சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    செவ்வாய், மார்ச் 23, 2010

    செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)

    * © senkottai sriram
    * இது செங்கோட்டை மண்ணின் அனுபவப் பதிவு

    செங்கோட்டை மண் ஈந்த 
    நாடக மேடைப் புரட்சியாளர்...
    செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)

    1931இல் இங்கு நான்கு பேர் கூடி நின்று பேசக்கூடாது என்ற நிலை இருந்த காலத்தில், நாடக மேடையில் அரிச்சந்திரனாக நடித்த ராஜபார்ட் நடிகன், ""தேர்க்கொடி கப்பல் தோணுதே!'' எனப் பாடியபடி மேடைக்கு வந்து, தான் பேசும் வசனத்தில் சுதந்திரத்தின் தேவையையும் சேர்த்துப் பேசியதுண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை வழங்கப்படுவதற்கு முன்பே தமிழ் நாடக மேடையில் சமுதாயத்தின் அடித்தட்டிலிருந்த விசுவநாத தாசும் பிறப்பால் மேல் தட்டிலிருந்த அனந்த நாராயணனும் நாடக நடிகர்கள் எனும் முத்திரையுடன் ஒரே பந்தியில் அமர்ந்து விட்டனர் & நாட்டின் விடுதலை பற்றி எழுதுவதற்காக நம் இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் பேனாக்களை எடுப்பதற்கு முன்பாகவே, நம் நாடக நடிகர்கள் நாடக மேடைகளில் விடுதலைக்குத் தீ மூட்டி விட்டார்கள்.

    அக்காலத்தில் நாடக நடிகன் பட்ட அவமானங்களுக்குக் கணக்கேயில்லை. ஒதுக்கித் தள்ளப்பட்ட நாடக நடிகன்தான் அன்று விடுதலைப் பாடல்களை ஆவேசத்துடன் மேடையில் பாடினான். நூறு சொற்பொழிவுகளால் செய்ய முடியாத ஒன்றை அன்றைய ஒரு நாடகம் செய்தது!

    இப்படி தேசீயவுணர்வு மக்களிடையே தலைதூக்கிய வேளையில்தான் கிட்டப்பா நாடக மேடை ஏறினார். கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள், நவாப். ராஜமாணிக்கம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சஹஸ்ரநாமம், மனோகர் போன்றவர்களெல்லாம் பல்வேறு வழிகளில் தமிழ் நாடக மேடையை வளப்படுத்தியவர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் அயன் ராஜபார்ட் நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா.

    சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கலையுலகில் தீண்டத் தகாததாகக் கருதப் பெற்ற நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து, அன்றைய கர்நாடக சங்கீதவுலகின் பெரும் புள்ளிகளைக்கூட சங்கீதம் கேட்பதற்காக நாடகக் கொட்டகைக்கு இழுத்து வந்த பெருமைக்குரியவர் எஸ்.ஜி. கிட்டப்பா என அழைக்கப்பெற்ற செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா.

    கிட்டப்பா 1906 ஆகஸ்டு 25இல் செங்கோட்டையில் பிறந்தார். தந்தை கங்காதரய்யர். தாய் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலக்ஷ்மி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராமகிருஷ்ணன். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். வரலாற்றில் நிலைத்த பெயர் கிட்டப்பா.

    தாங்க முடியாத வறுமை காரணமாக இவரது சகோதரர்கள் இருவர், மாதம் 18 ரூபாய் சம்பளத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர். அன்று ""நாடகவுலகின் தந்தை'' எனப் பாராட்டப் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

    இவரது குழுவில் பயிற்சி பெற்ற சுப்பைய்யரும் செல்லப்பையரும் பிற்காலத்தில் ராஜபார்ட் வேடங்களிலும் பெண் வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றனர். இந்த நாடகக் குழுவினர் 1912 இல் மதுரையில் ஒரு நாடகம் நடத்தினர். அதில்தான் கிட்டப்பா தம் 6வது வயதில் முதன்முதலாக மேடையேறி ஒரு பாட்டுப் பாடி மக்களைக் கவர்ந்தார். அதன்பின் நாடகம் தொடங்கியதும் சபையினர்க்கு வணக்கம் கூறும் பாடலைப் பாடும் பாலபார்ட்டாக அறிமுகமானார். பின் சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    1919 இல் கிட்டப்பாவும் சகோதரர்களும் கன்னையா நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர். கன்னையா கம்பெனி அரங்கேற்றிய நாடகங்களில் தசாவதாரம் இசையிலும் நடிப்பிலும் காட்சி ஜோடனைகளிலும் பெரும் புகழினைப் பெற்றது. அதில் மோகினியாகவும் பின் ராமாவதாரத்தில் பரதனாகவும் தோன்றி கிட்டப்பா அற்புதமாகப் பாடி நடித்தார். ""காயாத கானகத்தே'', ""கோடையிலே இளைப்பாற்றி'', ""எவரனி'' போன்ற பாடல்கள் கிட்டப்பா பாடியதனால் பிரபலமாயின. ஐந்து அல்லது ஆறு கட்டைகளில் எவ்விதச் சிரமமுமின்றிப் பாடும் ஆற்றல் பெற்றவர்.

    அவருக்குப் பெண் கொடுக்கப் பலர் முன் வந்தனர். இருப்பினும் அவரது பெற்றோர்கள் முடிவு செய்த, திருநெல்வேலி விசுவநாதய்யரின் மகள் கிட்டம்மாளை 24.6.1924இல் திருமணம் செய்து கொண்டார்.

    1925 இல் கிட்டப்பாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் இலங்கையிலிருந்து நாடகங்களில் நடிக்க அழைப்பு வந்தது. நாடக ஏஜண்ட் சிங்கம் அய்யங்கார் கிட்டப்பாவை இலங்கைக்கு அழைத்ததே அங்கு சுந்தராம்பாளுடன் கிட்டப்பாவை நடிக்க வைப்பதற்காகத்தான்!

    ""இலங்கையில் சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது. இது தெரியாமல் அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்'' எனச் சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர். சிலர் சுந்தராம்பாளிடம், ""கிட்டப்பாவிற்கு எதிரே நின்று பாடி நீ மீள முடியுமா?'' எனப் பயமுறுத்தினர். ஆனால் இவற்றையெல்லாம் கேட்டு அவ்விருவருமே அஞ்சி பின்வாங்கி விடவில்லை.

    ""ராஜபார்ட் கிட்டப்பா ஸ்திரீபார்ட் சுந்தராம்பாள்'' என கொழும்பு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது.

    1926 மார்ச் மாதத்தில் கிட்டப்பா & சுந்தராம்பாள் நடித்த வள்ளி திருமணம் நாடகம் கொழும்பில் நடந்தது. ""மோட்சமு கலதா'' எனும் பாடலை கிட்டப்பா தமக்கேயுரிய பாணியில் அற்புதமாகப் பாடினார். சுந்தராம்பாளும் அதற்கு ஈடு கொடுத்து தம் இன்னிசையால் அவையோரை மயக்கினார். இருவருமே கொழும்பு தமிழர்களின் பாராட்டுரைகளில் மூழ்கித் திளைத்தனர். அவ்விருவரது வாழ்விலும் இந்நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

    மீண்டும் இவ்விருவரும் 1927 இல் காரைக்குடியில் நடந்த வள்ளி திருமணம் நாடகத்தில் இணைந்து நடித்தனர். அதில் கிட்டப்பா வேலன் & வேடன் & விருத்தன். சுந்தராம்பாள் வள்ளி. அதே நாடகம் அதே இடத்தில் அடுத்த வாரம் நடக்கும் போது சுந்தராம்பாள் வேடன் & வேலன் & விருத்தன். கிட்டப்பா வள்ளி. நந்தனாரிலும் இதே பாணிதான். இருவரும் நந்தனாரும் வேதியருமாக மாறி மாறி நடிப்பார்கள். அதன்பின் அவ்விருவரும் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தனர். அன்றைய நாளேடுகள் இவ்விருவரின் நடிப்பையும் பாடும் திறனையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின.

    இவ்விருவரும் தொடர்ந்து நடித்த கோவலன், ஞான சவுந்தரி போன்ற நாடகங்கள் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்தன. இவர்களிருவரும் தனித்தனியே பாடி வெளிவந்த இசைத் தட்டுகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தன.

    காலப்போக்கில் கலையுலகில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் இணைந்து வாழ இருவரும் விரும்பினர். இரு வீட்டாருக்கும் இதில் விருப்பமில்லை. இருப்பினும் இறுதியில் காதலே வென்றது. கிட்டப்பா ஏற்கனவே திருமணமானவரென்பது சுந்தராம்பாளுக்கு நன்கு தெரியும். ஆயினும் ""உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்'' என கிட்டப்பா அளித்த வாக்குறுதியினடிப்படையில் சுந்தராம்பாள் அத் திருமணத்துக்கு இசைந்தார். திருமணம் மாயவரம் ஆனந்தத் தாண்டவர் ஹாலில் வைத்து எளிய முறையில் நடந்தது.

    இத் திருமணம் பற்றி பிற்காலத்தில் சுந்தராம்பாள் கூறியது... ""அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!''

    திருமணத்துக்குப் பின் கிட்டப்பா & சுந்தராம்பாள் இருவரும் சேர்ந்து ஸ்ரீ கானசபா என ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கித் தமிழ்நாடு முழுவதும் சுற்றிய பின் ரங்கூன் வரை சென்று பல நாடகங்களை நடத்திப் பெரும் புகழுடன் திரும்பினர்.

    நாடகக் கொட்டகைக்கு வெளியேதான் அவர்களிருவரும் கணவனும் மனைவியும் & மேடை ஏறிவிட்டால் கதையே வேறு. கடுமையாக மோதிக் கொள்வார்கள். கேலியும் கிண்டலும்தான் பறக்கும்.

    ஒருமுறை சத்யபாமாவாக மேடையில் தோன்றிய சுந்தராம்பாளிடம் கிருஷ்ண பரமாத்மாவாக வந்த கிட்டப்பா வேடிக்கையாக, ""என்ன பாமா! உனக்கு எந்த நகையை எங்கு அணிய வேண்டுமென்று கூடத் தெரியவில்லையே?'' என்றார். இது நாடகத்தில் இல்லாத வசனம். விடுவாரா சுந்தராம்பாள்? ""என்ன பரமாத்மா! உங்களுக்குப் பெண்கள் அணியும் நகைகள் பற்றி ரொம்பத் தெரியுமோ? தெரியாத விஷயத்தில் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கணும்?'' எனத் திருப்பித் தாக்கினார். உடனே சற்றும் சளைக்காமல் கிருஷ்ண பரமாத்மாவாகிய கிட்டப்பா, ""அட பைத்தியமே! நான் பிறக்கும் முன்பே என் தாய் யசோதை ஆண் நகைகளில் ஒரு செட்டும் பெண் நகைகளில் ஒரு செட்டும் பண்ணி வைத்திருந்தாள். அதனால் சிறு வயதிலேயே எனக்கு அவ்விரண்டு செட் நகைகளையும் அடிக்கடி சூட்டி அழகு பார்ப்பாள். அதனால் எனக்கு இந்த விஷயத்தில் நல்ல அனுபவமுண்டு. என்னவோ எனக்கு ஒன்றும் தெரியாது என்பதைப் போல பேசுகிறாய்'' என சமயோசிதமாகக் கூறிய பதிலைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது. நேரில் கண்டு ரசித்த ஆக்கூர் அனந்தாச்சாரி கூறிய செய்தி இது.

    1921 லிருந்தே கிட்டப்பா தேசீய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அதற்கு அடையாளமாக கதர் உடுத்தத் தொடங்கினார். 1921 இல் திலகரின் நிதிக்காகவும் 1923 இல் மதுரையில் கதர் நிதிக்காகவும் 1924 இல் திருநெல்வேலியில் தேச பந்து தாசிடம் கட்சிக்காகவும் 1930 சென்னை உப்பு சத்தியாக்கிரகத்துக்காகவும் அவர் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். உப்பு சத்தியாக்கிரகத்துக்காக அவர் தம் பேனாவை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் ஏலம் விட அக்காலத்திலேயே அது 50 ரூபாய்க்கு ஏலம் போனது. அவர் நடித்த ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் காந்தி குல்லாயுடன் காந்திஜிக்கு பிரியமான ""ரகுபதி ராகவ ராஜாராம்'' பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    விதி விளையாடத் தொடங்கியது.

    "கிருஷ்ணலீலா நாடகத்தைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறியும் கேட்காமல் சுந்தராம்பாள் அந்த நாடகத்தைக் காணச் சென்றதால் கிட்டப்பா கோபித்துக் கொண்டு சென்று விட்டார்'' என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. இருவருக்குமிடையே கருத்து வேற்றுமைகள் மெல்ல மெல்ல தலைதூக்கின. இடைவெளி அதிகமாயிற்று.

    எதிர்பாராத சில சூழல்கள், கிட்டப்பாவிற்கு ஏற்பட்ட சில தவறான நட்புகள், சில புதிய பழக்கவழக்கங்கள், இருதரப்பிலும் ஏற்பட்ட சில வீண் பிடிவாதங்கள் போன்றவை ஒன்று சேர்ந்து அவர்களிருவரையும் பிரித்து விட்டது.

    1926 இல் கிட்டப்பாவின் தாயார் மறைந்தார். 1927 இல் தமையனாரும் தாயாரைப் பின் தொடர்ந்தார். 1928 இல் தன் ஒரே குழந்தையைப் பறி கொடுத்தார். அவருக்காகவே வாழ்கின்ற சுந்தராம்பாளும் அருகில் இல்லை. அடி மேல் அடி! இவ்வாறு நாடக மேடையில் ஈடு இணையற்ற பாடகராக, அயன் ராஜபார்ட் நடிகராகத் தளராது நின்று செயலாற்றிய அம்மாபெரும் நடிகர் வாழ்க்கைப் போராட்டத்தில் தளர்ந்து நின்றார். மனிதர்கள் தோற்ற இடத்தில் விதி வென்றது.

    1932ஆம் ஆண்டு இறுதியில் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் கிட்டப்பா செங்கோட்டையில் தங்கியிருந்த போது நடந்த நிகழ்ச்சியொன்றை நேரில் கண்டு வியந்த திரு. ஏ.எஸ். நாராயணன் இந்தச் செய்தியைச் சொன்னார். இவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருபவர். (வயது 98ஐக் கடந்தவர். சென்னை மந்தைவெளியில் வசித்துவருகிறார்.)

    ""நடராஜர் கோயில் இருக்கின்ற ஊர்களில் மார்கழி திருவாதிரையன்று சுவாமிக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அதில் எங்கள் ஊரும் ஒன்று.

    ""1929 & 1933களில் கிட்டப்பா வருடந்தோறும் தனி சிரத்தை எடுத்து நாதசுர வித்துவான்களையெல்லாம் வரவழைத்து உத்ஸவத்தைச் சிறப்பிப்பது வழக்கம். வழக்கம் போல் 1932 உத்சவத்தன்றும் ஊர்வலம் வந்தது. பச்சை சாத்தி சப்பரம் ஊர்வலமாகச் சென்று மத்தியானம் ஒரு மணிக்கு கோவிலை அடைந்தது. கிட்டப்பாவும் இருந்தார். அந்த வேளையில் கிட்டப்பா பாட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தோம். மறு நிமிடம் பாடத் தொடங்கினார்.

    ""முதலில் ""பட முடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனும் விருத்தமும், தொடர்ந்து ""மார்கழி மாதம் திருவாதிரை நாள் ""பாடலும் பாடி முடிந்ததும் நாடக ஸ்டேஜில் விழுவதுபோல் சுவாமி முன் வீழ்ந்தார். ஒரே ஆஹாகாரம்! எங்களுக்கெல்லாம் சிதம்பரம் நடராஜப் பெருமாளின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உணர்வே ஏற்பட்டது'' & என்றார் நாராயணன்.

    இறைவனின் சன்னிதானத்தில் நின்று கொண்டு ""ஐயனே! படமுடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனக் கதறினாரென்றால் அது கடந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் உள்ளக் குமுறலாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. அனேகமாக அதுதான் செங்கோட்டையில் அவர் பங்கு கொண்ட கடைசி நிகழ்ச்சி.

    1933 மார்ச். கிட்டப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று. சென்னையில் டாக்டர் பி. ராமராவிடம் சிகிச்சை மேற்கொண்டார். அதன்மூலம் குடல் வெந்திருப்பதும் ஈரல் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. மயிலாப்பூரில் தனி வீடெடுத்துத் தங்கி சிகிச்சை பெற்றார். என்ன தோன்றியதோ... யாரிடமும் கூறாமல் திடீரெனப் புறப்பட்டு செங்கோட்டைக்கு வந்து விட்டார். சிறிது காலம் திருநெல்வேலியில் மாமனார் வீட்டிலும் அதன்பின் சந்திர விலாஸ் மாடி அறையிலும் தங்கினார்.

    1933 ஆகஸ்டு 25. அவருக்கு 27 வயது நிறைவு பெறும் நாள். அதன் நினைவாகத் தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் திருநெல்வேலி இந்து கல்லூரிக்காக இலவசமாக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்தார்.

    செப்டம்பரில் திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையில் மயங்கி வீழ்ந்தார். அப்பொழுது அருகில் சுந்தராம்பாள் இல்லை. அன்று அவருடன் நடித்தவர் பிற்காலத்தில் திரையுலக நடிகையாக விளங்கிய M.கு. விஜயாள்.

    அக்டோபரில் திருமங்கலத்தில் இரண்டு இலவச நாடகங்களை நடத்திக் கொடுத்தார். அதோடு அவரது நாடக வாழ்வின் இறுதித் திரைச் சீலையும் வீழ்ந்தது!

    கடுமையான வயிற்றுவலி.  டாக்டர் அனந்த நாராயணன் சிகிச்சையளித்தார். சிறிது நிவாரணம் கிடைத்தது. சீரண சக்தியை இழந்து அவதிப்பட்டார்.

    1933 டிசம்பர் 2, சனிக்கிழமை பகல் 12 மணி. மீண்டும் வலி. எந்த சிகிச்சைக்கும் அது கட்டுப்படவில்லை. 28 வயதுக்குள் தம் கணக்கை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டு விட்டார்.

    அந்த தினம் &
    சங்கீத தேவதை வெள்ளாடை உடுத்திய தினம்! தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள நாடக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று குமுறி அழுதார்கள்.

    அவர் மறைந்தபோது அவரது இரு மனைவியரும் அருகிலில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

    கிட்டப்பா இறந்தபோது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு 25 வயது.

    அன்றுமுதல் துறவுக்கோலம்தான்! உடம்பில் வெள்ளாடை. நெற்றியில் வெண்ணீறு. கழுத்தில் துளசி மணிமாலை. உதட்டில் முருகனின் திருநாமம். தம் 25வது வயதிலேயே காலம் அவரைத் துறவியாக்கி விட்டது. அன்றுமுதல் அவர் பால் அருந்துவதில்லை. சோடா குடிப்பதில்லை. சத்துணவு ஏதுமில்லை. நகை அணிவதில்லை. ஆண்களுடன் நடித்ததில்லை. அமாவாசை தோறும் காவிரியில் குளிக்கத் தவறியதில்லை. கலையுலகம் கண்டிராத மிகப்பெரிய சாதனை!

    கிட்டப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சுந்தராம்பாள் செங்கோட்டையில் அன்னதானம் அளித்தார்.

    கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து நடித்த பல நாடகங்களும் இன்பியல் நாடகங்களாகவே இருந்த போதிலும் அவர்கள் வாழ்வு மட்டும் துன்பியல் நாடகமாகவே முடிந்தது!

    ""வீட்டில் அவர் ஒரு நாளும் சாதகம் செய்ததில்லை. ஜென்மாந்திர சாதகம் அவருக்கு. இனி இந்த லோகத்தில் அந்த மாதிரி சாரீரம் யாருக்கும் வராது'' என்பார் சுந்தராம்பாள்.

    நாடக மேடையில் அவர் ஒரு பாட்டைப் பாடியபின் யாராவது ""ஒன்ஸ்மோர்'' கேட்டால் கிட்டப்பா பாட மாட்டார். அது அவர் இயல்பு. ஆனால் சுந்தராம்பாள் பாடுவார். அப்பாடல் டூயட்டாக இருந்தால் கிட்டப்பாவும் பாடித் தானே ஆக வேண்டும். எனவே வேறு வழியின்றிப் பாடுவார். பாடியபின் உள்ளே சென்றதும் சுந்தராம்பாளைத் திட்டுவார். இவ்வாறெல்லாம் இருந்தாலும், சுந்தராம்பாள் சிறிது உடல் நலமின்றி படுத்திருந்தால் அவரருகில் உட்கார்ந்து கொண்டு, ""சுந்தரம்! நீ என்னை விட்டுப் போய் விடுவாயோ?'' எனக் கண் கலங்குவார். அவர்களுடைய சங்கீதமும் தெய்வீகம். காதலும் தெய்வீகம்!

    கிட்டப்பாவுக்கு 4 கட்டை சுருதி. சில வேளைகளில் 5 கட்டையிலும் ஏன் 6 கட்டை சுருதியிலும் அனாயாசமாகப் பாடுவார். அதே வேளையில் சுந்தராம்பாளின் மத்திம சுருதிக்கும் பாடுவார். சங்கீத வித்துவான்களுக்குத்தான் அந்த நுட்பம் புரியும். திருச்சி கோவிந்தசாமி பிள்ளை, காஞ்சீபுரம் நாயனாபிள்ளை, மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், அரியக்குடி ராமானுஜய்யங்கார், திருவாவடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை போன்ற வித்துவான்களையெல்லாம் அனேகமாக கிட்டப்பா நடிக்கும் நாடக அரங்கின் முதல் வரிசையில் காணலாம். அவர்கள் வருவது நாடகம் பார்ப்பதற்காக அல்ல, கிட்டப்பாவின் வியக்க வைக்கும் அமர கானத்தைக் கேட்பதற்காக!

    ஒருமுறை நாடகத்தில் கிட்டப்பாவின் சங்கீதத்தைக் கேட்ட ஒருவர், ""நல்லவேளை! ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகக் கொட்டகைக்குள் நுழையாமல் சங்கீத மேடைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ எங்கள் கடையைக் கட்டியிருப்போம்!'' என்று வெளிப்படையாகவே கூறினார். இப்படிக் கூறியவர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்.

    முதன்முதலில் ""எவரனி'' எனும் கீர்த்தனையை இசைத் தட்டில் பதிவு செய்தவர் இதே ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்தான். பின்னர் எதிர்பாராத விதமாக கிட்டப்பா பாடிய ""எவரனியை'' அவர் கேட்டிருக்கிறார். உடனே தாம் பாடியதற்காகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்ததோடு, தாம் பாடிய ""எவரனி'' இசைத் தட்டு வெளிவராமலும் தடுத்து விட்டார். கிட்டப்பாவின் ""எவரனி'' முத்தையா பாகவதரை அந்த அளவுக்குக் கவர்ந்திருந்தது.

    வேறு யாராவது ஒருவர் பாடிய பாடலை ஒருமுறை கேட்டாலே போதும், அடுத்த விநாடியில் அதனை அப்படியே திரும்பப் பாடும் திறனைப் பெற்றிருந்தார் கிட்டப்பா. ஒருமுறை பியாரேசாகேப் பாடிய கமாஸ்ராகப் பாடலொன்றை அவர் கேட்டார். அன்றைய இரவு நாடகத்தில் அதே பாணியிலேயே அப்பாடலைப் பாடியதைக் கேட்ட பியாரே சாஹேப் கிட்டப்பாவை பாராட்டியதோடு ஒரு தங்கச் செயினையும் பரிசாக அளித்தார்.

    1924 இல் வடநாட்டு இசை மேதை பண்டித விஷ்ணு திகம்பரர் சென்னையில் தங்கியிருந்த பொழுது கிட்டப்பா வின் பேகடா  ராக ஆலாபனையைக் கேட்டுக் கண்ணீர் மல்க மெய்மறந்து நின்றிருக்கிறார். கிட்டப்பாவின் தெய்வீக இசை ஞானத்துக்குச் சான்று பகர இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். இந்துஸ்தானி பாடகர் புரபசர் கணேஷ் பிரசாதும் அமெரிக்க இசை விற்பன்னர் ஈச்சிம் என்பவரும் கிட்டப்பாவின் இசையில் மயங்கியவர்களுள் சிலர். இவ்வாறு நாடக மேடையில் தூய கர்நாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமை கிட்டப்பாவுக்கு உண்டு. அவருடைய ""கோடையிலே இளைப்பாற்றி'' எனும் வள்ளலாரின் விருத்தமும் ""காயாத கானகத்தே'' எனும் வள்ளி நாடகப் பாடலும் ""எவரனி'' எனும் கீர்த்தனையும் சாகாவரம் பெற்றவையாக இன்றும் நம் காதுகளில் ஒலிக்கின்றன.

    இவ்வாறு சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த நாடக நடிகராகவும் ஒப்புயர்வற்ற சங்கீத மேதையாகவும் அப்பழுக்கற்ற தேசீய வாதியாகவும் திகழ்ந்தவர் அமரர் எஸ்.ஜி. கிட்டப்பா.

    தாம் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்த அவருக்கு, இங்கு நினைவில்லமோ மணிமண்டபமோ எதுவும் கிடையாது. தற்போது அவர் அளித்த இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது ஒரு வாசக சாலை (ஸ்ரீமூலம் திருநாள் வாசகசாலை). அதிலாவது, அவருடைய பழைய புகைப்படங்களோ, இசைத்தட்டுகள் எவரிடமாவது இருந்தால் அவர்களிடம் இருந்து பெற்றோ ஒரு நினைவில்லம் அமைக்கலாம். கிட்டப்பாவின் நினைவுகளை வருங்காலத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியாக இது அமையும். கலை உலகுக்குக் கைகொடுக்கும் தமிழக அரசு, ஆவன செய்தால் நாடகவுலகுக்கும் சங்கீத உலகுக்கும் செய்யும் மாபெரும் தொண்டாகவும் அது அமையும்!
    பெயரில்லா சொன்னது…

    Thank you for sharing all these interesting memories.
    Glad to know about SGK.
    God Bless.
    Kind Regards,
    Srinivasan. V.

    பெயரில்லா சொன்னது…

    திண்ணை.காம் -யில் இதைத் திருடி முனைவர் சேதுராமன் என்பவர் எழுதியது கண்டனத்திற்குரியது.

     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX