சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

செவ்வாய், மார்ச் 23, 2010

செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)

* © senkottai sriram
* இது செங்கோட்டை மண்ணின் அனுபவப் பதிவு

செங்கோட்டை மண் ஈந்த 
நாடக மேடைப் புரட்சியாளர்...
செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)

1931இல் இங்கு நான்கு பேர் கூடி நின்று பேசக்கூடாது என்ற நிலை இருந்த காலத்தில், நாடக மேடையில் அரிச்சந்திரனாக நடித்த ராஜபார்ட் நடிகன், ""தேர்க்கொடி கப்பல் தோணுதே!'' எனப் பாடியபடி மேடைக்கு வந்து, தான் பேசும் வசனத்தில் சுதந்திரத்தின் தேவையையும் சேர்த்துப் பேசியதுண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை வழங்கப்படுவதற்கு முன்பே தமிழ் நாடக மேடையில் சமுதாயத்தின் அடித்தட்டிலிருந்த விசுவநாத தாசும் பிறப்பால் மேல் தட்டிலிருந்த அனந்த நாராயணனும் நாடக நடிகர்கள் எனும் முத்திரையுடன் ஒரே பந்தியில் அமர்ந்து விட்டனர் & நாட்டின் விடுதலை பற்றி எழுதுவதற்காக நம் இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் பேனாக்களை எடுப்பதற்கு முன்பாகவே, நம் நாடக நடிகர்கள் நாடக மேடைகளில் விடுதலைக்குத் தீ மூட்டி விட்டார்கள்.

அக்காலத்தில் நாடக நடிகன் பட்ட அவமானங்களுக்குக் கணக்கேயில்லை. ஒதுக்கித் தள்ளப்பட்ட நாடக நடிகன்தான் அன்று விடுதலைப் பாடல்களை ஆவேசத்துடன் மேடையில் பாடினான். நூறு சொற்பொழிவுகளால் செய்ய முடியாத ஒன்றை அன்றைய ஒரு நாடகம் செய்தது!

இப்படி தேசீயவுணர்வு மக்களிடையே தலைதூக்கிய வேளையில்தான் கிட்டப்பா நாடக மேடை ஏறினார். கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள், நவாப். ராஜமாணிக்கம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சஹஸ்ரநாமம், மனோகர் போன்றவர்களெல்லாம் பல்வேறு வழிகளில் தமிழ் நாடக மேடையை வளப்படுத்தியவர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் அயன் ராஜபார்ட் நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கலையுலகில் தீண்டத் தகாததாகக் கருதப் பெற்ற நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து, அன்றைய கர்நாடக சங்கீதவுலகின் பெரும் புள்ளிகளைக்கூட சங்கீதம் கேட்பதற்காக நாடகக் கொட்டகைக்கு இழுத்து வந்த பெருமைக்குரியவர் எஸ்.ஜி. கிட்டப்பா என அழைக்கப்பெற்ற செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா.

கிட்டப்பா 1906 ஆகஸ்டு 25இல் செங்கோட்டையில் பிறந்தார். தந்தை கங்காதரய்யர். தாய் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலக்ஷ்மி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராமகிருஷ்ணன். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். வரலாற்றில் நிலைத்த பெயர் கிட்டப்பா.

தாங்க முடியாத வறுமை காரணமாக இவரது சகோதரர்கள் இருவர், மாதம் 18 ரூபாய் சம்பளத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர். அன்று ""நாடகவுலகின் தந்தை'' எனப் பாராட்டப் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

இவரது குழுவில் பயிற்சி பெற்ற சுப்பைய்யரும் செல்லப்பையரும் பிற்காலத்தில் ராஜபார்ட் வேடங்களிலும் பெண் வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றனர். இந்த நாடகக் குழுவினர் 1912 இல் மதுரையில் ஒரு நாடகம் நடத்தினர். அதில்தான் கிட்டப்பா தம் 6வது வயதில் முதன்முதலாக மேடையேறி ஒரு பாட்டுப் பாடி மக்களைக் கவர்ந்தார். அதன்பின் நாடகம் தொடங்கியதும் சபையினர்க்கு வணக்கம் கூறும் பாடலைப் பாடும் பாலபார்ட்டாக அறிமுகமானார். பின் சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

1919 இல் கிட்டப்பாவும் சகோதரர்களும் கன்னையா நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர். கன்னையா கம்பெனி அரங்கேற்றிய நாடகங்களில் தசாவதாரம் இசையிலும் நடிப்பிலும் காட்சி ஜோடனைகளிலும் பெரும் புகழினைப் பெற்றது. அதில் மோகினியாகவும் பின் ராமாவதாரத்தில் பரதனாகவும் தோன்றி கிட்டப்பா அற்புதமாகப் பாடி நடித்தார். ""காயாத கானகத்தே'', ""கோடையிலே இளைப்பாற்றி'', ""எவரனி'' போன்ற பாடல்கள் கிட்டப்பா பாடியதனால் பிரபலமாயின. ஐந்து அல்லது ஆறு கட்டைகளில் எவ்விதச் சிரமமுமின்றிப் பாடும் ஆற்றல் பெற்றவர்.

அவருக்குப் பெண் கொடுக்கப் பலர் முன் வந்தனர். இருப்பினும் அவரது பெற்றோர்கள் முடிவு செய்த, திருநெல்வேலி விசுவநாதய்யரின் மகள் கிட்டம்மாளை 24.6.1924இல் திருமணம் செய்து கொண்டார்.

1925 இல் கிட்டப்பாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் இலங்கையிலிருந்து நாடகங்களில் நடிக்க அழைப்பு வந்தது. நாடக ஏஜண்ட் சிங்கம் அய்யங்கார் கிட்டப்பாவை இலங்கைக்கு அழைத்ததே அங்கு சுந்தராம்பாளுடன் கிட்டப்பாவை நடிக்க வைப்பதற்காகத்தான்!

""இலங்கையில் சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது. இது தெரியாமல் அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்'' எனச் சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர். சிலர் சுந்தராம்பாளிடம், ""கிட்டப்பாவிற்கு எதிரே நின்று பாடி நீ மீள முடியுமா?'' எனப் பயமுறுத்தினர். ஆனால் இவற்றையெல்லாம் கேட்டு அவ்விருவருமே அஞ்சி பின்வாங்கி விடவில்லை.

""ராஜபார்ட் கிட்டப்பா ஸ்திரீபார்ட் சுந்தராம்பாள்'' என கொழும்பு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது.

1926 மார்ச் மாதத்தில் கிட்டப்பா & சுந்தராம்பாள் நடித்த வள்ளி திருமணம் நாடகம் கொழும்பில் நடந்தது. ""மோட்சமு கலதா'' எனும் பாடலை கிட்டப்பா தமக்கேயுரிய பாணியில் அற்புதமாகப் பாடினார். சுந்தராம்பாளும் அதற்கு ஈடு கொடுத்து தம் இன்னிசையால் அவையோரை மயக்கினார். இருவருமே கொழும்பு தமிழர்களின் பாராட்டுரைகளில் மூழ்கித் திளைத்தனர். அவ்விருவரது வாழ்விலும் இந்நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

மீண்டும் இவ்விருவரும் 1927 இல் காரைக்குடியில் நடந்த வள்ளி திருமணம் நாடகத்தில் இணைந்து நடித்தனர். அதில் கிட்டப்பா வேலன் & வேடன் & விருத்தன். சுந்தராம்பாள் வள்ளி. அதே நாடகம் அதே இடத்தில் அடுத்த வாரம் நடக்கும் போது சுந்தராம்பாள் வேடன் & வேலன் & விருத்தன். கிட்டப்பா வள்ளி. நந்தனாரிலும் இதே பாணிதான். இருவரும் நந்தனாரும் வேதியருமாக மாறி மாறி நடிப்பார்கள். அதன்பின் அவ்விருவரும் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தனர். அன்றைய நாளேடுகள் இவ்விருவரின் நடிப்பையும் பாடும் திறனையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின.

இவ்விருவரும் தொடர்ந்து நடித்த கோவலன், ஞான சவுந்தரி போன்ற நாடகங்கள் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்தன. இவர்களிருவரும் தனித்தனியே பாடி வெளிவந்த இசைத் தட்டுகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தன.

காலப்போக்கில் கலையுலகில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் இணைந்து வாழ இருவரும் விரும்பினர். இரு வீட்டாருக்கும் இதில் விருப்பமில்லை. இருப்பினும் இறுதியில் காதலே வென்றது. கிட்டப்பா ஏற்கனவே திருமணமானவரென்பது சுந்தராம்பாளுக்கு நன்கு தெரியும். ஆயினும் ""உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்'' என கிட்டப்பா அளித்த வாக்குறுதியினடிப்படையில் சுந்தராம்பாள் அத் திருமணத்துக்கு இசைந்தார். திருமணம் மாயவரம் ஆனந்தத் தாண்டவர் ஹாலில் வைத்து எளிய முறையில் நடந்தது.

இத் திருமணம் பற்றி பிற்காலத்தில் சுந்தராம்பாள் கூறியது... ""அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்!''

திருமணத்துக்குப் பின் கிட்டப்பா & சுந்தராம்பாள் இருவரும் சேர்ந்து ஸ்ரீ கானசபா என ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கித் தமிழ்நாடு முழுவதும் சுற்றிய பின் ரங்கூன் வரை சென்று பல நாடகங்களை நடத்திப் பெரும் புகழுடன் திரும்பினர்.

நாடகக் கொட்டகைக்கு வெளியேதான் அவர்களிருவரும் கணவனும் மனைவியும் & மேடை ஏறிவிட்டால் கதையே வேறு. கடுமையாக மோதிக் கொள்வார்கள். கேலியும் கிண்டலும்தான் பறக்கும்.

ஒருமுறை சத்யபாமாவாக மேடையில் தோன்றிய சுந்தராம்பாளிடம் கிருஷ்ண பரமாத்மாவாக வந்த கிட்டப்பா வேடிக்கையாக, ""என்ன பாமா! உனக்கு எந்த நகையை எங்கு அணிய வேண்டுமென்று கூடத் தெரியவில்லையே?'' என்றார். இது நாடகத்தில் இல்லாத வசனம். விடுவாரா சுந்தராம்பாள்? ""என்ன பரமாத்மா! உங்களுக்குப் பெண்கள் அணியும் நகைகள் பற்றி ரொம்பத் தெரியுமோ? தெரியாத விஷயத்தில் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கணும்?'' எனத் திருப்பித் தாக்கினார். உடனே சற்றும் சளைக்காமல் கிருஷ்ண பரமாத்மாவாகிய கிட்டப்பா, ""அட பைத்தியமே! நான் பிறக்கும் முன்பே என் தாய் யசோதை ஆண் நகைகளில் ஒரு செட்டும் பெண் நகைகளில் ஒரு செட்டும் பண்ணி வைத்திருந்தாள். அதனால் சிறு வயதிலேயே எனக்கு அவ்விரண்டு செட் நகைகளையும் அடிக்கடி சூட்டி அழகு பார்ப்பாள். அதனால் எனக்கு இந்த விஷயத்தில் நல்ல அனுபவமுண்டு. என்னவோ எனக்கு ஒன்றும் தெரியாது என்பதைப் போல பேசுகிறாய்'' என சமயோசிதமாகக் கூறிய பதிலைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது. நேரில் கண்டு ரசித்த ஆக்கூர் அனந்தாச்சாரி கூறிய செய்தி இது.

1921 லிருந்தே கிட்டப்பா தேசீய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அதற்கு அடையாளமாக கதர் உடுத்தத் தொடங்கினார். 1921 இல் திலகரின் நிதிக்காகவும் 1923 இல் மதுரையில் கதர் நிதிக்காகவும் 1924 இல் திருநெல்வேலியில் தேச பந்து தாசிடம் கட்சிக்காகவும் 1930 சென்னை உப்பு சத்தியாக்கிரகத்துக்காகவும் அவர் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். உப்பு சத்தியாக்கிரகத்துக்காக அவர் தம் பேனாவை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் ஏலம் விட அக்காலத்திலேயே அது 50 ரூபாய்க்கு ஏலம் போனது. அவர் நடித்த ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் காந்தி குல்லாயுடன் காந்திஜிக்கு பிரியமான ""ரகுபதி ராகவ ராஜாராம்'' பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

விதி விளையாடத் தொடங்கியது.

"கிருஷ்ணலீலா நாடகத்தைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறியும் கேட்காமல் சுந்தராம்பாள் அந்த நாடகத்தைக் காணச் சென்றதால் கிட்டப்பா கோபித்துக் கொண்டு சென்று விட்டார்'' என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. இருவருக்குமிடையே கருத்து வேற்றுமைகள் மெல்ல மெல்ல தலைதூக்கின. இடைவெளி அதிகமாயிற்று.

எதிர்பாராத சில சூழல்கள், கிட்டப்பாவிற்கு ஏற்பட்ட சில தவறான நட்புகள், சில புதிய பழக்கவழக்கங்கள், இருதரப்பிலும் ஏற்பட்ட சில வீண் பிடிவாதங்கள் போன்றவை ஒன்று சேர்ந்து அவர்களிருவரையும் பிரித்து விட்டது.

1926 இல் கிட்டப்பாவின் தாயார் மறைந்தார். 1927 இல் தமையனாரும் தாயாரைப் பின் தொடர்ந்தார். 1928 இல் தன் ஒரே குழந்தையைப் பறி கொடுத்தார். அவருக்காகவே வாழ்கின்ற சுந்தராம்பாளும் அருகில் இல்லை. அடி மேல் அடி! இவ்வாறு நாடக மேடையில் ஈடு இணையற்ற பாடகராக, அயன் ராஜபார்ட் நடிகராகத் தளராது நின்று செயலாற்றிய அம்மாபெரும் நடிகர் வாழ்க்கைப் போராட்டத்தில் தளர்ந்து நின்றார். மனிதர்கள் தோற்ற இடத்தில் விதி வென்றது.

1932ஆம் ஆண்டு இறுதியில் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் கிட்டப்பா செங்கோட்டையில் தங்கியிருந்த போது நடந்த நிகழ்ச்சியொன்றை நேரில் கண்டு வியந்த திரு. ஏ.எஸ். நாராயணன் இந்தச் செய்தியைச் சொன்னார். இவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருபவர். (வயது 98ஐக் கடந்தவர். சென்னை மந்தைவெளியில் வசித்துவருகிறார்.)

""நடராஜர் கோயில் இருக்கின்ற ஊர்களில் மார்கழி திருவாதிரையன்று சுவாமிக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அதில் எங்கள் ஊரும் ஒன்று.

""1929 & 1933களில் கிட்டப்பா வருடந்தோறும் தனி சிரத்தை எடுத்து நாதசுர வித்துவான்களையெல்லாம் வரவழைத்து உத்ஸவத்தைச் சிறப்பிப்பது வழக்கம். வழக்கம் போல் 1932 உத்சவத்தன்றும் ஊர்வலம் வந்தது. பச்சை சாத்தி சப்பரம் ஊர்வலமாகச் சென்று மத்தியானம் ஒரு மணிக்கு கோவிலை அடைந்தது. கிட்டப்பாவும் இருந்தார். அந்த வேளையில் கிட்டப்பா பாட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தோம். மறு நிமிடம் பாடத் தொடங்கினார்.

""முதலில் ""பட முடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனும் விருத்தமும், தொடர்ந்து ""மார்கழி மாதம் திருவாதிரை நாள் ""பாடலும் பாடி முடிந்ததும் நாடக ஸ்டேஜில் விழுவதுபோல் சுவாமி முன் வீழ்ந்தார். ஒரே ஆஹாகாரம்! எங்களுக்கெல்லாம் சிதம்பரம் நடராஜப் பெருமாளின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உணர்வே ஏற்பட்டது'' & என்றார் நாராயணன்.

இறைவனின் சன்னிதானத்தில் நின்று கொண்டு ""ஐயனே! படமுடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனக் கதறினாரென்றால் அது கடந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் உள்ளக் குமுறலாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. அனேகமாக அதுதான் செங்கோட்டையில் அவர் பங்கு கொண்ட கடைசி நிகழ்ச்சி.

1933 மார்ச். கிட்டப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று. சென்னையில் டாக்டர் பி. ராமராவிடம் சிகிச்சை மேற்கொண்டார். அதன்மூலம் குடல் வெந்திருப்பதும் ஈரல் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. மயிலாப்பூரில் தனி வீடெடுத்துத் தங்கி சிகிச்சை பெற்றார். என்ன தோன்றியதோ... யாரிடமும் கூறாமல் திடீரெனப் புறப்பட்டு செங்கோட்டைக்கு வந்து விட்டார். சிறிது காலம் திருநெல்வேலியில் மாமனார் வீட்டிலும் அதன்பின் சந்திர விலாஸ் மாடி அறையிலும் தங்கினார்.

1933 ஆகஸ்டு 25. அவருக்கு 27 வயது நிறைவு பெறும் நாள். அதன் நினைவாகத் தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் திருநெல்வேலி இந்து கல்லூரிக்காக இலவசமாக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்தார்.

செப்டம்பரில் திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையில் மயங்கி வீழ்ந்தார். அப்பொழுது அருகில் சுந்தராம்பாள் இல்லை. அன்று அவருடன் நடித்தவர் பிற்காலத்தில் திரையுலக நடிகையாக விளங்கிய M.கு. விஜயாள்.

அக்டோபரில் திருமங்கலத்தில் இரண்டு இலவச நாடகங்களை நடத்திக் கொடுத்தார். அதோடு அவரது நாடக வாழ்வின் இறுதித் திரைச் சீலையும் வீழ்ந்தது!

கடுமையான வயிற்றுவலி.  டாக்டர் அனந்த நாராயணன் சிகிச்சையளித்தார். சிறிது நிவாரணம் கிடைத்தது. சீரண சக்தியை இழந்து அவதிப்பட்டார்.

1933 டிசம்பர் 2, சனிக்கிழமை பகல் 12 மணி. மீண்டும் வலி. எந்த சிகிச்சைக்கும் அது கட்டுப்படவில்லை. 28 வயதுக்குள் தம் கணக்கை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டு விட்டார்.

அந்த தினம் &
சங்கீத தேவதை வெள்ளாடை உடுத்திய தினம்! தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள நாடக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று குமுறி அழுதார்கள்.

அவர் மறைந்தபோது அவரது இரு மனைவியரும் அருகிலில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

கிட்டப்பா இறந்தபோது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு 25 வயது.

அன்றுமுதல் துறவுக்கோலம்தான்! உடம்பில் வெள்ளாடை. நெற்றியில் வெண்ணீறு. கழுத்தில் துளசி மணிமாலை. உதட்டில் முருகனின் திருநாமம். தம் 25வது வயதிலேயே காலம் அவரைத் துறவியாக்கி விட்டது. அன்றுமுதல் அவர் பால் அருந்துவதில்லை. சோடா குடிப்பதில்லை. சத்துணவு ஏதுமில்லை. நகை அணிவதில்லை. ஆண்களுடன் நடித்ததில்லை. அமாவாசை தோறும் காவிரியில் குளிக்கத் தவறியதில்லை. கலையுலகம் கண்டிராத மிகப்பெரிய சாதனை!

கிட்டப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சுந்தராம்பாள் செங்கோட்டையில் அன்னதானம் அளித்தார்.

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து நடித்த பல நாடகங்களும் இன்பியல் நாடகங்களாகவே இருந்த போதிலும் அவர்கள் வாழ்வு மட்டும் துன்பியல் நாடகமாகவே முடிந்தது!

""வீட்டில் அவர் ஒரு நாளும் சாதகம் செய்ததில்லை. ஜென்மாந்திர சாதகம் அவருக்கு. இனி இந்த லோகத்தில் அந்த மாதிரி சாரீரம் யாருக்கும் வராது'' என்பார் சுந்தராம்பாள்.

நாடக மேடையில் அவர் ஒரு பாட்டைப் பாடியபின் யாராவது ""ஒன்ஸ்மோர்'' கேட்டால் கிட்டப்பா பாட மாட்டார். அது அவர் இயல்பு. ஆனால் சுந்தராம்பாள் பாடுவார். அப்பாடல் டூயட்டாக இருந்தால் கிட்டப்பாவும் பாடித் தானே ஆக வேண்டும். எனவே வேறு வழியின்றிப் பாடுவார். பாடியபின் உள்ளே சென்றதும் சுந்தராம்பாளைத் திட்டுவார். இவ்வாறெல்லாம் இருந்தாலும், சுந்தராம்பாள் சிறிது உடல் நலமின்றி படுத்திருந்தால் அவரருகில் உட்கார்ந்து கொண்டு, ""சுந்தரம்! நீ என்னை விட்டுப் போய் விடுவாயோ?'' எனக் கண் கலங்குவார். அவர்களுடைய சங்கீதமும் தெய்வீகம். காதலும் தெய்வீகம்!

கிட்டப்பாவுக்கு 4 கட்டை சுருதி. சில வேளைகளில் 5 கட்டையிலும் ஏன் 6 கட்டை சுருதியிலும் அனாயாசமாகப் பாடுவார். அதே வேளையில் சுந்தராம்பாளின் மத்திம சுருதிக்கும் பாடுவார். சங்கீத வித்துவான்களுக்குத்தான் அந்த நுட்பம் புரியும். திருச்சி கோவிந்தசாமி பிள்ளை, காஞ்சீபுரம் நாயனாபிள்ளை, மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், அரியக்குடி ராமானுஜய்யங்கார், திருவாவடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை போன்ற வித்துவான்களையெல்லாம் அனேகமாக கிட்டப்பா நடிக்கும் நாடக அரங்கின் முதல் வரிசையில் காணலாம். அவர்கள் வருவது நாடகம் பார்ப்பதற்காக அல்ல, கிட்டப்பாவின் வியக்க வைக்கும் அமர கானத்தைக் கேட்பதற்காக!

ஒருமுறை நாடகத்தில் கிட்டப்பாவின் சங்கீதத்தைக் கேட்ட ஒருவர், ""நல்லவேளை! ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகக் கொட்டகைக்குள் நுழையாமல் சங்கீத மேடைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ எங்கள் கடையைக் கட்டியிருப்போம்!'' என்று வெளிப்படையாகவே கூறினார். இப்படிக் கூறியவர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்.

முதன்முதலில் ""எவரனி'' எனும் கீர்த்தனையை இசைத் தட்டில் பதிவு செய்தவர் இதே ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்தான். பின்னர் எதிர்பாராத விதமாக கிட்டப்பா பாடிய ""எவரனியை'' அவர் கேட்டிருக்கிறார். உடனே தாம் பாடியதற்காகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்ததோடு, தாம் பாடிய ""எவரனி'' இசைத் தட்டு வெளிவராமலும் தடுத்து விட்டார். கிட்டப்பாவின் ""எவரனி'' முத்தையா பாகவதரை அந்த அளவுக்குக் கவர்ந்திருந்தது.

வேறு யாராவது ஒருவர் பாடிய பாடலை ஒருமுறை கேட்டாலே போதும், அடுத்த விநாடியில் அதனை அப்படியே திரும்பப் பாடும் திறனைப் பெற்றிருந்தார் கிட்டப்பா. ஒருமுறை பியாரேசாகேப் பாடிய கமாஸ்ராகப் பாடலொன்றை அவர் கேட்டார். அன்றைய இரவு நாடகத்தில் அதே பாணியிலேயே அப்பாடலைப் பாடியதைக் கேட்ட பியாரே சாஹேப் கிட்டப்பாவை பாராட்டியதோடு ஒரு தங்கச் செயினையும் பரிசாக அளித்தார்.

1924 இல் வடநாட்டு இசை மேதை பண்டித விஷ்ணு திகம்பரர் சென்னையில் தங்கியிருந்த பொழுது கிட்டப்பா வின் பேகடா  ராக ஆலாபனையைக் கேட்டுக் கண்ணீர் மல்க மெய்மறந்து நின்றிருக்கிறார். கிட்டப்பாவின் தெய்வீக இசை ஞானத்துக்குச் சான்று பகர இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். இந்துஸ்தானி பாடகர் புரபசர் கணேஷ் பிரசாதும் அமெரிக்க இசை விற்பன்னர் ஈச்சிம் என்பவரும் கிட்டப்பாவின் இசையில் மயங்கியவர்களுள் சிலர். இவ்வாறு நாடக மேடையில் தூய கர்நாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமை கிட்டப்பாவுக்கு உண்டு. அவருடைய ""கோடையிலே இளைப்பாற்றி'' எனும் வள்ளலாரின் விருத்தமும் ""காயாத கானகத்தே'' எனும் வள்ளி நாடகப் பாடலும் ""எவரனி'' எனும் கீர்த்தனையும் சாகாவரம் பெற்றவையாக இன்றும் நம் காதுகளில் ஒலிக்கின்றன.

இவ்வாறு சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த நாடக நடிகராகவும் ஒப்புயர்வற்ற சங்கீத மேதையாகவும் அப்பழுக்கற்ற தேசீய வாதியாகவும் திகழ்ந்தவர் அமரர் எஸ்.ஜி. கிட்டப்பா.

தாம் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்த அவருக்கு, இங்கு நினைவில்லமோ மணிமண்டபமோ எதுவும் கிடையாது. தற்போது அவர் அளித்த இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது ஒரு வாசக சாலை (ஸ்ரீமூலம் திருநாள் வாசகசாலை). அதிலாவது, அவருடைய பழைய புகைப்படங்களோ, இசைத்தட்டுகள் எவரிடமாவது இருந்தால் அவர்களிடம் இருந்து பெற்றோ ஒரு நினைவில்லம் அமைக்கலாம். கிட்டப்பாவின் நினைவுகளை வருங்காலத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியாக இது அமையும். கலை உலகுக்குக் கைகொடுக்கும் தமிழக அரசு, ஆவன செய்தால் நாடகவுலகுக்கும் சங்கீத உலகுக்கும் செய்யும் மாபெரும் தொண்டாகவும் அது அமையும்!

செங்கோட்டை சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்


செங்கோட்டை மண்ணின் புனிதர்
சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்!

சிவன்கோட்டை... சிவனடியார்கள், சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்த பூமி. சுற்றிலும் மகான்களின் ஜீவ சமாதிகள். கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நகரம், 1956-ஆம் ஆண்டுதான் தமிழகத்தின் திருநெல்வேலி ஜில்லாவுடன் இணைக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன் நல்லூர்ராஜா ஆட்சி செய்த பகுதி இது என்கிறது சரித்திரம். நகருக்கு மேற்குப் புறத்தில் நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து, மகாதேவர் கோயில், தீர்த்தக் குளம் போன்றவற்றை அமைத்தாராம். இப்போது காலம் சிதைத்த எச்சங்களே உள்ளன. சிவன்கோட்டையே காலப்போக்கில் மருவி, செங்கோட்டை ஆனதாம்!

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானமே ஆன்மிக பூமியாக விளங்கியது. சமஸ்தானத்தின் நுழைவுப் பகுதியாக செங்கோட்டை இருந்ததால், அங்கே துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதைக் கடந்துதான், ஆரியங்காவு, அச்சங்கோயில், சபரிமலை என கேரளத்தின் புனிதத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி என எல்லா ஊர்களில் இருந்தும் செங்கோட்டைக்கு பஸ் வசதி உள்ளது. ரயில் வசதியும் உண்டு. ஊரின், காவல் நிலைய நிறுத்தத்தின் அருகில், பழைய சினிமா தியேட்டர் ஒன்று. அதை ஒட்டி, சாலையில் வலப்புறம் ஆற்றுப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சிறிய சிமென்ட் பாதை. சுற்றிலும் பச்சைப் பசேலென வயல். அடுத்து பொதிகை மலையின் வண்ணமயமான தோற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இயற்கையை ரசித்தபடியே அதில் செல்கிறோம். சற்று தொலைவில் ஆற்றங்கரையில் அழகான ஆலயம்... அது, சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சமாதி ஆலயம்.

ஒரு சிவாலயத்துக்கு உண்டான அம்சங்களோடு திகழ்கிறது. கருவறை கோஷ்டங்களில் தட்சிணா மூர்த்தி, முருகன், பிரம்மா சிலைகள். சமாதி ஆலயத்தின் இடப்புறம் ஒரு புற்று. ஆறுமுக சுவாமிகளுக்கு பாம்புகளோடு நெருங்கிய பழக்கம் இருந்ததாம். முன்னே ஒரு மண்டபம். அதைக் கடந்து உள்ளே சென்றால், சுவாமிகளின் சமாதி கருவறை. மேலே லிங்கப் பிரதிஷ்டை ஆகியுள்ளது.

நந்தி, பலிபீடம் எல்லாம் உள்ளன. அதனால், பிரதோஷ பூஜையும் நடக்கிறது. பூஜைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். நாடி வருபவர்களின் வேண்டுதல் களை நிறைவேற்றி, இன்றும் தன் ஆன்மிக சாதனையின் மகிமையை எடுத்துக் காட்டுகிறார் சுவாமிகள்.

சற்குரு ஆறுமுக சுவாமிகளின் சரித்திரம்... சாதாரண மனிதராக வெளித் தெரிந்த ஒருவர், மகானாகப் பரிமளித்த உன்னத சரித்திரம்.
சைவ வேளாண் மரபில் வந்த பெரியநாயகம் பிள்ளை, தில்லை நடராஜப் பெருமான் மீது தீராக் காதல் கொண்டவர். இதே ஊரைச் சேர்ந்த பொன்னம்மாளை இவருக்கு மணம் முடித்து வைத்தனர். வருடங்கள் சென்றன. இல்லறம் நல்லறமாக நடந்ததாயினும் குலம் தழைக்க குழந்தைப் பேறு இன்றி இருவரும் மனவருத்தம் கொண்டனர். தெய்வம் பல வணங்கியும், தலம் பல சென்றும் நாட்கள் சென்றதுதான் மிச்சம். ஒருநாள் திடீரென தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினர்.

பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடி, திருச்செந்தூர் கடலில் நீராடி முருகப் பெருமானைத் துதித்து தங்கள் குறை தீர மனமுருகி வேண்டினர் அந்தத் தம்பதி. முருகனும் அருள் புரிந்தான்.

கொல்லம் ஆண்டு 959 (கி.பி.1784) சித்ரா பௌர்ணமியில், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தது ஆண் குழந்தை. முருகன் கருணையால் பிறந்த குழந்தை ஆதலால், ஆறுமுகனின் பெயரையே வைத்தனர். அந்தக் குழந்தையே, நூறு வயது பூவுடலுடன் இருந்து, சித்துகள் பல புரிந்து, புத்தரைப் போல், வள்ளலாரைப் போல் பௌர்ணமியில் தோன்றி பௌர்ணமியிலேயே ஸித்தியான சித்தபுருஷர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்.

இவர் பிறந்த பிறகு, சீனிவாசன், சிதம்பரநாதன் என இரு ஆண்களும், கல்யாணி என்ற பெண் குழந்தையும் உடன் பிறந்தனர். ஆறுமுகப் பெருமான் பிள்ளைக்கு இளவயதில் நற்கல்வி கொடுக்கப்பட்டது. வளர்ந்து வாலிப வயதடைந்த இவருக்கு தகுந்த பணியும் கிடைத்தது. அருகில் உள்ள சீவநல்லூர் கிராமத்தின் கிராம அதிகாரி பணிதான் அது!

ஆறுமுகப் பெருமான் பிள்ளையின் நிர்வாகத் திறனால் செழித்து வளர்ந்தது சீவநல்லூர். கொல்லம் ஜில்லா கலெக்டரும், செங்கோட்டை தாசில்தாரும் இவரைப் புகழ்ந்தனர். இந்த நிலையில், புளியரை கிராமத்தைச் சேர்ந்த ஆரியவடிவு என்ற பெண்ணை இவருக்கு மணம் முடித்து வைத்தனர்.
இல்லறமும் அரசுப் பணியும் நல்ல முறையில் தொடர்ந்தது ஆறுமுகம் பிள்ளைக்கு! இல்லறத்தின் பயனாக, பொன்னம்மாள், உலகம்மாள் என இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். வெளிப் பார்வையில் இவர் அதிகாரி; இல்லறவாசி! இருந்தாலும், அவர் மனத்துள் ஏதோ ஓர் தனிமை. தாம் இந்த உலகில் பிறந்தது, குழந்தைகளை வளர்ப்பதற்கும், வரி வசூலிக்கவும் மட்டுமா என்ற இனம் புரியாத எண்ணம் உள்ளத்தில்!

கிராம அதிகாரியான இவரிடம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கைலாசம் என்பவர் தண்டல்காரராகப் பணியாற்றினார். இட்ட வேலையை முகம் கோணாது செய்பவர்; சிவ பக்தர். மொத்தத்தில் பிள்ளைக்கு வலது கரமாகவே இருந்தார்!

ஒரு நாள் மாலை நேரம்! கணக்குப் பேரேட்டுக் கட்டுகளைச் சுமந்து சீவநல்லூரில் இருந்து வந்தனர் இருவரும். சற்று தொலைவு வந்ததும், ''ஐயா, வயிறு சற்று சரியில்லை. அதோ அந்தத் தோப்புக்குள் சென்று இதோ வந்துவிடுகிறேன்...'' என்று சொல்லிவிட்டு, பேரேட்டுக் கட்டுக்குக் காவலாக பிள்ளையவர்களையே நிறுத்திவிட்டுச் சென்றார் கைலாசம்.
நேரம் ஆனது. இருள் கவியத் தொடங்கியது. பாதையில் தனி ஆளாக நின்றிருந்த பிள்ளையவர்கள், கைலாசத்துக்கு என்ன ஆனதோ என்று எண்ணி, அவரைத் தேடி தோப்புக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி, அவரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

அப்படி என்ன கண்டார் அவர்..?

தோப்பில் உள்ள ஓடைக்கு அருகே, ஒரு பள்ளத்தில் கைலாசம் பத்மாசனம் போட்டு, வாயுஸ்தம்பம் மூலம், தரை மட்டத்திலிருந்து உயர்ந்து அந்தரத்தில் நிஷ்டை கூடி இருப்பதைக் கண்டார். தன்னிடம் பணியாற்றும் கைலாசமா இது. அவருக்கு அதிர்ச்சி. சாதாரண வேலையாள் இல்லை; இவர் ஒரு ஞானவான் என்று உணர்ந்தவர், தனது தேடல் இங்கேதான் முடிவடைய வேண்டும் என்று எண்ணினார்.

கைலாசத்துக்கு அருகே தானும் அமர்ந்தார். ஒரே ஒரு கண நேரம் கண் மூடி தியானித்தார். உலகம் சுழல்வது போல் இருந்தது. பல பிறவிகள் நினைவில் வந்து போயின. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளானது. எவையெல்லாமோ தன்னை விட்டு விலகுவது போன்ற மயக்கம். தலையில் இருந்து பெரும் சுமையை இறக்கி வைத்த உணர்வு. கண் திறந்து பார்த்தார். ஆனால், கைலாசம் இன்னும் தன்னுணர்வு வந்தபாடில்லை.

சாலையை நோக்கி நடந்தார். நடையில் அமைதி தெரிந்தது. கைலாசம்- தன் பார்வையில் ஒரு பணியாள்தான்! பிறப்பிலும் தொழிலிலும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் உள்ளவர். ஆனால், ஆண்டவன் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவர்! ஆத்மானுபவம் பெற்றும் எந்த கர்வமும் இன்றி எத்தனை பணிவு?! இறைவன் முன் சாதி பேதம் ஏது? திருப்பாணாழ்வாரும் திருநாளைப்போவாரும் இறைவனே போற்ற இருந்தவர்கள் ஆயிற்றே! - நினைக்க நினைக்க ஆறுமுகம் பிள்ளைக்கு ஞானம் மெள்ளப் புலப்படலாயிற்று.

அங்கே... கைலாசம் நிஷ்டை கலைந்து எழுந்தார். சாலையின் ஓரத்தே எஜமானரை நிறுத்திவிட்டு வந்த நினைவு எழுந்தது. பதைபதைப்புடன் ஓடி வந்தார். ''மன்னிக்கணும் ஐயா. நேரம் ஆகிவிட்டது.'' என்றார்.
''கைலாசம்... உமக்கு நேரம் ஆகி விட்டது; எனக்கு நேரம் வந்துவிட்டது. நடந்ததை அறிந்தேன். எனக்கும் அந்த ஆத்மானுபவத்தை அருள வேண்டும். உண்மை நிலையை உபதேசிக்க வேண்டும்'' என்று ஆறுமுகம் கைகூப்பி வணங்கினார் கைலாசத்தை!

''எஜமான்! இது பாவம். நான் தகுதியற்றவன்...'' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் கைலாசம். ஆனால் பிள்ளையவர்கள் விடவில்லை. வேறு வழியின்றி அப்போதே பரம்பொருளை நினைத்து, சீவனைச் சிவமாக்கி புருவ மத்தியில் நிறுத்தி பிரம்மோபதேசத்தை பிள்ளையவர்களின் காதில் ரகசியமாக உபதேசித்தார் கைலாசம்.

இருள் மண்டிய குகையிலிருந்து பர ஒளி உலகுக்கு வந்த உணர்வு அவருக்கு! ஒரு நிமிட உபதேசத்தில் அவர் உலகமே மாறியது.

சில நாட்களில் இவரின் தந்தை உலக வாழ்விலிருந்து விடை பெற்றார். ஆறுமுகம் பிள்ளையின் அலுவலகப் பணியும் ஆத்ம விசாரமும் தொடர்ந்தது. இந்த நாட்களில் சில மகான்களின் தொடர்பும் கிடைத்தது. கடையம் அய்யம் பட்டர், கோடகநல்லூர் சுந்தர சாஸ்திரி, ஆம்பூர் ஹரிஹர சாஸ்திரி, இலத்தூர் ராமஸ்வாமி சாஸ்திரி ஆகிய மகான்கள், பிள்ளையின் சாவடியில் கூடி, ஆன்மிக விசாரம் செய்தனர். இது, இவரது ஆன்மிகப் பயிருக்கு நல்ல உரமாக அமைந்தது.

சுவாமி சிவானந்தர், ஒருமுறை இமயத்தை நோக்கி பயணப் பட்டார். வழியில் காசிக்குச் சென்றார். இந்தி மொழி புதிது. வடநாட்டுப் பழக்கவழக்கங்களும் தெரியாது. ஒரு கடைக்குச் சென்று பால் கேட்டார். அங்குள்ள வழக்கப்படி ஒரு மண்சட்டியில் பால் கொடுத்தான் கடைக்காரன். பாலைக் குடித்தபின், நம்மூர் வழக்கப்படி அதைக் கழுவி மீண்டும் கடைக்காரனிடம் கொடுத்தார் சிவானந்தர். அவ்வூர் வழக்கம்- அதைத் தூக்கி எறிந்துவிடுவது. சிவானந்தருக்கு இது தெரியாது. இவர் மீண்டும் அவனிடம் கொடுக்க முயல, கடைக்காரன் கோபத்துடன் கத்தினான்... ''தூக்கி எறி...''

அந்த ஒற்றை வார்த்தையே சிவானந்தருக்கு உபதேசமானது. அவ்வளவுதான்! அனைத்தையும் தூக்கி எறிந்து இமயத்தில் அமர்ந்தார். நெல்லை மாவட்டத்தின் பத்தமடையில் தோன்றி இமயத்தில் கரைந்த ஆன்மிக ஜோதி இவர்.

இங்கும் அப்படித்தான்! வைராக்கிய உணர்வு வரப்பெற்ற பிள்ளையவர்கள், தம் 35-ஆம் வயதில், பந்தம் பாசம் அறுத்து அனைத்தையும் தூக்கி எறிந்து வீதியில் இறங்கினார். கால்போன போக்கில் நடந்தார். தென்கயிலாயமான குற்றால மலை ஏறினார். செண்பகாதேவி அருவிப் பக்கம் சென்றார். அங்கே ஸ்ரீபராசக்தி கோயிலை ஒட்டி அருவிக்கரையில் இருந்த குகையை நோக்கிச் சென்றார். முற்றும் துறந்த முனிவர்கள் கூடும் குகை இது. அன்று அய்யம் பட்டர், ஹரிஹர சாஸ்திரி, சுந்தர சாஸ்திரி என மகான்கள் கூடியிருந்தனர். சுந்தரசதஸ் என்று அதற்குப் பெயர். இதனுள் சென்று அமர்ந்தாலே, அலைபாயும் மனது ஒருமுகப்பட்டுவிடும்.

அன்று சித்ரா பௌர்ணமி. ஞானவாராஹி அன்னையின் அருளைப் பெற தவத்தில் ஈடுபட்டனர் அனைவரும். மூவரும் குகைக்கு உள்ளேயும், ஆறுமுக சுவாமிகள் குகை வாயிலிலும் அமர்ந்து மோனத் தவம் புரிந்தனர். நள்ளிரவு. சலசலத்து ஓடும் அருவி நீர் சப்தம் தவிர வேறு ஏதுமில்லை. திடீரென அந்த நள்ளிரவில் குகையை நோக்கி உறுமியபடி பாய்ந்தது ஒரு புலி. அதன் கண்களில் தீ ஜ்வாலை. சித்தத்தை பரவெளியில் நிறுத்தி உணர்வற்ற நிலையில் இருந்த சுவாமிகளைக் கவ்விச் சென்ற புலி, சற்று தொலைவில் இருந்த சித்தர் குகையில் விட்டுச் சென்றது. இந்த சித்தர் குகைக்கு அருகில் உள்ளது சித்தர் ஓடை. சித்த புருஷர்கள் கூடுமிடம். அந்த குகையில், புரியாத மொழியில் கல்வெட்டுகளில் ஏதேதோ எழுதப்பட்டிருக்கும்.

பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அந்தக் கானகம் நிறைந்திருக்க, சிறிது நேரத்தில் தன்னுணர்வு வரப்பெற்ற சுவாமிகள் மெள்ளக் கண் திறந்து பார்த்தார். அவ்வளவுதான்! காண்பதற்கரிய காட்சியைக் கண்டு சித்தம் லயிக்க நின்றார். அவர் கண்ட காட்சி...

குகைக்குள், அன்னை காட்சி தந்தாள். எதற்காகத் தவம் இருந்தாரோ அது நிறைவேறக் கண்டார். அந்தக் கணமே அவருள் ஒரு பேரொளி கிளர்ந்து எழுந்தது. ஞான வைராக்கிய சித்தராக எழுந்து நின்றார் சுவாமிகள். ஆனந்தக் கூத்தாடினார். அவ்வளவில் அந்தக் காட்சி மறைந்தது. ஒரு ஞானியாக மலையில் ஏறியவர், ஞானச் சித்தராக இப்போது கீழிறங்கினார்.

இவருடைய நடவடிக்கைகள் வீட்டினருக்கு ஒரு புதிராகவே இருந்தது. சுவாமிகளின் தம்பி சீனியாப்பிள்ளை, இவருக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது என்று எண்ணி வீட்டில் ஓர் அறையில் கால் விலங்கிட்டு அடைக்கவும் செய்தார். ஒரு கட்டத்தில் சுவாமிகளின் மனம் நோக, அந்தக் கணத்தில் கால்விலங்குகள் தெறித்து விழுந்தன. அறைக்கதவு திறக்க, சிங்கமென கர்ஜித்து வெளியேறினார். இவருடைய பரிபாஷையைக் கேட்டு, இவரிடம் மகிமை இருப்பதாக உணர்ந்த குடும்பத்தினர், பிறகு மன்னிப்பு வேண்டினர்.

ஆறுமுக சுவாமிகளின் மகத்துவம் எங்கும் பரவியது. அன்பர்கள், பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து தரிசித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கைகாட்டி சுவாமிகள் வந்தார். மகான்களின் தொடர்பால், அந்தச் சாவடியே பரிபாஷைகளின் கூடாரமாக மாறியது. அன்னை பராசக்தி அருளால் முக்கால ஞானமும் அஷ்டமா சித்துகளும் கைவரப் பெற்றார் சுவாமிகள்.

சுவாமிகள், கடைவீதியில் நடந்துவரும்போது, வியாபாரிகள் கடையை விட்டு கீழே இறங்கி கைகட்டி நிற்பார்கள். சுவாமிகள் ஏதாவது ஒரு கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து யாருக்காவது கொடுப்பார். அன்று அந்தக் கடையில் வியாபாரம் அமோகம்தான்!

அநேகமாக யாரிடமும் பேசுவதில்லை சுவாமிகள்; பேசினாலும் மழலைச் சொல்தான்! கந்தல் துணிதான் உடுப்பு. சில நேரங்களில் அவதூதர் கோலம். எப்போதும் பாம்பு களுடன்தான் விளையாட்டு. 'டேய் சங்கரா' என்று அழைப்பார். எங்கிருந்தெல்லாமோ வரும் பாம்புகள், அவர் மேனியில் ஊர்ந்து விளையாடும். யாரேனும் வந்தால்... ''டேய் பாவிகள் வந்தாச்சு, கிளம்புங்க!'' என்பார். அவ்வளவில் அவை மறைந்துவிடும்.

சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் அதிக நாட்கள் தங்கியிருக்கிறார். அதனால் அங்கு இவருக்கு பக்தர்கள் அதிகம். மேலும், குற்றாலம்- செண்பகாதேவி அருவிக்கு அருகில் உள்ள அகத்தியர் குகை, தட்சிணாமூர்த்தி குகை, சித்தர் குகைகளில் அதிகம் தியானத்தில் இருந்திருக்கிறார். இங்கே சூட்சும ரூபமாக சித்தர்கள் இன்றும் வருகிறார்களாம்.

அந்த குகையை தரிசிக்கும் ஆவலில் நாமும் செண்பகாதேவி அருவிக்குச் செல்கிறோம். ஐப்பசி மாத மழையில் அருவியில் நிறையவே தண்ணீர். செண்பகாதேவி அருவியில் இருந்து தேனருவி செல்லும் கரடுமுரடான பாதையில் சிறிது தூரம் செல்கிறோம். ஒரு பாம்புப் புற்று. அதைக் கடந்து சற்று தூரம் மேலே ஏறினால், ஒரு செங்குத்தான பாறையின் அருகில் பாதை தெரிகிறது. அருகே விநாயகர் சந்நிதி ஒன்று. வணங்கி சற்று கீழே இறங்கிச் சென்றால், செண்பகாதேவி அருவிக்கு நீர் வரும் பாதை. மிகவும் ஆபத்தான பகுதி. இங்கிருந்துதான் மலையின் இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவே நீர் ஓடி அருவியாக விழுகிறது. அதன் அருகில் குகையின் வாசல். தற்போது, 'இரும்பு கேட்' போட்டு பூட்டியிருக்கிறார்கள். செண்பகாதேவி கோயிலில் இருந்து சாவியை வாங்கி வந்திருந்தோம்.

குகைக்குள் ஒரே இருட்டு. குரங்கார் ஓரிருவர் நம்மைப் பின்தொடர, கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தில் உள்ளே செல்கிறோம். முகப்பில் சிவலிங்கம், அம்பிகை உருவங்கள்... சித்தர்கள் போன்ற சிலாரூபங்கள். உள்ளே அரைகுறை டார்ச் வெளிச்சத்தில், அகத்தியர், லோபமுத்திரை மற்றும் சிவலிங்கத் திருமேனிகளை தரிசிக்கிறோம். இன்னும் சற்று உள்ளே சென்றால், ஒரு மேடையில் தட்சிணாமூர்த்தி விக்கிரகம். என்றோ சாத்தப்பட்ட பூமாலை... வாடியிருந்தது. கற்பூரம் கொளுத்தி, வெளிச்சம் வர வழி ஏற்படுத்தி, அந்த வெளிச்சத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமியையும் அகத்தியரையும் தரிசித்து, கொண்டு சென்ற பழத்தை நிவேதனம் செய்து, அமர்கிறோம். அங்கே சூட்சும ரூபமாக எழுந்தருளும் சித்தர் சுவாமிகளை தியானிக்கிறோம்.

கற்பூரம் எரிந்து முடிந்த சற்று நேரத்தில் இருளும் புகையும் சூழ, தட்டுத் தடுமாறி எழுந்து வெளியே வருகிறோம். வெளியேறும் இடத்தின் இடப்புறம், அந்த குகைக்குள்ளேயே ஒரு சிறிய குகை. அதனுள் கைத்தடி, சிறிய பாய், மாகாளி அன்னையின் விக்கிரகம் எல்லாம் இருக்கிறது. இங்குதான் குற்றாலம் மௌன சுவாமிகள் தவம் செய்தார். ஆறுமுக சுவாமிகள் உள்ளிட்ட சித்தர்கள் தவம் செய்த புனிதமான குகையில் இருந்து, சித்தர்களின் அருளால் எந்தவித ஆபத்தும் இன்றி வெளியே வருகிறோம். நைவேத்திய பழங்களை குரங்கார் சுற்றம் சூழ வந்து நம் கையில் இருந்து வாங்கிச் சென்றார். மனத்துள் ஆறுமுக சுவாமிகள் நிறைந்திருக்க, அவருடைய மகிமைகளை எண்ணியவாறே கீழிறங்கினோம்.

செங்கோட்டையில் கோர்ட் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம், கைலாசம் இருவரும் ஒரு பொது வேலையாக கொல்லத்துக்குச் சென்றார்கள். அதற்கு முன் சுவாமிகளை சந்தித்து, பிரச்னைகளைச் சொல்லி ஆசி வழங்கும்படி கேட்டார்கள்.

சுவாமிகளும் ''நல்லது நடக்கும். சென்று வாருங்கள்'' என்றார். பிறகு அவர்கள் சென்ற வழியில், ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் என ஒவ்வோர் இடத்திலும் சுவாமிகளும் தென்பட்டார். அங்கெல்லாம் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினராம்.

மதுரையில் செல்வந்த ரெட்டியார் ஒருவரின் மகனுக்கு திருமணம். அன்றிரவு அவன் பாம்பு தீண்டி இறந்தான். மிகுந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று உடலை சிதையில் வைத்தனர். அப்போது அந்த வழியாக சுவாமிகள் சென்றதைப் பார்த்து, அன்பர் ஒருவர் இந்த விஷயத்தைச் சொல்லி ஆறுதல் அளிக்குமாறு வேண்டினார்.

சுவாமிகள் வந்து பார்த்து, சடலத்தின் மீது எச்சிலை உமிழ்ந்து, ''சீ போ... எழுந்திரு'' என்று சொல்லிச் சென்றார். அதிசயப் படும்படி சிதையிலிருந்து அவன் எழுந்தான். சுவாமிகளைத் தேடினால், அவரை எங்கும் காணமுடியவில்லை. பிறகு செங்கோட்டைக்கு வந்து அவரை வணங்கி மூட்டை நிறைய நாணயங்களை சமர்ப்பித்தார் ரெட்டியார். சுவாமிகளோ, ''நீ ஆட்கொல்லியுடன் அல்லவா வந்திருக்கிறாய். நில்லாதே போ...'' என்றார்.

அவர் வற்புறுத்தவே, ''சரி... நீயே இந்த நாணயங்களை தெருக்களில் எறிந்துவிட்டுப் போ'' என்றார். அவரும் மறு பேச்சின்றி அப்படியே செய்தாராம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகத்தில் இருந்த அந்தணர் ஒருவரின் மகன், தன்னுடைய மனைவியோடு மாடியில் உறங்கும்போது பாம்பு தீண்டி இறந்தான். தெருவே துக்கத்தில் இருந்தது. அப்போது ஓர் வேலையாக அப்பகுதிக்குச் சென்ற செங்கோட்டை கங்காதர ஐயர் (இசைமேதை எஸ்.ஜி.கிட்டப்பாவின் தந்தை), இதைக் கண்டு மிகவும் மனம் வருந்தி அருகே இருந்த கோயிலுக்கு வந்தார். அங்கே சுவாமிகள் இருப்பது கண்டு வணங்கி, விஷயத்தைச் சொல்லி ஏதாவது பரிகாரம் வேண்டினார். சுவாமிகள், ''அவன் அநியாயமாகப் போகிறான்...'' என்றாராம். உடனே கங்காதர ஐயர், ஓடிச் சென்று அவர்களிடம் சுவாமிகளின் மகிமையைக் கூறி, அவரை அழைக்குமாறு சொன்னார். சுற்றிலும் இருந்தவர் கள், 'மாண்டவனாவது... மீள்வதாவது?' என்று இவரை கேலி செய்தனர்.

சரி பார்ப்போமே என்று பையனின் மாமனார், ஆறுமுக சுவாமிகளை அழைத்து மன்றாட, சுவாமிகள் வந்து பார்த்துவிட்டு, எப்படி மனைவியுடன் மாடியில் படுத்திருந்தானோ அதே கோலத்தில் படுக்க வைக்கச் சொன்னார். சற்று நேரத்தில் எங்கிருந்தோ வந்த பெரிய பாம்பு ஒன்று படமெடுத்தபடி சுவாமிகள் முன் நின்றது.

அவர் கையசைக்க, அது மாடிக்குச் சென்று அவனின் காலில் கடிபட்ட இடத்திலிருந்து விஷத்தை உறிஞ்சி சுவாமிகள் முன் வைக்கப்பட்ட பசும்பாலில் கக்கிச் சென்றது. அந்தப் பையனும் எழுந்து அமர்ந்தானாம்!
சேத்தூர் ஜமீனைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு ஒரு மகாபிஷேகம் செய்ய விரும்பினர். சுவாமிகள் சிரித்தார். இருப்பினும் அன்பர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார்.

ஜமீன் சங்கிலி வீரப்ப பாண்டியரும் உடனிருக்க அபிஷேகம் துவங்கியது. 107 குடம் நீரால் அபிஷேகம் செய்து, 108வது குடத்து நீரை அபிஷேகம் செய்யத் தொடங்கினர். சுமார் இரண்டு மணி நேரம் அந்தக் குடத்தில் இருந்து தண்ணீர் விழுந்துகொண்டே இருந்தது. குடத்தைக் கையில் பிடித்தவர்களுக்கு கை வலி ஏற்பட்டு சுவாமிகளிடம் கெஞ்சினர். சுவாமிகள் ''தண்ணீர் போதும்'' என்றவுடன் குடத்து நீர் நின்றது. இறுதியில் சுவாமிகளை பல்லக்கில் தன் இல்லத்துக்கு வருமாறு ஜமீன்தார் வேண்டினார். ''எல்லாம் நீ போய்ச் சேரு'' என்றார் சுவாமிகள். மன விசனத்துடன் ஜமீன் தன் வீட்டுக்குச் செல்ல, அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார் சுவாமிகள். அவருக்கு ஆச்சரியம். எப்படி இவ்வளவு விரைவாக அவரால் வரமுடிந்தது என்று!

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலையில் பெருமாள் கோயில் உள்ளது. அந்த மலையின் அடிவார ஊருக்கு சுவாமிகள் சென்றார். ஊர் மக்கள் சுவாமிகளை வணங்கி, மூன்று வருடங்களாக மழை பொய்த்துப் போய் வறட்சி தாண்டவமாடுவதைச் சொல்லி, ஏதாவது செய்யும்படி கோரினர். மனம் இரங்கிய சுவாமிகள், சுனையில் இருந்து சேற்றை எடுத்து உடல் முழுதும் பூசிக்கொண்டு, ஒரு பாறையில் அமர்ந்து தியானித்தார்.

சுட்டெரித்தது வெயில். இதெல்லாம் பகல் இரண்டு மணிவரைதான். அடுத்து எங்கிருந்தோ சேர்ந்தது மேகக் கூட்டம். நல்ல மழை பெய்தது. சுவாமிகளின் உடலில் பூசிய சேறு கரைந்து ஓடியது. அருகில் இருந்த குளங்கள் நிரம்பும் வரை தொடர்ந்து தியானத்தில் இருந்த சுவாமிகள் ஓரிரு நாட்கள் கழித்தே பழைய நிலைக்கு வந்தாராம்.

அன்பர்கள் யாரேனும் வறுமையால் வாடினால் சுவாமிகளுக்குப் பொறுக்காது. ஏதாவது வழிசெய்வார். ஸ்ரீவில்லிபுத்தூர் சாலியர் தெரு கீழப்பட்டியில் பேச்சியம்மாள் என்ற மூதாட்டி இருந்தாள். சுவாமிகளுக்குப் பணிவிடை செய்வதை பாக்கியமாகக் கருதினாள். நாளாக நாளாக வேலை செய்து சம்பாதிக்க உடல்நிலை இடம் கொடுக்காமல் தவித்தாள்.

சுவாமிகளை வணங்கி தன் இயலாமையைச் சொன்னாள். அவரும், ''நீ கடைக்குச் சென்று வாங்கும் பொருள்களுக்குத் தேவையான பணம் உன் வீட்டில் இருக்கும், போ'' என்றார். அதன்படியே இருக்க, அவள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் திடீரென, ஒரு விபரீத ஆசை அவளுக்கு! சுவாமிகளிடம் சென்று, ''சுவாமி இப்படி தினந்தோறும் நாலணா தருவதற்கு பதில், ஒரு மாதத்துக்குத் தேவையானதை மொத்தமாக அருளுங்களேன்...'' என்றாள்.

மௌனமாகச் சென்ற சுவாமிகள், வெளியே மண்ணில் சிறுநீர் கழித்தார். அந்த மண் தங்கமாக மின்னியது. சுவாமிகள் சொன்னார்... ''பார்த்தாயா..! அவ்வளவும் தங்கம். போதுமா?'' என்று சொல்ல, அவள் ஒன்றும் பேசாது நின்றாள். பிறகு சுவாமிகள், ''இது ஆட்கொல்லி. இதை நீ வைத்திருந்தால் உன் உறவினர்களே உன்னைக் கொன்றுவிடுவார்கள். பேசாமல் கிடைப்பதை வைத்து நிம்மதியாக இரு'' என்று சொல்லிச் சென்றாராம்!


திருவனந்தபுரத்தில், அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கும் இடமான ஊட்டுப்புரை இருந்தது. ஆறுமுக சுவாமிகள், அய்யம்பட்டர், ஹரிஹர சுவாமிகள் மூவரும் அங்கே செல்வது வழக்கம். அப்போது, இவர்கள் கையில் ஒரு சாராய பாட்டிலும் இருக்குமாம். இது ஊட்டுப்புரை விதிமுறைகளுக்கு முரணானது.

எனவே இவர்களைப் பற்றிய புகார் சமஸ்தானத்துக்குச் சென்றது. அன்று திருவாங்கூரை ஆண்ட இசைமேதையான ஸ்வாதித் திருநாள் மகாராஜா ராமவர்மா, இவர்களை அழைத்தார். அப்போதும் அய்யம் பட்டர் கையில் சாராய பாட்டில். மன்னர் விசாரித்தபோது, ஆறுமுக சுவாமிகள் ஒரு பாத்திரம் எடுத்துவரச் சொன்னார். அதில் சாராயத்தை ஊற்றி, மன்னரிடம் கொடுத்தார். பாத்திரத்தில் பால் இருந்தது கண்டு வியந்த மன்னர், சுவாமிகளின் உன்னதத்தை அறிந்து, எப்போது இவர்கள் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உணவு வழங்க கட்டளையிட்டாராம்!

ஒருநாள், சுவாமிகள் செங்கோட்டை குண்டாற்றுப் பாலத்தில் அமர்ந்திருந்தார். நீராடிவிட்டு வந்த பெண்கள், சுவாமிகளைக் கண்டதும், தங்களுக்கு குழந்தையில்லாத குறையைக் கூறி, விமோசனம் வேண்டினர்.

சுவாமிகள், தன் உணவில் இருந்து ஒரு பிடி எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்து, வீட்டு உணவில் சேர்த்து உண்ணும்படி கூறினார். அந்தக் கூட்டத்தில் ஆறுமுகம் செட்டியார் என்பாரின் இரண்டாவது மனைவி சிதம்பரத்தம்மாளும் இருந்தார். எல்லோரும் சுவாமிகள் சொன்னபடி செய்ய, சிதம்பரத்தம்மாளுக்கு மட்டும் அதை உண்ணத் தோன்றவில்லை. அப்படியே கழுநீர்ப் பானையில் போட்டார்.

காலம் கழிந்தது. சிதம்பரத் தம்மாளைத் தவிர, மற்ற அனைவருக்கும் குழந்தை பிறந்தது. சுவாமிகளிடம் மீண்டும் சென்ற அம்மாள், குழந்தைப் பேறு வேண்டிக் கேட்டபோது, ''அதற்கு ஏன் இங்கு வந்தாய்? உன் வீட்டு கழுநீர் பானையிடம் கேள்.'' என்றாராம் சுவாமிகள்.

சுவாமிகள் நூறு வயதை எட்டியதும்(கி.பி.1884), தாம் வந்த பணி நிறைந்துவிட்டதை உணர்ந்து, சமாதிக்கு தயாரானார். ஆனி மாதம் அனுஷம் கூடிய பௌர்ணமி நாளில், தான் எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்தவாறே, சமாதி நிலை அடைந்தார். அவருடைய சமாதி தங்கள் இடத்தில் அமைய வேண்டும் என்று பலரும் போட்டியிட்டனர். இறுதியில் திருவுளச்சீட்டில், குண்டாற்றங்கரைத் தோப்பு என்று முடிவானது. அங்கே சுவாமிகளின் சமாதி அமைக்கப்பட்டு, சிவலிங்கப் பிரதிஷ்டையும் ஆனது. தற்போது சமாதிக் கோயிலாகக் காட்சி தருகிறது. சுவாமிகள் சமாதியாகி தற்போது, 125 ஆண்டுகள் ஆகிறது.

சுவாமிகளின் வம்சாவளியைச் சேர்ந்த ஆறுமுகம் (98940 90863) மற்றும் இசக்கி (90424 44156) இருவரும் சமாதிக் கோயிலில் தவறாமல் பூஜைகளைச் செய்து வருகிறார்கள். சுவாமிகளின் சரிதத்தை நமக்குச் சொன்ன நல்லாசிரியர் வி.ஜனார்த்தனனுக்கு நன்றி கூறி, சுவாமிகளின் கோயிலை வலம் வந்தோம்.
photos: senkottai sriram
கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்

சனி, மார்ச் 20, 2010

கணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில்... (எஸ்.எஸ்.பிள்ளை)





கணித மேதை 
செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை)

(சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை)

கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம்


'கணக்குன்னாலே எனக்குக் கசப்பு' என்றான் ஒரு மாணவன். 

"ஏன்'  என்று கேட்டபோது, ""அதில் வரும் தேற்றங்களையும் (தியரம்) எண்கள், சமன்பாடுகளையும் மனனம் செய்வது கடினமாக இருக்கிறது'' என்றான். 


"கணிதம் - மனனம் செய்து படிக்கும் பாடமல்ல;  அது சுவாரஸ்யமான, அடிப்படையைத் தெரிந்துகொண்டு நாமே உருவாக்கும் கற்பனை சமாசாரம்'' என்று புரியவைக்க முயன்றேன். காரணம் அடியேனும் ஓர் கணித மாணவன் என்பதால்!


பொதுவாகவே, கணிதம் பயில்பவர்களுக்குக் கற்பனைவளம் சேர்ந்தே வரும். அதனால் கொஞ்சம் கவிதையும் வரும். அப்படிப் பலரை நான் கண்டிருக்கிறேன். 


சிறுவயதில் எனக்குள் கணித ஆர்வம் துளிர்விடக் காரணமாக அமைந்தவர், ஒருவர். எங்கள் ஊர்க்காரர். உலகப்புகழ் பெற்றவர்.

செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் மாணவனாகப் பயின்றபோது, ஊரின் நடுவிலுள்ள முத்துசாமிப் பூங்காவில் அடிக்கடி விளையாடி மகிழ்வோம். அப்போது அங்குள்ள "பெஞ்சுகளில்' அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பெரியவர்கள் சிலர், எங்களைக் கூப்பிட்டு அருகில் அமரவைத்து ஒரு கதையைச் சொல்வார்கள். இப்போது அவர்களின் முகங்கள் மறந்துவிட்டாலும், உணர்ச்சிகரமாக அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கும் பசுமையாய் நெஞ்சில் உள்ளன... 

"இதோ இந்தப் பூங்காவின் மையத்தில், இதோ இந்த இடத்தில்தான் எஸ்.எஸ். பிள்ளை என்ற நம்ம ஊர் கணிதமேதை, ஒரு சிறிய குறிப்பு நோட்டுப் புத்தகத்தை விசிறியபடியே தூக்கிக் காட்டி, நண்பர்கள் மத்தியில் இப்படிச் சொன்னார்...  

இந்த நோட்டுப் புத்தகத்தில் என்னுடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் உள்ளன. இதை நான் பிரின்ஸ்டன் மகாநாட்டில் வெளியிடுவேன். அதன் மூலம் இந்தியாவுக்குப் பெரும்புகழ் கிடைக்கும்'' என்றார் எஸ்.எஸ்.பிள்ளை - என்று அவர்கள் கதை சொல்வார்கள்.

அந்தப் பள்ளிப் பருவத்தில் ஃபூரியர் சீரிஸ் பற்றியோ, எண்கணிதம் பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டும் கதை வடிவில் என்னை அடைந்திருந்தன. முதிர்ந்த ஆசிரியரான திரு.வி.ஜனார்த்தனம் அவர்களும் எஸ்.எஸ். பிள்ளை பற்றிய கதைகளை அடிக்கடி சொல்வார்.


(senkottai Muthuswami Park / photo by senkottaisriram)
சிவசங்கர நாராயணப் பிள்ளை என்பதுதான் அவர் பெயர். 1901 ஏப்ரல் 5 இல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வி இலத்தூரில். அந்த வேளையில் இவருடைய தந்தை மறைந்துவிட, எதிர்காலம் கேள்விக்குறியானது (முன்னதாக இவர் தாயும் இறந்துவிட்டார்). 

அப்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியரான சாஸ்திரியார் என்பார், தம் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை இவருடைய படிப்புக்காகச் செலவிட்டு, பிள்ளைக்குக் கல்விச் செல்வம் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தார்.

நினைத்துப் பாருங்கள்... அன்றைக்கு ஆசிரியர்களுக்கு எவ்வளவு மிகக் குறைந்த சம்பளம் இருக்கும்! மாணவனுக்குக் கல்வியளிப்பதே சேவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஆசிரியர்கள் வாழ்ந்த காலம் அது. நமது முன்னாள் ஜனாதிபதியான அப்துல்கலாம் அவர்கள், தமது புத்தகத்தில் "ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியரால் எப்படி உருவானேன்'' என்பதைக் காட்டும் இடத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... ஆசிரியப் பணியின் புனிதமும் நோக்கும் தெரியவரும். ஆனால் இன்றைய வர்த்தக உலகில் எல்லாமே தலைகீழாகிவிட்டதே!

இப்படி, சாஸ்திரியாரால் ஊக்கம்பெற்ற பிள்ளை, தொடர்ந்து செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோயில் ஸ்காட் மகாராஜா கல்லூரியிலும் பயின்றார். (பி.ஏ). அதன்பிறகு சென்னைப் பல்கலையில் கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர விரும்பினார். அன்றைய சூழலில், பி.ஏ. ஆனர்ஸில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே ஆராய்ச்சி மாணவராகச் சேரமுடியும். ஆனால் இவரோ இரண்டாம் வகுப்பே பெற்றிருந்தார். எனவே பல்கலைக்கழகத்தில் இவருக்கு இடம் மறுக்கப்பட்டது.
அப்போது, பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த திரு.சின்னத்தம்பிப் பிள்ளை, எஸ்.எஸ். பிள்ளையின் திறமையை உணர்ந்து, பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் எஸ்.எஸ். பிள்ளைக்காகக் குரல் கொடுத்தார். 

""நம் பல்கலை, ஏற்கனவே கணிதமேதை ராமானுஜன் விஷயத்தில் அவமானப்பட்டது போதும். மீண்டும் அந்தத் தவறைச் செய்ய வேண்டாம். சாதாரண மாணவர்களுக்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளை மேதைகளின் மீது திணிக்க வேண்டாமே!'' என்று கேட்டுக் கொள்ள, எஸ்.எஸ். பிள்ளை சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றார். பேராசிரியர் அனந்தராவ் என்பவர் கீழ், பிள்ளை ஆராய்ச்சி செய்தாராம்.

பிறகு 1929 இல் அண்ணாமலைப் பல்கலையில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். அப்போதுதான் எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். இதில் சிறப்பம்சம் என்ன என்றால், இந்தியாவிலேயே முதல் முதலாகக் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமை எஸ்.எஸ். பிள்ளைக்கு உண்டு.

செங்கோட்டை, அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி. ராமசாமி ஐயர், எஸ்.எஸ். பிள்ளையை திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்காக எஸ்.எஸ். பிள்ளையைக் கேட்டபோது திவானிடம் அவர் மூன்று நிபந்தனைகளை முன் வைத்தார்.

* அந்நாட்களில் திருவனந்தபுரம் ஆறாட்டு விழாவில், மகாராஜா வேட்டி மட்டும் உடுத்தி உடைவாளோடு நடந்து செல்வார். அந்த விழாவில் அரசு அதிகாரிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்டம். பிள்ளையவர்களோ சர்.சி.பி.யிடம் "இந்த ஆறாட்டு விழாவில் கலந்துகொள்ளும்படி தன்னை வற்புறுத்தக் கூடாது' என்று முதல் நிபந்தனையை விதித்தார். இது தன் கையில் இல்லை; மகாராஜாவிடம் கேட்கவேண்டும் என்றார் சர்.சி.பி. (மகாராஜாவும் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்க அவருக்கு மட்டும் விலக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி)

* இரண்டாவது நிபந்தனை, இந்தியன் சயன்ஸ் காங்கிரஸிற்கு திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தின் பிரதிநிதியாகத் தம்மையே அனுப்ப வேண்டும் என்பது.

* மூன்றாவது, தம் ஆராய்ச்சிக்காக, அமைதியான சூழலில் ஒரு குன்றின்மேல் அரசு வீடு ஒதுக்கவேண்டும் என்பது.

இந்த மூன்று நிபந்தனைகளின் பேரில் திருவிதாங்கூருக்குச் சென்று பணியை மேற்கொண்டார் பிள்ளை. இடையில் சர்.சி.பி. வெளிநாடு சென்றிருந்த வேளை, சர்.சி.பியைப் பிடிக்காத அதிகாரிகள் சிலர், வேண்டுமென்றே பிள்ளையவர்களைத் தவிர்த்து வேறொருவரை இந்தியன் சயன்ஸ் காங்கிரஸிற்கு அனுப்பிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட எஸ்.எஸ். பிள்ளை அடுத்த நிமிடத்திலேயே ராஜினாமாக் கடிதம் ஒன்றை சர்.சி.பி. பெயருக்கு அனுப்பிவிட்டு செங்கோட்டையைப் பார்த்து வந்துவிட்டார். அந்த அளவுக்கு தன்மானம் பார்த்த தமிழராக இருந்தார் பிள்ளை. 

பின்னர் இந்த விவரம் அறிந்து வருந்திய சர்.சி.பி., பிள்ளையவர்களை மீண்டும் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தும் பிள்ளையின் பிடிவாதத்தைத் தவிர்க்க முடியவில்லை. ""பொய் சொல்பவர்களிடம் என்னால் பணியாற்ற முடியாது'' என்பது பிள்ளையின் பதிலாக இருந்தது.

ஒருமுறை அமெரிக்கக் கணிதமேதை டாக்டர் டிக்ஸன், இவரைக் காண கல்கத்தா பல் கலைக்கு வந்தபோது, அவர் தாம் தங்கியிருந்த ஹோட்டலில் நண்பர்களுக்கு மேலைநாட்டு பாணியில் விருந்தளித்தார். அதில் எல்லோரும் கத்தியையும் முள்கரண்டியும் பயன்படுத்தியபோது, பிள்ளை மட்டும் கையிலேயே எடுத்து உண்டார். இதுபற்றி நண்பர் ஒருவர் கேட்டபோது பிள்ளை சொன்னாராம்...

""என் நாட்டில் என் பழக்கவழக்கங்கள்தான் முக்கியம்.''

""சரி நீங்கள் அமெரிக்கா சென்றால்...?''

""அதை அப்போது பார்ப்போம்!''

- இப்படி தமக்கொன சில கொள்கைகளை வைத்துக் கொண்டு யாருக்காகவும் பிள்ளை விட்டுக் கொடுத்ததில்லை.

சிவசங்கரன் பிள்ளை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது, கணக்குப் புதிர் திடீரெனத் தோன்றினால் மனம் மட்டும் புதிரில் இருக்கும்; உடல் இயக்கமோ அந்த வேலையை ஒட்டி இருக்கும். 

ஒருமுறை செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கோயில் முருகன் சன்னிதிக்குக் குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது, தீபாராதனையின் சமயம் மணி அடிக்க யாரும் முன்வராத நிலையில், தாமே சென்று ஆலய மணியை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார். தீபாராதனையும் முடிந்தது... ஆனால்... மணிச்சத்தம் மட்டும் நின்றபாடில்லை. அவருடைய மூளையில் முருகப்பெருமான் எந்தக் கேள்விக்கு விடையளித்தாரோ? எந்தப் புதிர் அவர் மனத்தில் ஓடியதோ? அந்தத் திருமலைக் குமாரசாமியே அறிவான்.

செங்கோட்டையில் பிள்ளையைக் காண ஐரோப்பியர்கள் சிலர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், ""என்ன தம்பி, நீ என்ன வேலை பார்க்கிறே?'' என்று கேட்டாராம். ""நான் ஆசிரியர் வேலை பார்க்கிறேன்'' என்று அவருக்குப் புரியும் விதத்தில் பிள்ளை கூற, ""போயும் போயும் உனக்கு ஒரு வாத்தியார் வேலைதான் கிடைத்ததா? ஒரு போலீஸ் வேலை... உனக்குக் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டாராம் அந்தப் பெரியவர். கிட்டத்தட்ட 250 ஆண்டு கால ஆங்கிலேய அடிமைத்தனத்தால் இந்திய மூளையில் தோன்றிய சிந்தனைக்கு ஒரு சாம்பிள் இது.  

ஏன், அன்று மட்டும்தானா? இன்றும்கூட நான் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், பெரியவர்கள் சிலர் என்னிடம் நலம் விசாரிப்பார்கள். 'என்ன செய்கிறாய்?' என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிறகு அவர்கள் சொல்வது... ""என்னல்லாமோ படிச்சியே! போயும் போயும் உனக்கு பத்திரிகை வேலைதான் கிடைத்ததா?'' அப்போதெல்லாம் எஸ்.எஸ். பிள்ளையிடம் இவர்களைப் போன்றவர்கள் கேட்டதுதான் நினைவுக்கு வரும். தலைமுறைகள் மாறினாலும் மனஎண்ணம் மட்டும் இன்னும் மாறவில்லை...! அன்று அரசியல் அடிமைத்தனம். இன்று அக்கல்வி தந்த பயன் - சிந்தனை அடிமைத்தனம்.
எஸ்.எஸ்.பிள்ளை ஆராயத் தொடங்கிய எண் கணித விதி பற்றிய ஒரு சிறு அறிமுகம் இது...

(Theory of Numbers) 
3 ஆம் நூற்றாண்டின் டயாஃபேன்டைன் ஆராயத் தொடங்கிய எண் கணிதக் கோட்பாடு இது. பிறகு படிப்படியாக இந்த எண்கணிதக் கோட்பாடுகள் பலராலும் கையாளப்பட்ட நிலையில், கி.பி. 1640 இல் ஃபெர்மாட் எனும் கணிதமேதை இது சம்பந்தமாக ஒரு கணிதப் புதிரை உருவாக்கி அதற்கு விடைகாணாமலேயே மறைந்துவிட்டார். 

அதன்பின் பிரெஞ்சுக் கணிதமேதை "லான்சிரேஞ்சு' ஒரு நிரூபணத்தைக் கண்டறிந்தார். அவருக்குப்பின்னர் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் வாரிங்க்ஸ் ஒரு புதிரையும் வழங்கி அதற்கான விடையையும் தந்தார். ஒரு புதுமை, அவருக்கு அதற்கான விடை தெரிந்தது; ஆனால் அதை அடையும் வழிமுறை தெரியவில்லை. அவர் தொடங்கி வைத்ததுதான், கணித உலகில் புகழ்பெற்ற வாரிங்ஸ் ப்ராப்ளம். 

இதற்கு விடைகாண 300 ஆண்டுகளாக பல மேதைகள் முயன்றும் முடியாது போயிற்று. புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு கணிதமேதை பால் எர்டாஸ் (இவர் 20 வயதில் டாக்டர் பட்டம் பெற்று பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர்.) என்பார்கூட, வாரிங்க்ஸ் ப்ராப்ளத்தைத் தொட்டு, விட்டுவிட்டார். 

1858 இல் பேராசிரியர் லியோவில்லி, 1909 இல் ஜெர்மன் மேதை டாக்டர் வெய்ஃபிரிட்ஜ், தொடர்ந்து ஜெர்மன் பேராசிரியர் லியாண்டர், இங்கிலாந்து மேதைகளான ஹார்டி, லிட்டில்வுட் ஆகியோர், பின் 1933 இல் அமெரிக்க மேதை டாக்டர் டிக்ஸன், பின் பேராசிரியர் ஜேம்ஸ்

 - இப்படி பல மேலைநாட்டு அறிஞர்களும் அடுத்தடுத்த படிகள் முன்னேறினார்களே ஒழிய முழுவிடையையும் காண அவர்களால் இயலவில்லை.

இப்படி பலரையும் திணறடித்த வாரிங்க்ஸ் ப்ராப்ளத்துக்கு, தமது 29 ஆவது வயதில் தனியாகத் தமது ஆராய்ச்சியைத் தொடங்கிய 5 ஆவது வருடத்தில் ஒரு வழியையும், அதற்கான விடையையும் காண்பதில் பெரு முன்னேற்றம் கண்டார் எஸ்.எஸ்.பிள்ளை. தொடர்ந்து அதிக அளவிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார். 

வாரிங்க்ஸ் பிராப்ளத்தை விளக்குவது சற்று கடினம் என்றாலும், ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் ஓரளவு கோடிட்டுக் காட்ட முடியும்.

நம்மிடையே, எண்களின் வர்க்க எண்களில் மட்டுமே நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் புழங்குகின்றன என்று வைத்துக்கொள்வோம்... அதாவது, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81... என்று! இப்போது நீங்கள், ஒரு பொருளை கடைக்குச் சென்று வாங்குகிறீர்கள்... கடைக்காரர் அதன் விலை ரூ.103 என்று சொல்கிறார். நீங்கள் அதற்கான விலையை உங்கள் கையில் இருக்கும் மேற்சொன்ன ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கொடுக்கிறீர்கள். 

அதை எந்த வழிகளில் எல்லாம் தருவீர்கள்...

1. ஒரு ரூபாய் நோட்டுகள்/நாணயங்களாக 103 தருவீர்கள்.
2. 4 ரூபாய் நோட்டுகள்/நாணயங்கள் 25ம், ஒரு ரூபாய் மூன்றும் தருவீர்கள்.
3. பதினோரு 9 ரூபாய்... மற்றும் ஒரு நான்கு ரூபாய்..
4. பதினாறு ரூபாய் நோட்டு ஆறு, ஒரு நான்கு ரூபாய், மூன்று ஒரு ரூபாய்...
5. 25 ரூபாய் நான்கு, மூன்று ஒரு ரூபாய்...
6. ஒரு 1ரூபாய், ஒரு 4 ரூபாய், இரண்டு 49 ரூபாய்...

- இன்னும் உங்களுக்குத் தோன்றும் வழிகளில் எல்லாம் நீங்கள் இதைச் சரிசெய்து கொடுக்கலாம். ஆனால், கடைக்காரர் ஒரு எரிச்சல் பேர்வழி என்று வைத்துக்கொள்ளுங்கள். கூட்ட நேரத்தில் ஒரு ரூபாயாக நூற்றி மூன்று ரூபாய் கொடுத்தால் அதை எண்ணுவதற்கு அவருக்கு நேரம் போதாமல் இருக்கலாம்... அதாவது உங்கள் நேரம் போதவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்...

மேலும், உங்கள் சிறிய பர்ஸில் அவ்வளவு பணத்தை சில்லரையாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.. மிகச் சுருக்கமாக ரூபாய் நோட்டுகளை எவ்வளவு குறைவாக எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாக எடுத்துச் செல்லவே எண்ணுவீர்கள் அல்லவா..? எனவே, மேற்கண்ட விஷயத்தில் பொருளின் விலையான 103 ஐ, 1+4+49+49 என எண்ணிக்கை குறைந்த அளவில் ரூபாய் நோட்டுகளை கையாள முடியும் அல்லவா...

இதுபோன்றே, எல்லா மிகை எண்களுக்கும் பொருந்த வேண்டும் என்றால், அதாவது இந்த 103 ரூபாய் மட்டுமல்ல, குறைந்தது எத்தனை ரூபாய் நோட்டுகள்/ நாணயங்கள் ஒவ்வொரு பிரிவிலும் தேவை என்பதே இந்தக் கடைக்காரரின் வாரிங்க்ஸ் பிராப்ளம். 

கணித மொழியில் இதை அதிக பட்ச g(k)=? என்பர். 

வாரிங்ஸ் பிராப்ளத்தை அனுமானமாகப் போட்டுவிட்டுப் போய்விட்டார். பின்னர் வந்தவர்கள் அந்த அனுமானத்துக்கு ஒரு தீர்வு கண்டனர். 

லெக்ரான்ச் g(2)=4, என நிறுவினார்.

ஹில்பர்ட் இதனைத் தீவிரமாக ஆராய்ந்தார். பின்னாளில் இது, ஹில்பர்ட் வாரிங்க்ஸ் ப்ராப்ளம் என்றே அழைக்கப்பட்டது. அவர் தீர்வில், g(3)=9... என்பது.

g(6)=73 என்பது பிள்ளையின் கண்டுபிடிப்பு.

g(5)=37 என்பது ஜெ.ஆர்.சென்னின் கண்டுபிடிப்பு. 1964ல்.

g(4)<=20 என்பதை 1985ல் ஆர்.பாலசுப்பிரமணியம் நிறுவினார். 

1968ல் ஆர்.பாலசுப்பிரமணியம், ஜே.டி.சௌலியர்ஸ், எஃப்.டிரஸ் ஆகிய மூவரும் g(4)=19 என்று கண்டறிந்தனர்.

k=6 என்றால், அதிகபட்ச g(k)=? என்ற கேள்விக்கான பதிலை பிள்ளை அளித்துள்ளார். பிள்ளையும் டிக்ஸனும் k=4, k=5 என்பதோடு, k<400 என்பதற்கான பதிலையும் கண்டறிந்தனர். 

டயஃபேண்டைன் தோராயங்கள் பற்றியும் பிள்ளை ஆராய்ச்சி செய்து, ஒரு தேற்றத்தையும் நிறுவியுள்ளார். பெர்டிரண்டு கொள்கைக்கு பிள்ளை ஒரு புதிய நிரூபணம் அளித்தார். சீனிவாச ராமானுஜனும் இதற்கு வேறு வகையில் அளித்துள்ளார். இருப்பினும், பால் எர்டாஸின் நிரூபணம் மிகச் சிறந்ததாக கணித உலகில் போற்றப்படுகிறது. 

1936 பிப் 10 இல் எஸ்.எஸ். பிள்ளை தமது கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ""டாக்டர் பிள்ளை தியரி ஆஃப் நம்பர்ஸ்' - ஒரு கோட்பாடு, கணிதவியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தது. வாரிங்க்ஸ் ப்ராப்ளத்திற்கு விடைகண்ட  கையோடு, சுமார் 400 ஆண்டுகளாகக் கணித உலகை மிரட்டிக் கொண்டிருந்த "ஃபூரியர் சீரிஸ்' என்ற தொடருக்கான புதிரையும் விடுவித்துப் பெருமை பெற்றார்.

இதைத் தொடர்ந்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் டாக்டர் ஓபன்ஹைமரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட பிள்ளைக்கு அழைப்பு விடுத்தனர். அவரோ, ""என் ஆராய்ச்சிக்கு இந்தியாவே போதும்'' என்று பணிவுடன் சொல்லி, உலகையே வியக்க வைத்தார். 

ஆனால் பின்னாளில் சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெறவிருந்த உலகக் கணித மாநாட்டுக்குத் தலைமையேற்கவும், பிரின்ஸ்டன் பல்கலையில் ஜன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை 1950 ஆகஸ்டில் அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக இருமுறை பயணத்தை ரத்துசெய்தார். ராமானுஜம் இன்ஸ்டிட்யூட்டில் சில ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதால் முதல் பயணம் சிலநாள் தள்ளிப்போனது. இரண்டாவது பயணத்தை விமானக் கம்பெனியே ரத்து செய்ததாம்.

நாட்டின் துர்பாக்கியம், மூன்றாவது முறையாகக் கிளம்பியபோதுதான், முதலில் தெரிவித்தேனே... செங்கோட்டை முத்துசாமிப் பூங்காவில் நண்பர்கள் மத்தியில் "இந்தியாவுக்குப் புகழ் கிடைக்கும்' என்று! அப்படி ஏதோ தாள்களை விசிறிக் காட்டிவிட்டுப் பெருமிதமாகக் கூறிச்சென்றார். 

30.8.1950 இல் ஸ்டார் ஆஃப் மேரிலேண்ட் விமானத்தில் இந்தியாவின் புகழையும் தன்னுடைய எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளோடு பறந்தார். கெய்ரோவில் எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி சகாரா பாலைவனத்தில் எரிந்து சாம்பலாகி விழுந்தது. அத்தோடு பிள்ளையின் கனவும் புகைந்து போனது. இன்னொரு இந்தியக் கணித மேதையின் ஆராய்ச்சிகள்  பாலைவனமாகிப் போனது...

சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் பங்குகொண்ட கணிதமேதைகள் சிவசங்கரன்  பிள்ளைக்குப் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளைப் பற்றி இ.டி.பெல் எழுதிய ''மென் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ்" நூலில் இந்தியாவின் சார்பில் இராமானுஜனும் சிவசங்கரன் பிள்ளையும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் தமிழர்களே என்பது நமக்குப் பெருமை தரத்தக்கது.

எஸ்.எஸ்.பிள்ளை பின்னால் வரப்போகும் தலைமுறைக்காக ஒரு அனுமானத்தை விட்டுச் சென்றுள்ளார். அது எஸ்.எஸ்.பிள்ளை அனுமானம் என்ற பெயரில் இன்னும் தீர்க்க முடியும்;தீர்க்க முடியாது என்ற இரண்டுங்கெட்டான் நிலையிலேயே உள்ளது.

இப்படி, தலைசிறந்த கணிதமேதைகளை உலகுக்குக் காட்டிய தமிழகத்திலிருந்து இன்னும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள் வெளிவரவேண்டும். அதற்கு, "கணக்கு - கசப்பு' என்னும் எண்ணத்தை இளம் மாணவர் உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்த ஆசிரியர்கள் முயலவேண்டும். அதற்கு முதல் படி, கணிதத்தின் மீது, நம் முன்னோர்களுக்கு உள்ள ஆளுமையை நம் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு பெருமித உணர்வை வளர்க்க வேண்டும். ராமானுஜன், எஸ்.எஸ்.பிள்ளை போன்ற கணித மேதைகளின் வாழ்வை எடுத்துச் சொல்லி, மாணவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். 

வெள்ளி, மார்ச் 12, 2010

வீரகேரளம்புதூர் - ஊத்துமலை ஜமீனில் சில சுவாரஸ்யங்கள்!


மஞ்சரி டைஜஸ்ட் இதழில் இதழாசிரியராக இருந்தபோது, கிராமத்துத் தகவல்கள், இலக்கியத் தகவல்கள் சிலவற்றை உங்களோடு ஒரு வார்த்தை 
என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தத் தொடரில் இடம்பெற்ற ஒரு கட்டுரை இது. 
----------------------------------------------------------------------------------------------------
"சாப்பாடு தேவாமிர்தம்''

அண்மையில் நெல்லை ஜில்லா, தென்காசிக்கு அருகிலுள்ள வீரகேரளம்புதூர் (வீ.கே.புதூர்) சென்றிருந்தேன். அங்கு பிரமாண்டமான நவநீதகிருஷ்ணஸ்வாமி கோயில் உள்ளது. எங்கள் தாத்தா ராம ஐயங்கார் இந்தக் கோவிலில் கைங்கரியம் செய்தவராம். குழந்தைப் பருவத்தில் நாங்கள் ஓடி விளையாடிய கோயில். பத்து தினங்கள் உற்ஸவம் வரும்போது, யானை உருவ மர பொம்மைகளைச் செய்வார்கள்... யாக சாலைக்குத் தேவைப்படும் வகையில். அவற்றை எங்களுக்குக் கொடுத்து விடுவார்கள். குழந்தைகளான நாங்கள் அவற்றை வைத்து விளையாடிய நினைவு உள்ளது. அங்கே ஓலைச்சுவடிகளும் நிறைய இருந்தன. அவற்றை மீண்டும் பார்த்து வரும் ஆவலில் அந்த ஊருக்குச் சென்றேன். 

கோவில் தற்போது கவனிப்பாரின்றி பாழ்பட்டிருக்கிறது. ஓலைச்சுவடிகள் கரையான்கள் அரித்தது போக சொற்ப அளவிலே எஞ்சியிருந்தன. சுவடிகளைப் படிக்கும் அறிவு ஓரளவு வந்த பிறகு இப்போது அவற்றில் ஒரு சிலவற்றை எடுத்துப் பார்த்தால், பெரும்பாலும் கணக்குகளே இருந்தன. ஏதேனும் இலக்கியப் பெட்டகங்கள் இருக்குமோ என்ற ஆவலில் தேடினேன். ஏமாற்றம்தான்!

வீரகேரளம்புதூர் என்ற இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தமிழ்காத்த, புலவர்களைப் புரந்த ஊற்றுமலை ஜமீன் ஊர் என்பதே! இந்த ஜமீனைப் பற்றி உ.வே.சா. தமது நினைவு மஞ்சரியில் குறிப்பிட்டுள்ளார்.

சொக்கம்பட்டி ஜமீனில் பெரியசாமி சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்த காலத்தில் அவருடைய ஸ்தானாதிபதியாக இருந்தவர் பொன்னம்பலம் பிள்ளை. நல்ல புலவர்; புலவர்களை ஆதரிக்கும் புரவலர். அப்போது ஊத்துமலை ஜமீன்தார், சிவகிரி ஜமீனுக்கு உதவிவந்தார்.

பகை காரணத்தால் சேத்தூர் ஜமீன் சிவகிரி ஜமீனால் பாதிக்கப்பட்டிருந்தது. தமிழின் துணையால் பொன்னம்பலம் பிள்ளையுடன் நட்பு பூண்ட சேத்தூர் ஜமீன்தார், சொக்கம்பட்டி ஜமீன் படைமூலம் சிவகிரியைத் தாக்கி சின்னாபின்னப் படுத்துகிறார். சிவகிரிக்கு உதவி செய்த காரணத்தால் ஊத்துமலை ஜமீனும் நிர்மூலமாகியது. ஊத்துமலை ஜமீன்தார் உயிர்துறக்க, தனித்து விடப்பட்ட தம் இரு மகன்களுடன் ஜமீன்தாரிணி பூசைத்தாயார் தென்காசிக்கு வந்து விடுகிறார். அங்கு இந்த இரு சிறுவர்களும் பள்ளியில் பயில்கின்றனர்.

பெரியவர் பெயர் மருதப்பன்; இளையவர் பெயர் சீவலவத்தேவர். ஊத்துமலை ஜமீன் பரம்பரை பரம்பரையாகத் தமிழ் காத்து வந்தது. பல புலவர்கள் அங்கே தோன்றியிருக்கின்றனர். ஜமீன் அரண்மனையில் அடிக்கடி வித்வான்களின் பேச்சுகள் களைகட்டும். அப்போது பூசைத்தாயார் அவற்றைக் கூர்ந்து கவனிப்பார். எனவே செய்யுள்களின் சுவை தெரிந்து அனுபவிக்கவும், புதிய செய்யுள்களை இயற்றவும் அவருக்கு ஆற்றல் கூடிவந்தது.

ஒருநாள் சிறுவர்கள் இருவரும் பள்ளி சென்று கொண்டிருந்தபோது, தேரடியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். இளையவரான சீவலவத்தேவர் அச்சிறுவர்களுடன் விளையாடப்போக, மூத்தவர் மருதப்பர் அவரைத் தடுக்கிறார். இளையவர் அடம்பிடிக்க, மூத்தவர் இவர் கன்னத்தில் இரண்டு "பளார்" கொடுத்து விடுகிறார். மாலை, பள்ளிவிட்டுவந்த சீவலவர் அண்ணன் அடித்ததை தாயாரிடம் சொல்லி தேம்பி அழ, இருவர் செய்ததும் தவறுதான் என்று சொன்ன பூசைத்தாயார், தம் குழந்தைகளின் நிலைக்கு வருந்தி அழுகிறார்.

எப்படி இருக்கவேண்டிய குழந்தைகள் இப்படி வாடுகின்றனரே என்று, தீவினை நொந்து ஒரு செய்யுளால் துயரத்தை வெளிப்படுத்துகிறார்...
தேரோடு நின்று தெருவோடு அலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடுவோம் இந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண்டால் இந்தத் தீவினைகள்
வாராவடா தம்பி சீவலராய மருதப்பனே...
- இச் செய்யுளைச் சொல்லும்போது பூசைத்தாயாரின் கண்களில் நீர்த்துளிகள் அரும்பின. தம்மால்தானே தாயார் அழுகிறார் என்று எண்ணிய சீவலவராயர், அன்னையின் துயர் துடைக்க எண்ணி அதற்கு வழிகேட்கிறார். சொக்கம்பட்டி ஜமீன் ஸ்தானாதிபதி பொன்னம்பலம் பிள்ளையின் தமிழ்ப் பற்றை நன்கு அறிந்திருந்த பூசைத்தாயார், யாரும் அறியாதபடி சென்று அவரைச் சந்திக்க வழிசொல்கிறார்.

சீவலவரும், பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறார். அவரை யாரென்று கேட்டு அடையாளம் தெரிந்து கொண்ட பிள்ளை, அவர்கள் நிலை கேட்டு மிக்க வருத்தமுற்று ஆவன செய்ய உறுதி கொள்கிறார். "நன்கு தமிழ் கற்றவர்; தமிழை அரவணைத்த ஜமீன்தாரிணி' என்று பூசைத்தாயாரைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த பொன்னம்பலம்பிள்ளை, உடனே சொக்கம்பட்டி ஜமீனைச் சந்தித்து விஷயத்தை எடுத்துச் சொல்கிறார்.

""தமிழைக் காத்த ஒரு ஜமீனை நாம் பாழ்படுத்திவிட்டோம்; நமக்கும் ஊத்துமலைக்கும் நேரடிப் பகை இல்லையே - அவர்கள் சிவகிரிக்கு உதவி செய்தார்கள் என்பதைத் தவிர! மேலும் அவர்கள் தங்களுக்கு ஒருவகையில் உறவினரும்கூட! ஊத்துமலை ஜமீன்தாரிணியும் இருபிள்ளைகளும் இப்போது உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது. நாம் தமிழைப் போற்றவாவது ஊத்துமலை ஜமீன் மீண்டும் தழைக்க உதவிசெய்ய வேண்டும்'' என்று பொன்னம்பலம் பிள்ளை சொல்ல, பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவரும் "அப்படியே செய்யும்' என்று சொல்லிவிடுகிறார்.

அதன்பிறகு ஊத்துமலை ஜமீன் மீண்டும் உருப் பெறுகிறது. தமிழ்த் தொண்டே, அந்த ஜமீன் மீண்டும் தழைக்கக் காரணமாயிற்று. இது பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சம்பவம்.

இப்படிப்பட்ட வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு இன்று இடிந்துபட்டு அரைகுறையாய் இருக்கும் அந்த அரண்மனையைக் கண்டபோது மனம்
துணுக்குற்றது. எந்த ஊருக்குப் போனாலும் அவ்வூரின் எழுபதைக் கடந்த பெரியவர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பது என் வழக்கம். அதேபோல் அங்கே நவநீதகிருஷ்ணஸ்வாமி கோயில் அருகே இரா.உ.விநாயகம்பிள்ளை என்பாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எண்பதைத் தொட்டிருப்பவர். பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைபார்த்தவர். தமிழ் ஆர்வலர். ஜமீனைப் பற்றிய மேலும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதிலிருந்து இரண்டு விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பத்தேவர் நல்ல தமிழ்ப் புலவர். புலவர்களை ஆதரிப்பவர். அவருடைய ஆஸ்தான கவியாக இருந்தார் அண்ணாமலை ரெட்டியார். இருவருக்கும் தமிழால் நெருக்கம் அதிகம். ஒருமுறை வழக்கமான சமையல்காரர் எங்கோ சென்றுவிட, புதிய நபர் அந்தப் பொறுப்பை ஏற்றார். அவருடைய சமையலை ஜமீன் உட்பட அனைவரும் சாப்பிட்டனர். அப்போது தமது வழக்கமான "கிண்டல்' தொனியில் அண்ணாமலை ரெட்டியார், இந்த சமையல்காரனின் சமையலில் "உப்பும் இல்லை; உரப்பும் இல்லை' என்று தோன்றும் வகையில் ஒரு பாடலைச் சொன்னார்.

(இந்தப் பாடல் தமக்கு சரியாக நினைவில்லை என்றார் விநாயகம் பிள்ளை. இதே ஊரைச் சேர்ந்தவரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநரும் தமிழறிஞருமான திரு.சா.வே.சுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்தேன். வீ.கே.புதூரையும் ஜமீனையும் பற்றி அவரும் நிறையச் சொன்னார். "1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான். மருதப்பர் காலத்தில் 38 புலவர்கள் ஜமீனில் இருந்தனர். இந்தளவுக்கு தமிழ்ப் புலவர்கள் அதிகம் இருந்தது இந்த ஜமீனில்தான்!'' என்றவர், இந்தப் புலவர்களின் பாடல்களைத் திரட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். விரைவில் நமக்கு நல்லதொரு தமிழ் நூல் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

ஜமீனில் எல்லாம் இருக்க, ஒரு கவியின் வாயால் ஜமீன் உணவில் "உப்பு இல்லை; உரப்பு இல்லை' என்று "இல்லை' என்கிற வார்த்தை வந்துவிட்டதே என்று வருந்திய மருதப்பத்தேவர், சமையல்காரரைக் கூப்பிட்டு கண்டித்தார். நடுங்கிய சமையல்காரர், கவி ரெட்டியாரிடம் சென்று, "என்னங்க இப்படிப் பாடிட்டீங்க! ஜமீன் என்னைக் கோபித்துக் கொண்டார். அதை நீங்க என்னிடம் தனியாகச் சொல்லியிருக்கக் கூடாதா?' என்றார்.

மறுநாள் வழக்கம்போல் சாப்பாடு. அன்றைய உணவைப் பற்றி கவி என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள மருதப்பர் ஆசைப்பட்டு, "இன்றைய சமையல் எப்படி?' என்று கேட்க, கவியோ "சாப்பாடு தேவாமிர்தம்' என்று ஒரு பாடலையும் பாடினார். மருதப்பருக்கு சிரிப்பு.

"என்ன... சமையல்காரருக்குப் பயந்து பணிஞ்சுட்டீரோ? நேற்று உப்பும் இல்லை; உரப்பும் இல்லை என்றீர். இன்று தேவாமிர்தம் என்கிறீரே!'' என்று நக்கலாகக் கேட்க, கவி சொன்னார்... "நான் நேற்று சொன்னதையேதான் இன்றும் சொல்கிறேன்...'' என்றார். மருதப்பருக்கோ ஆச்சரியம்.
"தெளிவாகச் சொல்லும்'' என்று கேட்க, அண்ணாமலை ரெட்டியார் சொன்னார்.. "தேவாமிர்தத்துக்கு ஏது உப்பும் உரப்பும்?''
நயமான விஷயம்தான். பாடல் தெரிந்தால் இன்னும் சுவைபட இதை அனுபவிக்கலாம்.

இன்னொரு நாள்... "ஜமீனில் தென்னைமரம் வைகுந்தத்தைவிட உயரம். தேங்காய்கள் வைகுந்தத்துக்கு மேலே காய்க்கின்றன. அதனால் அமிர்தத்தைவிட இனிப்பாயிருக்கின்றன'' என்று பாடினார் கவி. மருதப்பருக்கு வருத்தம் ஏற்பட்டது. "என்னதான் நம் ஜமீனை உயர்த்திப் பாடலாம் என்றாலும், வைகுந்தத்தை இப்படி குறைத்துச் சொல்லலாமா?'' என்று கேட்க, கவி சொன்னார்... "அங்கே பாருங்கள்... நவநீதகிருஷ்ணஸ்வாமி கோயில் நமக்கு வைகுந்தமல்லவா? கோயில் விமானத்துக்கு மேலே காய்த்திருக்கும் தேங்காய்களைப் பார்த்தால் நான் சொன்னதில் தவறில்லை என்பீர்கள்...''

ஆஹா! சரியாகத்தான் சொன்னார்... இதை எண்ணி மனத்தில் நகைத்துக் கொண்டே கோயிலைப் பார்த்தேன். கோயிலில் விமானம்தான் தெரிந்தது. கோபுரம் இல்லை. அப்படியே எதிர்ப்புறம் பார்த்தால் ஒரு பெரிய அலங்கார வளைவு. சில வருடங்களுக்கு முன் அந்த வளைவில் ஒரு கல்வெட்டைப் படித்தது நினைவில் வந்தது.

"ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் சக்ரவர்த்தியாக முடிசூடுவதை வரவேற்று ஜமீனின் ராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் கட்டப்பட்ட வரவேற்பு வளைவு' என்று அந்தக் கல்வெட்டு செய்தி தரும். அதை தற்போது பார்க்க ஆவலோடு அருகில் போனால்... ஏமாற்றம்! கல்வெட்டின் மீது பூப்புனித நீராட்டலும் காதுகுத்தலும் சுவரொட்டிகளாய் ஒட்டப்பட்டு செய்தி அறிவித்தன. சே! நம்மவர்களுக்குத்தான் என்னே அதீத அறிவு!

கல்வெட்டிலும் ஊர் வழிகாட்டும் பலகையிலுமா சுவரொட்டிகளை ஒட்டுவது? இந்த வரலாற்றுச் சின்னங்களெல்லாம் நாம் அடிமைப்பட்ட வரலாற்றைக் காட்டுவன அல்லவா? நாம் மீண்டும் அடிமைப்படாதிருக்க நம் சந்ததிக்கு உத்வேகமும் சுயமரியாதையையும் தருவன அல்லவா? இதே போன்ற வளைவுகளை தென்காசி, நெல்லைநகரம் (டவுன்) போன்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன். இவை ஒரே காலத்தில் கட்டப்பட்டவை என்பதை அறிந்துகொண்டேன்.

இதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட போது, அவன் சட்டைப் பையிஹருந்து கண்டெடுத்த கடிதத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வீரவாஞ்சியின் அந்தக் கடிதம்...
மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள் நம் பாரதநாட்டைக் கைப்பற்றியதோடு நம் இந்துக்களின் சநாதன தர்மத்தை அழிக்கின்றனர். ஒவ்வொரு இந்தியனும் வெள்ளையனை வெளியேற்றி ஸ்வராஜ்யத்தையும், சநாதன தர்மத்தையும் நிலை நாட்ட முயன்று வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, அர்ஜுனன் முதலியோர் முன்பு தர்மம் வழுவாது எல்லா மதத்தினரும் போற்றும்படி இந்த நாட்டை ஆண்டார்கள். ஆனால் இப்போது பசுமாட்டை அடித்து அதன் இறைச்சியைத் தின்னும் ஐந்தாம் ஜார்ஜ் என்ற மிலேச்சரை இந்தியாவின் சக்ரவர்த்தியாக முடி சூட்டப் போகிறார்களாம். 3000 சென்னை ராஜதானியர்களை சேர்த்திருக்கிறோம். ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் அவரைக் கொல்ல சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களின் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைத் துணிந்து செய்து முடித்தேன். இதுவேதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருடைய கடமையாகக் கருதவேண்டும்.
இப்படிக்கு
ஆர். வாஞ்சிஐயர், செங்கோட்டை.
- இந்தக் கடிதத்தையும், அந்தக் கல்வெட்டின் நோக்கத்தையும் ஒப்புநோக்கினால் அந்தக்கால அரசியல் சூழலும் நிர்பந்தங்களும் நமக்குப் புரியும். ஒவ்வொரு வருடமும், வாஞ்சிநாதன் தாய்நாட்டிற்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்த ஜூன் 17 ஆம் தேதியன்று காலை 10.50 க்கு செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுகல்லுக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செய்கிறார்கள்... "வாஞ்சி இயக்கம்' நடத்திவரும் பி. ராமநாதன் என்பவர், பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, செங்கோட்டை பேருந்துநிலையம் முன்னுள்ள வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கச் செய்து, வரலாற்று நிகழ்வினை எடுத்துச் சொல்கிறார்.

வரலாற்று நிகழ்வினை இளையதலைமுறைக்குச் சொல்வது, தமிழ்ப் பாதுகாப்பு என்று இப்படிப் பார்த்தோம்; இலக்கியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு சிற்றிதழ் வெளியீட்டு விழாவில், அந்த இதழைப் பாராட்டிவிட்டு, பொதுவாக இதழ்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஒன்றைச் சொன்னார்.

தீபம் இதழை நடத்திவந்த நா. பார்த்தசாரதி, ஒரு கட்டத்தில் மோசமான பொருளாதாரச் சூழலால் இதழைத் தொடர்ந்து நடத்தமுடியாமல், தலையங்கத்தில் இப்படித் தெரிவித்தார்...
"அநேகமாக இந்த இதழோ அல்லது அடுத்த இதழோ தீபத்தின் கடைசி இதழாக இருக்கும்.'

இதைப் படித்த ஒரு வாசகி கண்ணீர் மல்க ஒரு கடிதத்தையும் தமது ஒரு ஜோடி தங்க வளையல்களையும் அனுப்பி வைத்தார் அதுவும் பெயரை, வெளியிட விரும்பாமல்; பெயரை சுயமுகவரியை எழுதியனுப்பாமல்!

கடிதத்தைப் படித்து கண்கலங்கிய நா.பா., முகம் தெரியாத ஒரு சகோதரி தன் "உடன்பிறந்தானுக்கு அணிவிக்கும் கங்கணமாக' எண்ணுவதாக அடுத்த தலையங்கத்தில் தெரிவித்து, அவர் மறையும் வரையிலும் இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.

இதைத் தெரிவித்த திருப்பூர் கிருஷ்ணன், "நல்ல இலக்கிய இதழ்களைத் தொடர்ந்து வாங்கி ஆதரவளிப்பதே தரமான இதழியலுக்கும் இலக்கியத்துக்கும் செய்யும் தொண்டாக அமையும்' என்றார்.

தாமும் ஓர் தமிழ்ப் புரவலரே என ஒரு தமிழ் நங்கை நல்லாள் வெளிப்படுத்திய சங்கதி; தமிழ்ப் பாதுகாப்பு குறித்துப் பேசுவோர் கவனிக்க வேண்டிய சங்கதியும்கூட!

- செங்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீராம்

வியாழன், மார்ச் 04, 2010

சூரியாஷ்டகம் Sri Suryashtakam



ஸ்ரீ சூர்யாஷ்டகம்

ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||

(ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்)

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|
ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே... வெப்பம் நிறைந்தவரே... ரிஷி கச்யபரின் குமாரரே... வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே... அனைத்து உலகங்களுக்கும் தந்தையே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே... பலம் பொருந்திய மஹாசூரரே... ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)  

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே... வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே... உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே... மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே... ஒரே சக்கரத்தைக் கொண்டவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே... தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே... எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே... சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலகின் நாதனே... ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே... எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே... ஹே சூரிய தேவனே... உம்மை வணங்குகிறேன்)

இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

(இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது)
-------------------------------------------------------------------------------------------
கவிதை பாணியில் விளக்கம் தர முயன்றேன். ஆனால் சாதாரண நடையில் இதன் அர்த்தமே அழகாக அமைந்துவிட அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.  சில சம்ஸ்க்ருத பதங்களை பொருள் வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். சாதாரணமாகப் படித்தாலே புரிந்துகொள்ளும் வகையில். 
கண்கண்ட தெய்வம் என போற்றும் சூரியபகவானைப் போற்றி அமைந்த இந்த அஷ்டகம் நல்லன எல்லாம் அருளும். மன நிம்மதி அளிக்கும். பலன் பெற இறையருள் துணை செய்யட்டும்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix