வாரும் சோதர சோதரிகாள்... கணீரென்று ஒலித்து கவனத்தை ஈர்க்கும் கூட்டுக் குரல்கள். கூடவே கிண்கிணியாய் ஒற்றை ஜால்ரா சப்தம். கால்கள் தாமாகவே விரைகின்றன. மயக்கும் சங்கீதம். சரி.. யாரை அழைக்கிறார்கள்? எதற்காக..? தங்கள் பஜனை சங்கத்தில் சங்கமித்து நீங்களும் பாடுங்களேன் என்று நம்மையும் அந்தக் கூட்டத்தில் சேரத்தான் அழைக்கிறார்கள்.
1980களில் பள்ளிச் சிறுவனனான நான் எங்கள் ஊரில் கண்ட காட்சி இது. ஏழு பிராகாரங்கள் என்று ஒரு தலத்தின் சிறப்பைச் சொல்வார்கள். எங்கள் ஊர் செங்கோட்டையில் அப்போது ஏழு அக்ரஹாரங்கள் இருந்தன. ஏழு தெருக்களிலும் போட்டி போட்டு பஜனைகளும் உற்ஸவங்களும் களை கட்டும். ஊருக்கு ஒரு சத்திரம் என்பார்கள். எங்கள் ஊரிலோ தெருவுக்கு ஒரு சத்திரம். சிறப்பு தினங்களா... கொண்டாட்டங்களா... அற்றை நாட்களில் சத்திரத்தில் விழா களைகட்டும். தீபாவளியை ஒட்டி வரும் கோலாட்டத் திருவிழா அதில் சிறப்பு. கோலாட்டப் பாடல்கள் குழந்தைகளுக்கும் அத்துபடிதான்!
இப்படி திண்ணைகளில் அமர்ந்து மாமிகளால் பாடப்பட்ட பாடல்களாகட்டும், பசுவும் கன்றும் பொம்மையாகச் செய்து வைத்து, சப்பரத்தில் சுமந்து பெண்களும் குழந்தைகளுமாய் கோல் தட்டி குரல் எழுப்பி ஆடும் கோலாட்டப் பாடல்களாகட்டும்... அவற்றில் எல்லாம், எங்கள் ஊரில் ஒரு ஞானியாக வாழ்ந்து அத்வைத ஞானத்தை பெண்களுக்கும் மக்களுக்கும் வழங்கிச் சென்ற ஆவுடையக்காளின் பாடல்கள் விரவிக் கலந்திருக்கும்.
யார் இந்த ஆவுடையக்காள்? ஒரு பெண்மணியான அவர் எப்படி ஞானியானார்? அவர் அப்படி எவ்வளவு பாடல்கள் எழுதியுள்ளார்..? அவரின் பாடல்கள் எப்படிப்பட்டவை? அறிந்து கொள்ள ஆவல்தானே?
***
இன்றில் இருந்து சுமார் 300 வருடங்களுக்கு முன்னால்... அது திருவிதாங்கூர் ராஜ்யத்தின் எல்லையாய் இருந்த அழகிய கிராமம். தென்றல் காற்று இனிமையாய் வீசித் தவழும் பூலோக சொர்க்கம். மரம் செடி கொடிகள் விரிந்து பச்சை மரகதப் போர்வையாய் பூமியில் போர்த்திய இயற்கை அழகு தவழும் இன்ப பூமி. சிவனடியார்கள் மிகுந்திருந்த கர்ம பூமி. ஆலயங்களும் வழிபாடுகளுமாய் மக்களின் இறையன்பை வளர்த்தெடுத்த பக்தி பூமி. இக் காரணத்தால் சிவன்கோட்டை என்றே திகழ்ந்தது காலப்போக்கில் மருவி செங்கோட்டை ஆனதாம்!
செங்கோட்டை சுற்றுப் பகுதிக்கு பலம் சேர்க்கும் ஹரிஹரா நதி சலசலத்து ஓடுகிறது. பொதிகை மலைச் சாரலும் தென்றலும் சுகமாய் வீசுகிறது. மலையிற் பிறந்து குளங்களில் நீர் பெருக்கி வளப்படுத்தும் ஹரிஹரா நதியை ஒட்டிய வீரகேரளவர்மபுரம் தெருவில் பக்தி மணம் கமழ்கிறது. ஆற்றின் கரையில் இருந்ததால் ஆற்றங்கரைத் தெரு என்றே அழைக்கப்பட்ட அந்தத் தெருவில் கிழக்கே மண்டபத்தினை ஒட்டிய வீட்டில் பிறந்தது அந்தக் குழந்தை. பெண் குழந்தை என்றால் செல்லம் அதிகம்தானே! பெற்றோர்க்குச் செல்வ மகளாய் செல்ல மகாளாய்த் திகழ்ந்த குழந்தைக்கு ஆவுடை எனப் பெயரிட்டனர். ஓடி விளையாடும் சிறுமியாய் வளர்ந்திருந்தாள் ஆவுடை. கல்விப் பயிற்சிக்கு வழியில்லை. பாவாடை சட்டை போட்டு, ஒற்றைச் சடை பின்னி, நெத்திச்சுட்டியும் ஒட்டியாணமும் சூட்டி பெண் குழந்தையை அலங்கரித்து கொஞ்சி விளையாடினர் பெற்றோர். அவர்களுக்கு என்ன தோன்றியதோ? பாவாடை கட்டக் கூட அறியாத பால்ய வயதில், ஆவுடைக்கு ஒருவனை மணம் முடித்தனர். கழுத்தில் பூண்ட மங்கல நாணின் மஞ்சள் மணம் போகவில்லை; தலையில் சூடிய பூவாடை அங்கிருந்து விலகவில்லை; ஆனால் அவள் கணவனின் உயிர் அந்தக் கணத்தில் அவன் உடல் விட்டு விலகியது! ஆவுடையின் மங்கலக் கோலமும் அவளை விட்டுப் போனது!
ஆவுடையின் தாயாரும் சுற்றத்தாரும் கூடி நின்று அழுதனர். ஆவுடை திகைத்து நின்றாள். பால் சிரிப்பு மாறாத பாலக வயதில், அடுத்திருப்போர் அழுவது கண்டால்... அம்மாவிடம் கேட்டாள்... “ஏனம்மா எல்லாரும் அழுகிறீர்கள்?”
"பையன் செத்துப் போய்ட்டான்”
“அவா ஆத்துப் பையன் செத்துட்டான்னா... நீங்கள்லாம் ஏன் அழணும்?”
இந்தக் கேள்வி, ஆவுடையின் தாயாருக்கு பொட்டிலடித்தாற்போல் தோன்றியது. விவேகத்தால் அழுவதை நிறுத்திக் கொண்ட அந்த அம்மாள், ஆவுடையை கட்டியணைத்துக் கொண்டார். குழந்தை சொல்வதன் உள்ளர்த்தம் அவளுக்குப் புரிந்தது. இதற்காக அழுவதற்கு நாம் யார் என்று எண்ணியவர், அன்று முதல் குழந்தையை முன்னிலும் கவனமாக பராமரிக்கத் தொடங்கினார். குழந்தைக்கு சீவி முடித்து சிங்காரித்து அழகு பார்த்தார். கல்வி பயிற்றுவிக்கவும் ஏற்பாடு செய்தார்.
ஆனால்... ஊர் வாய்? வம்பு பேசியது. அடுப்பங்கரையில் காலம் கழிக்க வேண்டிய கைம்பெண்ணுக்குக் கல்வி எதற்கு என்று வம்பளந்தது. ஊரில்தான் கேலிப் பேச்சு என்றால், குடும்பத்துக்குள்ளோ பலத்த எதிர்ப்பு! ஆவுடையின் தாயார் அனைத்தையும் மலை போல் நின்று தடுத்தார்.
நாட்கள் நகர்ந்தன. குழந்தைப் பருவத்தில் குதூகலமாய்க் கழித்த குழந்தை, பருவம் அடைந்தபோது தாயாரின் தலையில் பேரிடியாய் இறங்கியது அந்தச் செய்கை! கைம்பெண் அவள் எனக் காட்டி, கைம்மைக் கோலத்தை அந்தச் சிறு வயதில் வலியத் திணித்தது உலகம். தாயார் அழுது புரண்டார். சீவி முடித்து சிங்காரப் பின்னலிட்டு பார்த்துப் பழகிய அழகு இனி கனவே என்றானது. தெருக்களில் ஓடியாடிய கால்கள், ஒற்றை அறையில் ஓர் மூலையில் முடங்கிப் போனது. தன் நிலை புரிந்த ஆவுடை கண்ணீரும் கம்பலையுமாய் நாட்களைக் கடத்தி, அந்த நிலையை மனத்தில் ஒருவாறு ஏற்றுக் கொண்டார். கோயிலுக்கும் செல்ல முடியாத துர்பாக்கியவதியானேனே என்று ஏங்கித் தவித்தார் ஆவுடை!
இத்தகைய சூனியச் சூழலில்தான் ஒரு நாள்...
செங்கோட்டை ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. கதிரவன் விழித்தெழும் முன்னே காரியமாற்றக் கிளம்பிவிட்டார்கள் பெண்மணிகள். வாசல் தெளித்து, அழகுக் கோலமிட்டு, வீடுகளின் முன்னே மாவிலைத் தோரணங்கள் கட்டி வீதி எங்கும் அலங்கார மயம்தான்! பெரியவர்கள் குளித்து மடி வஸ்திரங்கள் கட்டிக் கொண்டு பஜனை மடத்தின் வாசலில் கூடினர். மாவிலைக் கொத்தும் மாலைகளும் பூர்ண கும்பமுமாய் பஜனை மடத்தின் திண்ணையில் எல்லாம் தயாராய் வைக்கப் பட்டிருந்தது. காத்திருந்தோர் உள்ளம் எல்லாம் அந்த ஒரே ஒருவரின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தன. வரப்போகிறவர் பெரிய மகானாயிற்றே!
திருவிசநல்லூர் வேங்கடேச ஐயாவாள். கங்கையைத் தன் வீட்டின் கிணற்றிலேயே பொங்க வைத்த மகான். பெரும் ஞானி. தன் திருவடித் தாமரை பதித்து, அந்த மண்ணையும் புனிதமாக்கத் திருவுள்ளம் கொண்டார் போலும். அவர் தரிசனத்துக்காய் ஊரார் காத்திருந்தனர். அவருக்கு என்னென்ன வசதிகளைச் செய்து கொடுப்பதென்று பெரியோர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நேரம் கடந்தது. வயதானவர் ஆயிற்றே... எவ்வளவு தொலைவுக்கு நடந்து வரவேண்டும்.? தென்காசிக்குச் சென்று, குற்றாலம் வழியாக வரப் போவதாய்ச் சொல்லியிருந்தார்களே! கவலை ஆட்கொண்டது அவர்கள் முகங்களில்!
ஒருவழியாய் தொலைவில் ஜால்ராக்களின் சத்தம் கிண்கிணியாய்க் காதில் விழுந்தது. பஜனைப் பாடல்களின் வசீகரம் அவர்களைக் கவர்ந்திழுத்தது. அய்யாவாள் அங்கே எழுந்தருளினார். கால்களில் கட்டிய சதங்கை. ஜில் ஜில் என்ற ஒலியெழுப்பியது. கைகளில் சிப்ளாக் கட்டை. தலைப்பாகையாய்க் கட்டப்பட்ட சிவப்புத் துணி தோள்களில் புரண்டு நீளமாய்ச் சிறகு விரித்தாடியது. தோளில் உஞ்சவிருத்தி செம்பு. சுருதிப் பெட்டி. தம்புரா, டோல்க்கி என இசைக்கருவிகளுடன் சூழ்ந்து நின்றபடி சிலர். "கோவிந்தம் பஜ...” என நாமாவளி சகிதமாய் சுற்றிச் சுற்றிச் சுழன்றாடியபடி கிராமத்துள் புகுந்தார் ஸ்ரீஅய்யாவாள்.
ஓவ்வொரு வீட்டின் முன்னும் சற்று நின்று அந்த வீட்டினர் தரும் உபசாராதிகளை ஏற்றுக் கொண்டு நகர்ந்தார் அய்யாவாள். வாசலில் இட்ட கோலத்தின் மீது மணை வைத்து, ஸ்ரீஅய்யாவாள் அதில் ஏறி நின்றதும் அவரது பாதங்களை நீரால் சுத்தம் செய்து, ஸ்ரீபாத தீர்த்தம் எடுத்துக் கொண்டு, அவரின் உஞ்சவிருத்திச் செம்பில் அரிசி, தான்யங்களை இட்டு நமஸ்கரித்தனர். ஸ்ரீஅய்யாவாள் ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் நின்று சென்றார்.
தெருவின் கடைக்கோடியில் ஒரு வீடு. வாசல் குப்பை கூளம் நிறைந்து, ஊரோடு ஒன்றாகி இல்லாமல் தனித்திருந்தது. அருகேயிருந்த வீட்டின் வாசலில் கோலம் பளிச்சென்றிருக்க, இங்கோ அலங் கோலமாய்க் கிடந்தது வீட்டின் வாசல்! சுற்றிலும் மகிழ்ச்சிக் குரல் ஆரவாரிக்க, இங்கோ வீட்டின் உள்ளிருந்து அழுகைக் குரல்!
உடன் வந்தவர்களோ அந்த வீட்டின் வாசலில் நிற்பதும் தகாதென ஒதுங்கிச் சென்றனர். ஆனால் ஸ்ரீஅய்யாவாளோ அந்த வீட்டின் வாசலில் சற்றே நின்றார். அவரை அங்கே நிற்க வேண்டாம் என்று சொல்ல மற்றவர்களுக்கு தைரியமும் தெம்பும் இல்லை. உற்சாக மிகுதியால் ஸ்ரீஅய்யாவாள் பாடத் தொடங்கிவிட்டார்.
பாட்டின் வேகத்துக்கு ஏற்ப காற்சதங்கைகள் இனிய லயத்தை எழுப்பி ஆவுடையின் மனத்தைக் கொள்ளை கொள்வதாய் இருந்தது. வீட்டின் உள்ளே வெறுமையையும் இருட்டையுமே வாழ்வின் கதியெனக் கொண்டிருந்த ஆவுடைக்கு ஒரு வெளிச்சக் கீற்று தென்பட்டது. அறையை விட்டு ஆவேசமாய் எழுந்தாள். உடனிருந்தோர் தடுத்தனர். திமிறிக் கொண்டு வந்தாள் ஆவுரை. வீட்டின் கதவு படீரெனத் திறந்தது. அடுத்த நொடி, வாசலில் பாடியாடிக் கொண்டிருந்த ஸ்ரீஅய்யாவாளின் காலடியில் விழுந்து கிடந்தாள் ஆவுடை.
பதினாறு வயதுப் பெண். கைம்பெண் கோலத்தில்! அய்யாவாள் தன் பாட்டை நிறுத்தினார். கனிவுடன் ஆவுடையை நோக்கினார். நயன தீட்சை அளிப்பது போல் அவளைத் தேற்றும் விதமாய், "குழந்தாய் வருந்தாதே! பகவான் இருக்கிறார். சந்த்யா காலத்தில் ஆற்றங்கரைக்கு வா” என்று கூறி ஆவுடையின் தலையில் மெதுவாய் வருடினார். ஸ்ரீஅய்யாவாளின் ஸ்பரிச தீட்சை, அந்தக் கணமே ஆவுடை மனத்தில் குருநாதர் அருள் தமக்குக் கிட்டியதாய் எண்ண வைத்தது.
ஆனால்... ஊரார்? கேலிப் பார்வை பார்த்தனர். அதுவரை சுவாமிகள் என்று சுற்றி வந்த கும்பல், வெறுப்பைக் காட்டி ஒதுங்கியது. தெருப் பெண்கள் சிலரைத் தவிர வேறு எவரும் இல்லை. அதன்பிறகு அவருக்கான உபசாரமும் அப்படி இப்படித்தான் இருந்தது. அவரோ எதிலும் மனத்தைச் செலுத்தவில்லை. வழக்கம்போல் பாடிக் கொண்டு மாலை நேரம் ஆற்றங்கரை மண்டபத்தை அடைந்தார்.
வீட்டிலோ ஆவுடைக்குத் தடை போட்டார்கள். ஆற்றங்கரை மண்டபத்துக்குச் செல்வதாவது? குரல்கள் பலவிதம்! தாயார் சமாதானம் சொன்னார். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வேறு வழியின்றி ஒரு பெண்ணை ஆவுடைக்குத் துணையாக இருக்க வைத்து, வீட்டில் உள்ளோர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். ஆவுடை அந்தப் பெண்ணையே நல்ல வார்த்தை சொல்லி உடன் வரச் செய்தாள்.
ஆதவன் தன் கிரணங்களை பொதிகை மலையின் உச்சியில் மறைத்துக் கொண்டு அப்புறம் சென்றான். ஆற்றங்கரை மண்டபத்தின் முன்னே இருள் கவியத் தொடங்கியிருந்தது. ஸ்ரீஅய்யாவாள் சொன்னபடி மண்டபத்தின் ஓரத்தில் நின்றிருந்தாள் ஆவுடை. சந்தியாவந்தனாதிகள் முடித்துக் கரையேறினார் அய்யாவாள். விபூதி ருத்திராட்சாதிகளுடன் அவரது திருமுகம் கண்ட நொடி, ஆவுடை அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கையில் புனித நீர் எடுத்து ஆவுடையின் சிரத்தில் தெளித்த அய்யாவாள்.... “குழந்தாய்! கண்களைத் திற. என்னை குருவாக ஏற்று நான் உனக்கு உபதேசிக்கப் போகும் மந்திரத்தை உயிரெனப் பற்றி உச்சரித்து வா. உனக்கான ஞான வாசற் கதவு திறந்தது. உலகைப் பற்றிக் கவலைப் படாதே! நான் அடிக்கடி வந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன். தெம்புடனிரு” என்றார்.
ஆவுடையின் கண்கள் திறந்தன. ஸ்ரீவேங்கடேசரின் அந்த ஞான உபதேசம், ஆவுடையை ஆத்மானுபூதியில் லயிக்கச் செய்தது. மந்திர ஜபம் மனத்தில் பற்றி, உன்மத்தையாய் ஏக சிந்தையில் லயித்திருந்தாள். அவளின் நிலை கண்டு, ஊரார் அவளை சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தனர். குருதேவர் கட்டளைப்படி, ஆவுடை ஊரில் இருந்து வெளியேறினாள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டாள். நாட்கள் கடந்தன. ஆவுடையின் பக்தியும் பாடல்களும் இதற்குள் பல ஊர்களிலும் புகழ் பெற்றிருந்தது. அது அவளது சொந்த ஊரான செங்கோட்டையையும் எட்டியிருந்தது. ஊரை விட்டு வெளியே சென்ற பின்னர்தான் ஆவுடையின் மகிமை ஊராருக்குத் தெரியவந்தது.
ஒரு நாள் துலாக்காவேரி ஸ்நானத்துக்கு மாயவரத்துக்கு வந்து சேர்ந்தாள் ஆவுடை. துலாக்காவேரி ஸ்நானத்தில் ஆவுடைக்கு பேதாபேதம் அற்று, சர்வ சமரஸ பரிபூர்ண ஸ்வனுபோதம் கிட்டியது. காவேரி நீரில் எச்சில் பட்ட மாவிலை மிதந்து வந்தது. அதை எடுத்து பல்துலக்கினார் ஆவுடையக்காள். சுற்றிலும் ஸ்நானம் செய்து கொண்டிருந்த பெண்கள் அவரை பரிகாசம் செய்தனர். ஆனால் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் புன்சிரிப்புடன் படியேறினார் ஆவுடையக்காள். அங்கே அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஸ்ரீஅய்யாவாள், பீஜாட்சரத்தை ஆவுடையக்காளின் நாக்கில் தர்ப்பையினால் எழுதி, அவரை ஆசீர்வதித்தார். "உனக்கு ஜீவன்முக்தி நிலை ஏற்பட்டு விட்டது. நீ எங்கிருந்தாலும் இனி உன்னை கர்ம பந்தம் அணுகாது. உன் சொந்த ஊருக்கே சென்றிரு” என்று உபதேசித்தார்.
ஆவுடையக்காள் ஊர் திரும்பினார். பழைமை மறந்து புதுமை ஏற்று ஆவுடையக்காளை ஊரார் வரவேற்றனர். மரியாதை செய்தனர். அவரின் அத்வைத ஞானத்தைப் பெற்று அவரை ஏற்றுப் போற்றினர்.
ஆவுடையக்காள் வெகுகாலம் அங்கே வாழ்ந்திருந்தார். பாடல்கள் பல புனைந்தார். அவருடைய அத்வைதப் பாடல்கள் ஊரில் பெண்கள் பலராலும் பாடப் பெற்றது. அங்கே ஒரு சத்சங்கம் முளைத்தது. ஆவுடையக்காளுக்கு சீடர் குழாம் பெருகியது. பாடல்கள் பல அங்கே பிறந்தன. விதவிதமாய் வேதாந்தப் பாடல்கள்.
ஐயா! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழ வேண்டாமோ?
தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே!
அம்மா! ஞானம் வந்த மாத்திரத்தில் தேகம் விழுமானால்
அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?
- என்று கேட்கிறார் பண்டிதன் கவி என்ற பாடலில். இதில், தனது குருநாதரைப் பற்றியும் அவரின் தீட்சை ரகசியத்தையும் கூறுகிறார்.
ஒளியை விளக்க ஓர் ஒளி உண்டோ பெண்ணே!
வெளியாக நான் உனக்கு விளம்பினேன் உண்மை!
விண்ணில் சூரியன் பார்க்க கண்ணே போதாதோ?
விளக்கைக் கொண்டு அதைக் காட்டி விளக்குவார் உண்டோ?
ஒருக்கால் உண்மை சொன்னால் உதிக்குமோ? அறிவு
உபமானம் உரைத்திட்டால் உடனே நான் அறிவேன்~!
ஒப்பிக்க அதற்கு இங்கே உபமானம் இலையே உன்
உணர்வால் அனுபவித்து உணர்ந்து கொள் என்றாள்...!
- இவ்வாறு ஞானக் குறவஞ்சி நாடகத்தில் வெளிப்படுத்துகிறார். இன்னும்,
அத்வைத மெய்ஞான ஆண்டி, வேதாந்த அம்மானை, வேதாந்த ஆச்சே போச்சே, மனம் புத்தி ஸம்வாதம்- அன்னே பின்னே என்னும் வேதாந்த சார பிரத்தியோத்திரக் கும்மி, சூடாலைக் கும்மி, வேதாந்த கும்மி, சூடாலைக் கதை, கோலாட்டப் பாட்டு, வேதாந்த ஞான ரஸ கப்பல், வேதாந்தக் கப்பல், கண்ணிகள் வகைகளில் கிளிக் கண்ணி, குயில் கண்ணி, பராபரக் கண்ணி; ஸ்ரீதட்சிணாமூர்த்தி படனம், அத்வைத ஏலேலோ, வேதாந்தப் பள்ளு, வேதாந்த நொண்டிச் சிந்து, ஞானக் குறவஞ்சி நாடகம், வாலாம்பிகை பந்து, ஸ்ரீவித்தை சோபனம், அனுபோக ரத்னமாலை வேதாந்த வண்டு, அத்வைத தாலாட்டு, தொட்டில் பாட்டு, ஊஞ்சல் என அக்காளின் பாடல்கள் பல நிலைகளில் பல வடிவங்களை எடுத்து விரிவாக நின்றது. பகவத் கீதை வசனம் என்கிற ஸ்ரீபகவத்கீதா ஸாரஸங்கிரஹத்தையும் ஸ்ரீமத் பகவத் கீதை ஸாரம் என்பதையும் செய்தார் ஆவுடையக்காள்.
அத்வைத சித்தாந்தத்தை அழகாக வெளிப்படுத்தும் அக்காளின் கோலாட்டப் பாட்டு இன்றும் பாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, செங்கோட்டை அக்ரஹாரங்களில் உள்ள பெண்மணிகள், குழந்தைகள் ஒரு பசுவும் கன்றுமாய் பொம்மை செய்து, சப்பரத்தில் அதனை எடுத்துவைத்து விழா எடுக்கின்றனர். சப்பரத்தின் முன் கோலாட்டம் ஆடி, ஆவுடையக்காள் பாடல்கள் உள்ளிட்ட பஜனைப் பாடல்கள் பாடி, முளைப்பாரியையும் பசு-கன்று பொம்மையையும் முன்னிரவில் வயல்வெளியில் சென்று கரைத்து விட்டு வருவர். இந்த விழா இன்றும் நடைபெற்று வருகிறது.
ஆவுடையக்காளின் கோலாட்டப் பாட்டில்,
ஆதியில் ஒன்றானாய் கோலே அப்புறம் இரண்டானாய் கோலே
வேதமும் அறியாக் கோலே வேதாந்தக் கோலே!
காடு மேடு எல்லாம் திரிந்தாய் காம வேதை கொண்டு அலைந்தாய்
வீடு அறியாமல் மெலிந்தாய் மெத்தவே நொந்தாய்!
........
போற்றியார் அடிபணிந்து பந்துக்களும் வீடும் விட்டு
கூற்றுவன் அழைக்கும் போது கூட வா ராது!
புருஷன் பெண்டாட்டி பொய்யே புத்திரன் பிதாவும் பொய்யே
பெருமை சிறுமை பொய்யே பிரம்மமே மெய்யே!
ஆகா வழிக்கு அதிதூரம் ஆத்ம அனாத்ம விசாரம்
தொகுத்துப் பார்க்க இது நேரம் தோன்றுமே சாரம்! - என்று வேதாந்த சார விளக்கம் செல்லும்.
***
நாட்கள் வருடங்களாகின. ஓர் ஆடி அமாவாசை நன்னாள். திருக்குற்றால அருவியில் ஸ்நானம் செய்துவிட்டு, மலையின் மீதேறிச் சிறிது தொலைவு சென்று தியானம் செய்யப் போவதாய் சிஷ்யைகளிடம் கூறிச் சென்றார் ஆவுடையக்காள். சென்றவர் சென்றவர்தாம். எங்குத் தேடியும் ஆவுடையக்காள் அதன்பின்னர் தென்படவில்லை. அவரின் உடலும் கிடைக்கவில்லை. இது யாருக்குமே புரிபடாத ரகசியம்தான்!
***
பின்குறிப்பு:
தமிழகத்தில் நமது ஞானப் பரம்பரையில், பட்டினத்தார் போல், காரைக்கால் அம்மையார், தாயுமானவர், வள்ளலார் என சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஞானிகளின் வரிசையில் ஒப்பற்ற இடத்தை வகிப்பவர் செங்கோட்டை ஆவுடையக்காள்.
செங்கோட்டை ஆவுடையக்காள் குறித்து 50 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கோமதி ராஜாங்கம் என்பவர் எழுதி வைத்த குறிப்புகள், ஆவுடையக்காளின் அத்வைதப் பாடல்கள் தொகுக்கப் பட்டு ஞானானந்த நிகேதனின் சுவாமி நித்யானந்தகிரி சுவாமிகளால் நூல் ஆக்கப்பட்டுள்ளது. கோமதி அம்மையார், மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் அக்காள் மகள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் இந்த நூலில் எழுதிய குறிப்புகளின் படி, மகாகவி பாரதி, தன் பாடல்களின் முன்னோடியாக ஆவுடையக்காளையே கொண்டிருந்தார் என்பதுதான். பாரதிக்கு ஆவுடையக்காளின் சரிதத்தை அறிந்து கொள்வதிலும், பாடல்களைப் புடம் போடுவதிலும் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. திருநெல்வேலி ஜில்லாவின் எல்லையான செங்கோட்டையில் தொடங்கி, அக்காளின் பாடல்கள் சுந்தரபாண்டியபுரம், பாவூர், சாம்பவர் வடகரை, கடையம், ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, நாகர்கோயில், வடிவீஸ்வரம், முன்னீர்பள்ளம், முஞ்சிறை என மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் அதிகம் பரவியிருந்தது. அந்தக் காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே தாரகமென இருந்தது. முற்பகல் உணவுக்குப் பின்னர் மதிய நேரம் பத்துப் பதினைந்து பெண்களாகக் கூடி, அக்காளின் பாடல்களைப் பாடி ஆறுதல் அடைவது வழக்கம்.
இவ்வாறு செல்லம்மாள் பாரதி வாழ்ந்த கடையத்தில் ஆவுடையக்காளின் பாடல்கள் பாடக் கேட்டு மனத்தைப் பறி கொடுத்த சுப்பிரமணிய பாரதி, தன் பாடல்களில் அக்காளின் கருத்தையும் கவிச் சொற்களையும் ஆங்காங்கே கையாண்டுள்ளார். ஆவுடையக்காளின் கண்ணி, கும்மி, சிந்து, பள்ளு இவையெல்லாம் பாரதியின் கவி வடிவிலும் தானாய்ப் புகுந்தது. அக்காளைப் போல் பாரதியும் பகவத் கீதை விளக்க வசனம் எழுதி, அக்காளின் கவி வடிவ மறுபதிப்பாய் அமைந்தார். அந்த வகையில், எட்டையபுரம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் முன்னோடியென செங்கோட்டை ஆவுடையக்காளைச் சொல்லலாம்!
-செங்கோட்டை ஸ்ரீராம்
===================================
பாக்ஸ்:
ஞானி ஆவுடையக்காளின் சரிதையில் வரும் குறிப்புகளில் இருந்து... இந்த மண்டபத்தை அடுத்த வீடுகளில்தான் அவர் வாழ்ந்திருக்க வேண்டும். தெருவின் கடைக்கோடி வீட்டில் வாழ்ந்துள்ளார். மண்டபத்தை அடுத்த மரத்தின் அடியில் அவருக்கு ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் ப்ரும்ம உபதேசம் செய்து, ஞானம் அளித்துள்ளார். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதால், இப்போதிருக்கும் எவருக்கும் இதுதான் என்று ஆவுடையக்காள் வாழ்ந்த வீட்டையோ சம்பவங்களையோ உறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆவுடையக்காளை நினைவுகூர தற்போது ஊரில் யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை! அந்தத் தலைமுறை போய்விட்டது.