சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, பிப்ரவரி 22, 2008

My book Tamizhmarai thantha panniruvar - Review

அடியேன் எழுதி விகடன் பிரசுரம் மூலம் வெளியாகியிருக்கும் தமிழ்மறை தந்த பன்னிருவர் நூல் விமர்சனத்தை, திருச்சி, புத்தூர் வக்கீல், ஸுதர்சனர் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் கீழ்க்காணும்படி தந்திருக்கிறார். அவருக்கு அடியேனின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உங்களுக்கு தருகிறேன்...

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.

தமிழ்மறை தந்த பன்னிருவர்

பக்கங்கள்: 192
விலை ரூ.55,
நூலாசிரியர்: செங்கோட்டை ஸ்ரீராம்
விகடன் பிரசுரம் 757, அண்ணா சாலை, சென்னை 2
-----------------------------------------------------------------------------------
விசதவாக் சிகாமணிகளான மணவாளமாமுனிகள் அருளிய உபதேச ரத்னமாலையை அனுசரித்து ஆழ்வார்கள் அவதாரம் ஏன் ஏற்பட்டது? பொய்கையாழ்வார் தொடக்காமாக திருமங்கையாழ்வார் ஈறாக ஆழ்வார்கள் வரலாறு, ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துத் தந்த நாதமுனிகள் முதலிய பதினான்கு தலைப்புகளில் ஆழ்வார்களின் வரலாறும் அவர்கள் அருளிய பாடல்களின் பொருட்செறிவும் மிகவும் எளிய இனிய தமிழில் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்களின் திருவுருவப்படங்களைக் கொண்ட வண்ண அட்டைப்படம், ஒவ்வொரு ஆழ்வாரின் வரலாற்றை விளக்கும் அத்தியாயத்தில் அவரது திருவுருவப் படம் ஆகியவற்றோடு உயர்ந்த தாளில் சிறப்பாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் முகவுரையில், ஑஑திருச்சியில் கல்லூரியில் படித்த காலத்தே என்னுள் எழுந்த ஐயங்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியவர் வைணவப் பெரியவர் புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்ஒஒ (ஸுதர்ஸனர்) என்று எழுதியுள்ளதும் குறிக்கொள்ளத் தக்கது. விகடன் போன்ற பிரபல பதிப்பகத்தின் ஆதரவில் இந்த நூல் வெளிவந்துள்ளது ஆயிரக்கணக்கான வாசகர்கள் வைணவ ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

இருபினும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பக்கம் 25ல் பொய்கையாழ்வாரை ஑஑சைவ வைணவ ஒற்றுமை பேசியவர்ஒஒ என்று குறிப்பிட்டுள்ளதும், அதற்குச் சான்றாக அவர் அருளிய முதல் திருவந்தாதியில் அரன் நாரணன் நாமம்(5) என்னும் பாட்டுக்கு ஒரே தெய்வத்துக்கு (அரன் நாரணன் ஆகியவை உனது) பெயர்கள், எருது கருடன் உமது வாகனங்கள், ஆகமமும் வேதமும் உன் பெருமை பறை சாற்றும் நூல்கள், கைலாய மலையும் திருப்பாற்கடலும் உன் இருப்பிடங்கள் என்று பொருள் உரைத்திருப்பது பொருந்தாது.

இப்பாசுரம் சிவனின் தாழ்ச்சியையும் அவனோடு ஒப்பிடும்போது ஸ்ரீமந் நாராயணனின் மேன்மையையும் விளக்குகிறது. அதாவது ஒருவனுக்கு அரன் என்று பெயர், அவனுக்கு ஞானமற்ற எருது வாஹனம், அவனைச் சொல்லும் நூல் வேத விருத்தமான அர்த்தங்களையும் சொல்லும் சைவாகமம். அவன் வசிக்கும் இடம் கடினத் தன்மையுடைய கைலாய மலை. அவனது தொழிலோ அழிப்பது. ஆயுதமோ வேல், அவனுடைய வடிவு எரிக்கும் நெருப்பு போன்றது என்று சிவனுடைய தாழ்ச்சியை வர்ணிக்கிறார்.

பொய்கையாழ்வார் அதுபோல் சிவனுள்ளிட்ட அனைத்துலகையும் படைத்த பரம்பொருளுக்குப் பெயர் நாராயணன், அவனுக்கு வாஹனம் வேதமயமான கருடன். அவனைப் பேசுவது அநாதியான வேதம். அவன் வசிக்கும் இடம் குளிர்ந்த கடல், அவனுக்குத் தொழிலோ அனைவரையும் ரட்சிப்பது, அவனுடைய ஆயுதம் அருளார் திருச்சக்கரம். அவனது வடிவு களைப்புகளை ஆற்றும் கார்மேகம் போன்றது.

இப்படிப்பட்ட இருவரில் அனைத்துலகையும் போலே சிவனும் எம்பெருமானுக்கு சரீரம் என்பதே இப்பாசுரத்தின் உண்மைப் பொருள். ஑஑வியவேன் திருமாலையல்லாது தெய்வம் என்றேத்தேன் வருமாறென் நம்மேல் வினைஒஒ (64) என்று பாடிய ஆழ்வார் மீது தர்காலத்தில் பிரசாரம் செய்யப்பட்டு வரும் சமரசவாதத்தை ஏறிடுவது தகாது.

நூலாசிரியர் ஆழ்வார் சமரசம் பேசுவதாக எடுத்துக்காட்டியிருக்கும் மற்ற பாடல்களுக்கும் எம்பெருமான் சரீரத்தையுடையவன் (சரீரி) ஏனைய உலகமனைத்தும் அவனுக்கு சரீரம் என்ற விசிஷ்டாத்வைத வேதாந்தக் கருத்துக்கு இணங்கப் பொருள் கொள்ள வேண்டும். அடுத்த பதிப்பில் இக்குறைகள் நீக்கப் பட்டு, ஆழ்வார் பாசுரங்களுக்கு முன்னோர் மொழிந்த முறையில் உண்மைப் பொருள் உரைப்பார் என்று நம்புகிறோம்.

& ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் & பிப்ரவரி 2008
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix