அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
ஆசிரியர் அழைக்கின்றார் அணி சேர்வீர்!!!
84 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தினமணிக்கு ஏராளமான பெருமைகள் இருந்தாலும், மகாகவி பாரதியையும், தினமணியையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதிதான் தினமணியும் உதயமானது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் மேற்கோளை அடிநாதமாக கொண்டு தொடங்கப்பட்டு அதன் வழியில் பீடு நடை போட்டு வரும் தேசிய பார்வை கொண்ட நாளிதழ்தான் தினமணி.
பாரதியின் பாடல்களையும், அவரது சிந்தனைகளையும் உணராதவர்கள், அவரது தாக்கம் இல்லாதவர்கள் பத்திரிக்கையாளர்களாகவே இருக்க முடியாது என்பது எனது சொந்தக் கருத்து.
பாரதியின் சொல்லாட்சியில் மிக முக்கியமானதும், இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தேவையானதுமான கோபம் எனப்படும்
ரெளத்திரம் பழகு என்ற ஆத்திசூடி வைர வரிகளாகும்.
நாட்டில் நடக்கும் தீமைகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் முடங்கிப் போயிருந்த சமூகத்தில் பாரதி, தீக்குச்சி போல பற்ற வைத்தான் விடுதலை எனும் நெருப்பை. அவன் வழியில் இன்றும் தினமணி பாசறையில் ஏராளமான பாரதிகள் தோன்றி அக்னிக் குஞ்சுகளாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவரது பிறந்த நாளை (டிசம்பர் 11) இன்றும் ஏராளமான அமைப்புகள் கொண்டாடி வந்தாலும், அதற்கும் ஈடாக தினமணியும் அவனது புகழைப் பாட துணிந்துவிட்டதை எண்ணி பெருமைப்படுகிறோம்.
எங்களது தினமணி ஆசிரியர் திருமிகு. கி. வைத்தியநாதன் அவர்களுக்கு எண்ணற்ற சாதனைகள் இருந்தாலும் அவரது காலத்தில், அவரது ஏற்பாட்டில் பாரதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம், அதுவும் அவர் பிறந்த எட்டையபுரத்தில் வரும் 11-ம் தேதி நடத்தவிருப்பது தினமணிக்கு மேலும் புகழை சேர்க்கும். இது நல்ல தொடக்கம்.
பாரதியின் பேரில் ரூ. 1 லட்சம் பொற்கிழியும், அவரது பெயரில் விருது வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
தினமணியில் திரு. கி.வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, இடையில் நின்றுவிட்ட தமிழ்மணி எனும் பகுதியை பட்டைத்தீட்டி புத்தொளி பெறச் செய்தார் அவர். பெற்ற தாயைக் கொல்வது போல, தமிழை தினமும் கொன்று கொண்டிருக்கும் தினப் பத்திரிகைகளுக்கு மத்தியில் தமிழுக்கென்று தனிப் பக்கத்தை உருவாக்கி ஞாயிறுதோறும் தமிழை பீடமேற்றி வைத்தவர் ஆசிரியர் அவர்கள்.
தமிழ்மணியை தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கிய நிகழ்வுகளுக்கு அடுத்து சிகரம் வைத்தார் போன்று மற்றொரு சாதனை நிகழ்வு இந்த பாரதி விருது வழங்கும் விழா. இது ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். சாதனை புரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த விருது வழங்கப்பட வேண்டும். அதையும் எமது ஆசிரியர் செய்வார் எனக் கருதுகிறோம்.
எமது வாசகர்கள், பாரதியிடம் காதல் கொண்ட இதழாளர்கள், அன்புள்ளங்கள் அனைவரும் மறவாமல் எட்டையபுரத்திற்கு வர வேண்டும்.
ஊர்க் கூடி தேர் இழுப்போம் வா..வா.....!
ஊரெல்லாம் பாரதி புகழை ஏந்திச் செல்வோம் வா..வா...!!
பின்குறிப்பு: ஶ்ரீவைத்யநாதாய வித்மஹே தமிழ்மணியாய தீமஹி தந்நோ தினமணி பிரசோதயாத்
என்றெல்லாம் எமக்கு மேற்கண்டதுபோல் சரணாகதி செய்யத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் திருநெல்வேலி டிரான்ஸ்பர் ஆவது கிடைத்திருக்கும்...
வாழ்க வளமுடன்