சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஆகஸ்ட் 18, 2012

நள்ளிரவில் ஏன் சுதந்திரம் பெற்றோம் என்பதற்கு அஷ்டமி நவமி காரணமாகுமா?

நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது ஏன் என்று ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு அஷ்டமி நவமி காரணம் என்று ஒரு ஜோதிடர் சொல்லியிருந்தாராம். 
----------------------
ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக சட்டம் இயற்றியது. நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர். ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர். ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங
்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.
--------------------------------------
இப்படியாக அந்தச் செய்தி இருந்தது. சரிதான்... எந்த செயலையும் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்பது ஒரு வகையில் சரிதான். ஆனால், நல்லோர்க்கு எந்நாளும் திருநாளே. எந்நேரமும் நன்நேரமே என்பது என் எண்ணம்.
இது கிடக்கட்டும். நம் தமிழ் மாதக் கணக்கீட்டின் படி பார்த்தால் ஆடி மாதமாயிருக்குமே. அப்போது எதுவும் நல்லது செய்ய மாட்டார்களாமே! ஆடியில் கிடைத்ததுதான் நம் நாட்டின் சுதந்திரமா? அப்ப இனிமேல் அதற்கு ஒரு காரணம் எழுதினாலும் எழுதப்படலாம்!
இந்தச் செய்தியின் அடிப்படையில், பஞ்சாங்கத்தை நோண்டினால், கிடைத்த தகவல் அன்று சதுர்த்தசி. மங்களகரமான வெள்ளிக்கிழமை. மறுநாள் பிறந்தால், நிறைந்த அமாவாசை. ஆகவே, இப்படி எல்லாம் சுதந்திர தினத்தை மாற்றிக் கேட்டதாக இருந்திருந்திருந்தால், 16ம் தேதி அமாவாசை அன்று கேட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். 15ம் தேதி இரவு 8.20க்கு மேல் அமாவாசை வந்துவிடுகிறது. ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. சரி எத்தனையோ புளுகுகளும் கதைகளும் நிறைந்திருக்கும் நாட்டில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே!

1947 - ஆகஸ்ட் 15ம் தேதி உள்ள பஞ்சாங்க விவரம்:
----------------------------------------------------------
Sunrise15/08/47 05:59 AM
Sunset15/08/47 06:26 PM
வாரம்: வெள்ளிக்கிழமை
நட்சத்திரம்: பூசம்
Start Time : 14/08/47 10:58 PM
End Time : 15/08/47 08:08 PM
திதி: சதுர்தசி
Start Time : 15/08/47 12:00 AM
End Time : 15/08/47 08:20 PM
பக்ஷ: கிருஷ்ண பக்ஷ
கரணம்: பத்திரை
Start Time : 15/08/47 12:00 AM
End Time : 15/08/47 10:11 AM
சகுனி
Start Time : 15/08/47 10:11 AM
End Time : 15/08/47 08:20 PM
யோகம் வ்யதீபாதம்
Start Time : 15/08/47 02:02 AM
End Time : 15/08/47 09:56 PM
இராகு : 10:40 AM - 12:13 PM
எமகண்டம்: 3:20 pm - 4:53 pm
குளிகை: 7:33 am - 9:06 am
Place : Chennai, INDate : Aug 15, 1947
Location : 13.09, 80.28
Time Zone : IST (+05:30)

புதன், ஆகஸ்ட் 15, 2012

இந்தியத் தாயின் பெயர் சூட்டிய 66ம் ஆண்டு விழா!



ஆக.15 என்றால் என்ன தோன்றும்?
ஆர்வமுடன் கேட்டான் அந்தச் சிறுவன்!
இந்தியத் தாயின் சுதந்திரத்தை
இன்முகத்தோடு நான் நினைவுகூர்வேன்...
இப்படித்தான் எதிர்பார்த்தான் அவன்!
ஆனால் எனக்கோ அடிமை வரலாறல்லவா
அகத்தில் அடுக்கிக் கொண்டே போகிறது..!?

முன்னைப் பழமைக்கும் பழமையாய்
பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்
கற்காலத்தினும் முற்காலத்தினளாய்
உலகுக்கு வழிகாட்டும் உன்னத நாடாய்
எத்தனையோ நாடுகள் ஏக்கத்தில் பார்த்திருக்க...
இந்தியத் தாய்க்கு இது 66வது பிறந்தநாளாம்!
ஊரெங்கும் அதிர்வேட்டு உற்சாக முழங்கங்கள்!

