












திருக்குற்றாலம் - செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் பாதை இது. மெயின் சாலையில் இருந்து சிற்றருவிக்குச் செல்லும் வழி இது. இதனைத் தொடர்ந்து இன்னும் மலை மேல் சுமார் 3 கி.மீ ஏற வேண்டும். மெயின் அருவிக்குச் செல்லும் தண்ணீரில் சிறுதடுப்பு ஏற்படுத்தி சிற்றருவிக்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்தினார்கள். இந்த சிற்றருவியில் பெண்களும் குழந்தைகளும் மிகவும் பாதுகாப்பாகக் குளிக்கலாம். தனி அறை போன்ற அமைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே கொஞ்சம் கட்டணமும் உண்டு. மலை மேல் ஏறும் அசத்தல் அனுபவமே அலாதிதான். வாய்ப்பு கிடைத்தால் விட்டுவிடாதீர்கள். முன்பெல்லாம் எல்லோருமே இந்த சிற்றருவி தாண்டி, செண்பகாதேவி அருவிக்குச் சென்றார்கள். எந்த வித கெடுபிடிகளும் இல்லாமல்! ஆனால், இப்போது கெடுபிடிகள் அதிகம். பெரும்பாலும் சிற்றருவி தாண்டி யாரையும் அனுமதிப்பதில்லை. வருங்காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக, செண்பகாதேவி அருவிக்கும்கூட யாருமே செல்ல முடியாத சூழலும் ஏற்படலாம். இப்போது தேனருவிக்கு செல்ல அப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூட வயதில் அடிக்கடி இந்த மலை மேல் ஏறி தேனருவிக்குச் சென்றிருக்கிறேன். காலையில் அம்மா தோசை வார்த்துத் தருவார்கள். கையில் எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் மேலே ஏறுவோம். மதிய நேரத்தில் தோசை சற்றே கடினமாக இருக்கும். அப்படியே அந்தத் தேனருவித் தண்ணீரில் தோசையை ஒரு முக்கு முக்கி, சாப்பிட்டால்... அவ்வளவு டேஸ்ட். தண்ணீர் தெள்ளத்தெளிவாக இருக்கும். அருவிகள் நம் தாய் போன்றவை. அதுபோன்ற வாய்ப்பு இனியும் கிடைக்குமா என்பது சந்தேகம். காரணம் எல்லாவற்றுக்கும் பாதுகாப்புக் காரணம் என்று சொல்வது தற்போது வழக்கமாகி விட்டதே! தீபாவளியை ஒட்டி செண்பகாதேவி அருவிக்கு செங்கோட்டை நண்பர்கள் ஐவரோடு சென்று வந்தேன். வேறு யாருமே அந்த மலைப்பகுதியில் இல்லை. சிற்றருவியிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மிகவும் அன்யோன்யமான அருவிக்கு, அன்யோன்யமான காவலர் நண்பர் ஒருவர் அங்கே இருந்ததால், நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அந்தப் படங்களை இங்கே நீங்கள் காணலாம்...