சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், நவம்பர் 14, 2016

பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?


வீரகேரளம்புதூரில் கோயில்கொண்ட நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் பெயரை, எங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருந்தவர் என் அத்தை மகன் நவநீதகிருஷ்ணன். நவநீதன், நவனீ என்றெல்லாம் செல்லமாய் அழைக்கப்பட்டவர்!

என் துவக்கப் பள்ளிப் பருவத்தில் பார்த்ததுண்டு. மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். மனத்தில் ஓர் அழுத்தமும் அமைதியும் குடிகொண்டிருக்கும். முகம் சலனமற்று எந்தவித கோபத்தையோ வருத்தத்தையோ நகைப்பையோ வெளிப்படுத்தாமல் அப்படியே இருக்கும்!

மிகச் சிறு வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தாராம். பத்து வருடத்துக்கும் மேல் சர்வீஸ் முடித்து 30 வயதுகளில் ஊர் திரும்பிவிட்டார். தென்காசி மேலப்புலியூர் அக்ரஹாரத்தில், அவரது வீட்டின் மாடியில் போய் அமர்ந்தாரென்றால் புத்தகமும் கையுமாக இருப்பார். ராணுவத்தில் இருந்த சகவாசம், மிலிட்டரி சரக்குக்கு ஆட்பட்டு விட்டாராம்! அதனால் அவர் அருகே போக அச்சப்பட்டு ஒதுங்கிச் சென்றிருக்கிறேன்! வயது பத்தைக் கடந்திராத அந்தப் பருவத்தில் சாராயத்தின் வீரியம் எல்லாம் என் அறிவுக்குள் எட்டியதில்லை! ஆகவே எட்ட நின்றே பார்த்திருந்தேன்! ஆனாலும் ராணுவ சேவை என்பது அவர் மூலம் சிறுவயதில் தீப்பொறியாய் ஒரு மூலையில் பற்றியது!

அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்குத் திருமணம் ஆயிற்று! அதற்கு அடுத்த ஓரிரு வருடங்களில் மண வாழ்க்கை நிலைக்காமல் மரித்தும் போனார்! இருந்தாலும், ராணுவத்தில் இருந்து திரும்பியவர் என்ற அந்த அடையாளம் மட்டும் மனசுக்குள் ஒட்டிக் கொண்டதில், நாமும் ராணுவப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டிருந்தது!

தென்காசியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நேரம்... ஆறடி உயரம். கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று போட்டிகளுக்கும் சென்று வந்தேன். குழு விளையாட்டுகள்தான்! அப்போதுதான், NDA - National Defence Academy தேர்வு எழுதலாம் என்று உடன் படித்த நண்பர்கள் ஓரிருவர் முயன்றனர். என்னவென்றே அம்மாவிடம் சொல்லாமல் அந்தப் பதினாறு வயதில் நானும் எழுதினேன்.

எழுத்துத் தேர்வு முடிந்து, அடுத்த கட்டத்தில் வந்து நின்றது. மெள்ள அம்மாவிடம் ஆசையைச் சொன்னேன்! டிஃபன்ஸ் என்ற சொல், அம்மாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏற்கெனவே மதிப்பும் பாசமும் வைத்திருந்த என் அத்தான் நவநீயின் வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பு ஒரு புறமும், ஒற்றைப் பிள்ளை, அதுவும் தலைப்பிள்ளை எப்படி உன்னை விட்டு இருப்போம் என்ற பாசக் கட்டு மறுபுறமுமாக இழுத்துக் கட்டியதில், அந்த முயற்சி அத்துடன் நின்று போனது! பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையுடன் என் பெரிய மாமா சுந்தர்ராஜனின் கையில் என்னை ஒப்படைத்தார்! நானும் திருச்சிக்கு வந்தேன்; கல்லூரிப் படிப்புக்கு!

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்தப் பதினாறு வயதில் ராணுவப் பணிக்கு சென்றிருந்தால், இருபது வருட சேவை முடிந்து இன்று திரும்பியிருக்கலாம்! இந்த இருபதுக்கும் மேலான வருடங்களிலும்  தாயை விட்டுப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்திருக்கிறேன், என்றாலும் கூப்பிடு தொலைவில் இருந்து கொண்டு! ஆசையிருந்தும் ராணுவப் பணிக்குச் செல்லாமல் இருந்த இந்த இருபது வருடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சாதனையோ, சமூகத்துக்குப் பயனுள்ள வாழ்க்கையையோ நான் வாழ்ந்துவிடவில்லைதான்!

அத்தானின் கதியை நினைத்துதான், சிகரெட், மது இரண்டின் அருகேயும் செல்லக் கூடாதென சத்தியம் செய் என்றார் அம்மா. இன்று வரை அந்த சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறேன்! ஆனாலும், பாசம் என்ற கயிறு, எப்படி நம் தனிப்பட்ட விருப்பங்களில் இழுத்துச் செல்லாமல் கட்டிப் போட்டு முடக்கிவிடுகிறது என்பதை அவ்வப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

கல்லூரியில் படித்த 90களில்தான் கணினிப் படிப்பு அறிமுகமானது. யுனிக்ஸ், சி ப்ளஸ், டிபேஸ், என முயன்று படித்தும், உடன் படித்த நண்பர்கள் அத்துறையில் சென்றபோதும்,  வழிகாட்ட யாருமின்றி அந்தத்  துறையிலும் கால் பதிக்காமல் ஏதோ மார்கெடிங் என்று துவக்கத்தில் ஊர் சுற்றி, பின்னாளில் பத்திரிகைத் துறை என்று தடம் மாறிப் போனது!

இந்த ஞாயிறுப் போதில், குடியிருப்பின் அடுத்த ப்ளாக் நண்பர் திரு. ஜகந்நாதனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 28 வயதாகும் அவர் மகன் இன்ஃபோஸிஸ் பணியில் மெல்பர்னில் இருப்பதாகவும், இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் படிக்கும் போதே கேரியர் குரோத், வளர்ச்சி, போட்டிகள் நிறைந்த உலகம் எப்படி சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்றும், பாசம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை என்றும் கருத்தைச் சொன்னார். சாப்பிட்டாயா என்று கேட்டால் கூட, அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்றும், தங்களை இன்னும் குழந்தை போல் யோசிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வதாகவும் கூறினார்.

தலைமுறைகள் குறித்த அவரின் இந்தச் சிந்தனையே, என்னைப் பற்றிய சுயபரிசோதனைக்கு என்னைத் தூண்டியது! படிப்பும் திறமையும் இருந்தது; ஆனால் வழிகாட்டிகள் எவரும் இல்லை! சொந்தங்களும் சொல்லிக் கொள்ளும்படி வழிகாட்டும் நல்ல நிலையிலில்லை! காற்றின் திசையில் அலைக்கழிக்கப்படும் படகைப் போல் பயணித்தாயிற்று! துடுப்பு போடும் வலிமையின்றி! அதுதான்... நான் ஏன் இப்படி உதவாக்கரை ஆனேன் என்று இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...! சுய சிந்தனை! சுய பரிசோதனை! 

ஞாயிறு, ஜூன் 05, 2016

புனித தாமஸ் எனும் புனை கதை!

புனித தாமஸ் எனும் புனை கதை!
***
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது...
பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று
ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு ஹெஹே ஹைஹைன்னு ஏதோ சிரிப்பு, கைதட்டல், டான்ஸ், எக்சர்சைஸ் என்று என்னமோ கூத்தடித்து ஒரு நாள் முழுக்க வீணாக்கினார்...
சென்னையைப் பற்றி சொன்னார்...
சுற்றுலா இடங்கள் என்று ஏதேதோ பேசினார்
எல்லாம் சகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்...
திடீரென செண்ட் தாமஸ் சர்ச் என்றார்... மந்தைவெளி சர்ச்..
பிருங்கிமலை சர்ச் பற்றி சொன்னார்...
ரொம்ப உருக்கமாக யாரோ ஒரு பிராமணன் தாமஸை குத்தி  தோமயர் மலையில் சாவடிச்சார் என்று கதை விட்டார்...(இந்த பிருங்கி மலை பரங்கிமலையான கதையை  ஏற்கெனவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்...)
என் சகிப்புத் தன்மை என்னிடம் சகிக்காமல் ஓடியது...
எழுந்து நின்று கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினேன்...
நீங்க சொல்றதுக்கு என்ன ஆதாரம்? என்று!
வழிவழியாக சொல்லப்படும் கதை, அங்கே அப்படித்தான் எழுதிப்  போட்டுள்ளார்கள் என்றார்.
அப்படியானால்... தாமஸ் எந்த வழியில் இந்தியாவுக்கு வந்தார்  என்றேன்...
கடல் வழிஎன்றுதான் சொல்கிறார்கள் என்றார்.
அப்படியானால் வாஸ்கோடகாமாவை இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்து எறிந்துவிட வேண்டும் சம்மதமா என்றேன்...
அர்த்தம் புரிந்தவர் போல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்...
மயிலையில் இருந்து கொண்டு, சர்ச்சாகிவிட்ட அந்தக் கபாலியின் கோயிலுக்கு எத்தனை முறை சென்றிருக்கிறேன். தூண்களும் படிகளும் இன்றும் பறை சாற்றுகின்றது.  (https://goo.gl/uWRpdV)
பாடப்பட்ட பாடல்களெலாம்... கடற்கரையில் அமர்ந்த ஈசனின் திருக்கோவில் தாள் தொட்டு சாகரத்தில் சங்கமித்த அலைகளைப் பேசுகின்றன...
சம்பந்தரின் சம்பந்தம் பெற்ற இந்தப் பாடல் அதைச் சொல்லும்...
*
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன் ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது. (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)
3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.

***
பொய்கள் .. மதசார்பின்மை என்ற நிலைப்பாட்டில் பலராலும் பரப்பப்  படுவது இது ஒன்றும் புதிதல்ல!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - துருக்கியர் படையெடுப்புகளும் அதன் மதப் பரவலாக்கமும்!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - ஐரோபியப் படையெடுப்புகளும் கிறிஸ்துவ மத பரவலாக்கமும்!

வாள் என்று முன்னே நீட்டி, கழுத்தில் கத்தியை வைத்து கதறக் கதறக் கொலைகளைச் செய்த அரேபியராகட்டும்...
ரொட்டித் துண்டை முன்னே நீட்டி கதறக் கதறப் பார்த்திருந்து இயேசுவின் நாமத்தால் நாக்கைச் சப்புக் கொட்ட வைத்த பாதிரிகளாகட்டும்...
எல்லாரும் இந்த இந்தியத்  திருநாட்டின் வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதியப் பட்டிருக்கிறார்கள்!
அந்த உண்மை வரலாறுகளை தேடிப் படிக்காதது நம் குற்றம்!
***
கோவா இன்க்யுசிஷன் - கோவா நீதி விசாரணை  என்பதை கூகுளில் தேடிப் பிடித்துப் படியுங்கள்!
கோவா என்ற அந்த இந்தியப் பிரதேசம் - எப்படி  ’அளவு கடந்த அன்பெனும் மகிமை’யால் கிறிஸ்துவமயமானது என்பதை படித்துப் பாருங்கள்!
***
இந்திய மன்னர்களும் சண்டையிட்டார்கள்!
சேரனும் சோழனும் பாண்டியனும்கூட சண்டையிட்டான்.
வாள்களும் ஈட்டிகளும் மோதிக் கொண்டன...
சமணமும் புத்தமும் கூட போட்டியிட்டது
சைவமும் வைணவமும் கூட சண்டையில் ஈடுபட்டன
மதங்களைக் கட்டிக் கொண்ட மன்னர்களால் மதப்  பிடிப்புள்ள தத்துவவாதிகள் கொலையுண்டார்கள்...
ஆனால்... மக்கள் மடியவில்லை! கத்தி முனையில் கழுத்தில் கீறப்படவில்லை! மதத்தை முன்னிறுத்தி போர்கள் நிகழவில்லை!
மண்ணாசையே போருக்குக் காரணமானது!
வரலாற்றில் தன்னை முன்னிறுத்தும் பேராசையே வாள்சண்டைக்கு காரணமானது!
வெற்றி பெற்றாலும், வென்ற மண்ணில் மக்களை சமாதானப் படுத்த வெற்றிபெற்றவன் செய்த முதற்காரியம், அந்த மக்களின் மத உணர்வைப் போற்றும் விதமாய் அவர்களின் தெய்வத்துக்கு கோயில்களை எழுப்பியதுதான்! காரணம் அதே தெய்வம் இவனுக்கும் தெய்வமாக இருந்ததே!
ஆனால்....
இந்திய மதங்களை அழிக்கக் கிளம்பிய அன்பு, அகிம்சை பேர் தாங்கிய மதங்களெலாம்
இந்த மண்ணுக்குச் செய்த துரோகங்கள்... கொஞ்ச நஞ்சமல்ல! கொடிய நஞ்சு!
***
இன்றளவும் மாரியம்மனையும் சுடலையப்பனையும் மாடசாமியையும் இன்னும் வெளி உலகை வந்தடையா எண்ணற்ற தெய்வங்களையும் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்களைக் காணும்போதெல்லாம்....
எத்தகைய வீரம் விளைந்தவர்கள் என்பதை எண்ணி எண்ணி உள்ளம் சிலிர்க்கும்!
ஆமாம்..
இன்றும் தங்கள் குல வழக்கப்படி, மரபு சார்ந்து, விழா எடுத்து, பொங்கலிட்டு, படையலிட்டு, தங்கள் தெய்வங்களைத் தொழுது கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே...
வீர நெஞ்சினரே...
விலை போனவர்களைப் போலும், வாளுக்கு அஞ்சி வாய் மூடிய கோழைகளைப் போலும் இல்லாது நெஞ்சு  நிமிர்த்தி நிற்கின்றார்களே... அதற்காகவே அவர்கள் காலில் விழுந்து வணங்கலாம்! வணங்குகிறேன்!

****
மேலும் படிக்க... சில சுட்டிகள்!
* ஜெயமோஹன் கட்டுரை http://www.jeyamohan.in/600#.V1OdUPl97IU
* டோண்டு வலைப்பதிவு: http://dondu.blogspot.in/2008/08/blog-post_12.html
கோவா நீதிவிசாரணைச் சம்பவங்கள்:
* https://en.wikipedia.org/wiki/Goa_Inquisition
* http://www.newindianexpress.com/education/student/Goa-Inquisition/2015/09/03/article2979630.ece
* https://goo.gl/3VUfFk

புதன், மார்ச் 02, 2016

இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை


ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது... இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட,
தவறு செய்யத் தூண்டி, வண்டியோட்டியின் கண்ணில் படாதவாறு இடது புறம் மரத்துக்குப் பின்னோ, தெருவிளக்கு மின் பெட்டிக்குப் பின்னோ மறைந்து நின்று... திடீரென இடப்புறம் திரும்பி வருபவரை கப் என்று பிடித்து, கறந்து விடுவது... போக்குவரத்து போலீஸாரின் இயல்பு. அவர்கள் என்றுமே, தவறு செய்யாமல் தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் நிற்பதில்லை!
இது கிட்டத்தட்ட ஸ்டிங் ஆபரேஷன் போல்தான்! அதாவது பொறி வைத்துப் பிடிப்பது.
ஏற்கெனவே சபல புத்தியுள்ள ஒருவனை, விதி மீற வைத்து, அபராதம் கறக்கும் ஒரு செயலைச் செய்வது அறமா?
இது போன்றதற்கான விடையை, ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை வைத்து  நீதிபதி ராமசுப்ரமணியன் சொன்னது ரசிக்கும் படி இருந்தது. நல்ல தகவலாகவும் இருந்தது.
எங்கே என்று கேட்கிறீர்களா?
***
தினமணி அறக்கட்டளையின் சார்பில், மார்ச் 1 ஆம் நாள், ஏ.என்.எஸ்., நினைவுச் சொற்பொழிவு என்றும், முதல் சொற்பொழிவாக நீதிபதி ராமசுப்ரமணியன் சிறப்புச் சொற்பொழிவு என்றும் பார்த்தேன். தலைப்பு இன்னும் தூண்டுதலாக அமைந்துவிட்டது. "இதழியல் அறம்” என்பதுதான் அது.
நீதிபதி ராமசுப்ரமணியன் மீது பெரும் மரியாதை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் உண்டு எனக்கு! நேரில் சந்தித்து அளவளாவிய தன்மையால் மட்டுமல்ல... எவர் ஒருவர் பசுவை வைத்து பூஜை செய்து நியமப்படி நடந்து கொள்கிறாரோ... அவர்  காமதேனுவின் அம்சம் ஆகிறார்!
நீதிபதி ராமசுப்ரமணியன் தமது இல்லத்தில் இப்போதும் பசு மாடு வைத்து, கோ பூஜை முறையாகச் செய்து, தர்ம நெறிப்படி வாழ்வை நகர்த்திச் செல்பவர். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு! மேலும், நல்ல பேச்சுத் தமிழ் நடை கைவரப் பெற்றவர். கெக்கே பிக்கே நகைச்சுவை என மலிவான சரக்கை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல், இயல்பான கௌரவமான நகைச்சுவையைக் கையாளக் கூடியவர். அந்த எண்ணத்தில் ஏ.என்.எஸ்ஸுக்காகவும், தினமணிக்காகவும், நீதிபதியாருக்காகவும் இந்த நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வராவிட்டாலும், தினமணியின் பொது அழைப்பு காரணத்தால், தினமணி வாசகனாகவே இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்!
***
நிகழ்ச்சியில் பேசிய அனைவரின் பேச்சுமான, ஓரளவு முழுமையான ரிப்போர்ட்... தினமணியில் 2ம் பக்கம் முழுமைக்கும் பிரசுரமாகியிருக்கிறது. பார்த்துப் படித்துக் கொள்க!
நீதிபதியார் பேசியவை வழக்கம்போல் ரசிக்கத் தக்கனவாய் அமைந்திருந்தது.
அவர் பேசியவற்றில் ஒரு கருத்து...
***
அறம் விலகக் காரணம்..?
இதழ்களின் எண்ணிக்கை பெருகியது; (இதழ்கள் பெருகிய அளவுக்கு வாசகர்கள் பெருகாதது); இதழ்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை! முந்தித் தருதலில் குளறுபடி; கிடைத்தது மலினமாக இருந்தாலும் காசுக்காக செய்தியாக்குவது! தவிர்க்க இயலாத போட்டியால் பொறிவைத்தல் செய்திச் செயல்களில் ஈடுபடுவது....
- இப்படி சில காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
அடுத்தது... அவரின் உரைத் தொகுப்பில் கடைசியாக இடம்பெற்ற முத்தாய்ப்பு வார்த்தைகள்!

ஓர் இதழ், அறத்தில் பால் நிற்கிறதா அல்லது அப்பால் தள்ளிப் போகிறதா என்பதை, அந்த இதழ் வெளியிடும் செய்திகள், அதில் இடம்பெறும் கட்டுரைகளின் உண்மைத் தன்மை, பொதுநலன் மட்டுமே அதில் பொதிந்துள்ளதா அல்லது தங்களுடைய சுழற்சி (சர்குலேஷன்), மலிவான பரபரப்பு விற்பனையை மையமாகக் கொண்டுள்ளதா என்ற தன்மை, (சுயவிளம்பரம், சுயதம்பட்டம் கொண்டு விளங்கும் தன்மை) இவற்றுக்கான விடையில்தான் இதழியல் அறத்தின் உயிர் நாடி உள்ளது.
***
இப்படியாக,
இந்த உயிர்நாடியை உயர் நாடித் துடிப்பாய்க் கொண்டு செயல்பட்டதால்தான், ஏ.என்.எஸ் என்ற ஒரு சித்தாந்தத்தை இன்றளவும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்த உயர் தனிச் சிந்தனை!

இருக்கும்போது, ஜால்ரா போட்டு, அண்ணன் வாழ்க, ஐயா வாழ்க கோஷம் போடுவதெல்லாம் அவ்வப்போதைக்கு காதுக்கு குளிராகவும் மனதுக்கு போதையாகவும் இருக்கும்... ஆனால் காலம் கடந்து நிற்பதுதான் பிறப்பின் பயன்.
அந்தப் பிறவிப் பயனை அடைந்த ஏ.என்.எஸ் போன்றவர்கள், நமக்கு வழிகாட்டிகளாய் அமையட்டும்!

திங்கள், ஜனவரி 18, 2016

வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்

பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!
ஸ்ரீரங்கத்து ராஜா ரங்கராஜன். குடிமக்கள் எல்லாம் அவனை அரசனாகவே கருதி பணிவிடை செய்ததுண்டு. அவன் குடிகொண்ட கோவில், அவனது அரண்மனை. நம் தென்னகத்து ராஜாக்கள் எல்லாம் தனக்கும் தன் வசதிக்காகவும் அரண்மனைகளைக் கட்டிக் கொண்டதைவிட அந்த அந்த ஊரில் ஆட்சி புரியும் ஆண்டவனுக்கே அரண்மனைகள் போல் ஆலயங்களைக் கட்டிக் கொடுத்தார்கள்.
இப்படியாக பாலாற்றின் கரையினிலே கச்சிப் பதியை ஆளும் அரசனான வரதராஜன் தன் குடிமக்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், விழாக் கொண்டாட்டத்தின் மூலம் மக்களை ஒன்று கூட்டி, மகிழ்ச்சியடையச் செய்யவும்... எத்தனை தொலைவு கடந்து எழுந்தருள்கிறான்.
எவருக்கும் உள்ளர்த்தமும் காரணமும் புரியாத எழுந்தருளல்தான் இது!
கொட்டும் பனி, நடுக்கும் குளிர், கரடுமுரடு பாதை, பாலாற்றின் மணல்வெளி, அச்ச இரவு... எல்லாம் கடந்து, அவன் எழுந்தருளும் காரணம் யாருக்கும் தெரியாது! கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவு. அவனடியார் குழாம் அவனை எழுந்தருளச் செய்துகொண்டு, அவன் நாமம் பாடி, பஜனை பாடல்கள் என உற்சாகம் மிகக் கொண்டு வரும் அழகே தனி!
இந்த நாகரிக யுகத்திலும் இவ்வளவு பேர் திரண்டு இத்தனை விசுவாச பக்தியுடன் அவனை வரவேற்கிறார்கள் எனில்... சற்று கால ஓட்டத்தின் பின்நோக்கிப் பார்த்தால், கற்பனை சிறகு விரிகிறது. சரித்திரத்தின் பக்கங்களில் காலங்காலமாக வரதனின் இந்தப் புறப்பாட்டுச் சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. ஆயினும் காரணம் இதுவென்ற புரிதலின்றி!
***
சிந்தனை ஓட்டம் வரதனைப் பற்றியே இருந்தது. கேள்விப்பட்ட சங்கதிதான்! ஆயினும் கண்ணாரக் கண்டு உணர்வில் கலந்ததில்லை! எப்படியும் இன்று சென்றுவிடலாம். எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு! எடுத்தால்... நான் முன்னர் பணிபுரிந்த நாளிதழில் தற்போதும் பணிபுரியும் ஒரு நண்பர். கட்டாயத்தின் பேரில் தான் விருதாவாகத் தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதைச் சொன்னார். நான் திருமுக்கூடல் சென்று, பாலாற்றின் கரையில் பொழுது போக்கச் செல்லவதாகச் சொன்னேன்! "நீங்க கொடுத்து வெச்சவர்ண்ணா" என்ற வாசகத்தோடு முடித்துக் கொண்டார்.
வாளுக்கு ஆட்பட்டவன் பரம்பரைப் பெருமை மறந்து வாழ்க்கையின் உன்னதம் மறந்தான்; கூழுக்கு ஆட்பட்டவன் கொண்ட கொள்கை துறந்து வாழ்க்கையின் உட்பொருள் மறந்தான்!
வாழ்க்கையின் உள்ளர்த்தம் புரியாத கோட்பாடுகள் என்னைச் சுற்றிச் சுற்றி உழலத் தொடங்கின. இயற்கையின் விளையாடல் எத்தனையோ அத்தனையும் புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இல்லைதான்! ஏன்... சிறு துளிகூட நம் மனத்தில் ஏறுவதில்லைதான்! ஆனாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
***
வரதனின் விழாக் கற்பனைகள் ஒரு புறமும், கசந்த காலத்தைக் கடந்து வாழ்க்கையின் வசந்த காலத்தை எதிர்நோக்கிச் செல்லும் கற்பனைகள் ஒரு புறமுமாய்... வழக்கம்போல் பைக் பறந்து கொண்டிருந்தது. காட்டாங்குளத்தூர், மறமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் கடந்து பாலார் செல்லும் காட்டுப் பாதையினூடே தனியனாய் பயணம். ஆளரவமற்ற பகுதி என்பார்களே... அதன் வடிவத்தைக் கண்டுகொள்ளும் சாலைதான்! இடையில் இரு கிராமங்கள். ஆனாலும் அமைதியாய் அடங்கிக் கிடந்தன. காஞ்சிபுரத்தின் பழைமைச் செழுமையைக் கண்ணுக்குள் நிரப்பலாம். எல்லாம் வரதனின் ராஜாங்கம் ஆயிற்றே!
அண்மையில் பெய்த அடைமழையில் நிரம்பி, அதற்குள் தன் இயல்புக்கு வந்துவிட்ட சாலையோர ஏரிப் பரப்பில் இளைஞர்கள் கிரிக்கெட்டிக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் சிறு குன்று. நடுவே செல்லும் பாதை. இரவில் திரும்பி வரும்போது இந்தப் பாதையின் இயல்பை கற்பனை செய்து கொண்டே சீவரம் அடைந்தேன்.
மக்கள் வெள்ளம்தான்! சுற்றுப் பகுதி கிராமத்து மக்களின் பக்தியும் அன்பும்தான் பெருமிதத்தைத் தரும். எத்தனை சிறுவர்களும், பெண்களுமாய் வரதனின் உற்ஸவத்தைக் கண்ணுற அங்கே கூடிருந்தார்கள்! போட்டிக்கு கார்களும் பைக்-களும் சாலையின் இருமருங்கும் ஆக்கிரமித்திருந்தன.
ஹஸ்திகிரி எனும் சிறுகுன்றில் வீற்றிருக்கும் வரதன், இன்று பழைய சீவரம் மலைக்கு எழுந்தருளி மண்டபத்தில் காட்சியளித்தான். பணிவிடைகள் அவனுக்கு ஏராளம். பளிச்செனத் திகழும் படிகள். பக்தர் குழாம் புடைசூழ அந்த அத்திரிகி வரதன், இந்த மலையில் இருந்து இறங்கிவரும் அழகே அழகுதான்!
மலையில் இருந்து இறங்கி பாலாற்றின் மணல் வெளியில் இறங்கிச் செல்கிறான் வரதன். துணைக்கு உடன் வருகிறார் சீவரம் பெருமாள். இருவரும் பாலாற்றின் மணல் வெளியில், ஓரளவு ஓடைபோல் ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கால நனைத்து திருமுக்கூடல் செல்லும் போது, பாகவத பக்தர் குழாம் பின்னே பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறது.
***
திருமுக்கூடல் - மூன்று ஆறுகள் கூடும் இடம்! பெருமான் அந்தக் கரையில் எழுந்தருளியதால் 'திரு' சேர்ந்து கொண்டுள்ளது. நீர் இன்றி ஏதோ ஆற்றின் பெயரைத் தன்னளவில் கொண்டுள்ள பாலாறு. ஒருவேளை பால் போல் வெண்மை என்பதால் வெண்மணல் சேர்ந்து வெளித் தெரிகிறதோ? இடப்புறத்தே ஓடிவந்து கலந்துவிடும் செய்யாறு மட்டும் தன்னில் நீர் தாங்கி அங்கே நிரம்புகிறது! வேகவதி ஒரு சிற்றோடையாகி அங்கே சங்கமித்து விடுகிறது.
சென்ற வருடம் பிரயாகையில் திரிவேணிசங்கமத்தில் எத்தகைய உணர்வுடன் நதியில் கால் நனைத்தேனோ அதே உணர்வு இங்கே! புண்ணியத்தைப் பெருகச் செய்வதில் இந்த மூன்று ஆறுகளும் பின்வாங்கியதல்ல! ஆயினும் அவற்றில் நீர் பெருகச் செய்யத்தான் நாம் மறுத்துவிடுகிறோம்; மறந்துவிடுகிறோம்!
***
திருமுக்கூடல் தலத்தைப் பற்றி என்றோ படித்தும் எழுதியும் இருக்கிறேன் என்றாலும், முதல்முறை நேரில் காணும் பரவசம்! தொல்லியல் துறைப் பராமரிப்பின் வெளித்தோற்றம் பளிச்செனப் படுகிறது. கோபுரமற்ற புகுவாசல் வெண்மைக் கற்கள் தாங்கி நெடிது நிற்கிறது! உள்ளே ஒரு பசுமைப் பூங்காவின் தோற்றம். செதுக்கப்பட்ட பாதைகள். புல்வெளி. ஈரடிக்கு வளர்ந்து பராமரிக்கப்படும் செடிகள். பூக்களைத் தாங்கி நந்தவனத்தின் அருமை காட்டுறது.
கோயிலில் அப்பன் வேங்கடேசப் பெருமாள் சந்நிதி அழகு. பெருமாள் கரிய நிற வண்ணனாய் விளக்குகளின் ஒளி முகத்தில் பட்டு மின்ன பளிச்சென்று திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறான். நெடிதுயர் உருவம். தாயார் சந்நிதி, வரதன் சந்நிதியிலும் பக்தர்கள் வரிசை கட்டி ஒழுங்காகச் சென்று தரிசித்து எந்தவித நெருக்கடியும் குழப்பமும் இன்று அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். கோயிலினுள் மொத்தம் 4 காவலர்களே நின்றிருந்தனர்! சந்நிதிகளின் பராமரிப்பு அவ்வளவு தூய்மை!
ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ்வொரு பெருமாள். எல்லோரையும் ஸேவித்து இறங்கி, மணல்வெளியில் கலக்கிறது பக்தர் வெள்ளம். அந்த வெள்ளத்தினூடே அடியேன் பெயர் சொல்லி அழைத்த சிலர். நண்பர்களான ஸ்ரீ உ.வே. அனந்தபத்மநாபன் ஸ்வாமி, ஆசார்ய லட்சுமிநரசிம்மன், முகநூலில் மட்டுமே அடியேன் முகம் கண்டு பழகிய உப்பிலி ஸ்வாமி... இப்படியாக!
பெருமாள்கள் ஐவரும் இதை அடுத்து திருமுக்கூடல் கிராமத்துக்குச் செல்கிறார்கள். பின்னே சென்றேன். தெரு மிகத் தூய்மை. வாசலில் கோலமிட்டு, தங்கள் ராஜாவை வரவேற்கும் உற்சாகத்துடன்!
கிராமத்தின் கடைக்கோடி வரை சென்று பெருமாள் அங்கேயே எழுந்தருளி, சற்று நேரம் அந்தக் காலனிவாசிகளின் பூஜையையும் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்கியதையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் திரும்புகிறார். சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான்! பெருமாள் தனியாக வந்தால் இராது! பாகவத கோஷ்டியும், இத்தகைய பக்த கோஷ்டியும்தான் இந்த உற்ஸவத்துக்கு வலு, அழகு!
பெருமாளை எழுந்தருளச் செய்துகொண்டு காஞ்சிக்குத் திரும்பும் அந்தக் கைங்கர்ய கோஷ்டியைப் பார்த்தால், அதைவிட சிலிர்ப்பு. வரதனுக்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, அவனுடனேயே நடந்து, இரவெல்லாம் விழித்து, பத்திரமாக அவன் அரண்மனையில் அவனை சேர்ப்பிக்கும் வரை இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! நிச்சயம் அரங்க நகர் கோஷ்டிக்கு சளைத்ததல்ல!
***
இரவு 8 மணி ஆயிற்று! சீவரம் பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பினேன். சீவரத்தை அடுத்த பெட்ரோல் பங்கில் திரும்பினேன். யாருமே இல்லாதது போன்ற நிலை. ஆனால், ஒரு ஓரத்தில் நின்று செல்லில் சினுங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒற்றை ஆளாய் எனைக் கண்டதும் அசைந்து வந்தார். அவரை மெதுவாகப் பேசிவிட்டு பிறகு வருமாறு சைகை செய்தேன். சில நொடிகளில் வந்தார். அவரை நிதானமாக வருமாறு சைகை காட்டியதாலோ என்னவோ... பெட்ரோல் நிரப்பிக் கொண்டே வெகுநாள் பழகிய சிநேகத்துடன் பேசினார்... "வண்டிங்க வந்துட்டு இருக்கு சார். வீட்ல இருந்து பேசினாங்க. கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல இருந்தே சொல்லிக்கிட்டிருந்தாங்க! ஆனா பாருங்க இன்னிக்குன்னு நெறய பேர் லீவு. சிலர் சாப்ட போய்ட்டாங்க. பெட்ரோல் போட ஆளில்ல. அதான் வீட்ல சொல்லி புரியவெச்சிட்டிருந்தேன். இப்பவாவது 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் கூட்டிட்டு சீவரம் பெருமாளயாச்சும் பாத்துட்டு வந்துடணும்... ஆனா... நீங்க கொடுத்து வெச்சவங்க சார்...!"
அடடே! ஒரே மாதிரியான வாசகம்! சீவரம் செல்லும் முன்பு அந்த நாளிதழ் பணியில் இருக்கும் நண்பரும், இந்த நபருமாக!
***
அதே காட்டுப் பாதையில் திரும்பினேன். இரவுப் பொழுதுக்கேயுரிய வண்டுகள் பூச்சிகளின் சப்தங்கள் நிசப்தத்தைக் கடந்து கொண்டு கேட்கிறது! பாலார் ஊர் கடந்து, ரெட்டிப்பாளையம் காட்டுப் பகுதியினூடே செல்கையில், சாலையின் ஓரத்தில் இருந்த புதரில் இருந்து மர அணில் போன்ற ஏதோ ஒன்று... பைக் விளக்கின் வெளிச்சத்துக்கு அப்படியே கீழிருந்து தாவி சரியாக என் வலது தோளில் பாய்ந்து கீழே விழுந்தது! நள்ளிரவும் காட்டுப் பாதையும் தனிமையும் எனக்குப் புதிதல்ல. பொதிகை மலைப் பகுதியின் காட்டுப் பாதைகளில் சிறுவயது முதலே தனித்துச் சென்று பழகிய பழக்கம்தான்! பள்ளிப் பருவத்துக்குப் பிறகான வாழ்க்கையிலும் வருடம் பல தனித்திருந்தே கடந்து விட்டவனுக்கு, காட்டுப் பாதையில் மட்டும் தனிமைப் பயணம் அச்சத்தைத் தந்துவிடவில்லை!
ஆனாலும்... இப்போதும் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெருந்தேவித் தாயாரைத் துறந்து, உபய நாச்சிமாரான தேவியர் இருவரைத் துறந்து, ராஜ மாளிகை துறந்து, எந்த உற்சவமானாலும் எல்லோரும் துணையிருக்க நடத்திக் கொண்டு, இந்த ஒரு உற்ஸவம் காண மட்டும் வரதன் ஏன் தன்னந் தனியனாக இங்கே வருகிறான்!?
***
இந்த உற்ஸவம் குறித்து தினசரியில் வெளியிட்ட செய்தி:
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.









திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன. இந்தக் கூடுதுறையில், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாச பெருமாள், காவான்தண்டலம் லட்சுமி நாராயண ஸ்வாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் தரிசனம் அளித்தனர்.
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ் விழாவின்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இவ் விழாவையொட்டி முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலை வந்தடைந்தார். அங்கு வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து திருமுக்கூடல் சென்று பார்வேட்டை உற்ஸவத்தில் பங்கேற்றார்.
இவ் விழா முடிந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் கோயிலை சென்றடைந்தார்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix