சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், ஜனவரி 13, 2010

சுவரில் லா.... ஆ ... ஆ சித்திரங்கள்!

எனக்கு சினிமா என்றால் சிறு வயதிலிருந்தே கொஞ்சம் அலர்ஜிதான்! கிராமங்களில் அடிக்கடி சினிமாக்காரர்கள் வந்து அலம்பல் பண்ணுவதையும், அவர்களை வாய்பிளந்து கிராமத்துக்காரர்கள் பார்ப்பதையும் கண்டு ரொம்பவே நொந்திருக்கிறேன். அதனால், சிறுவயதில் சினிமா தொடர்பு என்று யாராவது சொன்னாலே... எட்ட நின்று விடுவேன். அவர்களுக்கு அப்படி என்ன பெரிய கொம்பு என்று! தென்காசியில் - பள்ளிக்கூட வயதில், என் சகாக்கள் சேர்ந்து, ஒரு சங்கம் எல்லாம் வைத்திருந்தோம். பள்ளி மாணவர்களுக்கே உரிய குறும்புகளோடும் கனவுகளோடும்! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து கோலோச்சுவதும், அவர்களின் திரைத் தோன்றல்களில் மயங்கி தங்கள் சொந்தங்களையே துறந்து, சொந்த வாழ்க்கையையும் இழந்து நிற்கும் பலரை கண்டும் கேட்டும் இருக்கிறேன். ஏன் இந்த சமூகம் பகட்டுக்கு மயங்குகிறது..? அறிவாளிகளுக்கு மதிப்பு தருவதில்லை..? இவையெல்லாம் என் பள்ளிக் கால எண்ணங்கள்.

ஆனால், ஊடகத் துறைக்கு வந்த பிறகு, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாக சினிமாத்துறை நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள். கட்டாயத்தின் பேரில் பழக நேர்ந்தாலும், சிலர் மனதில் ஒட்டிக் கொண்டார்கள். வெள்ளித் திரைக்குப் பின்னால் உழைக்கும் அவர்களின் தாகம், கனவுகள், வாழ்க்கையே சினிமாதான் என்று இருக்கும் போக்கு... இவற்றை உணர்ந்த போது, என் இளவயது எண்ணங்கள் மாறிப்போனது. திரையில் தோன்றும் முகங்களை மட்டுமே சினிமா என்று எண்ணினால் அது எப்பேர்ப்பட்ட பைத்தியக்காரத்தனம் என்பது புரிந்தது. இது இயற்கைதானே! எப்படிப் பட்ட கலைஞர்கள், கலைத் திறமை மிக்கவர்கள்... அடடா!

அப்படி நான் பார்த்து வியந்த கலைஞர்களில் ஒருவர்... கலை இயக்குநர் - நிகழ்கால தூய தமிழில் சொன்னால் ஆர்ட் டைரக்டர் - சாபு சிரில்!
ஒரு முறை ஊருக்குப் போயிருந்தபோது (செங்கோட்டைக்கு), ஊரின் முகமே முழுவதும் மாறியிருந்தது. என்ன என்று பார்த்தால், இரண்டு தெருக்களில் எல்லா வீட்டு முகப்பிலும் வண்ண வண்ண ஓவியங்கள்! வண்ணச் சித்திரங்கள் கண்டு மயங்கி நின்றேன். அப்போதுதான் சொன்னார்கள் - அங்கே அந்நியன் படத்தின் படப்பிடிப்பு நடப்பதாகவும், அதன் ஒரு பாடல்காட்சிக்காகத்தான் இந்தக் கோலம் என்றும் சொன்னார்கள். 150க்கும் மேற்பட்ட வீடுகளின் முகப்புகள் வண்ண ஓவியங்களில் மின்னின. சின்னச் சின்ன இண்டு இடுக்குகளைக் கூட விடாமல், அருமையான ராஜஸ்தானி பாணி ஓவியங்கள்... கிராமிய பாணி சித்திரங்கள் என ஒரே கலக்கல்தான். எப்படி இவ்வளவு நேர்த்தியாக இவர்களால் செய்ய முடிந்தது என்று ஒரே ஆச்சரியம் எனக்கு! என் பழைய ஃபிலிம் ரோல் கேமிராவில் அப்படியே க்ளிக் செய்தேன்.

ஒவ்வொரு வீட்டுக்கும் வெள்ளை அடித்துக் கொள்ள பணமும் கொடுத்து, தெரு பொதுச் சத்திரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் கொடுத்து, இவ்வளவு சிரமப் பட்டு செய்த இந்த வேலைக்கு அங்கீகாரம் என்னவோ இரண்டு நிமிட டான்ஸ் தான்! அண்டங்காக்கா பாட்டுக்கு ரண்டக்க ரண்டக்க என்று ரவுண்ட் கட்டியதோடு சரி!

ஆனால், வெகு நாட்கள் இந்த ஓவியங்களை அழிக்க மனமின்றி பல வீடுகளிலும் அப்படியே வைத்திருந்தார்கள். அடுத்துவந்த பொங்கலின் போதுதான் வெள்ளை அடித்தார்கள். இந்த ஓவியங்களும் அற்புதமான இந்தப்பணியும் வெகு நாட்களுக்கு நினைவில் நிற்கும். ஸ்வீட் மெமரிஸ் என்பார்களே அதுபோல்!
இந்த ஓவியங்களில் மயங்கியதால், மஞ்சரியின் 2005ம் வருட தீபாவளி மலரில், (காருகுறிச்சி வரதராஜனிடம் அசைன்மெண்ட் கொடுத்து,) சாபு சிரில்-லிடம் ஒரு பேட்டி எடுக்கச் செய்து வெளியிட்டேன். இப்போது அண்டங்காக்கா பாட்டு பல்வேறு டிவிக்களிலும் ஜகா வாங்கி விட்டதால், யதேச்சையாக என் கண்ணில் பட்ட, என் ஆல்பத்தில் இருந்த இந்தப்படங்களை ஸ்வீட் மெமரீஸ் ஆக பதிவு செய்து வைக்கிறேன்.
ராம்ஜி_யாஹூ சொன்னது…

மிக அருமை ஊரும் தெருவும்

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix