அன்புள்ள ஆசிரியருக்கு....
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு எழுதும் கடிதம் ..
இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஒரு நாள் நீங்கள் புத்தக விமர்சனத்துக்கு புத்தகங்களை பிரித்துக் கொண்டிருந்தபோது, உங்களிடம் சொன்னேன்... “சார் உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதுகிறேன்” என்று!
அது இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னர்தான் சாத்தியமானது என்பது, என் நேரமின்மையா, சோம்பேறித்தனமா, அல்லது ஒத்திவைக்கும் மனப்பாங்கா தெரியவில்லை. இருந்தாலும், இப்போதாவது, என் உள்ளத்தில் உள்ளதை உங்களிடம் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்பதால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
கடிதம் மூலம் நம் உள்ளக் கிடைக்கையைக் காட்டுவது போன்ற மன உணர்ச்சி, நேரில் பேசுவதாலோ, செல்போன் உரையாடலிலோ கிட்டிவிடாது என்ற எண்ணத்தால் இதை எழுதுகிறேன். மேலும், ரசிகமணி டி.கே.சி., ஜஸ்டிஸ் மகராஜன் ஆகியோரின் கடித இலக்கியத்தை நுகர்ந்தவன் என்பதாலும், ரசிகமணியின் ஊர்-குடும்பத்தார் அணுக்கத்தாலும் இந்த எண்ணம் ஏற்பட்டது. எப்படியாயினும், இந்தக் கடிதம், என் திறந்த மனத்தின் வெளிப்படைத் தன்மையை உங்களுக்கு உணர்த்தினால், இந்தக் கடிதம் வரையப் பட்டதன் நோக்கம் முழுமையடையும் என்று எண்ணுகிறேன்.
அறிமுகமே இவ்வளவுக்குத் தேவையில்லைதான்... ஆனாலும், எழுத்தின் சுவைக்கு ஆட்பட்ட உங்கள் ரசிக உள்ளம், நிகழ்வுகளின் நினைவுகளை அசைபோடும்போது இன்னும் சற்றே ஆழ்ந்து அனுபவிக்கத் தோன்றலாம்!
அதற்கு முன் ஒரு விஷயத்தை உங்களுக்கு மீண்டும் மீண்டும் மனத்தில் பதியவிட்டு, பிறகு நகர்த்திச் செல்கிறேன்.
நான் உங்களின் எதிரியோ, உங்களை காயப் படுத்தும் துரோகியோ இல்லை. அன்றும் சரி.. இன்றும் சரி.. உங்களின் நண்பர்தான்! என்றுமே உங்களை நான் வெறுப்பு உணர்வுடன் அணுகியதில்லை. அப்படி ஏதாவது உங்கள் மனத்தில் பட்டிருந்தால், அது உங்களுடைய சுற்றுவட்டார சகவாசம் உங்களை அப்படி ஆக்கியிருக்கக் கூடும்; என்னைப் பற்றிய எதிர்மறை பிம்பத்தை உங்களிடம் உருவாக்கியிருக்கக் கூடும் என்றே எண்ணுகிறேன்.
இதை நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டு பின்னர் நான் சொல்லும் விஷயங்களைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிற்க...
ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்கி ப்ரியன் போன் செய்து, "என்ன ஸ்ரீராம்... நீங்க பேஸ்புக்கில் ஏதோ போட்டீங்களாம். அது பிரச்னை ஆச்சாமே... என்ன விவரம். எனக்கு ஒன்றும் தெரியாது. நான் பார்க்கவில்லை. மனோபாரதிதான் சொன்னார்....” என்று கேட்டார்.
எனக்கு அப்போது ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ”சார் அது எங்கள் இண்டர்னல் மேட்டர்” என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டேன். வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவர் வற்புறுத்திக் கேட்ட பின்னர், அவரிடம், நம் நண்பர் குறித்து மோசமாக அப்படி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனையோ நாட்கள் சொல்லிப் பார்த்தேன். நிலைமை விபரீதம் ஆகவே ஒரு தீர்வு கிடைக்க அப்படிச் செய்தேன். நோக்கம் நிறைவேறியது. உடனே அந்தக் குறிப்புகளை நீக்கி விட்டேன்...” என்று கோடிட்டுக் காட்டினேன். அவ்வளவே.
என் வாழ்க்கை ஊடக வரலாற்றில் ஓர் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். எக்காரணத்தை முன்னிட்டும், ஆசிரியர் வைத்தியநாதன் மூலம் தினமணிக்கு வந்த ஸ்ரீராம், பின்னாளில் அவருக்கே பிரச்னையைக் கொடுத்தான் என்ற அவப் பெயரைச் சுமக்க நான் விரும்பவில்லை. கனவில் கூட அவ்வாறு நான் நினைக்கவுமில்லை! அதற்காக தர்மத்தை அறிந்து அதன் வழி நடக்க நினைக்கும் நான், நடக்கும் அதர்மங்களைக் கண்டு வாய்பொத்திச் செல்லவும் எண்ணவில்லை. அது, தர்மாத்மாவுக்கு உகந்ததுமல்ல! இந்த இருதலைக்கொள்ளி நிலையில்தான் நானிருந்தேன். துரியோதனனைக் காட்டிலும், பீஷ்மரும், துரோணரும், கர்ணனும்தான் குருக்ஷேத்திரக் களத்தில் மாபெரும் பாபிகளாக முன் நின்றார்கள். தர்மம் அறிந்த அம்மூவரும் ஒழுங்காக தர்மத்தின் படி நடந்து கொண்டிருந்தால், துரியோதனன் தவறு செய்திருக்க மாட்டான். அவன் தவறு செய்வதற்கான ஊக்கமே இவர்களால்தான் வந்தது என்பது வால்மீகியின் அபிப்ராயம்.
நீங்கள் எத்தனை திருக்குறள்கள் தலையங்கத்துக்குக் கீழ் எழுதியிருக்கிறீர்கள்..!!! இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்று~! அப்படி ஒருவரை நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்ளாமல் போனது உங்கள் துர்அதிர்ஷ்டம்தான்!
நிற்க...
தொடர்ந்து செல்வதற்கு முன், சிலவற்றை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தாக வேண்டும்!!
உங்களுக்கு, என் தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் இன்க்ரிமெண்ட் விவகாரத்தில் இந்த முறை சுரத்தில்லை, என்று நான் போட்டிருந்த குறிப்பு மட்டுமே கண்ணில் பட்டுள்ளது. ஆனால், உங்கள் "நம்பிக்கைக்குரிய” நிருபர்களும், உங்களையே சுற்றிக் கொண்டிருக்கும் சகபாடிகளும் என்ன செய்கிறார்கள், அல்லது சொல்கிறார்கள் என்பது உங்கள் காதுகளில் பட நியாயமில்லைதான்!
ஆனால் ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்...
என் வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் தாய் தந்தையை நீங்கள் பார்த்துப் பேசியிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் நான் எவ்வளவோ அளவளாவியிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், உங்களை என் குடும்ப உறுப்பினராகத்தான் நான் பார்த்து வருகிறேன்.
வசுதைவ குடும்பகம் என்ற சங்கத்தின் கொள்கை மனத்தில் ஆழமாகப் பதிந்து, எல்லாரையும் குடும்பத்தினர்களில் ஒருவராகக் கருதும் பண்பு வளர்ந்து விட்டிருந்தாலும், அதையும் மீறி, ஒரு எடிட்டர், நியூஸ் எடிட்டர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கும் அலுவலக ரீதியான உணர்வுகளைக் காட்டிலும், அன்பையும் பாசத்தையும் பரிமாறும் குடும்ப ரீதியான அணுகுமுறையைத்தான் உங்கள் மீது நாங்கள் கொண்டிருக்கிறோம்.
அன்று உங்கள் தாயார் பிறந்த நாள் அன்று வீட்டில் பூஜை வைத்திருந்தீர்கள். கடைசி நேரத்தில் நீங்கள் அழைத்தாலும், அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதே மகிழ்ச்சியில் நானும் உடன் இருந்து லலிதா சஹஸ்ரநாமம் சொன்னேன். மங்கள சூத்ரம் உடன் சொன்னேன். ஆசீர்வாத மந்த்ரம் உடன் உரைத்தேன். எல்லா நலன்களும் எஜமானருக்குக் கிட்டட்டும் என்று உபாத்யாயர் சொன்ன போது, நிறைந்த மனத்துடன் ஒரு வேத ப்ராம்மணனாக ததாஸ்து என மந்த்ர புஷ்பமிட்டேன்.
சரி.. அப்படி இருக்கும்போது, ஏன் நீ இவ்வாறு பேஸ்புக்கில் எழுத வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது.
இதற்குக் காரணம் - புரிந்துணர்வில் ஏற்பட்ட குறைபாடுதான்!
நான் கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது, என் நண்பி ஒருத்தி ஆட்டோகிராப் வாசகம் ஒன்று எழுதிக் கொடுத்தாள். அது என் நினைவுக்கு வருகிறது....
மலையின் உச்சியில் இருந்து நீ கீழே விழுந்தாலும் தவறில்லை. ஆனால், எக்காரணம் கொண்டும் புரிந்துணர்வற்ற தன்மையில் விழுந்துவிடாதே (Never fall into misunderstanding) என்று எழுதியிருந்தாள்.
எத்தனையோ வேத வாக்கியங்களை நான் உள்ளுக்குள் புகுத்தியிருந்தாளும், அந்தப் பெண் எனக்குச் சொன்ன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையின் முக்கியமான வேத வாக்கியமாகக் கொள்கிறேன்.
அதன் காரணத்தால் உங்களுக்கு நிகழ்ந்தவற்றின் உண்மைப் பின்னணியை எடுத்துச் சொல்ல விழைகிறேன்.
***
உங்கள் முதுகில் குத்தும் சகாக்களைப் போல் என்னால் குழைந்து கொண்டு உங்கள் முன்னால் நடித்து, பின்னால் சென்று வேறு துரோகச் செயல் புரியத் தோன்றாது. அது, நான் ஒரே ஒரு வேளை செய்யும் சந்தியாவந்தனத்துக்கும், சாளக்ராம ஆராதனைக்கும், நான் மேற்கொண்டிருக்கும் வேள்வியான வாழ்க்கைக்கும் உகந்ததல்ல!
காந்தி எப்படி தன் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்து வெளிநாடு சென்றாரோ அதுபோல், சென்னைக்கு பத்திரிகைத் துறைக்கு வரும் முன்னர் நானும் என் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்தேன்...
எந்த நிலையிலும், மது இருக்கும் பக்கமே போவதில்லை, சிகரட் புகைப்பவர் முன்னர்கூட நிற்பதில்லை, எவரிடமும் கை நீட்டி காசு வாங்குவதில்லை, பொய் பேசுவதில்லை, தர்மத்தை எந்த நிலையிலும் மீறுவதில்லை.. இப்படியாக நீ என்னிடம் சொல்ல வேண்டும் என்றார் அம்மா. அதை இன்று வரை நான் கடைப்பிடிக்கிறேன்.
இதில், சில தார்மீக நெறிமுறைகளும் அடங்கும்.
அதன்படி, என் புகைப்படத்தை நான் எடிட் செய்யும் பத்திரிகையில் போட்டுக் கொள்வதில்லை என்ற முடிவு. என் கருத்தாலும் கொள்கையாலும் நான் வெளித் தெரிய வேண்டும் என்பதால்தான் இதன் நோக்கம். இன்று வரை, மஞ்சரியிலோ, விகடனிலோ, என் புகைப்படங்கள் வந்ததில்லை. ஏன்.. தினமணி இணையத்திலும், வலைப்பூவிலும் கூட என் கட்டுரைகள், கவிதைகள், அனுபவங்கள் எல்லாம் "கண்டண்ட்” அதிகம் தேவைப்படும் காரணத்தினால் இடம் பெறுமே தவிர, என் புகைப்படம் ஒன்று கூட இராது. என் தனிப்பட்ட பேஸ்புக், வலைப்பூவில் உள்ளன. நான் வாசித்து வெளியிடும் ஆடியோ செய்தியில் கூட, என் பேரை... வாசிப்பவர் என்று சொல்லிக் கொண்டதில்லை. வெறுமனே செய்தி மட்டுமே ஒலி வடிவில் இருக்கும். ஆனால், இப்போது, அதையும் விட்டுவிட்டேன்... என் டீம் சகாக்கள் மட்டுமே வாசிக்கிறார்கள்.
- இதனை இங்கே சொல்லக் காரணம்... நானே என்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதாக, சில நேரங்களில் நீங்கள் சொன்ன கருத்துகள்தான்!
இத்தனை ஆண்டு காலம் பிரம்மசரியத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறேன். என் மனம் அறிந்து, எந்தப் பெண்ணிடமும் நெருங்கிக்கூட நின்றதில்லை. உடல் ரீதியாக இச்சை கொண்டதில்லை.... இப்படியாக இளமை வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, வாலிப வயதின் முடிவு நிலையில், விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோமே என்று இப்போது மாபெரும் கவலையுடன் உள்ளுக்குள் குமைந்து போகிறேன்.
வேலை, வேலை என்று வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி, எனக்கே எனக்கான பாசமுள்ள ஒரு குடும்பத்தை அமைக்கத் தவறிவிட்டேன். இப்போதாவது ஓர் அறிவார்ந்த துணை கிட்டாதா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.
இவை பற்றியெல்லாம் ஏற்கெனவே உங்களிடம் விவாதித்திருக்கிறேன்... ஆனால் இப்போது சொல்லக் காரணம்.... - எத்தனையோ வடிவங்களில் என் எழுத்துத் திறமையை வெளிக் காட்டிக் கொண்டிருந்த நான், இப்போது வெற்று உலகத்தில் வாழ்வதாய் உணர்வதுதான்!
என் மனக் கவலைகளை பகிர்ந்து கொள்ள சரியான துணை இல்லை, நல்ல நண்பர்கள் இல்லை. மயிலாப்பூரில் இருந்த போது, கீழாம்பூர் அமைந்தது போன்ற நல்ல நட்பு இல்லை. அதன் வெளிப்பாடு, பேஸ்புக்கில் நேரத்தை வீணடிப்பது! பேச்சுத் துணைக்கு உள்ளத்தோடு ஒட்டி உறவாடும் தகுந்த நட்புகளைத் தேடல்!
என் உள்ளக் குறையை வெளிப்படுத்த நம்பிக்கைக்குரிய நபர்கள் இல்லாத நிலையில், வழக்கம்போல் அன்று பேஸ்புக்கில் என் கருத்தைப் பதிந்தது. தீபாவளி நேரத்திலும் மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாத மனக் கசப்பில் இருந்த நிலையில் என்னில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவை.
அது மட்டுமல்ல...
அது, ஒட்டுமொத்த பணியாளர்களின் குரல். வெளிப்பட்டது என் முகம் மூலம். அவ்வளவே! நீங்கள் ரொம்பவும் நம்பிக் கொண்டிருக்கும் நிருபர்கள் உள்பட எத்தனை பேர் மொட்டைக் கடிதங்களும் புகார்களும் அனுப்பியிருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். அப்படியே தெரிந்தாலும், உங்களுக்கே உரிய குணத்தில், அதை உதாசீனப் படுத்தி, வழக்கம்போல் எங்களிடம் வேறு ஒரு கதை சொல்வீர்கள். இப்படியே சொல்லிச் சொல்லி, உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள மாட்டாமல், அசட்டையுடன் இருந்து விட்டீர்கள். உங்களின் இந்த இறுமாப்பைச் சொல்லிச் சொல்லி எவ்வளவு வருத்தப் பட்டிருப்பேன்...
அதைவிட முக்கியமான ஒன்றும் உள்ளது. அதை உங்கள் மனசாட்சி சொல்லும். அந்த ஒரே ஒரு விஷயத்தால் ஏற்படும் மதிப்புக் குலைவும், விளைவுகளும் உங்களுக்கு அவப்பெயரையே தரும். அதை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு நண்பராக உங்கள் வாழ்க்கையின் மேன்மையைப் பார்த்து ஆனந்தப்பட்ட நான், சரிவைக் காணச் சகிக்க மாட்டாத மனநிலையில் இருக்கிறேன்.
****
இப்போது, நண்பர் என்ற வகையிலும், ஆசிரியர் என்ற வகையிலும் அன்று நடந்ததை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது....
திங்கள் கிழமை மாலை 6.30. சி.எம்.டி., அழைத்தார். உன்னைப் பற்றி ஒரு புகார் என்றார். கேட்டேன்...
நீ பேஸ்புக்கில் நம் மேனேஜ்மெண்ட் பத்தியும் எடிட்டர் பத்தியும் தப்பாக எழுதியிருக்கியாமே என்று சொல்லி, அந்தக் கருத்துகளை வாசித்துக் காட்டினார்.
அப்போது நான் அவரிடம் என் தரப்பு விளக்கத்தைச் சொன்னேன்...
சார். இந்த விவகாரம் எப்படியும் உங்கள் முன் வரும் என்று தெரியும். இப்போது ஒரு மோசமான சூழல். பிரச்னை எழுந்தால்தான் ஒரு தீர்வு கிடைக்கும். இப்போது பிரச்னை எழுந்துள்ளது. சிலர் விரக்தியில் உள்ளனர். தகுந்த மாற்று வழி இல்லை என்பதால் பலர் இங்கே உள்ளனர். இப்போது டைம்ஸ் ஆஃப் இண்டியா ஒரு தமிழ் நாளிதழ் தொடங்கினால் பலர் வெளியேறிவிடுவார்கள்... இதுதான் கிரவுண்ட் ரியாலிடி!
நான் ஏற்கெனவே எடிட்டரிடம் இரண்டு மூன்று முறை இன்க்ரிமெண்ட் விவகாரத்தில் கேட்டு விட்டேன். நான் மேனேஜ்மெண்ட் பற்றி தவறாக எதுவும் எழுதவில்லை. நான் எங்கு வேலையில் உள்ளேனோ அந்த நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பேன். என்றேன்..
நீ இங்கிருந்து வேறு ஆபீஸ் போனால் இவ்வாறு எழுதலாம் என்றார்....
ஆனால் நான், அப்படிச் செய்தால் அதுதான் என் பழைய முதலாளிக்குச் செய்யும் துரோகம், எனக்குத் தேவை பிரச்னைக்கான தீர்வுதானே ஒழிய, காழ்ப்புணர்ச்சியைக் காட்டி விமர்சிப்பது அல்ல. இதற்குக் காரணம் ஒருவர் என்றுதான் எழுதினேனே தவிர, ஆசிரியர் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. அதுவும் என் தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில், என் மனக் குமுறலை வெளிப்படுத்தியது. அவர் என் நண்பர். அவர் மூலம்தான் நான் இந்த அலுவலகத்துக்கு பணிக்கு வந்தேன். ஆகவே எடிட்டரை நான் தவறாகப் பேசமாட்டேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே என் நோக்கம்...
இப்போது நீங்கள் அழைத்து என்ன நடந்தது என்று கேட்டீர்கள். என்னால், எடிட்டரை பைபாஸ் செய்து உங்களுக்கு கடிதமோ, தகவலோ தர இயலாது. மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் படித்த நான் அலுவலகத்தில் ஹையரார்க்கியை கடைபிடிப்பவன். இப்போது நீங்கள் அழைத்துக் கேட்டதால், பிரச்னை முடிந்து விட்டது. நான் உடனே என் பேஸ்புக்கில் இருந்து அவற்றை நீக்கி விடுகிறேன். எதிர்காலத்தில் நிச்சயம் இவ்வாறு செய்ய மாட்டேன். ஸாரி சார்... என்று சொல்லி வந்துவிட்டேன்.
***
- இப்போது நான் உங்களுக்குத் தெரிவித்துள்ள தகவல் 100% உண்மை. கூட்டியோ குறைத்தோ எதையும் நான் சொல்லவில்லை.
இதுதான் நடந்தது. ஆனால், இவற்றைக் கேட்கும் மனநிலையில் நீங்கள் இல்லை என்பது எனக்குப் புரிகிறது.
இதே போல்தான்.. அன்று நீங்கள் சீராம் என்னைப் பற்றி சித்தார்த்திடம் கம்ப்ளெயிண்ட் செய்திருக்கிறான் என்று பிறரிடம் சொன்னதும். ஆனால், உண்மையில் அப்போது நான் திரு.சித்தார்த்திடம் எதுவுமே பேசவில்லைதான். இன்னும் சொல்லப் போனால், உங்களை நான் பைபாஸ் செய்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்விலேயே என் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கும். அன்று அவரிடம் இந்தத் தகவலைக் கொண்டு சென்றதும் உங்களுக்கு நெருக்கமானவர்தான். ஆனால் அவரை நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.
***
கடந்த 2 வருடங்களாக நீங்கள் என்னை அழைத்து, என்ன பிரச்னை என்று கேட்டதில்லை. உனக்கு என்ன மனக்குறை என்று என்னிடம் விவாதித்ததில்லை. அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கும் போது!
வந்த புதிதில், என்னிடம் என்ன கண்டீர்களோ, இப்போது என்ன மாற்றம் காண்கிறீர்களோ எனக்குத் தெரியாது. இந்த இரண்டு வருடங்களில் நீங்கள் என்னை புறக்கணிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. ஒவ்வொரு செயல்பாட்டில் இருந்தும் விலக்கி வைத்திருக்கிறீர்கள். ஆனால், நான் இப்போதும் உங்களிடம் அதே மரியாதையுடன் தான் உள்ளேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் செக்ரடரி உங்களுக்கு பதில் தருவார்.
என் தரப்பில் நடக்கும் எந்தத் தகவலையும், உங்கள் காதுக்குக் கொண்டு வர, அவரிடம்தான் சொல்லி வைப்பேன். இது இது நடக்கிறது, இது தவறு, இது சரிப்படாது, இது நன்றாக இல்லை... இப்படி!
உங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இங்கே குறைவு. என் பணி நேரமும் உங்கள் நேரமும் அப்படி. அப்படியே நீங்கள் இங்கு இருந்தாலும், என்னைப் பார்க்க நீங்கள் விரும்புவதில்லை. அதுவும் எனக்குப் புரிகிறது.
உங்களிடம் ஏன் இந்த மாற்றம்? எனக்குத் தெரியவில்லை! என்னைப் பற்றிய தவறான மதிப்பீடுகளை நீங்கள் எப்படிக் கொண்டீர்கள்...? அதுவும் எனக்குப் புரியவில்லை.
நிற்க....
நான் அடிக்கடி கீழாம்பூரை சிறந்த உதாரணமாகக் காட்டுவேன்... காரணம் - நட்புக்குக் கொடுக்கும் மரியாதையும், உண்மைத் தன்மையும்தான்!
அவர் மூலம் எனக்குக் கிடைத்த நட்பும், வெளி வட்டாரத் தொடர்பும் அதிகம். அவருடைய நட்பு வட்டங்களில் இருந்து யாராவது என்னைத் தொடர்பு கொண்டு ஏதேனும் கேட்டால், அது பாதகம் தராத வகையில் என்றால், உடனே கீழாம்பூரிடம் தகவல் கொடுத்து விடுவேன். சார்.. இவர் பேசினார். இன்ன கேட்டார். நான் இதைச் சொன்னேன். என்று!
அதுபோல், அவருடைய பெயரைப் பயன்படுத்தி அவர் நட்பு வட்டாரத்தில் ஏதாவது எனக்குத் தேவைப்பட்டால், அதுகுறித்த தகவலையும் அவரிடம் சேர்த்துவிடுவேன்.
இந்த கம்யூனிகேஷன் - இன்று வரை தொடர்கிறது. நான் இந்தத் துறைக்கு வந்த இந்த 15 வருடங்களில் எனக்கு பலரை அறிமுகப் படுத்தி, அவர்களிடம் பழகும் முறையை சொல்லிக் கொடுத்தவர் அவர். இது நெல்லை மண் சம்பந்தப் பட்ட பாசத் தொடர்பு என்பது ஒரு புறம் இருந்தாலும், குடும்ப ரீதியாக அமைந்த நட்புறவு. இன்றும், என்னை அடையாளம் காணும் பலரும், கீழாம்பூரையும் சேர்த்தே நினைவில் கொண்டு வருவார்கள். நான் துவக்க காலத்தில் வளர்ந்ததும் அவரால்தான்!
இப்படிப்பட்ட ஒரு சிநேகத்தைத்தான் நான் தங்களிடம் எதிர்பார்த்தேன்.
தினமணிக்கு நான் வந்த புதிதில், நீங்களும் என்னிடம் ஏதோ கவிதை மொழிமாற்றம், தீபாவளி மலர், இசை விழா மலர், வெள்ளி மணி, தமிழ்மணியில் ஈடுபாடு என்று அச்சு ஊடகத்தில் எனக்கிருந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நானும் எந்நேரமும் முழு ஈடுபாட்டுடன் பணி செய்யத் தயாராகவே இருந்தேன்.
ஆனால், உங்களுக்கு என்ன மனத்தாங்கலோ? எல்லாவற்றில் இருந்தும் ஓரங்கட்டி விட்டீர்கள். அதற்காக நான் வருத்தப் படவில்லை.
ஏதோ என் நேரம்.. அஷ்டமத்து சனியின் விளைவு என்று பொறுமையாக இருந்து, இத்தகைய சூழ்நிலையில் இருந்து விலகியே இருக்கிறேன். என் மனசையும் விலக்கியே வைத்திருக்கிறேன்.
***
ஹையரார்க்கி - இந்தச் சொல்தான் எத்தனைதூரம் விளையாடுகிறது? விகடனில் நான் அனுபவித்த மனக் கஷ்டத்தை ஏற்கெனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதே போன்ற நிலை இங்கு வரக் கூடாது என்றுதான் கவனமாக இருக்கிறேன். உங்களை மீறி திருச்சி சோமு, சி.எம்.டிக்கு எழுதிய கடிதம் குறித்து நீங்கள் எவ்வளவு வருத்தப் பட்டு என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்?! எனக்குத் தெரியும். அதே போன்ற தவறை நான் நிச்சயம் செய்ய மாட்டேன்.
ஆனால்... இந்த நெருக்கமும் நட்பும் மட்டும் நம்மைப் பிணைத்திருந்தால், இப்படிப்பட்ட துன்பங்களுக்கு இடம் இல்லைதான்! ஆனால், நாம் ஒரே அலுவலகத்தில்! உங்களுக்குக் கீழ் நான் பணி செய்கிறேன். நீங்கள் தலைமையிடத்தில்!
நான் எப்படி நடந்து கொள்கிறேனோ அப்படித்தான் உங்களிடம் நான் எதிர்பார்த்தேன். அதனால்தான் முன்னமேயே சொன்னேன்... "சார். ஈ.என்.பி.எல்லில் உடன் இருக்கும் எல்லாருக்கும் போட்டாச்சு... அதனால், என் டீம் மெம்பர்களுக்கு நான் போட்டு அனுப்புகிறேன். என்னுடைய பேப்பரை நீங்கள் அனுப்புங்கள். நான் உங்களுக்குக் கீழ்தான் உள்ளேன். நீங்கள் என்ன செய்தாலும் சரி..” என்று!
ஆனால் நீங்கள், உங்கள் ஆசிரியர் என்ற கௌரவத்தை, கம்பீரத்தை கவனத்தில் கொள்ளவே இல்லை! சமத்துவம் வேண்டும்தான்! அதற்காக தகுதி, தராதரம் இல்லாமல் எல்லாரையும் உங்கள் அறைக்குள் நேரம் கெட்ட நேரத்தில் அழைத்துப் பேசுவது, ஆசிரியர் இடத்துக்கான கௌரவத்தைக் குலைக்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல....
அப்படித்தான் நீங்கள் என்னை மட்டம் தட்டுவதாய் நினைத்துக் கொண்டு, என் டீம் மெம்பர்களை நீங்களாகவே உங்கள் அறைக்குள் அழைத்து கேள்வி கேட்பதும்! இது உளவியல் ரீதியாக எத்தகைய மாற்றத்தை கீழ்நிலைப் பணியாளரிடம் ஏற்படுத்தும் என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்!
சென்னைக்கு காஞ்சி சுவாமிகள் வந்தால், சீண்டக்கூட மாட்டார்கள். சிருங்கேரி சுவாமிகள் வந்தால் எல்லாம் தடபுடல்தான்! காரணம், முன்னது அடிக்கடி நிகழ்வு. பின்னது எப்போதாவது நிகழ்வது! இதன் உள்ளர்த்தம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
இங்கே உங்களின் சில செயல்பாடுகளால் ஒவ்வொரு செய்தி ஆசிரியரும் உங்களைப் பற்றி என்ன விமர்சிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்! நீங்கள் நிருபர் குழாமுடன் நல்ல உறவு கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நல்லதுதான்.
ஆனால், உங்களை நேரடியாகச் சந்திக்கும் எவரும் அவர்களின் தலைமையை மதிப்பதில்லை; அவர்கள் இடும் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை; ஆசிரியரே என் கையில், நீ என்ன ஜுஜுபி என்ற போக்கில் செயல்படுகிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியவர நியாயமில்லைதான்! புலம்பல்களின் குரல்களைக் கேட்கும் என் காது, என் இதயத்துக்கு எடுத்துச் சொல்லும்... ஆசிரியரிடம் எப்படி இதைச் சொல்வது என்று?
இன்னும் எடிட் மீட்டிங் முடிந்த பின்னர், காரணமில்லாமல் தகுதியற்ற சிலருக்கு நீங்கள் கொடுக்கும் சலுகைகள் குறித்த பேச்சு வரத்தான் செய்யும். அப்போது, நான் ஒரு பார்வையாளர் மட்டுமே!
இன்னும், உங்களைக் குறித்த விமர்சனங்கள், தனிப்பட்ட வகையில் தாக்கி இணையத்தில் வரும்போது, அவற்றைப் படித்து நீக்கக் கூடிய பொறுப்பை இன்று வரை சரியாகச் செய்து வருகிறேன்.
இவற்றை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்... உங்களைப் பற்றிய அவதூறுகளை வெளித் தளத்தில் நீக்கிக் கொண்டிருக்கும் நான், உங்களைப் பற்றி ஏன் அவதூறு சொல்லப் போகிறேன் என்பதை உங்கள் மனத்தில் பதியவைக்கத்தான். இருப்பினும், என் பேஸ்புக்கில் அப்படி ஒரு குறிப்பை எழுத வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளிவிட்டதும் தாங்கள் ஏற்படுத்திய அசாதாரண சூழல்தான்!
ஆனால், இப்போதும் வெளி உலகம் என்னை வைத்தியநாதனின் கையாள் என்றுதான் சொல்கிறது.
****
நன்றாக நினைத்துப் பாருங்கள்... நீங்கள் சாவி சார் என்று சொல்லும்போது, உங்களிடம் ஒரு நாள் காரில் பயணிக்கையில் சொன்னேன்... சாவி சார் பேர் சொல்ல நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்... ஆனால் உங்கள் பேர் சொல்ல யார் இருக்கிறார்கள் என்று!?
இதன் உள்ளர்த்தத்தை நீங்கள் உணர்ந்திருக்கலாம், அல்லது உணராமல் போயிருக்கலாம். ஆனால், என் மனத்தில் இருந்த எண்ணம் இதுதான் - இப்போது எப்படி என்னை அடையாளம் காணும் உலகம் கீழாம்பூரின் பெயரையும் சேர்த்தே பார்க்கிறதோ, அது போல், நாளைய பத்திரிகை உலக வரலாறை எழுதுபவர்கள், என் பெயருடன் உங்களையும் சேர்த்துக் காண வேண்டும் என்று விரும்பினேன்.
எனக்கு இப்போது வயது 39. இங்கோ அல்லது எங்கோ... கடவுள் எனக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிப்பான் என்றால், எப்படியும் ஊடக உலகில் நல்ல பொறுப்பில் இன்னும் குறைந்தது 20 வருடங்கள் நிற்க முடியும். பத்திரிகை/எழுத்துலகில் நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். என் சாதனைகளின் பின்னே, உங்கள் பெயரும் இடம் பெற வேண்டும். அதை மனதில் கொண்டால், நிச்சயம் நீங்கள், உங்களைத் தேடி தினமணிக்கு வரும் நல்லவர்களை என் போன்றோர்க்கு அறிமுகம் செய்து வைத்து, வட்டத்தைப் பெருக்கி வைக்க முடியும். அதிகம் எழுத ஊக்குவித்து முன்னிலைப் படுத்தியிருக்க முடியும். உண்மையில், நான் உங்களை மீறி செயல்படப் போவதில்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகளை இதுவரை நீங்கள் ஏற்படுத்தவேயில்லை.
இந்த மனக்குறை எனக்கு வெகுநாட்களாகவே உண்டு.
நான் ஏற்கெனவே சொன்னதுதான்... நாம் வரலாற்றில் இடம்பிடிப்பவர்கள். நாம் செய்யும் செயல்களாலும், சாதனைகளாலும் நம் பெயர்கள் எழுதப் படுவது, ஊடக வரலாற்றில். இது அடுத்த அடுத்த தலைமுறைகளிலும் கொண்டு சேர்க்கப்படும் ஒன்று. அந்த கவனம் ஒவ்வொரு கணமும் என்னிடம் உண்டு. அந்த ஒரே ஒருகாரணத்துக்காகவே இத்தகைய நல்ல கொள்கைகளை வகுத்துக் கொண்டு, ஒரு சித்தாந்தத்தில் அகப்பட்டு பயணிக்கிறேன்.
இங்கே நான் தோல்வியுற்றால், தோல்வியுறுவது நானில்லை... ஒரு சித்தாந்தம்!
வேதனையுடன்
உங்கள் நண்பராக....
ஸ்ரீ.
கருத்துரையிடுக