ஏதோ நேற்றுப் பிறந்த குழந்தைக்கு
இன்று பெயர் வைத்துத் தாலாட்டி
நாளை பிறந்தநாள் கொண்டாடுவதைப் போல...
என்று பிறந்தவள் என்றறியாத இயல்பினள்!
சிந்துவும் பிரமபுத்ராவும் சிரத்தினில் துலங்க
கங்கையும் சரஸ்வதியும் கரத்தினில் விரிக்க
நர்மதையும் கோதாவரியும் ஒட்டியாணமாய் மின்ன
காவிரியும் தாமிரபரணியும் பாதத்தில் கழுவ
இந்தியத் தாய் ஏதோ இன்று பிறந்தவளாம்!
ஊரெங்கும் ஆர்ப்பாட்டம் உற்சாகப் பெருமுழக்கம்!

ஐம்பத்து நான்கு தேசங்களாய் அடுத்தடுத்து
நம்பாரதத் தாயோ நன்றாய்த்தான் இருந்துவந்தாள்
பிள்ளைகளுக்குள்ளே பிக்கல் பிடுங்கல் என்றால்
பாவம் அவள் என்ன செய்வாள் வேதனைதான்!
சேரசோழபாண்டியனாய் பல்லவனாய் சாளுக்கியனாய்
மௌரியனாய் மகதனாய் மகாவம்சத்து மன்னனாய்
எத்தனை எத்தனை பிள்ளைகள் உன்மடியில்!
வசதிக்கேற்ப வயல்வெளிகள் பிரிந்துகிடந்தாலும்
விளைச்சல் என்னமோ ஒரே நெற்கதிராய்!
அரசியலால் அரசப்பிள்ளைகள் பிரிந்துகிடந்தாலும்
ஆன்மாவால் மக்களை ஒன்றிணைத்து வைத்திருந்தாய்!

அந்தோ என் சாபம்! நாயும் பேயும் நடுவீட்டுள்புக
நாடும் நலமும் நலிவுற்று நைந்ததுவே!
ஆன்மாவின் குரல்வளையை வாள்முனையில் நெரித்தான்
பாலைவனக் காட்டுமிராண்டி கலாசாரத்தை சிதைத்தான்!
பரங்கி வணிகனாய் பார்த்துப் பார்த்து நுழைந்தவன்
பீரங்கிக் குண்டுகளாலே பிரித்தாண்டு வந்தானே!
பிள்ளைகள் எத்தனைபேர் உன்பழம்பொலிவைக் கண்டிடவே
உயிர்த்தியாகம் செய்துநின்றார் உடலாலே உலகுவென்றார்!

எத்தனை எத்தனை இன்னல்கள் அத்தனையும் தாங்கி
இத்தனை நாள் உயிர்ப்புடன் இளமைமாறாது இருக்கின்றாய்!
இந்தியத் தாயே உனக்குப் பெயர்சூட்டிய விழாநாள் இன்று!
பிறந்தநாளாய் பிதற்றுகின்ற பிள்ளைகளை மன்னிப்பாய்
பெயர்சூடிய பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்
66ஆம் ஆண்டெனவே அகிலத்தில் முழங்குகின்றோம்!
தாயே வணக்கம்! தாயே வணக்கம்!

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

சாதி வெறியாளர் யார்?

2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயா வீட்டுக்கு வழக்கம் போல் சென்று கதவைத் தட்டினேன். காலை நேரம் எழுந்து மெதுவாக வந்து அமர்ந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இவர், பணி ஓய்வு பெற்ற நல்லாசிரியர். அகவை 82 தொட்டவர். செங்கோட்டை தொடர்பான ஊர்க் கதைகளை, சுதந்திரப் போராட்ட நினைவுகளை, திருவிதாங்கூர் சமஸ்தான சங்கதிகளை என் சிறுவயது முதல் எனக்குச் சொன்னவர் இவர். இவரிடம் இருந்து கட்டுரைகளை மலையாள மொழிபெயர்ப்புகள் பலவற்றினை கேட்டுப் பெற்று மஞ்சரி இதழ்களில் பிரசுரம் செய்திருக்கிறேன். வாசகர் விரும்பும் அருமையான எழுத்து நடை இவருக்கு!
இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன். 1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை. வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.... இப்படியாகப் பேச்சு போனது.
வீட்டுக்கு வந்து மாடியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, வாஞ்சிநாதன் குறித்து இணைய தளங்களில் எழுதப் பட்டிருந்த துர்பிரசாரங்கள் குறித்து யோசித்தேன். வாஞ்சி ஒரு சாதி வெறியாளன் என்று நிறுவுவதற்காக ஒரு கதையைக் கட்டியிருக்கிறார்கள். ஆஷ் துரையை 'ரொம்ப நல்லவன்’ ஆக்க மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வரலாறு பெரும்பாலும் கிறிஸ்துவ ஆதிக்க மேல்நாட்டு மக்களின் பாதிப்பில் எழுதப் பட்டவை. இங்குள்ள வரலாறுகள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, அதற்குத் தகுந்தபடி புனைந்து எழுதப் பட்டவை. பரப்பப் பட்டவை. அதில் ஒன்று, வாஞ்சிநாதன் விஷயத்திலும் நடந்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க, சுதந்திர வேட்கை கொண்ட வீரர்களை மனிதாபிமானமே சிறுதும் இல்லாமல் படாதபாடு படுத்திய ஆஷ் துரையை நல்லவனாகச் சித்திரிக்க, வாஞ்சி பலியாடு ஆக்கப்பட்டான்.
கதை இதுதான்... பிரசவ வலியால் துடித்தபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியே விட மறுத்தானாம் வாஞ்சி. அப்போது ஆஷ் துரை அங்கே வந்து அக்ரஹாரத்தின் வழியே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வழி செய்தானாம்... இதனால் ஆஷ் துரை மீது வஞ்சம் வைத்த வாஞ்சி, அவனை சுட்டுக் கொன்றானாம்... இப்படியொரு கதையைப் புனைந்தவர்களைக் காட்டிலும், அதைச் சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள்தானே சாதி வெறி பிடித்தவர்கள்! கட்டிய மனைவி பிரசவ காலத்தில் தவிப்பதையும், மாமனார் வீடு சென்ற அவளைக் காணவும் பொழுதின்றி, தாம் மேற்கொண்ட பாரதமாதா சங்கத்தின் விடுதலைப் போராட்டப் பணிகளில் முழு ஈடுபாடு காட்டிய சிற்றிளைஞன் வாஞ்சிக்கு இப்படியோர் அவப்பெயர் சூட்ட வேண்டுமானால், இவர்களின் உள்ளத்திலும் அறிவிலும் சாதி வெறி எப்படிப் புரையோடிப் போயிருக்க வேண்டும்!?
இந்தக் கதையில் இது எந்த அக்ரஹாரத்தில் நடந்தது என்று குறிப்பில்லை. பிரசவ வேதனையில் அந்தப் பெண் வந்தபோது, சரியாக அதே நேரம் ஆஷ் துரையும் வந்தது எப்படி என்று கூறவில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம், ஊரின் பூகோள அமைப்பைப் புரிந்துகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் கதைதான்!
செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அதற்கும், பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை. 1956ல் மொழி வாரி மாகாணங்கள் அமையப் பெற்ற போதுதான், கன்னியாகுமரி, நாகர்கோவில் சில பகுதிகள், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமவெளிப் பரப்பாக இருந்தாலும், சமஸ்தானத்துடன் இருந்த பகுதி என்பதால் அங்கே பிரிட்டிஷ் அதிகாரிகள், ராணுவத்தினர் நுழைவதற்கு அனுமதி தேவை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை இருந்தது பிரிட்டிஷாருக்கு. தேடப்படும் சுதந்திரப் போர் வீரர்கள் சமஸ்தானத்தில் எங்காவது ஒளிந்திருந்தால் அவர்களைப் பிடித்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும். இது உடன்படிக்கை. மற்றபடி, திருவிதாங்கூர் ஒரு சுதந்திரமுள்ள, அதே நேரம் அடிமைப்பட்ட நிலை என இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தது.
இத்தகைய சூழலில், திருநெல்வேலி சப்-கலெக்டர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி ஆஷ் துரை, தென்காசி வரை மட்டுமே வர இயலும். குற்றாலத்தில் குளிக்க உரிமை இருந்தது. அதைத் தாண்டி அவர்கள் சமஸ்தானப் பக்கம் வரவும் முடியாது. இன்றும் செங்கோட்டை நகருக்கு ஒரு கி.மீ. வெளியே பிரானூர் பார்டர் என்று ஒரு பகுதி உள்ளது. அதுதான் சமஸ்தானத்தின் நுழைவாயில். பார்டரைத் தாண்டி ஆங்கிலேயர்கள் வர இயலாது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும் கிடையாது. அவ்வாறு இருக்க, வாஞ்சிநாதன் இருந்த திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்ட செங்கோட்டையில் ஆஷ் துரை கட்டளை இட்டு ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிரசவத்துக்காக அக்ரஹாரம் வழியே செல்ல வைத்தார் என்று புனையப்பட்ட கதை எவ்வளவு மோசமான சாதி வெறியில் உமிழப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இன்றைய செங்கோட்டை ஊரின் அமைப்பில், அக்ரஹாரங்கள் இருந்த பகுதியில் நீங்கள் நின்று பாருங்கள் புரியும். மொத்தம் ஏழு அக்ரஹாரங்கள் இருந்துள்ளன. சிவன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவிலை ஒட்டிய இரண்டு மாட வீதிகள், கிருஷ்ணன் கோவில் பின்னுள்ள ஒரு மாடத் தெரு... இப்படி. இந்தப் பகுதிகள் ஊரில் இருந்து ஒதுக்குப் புறமாக தனித்திருக்கும். ஊரின் பிரதான கொல்லம் சாலை அக்ரஹாரங்களைச் சுற்றி வெளியே செல்லும். ஊருக்கு வெளிப்புறமாக தனித்திருக்கும் அக்ரஹாரங்கள் என்பதால், மருத்துவமனைகள் இருக்கும் செங்கோட்டை நகருக்குச் செல்வதற்கு நீங்கள் அக்ரஹாரங்களை அவசியம் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லவே இல்லை. அப்படி இருக்கும்போது, எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தாள் என்ற விவரம் யாராலும் சொல்லப் படவுமில்லை. அந்தப் பெண்ணை மருத்துவம் பார்க்க அக்ரஹாரம் வழியேதான் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசிய நிலை இல்லாத போது, எதற்காக அப்படி அழைத்துச் சென்றார்கள் என்ற குறிப்பும் இல்லை.
இப்படி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள். காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் சாதி பார்த்து பாரத மாதா சங்கம் அமைக்கவில்லை. 1911ல் மாண்டு போன வாஞ்சிநாதனும், அவனுடன் கதை முடிந்துபோன பாரத மாதா சங்கமும் இத்தகைய சிறுமதியாளர்கள் வளர்த்துவிட்ட சாதி வெறிச் சங்கமுமில்லை, சாதி வெறி மனிதமும் இல்லை.
மாவீரன் மாடசாமியின் வரலாற்றைப் படியுங்கள். கல்கி எழுதிய பொங்குமாங்கடல் சிறுகதையைப் படியுங்கள். தினமணியின் முதல் ஆசிரியர் தென்காசி எஸ். சொக்கலிங்கத்தின் வரலாற்றைப் பாருங்கள். எத்தகைய சுயநலமற்ற தியாகத் திருவுள்ளங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை. செண்பகராமன் பிள்ளை என்ற மாவீரன் ஜெர்மனியின் ஹிட்லரைக் கலங்கடித்தவர். நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க உந்து சக்தியாக இருந்தவர். ஜெய்ஹிந்த் கோஷம் கொடுத்த புண்ணியவான். அடிமை இந்தியாவில் என் உடல் அடக்கம் செய்யப் படக் கூடாது, என் உடலின் அஸ்தி கூட அங்கே விழக்கூடாது என்று சபதம் இட்ட வீரர். செண்பகராமன் இறந்து வெகு காலம் வரை அவரது மனைவியால் பாதுகாக்கப்பட்டிருந்த அஸ்தி, இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியக் கொடி பறந்த கப்பலில் எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றின் கரையில் சுதந்திர இந்தியாவில் தூவப்பட்டது என்பதைக் கேள்விப் படும்போது எவ்வளவு சிலிர்ப்பும் மரியாதையும் நமக்கு வரவேண்டும்?! ஆனால்... சாதி வெறியின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமுதாயத்தில் செண்பகராமனின் வீரம் ஏன் கொண்டாடப் படாமல் போனது என்பது தெளிவாகத் தெரிகிறதே!
சுதந்திரம் பெற்ற பின்பு இப்படியெல்லாம் சாதிப் பிரிவினை பேசி இன்று இந்தியா கண்ட பலன், கிறிஸ்துவ மயமாக்கலும், தாழ்த்தப் பட்ட இனம் என்று சொல்லிச் சொல்லி சர்ச்சுகளுக்கு பேரம் பேசப்படுவதும்தான்!
வாழிய பாரதி மணித் திருநாடு! செண்பகராமா ஜெய்ஹிந்த்!!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix