந்த ஆண்டாள் அரங்கனையே ஆண்ட அதிசயத்தைக் கண்டு எல்லோரும் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தனர். அவர்களின் வியப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் திருவரங்கன் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைத்தான். ‘கடல் மன்னனைப் போல் நீரும் நமக்கு மாமனாராகிவிட்டீர்’ என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியன வழங்கச் செய்தான்.
கருவறை விட்டு வந்த பெரியாழ்வாரை, மகளின் பிரிவு வாட்டியது. ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனாரே - என்று வாய் விட்டுக் கதறினார்.


பெரியாழ்வாரும் ஆண்டாளும் திருரங்கத்தில் வந்து இறங்கிய இடம், மேல அடையவளைஞ்சான் தெருவில், வெளி ஆண்டாள் சந்நிதியாக உள்ளது. இங்கே... அமர்ந்த திருக்கோலத்தில் (மூலவர் விக்கிரகம்) கம்பீரத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள்!
அரங்கன் - ஆண்டாள்! இருவரும் கொண்டிருக்கும் அன்புக்கு எல்லையே இல்லை. ஸ்ரீரங்கநாயகித் தாயார் மற்றும் உறையூர் கமலவல்லித் தாயார் ஆகியோருடன் அவரவர் சேர்த்தி நாளில் வருடத்துக்கு ஒருமுறைதான் மாலை மாற்றிக் கொள்கிறார் அரங்கன். ஆனால், ஆண்டாளுடன், அவளது சந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கிறார்! அரங்கனை தரிசிக்க வரும்போது, இந்த வெளி ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளையும் தரிசியுங்கள்! மிகுந்த வரப்பிரசாதியான இவளை வணங்கி, விரும்பிய மணவாழ்க்கை அமையப் பெற்றோர் மிக அதிகம்.

- மனத்துக்கினியான்

(தினமணி வெள்ளிமணியில் 20.07.2012 இதழில் வெளியான கட்டுரை)
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix