ஞாயிறு, ஜனவரி 09, 2011

அனுபவ வரம் அளிப்பாய் இறைவா!


நான்...


கூட்டுப்புழுவாய் உயிர்கொண்ட நாள் முதல்

பட்டாம்பூச்சியாய் சிறகுவிரிக்கும் நாள் வரையில்...


சின்னச் சின்னச் சறுக்கல்கள்

எண்ணிக்கை அறியா ஏமாற்றங்கள்!

எல்லாம் அனுபவங்களாய்

உள்ளத்தின் ஆழ்மடிப்பில்

உறங்கிக் கிடக்கின்றன!


எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள்

எனக்கு முன்பும் பின்பும்!


நான் மட்டும்

நிரந்தரப் பதிவாய் நிற்கவா போகின்றேன்!?

நானும் ஒருநாள்...

கால வெளியில் கரைந்து போகக்கூடும்!


ஆனால்... ஆனால்...


பட்டெனும் பகட்டுக்காய்

கூட்டுப்புழு கருக்கப்படுகிறதே!

எண்ண விதை முளைக்கும்போதே

என்னவோ அது களையப்படுகிறதே!


சிறகடித்துப் பறக்கும் நேரம்

சிறகொடிந்து கிடந்தால் பாரம்!


இறைவா...

பட்டாம்பூச்சியாய் பறக்கும் அனுபவத்தை

இறைஞ்சிக் கேட்கின்றேன்...
தந்தருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக