தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.
தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள். ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.
ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.
அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.
அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால் மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!
பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார். அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.
இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”
இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”
”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.
அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.
5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.
எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள் பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.
அந்த “பாஸ்’ நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக