சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

செவ்வாய், ஜூலை 28, 2015

இதுவும் ஒரு மேலாண்மைப் பாடமே! அது விசுவாசத்தின் பெயர்!



தும்பா  ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள்.  ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.

ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.

அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால்  மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!

பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார்.  அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.

இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”

இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”

”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.

அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.

5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள்  பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.

அந்த “பாஸ்’  நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!

திங்கள், ஜூன் 08, 2015

வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?


ஆயிரம்தான் சால்ஜாப்பு சொன்னாலும்.... தமிழன் தமிழன் என்று பீற்றிக் கொண்டாலும்....

தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள்/ மக்களைப் போல் பேராசைக்காரர்களை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது. மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட பேராசை கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில்... தமிழ்நாட்டு ஆட்டோக்காரர்களைப் போல், குறிப்பாக சென்னை ஆட்டோக்காரர்களைப் போல் உச்சபட்ச தொகைக்கு பேசுபவர்களை இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. வாடிக்கையாளர்களை வாடிக்கையான ஏ.டி.எம்.மைப் போல் கருதும் கேவலம் இங்கே!

வில்லிவாக்கத்தில் இருந்து ஆட்டோவில் எழும்பூருக்குச் சென்றேன். வழக்கமாக ரூ.150 தான் என்று பேசியும், வீட்டு வாசலில் இருந்து ஏறியதால் ரூ.200ல் தொடங்கி, ரூ.180 பேரத்துக்கு வந்தார். கிளம்பும்போதே ஒப்புக்கு மீட்டரையும் போட்டுக் கொண்டார். கிளம்பும்போது சற்றே மழை பெய்தது. எழும்பூரில் நின்றபோது, மீட்டரில் ரூ.98.80ல் காட்டியது. எழும்பூரில் நின்றபோது, பின்னால் ஒரு கால்டாக்சி ஹார்ன் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டிருந்தார். வேகவேகமாக இறங்க வேண்டிய நிலை. ஆட்டோவில் இருந்த ஒரு பையை கர்மசிரத்தையாக கீழே இறக்கி வைத்தார். ரூ.180 கொடுத்தேன். சார் நல்ல மழை. இப்படி பையை எல்லாம் வண்டியில் இருந்து யாரும் இறக்கி வைக்க மாட்டார்கள். இன்னும் ரூ. 20 கொடுங்க.. என்று மல்லுக்கு நின்றார். இன்னும் ரூ. 10ஆவது கொடுங்க என்றார். நானோ, மீட்டரை ஒரு எட்டு எட்டிப் பார்த்துவிட்டு... யப்பா... ரூ.180 கொடுத்திருக்கேன் சரியா இருக்கா பாரு.. என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.  இது போல் பல அனுபவம் இங்கே உண்டு.

இப்படி ஒரு நிலையை நான் வடக்கே பார்க்கவில்லை. அண்மையில் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்த யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார், பத்ரி ஆகிய சார்தாம் யாத்திரை, ஐந்து பிரயாகைகள், உத்தரகாசி, ரிஷிகேஷ், ஹரித்வார், நைமிசாரண்யம், காசி, கயா, புவனேஸ்வர், புரி என ஒரு நீண்ட 18 நாள் ஆன்மிக யாத்திரையை நண்பர்கள் குழுவுடன் மேற்கொண்டிருந்தேன்.

அன்று...  குழுவாக வெளியில் கிளம்பினோம். காசியில்!

கால பைரவரை தரிசித்து, காசி நாயகர் விஸ்வநாதரையும் தரிசித்து இரவு 9 மணி அளவில் அங்கிருந்து சங்கர மடம் இருந்த ஹனுமன் காட்-க்கு ஆட்டோ பேசினோம். ஒருவர் ரூ.150 என்றார். ஒருவர் இதில் 6 பேர் ஏறலாம். தலைக்கு ரூ. 20. ஆனால் நீங்கள் 6 பேர் வரவேண்டும். 5 பேர் ஏறினாலும், என்னால் ரூ.100  பெற முடியாது. 6 பேருக்கு உண்டான ரூ.120ஐத்தான் தரவேண்டும் என்றார்.
என்ன கணக்கோ... ஆனால், அவரின் இந்த டீல் பிடித்திருந்தது. 16 பேர் இருந்தோம். 3 ஆட்டோக்களில் சென்றோம். ஹனுமன் காட் என்று கேட்டு ஏறினாலும், ஓரிரு சந்து பொந்து கடந்து சங்கர மட வாசலில் இறங்கினோம். இந்த முட்டுச் சந்து, முடுக்குக்கெல்லாம் கொண்டு வந்து விட்டிருக்கிறேன். மேல அஞ்சு பத்து போட்டுக் கொடுங்கண்ணு ... ம்..ஹும். வாயே திறக்கவில்லை. கொடுத்த ரூ.120 ஐ வாங்கிக் கொண்டு மறு பேச்சில்லாமல் திரும்பிப் போனார்கள்.. மூவரும்!

அடுத்து....
சங்கடமோசன ஹனுமான் கோயில் செல்ல ஸ்டாண்ட்களில் இருந்த இரண்டு ஆட்டோக்களில் ஏறினோம். சங்கடமோசன் ஆலயம் சென்றுவிட்டு... ஆட்டோக்காரர் தானே சொல்லி சோழியம்மன் கோயிலுக்குச் சென்று இறக்கி விட்டு, நாங்கள் கும்பிட்டு வரும்வரை சில நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் எங்களை மீண்டும் சங்கர மடத்தின் வாசலில் இறக்கி விட்டார். பேசிய தொகைக்கு மேலும் கேட்பாரோ என்று நான் எதிர்பார்க்க... இந்தக் கோவில் அங்கிருந்து வரும் வழிதான். மேற்கொண்டு நீங்கள் எதுவும் தரவேண்டாம் என்று பேசிய தொகையை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள்.

கயாவில்...
எல்லோரும் கோயிலுக்குச் சென்று விட்டு வந்தோம். எனக்கு சற்றே காய்ச்சல் கண்டிருந்ததால்.... அறையில் நான் ஓய்வெடுத்தேன். மதியம் கர்மா செய்பவர்கள் அட்சய வடம் சென்றுவிட்டு சாப்பிட வந்துவிட்டார்கள். பிறகுதான் எனக்கு தெரிந்தது எல்லோரும் அட்சய வடம் சென்று வந்துவிட்டார்கள் என.

எனக்கோ அதனைப் பார்க்காமல் ஊருக்கு செல்லக் கூடாதென எண்ணம். சீதையின் சாபம் பெற்ற பல்குனி ஆற்றைப் பார்த்தோம். சாபம் பெற்ற பண்டிதர்கள்/பிராமணர்களைப் பார்த்தோம். ஆனால், சீதையின் ஆசியைப் பெற்ற அட்சய வடத்தைப் பார்க்காமல் போவதாவது... என்று கூறினேன். நண்பன் கௌதம் உடனே, சங்கர மடத்தில் இருந்த ஒருவரிடம் சொல்லி வாசலில் நின்ற ஆட்டோவில் என்னை மட்டும் தனியாக ஏற்றி விட்டார். ஆட்டோக்காரர் அட்சயவட இடத்துக்கு அழைத்துச் சென்று, படிகளில் ஏறி வழிகாட்டி, சில நிமிடங்கள் காத்திருந்து, என்னை மீண்டும் மடத்தில் இறக்கி விட்டார். மடத்தில் எவ்வளவு கொடுக்கச் சொன்னார்கள் என்று ஆட்டோக்காரர் கேட்டார். எண்பது என்றேன். நான் கொடுத்த ரூ.100ஐப் பெற்றுக் கொண்டு மறு பேச்சில்லாமல் ரூ.20 ஐ திருப்பிக் கொடுத்தார்.

இதே போன்ற ஆட்டோ அனுபவம் இலாஹாபாத் என்ற பிரயாகையிலும் அமைந்தது. எந்த இடத்திலும் நம்மூர்க்காரர்கள் போன்ற அடாவடித்தனத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.  ஆனால்.... தமிழ் தெரியாத வடநாட்டுக் காரர்கள் இங்கே ஆட்டோக்காரர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டால்... அவ்வளவுதான்!

இப்படி ஆட்டோ என்று மட்டும் இல்லை... பூ விற்பவராகட்டும், பிஸ்கட் விற்பவராகட்டும், கடை வைத்து டீ, காபி தருபவராகட்டும்... எல்லாவற்றிலும் சொல்லி வைத்தாற் போன்ற வணிக நேர்மை அவர்களிடம் இருந்ததைக் கண்டு என் கண்களில் பெருமித உணர்வு ~ ஆனந்தக் கண்ணீர்.

ரிஷிகேஷில்... திரிவேணி சங்கமப் பகுதிக்கு அருகே படித்துறையில் சில பெண்கள் ஒரு தொன்னையில் பூக்களை வைத்து, கங்கா மாதாவுக்கு ஆரத்தி செய்யுங்கள் என்று வரிசையாக அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். (இந்தச் சிறு கட்டுரைக்காக இடப்பட்டிருக்கும் படத்தில் - பூ விற்றுக் கொண்டிருப்பவர்). நம் ஊர்களில் கோயில்களுக்கு அருகே பிரசாத ஸ்டால், பூ, தேங்காய், ஊதுபத்தி விற்பவர்களைப் பார்த்து விட்ட எண்ணத்தில், அனேகமாக இது ரூ.20 இருக்கலாம் என்ற கணிப்பில், ஒரு பெண்மணியிடம் எவ்வளவு என்று கேட்டோம்.  ஐந்து ரூபாய் என்று அவர் சொன்னதைக் கேட்டு, ஆச்சரியப் பட்டோம். அப்படியே வந்திருந்த எல்லாரும் ஆரத்தி செய்யட்டும் என்ற எண்ணத்தில் 30 எண்ணம் வாங்கி, பூஜித்து கங்கையில் விட்டோம். இத்தனைக்கும் அந்த தொன்னையில் பூக்கள், சிறு பட்டி, நெய், திரி, ஒரு கற்பூரம், சாம்பிராணித் துண்டு எல்லாம் இருந்தது. உண்மையில், நம் ஊர்க்கார வியாபாரியாக இருந்திருந்தால், ரூ.25க்குக் குறையாமல் அதை தலையில் கட்டியிருப்பார்.

இதே போன்ற வணிக நேர்மையை ஹரித்வாரிலும், பத்ரியிலும், கங்கோத்ரியிலும் கண்டு வியந்தேன்.

இன்று காலை. குற்றாலம் பராசக்தி பள்ளியில் மருமான் அரவிந்தனைச் சேர்த்துவிட்டு... தாகத்தால் அருகில் இருந்த கடையில் என் ஃபேவரிட் சுதேசி பானம் பவன்டோ இருக்கிறதா என்று கேட்டேன்.  பாட்டிலில் இல்லை என்று சொல்லி, ஆப்பிள் பானம் appy fizz எடுத்துக் கொடுத்தார். அதன் விலை ரூ.15. இவர் கேட்டதோ ரூ.18. அதற்கான காரணம்... பிரிட்ஜில் வைத்து கூலாக தருவதாலாம்.

இன்னும் எத்தனை பஸ்-ஸ்டான்ட்களில் எம்.ஆர்.பி.யை காட்டிலும் ரூ.2 முதல் கூடுதலாக பிஸ்கட், குளிர்பானங்கள் உள்ளிட்ட இத்யாதிகள் இங்கே விற்கப் படுகின்றன. கேட்டால்... நகராட்சிக்கு கொடுக்கவேண்டும், வரி கட்ட வேண்டும், மாமூல் கொடுக்க வேண்டும். இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம் என புதிது புதிதாக கண்டுபிடித்தபடி இருப்பார்கள்....

ஆனால்...
இதே appy fizz நான் வாங்கிய உத்தரகாசி, தேவபிரயாகை, ருத்ரபிரயாகை, ஹரித்வார், யமுனோத்ரி, மானா கிராமம், குப்தகாசி, ரிஷிகேஷ் என எல்லா இடங்களிலும் ரூ.15க்கே கொடுத்தார்கள். எங்கேயும் இதனை ஏ டண்டா ஹை என்று சொல்லி கூடுதல் காசு கேட்க யாரும் முயலவில்லை. 5 ரூபாய் பார்லி ஜி பிஸ்கட்டை அதே 5 ரூபாய்க்கே கொடுத்தார்கள். நிம்பு பானி - எலுமிச்சை நீர் சர்பத் ரூ.10க்கே கொடுத்தார்கள். டீ ரூ.10 தான். கரும்புச் சாறு ரூ.10ம் ரூ.15ம்தான். சுட்டுத் தந்த மக்காச் சோளம் பத்து ரூபாய்தான்... அதுவும் யமுனோத்ரி கங்கோத்ரி போகும் வழியிலும் நடைபாதையிலும்! இத்தனைக்கும் அவர்கள் இவற்றை எல்லாம் கழுதையில் பொதியாகச் சுமந்து கொண்டு வரவேண்டும். வண்டி வசதி ஏதும் கிடையாது. இல்லாவிடில் தங்கள் முதுகிலோ, டோலி சுமப்பவர் மூலமோதான் இவற்றை அவர்கள் மலை உச்சிக்குக் கொண்டு சென்றாக வேண்டும். அவ்வளவு சிரமப் பட்டாலும், அவற்றில் அதிக லாபத்தைப் பார்க்க அவர்கள் முயலவில்லை. இந்த சுற்றுலா பயண சீசனும்கூட, 6 மாதம்தான். அடுத்த 6 மாதம் அவர்கள் குளிரில் நடுங்கியபடி வீட்டில் முடங்கிக் கிடந்தாக வேண்டும். இந்த 6 மாசம் சம்பாதிப்பதே, அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டில் அடுப்பு எரிக்க ... பயன்பட்டாக வேண்டும்.

யோசித்த போது, அவர்களின் நேர்மை நம் மனத்தில் தைத்தது என்பதை விட, எங்கிருந்தெல்லாமோ இந்த இடத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு உதவும் விதமாகவே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்வது தெரிந்தது. மானா கிராமத்தை ஒட்டி ஓர் இடத்தில், சரஸ்வதி நதி கோயிலுக்கு வழி கேட்டபோது, ஒரு மூதாட்டி... சொன்னார்... உங்களுக்கு வழி சொல்வதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். இது எங்கள் பாக்கியம். எங்கள் கிராமத்துக்கு வந்ததற்கு நன்றி... என்று பொக்கை வாய் திறந்து பல்லும் சொல்லும் போன ஹிந்தியில் அவர் சொன்ன அந்த விதம்.... உண்மையில் அந்த சரஸ்வதி அப்போது என் கண்களில்தான் பிரவாகமெடுத்திருந்தாள்.

புவனேஸ்வர் கடந்து பூரியில்... கோயில் எப்போது திறக்கும். தேரோட்டமாயிற்றே. ஸ்வாமி புறப்பாடு எப்போது...? என்றெல்லாம் நம் உணர்வில் சிலரிடம் விசாரிக்க....

மகாபிரபு 7 மணிக்கு எழுந்திருப்பார். மகாபிரபு 7.30க்கு ஸ்நானம் செய்வார். மகாபிரபு 8 மணிக்கு மண்டபம் வருவார்...நீங்கள் டிக்கெட் வாங்கவில்லை எனில் மகாபிரபுவைப் பார்க்க முடியாது.....

யார் அந்த மகாபிரபு...? நம் மனத்தில் தோன்றும் கேள்விக்கான விடை... யாரை நாம் புறப்பாடு கண்டருள்வார் என்றும், கோயில் என்றும் நம்மை விட்டு அன்னியராய் அது ஏதோ ஒன்று என்ற ரீதியில் அன்னியப் படுத்திக் கொண்டிருக்கிறோமோ.... அந்த ஜகந்நாதரைத்தான்!
ஜகந்நாதர் அவர்களுக்கு மகாபிரபு. எஜமானன். அவரே எல்லாவற்றையும் செய்கிறார். நாம் எதையும் செய்விக்கவில்லை.

இந்த உணர்வு தான்.... ஸ்ரீவல்லபாசார்யர் அருளிய புஷ்டி மார்க்கத்தின் வேர். இந்த அடிப்படை உணர்வுதான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
இந்த உணர்வு எல்லாம் பக்தர்களிடமும் வணிகர்களிடமும் கண்டேனே ஒழிய, அங்கிருந்த பண்டாக்களிடமோ, பண்டிட்களிடமோ, பிராமணர்களிடமோ.... ம்ஹும். காணவில்லை.

நேர்மையற்ற தன்மை அங்கிருந்த வேத பண்டிட்களிடம் இருந்தது. சில இடங்களில் இந்த பண்டிட்கள் என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சோதிக்கும்படியாய்... சூக்தாதிகளும், ருத்ர சமகங்களும் சொல்லி அவர்களின் அடிப்படையை ஒரு பார்வை பார்க்கும்படியாய் ஆனது.  அள்ளிக் கொடுத்தாலும் தகுதி அறிந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.  சொல்லி வைத்தாற்போல், யமுனோத்ரியிலும், பத்ரியிலும், கங்கோத்ரியிலும், கயாவிலும், புவனேஸ்வர் லிங்கராஜா கோயிலிலும்..... அடடா!

வந்ததும் கையில் பூவைக் கொடுத்து, சங்கல்பம் சொல்லி, பேரைச் சொல்லுங்க என்று கூறி.... ஒரு கட்டத்தில் நிறுத்தி.... ம் இப்போது சொல்லுங்க... எவ்வளவு பணம்...? குறைந்தது 551 என்று கூறி....  புவனேஸ்வர் லிங்கராஜா கோயிலில் அந்த பண்டாக்கள் கேட்கும்போது....

காசி விஸ்வநாதர் கோயிலில், மாலை நேர சப்த ரிஷி பூஜை ஆகிக் கொண்டிருக்க.... கிடைக்கும் சிறிய இடைவெளியில் ஜஸ்ட் ஒரு நிமிசம் எட்டிப் பார்த்து சுவாமியை தரிசிக்க.... ஆளுக்கு தலா ரூ. நூறு பேரம் பேசிய ஒரு புரோகிதர்...

கலர் கலராக கயிறு வைத்துக் கொண்டு, ஏதோ மந்திரம் முணுமுணுத்து, கையில் கட்டி விட்டு, ரூ.10 போடுங்க என்று சொல்லும் சில புரோகிதர்கள்....  (நைமிசாரண்யத்தில் இந்தப் போக்கில் இருந்து மாறுபட்ட புஜாரிகளைப் பார்த்து சந்தோஷப் பட்டோம் என்றாலும்.... ) - தினுசு தினுசாகப் பார்த்தாயிற்று!

இப்போது...
எனக்கு இதன் சூட்சுமம் நன்றாகப் புரிந்தது. வெகுஜனங்களிடமும், அங்குள்ள வர்த்தகர்களிடமும் இருக்கும் அந்த உணர்வு.... இழையோடிய ஆன்மிக உணர்வு. கங்கா மையா கீ .. ஜெய் என்று கோஷம் எழுப்பும்போதும், ஜெய் பத்ரி விஷால் கீ, யமுனா மையா கீ, போலோ கேதார் பகவான் கீ... எனும் போதும்,  அவர்கள் எவருமே வியாபாரத்தை வெறும் வியாபாரமாகச் செய்யவில்லை. உள்ளுள் கரைந்த ஆன்மிக உணர்வுடன், அதே ஆன்மிக உணர்வில் யாத்திரை வரும் சக ஆன்மிகருக்கு உதவி புரியும் விதமாய் நடந்து கொள்கிறார்கள்.
இந்த ஆன்ம உணர்வுதான் அடுத்த 6 மாசத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையைக் கூட அவர்களிடம் இருந்து அகற்றி விடுகிறது.

கொள்ளை லாபம் பார்க்கும் லாட்ஜ்-களை நாங்கள் பார்க்கவில்லை. பஸ்ஸில் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். மலைப் பாதை. இரவு 8 மணி. மேற் கொண்டு மலைப் பாதையில் போவது பாதுகாப்பற்றது என்று ஓட்டுநர் உணர்கிற போது,  ஓர் இடத்தில் நிறுத்துகிறார். அங்கிருக்கும் தங்கும் விடுதியில் அறைகளை வாடகைக்கு எடுக்கிறோம். நம் ஊர்களை யோசித்துப் பார்க்கும் போது, வாடகை வெகு சொற்பம். ஒரு படுக்கைக்கு ரூ.125. அல்லது சில இடங்களில் ரூ.150 என்று வருமாறு.... வாடகை. 4 பெட் போட்ட அறையில் ரூ. 600 வாடகைக்கு இரவு தங்கிக் கொள்ளலாம். கட்டில், மெத்தை, குளிருக்கு இதமாய் கம்பளி, கனத்த போர்வை... தேவைப்பட்டால் வென்னீர்.... இத்யாதிகள்.
உண்மையில் மலைப்பாகத்தான் உள்ளது.

உ.பி., பிகாரில் சாதாரண மனிதர்களின் கதை வேறென்றாலும், அவர்கள் அடாவடி செய்பவர்கள், ரயில்களில் அவர்களின் நடத்தை வேறு மாதிரி என்றாலும், ஆன்மிக உணர்வைப் பொறுத்தவரை நேர்மையாகவே இருக்கிறார்கள்.

இப்போது தமிழகத்தை யோசித்துப் பார்க்கிறேன்.

ஆன்மிகம் தழைத்த பூமி இதுவே. என்னதான் ராமனும் கிருஷ்ணனும் வடக்கே அயோத்யாவும் மதுராவும் என்று கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும் த்வைதமும் தோன்றியது தெற்கேதான். சங்கரரும் ராமானுஜரும் தமிழ் மண்ணில் தோன்றியவர்கள். அவர்களின் உபதேசங்களே பாரத தேசத்தை முழுதாக ஆண்டு கொண்டிருக்கிறது. ஆழ்வார்களின் பாசுரங்கள் வடக்கே நைமிசாரண்யம், பிரயாகை உள்ளிட்ட வடநாட்டு திவ்ய தேசங்களில் ஹிந்தியில் எழுதப்பட்டு, தமிழ் உச்சரிப்புடன் பாடப்படுகிறது. அதன் அர்த்தங்களை கோயில்களில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அப்படியாக தமிழும் தமிழனும் பாரதத்தின் ஆன்மிக வேரைக் கொண்டிருக்கும் போது.... தமிழகம் எப்படி இருந்திருக்க வேண்டும்..???

மூவேந்தர்கள் கோலோச்சிய தமிழகம். அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்.... என்று ஆன்மிகப் பயணத்தை ஊக்குவித்து, வசதிகள் செய்து கொடுத்த மன்னர்கள். ஏன்... பல்லவனும் சாளுக்கியனும்கூட அன்ன சத்திரத்தையும், ஆலயங்களையும் போஷித்தார்கள். யாத்ரீகருக்கு மன்னர்கள் செய்த மரியாதை தனி.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் கட்டடக் கலைக்கும் பிரமாண்டத்துக்கும் ஏணி வைத்தாலும் வடக்கு எட்டாதுதான்! ஆனால்... யாத்ரீகர்களுக்கு வசதி செய்து  கொடுத்து, இதே ஆன்ம உணர்வுடன் பார்ப்பதில்....? ம்ஹும்! நாம் ஏணி வைத்தாலும் அவர்களின் உணர்வுக்கு எட்டவே மாட்டோம்.

சத்திரங்கள் வைத்து போஷித்த இடங்கள் எல்லாம் இன்று சுவடு தெரியாமல் அழிந்து போய் விட்டன.

இன்று..? வடக்கேயிருந்து ராமேஸ்வரத்துக்கோ அல்லது திருவரங்கம், மதுரை, பழனி என ஆலயங்களுக்கோ வருபவர்கள்... தங்குவதற்கு ஏற்ற அன்ன சத்திரங்கள் கிடையவே கிடையாது.

நாம் வடக்கே சென்றால், ரூ. 5க்கு ஒரு ரொட்டி கிடைக்கிறது. 4 ரொட்டி, ஒரு தயிர் சாப்பிட்டாலே வயிறு நிறைகிறது. ஆனால், இங்கே 2 இட்லி கூட ரூ.25க்கு குறைந்து இல்லை.

நாத்திகம் பேசி நாட்டை நாறடித்தவர்களால்... இன்று தமிழகம் தலை தொங்கித்தான் கிடக்கிறது. கோயில்கள் - வணிக கேந்திரங்கள் ஆகிவிட்டன. சாமியைப் பார்க்க காசு. நடக்க காசு. செருப்பைப் போட்டால் காசு. பூவெல்லாம் வாங்கிப் போய் சாமிக்குப் போடவே முடியாது. அது பணக்காரனுக்கான அடையாளம். இங்குள்ள சுவாமிகள் எல்லாம் ஏழைகளிடம் இருந்து அன்னியப் பட்டு விட்டார்கள். ஆலயங்கள் வகை தொகை இல்லாமல் சாதி பேதமற்று அனைவருக்கும் பொது என்று ஆகிவிட்டன. ஆனால், வர்க்க பேதம் ஒன்றிலேயே அவை தற்போது நிலை பெற்று விட்டன. காசேதான் கடவுளடா என்று பாடிப் பாடி, காசில்லை எனில் கடவுள் இல்லை என்ற வர்த்தகத்தை பெரிதாக வளர்த்தாயிற்று.

எப்போது பள்ளிகளில் ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் ஒழுக்க நெறியும் என நல்போதனைகளை விட்டுவிட்டோமோ.... அப்போது முதல் ஒழுக்க நெறியை ஏளனப் படுத்தும் போக்கு பிஞ்சு நெஞ்சிலேயே நஞ்சாய் முளை விட்டாயிற்று. எல்லாவற்றிலும் தகிடுதத்தம். எல்லாரிடமும் நேர்மையற்ற தன்மை. எல்லாரிடத்தும் ஒழுக்கக்கேடு. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாய் வயிற்றுப் பிழைப்புக்கு நடிக்கும் மக்கள். காசுக்கு ஆலாய்ப் பறக்கும் போக்கு. ஒழுக்கம் விழுப்பம் தரலான் என வெறுமனே பாடம் படித்து விளக்கிக் கொண்டிக்கும் மனப்பாங்கு....

எப்படி இருந்த தமிழகம். ... இப்படி ஆகிவிட்டதே என்ற துர்பாக்கிய நிலைதான்!

இப்போதெல்லாம் எனக்கு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பொய்யாக வெற்று வார்த்தை சொல்லி பீற்றிக் கொண்டிருக்கத் தோன்றவில்லை.

நம் நெல்லை பரணிக்கரை பத்தமடையில் பிறந்து கங்கைக் கரை ரிஷிகேஷத்தில் ஐக்கியமான சுவாமி  சிவானந்தரின் வழியில்....

ரிஷிகேஷத்தையும் ஹரித்வாரையுமே என் மனம் இப்போது நாடுகிறது ! 

சொன்னது ஒன்று; புரிந்து கொண்டதோ வேறு: சம்ஸ்கிருத சிலேடை


பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்  பாடத்திட்டம் இல்லாமலே!  போன வருஷத்து அனுபவப் பாடமாம்! பள்ளி திறந்து மாதம் மூன்றாகி விட்டது; ஆனால் பாடத் திட்டம் வந்த பாடில்லை! அப்போது சொன்னார்… “நம்ம ஸ்கூலுக்கு சில ‘பஸ்’ தான் வருதேயொழிய, இன்னும் ‘சிலபஸ்’ வந்தபாடில்லை!”
அட! இந்த மாதிரி நாமும் பேசும்போது உபயோகித்தால் என்ன? என்ற ஆர்வம் அப்போது துளிர் விட்டது. அதன் பிறகு இருபொருள் தரும் சொல்லை அகராதியில் தேடத் தொடங்கியது மாணவ உள்ளம்.
இச் சொல் பயன்பாட்டில் சில நேரம் விபரீதம் தந்தாலும் பல நேரங்களில் சுகமாகத்தான் இருந்தது… காரணம் பலரும் பொருள் தெரிந்து ரசித்ததால். நம்மால் நாலுபேரை சந்தோஷப்படுத்த முடிகிறதே என்ற எண்ணம்தான்!
ஒரு நாள் இரவு பக்கத்து வீட்டு நண்பரிடம் “நாளை சீக்கிரம் எழுந்து நெல்லை ஜங்ஷனுக்குப்போகணும்…” என்று சொல்லி வைத்தேன். மறுநாள் காலை… வழக்கம் போல் சோம்பல். வியப்போடு பார்த்த நண்பர் கேட்டார்… “ஏ என்ன? போலயா?” கேள்வி கேட்ட வேகத்துக்கு ஈடு கொடுத்து “போல” என்றேன். விறுவிறுவென என் அப்பாவிடம் சென்ற நண்பர் சொன்னார்… “மாமா, உங்க பையன் என்னை ‘போல’ ண்ணு  சொல்லிட்டான்…”  ‘போகல’ என்ற சொல்லில் ‘க’ கண்ணாமூச்சி காட்டியதால் எழுந்த வினை இது!
சொலவடையா? சிலேடையா? எப்படி இருந்தால் என்ன? பயன்பாட்டில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்! என்ன பேசுபவருக்கும்  கேட்பவருக்கும் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்! கி.வா.ஜ வின் சிலேடைகளைக் கேட்டு இன்புறாத தமிழர் உள்ளமும் உண்டோ?
தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த உத்தி இருந்து வருகிறது. நம் இன்னொரு தொன்மையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் சிலேடைக்கவிகள் ஏராளம். அவற்றில் பெரும்பாலும் உவமையாகவே கையாளப்பட்டிருக்கும். தமிழில் கடைசி முடிப்பு, இரண்டுக்கும் பொதுவாக அமைந்து அழகு காட்டுவது போல், பெரும்பாலும் சம்ஸ்க்ருதத்தில் பாடலின் முதல் வரியிலேயே சிலேடை இன்பம் வெளிப்படும். காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை எவ்வளவு தூரம் நாம் அசை போட்டிருப்போம்…? ‘எள்ளுக்கும் பாம்புக்கும்’ காட்டும் ‘ஆடிக்குடத்தடையும்’ பாடல் நம் காதுகளிலே ரீங்காரம் இடுகிறதே!
ஒரு சம்ஸ்க்ருதக் கவி…
ஜீவனக்ரஹணே நம்ரா: க்ருஹீத்வா புநருந்நதா:/
கிம் கனிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: கடீயந்த்ரஸ்ய துர்ஜனா://
கடீ யந்த்ரம்  நீர் இறைக்கும் எந்திரம்  ஏற்றச்சால். துர்ஜனா  தீயோர். சந்தர்ப்பவாதி என்றும் கொள்ளலாம். இவ்விரண்டில் எந்திரம் தீயவனுக்கு இளையவனா? மூத்தவனா? என்று கேள்வி கேட்டு, இரண்டுக்குமான ஒப்புமையை இரு பொருள் தரும் வகையில் கவி கையாண்டிருக்கிறார். ‘ஜீவன க்ரஹணே’ என்றதில் ‘ஜீவனம்’ என்று, தண்ணீருக்கு ஒரு பெயர் உண்டு. ஜீவிகை என்றதான உயிர் வாழ்தலுக்கும் ஒரு பெயர் உண்டு. ஏற்றச் சாலில் தண்ணீர் மொண்டு கொள்வதற்காக அது கிணற்றில் இறங்கும்போது, தலை தாழ்த்தியிருக்கும். நீரை மொண்டு கொள்ளும் வரையில்தான் தலை வணங்கும்; மொண்டு கொண்ட பிறகு உடனே தலை தூக்கும். அதுபோல் தீயோர்(சுயநலவாதிகள்) பயன் அடையும் வரையில்தான் மற்றோர் காலில் விழுந்து கிடப்பர். பிறகு செருக்கோடு தலை நிமிர்ந்து அலைவர்.
இதுபோல் கத்திக்கும் கருமிக்குமான சிலேடை சுவையானது; உள்ளத்தை ஊடுருவுவதும் கூட!
த்ருடதர நிபத்தமுஷ்டே: கோச நிஷண்ணஸ்ய ஸஹஜமலிநஸ்ய/
க்ருபணஸ்ய க்ருபாணஸ்ய ச கேவலமாகாரதோ பேத://
க்ருபணன்  கருமி; க்ருபாணம்  கத்தி. இரண்டுக்கும் உச்சரிப்பில் ஒரு ‘ஆ’காரம்தான் வேற்றுமையே தவிர இரண்டின் சுபாவமும் ஒன்றுதான்! இவ்விரண்டின் சுபாவத்தை மூன்று விஷயங்கள் ஒற்றுமைப்படுத்தி, சிலேடை இன்பம் தருகிறது. ‘த்ருடதர நிபத்தமுஷ்டே’  கத்தியைக் கையில் பிடிக்க, நன்றாக முஷ்டி பிடித்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். கருமியும் அப்படியே! எங்கே கை திறந்தால் காசு விழுந்து விடுமோ என்று அஞ்சி கையை இறுக்கிப் பிடித்திருப்பான். ‘கோச நிஷண்ணஸ்ய’  கத்தி உறையையும் பொக்கிஷத்தையும் ‘கோசம்’ என்பர். கத்தி அதன் உறையில் தங்கும். கருமி எப்போதும் பொக்கிஷத்தைக் காவல் காத்து, பூட்டைப் பற்றியவாறு தொங்கிக் கொண்டு கிடப்பான். ‘ஸஹஜ மலிநஸ்ய’  கத்தி, இரும்பால் செய்யப்படுவதால் இயற்கையாகவே கருப்பாக இருக்கும்; அழுக்கடைந்து துருப்பிடித்து இருக்கும். கருமியோ வெள்ளைத் துணி அழுக்காகும்; அதை சலவைக்குக் கொடுத்தால் காசு செலவாகுமே என்று அஞ்சி அழுக்குத் துணியையே அணிந்திருப்பான். ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாமல் மலினனாகவே இருப்பான். அதனால் இவ்விரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ‘கேவலம் ஆகாரதோ பேத:’ என்றபடி ‘ஆ’கார சப்தத்தில் மட்டுமே வேற்றுமை என்பதை உணரலாம்.
இப்படி ஒரு பொருளுக்கும் மனிதனின் குணத்துக்கும் ஏற்ப ஒப்பிட்டு சிலேடை இன்பத்தைத் தருவது கவிகளுக்குக் கைவந்த கலையே!
கண்ணனைப் பாடிய கவிகள், எத்தனையோ சொல்லின்பத்தையும் பக்தி இன்பத்தையும் தந்திருக்கிறார்கள். கண்ணனின் குறும்புகளை தம் கவித்திறனால் அழகுற வெளிப்படுத்திய நம் பாரதியைப் போல், பிற இந்திய மொழிகளிலும் இச்சுவை உண்டு. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில்,  ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான், தலை பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்…’ என்று கோபியருடன் கண்ணன் செய்த குழந்தைத் தனக் குறும்புகளை பாரதி வெளிப்படுத்தியது போல், சம்ஸ்க்ருதக் கவிஞரும் இதைப் பாடியிருக்கிறார். அதிலே சிலேடை உண்டு; கண்ணனின் வார்த்தை சமத்காரமும் உண்டு.
அம்ஸே ஸலீலமதிரோப்ய சுகம் ஸ்வஹஸ்தாத்
கோப்யா பயாகுல த்ருச: குதுகீ முகுந்த:/
அம்ஸம்கதம் சுகமிஹா பநயேதி வாசம்
தஸ்யா நசம்ய ச ததம் சுகமாசகர்ஷ//
கண்ணனின் லீலா விநோதம் இந்தப் பாடலில் அனுபவிக்கப் படுகிறது. கண்ணன் ஒரு கோபியின் தோளில் விளையாட்டாக ஒரு கிளியை ஏறவிட்டான். திடீரென ஏதோ ஒன்று தோளில் தட்டுப்பட, பயந்து போன கோபி கண்ணனிடம் சொன்னாள்… “ஹே க்ருஷ்ணா, அம்ஸம் கதம் சுகம் அபநய…” என்று! அம்ஸம்  தோளை, கதம்  அடைந்திருக்கும், சுகம்  கிளியை, அபநய  அப்புறப்படுத்து… அதாவது, “கண்ணா! என் தோளின் மேல் ஏறியுள்ள இக் கிளியை அகற்று” என்ற பொருளில் சொன்னாள்.
ஆனால் அதை அப்படியே கேட்டுச் செய்தால் கண்ணனுக்கு என்ன சிறப்பு? கண்ணன் குறும்பு எப்படி வெளிப்படும்? கோபி சொன்ன வார்த்தைக்கு சிலேடையாகப் பொருள் கொண்டு, கண்ணன் ஒரு குறும்பைச் செய்கிறான்…
கோபி சொன்ன ‘அம்ஸம் கதம் சுகம் அபநய’  என்பதையே, ‘அம் ஸங்கதம் சுகம் அபநய’ என்று ஆக்கிக் கொண்டான் கண்ணன். அம் ஸங்கதம்  அம் என்ற எழுத்தோடே சேர்ந்த; சுகம் அபநய  சுகத்தைத் தள்ளு… அதாவது, அம் என்பதோடு சேர்ந்த சுகம்  அம்சுகம்! அதற்கு ‘ஆடை’ என்று பொருள்! இப்படிப் பொருள் கொண்டு, அம் என்ற சுகத்தோடு அம்சுகத்தைத் தள்ளு என்று பொருள் கொண்டு, கோபியின் தோளின் மேலேறியிருக்கும் மேலாடையைப் பிடித்திழுத்தான்… பிறகு “கோபி நீ சொன்னபடியேதான் நான் செய்தேன்…” என்று கள்ளச் சிரிப்பும் சிரித்தான்!
கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம்

வியாழன், ஏப்ரல் 23, 2015

கற்பனை மேடைப் பேச்சு: தாலி... நூலு.... அறுப்பு....


இப்ப நடக்கற கூத்தையெல்லாம் வெச்சி...
நாமும் ஒரு இயக்கம் தொடங்கி...
அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து...
அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து.... இவங்கள மாதிரியே மேடையில பேசினா....
எப்டி இருக்கும்...?????
அந்தப் பேச்சையும் நாமே ரிப்போர்ட் எடுத்து,
நாமே எடிட் செய்து,
நாமே ஒரு பேப்பர் நடத்தி,
நாமே அதை வெளியிட்டு..
நாமே (நாம் மட்டுமே ) அதைப் படித்துப் பார்த்தா எப்படியிருக்கும்....???
கற்பனைக்கு எல்லை இருக்கா என்ன???
அரசியலை அவர்கள் கேலிக் கூத்து ஆக்கி விட்டார்கள் என்பதால்... நாமும் ஒரு கேலிக் கூத்து ஆடுவோமே.....
இப்படியாக... குதிரையைத் தட்டி விட்டோமா... தட தடன்னு அது ஓடுச்சா...அப்படியே அது கொட்டுச்சா.....
முடிஞ்சா நீங்களும் படிச்சி உங்க மேடைப்பேச்சையும் இங்க நீட்டி முழக்குங்க...
*****
இதோ நம்ம ரிப்போர்ட்டிங்:
*****
தாலி, பூணூல் அறுத்து திருமண பந்தத்தை அடிமை எனும் தி.க. தொண்டர், தம் அடிமைக் கயிற்றை அறுத்து தி.க. தலைவர் ஆக முடியுமா? : செந்தமிழன் சீராமன் கேள்வி
சென்னை:
அண்மையில் தி.க.வினர் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நாளில் மேடையில் தாலியறுப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு தினங்களுக்கு முன்னர் மயிலாப்பூர், மே. மாம்பலத்தில் வயதான இரு பூசாரிகளின் பூணூல் அறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தெய்வத்தமிழ் இயக்கம் சார்பில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீராமன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது, தாலி, பூணூல் அறுத்து, திருமண பந்தத்தை அடிமை என்று கூறும் தி.க. வைச் சேர்ந்த தொண்டர், நெடு நாட்களாக தாமும் தம் வாரிசுகளும் கொத்தடிமைகளாக ஒரு தலைக்கும் குடும்பத்துக்கும் அடிமைப் பட்டுக் கிடக்கும் நிலையை உணர்ந்து, அடிமை விலங்கை உடைத்து, கயிற்றை அறுத்து வெளியில் வந்து தாமே அதற்கு தலைவன் ஆகிக் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் பேசியது....
தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்றார்கள். ஆனால் காலிப் பயல்கள் அதை போலி என்கிறார்கள். ஒரு பெண்ணின் நெற்றி வகிடையும் கழுத்தில் தாலிக் கயிறையும் பார்த்தால், இவள் வேறொருவன் மனைவி என்று கருதி, எந்த ஓர் ஆடவனும் அவளை மரியாதையாகப் பார்த்து விலகிச் செல்வான். இது தமிழர் நாகரிகம்.
ஆனால்... நடந்தது என்ன? இந்தியா முழுதும் பரந்து விரிந்த ராமாயணக் கதையில், ராவணனின் கதாபாத்திரத்தை இவர்கள் தமிழன் என்றார்கள். பிறன் மனை நோக்கி தன் குடியைக் கெடுத்துக் கொண்ட அரக்கன் ராவணன் தமிழன் என்று தூக்கிக் கொண்டாடுபவர்கள், அவனது செயலையே மேற்கொள்ள எண்ணம் கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. பிறன் மனை நோக்கல் தீதென்ற பரம்பரையில் வந்தவர்களிடம், பிறன் மனை நயத்தலாக, மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று சிறுமைப் படுத்திய கயமைக் கூட்டத்தில் வந்தவர்கள் பிரசாரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்களுக்கும் அப்படி ஒரு தனி நாகரிகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தலைவர்கள், தங்கள் முன்னோரை நனி நாகரிகர் என்று விளித்ததை விளங்கிக் கொள்ளாமல் போனார்களோ என்று வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன். துக்கப் படுகிறேன், துயரப் படுகிறேன்...
இவ்வகையில், தாலி கட்டியிருந்தால் அடுத்தவன் மனைவி என்று தன் அறிவுக்கு எட்டி, ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தன் முன்னோரான நனி நாகரிகரின் நற்பண்பு தனக்கும் வந்து விடுமே என்ற எண்ணத்தில்தான், தாலியை தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வதற்காக, தாலி ஒரு அடிமைச் சின்னம் என்றுகூறி பெண்களின் மூளையை மழுங்கடித்து, தன் சுய இச்சையைத் தீர்த்துக் கொள்ள வழி செய்து கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.....
பெண்ணாக இருந்தால் சரி... கழுத்தில் தொங்கும் கயிறு அடிமைச் சின்னம். அட.. ஆணுக்கு என்னய்யா வந்தது?
பூணூல் அணிபவன் பார்ப்பனன் மட்டுமா? எத்தனையோ சாதிக்காரர்களும் தான் அணிகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது உடலெல்லாம் அப்படியே சிலிர்க்கிறது. மயிர்க் கூசுகிறது. உள்ளம் பூரித்துப் போகிறது.
பெண்ணுக்கு மட்டும்தான் திருமணம் ஆன அடையாளம் இருக்க வேண்டுமா? ஆணுக்கு கிடையாதா என்று அந்தக் காலத்தில் நம் முன்னோர் யோசித்துதான் இப்படி ஒரு பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.
வயசில் சின்ன பையன்களுக்கு பூணூல் கிடையாது. படிக்கும் வயது எட்டியதும், ஒரு முடிச்சு பூணூலை போடுவார்கள். அவன் படிக்கும் மாணாக்கன் என்பதாக. அவனே திருமண வயது வந்ததும், இரண்டு முடிச்சுகளாக... அதாவது ஒரு முடிச்சு கொண்ட தலா இரு பூணூலை அணிவிப்பார்கள். இந்த சடங்கு, அந்த ஆடவன் திருமணமானவன் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தும். அவனே ஒரு குழந்தைக்கு தந்தையாகும் போது, அவன் குழந்தை பெற்றவன் என்பதை வெளிப்படுத்த மூணு பூணூலை அணிவிப்பார்கள். அதைக் கண்டு கொள்ளும் உடன் இருப்போர், உறவினர், அல்லது அறிமுகமற்ற நபர்கள், அந்த நபர் திருமணமானவன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, ஏமாற்றாமலோ, ஏமாறாமலோ தடுத்தார்கள்.
ஆனால், இப்போது நடப்பது..... திருமணம் ஆனதையே மறைத்து எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம், யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நோக்கலாம், பாக்கலாம், தூக்கலாம் என்ற காட்டுமிரான்டித் தனமான நிலையை ஒரு நாகரிக சமுதாயத்தில் ஏற்படுத்த முனைகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, ஐயஹோ.. இதை நோக்கியா இந்த சமுதாயம் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும், கடிகார முள் டிக் டிக் என்று அடிக்கும் ஒவ்வொரு சத்தத்தின் போதும் என் இருதயமும் டக் டக் என்று அடிக்கிறது.
பெண்ணுக்கு தாலி , கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று கூறி அறுத்து எறிகிறார்கள்.
ஆணுக்கும் பூணூல் கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று எண்ணி அறுத்து எறிகிறார்கள்.
நான் கேட்கிறேன். கல்யாணம் ஆனவன் அல்லது ஆனவள் என்பதை உலகுக்குத் தெரியப் படுத்தும் ஒரு சின்னத்தை அறுத்து அறிவதில் அப்படி என்ன குரூர புத்தி உங்களுக்கு? இதை செய்து நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? கல்யாணம் ஆகாதவள் அல்லது ஆகாதவன் என்று உங்கள் மனசுக்கும் வெளியிலும் காட்டுவதால் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனங்களை இந்த சமுதாயம் சந்திக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
அது சரி... நான் கேட்கிறேன்... இவற்றை எல்லாம் அடிமைக் கயிறு என்கிறீர்களே... நீங்கள் எத்தனைக் காலமாக இவர்களின் சுய இச்சைக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டு, உங்கள் சுயத்தைத் தொலைத்து, சுய மரியாதையைத் தொலைத்து, அடிமை வாழ்க்கை வாழ்ந்து, உங்கள் பிள்ளை, பேரன் என கொத்தடிமைகளாக்கி... அடிமை, கொத்தடிமை, சொத்தடிமை, சோத்து அடிமை என அடிமைகளாக இருக்கிறீர்களே... என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா..? கேட்கிறேன்.... எத்தனை நாட்களுக்கு நீங்கள் கொடி பிடிப்பீர்கள், கோஷம் போடுவீர்கள்? சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசுகிறீர்களே... அந்த சமத்துவப் படி, பெரியார் சொத்து உங்களுக்கு கிடைத்ததா? அட... அந்த புத்தகமாச்சும் பொதுச் சொத்தாகி, உங்களுக்கு ஒரு பாகமாவது கிடைத்ததா? என்றாவது ஒரு நாள் நீங்களும் தலைவன் ஆக வேண்டும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அவ்வளவு அடிமைப் புத்தியை வைத்துக் கொண்டு, நீங்கள் அடுத்தவரின் அடிமைத் தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது தான்? வெளங்கும் இந்த நாடு. வெளங்கும் உங்கள் கொள்கை... இன்னும் பேச நிறைய இருக்கிறது. ஆனாலும், மணி பத்தைத் தாண்டி, பத்து மணி ஒரு நிமிடம் ஆகி, நொடிகள் கடந்து உங்கள் மூளை எல்லாம் வாட்டத்தைச் சந்திப்பதை என் உள்ளம் உணர்ந்து கொண்ட காரணத்தால், இத்துடன் என் சுய ஊக்க சிந்தனையை உங்களிடம் விதைத்துக் கொண்டேன் என்ற மன திருப்தியோடு என் பேச்சை நிறைவு செய்கிறேன். வாழ்க தமிழ். வெல்க தமிழ். திராவிடத்தை ஒழித்து, தமிழைத் தூக்கிப் பிடிப்போம் என்று கூறி அமைகிறேன். நன்றி வணக்கம். "
என்று பேசினார் செந்தமிழன் சீராமன்.
தெய்வத் தமிழ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் முக்காடு போட்டு முழங்காலிட்டு அமர்ந்தபடி கலந்து கொண்டனர்.

திங்கள், ஜனவரி 12, 2015

கோபமும் வீரமும் வேறுபடுவது எங்கே? : தேசிய இளைஞர் தினத்தில் ஒரு சிந்தனை!


ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் சுவாமிஜியின்பால் பற்றுள்ளவர்கள். இது அரசின் அதிகாரபூர்வ நாளாகவும் அறிவிக்கப்பட்டால், விவேகானந்தரின் உலக சாதனையை நாடே நினைவுகூர்வதாக அமையும்!
காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இளைஞர் தினத்தை ஒட்டி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த அழைத்திருந்தார் மடத்தின் தலைவர் சுவாமி தர்மாத்மானந்தர். (அன்பு ததும்பும் அவர் வார்த்தைகளால், இளையோர் பட்டாளம் அவரை மொய்ப்பதைக் காண ஆனந்தமாக இருந்தது.) சுவாமிஜியின் செய்தியை  இளைஞர்களுக்கு சொல்வதைவிட வேறு மனநிறைவு என்ன இருக்கப்போகிறது! காரணம்- நாட்டைப்பற்றிய சிந்தனை; சமூகம் பற்றிய கோட்பாடு; எளியோரையும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் சமயம் / பக்தி மார்க்கம் - குறிப்பாக, வீரத்தை மையமாகக் கொண்ட அவரது கம்பீரம் போன்றவற்றை மாணவர்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமே!
ஒரு சுபாஷிதம்: (பொன்மொழி)
அச்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவச நைவச|
அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பல காத:||
அச்வம் - குதிரை; கஜம் - யானை; வ்யாக்ரம் - புலி; அஜாபுத்ரம் - ஆட்டுக்குட்டி...
இந்த சுபாஷிதத்தின் பொருள்: (பலமுள்ள) குதிரையோ யானையோ புலியோ பலியிடப்படுவதில்லை; (பலவீனமான) ஆட்டுக்குட்டிதான் பலியிடப்படுகிறது. அதுபோல் (துர்பலனான) பலவீனமானவனுக்கு தேவர்களின் பெயராலும் துன்பமே நேரும். எனவே வீரம் நிறைந்தவனுக்குத் துன்பம் தர யாருமே சற்று யோசிப்பார்கள் என்பது புரிகிறதல்லவா?!
சுவாமிஜி இதை எளிமையாக "பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!' என்று ஒற்றை வாக்கியத்தில் முழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். வீரம் நெஞ்சில் இருக்கும்போது தானே பலம் வெளித்தெரிகிறது.
அந்த வீரம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? நல்ல குணமுள்ள எளியோருக்கு இரக்கம் காட்டவும், கொடுமதி படைத்த வலியோரை வீழ்த்தவும் உரமுள்ளதாக இருக்கவேண்டும். பலரும் வெற்று வார்த்தைகளால் வீரம் காட்டி, மனத்தால் கோழைகளாகிவிடுகிறார்கள். அவர்களிடம் வெளித்தெரிவது கோபம் - சினம் தானே ஒழிய வேறல்ல! அப்படிப்பட்டவர்களால் சுற்றமும் நட்பும் கெட்டுவிடுகிறது என்பது வள்ளுவர் வேதம். (சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி...)
வீரத்துக்கும் கோபத்துக்கும் நூலிழைதான் வேறுபாடு!
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் - என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்; சுயநலமிகள் என்பது என் எண்ணம். எப்படி? - வார்த்தை உக்கிரத்தால் பிறர் மனத்தைக் காயப்படுத்திவிட்டு, சொல்லாலும் செயலாலும் தன் கோபத்தைப் பிறர் மீது திணித்துவிட்டு, அடுத்த சில நொடிகளில் அவர்கள் அடங்கிப் போவார்கள். சமாதானம் பேசுவார்கள். காரணம் - காரியம் நடக்கவேண்டும். ஆனால் வார்த்தை வடுக்களால் காயமுற்ற பிறர் நெஞ்சோ, அந்த ரணத்திலிருந்து கொஞ்சமும் ஆறாமல் அப்படியே இருக்கும்.
ஸ்டீபன் கோவே என்பாரின் "90/10 கொள்கை' கட்டுரையை ஒருமுறை வாசித்தேன். அந்தக் கட்டுரையின் சாரம்...
10% வாழ்க்கை, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. 90% வாழ்க்கை, நீங்கள் அதற்கு ஏற்ப எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அந்த 10% த்தை நாம் கட்டுப்படுத்தமுடியாது. உதாரணத்திற்கு, பஸ், கார் பிரேக் டவுன் ஆவதையோ, ஏரோப்ளேன் தாமதமாவதையோ, டிரைவரால் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதையோ... குறிப்பாக பிறரால் நமக்கு நேரும் இதுபோன்ற விஷயங்களையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மீதமுள்ள 90% த்தைத் தீர்மானிப்பது நாமே!
ஒரு வாழ்க்கை உதாரணம்:
குடும்பத்தோடு காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் செல்ல மகள் காபி கொண்டு வருகிறாள். எதிர்பாராமல் கால் தடுக்கி கை அசைந்து காபி உங்கள் அழகான சட்டையில் அபிஷேகம் செய்துவிடுகிறது. இச்செயலுக்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. இச்செயலை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. காரணம் - எதிர்பாராமல் நடந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடக்க வேண்டியதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.
ஆனால் நடப்பது? உங்கள் மகளைக் கோபத்தால் திட்டுகிறீர்கள். அஷ்டகோணலான உங்கள் முகத்தைக் கண்ட அப்பெண் உடனே காபிக் கோப்பையைத் தடாலெனப் போடுகிறாள். கண்களில் "பொலபொல'வென கங்கைப் பிரவாகம். திட்டிமுடித்தபிறகு உங்கள் மனைவியிடம் சொல்கிறீர்கள்... ""ஏன் காபிக் கோப்பையை சட்டை அருகே கொண்டு வந்து நீட்டவேண்டும்? அப்படி தொலைவிலேயே வைத்துவிடக் கூடாதா?'' கேட்டுக் கொண்டே மாடியில் உங்கள் அறைக்குச் சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். அப்போதும் உங்கள் மகள் அழுதுகொண்டே மெதுவாகச் சாப்பிடுகிறாள் - வேண்டா வெறுப்பாக! பிறகு பள்ளி செல்லத் தயாராகி வெளியே வந்தால் பள்ளிப் பேருந்து போய்விட்டது... உங்கள் மனைவியோ உடனே செல்லவேண்டும்! என்ன செய்ய? மகளைக் காரில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள் - காரை வேகமாக ஓட்டியபடி! 40 கி.மீ வேக வரையறை மறந்து 60 கி.மீட்டரில் ஓட்டுகிறீர்கள். நேரமாகிவிட்டதே! போலீஸ்காரர்கள் சும்மாயிருப்பார்களா? உரிய தண்டத்தொகை செலுத்திவிட்டு பள்ளிக்குப் போனால், கார் கதவைத் தடாலெனத் திறந்து உங்கள் மகள் "குட்-பை' கூட சொல்லாமல் பள்ளிக்குள் ஓடுகிறாள். பிறகு 20 நிமிட தாமதத்தில் அலுவலகம் நுழைந்தால், அவசரத்தில் முக்கியமான கைப்பெட்டி "மிஸ்ஸிங்!' -அது வீட்டில்! உங்கள் நாள் மிக மோசமாக அன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவே தொடர்ந்தால் அன்றைய வேலைகள் அதோகதிதான்! எப்படியோ சமாளித்து மாலை வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கும் உங்கள் மனைவி மகளுக்கும் இடையே மவுனயுத்தம் தொடங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இது எதனால்? நீங்கள் காலையில் நடந்துகொண்ட முறை     யினால். உங்கள் தினம் ஏன் அன்று மோசமானது?
1. காபியாலா? 2. மகளாலா? 3. போலீஸ்காரராலா? 4. உங்களாலா?
நிச்சயம் உங்களால்தான். காபியால் அன்று உங்களுக்கு நேர்ந்ததைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு அடுத்த 5 நிமிடங்களில் நீங்கள் நடந்து கொண்ட முறையே அன்றைய உங்கள் நாளைப் பாழாக்கியது. அதற்குப் பதிலாக, காபியை இப்படி சட்டையில் கொட்டிவிட்டோ மே என்று துணுக்குற்ற மகளிடம், "சரி, பரவாயில்லை; இனி இப்படிச் செய்யாதேம்மா' என்று அன்போடு கூறி, அடுத்த நிமிடத்திலேயே மாடிக்குச் சென்று வேறுசட்டை மாற்றிக் கீழே வரும்போது உங்கள் செல்ல மகள் "டாடா' சொல்லி வலியவரவழைத்த புன்னகையோடு "பஸ்' ஏறியிருப்பாள். நீங்களும் 5 நிமிடம் முன்னதாக அலுவலகம் சென்று மேலதிகாரிகளிடம் "ஹவ் எ நைஸ் டே' என்று புன்னகை பதிலைப் பறிமாறியிருக்கலாம்.
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைப் பாருங்கள். 90% உங்கள் கைகளில்தானே உள்ளது. 90/10 கொள்கையை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க சில வழிகள்...
* உங்களைப் பற்றி தவறாக யாராவது சொல்லிக் கொண்டிருந்தால், கோபத்தை ஆயுதமாக்கக் கூடாது. கண்ணாடி அறையினுள் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதுபோல் மனத்தைத் தெளிவாக்கி அகன்று விடலாம். சூழ்நிலைக்குத் தக்க, பொறுமையோடு கையாளலாம்.
* வேகமாகச் சென்று கொண்டிருக்கும் உங்கள் காரை வழிமறித்தால்... வேலையிழப்பு நேர்ந்தால்... விமானமோ ரயிலோ தாமதமானால்... பார்க்கவேண்டிய நபர் இல்லாமல் போனால்... - இப்படி பல சந்தர்ப்பங்களில் 10/90 கொள்கையைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை இனிதாகும். அது உங்கள் கையில்... - இப்படி நீண்டுகொண்டே போகிறது ஸ்டீபன் கோவேயின் கட்டுரை.
வாரியார் சுவாமி ஓரிடத்தில் கோபம்பற்றிச் சொல்வார்... ""சூடான பால் ஆறவேண்டும் என்றால் அதை வேறு டம்ளரில் மாற்றி ஊற்றி ஆற்றவேண்டும். அதுபோல் சூடான சூழ்நிலையால் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தைவிட்டு அகன்று விடவேண்டும்.'' - இது ஒரு வழி.
பிறர் உங்களைக் கோபப்படுத்தும்படி நடந்துகொண்டால் இப்படி நடந்துகொள்ளலாம். ஆனால் நீங்கள் பிறரைக் கோபப்படுத்தாமல் இருக்க ஒரு வழி உண்டு. பொதுவாகச் சொன்னால் - அடுத்தவர் குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசாமல் இருப்பது. பெரும்பாலும் மனிதன் அவதூறுகளைக் கண்டே கோபம் கொள்கிறான்.
குண தோஷௌ புதோ க்ருஹ்ணந்  இந்துக்ஷ்வேளா விவேச்வர:|
சிரஸா ச்லாகதே பூர்வம் பரம் கண்டே நியச்சதி||
உலகில் குணமே இருப்பவனும் குற்றமே இருப்பவனும் யாருமிலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால் விவேகியானவன், இரண்டையும் தெரிந்து கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய்விட்டு வெளிவிடாமலும், குணங்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடியும் வாழவேண்டும். இதற்கு உதாரணம் - சிவபெருமான். மகாவிவேகியான பரமசிவனுக்கு, ஆலகால விஷமும் சந்திரனும் கிடைத்தன. சந்த்ரமௌலீச்வரன் என்ற பேருக்குத் தக்கபடி, தண்ணொளி பரப்பும் வெண்ணிலாவைத் தன்தலையில் வைத்துக் கொண்டாடுகிறான். நீலகண்டன்; காலகண்டன் எனும் பேர்களுக்குத் தக்க, விஷத்தைத் தன் கழுத்தில் அடக்கி மறைத்துவிட்டான். ஆனால் உலகில் நாமோ, பிறர் குணங்களை மறைத்து குற்றங்களையே வெளியிடுவோராயுள்ளோம்! மகனிடம் பாடம்கேட்ட அந்த அப்பனிடமிருந்து, பிள்ளைகள் கற்கவேண்டிய பாடம் இது என்று தோன்றுகிறது. ஆனால் குணம், குற்றத்துள் ஒருவனுக்கு எது அதிகமாக இருக்கிறதோ, அதையறிந்து, அவனை சேர்க்கவோ விலக்கவோ வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஒரு வகையில் இதுவும் நன்மை தருவதே!
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
- இது இந்தக் கருத்துக்கான வள்ளுவன் குறள்.
இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
சினத்தை அடக்கல் சிறப்பு.            
- இது முந்தைய கருத்துக்கான என் குரல்.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix