12 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி! அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அந்த நாளை முன்னிட்டு 40% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். எனக்கும் புத்தகங்கள் என்றால் அப்போதும் கொள்ளைப் பிரியம்தான்! புத்தகங்கள் வாங்கச் சென்றேன். முதல் முறையாக என்பதால் கையில் 50 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு சிறு சிறு புத்தகங்களை கொஞ்சம் வாங்கினேன்...
தைத்ரீயமந்த்ரகோஷம், தைத்ரீய உபநிஷதம் இத்யாதிகளை வாங்கிக் கொண்டு, மனத்தில் கணக்குப் போட்டுப் பார்த்ததில் ரூ.46 சுமாருக்கு வந்தது. சரி போதும் என்று முடிவு செய்து, புத்தகங்களோடு வரிசையில் நின்று பில் போட்டு, கையில் வைத்திருந்த ரூ.50ஐயும் கொடுத்தேன். கூட்டம் அதிகமாக இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் மடத்தின் அந்த பிரம்மச்சாரி சுவாமி புத்தகங்கள், பில், அதோடு ரூ.50ம் 4 ரூபாய்க்கு நாணயங்களும் மீதி கொடுத்து அவசரப் படுத்தி அனுப்பினார். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், நெருக்குதலால் அந்த இடத்தை விட்டு நான்கைந்து அடி வைத்து புத்தகக் கவரை வாங்கி நகர்ந்தேன். ஓ... அந்த பிரம்மச்சாரி சுவாமி நான் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு, ஐம்பது ரூபாயையும் சேர்த்துத் தந்தார் போலும்! எனக்கு நடந்த தவறு புரிந்தது.
என் மனசாட்சிக்குத் தெரிந்து நான் கையில் ரூ.50தானே வைத்திருந்தேன். எனவே நாம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்க வாய்ப்பில்லை. பரவாயில்லை புத்தகம் ஓசிக்குக் கிடைத்து மேலே நமக்கு நாலைந்து ரூபாய் சில்லறையும் கிடைத்திருக்கிறதே! இப்போது என் மூளையின் இரண்டு பக்க பல்புகளும் எரிந்து அணைந்து எரிந்து அணைந்து ஏதோ இம்சைப் படுத்தின.
தர்ம சாஸ்திரம் மண்டையில் ஏறிய ஒரு இளைஞனாக நெல்லை மண்ணில் இருந்தவரை நாம் இப்படி யோசித்ததே இல்லையே! சென்னை மண்ணை மிதித்த சில நாட்களில் இப்படியும் நம் மனம் எண்ணுமா? என் மனம் அடைந்த அவஸ்தையை வார்த்தைகளில் சொல்ல முடியாது! சிறு வயது முதல் சுவாமிஜியின் எழுத்துகளைப் படித்த நான், இப்படியும் நடக்கலாமோ?! மனம் திரும்பிய அதே நேரம் என் கால்களும் பின்னோக்கி நகர்ந்தன. மீண்டும் வரிசையை ஒதுக்கித் தள்ளி, அதே பிரம்மசாரி சுவாமியிடம் போய், சுவாமி நான் கையில் ரூ.50தான் வைத்திருந்தேன். அவசரத்தில் நீங்கள் கொடுத்த சில்லறையைக் கவனிக்கவில்லை... என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, அவர் ஓ நான் ஏதாவது குறைவாக மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டேனா என்றார். இல்லை சுவாமி... அடியேன் கொடுத்த பணமே மீண்டும் அடியேனுக்கு வந்துவிட்டது. நான் தான் தவறுதலாக கூடுதல் பணம் வாங்கிக்கொண்டுவிட்டேன் என்று கூறி ரூ.50 ஐ திருப்பிக் கொடுத்து திரும்பினேன்.
இப்போது நான் படித்துக் கடைப்பிடித்த தர்மம் என் மனதை லேசாக்கி உற்சாகப் படுத்தியது. ஆவலுடன் புத்தகத்தைப் புரட்டினேன்... தைத்ரீய உபநிஷத்தில் கண்ணுக்குத் தெரிந்தது. சீக்ஷா வ்யாக்யாஸ்யாம... உதட்டளவில் உச்சரித்தேன். கடைசிப் பக்கம் திருப்பினேன். சந்நோ மித்ர சம்வருண: சந்நோ பவத் வர்யமா... வருணன் நண்பனாகட்டும், அர்யமான், இந்திரன், பிருஹஸ்பதி எல்லோரும் நலம் செய்பவர்களாக ஆகட்டும்.. மனதில் யோசித்துக் கொண்டே வந்தேன். புத்தகத்தினூடே புக்மார்க்-வைத்துச் செருகுவதற்காக இலவசமாகத் தந்த சுவாமிஜியின் நின்ற படம் பக்கங்களினூடே தெரிந்தது. என் ஆதர்ஷ புருஷரான சுவாமிஜியின் கண்கள் தீர்க்கமாக என்னை நோக்குவது போல் தெரிந்தது. இப்போது உற்சாக நடை போட்டேன்!
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.
கருத்துரையிடுக