ஜீதே கா ஜீதே கா... ஹிந்துஸ்தான் ஜீதே கா...
ஏய் இன்னா மன்னாரு... நம்ம தமிழ் கொஞ்சி விளையாடுற வாயில இன்னால்லாமோ உளறிட்டே வாரே... என்ன ஆச்சு உனக்கு?
எல்லாருக்கும் ஜுரம் வந்தா ஏதாவது உளறுவாங்கல்ல... அந்தமாதிரி இந்தியாவுல பெரும்பாலானவங்களுக்கு வந்த ஜுரத்துல எல்லாருமே சொல்லி வச்சாமாதிரி உளறின உளறல்னு வெச்சிக்கயேன்...
சரி இந்த ஜுரம் சரியாயிடிச்சா..? எப்போ குணமாகும்..?
அதுக்குள்ள எப்படி? இன்னும் சனிக்கிழமைவரை பொறுத்திருக்கணும். அப்புறமாத்தான் சரியாகும்.
அதுக்குப் பிறகு சரியாயிடுமா?
அதான கேக்கக்கூடாது... அதுக்குப் பிறகு ஐபிஎல் அப்படின்னு ஒரு ஜுரம் பிடிச்சுக்கும்... இது அப்போ அப்போ வந்துட்டுப் போற ஜுரம்... இதையெல்லாம் நீ சீரியஸா எடுத்துக்கக்கூடாது ஆமாம்..!
சரி சரி... இந்த ஜுரத்துக்கு மருந்து மாதிரி ஏதாவது...?
ஓ இந்தியா பாகிஸ்தான் மோதின அந்த மேட்ச் பாத்திருந்தா நீ இப்படி கேட்டிருக்க மாட்டே...
ஏன் அப்படிச் சொல்ற..?
அந்த விறுவிறுப்பு... அந்த ஆக்ரோஷம் எல்லாம்தான்!
என்ன சச்சினுக்கு வரிசையா கேட்ச் மிஸ் செஞ்சாங்களே... அதைத்தான சொல்றே...
அது அவங்களுக்கு அந்த அளவுக்கு பதற்றம்... நம்ம விட டென்ஷன் அவங்களுக்கு ரொம்ப அதிகம். அதைத்தான் நிறைய பேரு சொன்னாங்க... அவங்க நாட்டு அதிபர், முக்கிய அதிகாரிகள் நேர்லே மேட்ச் பாக்க வந்துட்டாங்க... அப்புறம் பாகிஸ்தான் முழுக்க வெறி பிடித்த ரசிகர்கள் நெறயப் பேரு எப்படான்னு காத்துக்கிட்டிருக்காங்க... இந்த ஒரு சூழ்நிலையில அவங்க எப்படி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்க முடியும்னு சொல்லு பாப்போம்....
சரிதான் ஆனா... பாகிஸ்தானோட பந்துவீச்சும் பீல்டிங் செட்டப்பும் ரொம்ப மிரட்டிச்சுன்னுதான் சொல்லணும். ஏன்னா சேவாக் அதிரடி காட்டி ரன்ரேட்டை ஏகத்துக்கும் உயர்த்திட்டாரு. அவரு அவுட் ஆனதுக்குப் பிறகு ஒரு கட்டத்துல ரன் வருமான்னு தோணிடுச்சு. டெண்டுல்கர் வேற கேட்ச் கேட்சா கொடுக்க, ஏதோ ஒண்ணுரெண்டு தவறிடுச்சு... ஆனா, இந்த காம்பிர் ஏன் இப்படி அவசரப்பட்டு ரன் அவுட் ஆகுறாருன்னு தெரியலை. ஒன்னு ரன் அவுட் ஆகுறது, இல்ல... ஏதோ சிக்ஸர் அடிக்கிறமாதிரி ஏறிவந்து, குச்சியவுட்டுட்டு நிக்கிறது... ஸ்டம்பிங் ஆவுறதுன்னு ஒரு ஸ்டைல கடைப்பிடிக்கிறாரு... அவரை எப்படி திருத்தப் போறாங்களோ..? இதை விட்டுட்டுப் பார்த்தா பாகிஸ்தான் ரொம்பவே ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியதுன்னுதான் சொல்லணும். எப்படியும் 300 ரன்களுக்கு மேல போயிடும்னு இருந்த நேரத்துல 260 ரன்னுக்குள்ள நிறுத்தினாங்களே... அது நிச்சயமா நல்ல பீல்டிங், பவுலிங்காலதான்!
ஆனா... இதுல ஒன்ன சொல்ல மறந்துட்ட... சுரேஷ் ரெய்னா...
அட ஆமாம்பா... ஆஸ்திரேலியாவோட ஆன மேட்சிலயும் சரி... இந்த மேட்சிலயும் சரி... பொறுப்பா கடைசி வரை நின்னு நல்ல பந்து வந்தா தடுத்து, கொஞ்சம் மோசமான பந்துன்னா பவுண்டரி அடிச்சின்னு... ரொம்ப சரியான வேலை அது... என்னதான் சச்சின் சதம் அடிக்காம போனாலும், 85 ரன் எடுத்து கொடுத்தாரே அதுவே பெரிசுதான்...
ஆனா ஒரு விஷயத்தை கேட்டியா? சில ரசிகர்கள் வெளிப்படையாவே சொல்றாங்க... நம்ம டீமுக்கு ஒரு ராசி இருக்காம். சச்சின் செஞ்சுரி போட்டு நம்ம டீம் ரன் அதிகமா எடுத்தாலும், அதுல இந்தியா தோத்துடுமாம். அப்படி ஒரு ராசி... அதனால, சச்சின் 85 ரன் எடுத்து அவுட் ஆன உடனே ராசி ஒர்க் அவுட் ஆயிடிச்சாம். இன்னிக்கு நம்ம டீம்தான் ஜெயிப்பாங்கன்னு பெட் கட்ட ஆரமிச்சிட்டாங்க...
ஏ... என்னப்பா நீ... இப்படி எல்லாம் உளறாத... ஏதோ ஒன்னு ரெண்டு மேட்சுல அப்படி நடந்திருக்கலாம்.. அதுக்காக ராசி கீசின்னு கிறுக்குத்தனமா ஏதாவது பொய் பேசிட்டுத் திரியாதே... கிரிக்கெட் ஒரு கேம். அதுல இந்த ராசி எல்லாம் ஒர்க்-அவுட் ஆகாது தெரிஞ்சுக்க...
சரி சரி.. விடு. ஆனா, மேட்ச் ஆரமிக்கிறதுக்கு முன்னாடி தோனி சொன்னத கவனிச்சியா... இந்த ஆட்டத்துல வெற்றி தோல்வி ரெண்டு பக்கத்துக்கும் இருக்கும். ஆனா ரசிகர்கள் அதை பொறுமையா ஒரு விளையாட்டு உணர்வோட எடுத்துக்கணும்ன்னு முன் ஜாக்கிரதையா சொல்லிட்டாரு... நல்ல வேளை!
ஆனா இந்த மிஸ்பா உல்ஹக் மேட்டர்ல இவ்ளோதூரம் எல்லாரும் பயந்துபோய் கிடந்தாங்களே!
அட நீ வேறப்பா.. அவரு என்னவோ பேட்டிங் பவர்ப்ளேயிலதான் நல்லா விளாசுவாராம்... அதுனால அந்த கடைசி கட்ட ஓவர்கள்ல அவரு டென்ஷனை ஏத்துவாருன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டிருந்தாங்க... நல்ல வேளை லீக் மேட்சுல இங்கிலாந்தோட ஆடின ஆட்டத்தை மாதிரி ஓவரைப் போடாம கொஞ்சம் நல்லா பவுலிங் செஞ்சாங்க... இல்லைன்னா ஆட்டம் திசை திரும்பியிருக்கும்...
இதுல ஒரு விஷயத்தை பாராட்டணும். நெருக்கடியான கட்டத்துல அப்ரிதி கொடுத்த ஒரு கேட்ச்சை பிடிச்சாரு பாரு நெஹ்ரா... மக்கள் எல்லாம் ஹோன்னு கத்த ஆரமிச்சிட்டாங்க. ஆனா, நெஹ்ரா அந்தப் பந்து தன் விரல்கள்ல பட்டு தரையில பட்டுடிச்சின்னும், அதுனால அது கேட்ச் இல்லைன்னும் வெளிப்படையா சொன்னாரு இல்லையா?! அதை ரொம்பவே பாராட்டணும்...
கரெக்ட்தான். எப்படியும் இன்னிக்கி வளர்ந்திருக்கர டெக்னாலஜியில எப்படியும் தெரிஞ்சிடப் போகுது. இருந்தாலும் தானா முன்வந்து சொன்னது பெரிய விஷயம்தான்!
சரி சரி.. எப்படியோ!? இரு நாட்டு உறவுன்னு ஒரு புறம்... அதிகாரிகள், அதிபர்னு பேச்சுவார்த்தை மறுபுறம்னு ஒரு கிரிக்கெட் மேட்ச் என்னல்லாம் விளையாடிட்டுது பாரு...
இரு இரு... இதே மாதிரி இன்னொரு விளையாட்டும் இருக்கு. அதுலயும் ராஜபக்ஷே, பிரதீபா பாட்டில்னு இரு நாட்டு ஜனாதிபதிகளும் வந்து ஒரு விளையாட்டு விளையாடப் போறாங்க...
என்னவோப்பா... ஒரு கிரிக்கெட் மேட்சுக்கு இப்படி எல்லாம் அரசியல் பூந்து விளையாட வேண்டாம்... சரி சரி... இப்போ இறுதிப் போட்டியில யாரு ஜெயிப்பாங்கன்னு சொல்லு...
ம்ம்... சனிக்கிழமை வேற... ஆனா என் ஆசை என்னான்னா... 96 உலகக்கோப்பை போட்டி ஆட்டம்... அரை இறுதிதான். இந்தியா இலங்கை மேட்ச். அப்போ கல்கத்தா மைதானத்துல கிட்டத்தட்ட லட்சம் பேரு முன்னாடி... சச்சின் அசார்னு எல்லாம் ஒருத்தர் பின் ஒருத்தரா போக... கடைசில வினோத் காம்ப்ளி கண்கள்ல நீர் கோக்க அழுதுக்கிட்டே அவுட் ஆகிட்டு போனாரு பாரு... மக்கள் கல்லெடுத்து அடிச்சி, நீங்களாவே வின் பண்ணிக்கிங்கடான்னு இலங்கைக்கு ரைட் கொடுத்து மேட்ச அத்தோட நிறுத்திட்டு போனாங்களே.... அதுக்கு பதிலடி கொடுக்கறா மாதிரி 2011ல இந்தப் போட்டி அமையுமான்னு ரசிகர்கள்லாம் காத்துக்கிட்டிருக்காங்கப்பா...
சரி சரி... தோனி ஏற்கெனவே எதிர்பார்ப்பைப் ப்பூர்த்தி செய்வோம்னு சொல்லியிருக்காரு... அதுனால அவரு பூர்த்தி செய்வாருன்னு நம்புவோமாக!
சர்ரி சர்ரி.. அப்படியே நடக்கட்டும்... போய் மேட்ச் பாத்துட்டு பிறகு உன்னை மீட் பண்றேன். வரட்டா...