சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், மார்ச் 10, 2008

புத்தகம் -1857 ல் தமிழ்மண்



1857ல்-தமிழ்மண் - புத்தகம்

விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.


புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிலிருந்து...


சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை, வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று.அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள்.

ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப் போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும், இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857-ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும்,அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க்குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது, வாணிபம் செய்யவந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நேர்ந்தது எப்படி போன்ற பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார். நம் நாட்டின் சுதந்திர வரலாற்றில், சரியாகப் பதிவாகாமல் போய்விட்ட 1857-ம் ஆண்டு நிகழ்வுகளில் தமிழகத்தின் பங்கினையும், புதிய பரிமாணத்தோடு சில சம்பவங்களையும் நூலாசிரியர் நம் சிந்தனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.வரலாற்றுப் பதிவுகளும் அவை சார்ந்த விஷயங்களும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. இந்த நூல் வரலாற்றுப் பதிவினைத் தெரிவிக்கும் தகவல் பெட்டகமாகவும்,வீர உணர்வை வெளிப்படுத்தும் தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது.
நூலாசிரியர் குறிப்பிலிருந்து ...


கலகமா? போராட்டமா?

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் வீர வரலாறு மிக முக்கியம். நம் நாட்டுக்கும் அத்தகைய வரலாறு இருக்கிறது. காந்திஜியின் வருகைக்குப் பிறகு சாத்வீக முறையில் நாம் சுதந்திரம் பெற்றோம் என்றாலும், அதற்கு முன் நம் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் சுதந்திரத்தின் வலியை உணரச் செய்பவை. அந்த விடுதலைப் போராட்டத்தை நம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இந்த நூலைத் தொகுக்க முயன்றேன். இந்த நூலில், ஆயுதம் தாங்கிய நம் நாட்டின் விடுதலைப் போரை நான்கு பகுதிகளாக்கி அலசியுள்ளேன்.

முதல் பகுதியில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வை மிகப் பெரிய அளவில் கிளப்பிய பூலித்தேவன் வரலாறு, அவனுடைய வீரம், அவன் பிரிட்டிஷாரை எதிர்த்த விதம், மக்கள் அதற்கு அளித்த ஆதரவு ஆகியவற்றைத் தந்துள்ளேன்.அடுத்த பகுதியில், பூலித்தேவனுக்குப் பிறகு தொடர்ந்த ஆங்கில எதிர்ப்புப் போர்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்களின் புரட்சி போன்றவற்றைத் தந்துள்ளேன்.
1857-ல் வடக்கே சிப்பாய்களை முதன்மையாக வைத்து நடந்த பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டம், அதன் தோற்றுவாய் என்ன என்பதை அலசியுள்ளேன். நிறைவுப் பகுதியில், அதே காலகட்டத்தில், தமிழகத்தின் முக்கியஇடங்களில் பொதுமக்களிடையே இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வுமற்றும் தமிழகத்து மக்களின் போராட்ட பங்களிப்பு ஆகியவற்றை ஆங்கிலேய அரசே ஏற்படுத்திய ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துத் தொகுத்துள்ளேன். இவற்றை நீங்கள் ஊன்றிப் படித்தால், பொதுமக்கள் பங்களிப்பு 1857காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதையும், அதனால் இதை சிப்பாய்கலகம் என்று சொல்லி சிறுமைப்படுத்தக்கூடாது என்பதையும்உணர்வீர்கள். அதுவே இந்த நூல் மூலம் நான் சொல்ல வந்த செய்தி!
அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்



http://www.viruba.com/atotalbooks.aspx?id=663


http://www.viruba.com/final.aspx?id=VB0002124

மகா சுதர்சன வழிபாடு - புத்தகம்

வணக்கம்
அடியேன் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள மஹா சுதர்சன வழிபாடு புத்தகம் பற்றிய தகவலை இங்குக் கொடுத்துள்ளேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றி ...

உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் முருகனின் ஆயுதமான வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம்.

உலகைக் காக்கும் கடவுளாக வேதங்கள் போற்றும் விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்கள், வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து தரப்பட்டுள்ளன. ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் இந்நூல் எளிதாக விளக்குகிறது.


அம்பரீஷ மன்னனுக்கு உதவியது; அர்ஜுனன் உயிரைக் காத்தது, கஜேந்திரன் என்ற யானையின் உயிரைக் காத்தது உள்ளிட்ட சக்கரத்தாழ்வார் தொடர்புடைய கதைகள்... கும்பகோணம் சக்கரபாணி கோயில்; திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோயில் உள்ளிட்ட சுதர்ஸன வழிபாடுள்ள முக்கியத் திருத்தலங்கள்... சுதர்ஸனரை வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், சுதர்ஸனரின் மகிமை, தேசிகர் அருளிய சுதர்ஸன அஷ்டகம்; சுதர்ஸன கவசம்; சுதர்ஸன ஷட்கம் போன்ற சுதர்ஸனர் சுலோகங்கள், தோத்திரங்கள் என அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.



விலை: ரூ.35 முப்பத்தி ஐந்து மட்டும்

பக்கங்கள் : 96 ௯௬

புத்தகத்திலுள்ள ஆசிரியர் குறிப்பிலிருந்து...
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix